arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 9
வற்பனை சேரல் chevron_right பகுதி 9 / 28

அத்தியாயம் 9

visibility 551
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

பொற்பனையின் நாளங்காடி வீதி, கதிரவனின் உச்சிப் பொழுதில் கனன்று கொண்டிருந்தது. அங்கே எழுந்த நறுமணப் புகையும், மக்களின் உரையாடல்களும் ஒன்றோடொன்று கலந்து ஒரு மாயச் சூழலை உருவாக்கியிருந்தன. மடந்தை பருவத்தின் மத்தியில், அறிவும் அழகும் ஒருங்கே அமையப் பெற்ற ஆதிரை, தன் தந்தையின் பேரங்காடியில் வீற்றிருந்தாள். (மடந்தை: பதினான்கு முதல் பத்தொன்பது வயது)

அவள் பிறந்தபோதே அவளது அன்னை அந்தி மழுங்கும் வானின் ஒளியைப் போல மறைந்து போனாள். அன்று முதல், அவளுக்கு அன்னையாகவும் தாதையாகவும், குருவாகவும் தெய்வமாகவும் விளங்கியவர் அவளது தந்தை இளவேட்டனார் மட்டுமே.

வானம் பார்த்த பூமியை ஒரு தந்தை எப்படிக் காப்பாரோ, அப்படி அவளைத் தன் கண்ணின் இமை போலக் காத்து வளர்த்தார். அவளுக்குத் தாய்மை என்பது வெறும் சொல்லாகத் தெரிந்ததே தவிர, அது அவளது தந்தையின் அரவணைப்பில் ஒருபோதும் குறையாகத் தெரிந்ததில்லை.

அந்தப் பெரிய மாளிகையில், அவள் ஒருத்தி மட்டுமே தந்தையின் மொத்த அன்பிற்கும் உரிமையான ஒரே புதல்வி. அவர் அவளை ஒரு பெண்ணாக மட்டும் வளர்க்கவில்லை; அனைத்தையும் துணிச்சலுடன் கேள்வி கேட்கும் ஒரு அறிவுச் சுடராக வளர்த்தெடுத்தார்.

அவளது தந்தை அவளுக்குக் கொடுத்த முதல் சொத்து அவளது அறிவு மற்றும் அறம் தான். அதனால்தான், ஒரு பேரரசனின் முன்னே நின்று, எவ்வித அச்சமுமின்றி அவளால் அந்த உயிர்ப்பலி குறித்த கேள்வியைக் கேட்க முடிந்தது.

தீட்டிய ஓவியமெனத் திகழும் மேனியில், முத்துக்களென அரும்பிய வேர்வைத் துளிகள் அவளது உழைப்பின் சாட்சிகளாய் நின்றன. அங்காடியில் வேலை செய்யும் ஆட்களும் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அகில், சந்தனம், முத்து, பவளம் என பலவற்றை கொற்கை துறைமுகம் மூலமாக எத்தேசத்திற்கும் ஏற்றுமதி செய்பவர் அவளது தந்தை. அவரது வாணிபத்தை பொற்பனையில் கவனிக்க ஆரம்பித்திருந்தாள் ஆதிரை! வாணிபம் பழகட்டும் என்று தந்தையும் விட்டிருந்தார்!

தினமும் அவளது மணித்தேரில் நகர்வலம் வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தாள். அந்த தேரின் அழகை காண்பதற்கே மக்கள் காத்திருப்பார்.

அந்தத் தேர் வெறும் வாகனம் அல்ல; அது பொற்பனை மாசாத்துவான் இளவேட்டனாரின் குலப் பெருமையையும், ஆதிரையின் கன்னி மாண்பையும் பறைசாற்றும் ஒரு நகரும் மாளிகை.

தேரின் நான்கு திசைகளிலும் வரிசை வரிசையாகக் கோக்கப்பட்டிருந்த வெண்கல மணிகள், கடற்காற்றில் மெல்ல அசைந்து கிண்கிணி என ஒரு தெய்வீக இசையை மீட்டிக் கொண்டிருந்தன. இந்த இனிய ஓசையே அந்தத் தேர் வருவதைச் சுற்றியுள்ள மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு கௌரவமான அடையாளமாக இருந்தது.

தேரின் முன்புறம் தந்தத்தால் செதுக்கப்பட்ட, தாமரை மொட்டு வடிவிலான வளைந்த கொடுஞ்சி ஒரு தூணில் நிலைபெற்றிருந்தது. ஆதிரை தேரில் ஏறும்போதும், குதிரைகள் வேகமெடுக்கும்போதும் நிலைதடுமாறாமல் இருக்க அந்தப் பிடி அவளுக்கு அரணாக அமைந்தது.

உயர்குடிப் பெண்ணான அவளது அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தேரின் நான்கு பக்கங்களிலும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளால் ஆன எழினி எனப்படும் திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்தத் திரைகளில் கோக்கப்பட்டிருந்த முத்துக்கள், தேர் அசையும்போது மெல்ல நடனமாடி தேருக்கு ஒரு பேரழகைத் தந்தன. இரண்டு பால் வண்ணக் குதிரைகள் அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்தன. அவற்றின் தலைகளில் செந்நிறக் குஞ்சங்கள் ஆடிக்கொண்டிருக்க, அவை குளம்புகளால் மண்ணைக் கிளறித் தங்கள் வேகத்தைப் பறைசாற்றின.

அவளது விரல்கள் தன்னிச்சையாக ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் செதுக்கிக் கொண்டிருந்தாலும், அவளது அகக்கண்ணில் முந்தைய தினம் கானகத்தில் கண்ட வேந்தனின் உருவமே நிழலாடியது.

தான் பேசிக் கொண்டிருந்ததது அரசனிடம் என்பதையே அவளால் இப்போது வரை நம்ப முடியவில்லை. பேசும்வரை புரியவில்லை, ஆனால் போன பின் அச்சம் ஆட்கொண்டது.

உண்மையிலேயே இந்த நாட்டின் வேந்தனோடுதான் பேசிக் கொண்டிருந்தேனா? மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருந்தாள் ஆதிரை.

யார் அவர்? நாட்டின் இறைவனாய் இருந்தும், இத்துணை எளிய வேடங்கொண்டு, கானகத்து மறவன் எனத் தனித்தேகக் காரணம் யாதோ? என்று அவள் எண்ணினாள்.

அவனது விழிகளில் தெரிந்த அந்த ஈர்ப்பு அவளை மயக்கம் கொள்ள செய்தது!

 “பெண்ணே! நின்னியற்பெயர் யாதோ?” என்று அவன் கேட்டபோது அவனது குரலில் கசிந்த அந்த மென்மையும் அவளுக்குள் ஒரு இனம்புரியாத கிறக்கத்தை தந்திருந்தன.

ஒருநாட்டின் மன்னவனோடு அவ்வளவு எளிதாக பேச முடியும் என்பதையே அப்போதுதான் உணர்ந்திருந்தாள், இதுகாறும் அந்நிய ஆண்களோடு அவ்வளவாக பேசியறியாத பேதை.

“கள்வன்…”

மெல்ல சிரித்தாள்.

“யாரை எண்ணி அகமகிழ்ந்து நகைக்கிறாய் ஆதிரை…?”

அவளது தோழி மங்கையர்க்கரசி வினவ, அதிர்ந்து விலுக்கென்று நிமிர்ந்தாள் ஆதிரை.

“ஒன்றுமில்லை மங்கை…” உதடுகளில் அந்தப் புன்னகை உறைந்திருந்தாலும், அதை அவள் மறைக்க முயன்றாள்.

“மறைபொருள் யாதாயினும், முற்றின் அது நாளங்காடிக்கு வாராதோ?” என நகைத்தாள் மங்கை. (எவ்வளவு மறைத்தாலும், முற்றிய விளைபொருள் கடைவீதிக்கு வந்துதானே தீரவேண்டும்)

“முற்றின் வரட்டுமே…” என ஆதிரை கூற, அவளது விழிகளில் மின்னிய அந்தச் சிறு கள்ளத்தனத்தை மங்கை கண்டுகொண்டாள்.

அவளது இதழ்களில் ஒரு சிறு புன்னகை அரும்பியது. ஆனால், அந்த மயக்கம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

முரசின் அதிரொலி பொற்பனையின் வீதிகளில் இடி முழக்கமென எதிரொலிக்க, அங்குள்ள மாந்தர் யாவரும் சிலையென உறைந்து நின்றனர். வாணிபம் விடுத்த வணிகரும், வழிநடைப் பயணிகளும் ஒருபுறம் ஒதுங்க, அங்காடி வீதியில் ஒரு பெரு நிசப்தம் நிலவியது. மக்கள் யாவரும் கரங்குவித்து, வாய்புதைத்து(வாய்மூடி), மன்னனின் ஆணைக்குத் தலைவணங்கி நின்றனர்.

முரசறைதல் என்பது நன்னிமித்தமான செய்திகளுக்கும், கொடிய தண்டனைகளுக்கும் பொதுவானதொரு மரபாகும். இத்தருணம் எழும்பும் முழக்கம் எச்செய்தியை ஏந்தி வருகிறதோ என ஐயுற்றவாறு, ஆதிரையும் மங்கையும் தம் வணிகக் கூடத்தை விடுத்து வெளியே வந்து நோக்கலாயினர்.

அவர்கள் வெளியே வந்து நோக்கியபோது, அங்காடி வீதியின் புழுதியைக் கிளப்பியபடி ஒரு சிறு படைப்பிரிவு வந்து கொண்டிருந்தது. மக்கள் அலை அலையாய் விலகி வழிவிட, இரண்டு வீரர்கள் கயிற்றால் பிணைக்கப்பட்ட இருவரை இரக்கமின்றி இழுத்து வந்தனர். அவர்கள் இருவரும் அரச நிதியை களவு செய்த கீழ்மக்கள். அவமானத்தால் தலைகுனிந்து, தள்ளாடி நடந்து வந்தனர்.

அவர்களுக்குச் சற்றுப் பின்னால், சாதாரண மறவனாக குறுவாளும், தோல் கச்சையும் அணிந்தபடி பெருஞ்சேரல் வந்து கொண்டிருந்தான், யாரின் கவனத்தையும் ஈர்க்காமல்! அவன் அணிந்திருந்தது எளிய வேடமே எனினும், அவனது நிமிர்ந்த நடையும், அகன்ற மார்பும், அதிகாரத்தைக் கக்கும் அவனது விழிகளும் அவனை ஒரு சாதாரண வீரனாகக் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அவனது கொடிஞ்சி நெடுந்தேர், அவனில்லாமல் தனித்து வந்து கொண்டிருந்தது.

காட்டில் கண்ட அந்தத் தனித்த மறவன், இன்று ஒரு வேட்டைப் புலியின் சீற்றத்துடன் தன் முன்னே வருவதைக் கண்ட ஆதிரை திடுக்கிட்டாள். அவனது விழிகளில் நேற்று இருந்த அந்த நிலவொளி இன்று மறைந்து, நீதியை நிலைநாட்டத் துடிக்கும் சூரியனின் கனல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவனது காலடித் தடம் ஒவ்வொன்றும் அந்த மண்ணில் அதிகாரத்தைப் பதித்துச் சென்றது.

மக்கள் கூட்டத்திற்கு நடுவே வேட்டைப் புலியின் சீற்றத்தோடு நடந்து வந்த பெருஞ்சேரலின் பார்வையும், அங்காடி முன் நின்றிருந்த ஆதிரையின் விழிகளும் ஒரு புள்ளியில் சந்தித்தன.

அவன் ஒரு பேரரசன் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், முந்தைய தினம் கானகத்தில் அவளிடம் காட்டிய அந்த மென்மையான முகத்திற்கும், இன்று நீதியை நிலைநாட்டத் துடிக்கும் இந்த உக்கிரமான முகத்திற்கும் இடையிலான இடைவெளி அவளைப் பதைக்கச் செய்தது.

அவள் நெஞ்சில் குடிபுகுந்த அதே வேந்தன், இன்று எமனெனச் செங்குருதி வழியும் வாளினை ஏந்தத் தயாராக நிற்பது அவள் உள்ளத்தை உறைய வைத்தது. அவனது விழிகளில் தெரிந்த அந்த அதிகாரத்தின் தழல், ஆதிரையின் மென்மையான உணர்வுகளைச் சுட்டெரிப்பது போலிருந்தது.

அவன் வேந்தன் எனத் தெரிந்தும், அந்தத் தர்மத்தின் குரூரத்தை அவளால் தாங்க இயலவில்லை. தான் நேசிக்கும் ஒருவன், இத்தனை கொடிய தண்டனையை வழங்கவிருப்பதைக் கண்டு அவள் விழிகள் கலங்கின.

பெருஞ்சேரலோ, அவள் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி தயங்கினான். அவனது விழிகளில் ஒரு மெல்லிய அலை தோன்றி மறைந்தது. எனினும், அடுத்த கணமே தன் கடமையை முன்னிறுத்தி, உணர்ச்சிகளைத் துறந்து விறைப்பான பார்வையுடன் நடந்தான்.

நீதியை நிலைநாட்டுவதற்கான தீர்ப்பு கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் அது சரியான நேரத்தில் அரசின் பொது நலத்திற்கும் மக்களின் நலத்திற்குமான நடவடிக்கை என்பது அவளுக்கு புரியவில்லை என்பதை அவன் உணர்ந்தான்.

அவள் சிறு வயதினள். சமணப் பள்ளியில் பேதைப் பருவம் முதல் அறம் போதிக்கப்பட்டு வளர்ந்தவள். அவளுக்கு முடியின் கனம் தெரியவில்லை. அரசின் அறமும் புரியவில்லை. அவள் அறிந்ததெல்லாம் கொல்லாமை என்பது பெரும் அறம்!

அதிலும் அந்நாட்களில் அறம் போதிக்கும் அமணமும் (ஆசீவகம்), சமணமும், பௌத்தமும் தழைத்தோங்கி கொண்டிருந்தது! கல்வி என்பது அனைவருக்குமானதாக இருந்தது. அதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கூட இருந்ததில்லை. கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயம். சமண பள்ளிகளும் பௌத்த விகாரங்களும் அறத்தையும் கணிதத்தையும் போதித்தது என்றால், அமணம் இன்னும் பல படிகள் தாண்டி அறிவியலையும், வானியலையும், கணிதத்தையும் போதித்தது.

தமிழ் சமூகம் கற்றறிந்த ஒரு பெரும் நாகரிகத்தை கொண்டிருந்தது. ஞானிகள் பலரும் ஆசீவக பெருமக்களாக இருந்தனர். அவர்கள் யோக நெறியை போதித்து கொண்டிருந்தனர்.

வானியல் சாத்திரம், மெய்யியல் சாத்திரம் முதற்கொண்டு அனைத்தையும் நன்கு கற்றறிந்தவர்களையே பார்ப்பனர்கள் என்று அழைத்தனர். அது ஒரு சாதியை குறிக்கும் வார்த்தையன்று! பார்ப்பனர்கள் அனைத்து குடியிலும் இருந்தனர். முதலில் அந்த நாளில் சாதி என்ற ஒன்று இல்லை. அது வேலை மட்டும் தான். ஒரே வீட்டில் வணிகரும் இருப்பார்கள், தச்சரும் இருப்பார்கள், பார்ப்பனரும் இருப்பார்கள். (பார்த்து சொல்பவர், வானியல் அல்லது மெய்யியல் ஆராய்ந்து சொல்பவர் என்ற தொழில் ரீதியான பெயரே. தொல்காப்பியமும் புறநானூறும் கூட அந்தணர்களை ஒரு தனித்துவமான அறிவார்ந்த வகுப்பாகவே பார்த்தன.)

அங்காடியின் மையத்தில், மருத நிலத்தின் செழுமையைக் கொண்டு வந்திருந்த பள்ளர்கள் நின்றிருந்தனர். சேறு காய்ந்த அவர்களின் கால்கள் உழைப்பின் சாட்சிகளாக விளங்கின. மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்திருந்த நெல்லையும், தினையையும் அவர்கள் வணிகர்களிடம் பண்டமாற்றம் செய்து கொண்டிருந்தனர். “இந்த ஆண்டு விளைச்சல் கூடுதல்!” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட குரலில் ஒருவிதப் பெருமிதம் இருந்தது. நாட்டின் வயிற்றை நிரப்பும் அந்த ஆதி குடிகளின் கைகளில் தான் மண்ணின் மணம் வீசியது.

சற்றுத் தள்ளி, அங்காடியின் சந்திப்பில் முரசு கட்டிலில் அமர்ந்திருந்த பறையர்கள், அரச அறிவிப்புகளையும் வணிகச் செய்திகளையும் உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் பறை முழக்கம் அந்த வீதிக்கு ஒரு தாளத்தைக் கொடுத்தது. செய்திகளை ஊர் ஊராகக் கொண்டு செல்லும் அந்த அறிவிப்பாளர்கள், வெறும் தொழிலாளிகளாக அன்றி, அறிவைப் பகிரும் ஊடகங்களாக அங்கே புழங்கினர்.

தெருவின் கோடியில், வரிசை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த காவல் மாடங்களில் மறவர்கள் நின்றிருந்தனர். கையில் வேலும், இடுப்பில் குறுவாளும் மின்ன, அவர்களின் கூர்மையான கண்கள் அங்காடியின் பாதுகாப்பைக் கவனித்தன. போர் வரும்போது முன்னிற்கும் இந்த வீரர்கள், அமைதி காலத்தில் அந்த அங்காடியின் அரணாகத் திகழ்ந்தனர்.

அங்கே குடிப் பாகுபாடுகள் இருக்கவில்லை. இருந்ததெல்லாம் உறவு மற்றும் தொழில் மட்டுமே. ஒரு மறவன் தன் வாளைப் பட்டை தீட்டப் பள்ளனிடம் வழி கேட்டான்; ஒரு பறையன் முழங்கிய செய்தியைக் கேட்டு வணிகர்கள் விலையைத் தீர்மானித்தனர். ஒருவரின்றி ஒருவர் அமையாத ஒரு சங்கிலித் தொடராக அந்தத் தெரு இயங்கிக் கொண்டிருந்தது.

இந்தத் தமிழ்க் குடிகளின் வியர்வையிலும் வீரத்திலும் தான் இப்பொற்பனை எழுப்பப்பட்டிருக்கிறது என்பதைப் பெருஞ்சேரல் அந்த வீதியில் நின்று உணர்ந்தான். அரியணையில் அமர்ந்து கொண்டு இவர்களை குடிகள் என்று அழைப்பதை விட, இவர்களின் நடுவே ஒருவனாக நிற்பதிலேயே மேன்மை இருப்பதை அவன் கண்டான்.

ஒரு வீரன் நடுவீதியில் நின்று அரசாணையை உரக்கப் படிக்கத் தொடங்கினான்!

“பொற்பனை வாழ் மக்களே! செவிகொடுத்துக் கேண்மின்! இதோ உங்கள் முன்னே நிற்கும் இக் கீழ்மக்கள், செந்நா வேந்தர் பெருஞ்சேரலின் பெருமதிப்பிற்குத் வஞ்சகம் இழைத்தவர்கள். எமது எல்லையோரக் கோட்டைகளின் காவற்படைத் தகவல்களைப் பாண்டி நாட்டு ஒற்றர்களிடம் பொன்னுக்கு விற்றக் கருங்காலிகள்!

உயிரினும் மேலான உமது மண்ணை அந்நியர்க்குக் காட்டிக் கொடுத்த இந்தக் கயவர்களுக்கு, எமது வேந்தர் வழங்கும் தண்டனை… தலை துணித்தல்! வஞ்சினம் பேசி வாழ்வளித்த மண்ணுக்கு வஞ்சகம் செய்தோர்க்கு மரணமே இறுதித் தீர்ப்பு! இதுவே எமது வேந்தரின் ஆணை!”

அங்காடி வீதியில் திரண்டிருந்த மக்களிடையே ஒரு பேரதிர்ச்சி நிலவியது. ஆழ்ந்த நிசப்தத்திற்கு நடுவே, வஞ்சகம் செய்தோர்க்கு இதுவே தகுந்த தண்டனை! என்றும், துரோகிகளுக்கு ஈவு காட்டற்க! என்றும் ஆங்காங்கே சில ஆக்ரோஷமான குரல்கள் எழுந்தன.

தலைமை வீரன் மெதுவாகத் தன் கையை உயர்த்தினான்.
அந்தக் கையில் அணிந்திருந்த செம்புச் சங்கிலி, சூரிய ஒளியில் ஒரு முறை மின்னியது.

அடுத்த நொடி…

அங்காடி வீதியின் இரைச்சல் முழுதும் மறைந்து, ஆதிரையின் காதுகளில் அவளது இதயத் துடிப்பின் சத்தம் மட்டும் பெரிதாகக் கேட்டது.

குற்றவாளிகளில் ஒருவன் கயிற்றின் முடிச்சை இறுக்கிப் பிடித்து, கண்களை இறுக மூடிக்கொண்டான். இன்னொருவன் உதடுகளைப் பிரித்து ஏதோ சொல்ல வர, அவன் குரல் தொண்டைக்குள்ளேயே உடைந்து விழுந்தது.

அடுத்த நொடி, சூரிய ஒளியில் மின்னிய இரண்டு வாள்கள், அந்த இருவரின் கழுத்துகளைப் பதம் பார்த்தன.

ஆதிரை இதைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் அவளது கண்கள் விலகவில்லை. பீறிட்ட செங்குருதி மண்ணில் தெறிக்க, இரண்டு தலைகளும் அங்காடி வீதியின் புழுதியில் உருண்டன.

விக்கித்து நின்றாள் பெண்!

மரணத்தின் அந்த உக்கிரமான நெடி, அவள் அடுக்கி வைத்திருந்த அகிற்புகையையும் தாண்டி அவளது நாசியை அடைந்தது. அவளது இதயம் சுருங்கியது; நேற்று அவனைக் குறித்துக் கண்டிருந்த அந்தச் சிறு மயக்கமும், புன்னகையும் இப்போது பயங்கரமான அச்சமாக மாறியிருந்தன.

அவள் நடுங்கியபடி தன் கடைத் தூணைப் பற்றிக்கொண்டாள். அவள் கண்ட அந்த அருள் நிறைந்த வேந்தன் இவன்தானா? இத்தனை கொடூரமான குருதிப்பலியை இவனால் எப்படிச் சலனமில்லாமல் நிகழ்த்த முடிகிறது?

அவளது மன முதிர்ச்சி அவ்வளவுதான்! இதே அரச குடும்ப பெண் என்றால் சிறு வயது முதலே அதைப் பற்றிய போதனை இருக்கும். ஆதிரை பழுதில்லாத, செம்பு கலக்கப்படாத பொன்!

பெருஞ்சேரல் மெல்ல அவளது அங்காடியை நெருங்கினான். முந்தைய தினம் கண்ட துணிச்சலான பெண்ணைப் பார்க்க வந்தவன், நடுங்கும் மானாக நின்றிருந்த அவளது கோலம் அவனை உருக்கியது. அவன் எளிய மறவன் கோலத்தில் இருந்தாலும், அவனது சொல்லில் ஒரு பேரரசனின் அதிகாரம் குறையவில்லை.

“வணிக மகளே! நீதியின் வாள் சுழலும் போது நீ ஏன் இங்ஙனம் அஞ்சி ஒடுங்குகின்றாய்? வஞ்சகம் செய்தோரின் உதிரம் இந்த மண்ணைச் சேர்வது, நிலத்தைத் தூய்மைப்படுத்தும் அறமன்றோ?” என்றான் அவன், அவளது அச்சத்தைத் தணிக்க முயலும் மென்மையான குரலில்.

ஆதிரை மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது கயல்விழிகளில் கண்ணீர் திரையிட்டிருந்தது.

“நேற்று உமது விழிகளில் யான் கண்ட அந்தப் பொலிவையும் அமைதியையும் இன்று தேடுகின்றேன் வேந்தே! ஆனால், அங்கே இன்று செங்குருதியின் நிறமன்றோ படர்ந்துள்ளது! நீதியை நிலைநாட்டத் தலைகளை உருட்டுவதுதான் உமது நெறியோ?” என்று நடுங்கிய குரலில் வினவினாள்.

பெருஞ்சேரல் ஒரு கணம் மௌனமானான். அவளது விழிகளில் தெரிந்த அந்த அருவருப்பும் அச்சமும் அவனது உள்ளத்தை வருடினாலும், தன் கடமையிலிருந்து அவன் பின்வாங்கவில்லை. ஆழ்ந்த குரலில் அவன் பேசத் தொடங்கினான்:

“ஆதிரை! மெல்லியல்பு கொண்ட நினக்கு இது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், நாட்டின் தலைவன் என்பவன் வெறும் ஈகையை (அன்பை) மட்டும் ஏந்துபவன் அல்லன்; அவன் அறம் காக்கும் மெய்க்கவசம்!

களைகளைக் களையாத வயலில் பயிர் தழைக்காது. அதுபோலவே, வஞ்சினம் சூழும் துரோகிகளை வேரறுக்காத மண்ணில் அமைதி நிலைபெறாது. இன்று சிந்தும் இச்சிறு குருதி, நாளை பல்லாயிரம் குடிமக்களின் இன்உயிரைக் காக்கும் விலையாகும். கோல் ஏந்திய அரசன் சிலநேரம் கொடியவனாகத் தோன்றினாலும், அவன் புரியும் அந்த இன்னாவே (தீமையே) பேரறத்தின் தொடக்கமாகும்!”

பெருஞ்சேரலின் விளக்கங்கள் அவளது காதுகளில் வெறும் இரைச்சலாகவே விழுந்தன. அவள் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஒரு பேரரசனிடம் பேசுகிறோம் என்ற அச்சமின்றி அவனை நேருக்கு நேர் நோக்கினாள்.

“வேந்தே! எங்கே மன்னுயிர்களின் மதிப்பு வெறும் தலைகளின் எண்ணிக்கையாய் மதிக்கப்படுகின்றதோ, அங்கேயே அறம் அழிந்துவிட்டதாக யான் கருதுகிறேன். உயிர்களைக் குருதி கொண்டு அவித்து நீர் நிலைநாட்டும் இவ்வமைதி, சுடலை நிலத்தின் அமைதிக்கு நிகரானது!”

அவளது குரலில் இருந்த உறுதி, பெருஞ்சேரலை ஒரு கணம் திகைக்க வைத்தது.

அவன் அவளது விழிகளை உற்று நோக்கினான். “ஆதிரை! அறத்தின் வழி எப்போதும் அலர் தூவிய பாதையாய் அமைவதில்லை. அது சிலபோது சுடலை மேடாகவும் தோன்றும்; அதனைத் தாங்கும் திண்மை வேந்தனுக்கு வேண்டும்!”

அங்காடி வீதியின் அந்த உதிர வாடை ஆதிரையின் நாசியைச் சுட்டது. நீதியின் பெயரால் சிந்தப்பட்ட அந்தச் செந்நீர், அவளது மென்மையான உள்ளத்தில் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியிருந்தது. அங்காடியின் முனையில் அவளுக்காகக் காத்திருந்த அந்த நெடு மணித்தேர் கதிரவனின் ஒளியில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது.

“உமது கைகளில் செங்குருதி படிந்திருக்கிறது. அந்த குருதி வாடை எமக்கு வேண்டா!” என்று கூறியவள் அவனை பாராது மணித் தேரில் ஏறினாள்.

மங்கையர்க்கரசியும் அந்தத் தேருக்குள் ஏறி அமர்ந்ததும், பாகன் குதிரைகளைத் தட்டிவிட்டான். முத்துத் திரைகள் பாதி விலகியிருக்க, உள்ளே ஒரு கலை ஓவியம் போல அமர்ந்திருந்தாள் ஆதிரை, உடன் மங்கையும்!

தேர் நகரத் தொடங்க, அதன் சக்கரங்களின் சுழற்சியில் மணிகளின் ஓசை இன்னும் வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஆதிரை தேருக்குள் அமர்ந்திருந்தாலும், அவளது நிலைகுலைந்த கண்கள் மட்டும் வெளியே நின்றிருந்த அந்த மறவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

குருதிக் கறை படிந்த அந்தச் சதுக்கத்தைக் கடந்து, அவளது மணித்தேர் பொற்பனையின் அகன்ற வீதிகளை நோக்கிப் பறந்தது.

ஒரு பேரரசன் முன்னே, அவனது நீதியைத் துச்சமென மதித்துத் தள்ளிச் சென்ற அந்த வணிக மகளின் மாண்பு, அவனை ஒரு கணம் வியப்பில் ஆழ்த்தியது. பெருஞ்சேரல், தான் ஒரு நாட்டின் இறைமகன் என்பதையும் மறந்து, தன் நெஞ்சிற்கு நெருக்கமான ஒருத்தியிடம் தோற்றுப் போனவனைப் போலத் திகைத்து நின்றான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 10

ஆதிரையின் சொற்கள் தந்த அந்த வலி பெருஞ்சேரலின் இதயத்தை ஒரு கனத்த பாறையாக மாற்றியிருந்தது. ஒரு நாட்டின் இறைமகனாகத் தலைகளை உருட்டிய கரங்கள், இப்போது தாயின் ஆறுதலுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கின.அரண்மனையின் நீண்ட நடைகூடங்களில் அவனது காலடியோசை இன்று வழக்கமான கம்பீரமின்றி, ஒருவிதத்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 8

  1. Thaniபொதுக் கருத்துThani

    செமயா இருக்கு ஆத்தர் ஜி❤️

  2. Girijapriyaபொதுக் கருத்துGirijapriya

    First meeting la love start aachu....second meeting la vendam nu poyita😥 kaati kodutha antha kayavanai Yenna seiyalam aathirai🤔nice intresting ud sis ❤️

    1. Sashi Muraliபொதுக் கருத்துSashi Murali

      அவள் சமணம் பயில்பவள், அவளுக்கு இந்த வன்முறை பிடித்தமில்லை, அதனால் விலகுகிறாள் :)

உங்கள் கருத்தைப் பகிருங்கள்