arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 26
வற்பனை சேரல் chevron_right பகுதி 26 / 28

அத்தியாயம் 26

visibility 519
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.1/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

இந்திர விழாவின் ஏழாவது நாள்.

அந்தி மெல்ல மறைந்து கங்குல் (இரவு) படரத் தொடங்கியிருந்தது. வளர்பிறை நிலவு மெல்ல எட்டிப்பார்த்தது. அதன் முக்கிய அங்கமாக, வச்சிரக் கோட்டத்தில் வச்சிரத் தூண் வழிபாடு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. இந்திரனின் வெற்றியைப் பறைசாற்றும் அந்த வச்சிரத் தூண், தூயப் பளிங்குக் கல்லால் செதுக்கப்பட்டது போல வெண்மையாக மின்னியது.

அந்நகர மக்கள் வரிசையாக நின்று, அந்தத் தூணுக்குப் பாலாபிஷேகம் செய்து, நறுமணம் மிக்க மல்லிகை மற்றும் செவ்வரளி மலர்களைத் தூவி வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்தத் தூணின் அடியில் ஒரு சிறிய மூங்கில் கூடை வைக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் இதயத்தில் இருக்கும் தீராத ஏக்கங்களையும், வேண்டுதல்களையும் ஒரு சிறிய பனை ஓலையில் எழுதி, அந்தத் தூணின் அடியில் சமர்ப்பிப்பது ஒரு புனிதமானச் சடங்கு. அந்த வேண்டுதல்களை விண்ணுலகத் தலைவனான இந்திரனே நேரில் வந்து நிறைவேற்றுவார் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பொற்பனை மாநகரமே வச்சிரக் கோட்டத்தைச் சுற்றித் திரண்டிருந்தது. ஆதிரை தனது மணித்தேரிலிருந்து மெல்லக் கீழே இறங்கினாள்.

அந்த அந்திப் பொழுதில், வச்சிரக் கோட்டத்தின் கூட்ட நெரிசலுக்குள் ஆதிரை ஒரு மெல்லிய மின்னலைப் போலத் தெரிந்தாள்.

“இந்த மங்கை எங்கே போனாள்? அவளுக்காகக் காத்திருந்து நேரம்தான் வீணானது!” என்று மனதுக்குள் சலித்துக்கொண்டாள். முதலில் இருவரும் இணைந்து வருவதாகத்தான் திட்டம். ஆனால், மங்கை வராமல் போகவே, வழிபாட்டு நேரம் கடந்துவிடக் கூடாதென்ற பதற்றத்தில் ஆதிரை தனியாகவே வரவேண்டியதாயிற்று.

தாமதமாக வந்தாலும், அன்று அவள் அணிந்திருந்த அலங்காரம் அந்த வீதியையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது. பொற்கடை வீதியில் மங்கையுடன் வாங்கிய அந்தப் புதிய அணிகலன்களும், ஆடையும் அவளது மேனிக்கு ஒரு தெய்விகப் பொலிவைத் தந்திருந்தன. அவள் உடுத்தியிருந்த விதம் அவளது வணிகக் குலத்துச் செழுமையையும், கன்னி மாண்பையும் ஒருசேரப் பறைசாற்றியது.

ஆதிரை அந்த இளஞ்சிவப்பு நிற யவனப் பட்டுத் துகிலை முன்னே மடிப்பு வைத்து, மிக நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். இடையைச் சுற்றி இறுகக் கட்டப்பட்ட அந்த ஆடையின் மடிப்புகள், அவள் நடக்கும்போது ஒரு மயில் தோகையைப் போல விரிந்து அசைந்தன.

அவளது கரங்களில், பவழ வளைகளும், அவற்றுக்கு நடுவே தங்கம் உருக்கி வார்க்கப்பட்ட சூடகங்களும் (Thick gold bangles) நிறைந்திருந்தன. கைகளை அசைக்கும் போதெல்லாம் அந்த வளைகள் எழுப்பிய ஓசை, அவளது இதயத் துடிப்புடன் போட்டியிட்டது.

தலைக்கு மேல், மெல்லிய மேகம் போன்ற ஈர்ணி அணிந்திருந்தாள். அது யவன தேசத்து மென்பட்டு நூல்களால் ஆனதால், காற்றிலேயே மிதப்பது போலத் தெரிந்தது.

ஆதிரை அணிந்திருந்த அந்த வங்கி, அவளது மென்மையான தோள்களில் ஒரு தங்கப் பாம்பைப் போலச் சுருண்டு கிடந்தது. அதன் நுனியில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்த அந்த யாளி முகம், அவள் ஈர்ணியைச் சரிசெய்யும் போதெல்லாம் அந்திச் சூரியனின் ஒளியில் அனலென மின்னியது.

அவளது தோள்பட்டையில் இறுக்கமாகப் பதிந்திருந்த தொடி, யவனப் பட்டுத் துணியின் மேல் ஒரு பொன் விலங்கைப் போலக் கம்பீரமாக மின்னியது. ஈர்ணியைப் பற்றிப் பிடித்திருந்த அவளது நீண்ட விரல்களில், மீன் வடிவம் செதுக்கப்பட்ட பொன் மோதிரம் மின்னியது.

அவள் காதுகளில் அசைந்த அந்த மகர குழையணிகள், அவள் நடக்கும் ஒவ்வொரு அசைவிற்கும் ஏற்ப ஆடிக்கொண்டு அவளது கன்னங்களில் முத்தமிட்டன. அதன் சிவப்புச் சாயல், அவளது வெண்சங்கு கழுத்திற்கு ஒரு தனி அழகைச் சேர்த்தது.

கழுத்தில் கிடந்த ஆணிப்பொன் மாலை, அவளது மார்பின் மீது ஒரு பொற்கவசத்தைப் போலப் படர்ந்திருந்தது. இடுப்பில் அணிந்திருந்த அந்த எட்டுச் சரங்கள் கொண்ட எண் கோண முத்து மேகலை, அவள் நடக்கும்போது ஒரு மெல்லிய கிண்கிணி இசையை எழுப்பியது. அந்த முத்துக்களின் வெண்மை, அவளது கருநிறக் கூந்தலுக்கு ஒரு அழகான முரண்பாட்டைத் தந்தது.

தனியே வந்திருப்பதால் ஏற்பட்ட ஒருவிதத் தயக்கமும், மக்களின் பார்வைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவளைத் தூண்டின. அந்த ஈர்ணியின் ஒரு நுனியை எடுத்து, தன் முகத்தின் பாதியளவு மறையும்படி இழுத்துவிட்டுக்கொண்டாள். சுற்றியிருந்த மக்களின் பார்வைகள் தன் மீது விழுவதை உணர்ந்தாலும், அந்த மெல்லியத் திரைக்குப் பின்னாலிருந்து அவளது மை தீட்டிய கண்கள் மட்டும் வச்சிரத் தூணைக் குறிவைத்துத் தேடின.

அவள் தன் கையில் வைத்திருந்த அந்தச் சிறிய பனை ஓலைச் சுருளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

அவள் ஓலையில் எழுதியிருந்தது அவளது குடும்பத்தைப் பற்றியோ அல்லது அவளது செல்வத்தைப் பற்றியோ அல்ல.

எம் உயிரினும் மேலான சேர வேந்தன், எவ்விதத் துன்பமும் இன்றி நூறு ஆண்டுகள் இம்மண்ணில் நிலைபெற்று வாழ வேண்டும்!

ஆதிரை கண்களை மூடி ஒரு நிமிடம் வேண்டிக் கொண்டாள். பின்னர், யாருடையக் கண்ணிலும் படாதவாறு அந்த ஓலைச் சுருளைத் தூணின் அடியில் இருந்த மலர்களுக்கு நடுவே வைத்துவிட்டு, வேகமாகக் கடந்து சென்றாள். அவளது இதயம் இப்போது ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல நிம்மதியடைந்தது.

அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த வீரனொருவன், அந்த ஓலையை யாருமறியாமல் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.

ஆதிரை சென்ற சில நிமிடங்களிலேயே, அரச மரியாதையுடன் பெருஞ்சேரல் அந்தத் தூணின் அருகே வந்தான். மக்கள் அனைவரும் நிலம் பட விழுந்து வணங்க, அவன் வச்சிரத் தூணுக்குப் பூச்சூட்டி வழிபட்டான்.

அவன் தன் கொடிஞ்சி நெடும் தேரில் ஏறும் போது, அந்த வீரன் அவன் முன்வந்து வணங்கினான். வணங்கியவன் எதுவும் கூறாமல் அந்த ஓலையை அவனிடம் ஒப்புவித்தான். அதுதான் அவனுக்கிடப்பட்டுருந்த கட்டளை. அதை நிறைவேற்றிய உவகை தெரிந்தது அவ்வீரன் முகத்தில்.

ஓலையை பிரித்துப் பார்த்தான் பெருஞ்சேரல். அதில் தெரிந்த நேர்த்தியான கையெழுத்து அவனுக்கு மிகவும் பரிச்சயமானது. ஆதிரையின் தந்தையிடமிருந்து வரும் வணிகக் கடிதங்களில் அவன் பார்த்த அதே நேர்த்தியான வணிகக் குலத்து எழுத்து முறை.

பெருஞ்சேரல் யாருக்கும் தெரியாமல் அந்த ஓலையை எடுத்துத் தன் மேலாடைக்குள் மறைத்துக் கொண்டான். நெடும்தேரில் அமர்ந்து கொண்டு இயக்கச் சொன்னவன், அந்த ஓலையை பிரித்து திரும்ப படித்துப் பார்த்தான்.

அதில் இருந்த வரிகளை வாசித்தபோது, அவனது இரும்பு போன்ற இதயம் இனித்தது. உலகத்தையே வெல்லத் துடிக்கும் ஒரு பேரரசனுக்கு, ஒரு பெண்ணின் தூய்மையானப் பிரார்த்தனை எத்தனைப் பெரிய பலத்தைத் தரும் என்பதை அவன் அப்போது உணர்ந்தான். “வஞ்சகி, இத்தனை காதலை மனதில் சுமந்து கொண்டு ஏனடி என்னை மறுத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அவன் மனதுக்குள் கேட்டான்.

அவனது முகத்தில் ஒரு அபூர்வமானப் புன்னகை பூத்தது. அதிகாரத்தாலும் வாளாலும் பெற முடியாத ஒரு பெரிய வெற்றியை, ஆதிரையின் அந்தச் சிறிய ஓலை அவனுக்குத் தந்துவிட்டது. அவளது கள்ளமில்லாத அந்தப் வேண்டுதலால் நிலைதடுமாறிப் போயிருந்தான்.

ஆதிரை தான் வைத்த ஓலையைச் சேரல் எடுத்துவிட்டதை அறியாமல், தனது மணித்தேரை நோக்கித் திரும்பினாள்.

சந்தடி மிகுந்த வீதிகளில், ஆதிரையின் மணித்தேர் மெல்ல நகர்ந்தது. அதன் வெண்கல மணிகள் காற்றில் ஒரு மெல்லிய கவிஞனின் பாடலைப் போல ஒலித்தன. ஆனால், அந்தத் தேரைப் பின்தொடர்ந்து வரும் மற்றொரு தேரின் நிழல், ஆதிரையின் இதயத்தில் ஒரு விசித்திரமானப் படபடப்பை ஏற்படுத்தியது.

சேரலின் ஒற்றனொருவன் ஆதிரையின் தேரோட்டியிடம் நெருங்கி, “அரச உத்தரவு! தேரை புன்னைத் வனத்தினருகே நிறுத்து!” என்று கட்டளையிட்டான். அது ஆளரவமற்ற வனம்!

தேரோட்டி அஞ்சி ஆதிரையிடம் சொல்ல, அவளோ, “சரி, அவர்கள் சொல்லும் இடத்திலேயே நிறுத்துங்கள்!” என்றாள். அவளது குரலில் நடுக்கம் இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. அவன் அவளது இதழ்களில் பதித்த அந்தத் தகிக்கும் முத்திரையை அவளது நினைவுகள் இன்னும் சுவைத்துக் கொண்டிருந்தன.

நகரத்தின் ஆரவாரம் மறைந்து, அந்தப் புன்னைத் வனத்தினோரம் இரு தேர்களும் நின்றன. பெருஞ்சேரல் தனது தேரிலிருந்து இறங்கி, காவல் வீரர்களை நோக்கி ஒரு கையை மட்டும் அசைத்தான். அந்த ஒரு அசைவிலேயே எங்களைத் தொடர வேண்டாம் என்ற ஆணை பிறந்தது.

இருவரும் எதுவும் பேசவில்லை. நிலவொளி மரங்களின் இடுக்குகளில் புகுந்து தரையில் கோலமிட்டது. முன்னால் கம்பீரமாக நடந்த சேரலைத் தொடர்ந்து ஆதிரை நடந்தாள். அவளது கால் சிலம்புகள் கலீர் கலீர் என அந்த நிசப்தத்தில் கவிதை பாடின. ஆதிரையின் இதயம் அவளது மார்புக்கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிடும் போலத் துடித்தது.

பெருஞ்சேரல் அவளை அழைத்துக் கொண்டு வந்தது அந்த பழைய மண்டபத்துக்கு. அது ஒரு காலத்தில் அரசவை மங்கையர் இளைப்பாறிய வசந்த மண்டபம்.

அந்த மண்டபத்தைச் சுற்றிலும் அடர்ந்த சோலை, ஒரு பச்சை நிறக் கவசத்தைப் போல அதனைச் சூழ்ந்திருந்தது. மண்டபத்தின் வட்ட வடிவக் கட்டமைப்பு, வானத்து நிலவை மண்ணில் இறக்கியது போல அத்தனை சீர்மையுடன் இருந்தது. அதன் ஒவ்வொரு கருங்கல் தூணையும் சுற்றி, ஜாதி மல்லியும் முல்லையும் படர்ந்து பூத்துக் குலுங்கின.

மண்டபத்தைச் சூழ்ந்திருந்த அந்தச் செண்பக மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள், தரை முழுவதும் ஒரு தங்கக் கம்பளத்தை விரித்திருந்தன. செண்பகத்தின் நறுமணமும், ஜாதி மல்லி, முல்லைக் கொடிகளின் மென்மையான வாசமும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஆதிரையின் உணர்வுகளைத் தூண்டிவிட்டன.

மரங்களின் இடுக்குகளில் புகுந்து வந்த பின் அந்தி வெளிச்சம், மண்டபத்தின் வட்டத் தரையில் தங்கத் துகள்களைத் தூவியிருந்தது. காற்றில் கலந்திருந்த அகிற்புகையின் மெல்லிய வாசமும், சோலை மலர்களின் நறுமணமும் அந்த இடத்தையே ஒரு மயக்கமான மாய உலகமாக மாற்றியிருந்தன.

அந்த வசந்த மண்டபத்தின் நிசப்தத்தில், சேரல் சட்டென்று நின்று திரும்பினான்.

ஆதிரை அவனது முகத்தைப் பார்க்கும் முன்பே, அவனது வலுவானக் கரங்கள் அவளது இடையைச் சுற்றி வளைத்தன. மின்னல் வேகத்தில் அவளைத் தன்பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பின் வன்மையில், ஆதிரையின் மென்மையான யவனப் பட்டு அவனது இரும்பு போன்ற மார்பில் நசுங்கியது. அவளது காதுகளில் இருந்த மகரக் குழைகள் அவனது தோள்களில் மோதி ஒரு மெல்லிய இசையை எழுப்பின.

“புனைவுகள் இல்லாமல் இருந்தாலே, யான் நின்னடிமையடி. இத்தனை புனைவுகளோடு எம்மைத் தாக்கினால் யான் எங்கனம் உயிர்பிழைப்பேன்?!” என்று அவன் அவளது காதோரம் கிசுகிசுத்தான்.

அவளால் பேச முடியவில்லை. வெட்கம் அவளை தின்றது.

“விடுங்கள் வேந்தே…” அவனிடமிருந்து விடுபட மனம் நினைத்தாலும் அவளது உடலே அவளை வஞ்சித்தது.

அவனது மூச்சுக்காற்று அவளது கழுத்தில் பட்டபோது, ஆதிரையின் உடல் நடுங்கியது. அந்த அணைப்பின் சூட்டில் அவள் தன்னை முழுமையாக இழந்தாள்.

சேரல் அவளது கண்களையே ஊடுருவிப் பார்த்தான். அவனது கையில் இருந்த அந்தப் பனை ஓலை, மாலை நேரத்துச் சூரிய ஒளியில் பொன்னிறமாக மின்னியது.

“நூறு வயது வேண்டுவதற்கு நான் என்ன உனக்கு உறவினனா தேவீ?” என்று அவன் மிக மெல்லியக் குரலில் கேட்டான். அவனது குரலில் எப்போதும் இருக்கும் அந்த அதிகாரத் தோரணை மறைந்து, ஒருவிதமான நெகிழ்ச்சி இருந்தது.

ஆதிரை முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள். “அது… அது ஒரு குடிமகளின் வேண்டுதல் வேந்தே…” என்று மழுப்ப முயன்றாள்.

“குடிமகளின் வேண்டுதலில் இத்தனை காதல் இருக்குமா?” என்று கேட்டவன், சட்டென்று உணர்ச்சிப் பெருக்கில் அவளது மென்மையானத் தோள்களைப் பற்றித் தன்னிடம் இழுத்தான்.

ஆதிரையின் முகம் அவனது அகன்ற மார்பில் புதைய, அவனது இதயத் துடிப்பின் வேகம் அவளுக்குப் புரிந்தது.

“எனக்காக நீ வேண்டும்போது, எனக்கும் உனக்காக வாழ வேண்டும் என்ற ஆசை பிறக்காதா தேவீ?” என்று அவளது காதருகே கிசுகிசுத்தான்.

ஆதிரை முதலில் திகைத்தாலும், மெல்ல அந்த அணைப்பில் தன்னைத் தொலைத்தாள்.

“இந்தச் சோலை மண்டபத்திற்கு எத்தனை முறை வந்திருப்பேன்… ஆனால் இன்றுதான் இது வசந்த மண்டபமாக எனக்குத் தெரிகிறது!” என்று அவன் அவளது கூந்தலில் முகத்தைப் புதைத்து கிசுகிசுத்தான்.

அவளது முகத்தை இன்னும் நெருக்கமாக ஏந்தினான். அவளது நெற்றியில் வழிந்த அந்த மெல்லிய ஈர்ணியைத் தன் விரல்களால் மெல்லப் பின்னுக்குத் தள்ளினான். ஆதிரையின் கண்கள் பாதி மூடிய நிலையில், அவனது அண்மையில் ஒருவித மயக்கத்தை உணர்ந்தன.

“யாராவது…” என்று அவள் ஏதோ சொல்ல முயல, அவனது பெருவிரல் அவளது இதழ்களின் மீது மென்மையாகப் பதிந்து அவளது வார்த்தைகளைச் சிறைபிடித்தது.

“பேசலாம்… ஆனால் இப்போதல்ல…” என்று முணுமுணுத்தவனின் குரலில் காதலின் பித்தேறியிருந்தது.

அவளது இதழ்களை கொய்து சுவைத்தவன், அதை விட்டுவிட, மனமில்லாமல் போராடிக் கொண்டிருந்தான். ஆதிரை மயங்கி அவன் மேலேயே சரிந்தாள். அவளை தாங்கிக் கொண்டு சுவரோரம் அமர்ந்தவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் பேதை!

அவனது ஒரு கை அவளது கூந்தலைத் தழுவி, அதில் சூடியிருந்த நீலக் குவளை மலர்களின் வாசனையை நுகர்ந்தது. அந்தப் புன்னை வனத்தின் நறுமணத்தை விடவும், அவளது மேனியில் கமழ்ந்த அந்த ஆதிமணம் அவனைப் பித்தனாக்கியது. அவனது விழிகள் அவளது இதழ்களைப் பின்தொடர்ந்தன.

ஆதிரை அவனது மார்பில் தன் கரங்களைப் பதித்தாள். அவனது இதயத்தின் அந்த வேகமான துடிப்பு, அவளது உள்ளங்கைகளில் ஒரு சங்கீதத்தைப் போல அதிர்ந்தது. அந்தப் போர் வீரன், களத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கும் அந்த உக்கிரமான மன்னன், இப்போது ஒரு சிறு குழந்தையைப் போலத் தன் முன் அடங்கிக் கிடப்பதை எண்ணி அவள் வியந்தாள்.

அவன் மெல்லக் குனிந்து, அவளது கழுத்தின் வளைவில் தன் முகத்தைப் புதைத்தான். அவனது மீசையின் உராய்வும், இதழ்களின் சூடும் அவளது மென்மையானத் மேனியில் பட்டபோது, ஆதிரையின் உடல் ஒரு மெல்லிய மின்னல் தாக்கியது போலத் துடித்தது.

அந்த தவிப்பும் துடிப்பும் அவனை இன்னுமின்னும் கிளர்ந்தெழ செய்ய, அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி இன்னும் இறுக்கமாய் வளைத்தன; அந்த வன்மையில் ஒரு மர்மமான சுகம் இருந்தது.

“நின் விழிகளில் யான் காணும் இத்தவிப்புதான் வேண்டும் தேவீ…” என்று அவன் கிசுகிசுக்க, அவளது இதழ்களில் ஒரு மெல்லியப் புன்னகை அரும்பியது.

அவன் அவளது முகத்தை மீண்டும் நிமிர்த்தினான். அந்த நிலவொளி அவளது பவள இதழ்களில் பட்டு மின்னியது. இருவருக்கும் இடையே இருந்த அந்தச் சிறிய இடைவெளி மெல்லக் கரைந்தது. மூச்சுக்காற்றுகள் ஒன்றோடொன்று கலந்து பின்னிப் பிணைய, ஆதிரை சேரலின் கைகளில் யாழாகினாள்.

அவன் அவளை இன்பமாக மீட்டத் துவங்கியிருந்தான். அந்த முரடனின் கைகள் பட்ட இடமெல்லாம் சிவந்தன.

செண்பகப் பூக்களின் வாசம் மயக்க மூட்ட, பெருஞ்சேரல் ஆதிரையின் இதழ்களில் மூழ்கிக் கொண்டிருந்தான். ஆழத்தை தொடவில்லை.

தொட்டுவிடலாமா என்று அவன் யோசித்த நேரம், திடீரென, புன்னை வனத்தின் அடர்ந்த மரங்களுக்குள் ஒரு மெல்லிய சலசலப்பு! அது காற்றின் ஓசையல்ல, இலைகள் அசைந்த விதம் வேறுபட்டிருந்தது. ஒரு நொடி! காதலின் போதை விலக, பேரரசனின் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. மின்னல் வேகத்தில் அவனது இடையிலிருந்த வாளை உருவினான்.

அவன் சுதாரிக்கும் முன்பே, மரங்களின் மறைவிலிருந்து நான்கைந்து கருப்பு உருவங்கள் வெளிப்பட்டன. அவர்கள் முழு உடலையும் கருப்புத் துணியால் மூடி, முகங்களை இரும்புக் கவசத்தால் மறைத்திருந்தனர். கைகளில் மின்னிய வாளும், கூர்மையான எறி கத்திகளும் மரணத்தை அறிவித்தன.

விசுக் முதல் எறி கத்தி பெருஞ்சேரலின் தோளை உரசிக் கொண்டு சீறியது. அவனது கையில் ஒரு மெல்லிய கீறல், குருதித் துளிகள் கசிந்தன. ஆதிரையின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போயின. “வேந்தே…” கத்த நினைத்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. அதீத அதிர்ச்சி! சில நொடிகளுக்கு முன் அவளை அணைத்த கைகள், இப்போது மரணத்தைப் பரிமாறும் வாளை ஏந்தியிருந்தன.

“வஞ்சகர்களா!” பெருஞ்சேரலின் குரல் சிங்கம் கர்ஜிப்பது போல மண்டபத்தில் எதிரொலித்தது. காதலில் ஊறித் திளைத்த வேளையிலும், அவனது உடலை ஒரு மின்னல் வேகப் போர்க்கருவியாக மாற்றத் தெரிந்தவன் இவன் என்பதை உணர்ந்து கொண்டாள். அவன் தனது வாளைச் சுழற்றினான்.

முதல் வீரன் தலையில் வாள் பாய, குருதி பீறிட்டது. அவன் தரையில் சரிந்தான். அடுத்த நொடி, மற்றொருவனின் கழுத்தைக் குறிவைத்து வெட்ட, தலை ஒருபுறம் உருண்டது. குருதி தெறித்து மண்டபச் சுவரில் சிதறியது.

ஆதிரை பேச்சற்றுப் போனாள்.

இரண்டு பேர் அவனைச் சூழ்ந்து தாக்க, சேரல் காலால் ஒருவனை உதைத்து, வாளால் மற்றவனின் வயிற்றைக் கிழித்தான். குடல்கள் வெளியே சரிந்தன.

அவனது ஒவ்வொரு அசைவும் மரணத்தின் இசையை தாளம் தப்பாமல் பாடிக் கொண்டிருந்தன. பெருஞ்சேரலின் கண்களில் வெறி மின்னியது. நான்கு பேர், சில கணங்களுக்குள் குருதிச் சேற்றில் மிதந்தனர். மண்டபத்தின் தரையில், செண்பக மலர்களுடன் குருதியும் கலந்தது.

ஆதிரை வேரோடிப் போனாள். அவளது கைகள் நடுங்கின. சில நொடிகளுக்கு முன் அவளை அணைத்த கைகள், குருதி தோய்ந்த வாளுடன் நிற்கும் அந்த காட்சியை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

குடல் சரிந்து உயிரிழந்தவனைப் பார்த்தாள். சாதாரண வீரன். இவர்களின் ஆதிக்க அரசியலில் அவன் பங்கு என்ன?

ஐந்தாவது வீரன் உயிர் பிழைப்பதற்காகப் புன்னை வனத்திற்குள் பாய முயன்றான். ஆனால் பெருஞ்சேரல் ஒரு மின்னலெனப் பாய்ந்து அவனை மடக்கிப் பிடித்தான். அவனது கண்களில் ஒரு பயங்கரமான வெறி தாண்டவமாடியது.

“யார் நீ? யார் உன்னை அனுப்பியது?” அவன் கழுத்தைப் பிடித்தபடி உறுமினான்.

வீரன் நடுங்கினான். “சொல்ல முடியாது…” ஆனால் உண்மையைச் சொல்ல மறுத்தான்.

சேரலின் முகம் கோபத்தால் இறுகியது. “வாய் திறக்க மாட்டாயா?” என்று கேட்டவன், எந்தத் தயக்கமும் இன்றி தனது வாளை ஓங்கி, அந்த வீரனின் கையைச் சடக்கென வெட்டி எறிந்தான்.

விகீர்! என்ற ஒலியுடன் வெட்டப்பட்ட கை, குருதிக் குளியலில் மண்டபத்தின் தரையில் விழுந்தது. அந்த வீரனின் அலறல் வனத்தையே நடுங்கச் செய்தது. ஆதிரை இந்தச் சண்டையின் உக்கிரத்தைப் பார்த்தது ஒரு புறம் என்றால், இந்த வெறியாட்டத்தைப் பார்ப்பது அவளது அச்சத்தின் எல்லையைத் தொட்டது.

வலி தாங்காமல் துடித்த அந்த வீரன், “உ… உதியஞ்சேரலும்… குலசேகரரும்தான்!” என்று உளறினான்.

அந்தப் பெயரைக் கேட்டதும், சேரலின் கண்களில் இருந்த வெறி இன்னும் கூடியது. “வஞ்சகர்கள்!” என்று கர்ஜித்தவன், எந்தக் கருணையும் இன்றி அந்த வீரனின் கழுத்தை சட்டென சீவினான். குருதி ஊற்றுப்போலப் பீறிட்டு, தரையில் சிவப்புக் கோலமிட்டது.

வசந்த மண்டபத்தின் பளிங்குத் தரை இப்போது ஒரு குருதிச் சேறாக மாறியிருந்தது. செண்பக மலர்களின் வெண்மை மறைந்து, பகைவர்களின் குருதிப்பலியால் அந்த இடமே ஒரு செங்களமாகத் காட்சியளித்தது. அத்தனைக்கும் சாட்சியாய், வெறியாட்டம் முடிந்ததும் மண்டபத்தின் மையத்தில் நின்றிருந்த ஆதிரை, ஆதிரை அந்த ஊன்துவை சிதறிக் கிடக்கும் உக்கிரத்தைக் கண்டு நிலைகுலைந்து மயங்கிச் சரிந்தாள்.

அப்போதுதான், காதலில் ஊறித் திளைத்த தனது ஆதிரை அங்கு இருந்ததையே பெருஞ்சேரல் உணர்ந்தான். குருதி தோய்ந்த வாளைக் கீழே எறிந்துவிட்டு, அவன் பதற்றத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்தான்.

***

குருதிக் கறை படிந்த செண்பக மலர்களுக்கு நடுவே, ஒரு முறிந்த மல்லிகைக் கொடியைப் போலக் கிடந்த ஆதிரையை அள்ளித் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் பெருஞ்சேரல். அவனது அங்கியில் அப்பியிருந்த பகைவர்களின் குருதி, அவளது தூய யவனப் பட்டாடையில் சிவப்புக் கோலமிட்டது.

சந்தடி மிகுந்த இந்திர விழாவின் வீதிகளைக் கடந்து, மின்னல் வேகத்தில் அவனது தேர் இளவேட்டனாரின் மாளிகையை வந்தடைந்தது.

நடுநிசியில் மாளிகையின் வாயில் அதிரத் திறக்கப்பட, இளவேட்டனார் பதற்றத்துடன் வெளியே வந்தார். அங்கே, குருதிக் கறையுற்ற ஆடையுடன், தன் மகளைக் கையில் ஏந்தியபடி நிற்கும் பெருஞ்சேரலைக் கண்டு அவர் நிலைகுலைந்து போனார்.

“வேந்தே! என்ன இது? என் மகளுக்கு என்ன நேர்ந்தது?” என்று அலறினார் இளவேட்டனார்.

பெருஞ்சேரல் அவளை மெல்ல அங்கிருந்த மஞ்சத்தில் கிடத்திவிட்டுத் திரும்பினான். அவனது கண்கள் இன்னும் அந்தப் போர்க்களத்து வெறியிலிருந்து முழுமையாக மீளவில்லை. “நிதானியுங்கள் இளவேட்டனாரே! வஞ்சகர்கள் எம்மைத் தாக்க முயன்றனர். ஆதிரை அந்த குருதிக் களரியைக் கண்டு அஞ்சி மயங்கிவிட்டாள். அவளுக்கு வேறெந்தக் காயமும் இல்லை…” என்றான் குரலில் ஒருவித அதிகாரமும் கனிவும் கலந்து.

சற்று இடைவெளி விட்டு, இளவேட்டனாரின் கண்களை நேராகப் பார்த்தான் சேரல். “இன்னொன்றையும் நீர் அறிய வேண்டும். உமது மகள் ஆதிரை என் உயிரின் பாதி. நான் அவளை விரும்புகிறேன், அவளும் எம்மை விரும்புகிறாள். இது அரச கட்டளையல்ல; இரு இதயங்களின் உடன்பாடு!”

இளவேட்டனார் அப்படியே உறைந்து நின்றார். ஒரு பெரும் வணிகராகப் பேரரசர்களுடன் பழகியவர் அவர், ஆனால் தன் மகள் ஒரு வீரனின், அதுவும் இத்தனை உக்கிரமான ஒரு வேந்தனின், காதலியாவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இது அவளது இயல்புக்கு சரியாக வருமா என்று தந்தையாக யோசித்தார்.

அப்போது, மஞ்சத்தில் கிடந்த ஆதிரை மெல்லக் கண் விழித்தாள். அவளது நினைவுகளில் இன்னும் அந்த வசந்த மண்டபத்தின் கொடூரம் நிழலாடியது. துண்டிக்கப்பட்ட மணிக்கட்டும், பீறிட்ட இரத்தமும் அவளது கண்களுக்குள் சுழன்றன.

அருகில் நின்றிருந்த பெருஞ்சேரல், “தேவீ… இதோ நான் இருக்கிறேன்…” என்று கனிவோடு அவளது கரத்தைப் பற்ற நெருங்கினான்.

அவனது கரம் தன் தோலைத் தொட்டதும், ஆதிரையின் உடல் மின்சாரம் தாக்கியது போலத் துடித்தது. அவனது கைகளில் காய்ந்து போயிருந்த பகைவர்களின் குருதிக் கறை அவளுக்குப் பேயுருவமாகத் தெரிந்தது.

“வேண்டாம்! அருகே வராதீர்கள்!” என்று அலறியபடி, மஞ்சத்தின் ஒரு மூலைக்கு ஒடுங்கினாள். அவளது கண்களில் தெரிந்த பயம் பெருஞ்சேரலின் இதயத்தை ஆயிரம் வாள்கள் கொண்டு கிழிப்பது போல இருந்தது.

“தேவீ… அஞ்சற்க. யான் நின் வற்பன்…” என்றான் சேரல் திகைப்புடன்.

“இல்லை! நீவீர் எம் வற்பன் இல்லை! நீங்கள் ஒரு அசுரன்… குருதி பலி கேட்கும் ஒரு மூர்க்கன்! அந்த மண்டபத்தில் நான் பார்த்தது உங்களை அல்ல… ஒரு காலனை! தயவு செய்து எம்மை விட்டுவிடுங்கள்… நெருங்காதீர்கள்!” என்று கதறியபடி, தன் முகத்தை இரு கரங்களால் பொத்திக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

பெருஞ்சேரல் சிலையென நின்றான். போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான பிணங்களைக் கண்டு கண் இமைக்காத அந்த வீரனின் விழிகள் இப்போது கலங்கின.

“தேவீ, உன்னைக் காக்கவே என் வாள் உறை நீங்கியது. வஞ்சகர்கள் சூழும்போது ஒரு வேந்தன் வாளைக் கீழே போட முடியுமா?” என்று அவன் வினவிய போது, அவனது குரலில் ஒரு ஏக்கம் கலந்த நியாயம் இருந்தது.

“உயிரைக் காக்கப் போரிடுவது வீரம்! ஆனால், கையை வெட்டி எறிந்து, அவன் அலறுவதை பார்ப்பதுதான் வீரமா? வன்முறை… குருதி தரையில் ஆறாக பாய்வதைக் கண்டு எம்மால் இன்புற முடியவில்லையே! அந்தச் சோலை மண்டபத்தின் செண்பக வாசம் இப்போது பிணவாடையாக என் நாசியில் ஏறுகிறது. வற்பா… உம்மை தீண்டும் போதெல்லாம் அந்த வெட்டுண்ட கையின் குருதி என் மேல் படுவது போல நான் உணர்வேன். தயவு செய்து போய்விடுங்கள்!” என்று அவள் மூச்சிரைக்கக் கதறினாள்.

அணைத்த கைகளையே ஆதிரை கண்டு நடுங்குவதைப் பார்த்த பெருஞ்சேரல், செயலிழந்து நின்றான். ஒரு பேரரசனாக உலகையே நடுங்க வைத்தவனுக்கு, ஒரு பெண்ணின் அச்சம் வாழ்நாளின் தோல்வியாகத் தெரிந்தது. அவனது ஆற்றல் மிகுந்த தோள்கள் ஒரு கணம் தளர்ந்தன.

இளவேட்டனார் தன் மகளை அணைத்துக் கொண்டு, “வேந்தே, இப்போதைக்கு இவளைத் தனிமையில் விடுங்கள். இன்னும் பேதையாகவே இருக்கிறாள். அவள் கண்ட காட்சி அவளது பிஞ்சுக் குலையை நடுங்கச் செய்திருக்கிறது. நான் அவளுக்கு எடுத்தியம்புகிறேன்…” என்றார் குரலில் கலக்கத்துடன்.

பெருஞ்சேரல் ஒன்றும் பேசவில்லை. தன் குருதிக் கறை படிந்த கைகளை ஒருமுறை பார்த்துக் கொண்டான். ஒரு பெருமூச்சுடன், தன் ஆதிரையை அங்கே விட்டுவிட்டு, கனத்த இதயத்தோடு இருளுக்குள் மறைந்தான் அந்த வற்பனைச் சேரல்.

இளவேட்டனார் மெல்ல ஆதிரையின் அருகே அமர்ந்தார். நடுங்கிக் கொண்டிருந்த அவளது கரங்களைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டார். வெளியே பெருஞ்சேரலின் குதிரை கிளம்பும் சத்தம் கேட்டு, அது மெல்லத் தேயும் வரை இருவரும் மௌனமாக இருந்தனர். அந்த நிசப்தத்தை இளவேட்டனாரே உடைத்தார்.

“மகளே, அவர் அரசன். அவரது உலகம் குருதியாலானது. நீ பார்த்தது அவரது ஒரு பக்கம் மட்டுமே. வேந்தன் அரியணையில் அமர்ந்திருப்பது அலர் மேலல்ல, பகைவர்களின் தலைகளின் மீது…” என்றார் இளவேட்டனார் நிதானமான குரலில்.

ஆதிரை விம்மலுடன் நிமிர்ந்தாள். “அவர் உயிரைக் காக்கப் போரிட்டிருந்தால் நான் அஞ்சியிருக்க மாட்டேன் தந்தையே. அவற்றையெல்லாம் ஒருவாறாக பழகிக் கொண்டேன், சேரல் இப்படித்தானென்று! ஆனால் அவனின் கையை அவர் வெட்டி எறிந்த விதம்… அந்த அலறலை அவர் பார்த்தவிதம்… அது ஒரு மனிதனின் செயல் அல்ல!”

இளவேட்டனார் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினார். “அவர் ஏன் அப்படி மாறினார் என்று உனக்குத் தெரியுமா மகளே? உதியஞ்சேரலும் குலசேகரரும், இன்னும் பல குறுநில மன்னர்களும் அவருக்கு நண்பர்கள் அல்ல, நலன் விரும்பிகளும் அல்ல. உடனிருந்தே உண்டகம் செய்யும் வஞ்சகர்கள். அதனால் சேரல் சாதாரணமாக இருக்க முடியாது. இருந்தால் அவரை உயிரோடு பார்க்க முடியாது. நம் உயிருக்கு ஆபத்து எனும் போது நாம தானே நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? அதைத்தானே சேரல் செய்கிறார். அதை எப்படி நீ தவறு என சொல்வாய்? அவரது மூர்க்கத்தனம் தான் அவருக்கு பாதுகாப்பு… “

ஆதிரை அதிர்ச்சியில் மௌனமானாள். என்ன சொல்வது என தெரியவில்லை.

“சுற்றியிருக்கும் சுற்றமே தனக்கு பாதுகாப்பில்லை எனும் போது, உண்ணும் உணவை கூட பாதுகாவலர்கள் உண்ட பின் தான் உண்ண முடியும் எனும் போது, அதையும் அவரை பெற்ற தாயார் தான் உண்ட பின் தான் மகனுக்கு கொடுக்கிறார் எனும் போது, உறக்கத்தில் கூட தான் கொல்லப்படலாம் என்ற நிலை வரும் போது, அவர் எப்படி மூர்க்கத்தனம் இல்லாமலிருப்பார்? தன்னைக் கொல்ல வருபவர்களை எதிர்க்காமல் கொன்று கொள் என்று கூற வேண்டுமா? அப்படியிருந்தால் நாட்டு மக்களுக்கு யார் பாதுகாப்பு? நமக்கு யார் பாதுகாப்பு? தாக்குகிறவர்களை மெய்காப்பாளர் வரும் வரை விட்டு வைக்க அவரொன்றும் வீரமில்லாத முடவனில்லையே, மறவன்… வீர மறவன். அவரை இங்ஙனம் பேசி சிதைப்பாய் என்றுதானிருந்தால் அவர் உனக்கு வேண்டாம் மகளே! இந்த நாட்டு மக்களுக்கு அவர் வேண்டும். அவருக்கு மறம் தான் அறம். மறமும் அறம் தான் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உனது கொல்லாமை கருத்துக்கள் உதவாது.”

இளவேட்டனாரின் வார்த்தைகள் ஆதிரையின் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தன.

அறைக்குள் மங்கலாக எரிந்த அகல் விளக்கின் ஒளியில் ஆதிரை தனியாக இருந்தாள். அவள் கைகளில் இப்போதும் அந்தப் பவள வளைகளும், யவன தேசத்துப் பட்டுத் துகிலும் இருந்தன. ஆனால், அவளது மனம் அந்த வசந்த மண்டபத்தின் குருதிக் கறையைத் தாண்டி, சேரலின் கண்களில் தெரிந்த அந்தத் தனிமையைத் தேடத் தொடங்கியது.

ஆதிரையின் மனம் குற்ற உணர்வில் தவித்தது. பகைவரின் கையைச் சிதைத்த அவனது மறத்தைக் கண்டு அஞ்சிய தான், அவனது ஒப்பற்ற காதலைப் பெறத் தகைமை உடையவள் தானா?

புதிய குழப்பம் அவளை ஆட்கொண்டது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 27

குருதி பலிகளையும் நிகழ்ந்த செங்களத்தையும் அறியாத பொற்பனை இந்திரவிழாவில் திளைத்திருந்தது.விழாவின் களிப்பில், உயர்குடிப் பெண்கள் முதல் சாதாரணக் குலப் பெண்கள் வரை யாவரும் ஒன்றுகூடித் திளைத்தனர். அவர்கள் தம் கூந்தலில் செழுமையான ஐம்பால்முடித்து, அதன் மேல் ஆவி அன்ன மெல்லிய ஈர்ணி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 4

  1. Uma Raviபொதுக் கருத்துUma Ravi

    சசி மா இந்த வரலாற்று கதை
    மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.மேம்
    உங்கள் எழுத்துக்கள்
    சிறக்க வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்