அத்தியாயம் 6
“விக்ரம் ப்ரோ! ஆதிராக்கா!”
கதிரின் குரல் காற்றில் கரைவதற்கு முன்பே, ஒரு கோரச் சம்பவம் அங்கே அரங்கேறி முடித்திருந்தது. ஒரு நொடிக்கு முன்பு வரை மெல்லச் சரிந்து கொண்டிருந்த அந்தச் செம்மண் திட்டு, திடீரென உயிர்பெற்றது போலச் சீறியது. பல டன் எடை கொண்ட மண், ஒரு நீர்வீழ்ச்சியைப் போல ஒட்டுமொத்தமாக உள்வாங்கி, அந்தப் பத்தடி ஆழத்து நிலவறை நுழைவாயிலை அப்படியே மூடிப் போனது.
அந்தப் பழமையான செங்கற்களின் இடுக்குகளில் புகுந்த காற்று, விக்ரமும் ஆதிராவும் நின்றிருந்த அந்த உலகை வெளியுலகிலிருந்து துண்டித்தது.
கதிர் வெறிபிடித்தவன் போல அந்தக் குழியை நோக்கிப் பாய்ந்தான். அவனது மூளை ஒரு தொல்லியலாளனாக மின்னல் வேகத்தில் கணக்குப் போட்டது.
“மதி! சீக்கிரம் அந்த எமர்ஜென்சி சைரனை ஊது! கம்ப்ரசரை ஆஃப் பண்ணாதீங்க… ஆக்ஸிஜன் லைன் கட் ஆகியிருக்கலாம், ஆனா ஏர்ஃப்ளோ வேணும்!” என்று கத்தினான். அவனது கைகள் நடுங்கினாலும், அந்தப் பதற்றமான சூழலிலும் உயிர் காக்கும் முறைகளை அவன் தவறவிடவில்லை.
மதியின் முகம் ரத்தமே இல்லாமல் வெளுத்துப்போயிருந்தது. தன் கண் முன்னாலேயே மண்ணுக்குள் புதைந்த தன் நண்பர்களை எண்ணி அவள் நிலைகுலைந்தாள். நடுங்கும் விரல்களால் சைரன் சுவிட்சை அவள் அழுத்த, அந்தப் பகுதி முழுவதையும் அதிரச் செய்யும் வகையில் அபாயச் சத்தம் ஒலிக்கத் தொடங்கியது.
“கதிர்… அவங்க… அவங்க உள்ளே…” மதியால் பேச்சை முடிக்க முடியவில்லை. விக்கித்து நின்ற அவளது கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.
“ஒன்னும் ஆகாது மதி! நீ முதல்ல சென்னைக்கு டைரக்டருக்கு போன் பண்ணு. நான் ரெஸ்க்யூ டீமுக்கு கால் பண்றேன்!” கதிர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, ஒரு கையில் செல்பேசியுடன் அடுத்தகட்டத் தற்காப்புப் பணிகளில் இறங்கினான். அவனது குரலில் நடுக்கம் இருந்தாலும், செயல் வேகம் குறையவில்லை.
மீட்புப் படைக்குத் தகவல் சொல்லி முடித்த அடுத்த நொடி, கதிர் ஒரு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு அந்தக் குழிக்குள் குதிக்கப் பாய்ந்தான். தன் கைகளாலேயே அந்த மண்ணை அகற்றி விக்ரமையும் ஆதிரையையும் மீட்டுவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் இருந்தது.
ஆனால், அங்கே வேலை செய்து கொண்டிருந்த மூத்த வேலையாட்கள் சட்டென்று அவனது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினர்.
“தம்பி, நிதானிங்க! இப்ப பதறிப்போய் உள்ள இறங்குனா மேல இருக்கிற மண்ணும் சேர்ந்து சரிஞ்சுடும். அடியில் இருக்கிற அந்தப் பழைய சுவர்கள் மேல ஏற்கனவே டன் கணக்குல மண் அழுத்தம் இருக்கு. நீங்க இப்போ கீழ இறங்கித் தோண்டுனா, அது அந்தச் சரிவை இன்னும் அதிகமாக்கி உள்ள இருக்குறவங்களை அமுக்கிடும். ஆளரவமற்ற அந்த நிலவறை இடிஞ்சுட்டா அப்புறம் யாரையும் மீட்க முடியாது தம்பி!” என்றனர் அந்தப் பெரியவர்கள்.
அவர்களது அனுபவ வார்த்தைகள் கதிரைச் சுட்டன. தன் கண் முன்னே தன் உயிரினும் மேலான நண்பர்கள் மண்ணுக்குள் சிக்கிக் கிடக்க, வெறும் கைகளோடு செயலற்று நிற்பது அவனுக்கு நரக வேதனையாக இருந்தது. அவன் அந்தக் குவியலையே வெறித்துப் பார்த்தபடி நின்றான். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நகரத் தொடங்கியது.
அடுத்த ஐந்து நிமிடங்கள் அந்த அகழாய்வுத் தளத்திற்கு யுகங்களாக நீண்டன. மதியின் கைகள் நடுங்க, கைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த இயக்குநர் – தொல்லியல் துறை என்ற எண்ணைத் தட்டுவதற்கு அவளுக்குப் பல விநாடிகள் பிடித்தன. மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், அவளது தொண்டை அடைத்தது.
“சார்! பொற்பனைக்கோட்டை சைட்ல ஒரு விபத்து …” மதியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. துக்கம் அவளது குரலை நெரித்தது.
“என்ன ஆச்சு மதி? நிதானமா சொல்லுங்க!” இயக்குநரின் குரலில் ஒரு கணம் நிசப்தம் நிலவியது.
“விக்ரம் சாரும் ஆதிராவும் அந்தப் பத்தடி நிலவறைக்குள்ள இருந்தப்போ… திடீர்னு மண் சரிஞ்சு வாசல் முழுசா மூடிடுச்சு சார். அவங்க ஏறி வர்றதுக்காகப் போட்டிருந்த அந்த நூல் ஏணியும் கட் ஆகி உள்ளேயே விழுந்துடுச்சு. இப்போ அங்க மண் மலை போலக் குவிஞ்சு கிடக்கு சார்!” என்று கூறியவளின் குரல் தழுதழுத்தது.
“என்ன சொல்றீங்க மதி? நிலவறைக்குள்ளேவா?” இயக்குநரின் குரலில் இதுவரை இல்லாத ஒரு பதற்றம் தெறித்தது. அகழாய்வுப் பணிகளில் இது போன்ற விபத்துகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அவர் நன்கு அறிவார்.
“ஆமா சார்… கதிர் இப்போதான் ரெஸ்கியூ டீமுக்கு கால் பண்ணினான். ஆனா அதுக்குள்ள…”
“சரி, மதி… அழாதீங்க. நான் இப்போவே கிளம்புறேன். நான் பேச வேண்டிய இடத்துல பேசிடுறேன். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் இப்போவே போன் பண்றேன்.” என்று கூறியவர், ஒரு கணம் நிதானித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்தார்.
“மதி, அங்க இருக்குறவங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லுங்க. எக்காரணம் கொண்டும் ஹெவி மெஷினரி (Heavy Machinery) எதையும் இப்ப யூஸ் பண்ண வேண்டாம். ஜேசிபி-யோ அல்லது பெரிய வண்டிகளோ அந்தத் தளத்துல இறங்குனா, அந்த அதிர்வுல ஏற்கனவே பலவீனமா இருக்குற அந்த இரண்டாயிரம் வருஷத்துக்கும் மேலான பழமையான ஸ்டரக்சர் இடிஞ்சு விழுந்துடும். அப்படி ஆச்சுன்னா உள்ள இருக்கிறவங்களைக் காப்பாத்தவே முடியாது. கதிர் கிட்ட இதைச் சொல்லுங்க!”
இயக்குநர் பதற்றத்துடன் போனை வைத்தார். அடுத்த சில நிமிடங்களில், சென்னையின் நெரிசலான டிராஃபிக்கை புயலைப் போலக் கிழித்துக் கொண்டு அவரது கார் புதுக்கோட்டை நோக்கிப் பயணமானது. அவரது மூளைக்குள் அந்த நிலவறையின் வரைபடமும், அங்கு சிக்கியிருக்கும் இரண்டு அதிகாரிகளின் முகங்களுமே நிழலாடின.
அவரது உத்தரவைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டது. பொற்பனைக்கோட்டை கிராமம், இப்போது சைரன் சத்தங்களாலும், அதிகாரிகளின் வாகனங்களாலும் ஒரு போர்க்களத்தைப் போல மாறத் தொடங்கியது.
செய்தி காட்டுத்தீயைப் போலப் பரவியது.
சைரன் சத்தம் கேட்டுச் சுற்றியிருந்த கிராம மக்கள் குவியத் தொடங்கினர். கூடவே உள்ளூர் செய்தியாளர்களும் அங்கே ஆஜரானார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பிரேக்கிங் நியூஸ் ஓடத் தொடங்கியது.
‘புதுக்கோட்டை அருகே அகழாய்வுத் தளத்தில் விபத்து. இரண்டாயிரம் வருடத்துக்கும் மேல் பழமையான நிலவறையில் உயிருக்குப் போராடும் இரண்டு அதிகாரிகள்!’
களத்தில் கதிர் ஒரு போர்வீரனைப் போலச் செயல்பட்டான்.
மதியின் போன் ஓய்வில்லாமல் அடித்துக் கொண்டிருந்தது. மேலிடத்து அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அவள் அனைத்தையும் சமாளித்துக் கொண்டே, மீட்புப் பணிகளுக்குத் தேவையான மின்சார வசதி மற்றும் வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
“கதிர், ஆக்ஸிஜன் சிலிண்டர்ஸ் வந்துடுச்சு. ஆனா அந்தப் பழைய ஹோஸ் வழியா காத்து உள்ள போகுதான்னு தெரியலையே?” மதி பதற்றத்துடன் கேட்டாள்.
கதிர் அந்தக் குழாயைத் தடவிப் பார்த்தான். அது மடிந்து மண்ணுக்குள் புதைந்திருந்தது. “நாம இன்னொரு சின்னத் துளை போட்டே ஆகணும் மதி. அது வழியா தான் அவங்களுக்குக் காத்தும், ஒருவேளை அவங்க மயக்கத்துல இருந்தா அவங்களை எழுப்பச் சத்தமும் கொடுக்க முடியும்!”
நேரம் நகர நகர, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கவனமும் பொற்பனைக்கோட்டையின் அந்தச் சிறிய பன்னிரெண்டாவது கிரிட் மீது திரும்பியது. ஆழத்தில், இருட்டில், மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும் அந்த இருவருக்காக வெளியே ஒரு பெரும் பட்டாளமே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது.
கதிர் ஒரு கணம் அந்த மூடிய குழியைப் பார்த்தான். “ப்ரோ… எப்படியாவது வந்துடுங்க ப்ரோ. ஆதிக்கா… ப்ளீஸ்…” மதி, கதிரின் கண்கள் கலங்கின.
***
மேலே நிலவிய அந்த மரண ஓலங்கள் எவையும் அந்த நிலவறைக்குள் கேட்கவில்லை. அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது. மண் சரிந்ததில் உடைந்த எல்இடி விளக்கின் சிதறல்கள் தரையில் கிடக்க, விக்ரமின் கையில் இருந்த டார்ச் வெளிச்சம் மட்டும் அந்த இருளைக் கிழித்துக் கொண்டிருந்தது.
“விக்ரம்… விக்ரம்…” ஆதிரா இருட்டில் தட்டுத் தடுமாறி எழுந்தாள். அவளது சுவாசக் கவசம் ஒரு பக்கமாகச் சரிந்திருந்தது. காற்றில் இப்போது ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.
அவள் டார்ச் வெளிச்சத்தைத் தேடியபோது, அது விக்ரமின் கையில் இருப்பதைப் பார்த்தாள்.
ஆனால் விக்ரம்… அவன் அங்கே இல்லை.
அந்தப் பீடத்தின் மீது விக்ரம் அமர்ந்திருந்தான்.
அவனது வலது கையில் உறை நீக்கப்பட்ட அந்தப் பழங்காலக் குறுவாள் இருந்தது. அந்த வாள் இருட்டிலும் ஒரு மங்கலான நீல நிற ஒளியைப் பிரதிபலிப்பது போல ஆதிராவிற்குத் தோன்றியது.
“சார்… என்ன பண்றீங்க? வாளைக் கீழ வைங்க. வாசல் மூடிடுச்சு… நாம இங்கிருந்து வெளியே போக வழி தேடணும்…” ஆதிரா பதற்றத்துடன் கூறினாள்.
விக்ரம் மெதுவாகத் தலை நிமிர்ந்தான். டார்ச் வெளிச்சம் அவனது முகத்தில் பாதி மட்டும் பட்டுத் தெறித்தது.
அவனது கண்கள்… அவை விக்ரமின் கண்கள் அல்ல. அதில் ஒரு முதிர்ச்சியும், ஆழமான துயரமும், எல்லையில்லாத கம்பீரமும் அதே சமயம் கட்டுக்கடங்காத அதிகாரமும் கொப்பளித்தன.
“ஆதிரை… அஞ்சற்க!” என்றான் விக்ரம்.
அந்தக் குரல்! அது விக்ரமின் குரலே அல்ல. அது ஒரு பாறையை உடைத்துக்கொண்டு வரும் அருவியைப் போல கம்பீரமாகவும், சங்கத் தமிழின் செழுமையோடும் ஒலித்தது.
ஆதிரா அப்படியே உறைந்து நின்றாள். “விக்ரம்… என்ன இது? உங்களுக்கு என்னாச்சு?”
விக்ரம் மெதுவாக எழுந்து நின்றான். அவனது தோள்கள் விரிந்து, மார்பு நிமிர்ந்தது. அவனது கையில் இருந்த வாள், அவனது உடலின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது.
“ஊழிப் பெருவெள்ளம் ஓய்ந்து பல்லூழிக் காலங்கள் கழிந்தனவோ? எம் கன்மதில்களின் திண்மை குன்றி, அரண் பலவும் நிலத்தொடு நிலமாகிச் சிதைந்தனவோ? எத்திசை நோக்கினும் இருளும் துகளுமன்றோ (புழுதி) சூழ்ந்துள்ளன!”
தன் வாளை உயர்த்தி, “எவ்வழி வஞ்சினம் சூழ்ந்து எம் பெருஞ்சேரல் வீழ்ந்தானோ… எவ்வறை அவன் குருதி நனைந்து திருத்தலமானதோ… அவ்வறையிலேயே மீண்டுமொரு முறை இத்தகு எதிர்வுகொளலோ? ஹா…”
ஆதிராவிற்குத் தலை சுற்றியது. அந்தச் சந்தன மணம் இப்போது அவளது மூளையை முழுமையாகக் ஆக்கிரமித்தது. அவளது கண்கள் சொருகின. திடீரென அந்த இருட்டு அறை மறையத் தொடங்கியது. அவளது மனக்கண்ணில் ஒரு பிரம்மாண்டமான காட்சி விரிந்தது.
இருட்டு மறைந்து தீப்பந்தங்களின் வெளிச்சம் பரவியது. இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதே அறை… செதுக்கப்பட்ட சிற்பங்கள் அப்போது புத்தம் புதியதாக மின்னின. பீடத்தின் மீது ரத்த வெள்ளத்தில் ஒரு மாவீரன் சாய்ந்து கிடக்கிறான். அவனது மார்பில் குறுவாள் பாய்ந்திருக்கிறது. அவனது முகத்தைப் பார்க்க ஆதிரா முயல்கிறாள்.
அந்த முகத்தில் விக்ரமின் சாயல்!
அவன் அருகே ஒரு பெண் கதறி அழுதுகொண்டிருக்கிறாள். அவளது ஆடை, அணிகலன்கள் அனைத்தும் வணிகர்களின் மகளைப் போல… அந்தப் பெண்ணின் முகம்… அது ஆதிராவைப் போலவே இருந்தது!
“ஐய… கண் திறவீர் ஐய!” அந்தப் பெண் அலறுவது ஆதிராவின் காதுகளில் தெளிவாகக் கேட்டது.
உண்மை உலகிற்கும், அந்தப் பிம்பத்திற்கும் இடையே ஊசலாடிய ஆதிரா, “விக்ரம்… விக்ரம்…” என்று முனகியபடி மெதுவாகத் தரையில் மயங்கிச் சரிந்தாள். அவள் விழுவதற்குள், விக்ரம் பாய்ந்து வந்து அவளைத் தாங்கிப் பிடித்தான். அவனது கண்கள் கலங்கின.
“தேவீ… முன்னொரு முறை ஊழ் நம்மைப் பிரித்தது. ஆனால் இம்முறை யான் நின்னை இழக்கேன்! இந்தக் கருங்கற் சிறை நம்மைப் பிரிக்காது!” என்றான் அவன் உருக்கமாக.
அவனது விரல்கள் அவளது கூந்தலை மென்மையாகத் தடவின. அவனது அந்தத் தொடுதலில் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகாலத் தவிப்பும், காதலும் பொதிந்திருந்தது.
“விக்ரம் பயமா இருக்கு. பிரான்க் பண்ணாதீங்க. ப்ளீஸ்… வெளிய போகணும்…” பாதி மயக்கத்தில் அவள் கண்கள் கலங்கியபடி கெஞ்சினாள்.
“அஞ்சற்க தேவீ! காலமாற்றத்தால் யான் நினக்கு அந்நியமாகிப் போனனோ? நின் பெருஞ்சேரலை அடையாளம் கொள்ளத் தயங்குவதேன்?”
“என்ன சொல்றீங்க விக்ரம்? ப்ளீஸ்…” அவளது கெஞ்சல் இப்போது அழுகையாக மாறியிருந்தது.
“நின் கண்கள் எம்மை இனம்காணத் தவறினவோ?” என்றவன், அவளை மென்மையாக அந்தப் பீடத்தின் ஓரத்தில் அமர வைத்தான்.
கனவுக்கும் நனவுக்குமிடையில் ஆதிரா போராடிக் கொண்டிருந்தாள்.
“யார் நீங்க?” அவளும் அறியாமல் வந்த வார்த்தை அது!
“யானோ? ஹா… யான் நின் வற்பனைச் சேரல்… இரணிய முட்டத்து அரையன் பெருஞ்சேரல்…”
‘வாட்…’ விழி பிதுங்கி அவனைப் பார்த்தாள் ஆதிரா.
“நின் கேண்மைக்காக (காதலுக்காக) இரண்டாயிரத்து முன்னூறு யாண்டுகளாய் காத்திருக்கும் நின் வற்பனைச் சேரல்…” என்றவன், அவளது முகத்தை கையிலேந்தி ஆழ்ந்து பார்த்தான்.
அந்த கண்கள் அவனை பொறுத்தவரை பொய்யுரைக்கவில்லை.
‘இம்மை பயப்பினும், மறுமை உளதாயினும் எம் காதல் மாறாது! யான் நும்மைப் பிரியாதுறைவேன்!’ என்று தன்னிடம் உறுதி கூறிய ஆதிரையின் அன்பு பொய்யல்ல!
“ஆதிரை…” என்றவனின் குரல் அவளது உயிர்வரை தீண்டியது. அவளை ஸ்தம்பிக்க செய்தது!
மென்மையான அந்த உதடுகளில் மென்மையிலும் மென்மையாக முத்தமிட்டான்!
முதல் முத்தம்… உடலை விட்டு இந்த உயிர் பிரிந்தது முதல் இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களாக ஏங்கி நின்ற முத்தம்!
முதலில் அதிர்ந்தவளால் அவன் பிடியிலிருந்து விடுபடவே முடியவில்லை. எஃக்கை ஒத்திருந்தது அவனது பிடி!
மென்மையாக ஆரம்பித்த அவனது முதல் முத்தம், வன்மையாக மாறியது… இரண்டாயிரத்து முன்னூறு வருட ஏக்கம், சில நொடிகளில் போகுமா என்ன?
ஏற்கனவே பாதி மயக்கத்தில் இருந்தவள், கண்கள் சொருக, முழுமையாக மயங்கத் துவங்கியிருந்தாள்!


👍👍arumai
😍☺️🍬🌹
Excellent 👌
Excellent 👌
அழகு
கதிர் மதி செயல்கள் எல்லாம் நட்புக்கே உரித்தானவை.... எக்காலத்திலும் எம் தமிழ் அழகுதமிழ் தான்.... படிக்க படிக்க இன்பமாகத்தான் இருக்கு... பழைய வார்த்தைகளை புதிதா கத்துப்போமே..... அடுத்த பதிவுக்காக ஆவளோடு காத்து இருக்கோம்..... கருத்துக்களை பதிவிட்டபின்பு மீண்டும் திருத்தம் மேற்கொள்வது போல செய்யமுடியுமா சிஸ்....
Bayathula paathi mayakathula irrundhavala kiss panni full mayakamagitan 😜 nice intresting ud sis ❤️
ஹஹஹா நன்றிம்மா
அருமை
நன்றிம்மா
யம்மாடி..! எத்தனை வருட காத்திருப்பு ,அவளுக்கு ஏன் இன்னும் முழுமையாக பழைய நினைவுகள் வரலை..?
கதர் இவஙகளை மீட்டு எடுத்து விடுவானா..?
சூப்பர்❤️
நன்றிம்மா
அடேய்.. இந்த ரணகளத்துலயும் இம்புட்டு கிளுகிளுப்பு பண்ணுறனா... இப்பவே இப்படி அப்ப எப்படி இருந்துருப்ப... யாத்தே... உன் பத்தி தெரிஞ்சுக்க நானும் ஆர்வமா இருக்கேன்டா
hahaha