arrow_back
50:50 அத்தியாயம் 13
50:50 chevron_right பகுதி 13 / 25

அத்தியாயம் 13

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  13

 மீனைப் படமாக வரைந்ததைப் பார்த்த அன்றே, ராதாவின் ரசனை தெரிந்து ஓர் அழகிய மீன் தொட்டி வாங்கியிருந்தான் யதுநந்தன். அதில் கம்பீரமாக ஒரு ஆண் மீனும், மென்மையாக ஒரு பெண் மீனும் ஒன்றின் பின் ஒன்றாக நீந்திக் கொண்டிருந்தது. அதை ரசித்துப் பார்த்து படி அதற்கு உணவிட்டுக் கொண்டிருந்தாள் ராதா.

“ராதா!” என்று அவளை அழைத்தபடி மீன் தொட்டி அருகே சென்றான் யதுநந்தன்.

“ராதா… இன்னைக்கு ஒரு பார்ட்டி.” என்று யதுநந்தன் கூற, “ஓ… சூப்பர். நான் என்ன டிரஸ் பண்ணணுமுன்னு இப்பவே சொல்லுங்க. கிளம்பின பிறகு, இதை விட அது நல்லாருந்தது. அதை விட இது நல்லா இல்லைன்னு சொல்லக் கூடாது.” என்று ராதா அந்த மீன்களை ரசித்துக் கொண்டே வெகுளியாகக் கூறினாள்.

 யதுநந்தன் திரு திருவென்று முழித்து, “ராதும்மா… இது பசங்க பார்ட்டி. நோ லேடிஸ்.” என்று சிரித்த முகமாகக் கூறினான்.

“ஓ… அப்ப சரி. நீங்க போயிட்டு வாங்க.” என்று தன் தோள்களைக் குலுக்கி ராதா கூற, அவளைத் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினான் யதுநந்தன்.

“பார்ட்டி எதற்கு தெரியுமா?” என்று யதுநந்தன் கேள்வியாக நிறுத்த, தன் தலையை இருபக்கமும் அசைத்து அவனை அமைதியாகப் பார்த்தாள் ராதா.

“எனக்கு அருமையான பெட்டெர் ஹஃப் கிடைத்ததற்கு…” என்று யதுநந்தன் கூற, ராதா தன் கண்களைச் சுருக்கி அவனைக் கூர்மையாக பார்த்தாள்.

“அது என்ன பெட்டெர் ஹஃப் ன்னு கேட்க மாட்டியா?” என்று யதுநந்தன் வினவ, “அதையும் நீங்களே சொல்லுங்க.” என்று ராதா அசட்டையாகக் கூறினாள்.

“என் சுக, தூக்கம் அனைத்திலும் என்னுடன் பயணித்து, என் வாழ்க்கையை வண்ண மயத்தோடு முழுமையாக்கப் போகும் என் மனைவி ராதா தான் பெட்டெர் ஹஃப்” என்று யதுநந்தன் உணர்ச்சி பொங்க கூற, ராதா அவனை குறு குறுவென்று பார்த்தாள்.

“என்ன ராதா அப்படிப் பார்க்கிற?” என்று யதுநந்தன் பரிதாபமாக கேட்க, “நீங்க எதைச் சொல்ல வந்தீங்களோ சுத்தி வளைக்காமல் நேரடியா சொல்லுங்க.” என்று தன் இடுப்பில் கை வைத்து ராதா அழுத்தமாகக் கூறினாள்.

“இன்னைக்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி ராதா. என்னால் தவிர்க்க முடியலை.” என்று யதுநந்தன் நிதானமாகக் கூற, “போயிட்டு வாங்க.” என்று அவனை விட நிதானமாகக் கூறினாள் ராதா.

 சிறிது நேரத்தில், “ராதா, போயிட்டு வரேன்.” என்று கூறி யதுநந்தன் கிளம்ப எத்தனிக்க, ராதா அவனை அமைதியாகப் பார்த்தாள்.

 அவள் கண்களில் கோபம் இல்லை, வெறுப்பு இல்லை, ‘ஏதோ ஒரு செய்தி மட்டும் இருக்கிறது.’ என்று எண்ணினான் யதுநந்தன்.

“நான் சாப்பிடாமல் உங்களுக்காகக் காத்திருப்பேன்.” என்று சிரித்த முகமாக ராதா கூற, மென்மையாகச் சிரித்து தலை அசைத்துச் சென்றான் யதுநந்தன்.

 யதுநந்தன் நண்பர்களைச் சந்தித்து, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தான். அனைவரும் வழக்கம் போல் மது அருந்த, யதுநந்தனும் மது அருந்த ஆரம்பித்தான்.

 அவனுக்கு ராதாவின் முகம் கண்முன் தோன்றியது. ‘அவள் கண்களில் கோபம் இல்லை, வெறுப்பு இல்லை ஆனால் செய்தி இருந்தது.’ என்று மதுக் கோப்பையை கையில் பிடித்தபடி யோசித்தான் யதுநந்தன்.

 மதுவை அருகே கொண்டு செல்ல, ‘எனக்குப் பிடிக்காததை செய்கிறீர்கள்…’ என்று ராதாவின் கண்களில் செய்தி இருப்பதாகத் தோன்றியது யதுநந்தனிற்கு.

“உச்…” என்று சத்தம் எழுப்பி வெறுப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன்.

“என்ன ஆச்சு?” என்று நண்பர்கள் வினவ, “மூட் இல்லை.” என்று யதுநந்தன் மழுப்பலாகக் கூறினான்.

“கல்யாணம் மனுஷனை மாற்றும் வல்லமை படைத்தது.” என்று நண்பர்கள் கேலி பேச, யதுநந்தன் சிரித்துக் கொண்டான். ஏனோ அவனுக்குக் கோபம் வரவில்லை.

 ‘ராதா என்னை மாற்றிவிட்டாள்…’ என்று எண்ணினான் யதுநந்தன்.

 யதுநந்தன் அவனாகவே ராதாவின் நந்தனாக மாறிக் கொண்டிருந்தான் அவனறியாமல்!

 யாரும் யாரையும் மாற்ற முடியாது! இது தான் நிஜம்.

 ராதா அவன் வருகைக்காகக் காத்திருக்க, யதுநந்தன், “ராது.” என்றழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

“வாங்க… வாங்க… பசிக்குது. உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டே இருக்கேன். சீக்கிரம் முகம், கை, கால் கழுவிட்டு வாங்க.” என்று ராதா கூற, அவள் முகத்தை கூர்மையாக பார்த்தான் யதுநந்தன்.

 ‘கோபப்படமாட்டாள்… ஆனால் வருத்தப்பட்டிருப்பாளோ?’ என்ற சிந்தனையோடு அவள் முகத்தை ஆராய முயன்றான் யதுநந்தன்.

 யதுநந்தனின் கண்களில் தேடலை பார்த்த ராதா, கேள்வியாகப் புன்னகையோடு புருவம் உயர்த்த, “ஐந்து நிமிஷத்தில் சாப்பிட வரேன் ராதா.” என்று கூறி படி ஏறி அவர்கள் அறைக்குச் சென்றான்.

 யதுனந்தனுக்கு பரிமாறியபடி, ராதா, யது இருவரும் உண்ண, “ராதா, நீ ஏன் இன்னக்கி என்னை போக வேண்டாமுன்னு சொல்லலை.” என்று சந்தேகமாக கேட்டான் யதுநந்தன்.

“ஏன் வேண்டாமுன்னு சொல்லணும்?” என்று ராதா அவன் பக்கம் கேள்வியைத் திருப்ப, “சப்பாத்தி நல்ல மெதுவா இருக்கு. டால் ரொம்ப ருசியா இருக்கு.” என்று கூறினான் யதுநந்தன்.

 ராதா பக்கென்று சிரித்து, “என்ன? என்னை மாதிரி பேசுறீங்க…” என்று கூறி மீண்டும் சிரித்தாள்.

யதுநந்தன், அவன் கேள்விக்கு பதில் வராத காரணத்தினால் அமைதியாகச் சாப்பிட, “என்ன பாஸ் கோபமா இருக்கீங்க போல தெரியுதே? என்னை விட்டுவிட்டுப் போனதுக்கு நான் தான் கோபப்படணும்.” என்று வம்பிழுத்தாள் ராதா.

“நீ என் ராதா கோபப்படலை?” என்று யதுநந்தன் மென்மையாக வினவ, “எதுக்குங்க கோபப்படணும்? நீங்க உங்க நண்பர்களைப் பார்க்க போறதுக்கு எல்லாம் நான் கோப பட முடியுமா?” என்று ராதா யதுநந்தனின் முகம் பார்த்துக் கேட்டாள்.

 யதுநந்தன் அமைதி காக்க, “உங்களுக்கு ஒரு பர்சனல் ஸ்பெஸ் இருக்கு. நான் அதில் தலையிட மாட்டேன்.” என்று ராதா தீவிரமாக கூற, “காலை ஜாக்கிங், பெட் காபி   கூட என் பர்சனல் ஸ்பெஸ் தான்.” என்று யதுநந்தன் தீவிரமாக கூறினான்.

“அவ்வளவு பெரிய ஸ்பெஸ் கொடுக்கிற அளவுக்கு எனக்குத் தாராள மனசில்லை.” என்று மிடுக்காகக் கூறி ராதா தன் கவனத்தைச் சப்பாத்தியின் பக்கம் திருப்பினாள்.

“நான் என்ன சாப்பிட்டேன்… என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா ராதா?” என்று யதுநந்தன் ஆழமான குரலில் கேட்டான்.

“ஏன் எனக்குத் தேவையான விஷயத்தை நீங்களே சொல்ல மாட்டிங்களா? அதையும் நான் தான் கேட்கணுமா?” என்று ராதா கண்கள் உயர்த்தி குதர்க்கமாக கேட்டாள்.

 ராதா குதர்க்கமாக பேசினாலும், யதுநந்தனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

“ராதா., நான் பிளான் பண்ண லீவு முடிஞ்சிருச்சு. திரும்ப ஜாயின் பண்றதுக்கு முன்னாடி, ஒரு புது ப்ராஜெக்ட் டீல் ஒண்ணு வந்திருக்கு. அந்த பிஸினஸ் மீட்டிங்க்காக நான் யூ. எஸ். வரைக்கும் ட்ராவல் பண்ணனும்.” என்று யதுநந்தன் தன் தட்டைப் பார்த்தபடி கூறினான்.

 ராதா மௌனமாகத் தலை அசைத்தாள்.

“திரும்ப நீ உங்க ஸ்கூலுக்கு வேலைக்கு போறது கஷ்டம். அவங்களுக்கும் நீ அங்க போறது வசதியா இருக்காது.” என்று யதுநந்தன் கூற, ராதா அவனைப் பதட்டமாக பார்த்தாள்.

“நாம ஒரு ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணுவோம். எல்லாம் உன் இஷ்டப்படி செய். தேவையான எல்லாவற்றையும் நான் பாத்துக்கிறேன்.” என்று யதுநந்தன் கூற, ராதா மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“என்னால அவ்வளவு முடியாது.” என்று ராதா மறுப்பாகக் கூறினாள்.

“யாரால் எது முடியும். எது முடியாதுன்னு என்னால் சொல்ல முடியும் ராதா. நீ இதை பண்ற.  நீ ஒரு ஸ்கூலை மேனேஜ் பண்ண போற. உன் இஷ்டப்படி எந்த கிளாஸ் வேணுமுன்னாலும் ஹாண்டில் பண்ணு…  இதுக்கு மறுவார்த்தை இல்லை ராதா.” என்று யதுநந்தன் கண்டிப்பாக கூற, ராதா யதுநந்தன் இருக்கும் தைரியத்தில் சம்மதமாகத் தலை அசைத்தாள்.

 இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு, தங்கள் அறைக்குச் செல்ல, “நீங்க என்னைக்கு கிளம்பனும்?” என்று தன் குரலில் இருந்த ஏமாற்றத்தை மறைத்து பிசிரில்லாமல் கேட்டாள் ராதா.

“எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் கிளம்பனும்.” என்று யதுநந்தன் கண்களில் குறும்போடு கூற, ராதா அதைக் கவனிக்காமல் யோசனையில் ஆழ்ந்தாள்.

“நீ என்ன நினைக்கிற ராதா?” என்று யதுநந்தன் மீண்டும் கேட்க, “நான் நினைப்பதற்கு என்ன இருக்கு. இல்லை சொல்றதுக்கு என்ன இருக்கு? அது தான் நீங்க முடிவு எடுத்துடீங்களே.” என்று ராதா முறுக்கி கொண்டாள்.

 ராதா பேசாமல் படுத்துக் கொள்ள, “என்ன வேணாலும் சொல்லலாம் ராதா. என்னை போக வேண்டாமுன்னு சொன்னால், நான் போகலை. நீ கூட வரேன்னு சொல்லு, நாம சேர்ந்து போகலாம்.” என்று யதுநந்தன் குறும்பாக கூறினான்.

“ஏன் சொன்னால் தான் கூட கூட்டிட்டு போவீங்களா? இல்லைனா விட்டுட்டு போவீங்களா?” என்று ராதா கோபமாக கேட்டு, மெத்தையில் எழுந்தமர்ந்து அவனிடம் சண்டையிட தயாரானாள்.

 யதுநந்தன் அவள் எதிரே அமர்ந்து, “தாயே! சும்மா விளையாட்டா தான் தனியா போறதா சொன்னேன். நீ கூட வரதுக்கு எல்லா ஏற்படையும் பண்ணிட்டேன்.” என்று ராதாவிடம் புன்னகையோடு கூற, “அது!” என்று ராதா கூறினாள்.

 அவள் காதை திருகி, “என்னையே மிரட்டுற?” என்று கேட்க, “உங்களை நான் கூட மிரட்டலைனா எப்படி?” என்று சிரித்த முகமாக கேட்டாள் ராதா.

“அது சரி…” என்று அவளை ஆமோதித்தான் அவள் கணவன்.

“ராதா. நியூ யார்க்கில் மீட்டிங். நியூ யார்க் சுற்றிப் பார்ப்போம். உனக்குக் கோவில் ரொம்ப பிடிக்குமே. உனக்காக பிட்ஸ்பர்க் பெருமாள் கோவில் போவோம்.” என்று யதுநந்தன் கூற, “எனக்கு நையகரா பால்ஸ் கூடப் பிடிக்கும்.” என்று ராதா ரசனையோடு கூறினாள்.

“நீ கோவிலுக்கு மட்டும் தான் போவேன்னு நினைத்தேன்.” என்று அவன் குறும்பாக கூற, “நாம் என்ன ஆன்மீக சுற்றுலாவா போறோம்.” என்று ராதா யதுநந்தனை முறைத்தபடி கேட்டாள்.

“உன் இன்னொரு முகம் எனக்கு இப்ப தானே தெரியுது.” என்று யதுநந்தன் அவள் முகத்தைப் பார்த்தபடி கூற, “ஏன் முன்னாடியே தெரிஞ்சிருந்தா கல்யாணம் பண்ணிருக்க மாட்டிங்களா?” என்று ராதா மீண்டும் குதர்க்கமாக கேட்டாள்.

“மேடம் செம மூட்ல இருக்கீங்க… போல. நமக்கு அவ்வளவு திறமை எல்லாம் இல்லை மா…” என்று யதுநந்தன் சமாதான கோடியைப் பறக்க விட்டான் யதுநந்தன்.

 ராதா புன்னகைக்க, “முன்னாடியே தெரிந்திருந்தா இவ்வளவு நான் விட்டுவச்சிருக்கவே மாட்டேன்,” என்று ராதாவின் காதில் கிசுகிசுத்தான் யதுநந்தன்.

ராதா வெட்கப்பட்டு புன்னகைக்க, அவள் புன்னகையில் மயங்கி, “நையகரா பால்ஸ் போவோம்.” என்று யதுநந்தன் கூறினான்.

 அவள் ஆசைப்படுவதை எல்லாம் நிறைவேற்ற அவன் மனம் துடித்தது.

 வருங்காலத்தில் ராதாவின் ஆசையைத் தான் நிறைவேற்ற முடியாமல் தவிக்கப் போவதும், அவன் தவிப்புக்கு ராதாவே காரணமாகப் போவதும் தெரியாமல் அந்த இளம் ஜோடி யூ. எஸ். நோக்கி விமானத்தில் பறந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 14

அத்தியாயம்  14 ராதா, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த விமான பணிப்பெண்களை பார்த்தாள். “என்ன ராதா அப்படிப் பார்க்கிற?" என்று அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியமாகக் கேட்டான் யதுநந்தன்.“இது தான் எனக்கு முதல் விமான பயணம்..." என்று ராதா கூற, மெலிதாக…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்