arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 5
வற்பனை சேரல் chevron_right பகுதி 5 / 28

அத்தியாயம் 5

visibility 215
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.9/5 (25 மதிப்பீடுகள்)
பகிர்

பன்னிரெண்டாவது கிரிட் பகுதியைச் சுற்றி ஒரு சிறிய முகாமைப் போலவே டென்ட்கள் முளைத்திருந்தன. ஜிபிஆர் காட்டிய அந்த மர்மத்தை நோக்கித் தோண்டத் தொடங்கி அன்றுடன் மூன்று நாட்களாகின்றன. மூன்று நாட்களும் விக்ரம், ஆதிரா, கதிர், மதி என நால்வருமே அந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். மூன்று நாட்களாக மண்ணின் அடுக்குகளைச் சிதைக்காமல் நடத்தப்பட்ட அந்த வெர்டிகல் எக்ஸ்கவேஷன் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருந்தது.

முதல் நாள் முழுக்கப் பக்கவாட்டு மண் சரிந்துவிடக் கூடாது என்பதற்காக இரும்புத் தகடுகளையும், மரப் பலகைகளையும் கொண்டு ஷோரிங் அமைப்பதிலேயே கழிந்தது. விக்ரம் ஒரு கையில் ஐபேடும் மறு கையில் மெஷர்மென்ட் டேப்புமாக சுழன்று கொண்டிருந்தான்.

“கணேஷ், நாலாவது லெவல்ல மண்ணோட ஈரப்பதம் அதிகமாகுது. அந்த இடத்துல பலகையை இன்னும் கொஞ்சம் பலமா முட்டுக் கொடுங்க…” என்று விக்ரம் சொல்லிக்கொண்டே குழிக்குள் இறங்க, மேலே நின்றிருந்த ஆதிரா கையில் காபியுடன் அவனுக்காகக் காத்திருந்தாள்.

“விக்ரம் சர், ஒரு நிமிஷம் மேல வாங்க. மதியம் சாப்பிட்டதோட சரி, ஒரு காபி குடிச்சுட்டு வேலையைப் பாருங்க…” என்று ஆதிரா காபியை நீட்டினாள்.

அன்றைக்கு இருவருக்குமிடையே நடந்த அந்த விவாதத்திற்கு பிறகு, சர் என்று விகுதி சேர்த்திக் கொள்வது ஆதிராவின் பழக்கமாகி இருந்தது. அவளது ஹையர் அபிஷியலுக்கு அவள் கொடுக்கும் மரியாதையாமாம். நடத்திக் கொள் என்று விக்ரமும் விட்டுவிட்டான். இந்த வேலையெல்லாம் முடிந்த பின் அவளை மீண்டும் வம்பிழுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான்.

வியர்வையைத் துடைத்துக் கொண்டே மேலே வந்து காபியை வாங்கினான் விக்ரம். அவன் முகத்தில் அப்பட்டமான களைப்பு தெரிந்தாலும், கண்கள் அந்தப் பத்தடி இலக்கை நோக்கியே இருந்தன.

“ச்சே காபி சர்விஸ் எல்லாம் நடக்குதே…” அவளை வாரிக் கொண்டே தான் குடித்தான். பழக்கம் விடுமா?

“விக்ரம் சர்… நீங்க என்னுடைய சீனியர் ஆபீசர். உங்களுக்கு நான் மரியாதையா காபி கொடுக்க வேண்டாமா?” என்று ஒட்டிவைத்த புன்னகையோடு அவள் கேட்க,

“இதே மரியாதை எப்பவும் இருக்கட்டும் ஜூனியர்…” என்று அவள் மண்டையில் கொட்டாமல் கொட்டிவிட்டுப் போனான்.

அவனை பார்த்து உதட்டை சுளித்து முறைத்துப் பார்த்தாள். ஆனாலும் அடுத்த முறையும் கொடுத்தாள்.

“தேங்க்ஸ் ஆதிரா. ஆனா இந்த காபிக்கு பதிலா நல்ல ஐஸ் வாட்டர் கிடைச்சா இன்னும் பெட்டரா இருக்கும் போல…” என்று விக்ரம் சோர்வாகச் சிரிக்க, ஆதிரா உடனே தன் பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

தண்ணீரை முழுவதுமாக காலி செய்தவன், “ரெடியா வெச்சுருக்க போல. பரவால்ல. ஆஸ்திரேலியன் மாப்பிள்ளை கிட்ட உன்னை பத்தி நாங்க நல்லவிதமாவே சொல்றோம். கவலைப்படாத…” என்று சிரிக்க, அவனிடமிருந்து பிடுங்காத குறையாக பாட்டிலை பிடுங்கிக் கொண்டு முறைத்தபடி போனாள்.

எப்படியோ அவளை சீண்டி விட்டாயிற்று என்று சிரித்தபடி அவனது வேலையை பார்த்தான்.

இரண்டாம் நாள் இரவு, டென்டிற்கு வெளியே ஒரு சிறிய விளக்கை எரியவிட்டு நால்வரும் அமர்ந்திருந்தனர். “மதி, இன்னும் மூணடிதான் இருக்கு. அந்த ஜிபிஆர் டேட்டா மட்டும் கரெக்ட்டா இருந்தா, நாளைக்கு நாம ஒரு சரித்திரத்தை கையால தொடப் போறோம்…” என்றான் கதிர் உற்சாகமாக.

மதி அவனது ஆர்வத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “உனக்கு எப்பவுமே புதையல் மேலதான் கண்ணு. ஆனா அந்தப் பத்து அடிக்கு அடியில என்ன காத்திருக்கும்னு தான் எனக்கெல்லாம் பயமா இருக்குடா தம்பி…” என்றாள்.

கதிர் மதியை விட மூன்று மாதங்கள் இளையவன் என்பதால் எப்போதும் அவனை தம்பி என்று அழைப்பது தான் மதியின் வழக்கம். ஆனால் கதிருக்கு அது பிடிக்காது. அவன் பெரியவன் என்று காட்டிக் கொள்ள விரும்புவான். ஆனால் அவனை மட்டம் தட்டுவதே மதியின் வேலையாக இருக்கும்.

ஆதிரா அமைதியாகத் தூரத்திலிருந்த அந்தப் பள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் கையில் இருக்கும் தரவுகளை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள் காலை. ஒட்டுமொத்தக் களமும் நிசப்தமாக இருந்தது. இயந்திரங்களை தவிர்த்து விட்டார்கள். கைகளால் மண்ணை அள்ள சொன்னார்கள். எத்தகைய கட்டுமானமாக இருந்தாலும் சிறிது கூட பின்னம் நேர்ந்து விடக் கூடாதே!

விக்ரம் நேரடியாகக் குழிக்குள் நின்று ஒவ்வொரு தூசியையும் பிரஷ் கொண்டு அகற்றினான், உடன் ஆதிராவும்! பத்தாவது அடியை மண்வெட்டி நெருங்கியபோது, டங் என்ற ஒரு கனமான உலோகச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அந்தப் பள்ளத்தின் சுவர்களில் எதிரொலித்து மேலே இருந்தவர்களுக்கும் கேட்டது.

அனைவரின் இதயமும் சட்டென்று நின்று விட்டு பின் துடித்தது. அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது. கூடவே சொல்ல முடியாத உற்சாகமும்!

“வாவ்வ்வ்வ்வ்!” விக்ரம் உற்சாகமாக கத்தினான்.

மற்றவர்களிடத்திலும் அதே மகிழ்ச்சி துள்ளல்! குழிக்குள்ளிருந்த ஆதிராவும் விக்ரமும் ஹைபை கொடுத்துக் கொள்ள, வெளியே இருந்த கதிரும் மதியும் ஹைபை கொடுத்துக் கொண்டனர்.

“ஓகே ஓகே…” என்று அனைவரையும் அமைதிப்படுத்தியவன், அவன் கையிலிருந்த சிறிய பிரஷால் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினான்.

அங்கே ஒரு பிரம்மாண்டமான கருங்கல் பாளம் தெரிந்தது.

அதன் நடுவே ஆதிரா கண்டெடுத்த அந்தப் பானை ஓட்டில் இருந்த அதே குறுவாள் சின்னம்!

மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டிருந்தது!

அரச முத்திரை!

“வாவ்…” அவனையுமறியாமல் அவனது உதடுகள் உச்சரிக்க, ஆதிரா கண்களில் மளுக்கென்று கண்ணீர் சூழ்ந்தது!

“விக்ரம் ப்ரோ! அப்படியே நில்லுங்க…” மேலேயிருந்து அழைத்த கதிர் தன் செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்கத் தொடங்கினான்.

விக்ரம் உடனடியாகத் தனது ஐபேடைத் திறந்து, சென்னையில் இருக்கும் தொல்லியல் துறை இயக்குநருக்கு வீடியோ கால் செய்தான்.

“சார், நாம எதிர்பார்த்த அதே இடத்துல டென் பீட்ல ஒரு பிரம்மாண்டமான கல் பலகை தட்டுப்பட்டிருக்கு. அந்த ராயல் சீல் ரொம்பத் தெளிவா இருக்கு. ப்ரோப் (Probe) பண்ணலாம்ன்னு நினைக்கறேன்.”

இயக்குநர் மானிட்டரில் அதைப் பார்த்துவிட்டுத் தீவிரமானார். “விக்ரம், இரண்டாயிரத்து முன்னூறு வருஷமா மூடிக்கிடக்கிற அறை. உள்ளே நச்சு வாயுக்கள் இருக்க வாய்ப்பு அதிகம். முறையான பாதுகாப்பு இல்லாம எதையும் செய்யாதீங்க. முதல்ல ஒரு சின்னத் துளை போட்டு கேஸ் டெஸ்ட் பண்ணுங்க.”

இயக்குநரின் கட்டளைப்படி, உடனே நவீனத் துளையிடும் கருவிகள் வரவழைக்கப்பட்டன. அந்தக் கல்லின் ஒரு மூலையில் ஒரு சிறிய துளை இடப்பட்டது. மல்டிகேஸ் டிடெக்டர் கருவியை ஒரு மெல்லிய நூலில் கட்டி விக்ரம் உள்ளே இறக்கினான். சில நிமிடங்கள் கழித்து அந்தக் கருவி பீப் ஒலியை எழுப்பியது.

“மீத்தேன் அளவு அதிகமா இருக்கு. ஆதிரா, கம்ப்ரசரை ஆன் பண்ணச் சொல்லுங்க. உள்ளே இருக்கிற காற்றை வெளியேற்றிட்டு, சுத்தமான ஆக்சிஜனை உள்ளே செலுத்தணும்…” என்று விக்ரம் உத்தரவிட்டான்.

அடுத்த ஒரு மணி நேரம், பெரிய குழாய்கள் மூலம் நிலவறைக்குள் இருந்த நச்சு வாயுக்கள் வெளியேற்றப்பட்டு, சுத்தமான ஆக்சிஜன் உள்ளே செலுத்தப்பட்டது.

வெளிச்சத்திற்காக ஒரு உயர் ரக எல்இடி விளக்கு கயிற்றில் கட்டி அந்தத் துளை வழியாக உள்ளே இறக்கப்பட்டது. மானிட்டரில் அந்த விளக்கு காட்டிய காட்சிகள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தன. அது ஒரு சிறிய அறை அல்ல; ஒரு பிரம்மாண்டமான கூடம் போலத் தெரிந்தது.

“சரி, நான் முதலில் கீழ இறங்கறேன். ஆதிரா, நீங்க மேலிருந்து கவனிங்க…” என்று விக்ரம் தனது ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டான். வெளிச்சத்திற்காக அதிலும் லைட் இருக்கும்.

ஆதிரா உடனே குறுக்கிட்டாள். “நோ விக்ரம்! இது என்னோட ரிசர்ச். நானும் வருவேன்.” கறாராகக் கூறினாள்.

விக்ரம் அவளைத் தடுக்க முயன்றான்.

“ஆதிரா, இதென்ன எக்ஸ்கர்ஷனா இல்ல டூர்ரா? நானும் வருவேன்னு அடம்பிடிக்க?”

“அதெல்லாம் முடியாது. நானும் வருவேன்…” சிறுபிள்ளைத்தனமாக அடம் செய்பவளை பார்க்கையில் கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது அவனுக்கு.

“ம்மா… அங்க எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. பாம்பு அது இதுன்னு இருந்துட்டா இன்னும் கஷ்டம். அதுவுமில்லாம ஆக்சிஜன் போதாது…”

“மாஸ்க் போட்டுக்கலாம். எனக்கு பாம்பு பார்த்தெல்லாம் பயமில்ல…” அவன் கூறிய ஒவ்வொன்றுக்கும் அவள் பதில் முறை கூறிக் கொண்டே இருந்தாள்.

“ஹலோ… உன்னோட சீனியர் ஹையர் அபிஷியல். நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும்…” கறாராக கூறியவனை முறைத்துப் பார்த்தாள்.

“யூ ஆர் எ கிரெடிட் ஸ்டீலர் விக்ரம்…” அதீத கோபத்தோடு அவள் கூற, அவனுக்குத்தான் தலைலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“லூசுப்பெண்ணே… உன்னோட நல்லதுக்காக தானே சொல்றேன்…”

“இது எனக்கு பண்ற நல்லதா? இத்தனை மாசமா இந்த தீசிஸ்ல உட்கார்ந்துகிட்டு இருக்கறது நான். இங்க ஒரு அறை புதைஞ்ச நிலைல இருக்குன்னு சொன்னது நான். அதை நீங்க சப் சர்பேஸ் அனாமலின்னு ரூல் அவுட் பண்ணீங்க. இப்ப நான் சொன்னது நடக்கவும், கிரெடிட் முழுசா உங்களுக்கு வேணும்னு நினைக்கறீங்க…”

கொஞ்சமும் தயவு பார்க்காமல் அவள் குற்றம் சாட்ட,

“அடச்சை அல்பமே, உன்னோட கிரேடிட்டை போய் நான் பிடுங்குவேனா? லூஸு… போ, போய் மாஸ்க்க மாட்டிகிட்டு வா…” விக்ரம் அவளது பிடிவாதத்தைப் பார்த்துச் சலித்துக்கொண்டான். விட்டால் அத்தனை தப்பையும் நீங்க தான் பண்ணீங்க என்று சந்தோஷ் சுப்ரமணியம் ஜெயம் ரவி போல குற்றம் சாட்டுவாள்.

“ஓகே… ஆனா, நான் சொல்ற பேச்சைக் கேக்கணும். எந்தப் பொருளையும் நான் சொல்லாம தொடக்கூடாது. டீலா?”

“டீல்!” என்றாள் ஆதிரா.

மதியும் கதிரும் கவலையுடன் பார்த்திருக்க, விக்ரமும் ஆதிராவும் நூலேணி வழியாக மெதுவாக அந்தப் பத்தடி ஆழத்து இருளுக்குள் இறங்கத் தொடங்கினர். அவர்கள் அந்தத் தரையைத் தொட்டபோது, அங்கே நிலவிய அந்தச் சந்தன மணம் ஒரு விநாடி விக்ரமின் நினைவுகளை உலுக்கியது.

பத்தடி ஆழம் என்பது மேலிருந்து பார்க்கையில் ஒரு சாதாரணக் குழி போலத் தெரிந்தாலும், அந்த இருளுக்குள் இறங்க இறங்க அதன் அழுத்தம் அதிகரித்தது. மேலிருந்து எல்இடி விளக்கின் வெளிச்சம் ஒரு மெல்லிய கோடாக விழுந்து, அவர்கள் இறங்கும் பாதையை காட்டியது.

“கதிர்… இன்னொரு லைட்டை கீழ அனுப்பு…” கீழிருந்து குரல் கொடுத்தான் விக்ரம்.

கதிர் இன்னொரு லைட்டை கீழே அனுப்ப விக்ரம் அதை வாங்கி பாதுகாப்பாக தொங்க விட்டான்.

விக்ரம் முதலில் தரையிறங்கி, ஆதிரா பாதுகாப்பாக இறங்க உதவி செய்தான். தரை தொட்டதும், ஆதிரா முதலில் செய்தது தனது முகக்கவசத்தை சரிசெய்ததுதான். இரண்டாயிர வருடப் பழமையான காற்று என்பதால், அதன் அடர்த்தி நுரையீரலைச் சற்றே அழுத்தியது.

மின்சார விளக்கின் ஒளியில் அந்த பிரம்மாண்ட மண்டபத்தை பார்க்கையில், ஆதிராவின் இதயம் ஒரு கணம் நின்றது.

“விக்ரம்… இது வெறும் நிலவறை இல்லை…” ஆதிரா கிசுகிசுத்தாள். அவளது குரல் அந்த மூடிய அறைக்குள் ஒரு விசித்திரமான எதிரொலியுடன் பரவியது.

சுவர்களில் பிரம்மாண்டமான புடைப்புச் சிற்பங்கள் தெரிந்தன. நிறம் மங்கி இருந்தாலும் அவை சாதாரணமானவை அல்ல; போர் வீரர்களின் அணிவகுப்பு, ரதங்கள், மற்றும் ஏதோ ஒரு ரகசியச் சடங்கு நடப்பது போன்ற காட்சிகள் மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அந்தச் சிற்பங்கள் மீது படிந்திருந்த மெல்லிய தூசியைத் தாண்டி, அந்த சிற்பங்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருந்தது.

அது அறை அல்ல. ஒரு பிரம்மாண்டமான கூடம். சுவர்களில் ஆங்காங்கே தீப்பந்தங்கள் வைப்பதற்கான கல் பீடங்கள் செதுக்கப்பட்டிருந்தன. தரைப்பகுதி சீராகச் செதுக்கப்பட்ட கருங்கற்களால் ஆகியிருக்க, அந்த கற்கள் அழகான வேலைப்பாடுகளால் ஆகியிருந்தது. சுவர்களில் இருந்த சிற்பங்களின் மீது காலம் ஒரு மெல்லிய படிவமாகத் தூசியைப் படரச் செய்திருந்தது. அந்தத் தூசு, சிற்பங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது போலத் தெரிந்தது. ஆதிரா தனது விரலால் ஒரு சிறு பகுதியை மெல்ல வருடியபோது, அடியில் இருந்த கருங்கல்லின் அசல் நிறம் மங்கலாகத் தெரிந்தது. அவை வெறும் சிற்பங்கள் அல்ல, உறைந்து போன ஒரு காலத்தின் சாட்சிகள்.

“ஆதிரா, அங்க பாரு…” விக்ரம் அவளின் கவனத்தை அறையின் மையப்பகுதிக்குத் திருப்பினான்.

அறையின் நடுவே ஒரு உயர்ந்த பீடம் இருந்தது. அந்தப் பீடத்தைச் சுற்றி நான்கு குறுந்தூண்கள் இருந்தன.

பீடத்தின் மீது ஒரு பொருள் இருந்தது.

அது ஒரு வாள்.

இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், அந்த வாளின் கைப்பிடியில் இருந்த உலோக வேலைப்பாடுகள் மின்சார வெளிச்சத்தில் ஒரு மர்மமான ஒளியைப் பிரதிபலித்தன.

அந்த அறை யாருடையது? அங்கே வாழ்ந்தவர் யார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஆதிரா கண்டெடுத்த அந்தப் பானை ஓட்டில் இருந்த அரச முத்திரை சின்னம் அந்த வாளின் உறையிலும் செதுக்கப்பட்டிருந்தது. இது ஒரு சாதாரண வீரனின் அறை அல்ல, ஒரு மிக உயரிய அதிகாரத்தில் இருந்தவனின் அல்லது ஒரு அரசனின் தனிப்பட்ட அந்தரங்க அறையாகத்தான் இருக்க வேண்டும் என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது.

“விக்ரம், அந்தப் பானை ஓடு கிடைச்ச இடத்துக்குச் சரியா அடியில இவ்வளவு பெரிய கட்டமைப்பு இருக்குன்னா… இது தற்செயல் கிடையாது. இந்த வாளுக்கும் அந்த பானைக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கு…” என்றாள் ஆதிரா.

அவள் மெதுவாக அந்தப் பீடத்தை நெருங்கினாள்.

அந்த அறையில் நிலவிய அந்தச் சந்தன மணம் இப்போது மிகத் தீவிரமாக வீசியது. அது வெறும் வாசனை அல்ல; அது ஒரு உணர்வாக ஆதிராவிற்குள் இறங்கியது. அவளது நாடித் துடிப்பு வேகமானது.

விக்ரம் அந்தப் பீடத்தின் அருகே சென்றான். அவனது கண்கள் அந்த வாளைப் பார்த்த விதம் ஒரு ஆராய்ச்சியாளனின் பார்வையாக மட்டும் இருக்கவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அவனை அந்த வாளை நோக்கி இழுத்தது.

“ஆதிரா, இதோ பாரு… அந்தச் சின்னம்!” விக்ரம் வாளின் கைப்பிடியைத் தொடுவதற்குத் தனது கையை நீட்டினான்.

“விக்ரம் சார்… ஒரு நிமிஷம்! இன்னும் நாம போட்டோகிராபி எடுக்கல. ஆர்கானிக் மேட்டர் சிதைஞ்சுடப் போகுது…” என்று ஆதிரா எச்சரித்தாள்.

ஆனால் விக்ரம் எதையும் கேட்கும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் ஒருவித ஈர்ப்பு நிலையில் (Trance) இருந்தான். அவனது விரல்கள் அந்த வாளின் கைப்பிடியைத் தொட்டன.

அந்த நொடி!

இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களாக உறங்கிக்கொண்டிருந்த அந்த அறையின் மௌனம் ஒரு பெரும் இடிச்சத்தத்துடன் கிழிக்க, பூமிக்கு அடியிலிருந்து ஒரு பயங்கரமான அதிர்வு ஏற்பட்டது. தரை நடுங்கத் தொடங்கியது.

“விக்ரம்! என்ன நடக்குது?” ஆதிரா நிலைதடுமாறி அந்தப் பீடத்தைப் பற்றிக்கொண்டாள்.

மேலே, அவர்கள் இறங்கி வந்த அந்த நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்த சிறிய நுழைவாயிலின் ஓரம் இருந்த தளர்வான மண் மற்றும் ஷோரிங் பலகைகள், அந்தப் பயங்கர அதிர்வில் நிலைதடுமாறின.

“ப்ரோ! ஆதிராக்கா!” மேலே இருந்து கதிரின் அலறல் கேட்டது.

அடுத்த விநாடியே, மண் சரிந்து, அந்த நுழைவாயிலை மூடிக்கொண்டது.

மேலிருந்து சரிந்த கற்களும் மண்ணும் அந்தச் சிறிய துளையை முற்றிலுமாக அடைத்தன. நூல் ஏணி பாரம் தாங்காமல் அறுந்து கீழே விழ, மேலே இருந்து வந்த அந்த வெளிச்சம் மறைந்து, கும்மிருட்டு அவர்களைச் சூழ்ந்தது.

வெளியே எல்இடி விளக்கு எரிந்து கொண்டிருந்தாலும், மேலிருந்து சரிந்த மண் அந்த விளக்கின் ஒளியை மறைத்துவிட்டது. உள்ளே இருந்த விளக்கு, மண் சரிந்தபோது உடைந்திருக்க, விக்ரமும் ஆதிராவும் அணிந்திருந்த ஹெல்மெட்டில் இருந்த லைட்டும், விக்ரமின் கையில் இருந்த டார்ச்சும் மட்டும் இப்போது அந்த இருட்டில் ஒரே ஆதாரமாக எஞ்சியது.

வழி அடைபட்டுவிட்டது. இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன் பூட்டப்பட்டிருந்த அதே அறைக்குள், இப்போது விக்ரமும் ஆதிராவும் உயிரோடு சிறைப்பட்டு நின்றனர்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 6

“விக்ரம் ப்ரோ! ஆதிராக்கா!” கதிரின் குரல் காற்றில் கரைவதற்கு முன்பே, ஒரு கோரச் சம்பவம் அங்கே அரங்கேறி முடித்திருந்தது. ஒரு நொடிக்கு முன்பு வரை மெல்லச் சரிந்து கொண்டிருந்த அந்தச் செம்மண் திட்டு, திடீரென உயிர்பெற்றது போலச் சீறியது. பல டன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 12 கருத்துகள் உள்ளன

  1. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… உள்ள இருந்து டாஸ்க் முடிச்சுட்டு ஜோடியா ரிடன் வாங்கப்பா ரெண்டு பேரும்… All the best

  2. கூடவே இருந்து பார்க்கிற மாறி இருக்கு.அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்😊

  3. கடவுளே பாவம் அவங்க இருவரும் ,
    அடுத்து என்ன நடக்கப்போகுதோ..?
    விறு விறுப்பா கதை நகர்கிறது ஆத்தர் ஜி ❤️👍

  4. ஆஹா… என்னடா இது… உள்ள என்ன இருக்கு னு பாக்க இவிங்க பின்னாடியே போனது ஒரு குத்தமா… இப்படி பொசுக்குன்னு அவிங்களோட சேர்த்து நம்மை உள்ளபோட்டு மூடிட்டாங்க…. எப்ப அடுத்த அத்தியாயம் வர்றது நான் வெளிய வர்றது…. இவிங்க பேசிகிட்டு இருக்கறத பாத்தா 2300 வருசத்துக்கு முன்னாடி போய்டுவாங்க போலவே…. ரைட்ரா….

  5. ஆஹா… என்னடா இது… உள்ள என்ன இருக்கு னு பாக்க இவிங்க பின்னாடியே போனது ஒரு குத்தமா… இப்படி பொசுக்குன்னு அவிங்களோட சேர்த்து நம்மை உள்ளபோட்டு மூடிட்டாங்க…. எப்ப அடுத்த அத்தியாயம் வர்றது நான் வெளிய வர்றது…. இவிங்க பேசிகிட்டு இருக்கறத பாத்தா 2300 வருசத்துக்கு முன்னாடி போய்டுவாங்க போலவே…. ரைட்ரா….

உங்கள் கருத்தைப் பகிருங்கள்