அத்தியாயம் 12
அத்தியாயம் 12
அகப்பட்டுக் கொண்டவளாய் ராதா திருதிருவென்று முழிக்க, யதுநந்தன் சுவரில் சாய்ந்தபடி ராதாவை புருவம் உயர்த்தி தன் உதட்டைச் சுழித்து ரசித்துப் பார்த்தான்.
ராதா அவன் அருகே சென்று, டைரியை வாங்க முயற்சிக்க, யதுநந்தன் அந்த டைரியை உயரத் தூக்கினான்.
ராதா உயரமாக இருந்தாலும், யதுநந்தனின் உயரத்தோடு போட்டி போட முடியாமல் அவனைப் பாவமாக பார்த்தாள்.
“ராதும்மா…” என்று யதுநந்தன் குழைவாக அழைக்க, “ம்…” என்று தரையை பார்த்தாள் ராதா.
“டைரியில் இருப்பதை நீ சொல்லணும்.” என்று யதுநந்தன் மென்மையாகக் கூற, “எனக்கு வேலை இருக்கு.” என்று ராதா மெதுவாகக் கூறினாள்.
ராதவை சுவரில் சாய்த்து, தன் கைகளை இருபக்கமும் ஊன்றி அவள் வழியை மறைத்தவனாக, “வீட்டில் அவ்வளவு வேலை ஆட்கள் இருக்காங்க. சும்மா எப்ப பாரும் வேலை இருக்கு… வேலை இருக்குன்னு என்கிட்டியே கதை விடுற?” என்று யதுநந்தன் கோபமாக கூறினான்.
ராதா நிமிர்ந்து பார்க்காமல், தரையைப் பார்த்தபடி நிற்க, “ராதா, அதில் என்ன இருக்குனு நீ சொல்ற.” என்று யதுநந்தன் கடினமாக கூற, ராதா அவனை மிரண்ட விழிகளோடு பார்த்து மீண்டும் குனிந்து கொண்டாள்.
“ராதா!” என்று சற்று தள்ளி நின்று அவள் முகத்தை நிமிர்த்தி, “என்னைப் பார்த்து பயபடுறியா ராதா?” என்று அவன் மென்மையாகக் கேட்க, மறுப்பாய் தலை அசைத்தாள் ராதா.
“பொய். காலையில் காபி கீழே விழுந்தப்ப கூட நீ என்னை இப்படி தான் பார்த்த… இப்ப நான் உன்னை விளையாட்டா தான் மிரட்டினேன்.” என்று யதுநந்தன் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
அவன் பேசுவதை நிறுத்தி, “நான் உங்களை எதுமே சொல்லலியே?” என்று ராதா தலை சாய்த்துக் கூறினாள்.
“உன் கண்கள் சொல்லுது.” என்று சிரித்த முகமாகக் கூறினான் யதுநந்தன்.
“எனக்கு நான் முதல் நாள் சந்தித்த ராதாவை தான் ரொம்ப பிடிக்கும்.” என்று அங்கிருந்த சோபாவில் சாய்ந்தமர்ந்து, ராதவை தன் அருகே அமர வைத்து மென்மையாகக் கூறினான்.
“நான் அப்படி தான் இருக்கேன்.” என்று ராதா அழுத்தமாகக் கூற, மறுப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன்.
“நான் உன் மேல் கோபப்படுவேன்னு நினைக்கிறியா ராதா?” என்று யதுநந்தன் ராதாவின் கண்களைக் கூர்மையாக பார்த்துக் கேட்க, “நான் உங்களை கஷ்டப்படுத்துறேனா?” என்று ராதா அவனைப் பாவமாக பார்த்தபடி கேட்டாள்.
“ராதும்மா…” என்று கொஞ்சும் குரலில் அழைத்து அவள் தலையில் செல்லமாகக் கொட்டினான்.
“லூசு… பீல் பிரீ… நீ என் கிட்ட எதுவானாலும் சொல்லலாம். எதுவானாலும் கேட்கலாம். எவ்வளவு வேணுமானாலும் சண்டை போடலாம். ஐ லவ் இட்…” என்று யதுநந்தன் ராதாவிற்கு புரிய வைக்கும் முயற்சியோடு கூறினான்.
ராதா மெலிதாக தலை அசைக்க, “என் ராதா எவ்வளவு பேசுவா? ஏன் இவ்வளவு அமைதி?” என்று யதுநந்தன் கேட்க, “அன்னைக்கு நான் ஏதாவது பேசி அது உங்களைக் காயப்படுத்தினால், நான் கவலை பட மாட்டேன்… ஆனால், இன்னைக்கு நான் ஏதாவது பேசி உங்க மனசு வருத்தப்படருமோன்னு தயக்கமா இருக்கு.” என்று ராதா தெளிவாக கூறினாள்.
“நான் வருத்தப்படுர மாதிரி நீ பேச மாட்ட ராதா. என் ராதா தப்பு செய்ய மாட்டா. தப்பா எதுவும் சொல்ல மாட்டா. நீ தப்பு செய்தாலும், அதில் ஒரு காரணம் இருக்கும். எனக்குக் கோபம் வராது. நான் உன்னை புரிஞ்சிப்பேன். அப்படியே எனக்குக் கோபம் வந்தாலும், உன் பக்க நியாயத்தைச் சொன்னால் புரிஞ்சிப்பேன்.” என்று யதுநந்தன் இலகுவாக கூறினான்.
ராதா அமைதி காக்க, “நீ சொல்ற எந்த விஷயமும் எனக்குப் பிடிக்காமல் இல்லை. எனக்கு பிடிக்கலைன்னா, சொல்வது நீயாக இருந்தாலும் நான் கேட்க மாட்டேன்.” என்று அழுத்தமாகக் கூறினான் யதுநந்தன்.
“இப்ப நீ என்ன சொல்ல நினைக்கிற… அதை சொல்லு.” என்று யதுநந்தன் வினவ, “என் டைரியை நீங்க பார்த்தது தப்பு.” என்று ராதா சிணுங்களாக கூறினாள்.
“அட… இதெல்லாம் என்னால் கேட்க முடியாது.” என்று யதுநந்தன் அசட்டையாக கூற, “வாங்க, டிபன் நான் பண்ணிருக்கேன். சாப்பிடலாம்.” என்று ராதா சோபாவில் இருந்து எழுந்து கூற, “அட மேடம் எங்க ஓட பார்க்கறீங்க?” என்று அவளை வழி மறித்து நின்றான் யதுநந்தன்.
“டைரியில் என்ன இருக்குனு சொல்ற.” என்று யதுநந்தன் வம்பிழுக்க, “அது தான் நீங்க பார்த்துடீங்கள்ல, அப்புறம் என்ன கேள்வி?” என்று ராதா மிடுக்காகக் கூறினாள்.
“நீ சொல்லி நான் கேட்கணும்.” என்று யதுநந்தன் விடாப்பிடியாகக் கேட்க, ராதா அவனைத் தர்மசங்கடமாக பார்த்தாள்.
“அது… அது…” என்று ராதா தயக்கமாக ஆரம்பிக்க, யதுநந்தன் அவள் தயக்கத்தை ரசித்து பார்த்தான்.
“அதில் இரண்டு பெரிய மீன்கள் இருக்கு. அப்புறம் இரண்டு குட்டி மீன்கள் இருக்கு.” என்று ராதா தரையை பார்த்தபடி கூற, “பெரிய மீன்கள் எப்படி இருக்கு?” என்று கண்களில் புன்னகையை தேக்கி, முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அடுத்த கேள்வியை கேட்டான் யதுநந்தன்.
அவனை பொய்யான கோபத்தோடு முறைத்து, ராதா டைரியை பிடுங்க முயற்சிக்க, அவளை தன் ஒரு கையால் பிடித்து, டைரியை பின் பக்கமாக மறைத்து ராதவை குறும்பாக பார்த்து கேலியாக சிரித்தான்.
அவன் கேலியை தாங்கமுடியாமல், “ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கு. அதில் ஒரு மீனில் ராது… அப்புறம் இன்னொரு மீனில் நந்தன் அப்படின்னு எழுதிருக்கு. அந்த குட்டி மீன்கள் நமக்கு பிறக்க போகும் குழந்தைகள்.” என்று தன் முகத்தை சுருக்கி மூச்சு விடாமல் வேகமாக ராதா கூற, யதுநந்தன் அவள் கற்பனையை ரசித்து சிரித்தான்.
அவன் சிரிப்பின் சத்தத்தைத் தாங்க முடியாமல், ராதா தன் முகத்தை மூடிக் கொள்ள, யதுநந்தன் குனிந்து அவள் விரல்களைப் பிரித்து அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தான்.
“ராதா மனதில் இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு, ஏன் என் கிட்ட நீ எதுமே சொல்ல மாட்டேங்கற?” என்று யதுநந்தன் அன்பாக வினவ, “அது தான் நீங்க தெரிஞ்சிக்கிட்டிங்களே…” என்று ராதா குழந்தை போல் தன் காலை உதைத்து சிணுங்கினாள்.
அவளை தன்னோடு அணைத்து, “லவ் யு சோ மச் ராதா.” என்று காதல் சொட்டும் குரலில் கூறினான் யதுநந்தன்.
“நீ, எதுவும் சொல்ல மாட்டியா ராதா?” என்று யதுநந்தன் ஆர்வமாகக் கேட்க, “சாப்பாடு ஆறிரும், சாப்பிட வாங்க.” என்று குறும்பு கொப்பளிக்கக் கூறினாள் ராதா.
யதுநந்தன் அவள் காதை திருகி, “என்னை நந்தன்… அப்படின்னு கூப்பிடு. நான் சாப்பிட வரேன்.” என்று ராதாவை செல்லமாக மிரட்ட, அவனிடமிருந்து தப்பித்து படி இறங்கினாள் ராதா.
அவளைத் தொடர்ந்து யதுநந்தன் சிரித்தமுகமாக படி இறங்கினான்.
ராதாவின் வேகத்தில் வீடு நேர்த்தியாக மாறியது. யதுநந்தனின் மேம்போக்கான செயல்கள் ராதாவின் அன்பால் நேர்த்தியாக மாறிக் கொண்டிருந்தது. யதுநந்தன் அதை விரும்பி ஏற்றுக் கொண்டதே, ராதாவின் மனதை வெகுவாக கவர்ந்தது.
ஒரு வாரம் கழித்து, ராதாவின் தந்தை, தாய், ஸ்ரீதர், சித்ரா, சஞ்சனா, யதுநந்தனின் தாத்தா, பாட்டி அனைவரும் யதுநந்தனின் வீட்டில் யதுநந்தனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
ராதா, சமையல் அறையில் வேலையில் மூழ்கியிருக்க, “ராதா, நீ கெட்டிக்காரி. உன்னால் வீடே அழகா மாறிடுச்சு. நந்து சரியான நேரத்தில் வந்திருவானா? எல்லாரும் அவனுக்காக காத்திருக்காங்களே?” என்று கவலை தோய்ந்த குரலில் சந்தேகமாகக் கேட்டார் யதுநந்தனின் பாட்டி.
“சொன்னால், சொன்ன நேரத்துக்குக் கண்டிப்பாக வந்துருவாங்க பாட்டி.” என்று ராதா நம்பிக்கையோடு கூற, பாட்டி ராதவை சந்தேகமாக பார்த்தார்.
ராதா அவரைப் பார்த்து புன்னகைக்க, “அவன் பிசினெஸ் தவிர வேறு எதுவுமே ஒழுங்கா பண்ண மாட்டான். சொல் பேச்சு கேட்க மாட்டான். அவன் ஒரு காட்டாற்று வெள்ளம். அவனை அடக்கி ஆளுவது ரொம்ப கஷ்டம். அடக்கி ஆள வேண்டாம். கூடப் பயணிப்பதே கஷ்டம்.” என்று பாட்டி சோகமா கூறி, ஆழ மூச்சு எடுத்தார்.
“அவங்க அம்மா இருக்கும் வரை நல்லா தான் இருந்தான். எங்களால் அவனைச் சரியா வளர்க்க முடியலை. அவனை சமாளிக்க முடியவில்லை ராதா.” என்று பாட்டி வருத்தமாகக் கூறினார்.
“பாட்டி, அவங்க ரொம்ப நல்லவங்க பாட்டி.” என்று கண்களில் காதல் பொங்க, யதுநந்தனை மனதில் எண்ணியபடி கூறினாள் ராதா.
ராதவின் கண்களில் அவள் மனதை அறிந்த யதுநந்தனின் பாட்டி, “நீங்க நல்லாருப்பீங்க.” என்று மனதார கூறினார்.
“ராது… ராது…” என்று அழைத்துக் கொண்டே யதுநந்தன், அனைவரிடமும் தலை அசைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் செல்ல, “மாமா, இப்படியே நீங்க உள்ள போனால் அத்தை திட்டுவாங்க.” என்று சஞ்சனா யதுநந்தனை வழி மறித்தாள்.
அவன் சஞ்சனாவை தூக்கிக் கொஞ்ச, “ஐயோ… மாமா. கை, கால் கழுவிட்டு தான் வீட்டுக்குள் வரணும். அத்தை உங்களைப் பார்த்தா அவ்வளவு தான்.” என்று சஞ்சனா மெலிதான குரலில் யதுநந்தனை எச்சரிக்க, யதுநந்தன் பெருங்குரலில் சிரித்தான்.
“அத்தைக்கு நீங்க பயப்படவே மாட்டேங்கிறீங்க. நாங்க எப்படி பயப்புடுவோம் தெரியுமா?” என்று சஞ்சனா யதுநந்தனின் கழுத்தை கட்டிக்கொண்டு கண்களை உருட்டிக் கேட்டாள்.
“உங்க அத்தை எல்லாரையும் மிரட்டி வச்சிருக்கா. இனி பயப்படாதீங்க. நான் பார்த்துகிறேன்.” என்று யதுநந்தன் சஞ்சனாவை கொஞ்சிய படியே கூற, சஞ்சனா வேகமாகத் தலை அசைத்தாள்.
யதுநந்தன், ராதாவை பார்த்து கண்சிமிட்ட, ராதா அவனைப் பார்த்து ரகசிய புன்னகை பூத்தாள்.
“ஏங்க… நம்மகிட்ட எப்படி துள்ளுவா. அவ ஆத்துக்காரர் கிட்ட எப்படி நீக்குப் போக்கா நடந்துகிறா பார்த்தீங்களா?” என்று ஆச்சரியமாக கூறினாள் சித்ரா.
“ராதும்மா… பத்து நிமிஷம் ரெப்பிரேஷ் பண்ணிட்டு சாப்பிட வரேன்.” என்று ராதாவை பார்த்து கூறினான் யதுநந்தன்.
“மாமா நீங்களும், அத்தைக்கு பயப்படுவீங்கன்னு சொல்லுங்க.” என்று இடுப்பில் கை வைத்து சஞ்சனா மீண்டும் கேட்க, “வேறு வழி இல்லையே பட்டுக்குட்டி.” என்று கேலியாக கூறி தன் நெற்றியை குழந்தையின் நெற்றியில் முட்டி விளையாடிவிட்டு படி ஏறி மாடிக்கு சென்றான் யதுநந்தன்.
“ராதா… ராதா…” என்று யதுநந்தன் அழைக்க, “ஏய் ராதா, இப்ப தான் டி மாடி ஏறிப் போனார்?” என்று சித்ரா வம்பிழுக்க, “ஏதாவது தேடி கொடுக்க கூப்பிடுவாங்க.” என்று ராதா அசடு வழிந்தாள்.
“எதையும் தேட கூடாது. எல்லாம் வைத்த இடத்தில் இருக்கணும்னு நீ சொல்லுவ?” என்று சித்ரா அடுத்த கேள்வியை கேட்க, “ராதும்மா… ராதும்மா…” என்று யதுநந்தனின் குரல் வீடெங்கும் ஒலித்தது.
ராதா, யதுநந்தனின் குரல் வரும் திசையை பார்த்தபடி, சித்ராவின் கேள்வியால் அங்குத் தேங்கி நின்றாள்.
சித்ரா மெல்லிய புன்னகையோடு ராதாவை மீண்டும் வம்பிழுக்க, “சித்ரா. சும்மா இரு. ராதா நீ போ.” என்று ஸ்ரீதர் கூற, ராதா அவர்கள் அறையை நோக்கி ஓடினாள்.
ராதா அறைக்குள் நுழைந்து யதுநந்தனை தேட, கதவின் பின் நின்றுகொண்டு கதவை அடைத்து விட்டு ராதாவை குறும்பு புன்னகையோடு பார்த்தான் யதுநந்தன்.
“எல்லாரும் கீழ இருக்கும் பொழுது, இது என்ன விளையாட்டு?” என்று ராதா சிடுசிடுக்க முயன்று, தோற்றுக் குழைவாக கேட்டாள்.
ராதா கதவை திறக்க முயற்சிக்க, அவள் கைகளை பிடித்து, “நான் உன்கிட்ட ஒரு வாரமாக கேட்கறேன்… நந்தன்… அப்படின்னு கூப்பிடு. உன்னை வெளியே விடுறேன்.” என்று யதுநந்தன் தீவிரமாக மிரட்ட, அங்கிருந்த சோபாவில் ராதா நிதானமாக அமர்ந்தாள்.
“அப்படி எல்லாம் கூப்பிட முடியாது.” என்று திட்டவட்டமாக அறிவித்தாள் ராதா.
“உன்னை நந்தன் அப்படின்னு கூப்பிட வைக்கிறேன்.” என்று அழுத்தமாகக் கூறி, யதுநந்தன் அவளை நெருங்க, அவனை ஏமாற்றிவிட்டு கதவருகே ஓடினாள் ராதா.
அவளிடம் தோற்று யதுநந்தன் வெற்றி புன்னகை பூக்க, ராதா அவனருகே ஓடி வந்து தன் நாக்கைத் துருத்தி விட்டு, கதவைத் திறந்து வேகமாக ஓடினாள்.
“பார்த்து… பார்த்து…” என்று யதுநந்தனின் தாத்தா கூற, ராதா தன் பற்கள் தெரிய அசட்டுச் சிரிப்பு சிரித்து சூழ்நிலையை சமாளித்தாள்.
யதுநந்தனின் தாத்தா யதுநந்தனை பற்றிய கவலை நீங்கி, ராதாவை பார்த்துப் புன்னகைத்தார்.
‘இவள் என் வாழ்வின் வசந்தம்.’ என்று எண்ணியவனாக, யதுநந்தன் கீழ இறங்கி வந்தான். அனைவரையும் அமரச் சொல்லி, ராதா அனைவருக்கும் பரிமாறினாள்.
ராதவின் கைமணத்தை அனைவரும் ரசித்து உண்ண, “அது என்ன ராதும்மா?” என்று ஸ்ரீதர் யதுநந்தனின் காதில் கிசுகிசுப்பாக வினவ, “நான் அவ கிட்ட என் தாயின் அன்பையும், கண்டிப்பையும் பார்க்கிறேன்.” என்று ராதாவை வாஞ்சையோடு பார்த்தபடி கூறினான் யதுநந்தன்.
ராதா அவர்கள் பேசுவதை பார்த்து, கண்ணுயர்த்தி வினவ, யதுநந்தன் தன் தலையை இருபக்கமும் அசைத்தான்.
யதுநந்தன் கூறியது, லோகநாதனின் காதில் விழ தன் மகளின் வாழ்க்கையை எண்ணி நிம்மதி அடைந்தவராக உண்ண ஆரம்பித்தார்.
அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு, கிளம்பிச் சென்றனர்.
அப்பொழுது யதுநந்தனின் அலைபேசி ஒலித்தது.
சில பல முகமன்களுக்குப் பின், “யது… இன்னைக்கு ஒரு பார்ட்டி. நீங்க வரீங்க.” என்று எதிர்முனையில் கூற, “இல்லை பாஸ் கஷ்டம்.” என்று யதுநந்தன் தோழமையோடு கூறினான்.
“என்ன யது. மனைவிக்கு அவ்வளவு பயமா?” என்று கேலி போல் வினவ, யதுநந்தன் வெறுப்பாக முகம் சுழித்தான்.
“அப்படி இல்லை…” என்று யதுநந்தன் தயக்கமாக கூற, “இன்னைக்கு ஒரு நாள்… பார்ட்டி ஏற்பாடு பண்ணதே, உங்களுக்காகத்தான்…” என்று எதிர்முனையில் அழுத்தம் கொடுக்க, வேறு வழியின்றி சம்மதம் கூறி மொபைல் பேச்சை முடித்தான் யதுநந்தன்.
‘ராதாவிடம் சொல்லிட்டு போகலாமா? சொல்லாமல் போகலாமா?’ என்று சிந்தித்தான் யதுநந்தன்.
‘சொல்லாமல் போனால், வந்த பிறகு பிரச்சனை வரும்.’ என்று யதுநந்தனின் அறிவு கூறியது.
‘சொன்னால், இப்பவே பிரச்சனை வரும். அன்னைக்கு ஒரு பெட் காபிக்கு அவ்வளவு ரணகளம். என்ன செய்யலாம்?’ என்று குறுக்கும் நெடுக்குமாக நடந்த படி யோசித்தான் யதுநந்தன்.




