அத்தியாயம் 11
அத்தியாயம் 11
ராதா யதுநந்தனின் கை வளைவிற்குள் தூங்கிக் கொண்டிருக்க, நாலு நாற்பத்தி ஐந்து மணிக்குத் தூக்கம் கலைந்து கண் விழித்தாள் ராதா.
ராதா எழுந்து கொள்ள, “ஏன் ராது, அர்த்த ராத்திரியெல்லாம் எழுந்துக்கிற?” என்று யதுநந்தன் தூக்கத்திலே கேட்டான்.
“மணி ஐந்தாக போகுது…” என்று ராதா மெத்தையில் எழுந்தமர்ந்து தெளிவாகக் கூற, “நானும் அதைத் தானே சொன்னேன்.” என்று தூக்கத்திலே கூறினான் யதுநந்தன்.
‘ஐந்து மணி அர்த்த ராத்திரியா?’ என்று யதுநந்தனை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு,”நீங்களும் எழுந்திருங்க? உங்களுக்கு எப்ப விடியும்?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் ராதா.
“ம்… நோ சான்ஸ் டார்லிங்.” என்று தூக்கத்திலே குழைவான குரலில் கூறினான். ராதா மெலிதாக புன்னகைக்க, “செவென் தர்ட்டி டு செவென் பார்ட்டி பைவ் க்கு ஒரு பெட் காபி குடிக்கும் பொழுது விடியும்.” என்று மனமில்லாமல் கண்களை திறந்து ராதாவை பார்த்து கூறினான்.
‘பெட் காபி…’ என்ற சொல்லில் மீண்டும் அதிர்ச்சி அடைந்த ராதா தன் கண்களைப் பெரிதாக்கி, யதுநந்தனை பார்த்தாள்.
“நீ ஏன் இப்படி அர்த்த ராத்திரியில் கண்களை உருட்டி பயம்புடுத்துற? பேசாம தூங்கு.” என்று யதுநந்தன் ராதாவை புன்னகையோடு பார்த்தபடி கூற, ராதா வேகமாக மறுப்பாகத் தலை அசைத்தாள்.
யதுநந்தன் கேள்வியாக தூக்கம் சூழ்ந்த கண்களோடு ராதாவை பார்க்க, “எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று கூறி குளியறைக்குள் நுழைந்தாள் ராதா.
‘இவளுக்கு எப்பவுமே வேலை இருக்குமா?’ என்ற எண்ணம் தோன்ற தன் தோள்களை குலுக்கிக் கொண்டு மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான் யதுநந்தன்.
காலை ஐந்து மணி சித்ரா, “க்ளுக்” என்று சிரித்தாள்.
தூக்கம் கலைந்த ஸ்ரீதர், சித்ராவை பார்த்து, “ஏன் இப்படி ஐந்து மணிக்குத் தனியா சிரிக்கிற?” என்று ஸ்ரீதர் கேள்வியாக நிறுத்த, “இல்லை, யது தம்பி பாவம். நிச்சயம் ராதா தம்பியை எழுப்பி இருப்பாள்.” என்று சித்ரா கேலியாக கூறினாள்.
“அவளாவது ஜாகிங், யோகா போறதுக்காக எழுப்பியிருப்பா. ஆனால் நீ இப்படி என்னை சும்மாவே எழுப்பற?” என்று ஸ்ரீதர் தூக்க கலக்கத்தோடு சிடுசிடுத்தான்.
“நான் என்ன பண்ணட்டும்? உங்க தங்கை ஏற்படுத்திய பழக்கம். அவ இல்லைனாலும் எனக்கு முழிப்பு வந்துருது” என்று சித்ரா மெத்தையில் இருந்து எழுந்தபடியே கூறினாள்.
மணி ஐந்து பதினைந்து
தன் முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டு, “ராதா என்ன பண்ணறான்னு தெரியலை. அவளுக்குச் சீக்கிரம் முழிப்பு வந்திரும். அங்கு எல்லாரும் காலையில் முழிப்பாங்களோ என்னவோ?” என்று லோகநாதன் தன் மகளை எண்ணி ராதாவின் நினைப்போடு பேசினார்.
இந்த எண்ணம் ராதாவின் தாய் மீனாட்சிக்கு இருந்தாலும், “அதெல்லாம் முழித்து, மாப்பிள்ளையும் எழுப்பிருப்பா.” என்று தன் கணவரைச் சமாதானம் செய்யும் விதமாகக் கூறினார்.
மணி ஐந்து ஐம்பத்தி ஐந்து
யதுநந்தன் புரண்டு படுக்க, ராதாவை காணாமல் அதிர்ச்சியாக எழுந்து அமர்ந்தான்.
தூக்கத்தில் எழுந்தமர்ந்து, தன் கைகளால் நெற்றியை அழுத்தினான். நடு தூக்கத்தில் யாரோ எழுப்பியது போல் தலை விண்வினென்று யதுநந்தனுக்கு வலித்தது.
ஆனால், ‘ராதா எங்குச் சென்றிருப்பாள்?’ என்ற எண்ணம் மேலோங்க, அறையில், குளியலறையில், பால்கனியில் தேடிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தான் யதுநந்தன்.
மணி ஆறு ஐந்து
இந்நேரத்தில் தன் முதலாளியை, அங்கு வேலை செய்பவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அங்கு அனைவரும் வேகமாக தன் வேலையைச் செய்துகொண்டிருக்க, ‘ராதா அங்கு தான் இருக்கிறாள்’ என்ற என்ன எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம், யதுநந்தனுக்கு நிம்மதியை கொடுத்தது.
யதுநந்தனின் கண்கள் ராதவை தேட, ராதா நிதானமாக அங்கு இருப்பவர்களிடம் பேசிவிட்டு படி ஏறி அவர்கள் அறை நோக்கி நடந்து வந்தாள்.
ராதா சிரித்தமுகமாக அவன் அருகே வர, யதுநந்தன் எதுவும் பேசாமல் அவளை அமைதியாகப் பார்த்தான்.
“வீடு தினமும் பெருக்கி, சுத்தமா இருந்தாலும்… உங்க கண்காணிப்பிலாமல் ஒழுங்கா இல்லை. எல்லாம் இரண்டு நாளில் சரி ஆகிரும்.” என்று ராதா தீவிரமாக கூறினாள்.
“உனக்கு என் மேல் கொஞ்சமாவது அக்கறை இருக்கா?” என்று யதுநந்தன் கோபமாக ராதாவின் முகம் பார்த்து கேட்க, ராதா எதுவும் புரியாமல் அவனைக் குழப்பமாக பார்த்தாள்.
“காலையில் மனுஷன் எழுந்த உடன் மனைவியைத் தேடுவானே… அந்த அக்கறை எல்லாம் இல்லாமல் எங்க போன?” என்று யதுநந்தன் ராதாவை நெருங்கி கிசுகிசுத்தான். கோபம், குழைவு இப்படிப் பல பரிமாணங்களில் ஒலித்த அவன் குரலை மனதில் குறித்துக் கொண்டாள் ராதா.
அவன் எதிரே நின்று, அவனைக் கோபமாக முறைத்த ராதா, “அடடா. என்ன அக்கறை? என்ன அக்கறை? நான் காலையில் உங்களை எழுப்பினா, அப்படியே நீங்க என் மேல் காட்டின அன்பிலும், அக்கறையிலும் நான் புளங்காகிதம் அடைந்துட்டேன். கண்ணை முழுசா முழித்துக் கூட என்னைப் பார்க்க முடியவில்லை.” என்று ராதா சலிப்பாக கூறி அறைக்குள் நுழைந்தாள்.
ராதவை தன் பக்கம் திருப்பி, “என்ன கதை விடுற? நீ எப்ப காலையில் என்கிட்டே பேசின?” என்று யதுநந்தன் கண்களை சுருக்கி தீவிரமாக வினவினான்.
“காலையில் நாலு நாற்பத்தி ஐந்து க்கு உங்களை எழுப்பினேன். நீங்க எழும்பலை.” என்று ராதா பொய்யான கோபத்தோடு கூறினாள்.
‘தூக்கத்தில் நல்ல சொதப்பி வைத்திருக்கப் போலியே யது…’ என்று யதுநந்தன் தனக்கு தானே புலம்பிக் கொண்டு, “மேடம் காலையில் எங்க போனீங்க?” என்று பேச்சை திசை மாற்றினான் யதுநந்தன்.
“ஜாக்கிங். தோட்டத்தைச் சுற்றி.” என்று ராதா கண் விரித்துக் கூற, “லூசா நீ. என்கிட்டே கேட்காம ஏன் அங்க போன? அதுவும் காலை வேளையில்… தோட்டம் எப்படி இருக்குனு கூட எனக்குத் தெரியாது? ஏதாவது உன்னை கடித்து வைச்சிருச்சுனா?” என்று யதுநந்தன் கடிந்து கொண்டான்.
ராதா அவனைத் தலை சாய்த்துப் பார்த்தாள். “இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள்.
“நான் காலையில் என் நண்பர்களோடு ஜாக்கிங் செல்வது பழக்கம் தான். இன்னைக்கு தனியா போகலை. அங்கு தோட்டம் பார்த்துக் கொள்ளும் மாரிமுத்து கிட்ட சொல்லிட்டு தான் போனேன். இன்னைக்கு எல்லாரும் வேலையைக் காலையிலே ஆரம்பிச்சிட்டாங்க. எதாவது என்னைக் கடித்திருந்தால் உங்களுக்கு இந்நேரம் விஷயம் வந்திருக்கும்.” என்று ராதா தீவிரமாக ஆரம்பித்து கேலியாக முடித்தாள்.
அவள் பேசிய விதத்தில் கோபம் அடைந்தவனாக, “நீ நாளைக்கு இப்படி தனியாக ஜாக்கிங் போக வேண்டாம். நம்ம வீட்டில் ஜிம் இருக்கு. அதில் உடற்பயிற்சி பண்ணு.” என்று யதுநந்தன் கண்டிப்பாக கூற, ராதா மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“மழை நேரத்தில் ஜிம் இல் உடற்பயிற்சி பண்றேன். மற்ற நேரத்தில் என்னால் முடியாது. அந்த நேரம் கிடைக்கும் இயற்கை காற்று தான் எனக்குப் புத்துணர்ச்சி. தோட்டம் இன்னைக்கு சரி ஆகிரும். நாளையிலிருந்து நீங்க பயப்பட வேண்டாம்.” என்று ராதா விடாப்பிடியாகக் கூற, யதுநந்தன் அவளைக் கோபமாக முறைத்தான்.
‘நாளை இவளுடன் எழுந்து தானும் ஜாக்கிங் செல்ல வேண்டும்.’ என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
ஆனால் அதை ராதாவிடம் சொல்ல யதுநந்தனை ஏதோ ஒன்று தடுத்தது. மேலும் ராதாவிடம் எதுவும் பேசாமல், அங்கிருந்த பட்டனை அழுத்தியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அப்பொழுது சமையல்காரர் காபியோடு வர, ராதா அமைதியாக அவரைப் பார்த்தாள்.
சமையல்காரர் சென்ற உடன், “காலையில் எப்ப வேணாலும் எழுந்திருங்க… அது உங்க இஷ்டம். ஆனால் இந்த பெட் காபி எனக்கு சுத்தமா பிடிக்கலை. பிரஷ் பண்ணிட்டு காபி குடிங்க.” என்று கண்டிப்போடு கூறினாள் ராதா.
யதுநந்தன் புன்னகையோடு காபி கோப்பையை கையில் எடுக்க, “நாம பிரஷ் பண்றதுக்கு முன்னாடி, நாம துப்பின எச்சியை சேவல் கொத்தினா கூட அதுக்கு விஷம். அப்படி இருக்க, அது உங்க உடம்புக்குள் போனால் எவ்வளவு கெடுதல்?” என்று ராதா அவளுக்குத் தெரிந்த விஷயத்தைக் கூறி நியாயம் கேட்டாள்.
“ராதா, நீ சொல்ற கதையைக் கேட்க நான் குழந்தை இல்லை. ஏன் சின்ன விஷயத்தைப் பெரிசு படுத்துற?” என்று கேலியாக கூறியபடி அவன் கோப்பையை தன் அருகே கொண்டு சென்றான்.
வேகமாக அவன் அருகே சென்று, கோப்பையைப் பிடித்து ராதா கொஞ்சுதலாக பேச ஆரம்பிக்க, இதை எதிர்பார்க்காத யதுநந்தனின் கை தவறியதாலோ, இல்லை ராதாவின் கை பட்டதாலோ கோப்பை கீழே உருண்டோடி காபி சிதறியது.
ராதா பதறியபடி அவனைப் பயத்தோடு பார்த்தாள். யதுநந்தன் எதுவும் பேசாமல் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் செல்ல, அவன் வழியை மறைத்தபடி, “நான் வேணும்னு செய்யலை. தெரியாமல்…” என்று ராதா குற்ற உணர்ச்சியோடு கூறினாள்.
“ம்ச்ச்ச்… சரி விடு.” காபி குடிக்காமல், காலையில் ஏற்பட்ட தலை வலியின் காரணமாக சலிப்பாக ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு குளியலறை நோக்கிச் சென்றான் யதுநந்தன்.
மூடிய கதவை பார்த்தபடி அங்கிருந்த சோபாவியில் சாய்வாக அமர்ந்தாள் ராதா.
இந்த நாள் இப்படி ஆரம்பிக்கும், என்று ராதா எண்ணவில்லை. கண்ணீர் வரவா, வேண்டாமா என்று எட்டிப் பார்க்க, ராதா தன்னை தானே திடப்படுத்திக் கொண்டாள்.
‘ராதா நீ இத்தனை பலமீனமானவளா? யதுநந்தன் திட்டவில்லை… கோபப்படவில்லை… ஆனால், யதுநந்தனின் உதாசீனம் என்னை அவ்வளவு பாதிக்கிறதா?’ என்ற எண்ணம் தோன்ற, வெளியே வரத் துடித்த கண்ணீரை உள்ளித்து தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள் ராதா.
யதுநந்தனிற்கு ராதாவின் மனநிலை தெரியவில்லை.
‘சில பல விஷயங்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் எல்லாம்?’ என்ற கேள்வி முதல் முறையாக யதுநந்தனின் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
குளியலறையில் விழுந்து கொண்டிருந்த தண்ணீரின் சத்தம், ராதாவை நனவுலகிற்கு அழைத்து வர, அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு, சமையல் அறைக்குச் சென்று காபி கலந்து எடுத்து வந்தாள்.
யதுநந்தன், குளித்து டி-ஷர்ட் ஷார்ட்ஸக்கு மாறியிருந்தான்.
ராதா அவன் முன் காபியை நீட்ட, காபி குடிக்கும் எண்ணம் மறந்திருந்த நிலையில் யதுநந்தன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
ராதா அவனை அடிபட்ட பார்வையோடு நிமிர்ந்து பார்க்க, யதுநந்தன் அவளிடமிருந்து காபியை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.
ராதா அறையிலிருந்து வெளியே செல்ல எத்தனிக்க, அவள் கை பிடித்து, அவளை அருகே அமர வைத்தான்.
ராதாவின் முகம், அவள் மனநிலையை பிரதிபலிக்க, “எங்க ஓடுற ராதா?” என்று யதுநந்தன் புருவம் உயர்த்தி அவள் முகம் பார்த்து கேட்டான்.
“உங்களுக்குத் தான் என்னையும் பிடிக்கவில்லை. நான் என்ன சொன்னாலும் பிடிக்கவில்லை. தனியா நிம்மதியா இருங்கன்னு போறேன்.” என்று மனத்தாங்களாக கூறினாள் ராதா.
“ஹா… ஹா…” என்று யதுநந்தன் பெருங்குரல் எடுத்துச் சிரித்தான்.
“நீ சொல்லி அது பிடிக்காமல் போகுமா? இல்லை உன்னை பிடிக்கவில்லைன்னு சொன்னால் அது தான் இந்த மில்லினியம் ஜோக்.” என்று ராதாவை ரசனையோடு பார்த்தபடி கூற, ராதா வெட்கப் புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.
“இப்படி காபி தினமும் கொடு. நீ சொல்றபடி குடிக்கறேன்.” என்று யதுநந்தன் ராதாவிற்கு மறைமுகமாக சம்மதம் கூற, “ஒன்றும் தேவை இல்லை. எனக்காக யாரும் எதுவும் மாத்திக்க வேண்டாம். நீங்க உங்க இஷ்டப்படி இருங்க.” என்று தலை சிலுப்பிக் கூறினாள் ராதா.
“நான் என் இஷ்டப்படி இருக்க, நீ எதுக்கு?” என்று யதுநந்தன் அவளைச் சீண்ட, ராதா அவன் முகம் பார்க்காமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
‘என்னால் அனைத்து விஷயங்களிலும் மாற முடியுமா?’ என்று யதுநந்தனின் மனதில் தோன்றிய கேள்வி, ராதாவின் முன் பஸ்பமாகி கொண்டிருந்தது.
“ஏதோ கோபத்தில் முகம் திருப்பினால், நீ இல்லாமல் இருப்பது நிம்மதின்னு ஆகிருமா?” என்று யதுநந்தன் ராதாவை கிடுக்கு பிடியாக பிடித்தான்.
ராதா தலை குனிந்து அமர்ந்திருக்க, “இந்த ப்ளூ சேலை உனக்கு ரொம்ப அழகா இருக்கு ராதா” என்று யதுநந்தன் ரசனையோடு கூறினான்.
“போதும் என்னைச் சமாதானப்படுத்தினது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் இந்த வார கடைசியில் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, சஞ்சனா, உங்க தாத்தா, பாட்டி எல்லாரையும் சாப்பிட கூப்பிடலாமான்னு யோசிக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று ராதா கேள்வியாக நிறுத்தினாள்.
“உன் இஷ்டம் ராதா. எனக்கு எதுவானாலும் சரி. ஆனால்…” என்று அவன் நிறுத்த, ராதா கண்ணுயர்த்தி அவனை பார்த்தாள்.
“நான் நினைப்பதை எல்லாம் உன்கிட்ட சொல்றேன். ஆனால் நீ என்ன நினைக்கிறன்னு கல்யாணத்திற்கு பிறகுமா சொல்லக் கூடாது?” என்று யதுநந்தன் கேட்க, ராதா வேகமாகப் படி இறங்கி ஓடினாள்.
ராதா விரைவில் தன்னிடம் மனம் திறப்பாள், என்ற எண்ணத்தோடு அங்கிருந்த ராதாவின் பெட்டியை நகர்த்தி தன் லேப்டாப்பை எடுத்தான்.
அப்பொழுது ராதாவின் டைரி கீழே விழுந்தது.
திறந்து பார்க்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தோடு, அதைத் திறந்து பார்த்த யதுநந்தன், சொல்ல முடியாத உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டான்.
“ராது… ராது…” என்று யது நந்தன் சத்தமாக அழைக்க, ராதா அங்கு அவசரமாக ஓடி வந்தாள்.
அவன் கையிலிருந்த டைரியை பார்த்து, அகப்பட்டுக் கொண்டவளாய் திரு திருவென்று முழித்தாள் ராதா.





forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!