arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 8
வற்பனை சேரல் chevron_right பகுதி 8 / 28

அத்தியாயம் 8

visibility 558
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.1/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

அரண்மனையின் அந்தரங்கக் கோட்டம் அன்று அமைதியில் மூழ்கியிருந்தது. அகிற்புகையும், நெய் விளக்குகளின் சுடரும் இணைந்து அந்த இடத்தை ஒரு தெய்வீக மாயலோகமாக மாற்றியிருந்தன. அதன் நடுவே, ஆலமரத்தின் விழுதுகளுக்குக் கீழ் அமர்ந்திருக்கும் ஆலமர் செல்வனின் மரகதக் குறி, உலகத்தின் அத்தனை ரகசியங்களையும் தன்னுள் அடக்கிப் புன்னகைப்பது போல வீற்றிருந்தது.

பெருஞ்சேரல், நறுமணம் கமழும் நீரில் நீராடி, தூய வெண்நிறத் ஆடையாலான ஈரணி தரித்து அங்கே அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால், ஆசீவக அறிஞர்களும், சமண முனிவர்களும், பௌத்த பிட்சுகளும், சான்றோர்களும், வேதம் ஓதும் வைதீகர்களும், சிவநெறியாளர்களும் குழுமியிருந்தனர்.

பொதுவாக, இத்தகைய விவாதங்களில் பெருஞ்சேரல் மிகக் கூர்மையான தர்க்கங்களை முன்வைப்பான். ஆனால் இன்று, அவனது விழிகளில் ஒரு தேடல் இருந்தது. அது அறிவினால் வரும் தேடல் அல்ல; அனுபவத்தால் வந்த திகைப்பு.

“சான்றோரே! எமது குலத்தை ஓம்பும் அறவோர்களே!” என்று தொடங்கினான் பெருஞ்சேரல். அவனது குரல் வழிபாட்டுக் கூடத்தின் கருங்கல் சுவர்களில் மோதி எதிரொலித்தது. “இறைவன் ஒருவனே எனில், அவனை அடையும் வழியில் ஏன் இத்தனைப் பூசல்கள்? இப்பொற்பனை நாட்டை ஆளும் வேந்தனாக யான் கையில் ஏந்தும் இவ்வாள், மெய்யாகவே அறத்தைக் காக்கவா அல்லது வெறும் அதிகாரப் பசியால் நிலத்தைக் கவரவா? எமது ஆதிப் பழையோன் காட்டும் மெய்நெறி யாது? எமக்கு விடை புகல்வீராக!”

முதலில் ஒரு சமண முனிவர் எழுந்தார். அவரது உடல் மெலிந்திருந்தது, ஆனால் கண்கள் அமைதியான ஒளியைச் சிந்தின. “எம் கோமானே! உலகப் பூசல்களுக்குக் காரணம் புறத்தே இல்லை, அது நினது அகத்தே குடிபுகுந்துள்ளது! கொல்லாமை ஒன்றே மெய்யான அறம். ஓர் எறும்பின் உயிரும், இந்தப் பாராளும் பேரரசனின் உயிரும் மெய்ஞானத்தின் தராசில் நிகரானவையே! உமது வாள் தர்மத்தைக் காப்பதாக நீர் மொழிவது வெறும் மாயை; வன்முறை ஒருபோதும் அறமாகாது. எவ்வுயிரையும் காப்பதே எமது ஆதிப் பழையோன் காட்டும் உயரிய நெறியாகும்!” என்றார் நிதானமாக.

அவரது கருத்தை கவனமாக கேட்டவன், எதுவும் பதில் மொழி பேசாமல் தலையாட்டிக் கொண்டான்.

அவரைத் தொடர்ந்து ஒரு பௌத்த பிட்சு தனது காவியுடை சரசரக்க எழுந்தார். “எம் கோமானே! அந்தணர்கள் மொழிவது ஒருவகை உண்மையே. எனினும், மானுடத் துயரின் ஆணிவேர் அடங்காத பேராசையிலேயே முளைத்துள்ளது! நிலத்தைக் கவரத் துடிக்கும் வேட்கையே குருதி வழியும் போருக்கு இட்டுச் செல்கிறது. உமது வாள் அதிகாரப் பசிக்காக உயருமெனில் அது தீராப் பாவமாகும்; அதுவே எளிய குடிகளின் கண்ணீரைத் துடைக்க உயருமெனில் அதுவே பேருயிர்க் கருணையாகும். நீவிர் தேடும் நிலையான அமைதி இப்பாழ் அரியணையில் இல்லை வேந்தே! அது ஆசையைத் துறந்த பெருந்துறவிலேயே பொதிந்துள்ளது…” என்றார்.

மெலிதாக புன்னகைத்தான் பெருஞ்சேரல். அரியணையை துறந்தால் நாட்டை யார் ஆள்வது என்ற கேள்வி அவனுக்குள்!

அப்போது ஒரு ஆசீவக அறிஞர் குறுக்கிட்டார். அவர் விதியைத் தலைமேல் கொண்டவர். “பிட்சுவே! ஆசையைத் துறப்பதால் மட்டும் என்ன விளையும்? அனைத்தும் ஊழ் எனும் நியதி! இந்தப் போர் மூழ்வதும், நீர் வாள் ஏந்தி நிற்பதும் அந்த ஆதி ஊழின் கட்டளையே! இங்கே எம்மான் எதையும் மாற்றிட இயலாது. நிகழ்பவை யாவும் முன்தீர்மானிக்கப்பட்ட திசைவழியே! இதில் அறம் என்றும், பாவம் என்றும் பிரித்துப் பார்ப்பதற்கு ஏதுளது? ஆடுவது யாவும் ஊழின் பொம்மலாட்டமே…” என்று விதியை முன்வைத்தார்.

இதுவும் சரியாகத்தான் தோன்றியது அவனுக்கு. ஆனால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த வைதீக அந்தணர் ஆவேசமாக எழுந்தார்.

“இல்லை வேந்தே! இது வெறும் ஊழ்வினை அன்று. வேள்வித் தீயில் இடப்படும் ஆகுதி எவ்வாறு உலகத்தின் ஒழுங்கைக் காக்குமோ, அவ்வாறே அரசன் புரியும் அறப்பாரும் அகிலத்தைக் காக்கும். எமது மறைகள் நவிலுவது யாதெனில், போர் மறவனாகிய உமது தலைக்காய கடமை வாள் ஏந்துவதே! தீயோரை அழித்து, நல்லோரைக் காக்க நீர் நிலத்தில் சிந்தும் குருதி வெறும் செந்நீர் அன்று; அதுவே நீதி! அறம் காக்கச் சிந்துவது ஒருபோதும் பாவமாகாது!” என்று வாதிட்டார்.

இதுவும் ஏற்கத்தக்க கருத்துதானே என்று தோன்றினாலும் பதிலேதும் கூறவில்லை பெருஞ்சேரல்!

இறுதியாக, அங்கே அமர்ந்திருந்த ஒரு சிவநெறியாளர் மெல்லப் புன்னகைத்தார். அவர் சிவபெருமானின் ஆலமர் செல்வன் கோலத்தைப் பார்த்தபடி பேசினார். “எம் கோமானே! வாள் ஏந்துவதும் மலர் ஏந்துவதும் ஒன்றே, அங்கே அன்பு எனும் அறம் குடிபுகுந்தால்! ஆலமர் செல்வனாம் எமது ஈசன் ஆலகால நஞ்சை அருந்தியது ஏன்? அகிலத்தைக் காக்கவன்றோ? வெறும் அதிகாரப் பசிக்காக வாள் ஏந்தினால் அது கூற்றுவன் (எமன்) காட்டும் கொடுவழி; அதுவே குடிகளின் கண்ணீரைத் துடைக்க, அந்த நஞ்சைத் தானே ஏற்றுக்கொண்டு அறத்தை நிலைநாட்டப் போராடினால் அதுவே சிவநெறி காட்டும் அறவழி! அறத்தின் வாள் ஒருபோதும் குருதி குடிக்காது வேந்தே, அது உயிர்களைக் காக்கும் கவசமாகும்!!”

“உயிர்களைக் காப்பதே அறமெனில், போர்க்களத்தில் யான் பெருக்கும் குருதிப் புனல் எத்தகையது? எம் வாளுக்கிரையாகும் ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிர்ப்பலிக்கு எவர் பொறுப்பு? கொற்றவைக்குப் பச்சைக் குருதி தந்து வெற்றியைக் கோருவதும், இங்கே வந்து அன்பே சிவம் என அறம் பேசுவதும் முரணாகத் தெரியவில்லையா? இவ்வேந்தனின் செங்கோல் அறத்தின் மீது நிற்கிறதா அல்லது பிணங்களின் மீது நிற்கிறதா?”

அங்கிருந்த புலவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அரசன் இன்று வழக்கத்திற்கு மாறாகப் பேசுகிறான் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

பெருஞ்சேரல் தொடர்ந்தான், “நேற்றைய பொழுது… அடர் கானகத்தின் நடுவே ஒரு மங்கையைக் கண்டேன். யாம் இப்பொற்பனை நாட்டை ஆளும் வேந்தன் என அறிந்தும், எள்ளளவும் அச்சமின்றி எம் முன்னே நின்று ஒரு வினாவைத் தொடுத்தாள். குருதி பலி கொடுத்து தெய்வத்தை வழிபட வேண்டுமா என்பதே அவளது வினா! எண்ணிலாப் பெரும்பொருளும், கடல் போன்ற நால்வகைப் படைகளும் கொண்ட இவ்வேந்தனின் வீரம், ஒரு வணிக மகளின் அந்த ஒற்றைச் சொல்லுக்கு முன் மண்டியிட்டு வீழ்ந்ததே… அது ஏனோ?”

அரசவையில் நிசப்தம் நிலவியது. ஒரு சாமானியப் பெண், வேந்தனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியதை அவர்களால் நம்ப முடியவில்லை.

“வேந்தே!” என்று ஒரு மூத்தப் புலவர் எழுந்தார். “அந்தப் பெண் யாவரோ யாம் அறியோம். ஆனால் அவள் உரைத்தது காலத்தைக் கடந்த அறத்தின் குரல். அவள் உங்கள் பிழையைச் சுட்டிக்காட்டவில்லை; உங்கள் ஆத்மாவின் தாகத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறாள்.”

பெருஞ்சேரல் மெல்லக் கண்களை மூடினான்.

அவளது கம்பீரம், அச்சமற்ற அந்த விழிகள், அவளது சொல்லில் இருந்த உறுதி… எல்லாம் அவனது ஆழ்மனதில் ஆணி அடித்தாற்போலப் பதிந்திருந்தன.

ஆனால், அந்த நிசப்தத்தைச் சிதைத்தது ஒரு கரகரப்பான சிரிப்பு. அது சிற்றப்பன் உதியஞ்சேரலின் குரல்.

“அறமா? எக்காலத்தும் காணாத விந்தை இது! ஒரு நாடோடிப் பெண் பிதற்றியதை எல்லாம் காலத்தைக் கடந்த அறம் என இப்புலவர் பெருமான் உரைப்பது எமக்கு நகையையே (சிரிப்பையே) வரவழைக்கிறது!” என்று எள்ளி நகையாடியபடி உதியஞ்சேரல் எழுந்தார். அவனது கண்கள் அரியணையை ஒரு கணம் அளவெடுத்துவிட்டுப் பெருஞ்சேரல் பக்கம் திரும்பின.

“வேந்தே! எம் நாடு இன்று ஒரு இக்கட்டான காலத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மூதறி வேந்தரோ படுக்கையில் கிடக்கின்றார்; எல்லையிலோ பகைவர் எந்நேரமும் பாயக் காத்திருக்கின்றனர். இத்தகு நெருக்கடியில், அரியணையில் அமர்ந்திருப்பவன் போர்க்களம் கண்டு நடுங்காத தீரனாக இருக்க வேண்டுமே அன்றி, ஒரு நாடோடிப் பெண்ணின் பிதற்றலுக்குப் பேதுற்றுத் திரியும் பித்தனாக இருக்கலாகாது!”

உதியஞ்சேரலின் இந்தப் பேச்சு, அரசவையில் ஒரு பெரும் சலசலப்பை உருவாக்கியது. உதியஞ்சேரலின் பக்கமிருந்த அமைச்சர்கள் மெல்லத் தங்களின் முகமூடிகளைக் கழற்றத் தொடங்கினர்.

“உதியஞ்சேரலார் சொல்வதில் உண்மை இருக்கிறது!” என்று எழுந்தார் மூத்த அமைச்சர். “இளவரசர் சமீபகாலமாக மெய்யியல் தேடல்களிலும் தத்துவப் பிதற்றல்களிலும் தன் பொன்னான காலத்தைச் சிதைத்துக் கொள்கிறார்! வெறும் அறத்தினால் மட்டுமே ஒரு நாட்டின் அரண்களைக் காத்துவிட இயலாது. பகைவரை நடுங்கச் செய்யும் வன்மையான அதிகாரமே நாட்டிற்குத் தேவை. அரசரின் இந்தத் தளர்ந்த போக்கு இப்பேரரசின் வீழ்ச்சிக்கே வித்திடும்!”

உடனடியாகப் பெருஞ்சேரலின் பக்கமிருந்த தலைமை அமைச்சர் குலசேகரர் ஆவேசமாக எழுந்தார்.

“நாவடக்கட்டும் அமைச்சரே! இளவரசரின் அறத்தேடலைத் திறனற்ற மென்மை என இகழ்வது எவ்வகையிலும் அறமாகாது. அறத்தின் பிடி இல்லாத அதிகாரம் வெறும் அராஜகமே! பெருஞ்சேரல் இப்பொற்பனைப் பேரரசின் முறையான குருதி வழி வாரிசு. அத்தகு பேராற்றல் கொண்ட வேந்தரைத் தகுதி நீக்கம் செய்யத் துடிப்பது எவர் பின்னிய வஞ்சக வலை? எமது செங்கோல் யாருடைய சதிக்கு இரையாகப் போகிறது?” என்று உதியஞ்சேரலை நோக்கியே கேள்வியைத் தொடுத்தார்.

உதியஞ்சேரல் அசரவில்லை. அவர் அரசவையின் மையத்திற்கு வந்து, தனது ஆதரவு அமைச்சர்களை ஒரு பார்வை பார்த்தார். “குலசேகரரே! யாம் வஞ்சினம் சூழவில்லை; எமது கவலை எல்லாம் இப்பொற்பனை நாட்டின் வருங்காலம் குறித்ததே! முதுபெரும் வேந்தரின் உடல்நிலையை பற்றி மருத்துவர்கள் உறுதி கொடுக்கவில்லை. இத்தகு நெருக்கடியில், நாட்டிற்கு ஒரு நிலையான ஆளுமை தேவை. அதை விடுத்து, ஒரு நாடோடிப் பெண்ணின் சொல்லுக்குப் பேதுற்றுத் திரியும் ஒரு பித்தனின் கையில் செங்கோல் சிக்கினால், எம் குலப்பெருமை மண்ணோடு மண்ணாகிவிடாதோ?”

மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றிருந்த தளபதி வீரபாகு தனது வாளின் பிடியை இறுக்கினார். உடனிருந்த துணைத் தளபதி மாறன் பற்களை கடித்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. “உதியஞ்சேரலாரே! நாவடக்கத்துடன் பேசும். அரசரை பித்தன் என்று உரைக்க உமக்கு எவர் அதிகாரம் தந்தது? எம் வாள் உறையில் இருக்கும் வரைதான் உம் நாவிற்கு வேலை!” என்று வீரபாகு எச்சரித்தார்.

அரசவை இரண்டாகப் பிளவுண்டு நின்றது. ஒருபுறம் அனுபவமும் அதிகாரப் பசியும் கொண்ட உதியஞ்சேரலின் கூட்டம்; மறுபுறம் அறத்தையும் வாரிசுரிமையையும் காக்கத் துடிக்கும் மாறனும் குலசேகரரும் வீரபாகுவும்.

பெருஞ்சேரல் மெல்லக் கண்களைத் திறந்தான். அவனது பார்வையில் இப்போது ஒரு விசித்திரமான விலகல் இருந்தது. இந்த அதிகாரப் போட்டிகள், செங்கோல் மீதான தாகம், உறவுகளின் வஞ்சனை… இவை யாவும் அவனுக்குத் துச்சமாகத் தெரிந்தன.

இவர்களின் கூற்றுக்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துதானாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 9

பொற்பனையின் நாளங்காடி வீதி, கதிரவனின் உச்சிப் பொழுதில் கனன்று கொண்டிருந்தது. அங்கே எழுந்த நறுமணப் புகையும், மக்களின் உரையாடல்களும் ஒன்றோடொன்று கலந்து ஒரு மாயச் சூழலை உருவாக்கியிருந்தன. மடந்தை பருவத்தின் மத்தியில், அறிவும் அழகும் ஒருங்கே அமையப் பெற்ற ஆதிரை, தன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 7

  1. Thaniபொதுக் கருத்துThani

    இவன் ஏதோ முடிவு எடுத்து விட்டான் .

உங்கள் கருத்தைப் பகிருங்கள்