அத்தியாயம் 7
அந்த நிலவறையின் இருள், அதுவரை அவளை அச்சுறுத்திய ஒரு கருந்துளையாகத் தெரியவில்லை. மாறாக, அது காலத்தின் கைகளால் நெய்யப்பட்ட ஒரு மென்மையான போர்வையைப் போல அவளைத் தழுவிக்கொண்டது.
விக்ரமின் இதழ்கள் அவளது இதழ்களில் பதிந்த அந்த நொடி, ஆதிராவின் உலகமே தலைகீழாக மாறியது. அது சாதாரண முத்தமல்ல, அது இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளாக அந்த நிலவறைக்குள் சிறைப்பட்டுக் கிடந்த ஒரு பெருங்காதலின் ஆவேசமான முத்தம். அந்த ஒற்றைத் தீண்டலில், அவளது நரம்பு மண்டலங்களில் கோடிக்கணக்கான மின்னல் பூக்கள் ஒரே நேரத்தில் பூத்தன.
அவளது அறிவு, இருபத்தியோராம் நூற்றாண்டின் தர்க்கம், அவள் கற்ற தொல்பொருள் ஆராய்ச்சிப் பாடங்கள் என அனைத்தும் அந்தத் தீண்டலில் சுக்குநூறாக உடைந்து சிதறின. இது விக்ரம் அல்ல என்ற அவளது மூளையின் எச்சரிக்கை ஒலி, இது உனக்காகக் காத்திருந்த உன் உயிர் என்ற ஆழ்மனதின் பேரிரைச்சலில் அடங்கிப் போனது.
அவளது நாசிக்குள் ஒரு விசித்திரமான மணம் ஆக்கிரமித்தது. அது காய்ந்த சந்தனக் கட்டைகளின் மணம், கருகிய நெய் தீப்பந்தங்களின் புகை, மற்றும் மிக நெருக்கமாக… மிகவும் அந்நியமாக வீசிய பச்சை ரத்தத்தின் உறைந்த வாடை. அந்த ரத்த வாடை அவளுக்கு அச்சத்தைத் தரவில்லை; மாறாக ஒரு விவரிக்க முடியாத துயரத்தை அவளுக்குள் கடத்தியது.
அவளது செவிப்பறைகளில் நிலவறையின் அமைதி மறைந்து, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் இரைச்சல் புகுந்தது. எங்கோ ஆயிரக்கணக்கான வாள்கள் ஒன்றோடொன்று மோதித் தெறிக்கும் உலோகச் சத்தம்… போர்க்களத்தில் மரண ஓலமிடும் வீரர்களின் கடைசி மூச்சு… பிளிறும் யானைகளின் கர்ஜனை… இந்தக் கூச்சல்களுக்கு நடுவே, மிகத் தூரத்தில் ஒரு பெண்ணின் தீனமான கதறல் கேட்டது. அது யாரோ அந்நியப் பெண்ணின் குரல் அல்ல, அது அவளது சொந்தக் குரலைப் போலவே இருந்தது.
ஆதிராவின் கண்கள் மெல்லச் சொருகின. அவளது பிரக்ஞை தற்கால உடலை விட்டு நீங்கி, காலத்தின் கருப்பைக்குள் பின்னோக்கிப் பயணித்தது.
அவளது மனக்கண்ணில் ஒரு பழைய திரை கிழிந்து எறியப்பட, அங்கே ஒரு பிரம்மாண்டமான காட்சி விரிந்தது.
இருள் மெல்ல விலகி, கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் ஒரு பெரும் கோட்டை மதிலின் மீது விழுந்து தெறித்தன. அது இன்றைய சிதிலமடைந்த மண்குவியலோ அல்லது புதர்கள் மண்டிய இடிபாடோ அல்ல.
செதுக்கப்பட்ட கருங்கற்களாலான, விண்ணை முட்டும் உயரமும் திண்மையும் கொண்ட பொற்பனை.
கோட்டை மதில்களில் சேரர்களின் வீரச் சின்னமான விற்கொடி திமிருடன் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. ஆதி சேரர்களின் வழிவந்த கிளை தான் தற்போது பொற்பனையை ஆட்சி செய்து கொண்டிருப்பது!
அந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான வாயில்கள் திறக்கப்பட, குதிரைகளின் குளம்படிச் சத்தமும், போர் முரசுகளின் முழக்கமும் அந்த நகரை அதிரச் செய்தன. வீதிகளில் சந்தனமும், மல்லிகையும் மணக்க, மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒரு யானை மெல்ல அசைந்து வந்து கொண்டிருந்தது.
அந்த யானையின் மீது அமர்ந்திருந்த அரசனைக் கண்டதும், ஆதிராவின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அவன் விக்ரமா? இருக்காதே… இருக்க முடியாதே! அவன் விக்ரமை போன்றேயிருந்த, கண்களில் கனலையும் அதிகாரத்தையும் உடலில் கம்பீரத்தையும், முகத்தில் தேஜஸையும் சுமந்திருந்த அரையன் பெருஞ்சேரல்.
ஆதிரா இப்போது ஒரு பார்வையாளராக இல்லை; அந்தப் பழைய உலகத்தின் ஒரு அங்கமாகத் தன்னை உணரத் தொடங்கினாள். அவளது உடலின் நவீன ஆடைகள் மறைந்து, மெல்லிய துகில்களும், விலை உயர்ந்த பவள மாலைகளும் அவளை அலங்கரிக்கத் தொடங்கின. அவள் ஒரு தொல்பொருள் ஆய்வாளர் அல்ல; அவள் இந்தப் பேரரசின் இதயத்தைத் துடிக்கச் செய்த வணிகர் மகள் ஆதிரை!
இனி விரியப் போவது வெறும் பிம்பங்கள் அல்ல; ரத்தமும் சதையுமாக அவள் வாழ்ந்த… வாழ்ந்து மறைந்த ஒரு காவியத்தின் எஞ்சிய பக்கங்கள்!
***
வைகறைப் பொழுதில் பொற்பனைக் கோட்டையின் அரண்மனை வளாகம் முழுக்கத் தூய அகில் புகையும், மலர்களின் நறுமணமும் கவிழ்ந்திருக்க, பெருஞ்சேரல் தனது படுக்கையிலிருந்து எழுந்தான். பொழுது விடியுமுன்னே, அரண்மனைப் பாவை விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருக்க, மங்கல வாத்தியங்கள் முழங்கத் துவங்கின. அவனது மங்கல நீராடலுக்கான முன் ஏற்பாடுகள் தான் அவை.
அவன் இரணியமுட்டத்து அரையன் பெருஞ்சேரல்!
வாசனைத் திரவியங்கள், சந்தனம் மற்றும் அகில் கலந்த நீரில் அவனை நீராட்ட பரிசாரகர்கள் தயாராக நின்றிருந்தனர். அவர்கள் பொற்குடங்களில் நீரைச் சுமந்து வந்து அவனை நீராட்டி, ஈரணி அணிவிப்பார்கள். இது சிறு வயது முதலான பழக்கம் என்பதால் அவனுக்கு இது ஒரு கடமையாகத் தோன்றியதே தவிர, விசித்திரமாகத் தெரிந்ததில்லை.
ஆனால், இன்று அந்த வெண்ணிற நீராவிப் புகைக்கு நடுவே, முந்தைய தினம் வனத்தில் சந்தித்த அந்தப் பெண் கேட்ட கேள்விகள் அவனை உலுக்கிக் கொண்டிருந்தன.
அவளது கேள்வி, அவனது மார்பில் பாய்ந்த அம்பை விடவும் ஆழமாகத் தைத்திருந்தது. சூழ்ச்சிகளின் சுழலில் சிக்கியிருக்கும் ஒரு அரசனுக்கு, ஒரு பெண்ணின் கேள்வி இவ்வளவு பெரிய சவாலாக அமையும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அவன் நீராடிக் கொண்டிருக்கும் போதே, திரைக்கு அப்பால் கவசங்களின் உரசல் சத்தமும், அதிகாரப் பூர்வமான காலடிச் சத்தமும் கேட்டது. அது தளபதி வீரபாகுவின் நடை என அவனுக்குத் தெரியும்.
“அரசே, தங்களின் நீராடல் முடிந்ததா?” திரைக்கு அப்பால் வீரபாகுவின் குரல் கரகரவென ஒலித்தது.
“முடிந்தது தளபதியாரே… உள் புகல்வீர்…” என்றான் சேரல்.
வீரபாகு உள்ளே வந்தபோது அவனது முகத்தில் ஒருவிதப் பதற்றம் இருந்தது. “எம் கோமானே! மூதறி வேந்தரின் உடல்நிலை தளர்ந்து, அவர் உயிருக்காய் மருத்துவர்கள் பெரிதும் கவலை கொள்கின்றனர். அதே வேளையில், தங்களின் சிற்றப்பன் உதியஞ்சேரல் பொழுது விடியுமுன்னரே அரசவை புகுந்துவிட்டார். இன்று ஏதோ ஒரு வஞ்சினத்தை அவர் முன்மொழியப் போவதாக எமது ஒற்றர்கள் வாயிலாகச் செய்தி எட்டியுள்ளது. அரண்மனைச் சுவர்கள் இன்று சூழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளன வேந்தே!.”
பெருஞ்சேரல் ஒரு பெருமூச்சை வெளிவிட்டான். உதியஞ்சேரல் அவனது தந்தை வழிச் சிற்றப்பன். அரண்மனைக்குள் இருக்கும் விஷச்செடி. வஞ்சனையை ஒரு கலையாகவே வளர்ப்பவர். வேந்தர் படுக்கையில் வீழ்ந்த அன்றே, உதியஞ்சேரலின் பார்வையில் அந்தச் செங்கோல் மீதான தாகம் வெளிப்படையாகத் தெரிந்தது. அவருக்குத் துணையாகச் சில அமைச்சர்களும், நாட்டின் எல்லையில் இருக்கும் குறுநில மன்னர்களும் ரகசியக் கூட்டங்கள் நடத்துவது வீரபாகுவுக்குத் தெரிந்திருந்தும், ஆதாரங்கள் இல்லாததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தளபதி வீரபாகு, பெருஞ்சேரலின் மீது அதீதப் பற்று கொண்டவர். போர்க்களத்தில் ஒரு பாறையைப் போல நின்று எதிரிகளைச் சாய்க்கத் தெரிந்த வீரபாகுவால், அரண்மனைக்குள் நடக்கும் இந்த நிழல் யுத்தத்தை எதிர்கொள்ளத் தெரியவில்லை. தனது தாய், மூத்த அரசி, மகனின் உயிருக்கு அஞ்சி ஒவ்வொரு வேளை உணவையும் தானே சுவைத்துச் சோதித்த பின்னரே அவனுக்கு வழங்குவதைக் காணும்போது, பெருஞ்சேரலுக்கு இந்த அரச வாழ்க்கையின் மீது ஒருவித சலிப்பு ஏற்பட்டது.
***
அன்று பொற்பனைக் கோட்டையின் இந்த ஆரவாரங்களிலிருந்தும், சூழ்ச்சி வலைகளிலிருந்தும் விலகி, அடர்ந்த காட்டின் நடுவே இருந்த கொற்றவை கோட்டத்திற்கு வழிபடச் செல்லத் தீர்மானித்தான். அது வெறும் வழிபாடு அல்ல; தன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் வஞ்சகங்களிலிருந்தும், அதிகாரப் போட்டிகளிலிருந்தும் தப்பி, தன் மன பாரத்தை அந்த ஆதித்தாயிடம் இறக்கி வைக்கும் ஒரு தருணம்.
கொற்றவை கோட்டத்திற்கு பெருஞ்சேரல் செல்வதற்கு முன்னர், “எம் கோமானே! வன்னெஞ்சர் வளைப்பின்னியிருக்கும் இவ்வேளையில், நீர் அரண் கடந்து தனிப்படச் சேறல் எவ்வாற்றானும் பாதுகாப்பாகாது! இது பொழுதன்று வேந்தே!” என்று வீரபாகு மீண்டும் எச்சரித்தார்.
ஆனால், பெருஞ்சேரலின் மனம் இந்தப் பூட்டி வைக்கப்பட்ட, பொன்வேயப்பட்ட சிறையிலிருந்து தப்பிக்கவே துடித்தது. பெருஞ்சேரல் நிதானமாகத் திரும்பி, “படைத்தலைவரே! உதியஞ்சேரலின் வன்மத்திற்கு அஞ்சி என் கடனை யான் துறக்க இயலாது. இன்று யான் கொற்றவை கோட்டத்திற்குச் செல்லல் வேண்டும். அது என் ஆதித்தாயின் ஈகை. எம்மைத் தடுக்கன்மின்!” என்றான் உறுதியாக.
“தாங்கள் தனித்துச் செல்வது முறை அன்று வேந்தே! வஞ்சகர் சூழ இருக்கும் இவ்வேளையில்…”
“அச்சம் தவிர் பாகரே! எம் குலவாள் எம்முடன் இருக்கையில் எமக்கு ஏது குறை? நீர் அரண்மனையைக் காப்பீராக. யான் விரைவில் மீள்வேன்…” என்று கட்டளையிட்டான்.
மன்னனுக்குரிய பட்டுத் துகில்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு போர்வீரனுக்குரிய எளிய மரவுரி தரித்து, கையில் தன் குலவாளை மட்டும் ஏந்தித் தனியாக நடந்தான். காட்டின் அமைதி அவனுக்குத் தேவையாய் இருந்தது. பறவைகளின் ஒலியும், மூங்கில்கள் உரசிக்கொள்ளும் சத்தமும் அவனது போர்க்களத்தைப் போன்ற மனநிலையைச் சற்றுத் தணித்தன.
நடக்கும்போது அவனது காலடியில் மிதிப்படும் காய்ந்த இலைகளின் சத்தம், அவனது அரண்மனையில் உதியஞ்சேரல் போன்றவர்கள் பேசும் நயவஞ்சகமான புகழ்ச்சிகளை விட உண்மையானதாகத் தோன்றியது. கொற்றவை கோட்டத்தை நெருங்க நெருங்க, மனம் அமைதியின் பால் வசப்பட்டது.
வனத்தின் நடுவே, ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தினடியில் அப்பழையோளின் திருவுருவம் நின்றிருந்தது. அது வடிக்கப்பட்டதல்ல; இயற்கையான பாறையில் செதுக்கப்பட்ட ஆதி வடிவம்.
அவளது தலைமுடி பவளம் போன்ற சிவந்த சடைகளாக விரிந்திருந்தது. நெற்றியில் நெற்றிக்கண் சுடர்விட, பிறை நிலவு அவளது சடையில் சூடப்பட்டிருந்தது. அவளது கழுத்தில் நாகம் மாலையாகக் கிடக்க, இடையில் புலித்தோல் ஆடையாகத் தழுவியிருந்தது.
இடது கையில் வில்லையும், வலது கையில் வெற்றி வாளையும் ஏந்தி, ஒரு காலால் எருமைத் தலையின் (மகிடன்) மீது நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் கலைமானும், சிங்கமும் அவளது வாகனங்களாகக் காவல் காக்க, அந்த அடர்ந்த காட்டிற்கே அவள் ஒரு பயங்கரமான பேரழகைத் தந்து கொண்டிருந்தாள்.
அங்கே அவன் அரசன் அல்லன்; ஒரு மகன்.
“தாயே! புவனம் வெல்லும் வலிமையைத் தந்தாய். இனிவரும் காலத்தும் இத்தகு நெஞ்சுரத்துடனேயே நின் குடிகளை ஓம்பிக் காக்க அருள்புரி தாயே” என்று அவன் முணுமுணுத்தபடி, தன் வலக்கையில் ஒரு சிறிய கீறலை ஏற்படுத்தி, சொட்டும் குருதியைத் தாயின் பாதத்தில் காணிக்கையாக்கினான்.
பெருஞ்சேரல் தன் குருதியைத் தந்துவிட்டு நிமிர்ந்தபோது, புதர்களுக்கிடையே அந்தச் சலசலப்பு கேட்டது. அவன் மின்னல் வேகத்தில் தன் குறுவாளை உருவித் திரும்பினான்.
“யாரங்கே?”
கூற்றுவன் தூதுவனோ? அன்றி மறைந்திருந்து தாக்கும் வஞ்சக ஒற்றனோ என்ற சந்தேகம் கொண்டான் பெருஞ்சேரல்!
புதர்களை விலக்கிக்கொண்டு வெளிப்பட்ட உருவத்தைக் கண்டதும், காற்றில் சீறிப் பாயத் துடித்த அவனது வாள் அப்படியே உறைந்தது. அங்கே நின்றிருந்தது ஒரு பெண்… அழகிய பெண்… மிக மிக அழகான பெண்!
அவளை பெண் என்று கூறவா? அல்லது விண்ணிலிருந்து மண்ணில் இறங்கிய தேவ மகளிர் என்று பா உரைக்கவா என்று கேட்டது அவன் நெஞ்சம்!
இது நனவா? அன்றி யான் காணும் கனவா?
அடர்ந்த புதர்களுக்கிடையே அவள் வெளிப்பட்ட அந்தத் தருணம், காட்டின் இருளைக் கிழித்து வரும் ஒரு வைகறைப் பொழுதைப் போல இருந்தது.
மின்னிய பசும்பொன் நிறம். பேரரசனையே நிலை குலையச் செய்த அவளது கயல்விழிகள். இமைகளோ, வண்டுகள் சிறகடிக்கக் காத்திருக்கும் நீலோற்பல மலர்கள்!
அவளது நெற்றி, பிறைநிலவு. அதற்குக் காப்புச் சேர்ப்பது போல, மேகக் கூட்டங்களைக் கலைத்து எறிந்ததைப் போன்ற கருஞ்சுருள் கூந்தல், காற்றில் அலைபாயும் மயிலின் தோகையென அவளது தோள்களைத் தழுவி நின்றது.
மெல்லிய துகில் அவள் மேனியை தழுவ, மெல்லிடையை மணிகள் பதிக்கப்பட்ட மணிமேகலை தழுவ, வெண்சங்குக் கழுத்தை பொன் மாலை தழுவ, கைகளை வளைகள் தழுவ, சேரல் பெருமூச்செறிந்தான்.
அருகிலிருந்த சந்தன மர நிழலில் அவளது நெடு மணித்தேர் காத்து நின்றது. அதன் குதிரைகள் அவ்வப்போது தலையை அசைக்க, தேரில் கட்டப்பட்டிருந்த மணிகள் கிண்கிணி என மெல்லிய ஓசையை எழுப்பி காட்டின் அமைதியோடு சங்கமித்தன. அவளது கால்களில் அணிந்திருந்த சிலம்புகள் ஆரவாரம் செய்யவில்லை; அவள் அடியெடுத்து வைக்கும்போது, அவை நிலத்திடம் ரகசியம் பேசுவது போல மெல்லிய ஒலியை எழுப்பின.
வளைந்த அவளது இடை அவன் கண்ணை பறித்தாலும், எல்லை மீறி ரசிக்கும் முன்பு தன்னையே மீட்டுக்கொண்டான் மன்னவன். வேங்கையைப் போன்ற அரசனின் முன்னே, தளராதக் கொடி போல நிமிர்ந்து நின்ற அவளது அந்தப் கம்பீரம் தான் பெருஞ்சேரலை நிலைகுலையச் செய்தது.
வானத்துத் தேவதையே மானுட உருக்கொண்டு, மலர் கொய்து வர வந்ததைப் போலத் தெரிந்தாள் அப்பெண்.
அவளது கையில் ஒரு பூக்கூடை.
“யாரை நீ” அவனது குரல் தாழ்ந்து விட்டது!
“யான் வணிகர் மகள். பழையோளை வழிபட…” கண்கள் தரையை நோக்கியபடி கூறியவள், “போதுகளைக் (மலர்களை) கொய்ய வந்தேன்…” என்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
அவளது வெண்தாமரை வதனம் செந்தாமரையாகியது!
“வேந்தே, நீயிரா?” என்றாள் வியப்புடன்.
பின்னர் அவனது புண்பட்ட கையைப் பார்த்தவளின் கண்கள் சட்டெனச் சினத்தில் சுருங்கின.
“இக்காடுறை தெய்வத்தின் முன்னிலையிலுமா இப்பொல்லாங்கு? ஊன் சிந்திதான் ஆதித்தாயை வழிபட வேண்டுமா?”
பெருஞ்சேரல் ஒரு கணம் மௌனமானான். எவ்வளவோ மக்கள் வாழும் பொற்பனையில், ஏன் குருதி சிந்தினாய்? என்று அவனிடம் உரிமையோடு கேட்கும் முதல் உயிர் இவள்தான்.
“பெண்ணே… இது தீங்கன்று. எம் மண்ணைக் காக்கும் திண்மையைத் தந்த அப்பழையோளுக்கு யான் செலுத்தும் கடப்பாடு. ஒரு மறவனின் கைம்மாற்றைச் செந்நீரைத் தவிர வேறெது பறைசாற்றும்?” என்றான் அவன்.
“மறவர்களாய் இருக்கலாம்! ஈன்ற பிள்ளையின் குருதியைக் குடிக்கும் தாய் எங்கேனும் உண்டா? உங்கள் உடலின் நீர் இந்த மண்ணில் வீழ்வதை விட, இப் போதுகள் அவளது பொன்னடியைத் தீண்டுவதே சிறப்பு.”
அவள் தன் கூடையிலிருந்த மலர்களைக் கொற்றவையின் பாதத்தில் வைத்தாள். அந்த மலர்களின் நறுமணம் அவனது நாசியை தீண்டியது!
“வணிகர் மகள் இந்த அடர்ந்த கானகத்திற்குள் தனியாக வர அஞ்சவில்லையா?” என்று கேட்டான் பெருஞ்சேரல்.
“யான் தந்தையின் வணிகச் சாத்துக்கள் (குழுக்கள்) இக் காடு வழியாகவே மலைநாட்டிற்குச் செல்கின்றன. இவள் எமது குலத்தைக் காக்கும் குலதெய்வம். இப்பழையோளின் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பின், யான் அஞ்சுவதற்கு ஏதுளது? ஆனால்…” என்று இழுத்தவள், அவனை நேருக்கு நேர் நோக்கினாள். “நின் குடிகளை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் மன்னனைக் கண்டு இக்கடும் கானகமும் அஞ்சி நடுங்குகின்றது என்றே யான் கருதுகின்றேன்!”
பெருஞ்சேரல் புன்னகைத்தான். அவனது அகந்தை எரியவில்லை; மாறாக, அவளது சொல்லில் இருந்த உண்மை அவனது எஃகு இதயத்தில் ஒரு மெல்லிய கசிவை ஏற்படுத்தியது.
அவள் முகத்தில் தென்பட்டது ஒரு பேதையின் மருட்சியல்ல, அது பேரணங்கின் பொற்பு. வேங்கையெனச் சீறும் வேந்தனின் முன்னும், தளராது நின்று அறம் உரைத்த அவளது அந்த அஞ்சாத்தன்மையே, அவளது முகத்திற்கு ஒரு தெய்விகக் கம்பீரத்தைத் தந்தது.
பெருஞ்சேரல் அந்தப் பெண்ணைப் பார்த்து வியப்புடன் கேட்டான், “பெண்ணே! ஏட்டுக் கல்வி பயிலாத பேதை என நினைத்தேன், ஆனால் நீயோ இவ்வளவு நுட்பமான அறத்தைப் பேசுவது எங்ஙனம்?”
ஆதிரை மெல்லச் சிரித்தாள். “வேந்தே, எம் குலத்துப் பெண்கள் வெறும் பூக்கொய்யப் பிறந்தவர்கள் அல்ல. எம் தந்தை கடல் கடந்து ஈட்டி வந்த பொருளை விட, அவர் எனக்கூட்டிய கணக்காயர் கல்வியே பெரியது. யாம் சமணப் பள்ளிகளில் அறம் பயின்றவர்கள்.”
பெருஞ்சேரல் திகைத்தான். அவள் வெறும் அழகியப் பெண் மட்டுமல்ல, பேரறிவும் கொண்டவள் என்பதை உணர்ந்த அந்த நொடி, அவனது மரியாதை இன்னும் கூடியது.
“பெண்ணே! நின்னியற்பெயர் யாதோ?” அவனது குரலில் இப்போது அதிகாரம் மறைந்து, ஒரு மெல்லிய நடுக்கம் கலந்த ஆர்வம் தென்பட்டது.
“யான் பொற்பனை மாசாத்துவான் மகள் ஆதிரை வேந்தே…” என அவள் அமைதியாக உரைத்தாள். (நான் பொற்பனை நகரத்தின் பெரிய வணிக குழுவின் தலைவரின் மகள் ஆதிரை அரசே!)
அந்தப் பெயரைக் கேட்டதும் பெருஞ்சேரலின் உள்ளத்தில் ஒரு மின்னல் வெட்டியது. பொற்பனையின் பெரும் வணிகக் குலத்தின் கொழுந்து இவள் என்பது அவனுக்குத் தெரிந்தது. அந்தப் பெயரில் இருந்த புனிதமும், அவளது முகத்தில் இருந்த தெளிவும் அவனை மெய்மறக்கச் செய்தன.
இக்கணம்… ஓர் ஊழி காலத்திற்கும் எம் அகத்தினின்றும் நீங்காது நிலைபெறும் என்று அவன் மனம் சொன்னது.
பெண்ணா அவள்?
இத்தனை அழகாக ஒரு பெண் இருக்கக் கூடுமா? இருக்கவே முடியாது என்று மனம் பிடிவாதம் பிடித்தது. யவன மங்கையர் பேரழகு கொண்டவர் என்று கேள்விப்பட்டிருந்தான். பொற்பனை அங்காடி வீதிகளில் அவர்களைக் கண்டுமிருக்கிறான். ஆனால், இவள் பாதச் சிலம்பின் ஒலிக்கு முன் அந்த யவனப் பெண்டிரின் பேரழகு எம்மாத்திரம்?
கண்ட அவ்வேளையிலேயே, அவள் பாதத்தில் வீழ்ந்து விட்டான் வேந்தனவன்!


Nice intresting ud sis ❤️
நன்றிம்மா
அருமை
நன்றிம்மா
❤️❤️
நன்றிம்மா
Nice
நன்றிம்மா
Pazham tamil sorkkal migavum arumai
நன்றிம்மா
Nice
நன்றிம்மா
அழகு
நன்றிம்மா
Waiting for the next episode
updated மா
தமிழ் கொள்ளை அழகுதான் இல்லை 😍
பாத்த முதல் பார்வையிலே அவன் மனதுக்குள்ள புகுந்து விட்டாள்.
அவளின் முகத்தில் பயம் இல்லை ,வரமான பொண்ணு தான்.
சூப்பர்❤️
நன்றிம்மா
about Next??
updated மா
Next part 🙄
போட்டாச்சு :)
ரொம்ப நாள் இல்ல இல்ல வருடம் கழித்து நிறுத்தி நிதானமா உணர்ந்து படிக்க ஒரு நாவல்... நல்லாருக்கு க்கா
thanks da