arrow_back
50:50 அத்தியாயம் 14
50:50 chevron_right பகுதி 14 / 25

அத்தியாயம் 14

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  14

 ராதா, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த விமான பணிப்பெண்களை பார்த்தாள். “என்ன ராதா அப்படிப் பார்க்கிற?” என்று அவள் கண்களில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியமாகக் கேட்டான் யதுநந்தன்.

“இது தான் எனக்கு முதல் விமான பயணம்…” என்று ராதா கூற, மெலிதாக புன்னகைத்தான் யதுநந்தன்.

“எல்லாரும் பொம்மை மாதிரி எவ்வளவு அழகா இருக்காங்க?” என்று அவர்களைப் பார்த்தபடி கூறினாள் ராதா.

“ராதா நீ வந்ததிலிருந்து அவங்களைத் தான் பார்த்துட்டு இருக்க. சாப்பிடற ஐடியா  இல்லையா?” என்று யதுநந்தன் அவள் முன் இருந்த சாப்பாட்டை பார்த்தபடி கேட்டான்.

“சாப்பாடு ரொம்ப சுமார். அது தான் அவங்களைப் பார்த்து நேரத்தை போக்கிட்டு இருக்கேன்.” என்று ராதா சோகமாக கூற, “ராதா போற இடத்துக்கெல்லாம் புளியோதரை கட்ட முடியாது. கொஞ்சமாவது சாப்பிடு… நாம இது மாதிரி அடிக்கடி ட்ராவல் பண்ண வேண்டியது இருக்கும். என்னால் உன்னை விட்டுவிட்டுப் போக முடியாது. நீ என் கூட எப்பவும் வரணும்.” என்று யதுநந்தன் பொறுமையாக ஆரம்பித்துக் கண்டிப்பாக கூறினான்.

 ராதா அவனைப் பரிதாபமாக பார்க்க, “யூ. எஸ். போன உடன், உனக்கு நல்ல சாப்பாடு வாங்கி தரேன்.” என்று யதுநந்தன் கூற, “இட்லி, பொங்கல் எல்லாம் கிடைக்குமா?” என்று ராதா ஆர்வமாகக் கேட்டாள்.

“ஆமா கிடைக்கும், தெரு ஓரமா பாட்டி வடை சுடுவாங்க. வடை வாங்கி தரேன். ஒரு வடை ஒரு டாலர்…” என்று யதுநந்தன் கேலி பேச, ராதா அவனைக் கோபமாக முறைத்தபடி வேறு வழி இன்றி அந்த உணவை உண்டாள்.

 ராதா கற்பனை செய்தது விட உணவு நன்றாக இருந்தது என்பதை அவள் முகம் காட்டியது.

 யதுநந்தன், ராதா இருவரும் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்தபடி, யூ. எஸ்.  வந்தடைந்தனர்.

 விமான நிலையத்தில் யதுநந்தன் படு வேகமாகச் செயல்பட, ராதா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

 ‘அவங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.’ என்று எண்ணியபடி அவன் வேகத்தை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தாள் ராதா.

 இருவரும் நியூயார்க்  டைம்ஸ்குவேர் நோக்கிப் பயணித்தனர். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு அங்கு தான் செய்யப்பட்டிருந்தது.

 ஜெட் லெக் காரணத்தால் ராதா சோர்வாக இருந்தாள். “ராதா நீ ரெஸ்ட் எடு. நான் என் வேலைகளை முடிச்சிட்டு வரேன்.” என்று யதுநந்தன் அவளுக்குத் தேவையான விஷயங்களைச் செய்தபடி கூற, “நீங்க என்னைத் தான் கவனிக்கிறீங்க… உங்களுக்குச் சோர்வா இல்லையா?” என்று கோபமாக ஆரம்பித்து அக்கறையாக முடித்தாள் ராதா.

 அவள் தலையை ஆதரவாகத் தடவி, “நீ என் பக்கத்தில் இருக்கும் பொழுது, சோர்வு எப்படி என்கிட்டே வரும்.” என்று யதுநந்தன் தீவிரமாக சந்தேகம் கேட்டான்.

“வர வர நீங்க ரொம்ப பேசுறீங்க.” என்று ராதா சிணுங்கலாக கூறியபடி மெத்தையில் சுருண்டு படுத்தாள்.

 அவளுக்குப் போர்வையை போர்த்தி விட்டு, அவள் அருகே அமர்ந்து லேப்டாப்பில்   தன் பணியில் மூழ்கினான் யதுநந்தன். மாலைப் பொழுதில், அவளைப் பத்திரமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்து விட்டு தன் அலுவலக வேலைக்காக வெளியே சென்றான் யதுநந்தன்.

 அவன் அலுவலக பணி முடிந்த பின், இருவரும் நியூயோர்க்கை வலம் வந்தனர்.

 இருவரும் லிபெர்ட்டி ஐலண்ட்இல் அமைந்திருக்கும் ஸ்டச்சு ஆப் லிபெர்ட்டி நோக்கி பயணித்தனர்.

 சிலை அருகே செல்ல, செல்ல, “எவ்வளவு பெருசா இருக்கு? அருமையா இருக்கு.” என்று ராதா ஆர்வமாகக் கூறினாள்.

“இவங்க லிபெர்ட்டி ஆப் காட்டஸ் ராதா. இது காப்பர் ஸ்டச்சு. பிரான்ஸ்  மக்கள், அமெரிக்க மக்களுக்காகக் கொடுத்த அன்பளிப்பு. கால்களில் இருந்த உடைந்த சங்கிலயயும், முன்னே நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்த சிலையையும் காட்டி, இது சுதந்திரத்தின் அடையாளமாகிருச்சு… ” என்று அந்த இடத்தை ரசித்த படி கூறினான் யதுநந்தன்.

 சுற்றிலும் தண்ணீர், சில்லென்ற காற்று அவள் முகத்தில் மோத, குளிர் தாங்காமல் வெடவெடத்து நின்றாள் ராதா.

 அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அந்த இயற்கை காட்சியை ரசித்தான் யதுநந்தன்.

 ராதா வெட்கப்பட்டு விலக, “இங்க எல்லாரும் எப்படி போட்டோ எடுக்குறாங்க பாரு ராதா.” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் யதுநந்தன்.

“அவங்க எடுப்பாங்க.” என்று ராதா மெதுவாகக் கூற, “நாமளும் எடுப்போம்.” என்று கூறி அங்கு இருப்பவர்களை அழைத்து அந்தப் பொன்னான நேரத்தைப் பதிவு செய்து கொண்டனர் ராதாவும், யதுநந்தனும்.

 ராதா வெட்கப் புன்னகையோடு யதுநந்தன் கைவளைவுக்குள் பொருந்திப் போக, புகைப்படம் எடுத்த அமெரிக்க மனிதர், “யூ ஆர் லூக்கிங் சோ ப்ரெட்டி…” என்று ராதவை பார்த்துக் கூற, ராதா வாயடைத்து நின்றாள்.

 பெருமையாக ராதாவின் தோள் மேல் கைபோட்ட யதுநந்தன், “தேங்க் யூ…” என்று சிரித்த முகமாகக் கூறினான்.

 ராதா யதுநந்தனின் முகம் பார்க்க, யதுநந்தன் புருவம் உயர்த்தி, கண்களால் வினவினான்.

“என்ன இப்படி, பொசுக்குன்னு சொல்லிட்டாங்க?” என்று ராதா அதிர்ச்சி தணியாதவளாக கேட்க, “இங்க சகஜமா பேசுவாங்க ராதா.” என்று பொறுமையாக எடுத்துக் கூறினான்.

 ராதா தலை அசைக்க, அவள் அருகே சென்று, “உண்மையைச் சொல்ல தான் செய்வாங்க ராதும்மா…” என்று அனுபவித்து கிசுகிசுத்தான் யதுநந்தன்.

 ராதா செல்லமாக அவன் மார்பில் குத்தி, “போதும் கிளம்பலாம். அடுத்த இடத்துக்கு.” என்று கூறினாள்.

 பலத்த புன்னகையோடு அவர்கள் அடுத்த இடத்திற்குக் கிளம்பினார்.

 அடுத்ததாக ராதா, யதுநந்தன் இருவரும் எம்பயர் ஸ்டேட் பில்டிங் சென்று, நூற்றி இரெண்டாவது மாடியில் நின்று நியூயார்க் நகரத்தின் மொத்த அழகையும் ரசித்துப் பார்த்தனர்.

“இந்த இடம் எப்பவுமே இப்படி பரபரப்பா தான் இருக்குமா?” என்று ராதா கண்விரித்து கேட்டாள். ஆமென்று தலை அசைத்தான் யதுநந்தன்.

“ரொம்ப நேரம் கீழ பார்த்தா தலை சுற்றுது.” என்று பிரமிப்போடு ராதா கூற, “சரி வா… கிளம்புவோம்.” என்று யதுநந்தன் அவளை அக்கறையாக அழைத்துச் சென்றான்.

மேதம் துஸான்ஸ் வாக்ஸ் மியூசியம் சென்று மெழுகு சிலைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 நியூயார்க், நையகரா பால்ஸ் என அனைத்தையும் சுற்றிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினர் அந்த இளம் ஜோடி.

 சண்டைகள் இல்லாத இல்லறம் ஏது?

 வாக்குவாதங்கள் இல்லாத நல்லறம் இது?

 சின்ன சின்ன சண்டைகள், சின்ன சின்ன வாக்குவாதங்களோடு எந்த வித மனஸ்தாபங்களும் இல்லாமல் அவர்கள் நாட்கள் அழகாக நகர்ந்தது.

காலை மணி நாலு முப்பது

 ராதா உறங்கிக் கொண்டிருந்தாள்.

 ராதா நாலு நாற்பத்தி ஐந்து மணிக்கு விழிப்பாள், என்றறிந்து நாலு முப்பது மணிக்கு விழித்தான் யதுநந்தன்.

 உறங்கிக் கொண்டிருந்த அவள் நெற்றில் இதழ் பதித்து, “இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்… ராதும்மா.” என்று தேனினும் இனிதான குரலில் அவன் கூற, தன் கண்களை திறந்து அழகாகப் புன்னகைத்தாள் ராதா.

“கோவிலுக்கு போகணுமுன்னு சொன்னியே… வா ஜாகிங் போயிட்டு வந்து கிளம்புவோம்.” என்று யதுநந்தன் கூற, “அடேங்கப்பா… என்ன ஒழுங்கு?” என்று ராதா ஆச்சரியமாகக் கேட்டாள்.

“அதை ஏன் மேடம் கேட்கறீங்க? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது. என் மனைவி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்… அது இப்படியே பழகிருச்சு.” என்று யதுநந்தன் சோகமாக கூற, அவன் கேலியை ரசித்துச் சிரித்தாள் ராதா.

“சரி இன்னைக்கு வேணுமுன்னா தூங்கிக்கோங்க.” என்று ராதா இலகுவாக கூற மறுப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன். “சோம்பேறித்தனம் வந்திரும். எனக்கும் இப்பொழுதெல்லாம் காலை சூரிய உதயத்தை பார்க்காமல், இயற்கை காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியலை. போயிட்டு வந்திருவோம்.” என்று கூற ராதா சம்மதமாக தலை அசைத்தாள்.

“இன்னைக்கு தானே சஞ்சனாக்குவுக்கு பிறந்தநாள்… ஸ்ரீதர் அழைத்திருந்தான்.” என்று யதுநந்தன் கூற, ராதா தலை அசைத்தாள்.

 இருவரும் ஜாகிங் முடிந்து திரும்ப, பெரிய பொம்மையை காட்டினான் யதுநந்தன்.

“சஞ்சனா பேபிக்கு இந்த கிபிட்… நல்லாருக்கா?” என்று யதுநந்தன் வினவ, சிரித்த முகமாகத் தலை அசைத்தாள் ராதா.

 பிங்க் நிற பட்டு சேலையும், நந்தன் என்று எழுத்துக்குள் பதித்த வைர நெக்லஸ் இந்த இரண்டையும் ராதாவின் முன் காட்டி, “இது என் பேபிக்கு.” என்று யதுநந்தன் கூற, ராதா அவனிடம் ராது என்று பெயர் பதித்த மோதிரத்தைக் கொடுத்தாள்.

“ராதும்மா… தேங்க் யு சோ மச்…” என்று ஆனந்தமாக கூறி, ராதாவிடம் தன் விரல்களை நீட்டினான் யதுநந்தன்.

 ராதா அவனைப் பார்த்தபடி, அவன் விரல்களில் மோதிரத்தை அணிவித்தாள்.

 இருவரும் அவர்கள் திருமண நாளைக் கொண்டாடிவிட்டு, மாலையில் சஞ்சனா பிறந்த நாள் விழாவிற்குச் சென்றனர்.

 ராதா பம்பரமாக சுழன்று வேலை செய்ய, யதுநந்தன் கேக்யை ருசித்துக் கொண்டிருக்க, அவன் கண்கள் ராதவை வட்டம் அடித்தது. “நீங்க இப்ப புது மாப்பிளை இல்லை.” என்று சித்ரா கேலி பேசினாள்.

“அதனால் என்ன? ராதா என் மனைவி தானே.” என்று மெட்டு விடாமல் யதுநந்தன் கூற, அங்குச் சிரிப்பலை எழுந்தது.

 கேக் சாப்பிட்டு அவன் கைகளை கழுவ, அறையில் உள்ள குளியலறைக்குள் சென்றான் யதுநந்தன்.

 இதை அறியாமல், அங்கு வந்து அமர்ந்தார் சித்ராவின் தாயார்.

 அப்பொழுது ராதா அந்த அறை வழியாகக் கடந்து செல்ல, “ராதா.” என்று அழைக்க, ராதா உள்ளே வந்தாள்.

“இன்னைக்கு உனக்கு கல்யாண நாளாமே? நல்வாழ்த்துக்கள்.” என்று சித்ராவின் தாயார் கூற, “நன்றி அத்தை.” என்று ராதா சிரித்த முகமாகக் கூறினாள்.

“புதுப் புடவை… வைர நெக்லஸ் எல்லாம் நல்லா இருக்கு.” என்று மெச்சுதலாகக் கூறினார்.

 ராதா புன்னகையோடு தலை அசைக்க, “அவர் உன் மேல் ஆசையா தான் இருக்கிற மாதிரி தெரியுது. கல்யாண ஆகி ஒரு வருஷம் ஆகுது. இன்னும் நல்ல செய்தி ஒன்றும் இல்லையா?” என்று அவர் கேட்க, ராதா புரியாமல் விழித்தாள்.

 சில நொடிகளில் அவர் கேட்பது புரிய, தர்ம சங்கடமாக நெளித்தாள் ராதா.

“ஒரு வேளை உன் மாப்பிள்ளைக்குக் கெட்ட பழக்கம் எதுவும் இருக்கிறதால், எதுவும் பிரச்சனை இருக்குமோ?” என்று அவர் அடுத்த கேள்வியை கேட்க, “கெட்ட பழக்கம்ன்னா?” என்று ராதா அழுத்தமாகக் கேட்டாள்.

 “இல்லை… குடி…” என்று அவர் இழுக்க, “ஏன், அவங்க குடிக்கிற பாரில் தான் நீங்க குடித்தீங்களா? அப்ப தான் நீங்க அவங்க குடிப்பதை பார்த்தீங்களா?” என்று ராதா நிதானமாகக் கேட்டாள்.

 சித்ராவின் தயார் அவளைக் கோபமாக முறைக்க, அதற்குள் சித்ரா அங்கு வந்துவிட, “அண்ணி. அவங்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவங்களைப் பற்றி யாரவது குறை சொன்னால், நான் நானாக இருக்க மாட்டேன். அது உங்க அம்மாவாக இருந்தாலும் சரி.” என்று எச்சரித்து விட்டு வெளியே சென்றாள் ராதா.

“அம்மா… நீ எதுவும் தேவை இல்லாம பேசினியா?” என்று சித்ரா கோபமாக கேட்க, “நாட்டு நடப்பைக் கேட்டேன். இருந்தாலும் உன் நாத்தனாருக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்த்தி.” என்று சித்ராவின் தயார் அங்கலாய்த்தார்.

“இவளுக்கெல்லாம் என்னை மாதிரி ஒரு மாமியார் வந்திருக்கணும். அப்ப தெரிஞ்சிருக்கும்.” என்று அவர் சிடுசிடுக்க, “ம்… நினைப்பு தான். உன்னைப் பிழிந்து அவ தொங்க விட்டுருவா.” என்று சித்ரா சலிப்பாக கூறினாள்.

 அறைக்கு வெளியே சென்று, மீண்டும் திரும்பி உள்ளே வந்த சித்ரா, “அவ கிட்ட ஜாக்கிரதையா பேசு. அவளே சும்மாவிட்டாலும், என் புருஷன் உன்னை உண்டில்லைனு பண்ணிருவாரு. யது தம்பிக்கு அவள் மேல் பாசம் அதிகம். அவளை ஏதாவது சொன்ன, அவரும் உன்னை சும்மா விட மாட்டாரு.” என்று சித்ரா எச்சரித்தாள்.

“வீண் வம்பு எதையும் வளர்த்தா நான் உன் பக்கம் நிற்க மாட்டேன்.” என்று கூறிவிட்டு சித்ரா அறையை விட்டு வெளியே சென்றாள்.

 அனைவரும் பிறந்த நாள் விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பினர்.

 யதுநந்தனும், ராதாவும் அவர்கள் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

 யதுநந்தன் அமைதியாக வீட்டை நோக்கிப் பயணிக்க, “இன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா?” என்று ராதா தன் கண்களை விரித்துக் கேட்டாள்.

 யதுநந்தனின் பதிலுக்கு காத்திராமல், “நாம நையகரா பால்ஸ் போயிட்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது. இன்னும் எல்லாரும் என்கிட்டே அந்த இடத்தை பற்றி தான் கேட்கறாங்க.” என்று ராதா கூற யதுநந்தன் அமைதியாகத் தலை அசைத்தான்.

“அது எப்படிக் குளிர் காலத்தில் மூடிருவாங்கலாமே! அது என்ன இந்தப் பக்கம் யூ. எஸ். அந்தப் பக்கம் கனடா? நையக்ரா பால்ஸ் தான் இரண்டையும் பிரிக்குதான்னு எல்லாருக்கும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். அந்த நீர் வீழ்ச்சியைக் காண இரண்டு கண்கள் போதாது. எல்லாரும் ஆச்சரியப்படுவது நியாயம் தான்.” என்று ராதா ரசித்துக் கூறினாள்.

 யதுநந்தன் அமைதியாகத் தலை அசைக்க, “உங்களுக்கு உடம்பு சரி இல்லையா?” என்று அவன் நெற்றில் கை வைத்துக் கேட்டாள் ராதா.

 யதுநந்தன் மறுப்பாகத் தலை அசைக்க, “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று அவன் முகம் பார்த்து கேட்டாள் ராதா.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. காலையில் இருந்து சுற்றிக்கொண்டே இருக்கோமில்லை.” என்று யதுநந்தன் கூற, “நான் வீட்டில் உங்களுக்குச் சுக்கு காபி தரேன்.” என்று ராதா அக்கறையாகக் கூறினாள்.

 யதுநந்தன் அமைதியாக கார் ஓட்ட வேறு வழியின்றி, ராதா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 வீட்டுக்கு சென்று, ராதா கொடுத்த சுக்கு காபியை எதுவும் பேசாமல் குடித்தான் யதுநந்தன். “வேறு எதுவும் பிரச்சனையா, உங்க முகம் சரி இல்லையே?” என்று ராதா கேட்க, யதுநந்தன் மறுப்பாகத் தலை அசைத்து, “ஐ அம் ஆல் ரைட்… ” என்று கூறினான்.

 ராதா சிந்தனை வாய்ப்பட்டவளாக மெத்தையில் படுக்க, “ராதா, இன்னைக்கு யாரும், உன்னை எதுவும் கேட்கலையா ராதா?” என்று யதுநந்தன் அந்த இருட்டில் மேலே சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்து கேட்டான்.

 அவன் பக்கம் திரும்பிப் படுத்த ராதா, “யார் என்ன கேட்கணும்?” என்று கேள்வியை அவன் பக்கம் திருப்பினாள்.

 இருட்டில் மெத்தையில் எழுந்தமர்ந்து, “சித்ரா அம்மா என்ன கேட்டாங்க?” என்று யதுநந்தன் அழுத்தமாகக் கேட்க, ராதா மௌனம் காத்தாள்.

“நீ என் கிட்ட ஒரு விஷயத்தை மறைப்பியா ராதா?” என்று யதுநந்தன் கேட்க, ராதா பதில் கூறுமுன் அந்தக் கேள்வியை கேட்டான் யதுநந்தன்.

“நீயும் அப்படி நினைக்கிறியா ராதா? அதனால் தான் நான் வருத்தப்படுவேன்னு என்கிட்டே சொல்லலியா?” என்று யதுநந்தன் ஆழமான குரலில் கேட்க, ‘தன் அமைதிக்கு இப்படி ஒரு பொருள் கற்பிக்கக் கூடுமா?’ என்ற எண்ணத்தில் ஸ்தம்பித்து நின்றாள் ராதா.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 15

அத்தியாயம்  15 ராதா ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான். அந்த நொடியில், தன்னை தானே சுதாரித்துக் கொண்டாள் ராதா. 'சந்தோஷமா இருக்கும் பொழுது ஒரு ஜோடி ஒற்றுமையா இருக்கிறது பெரிசில்லை. பிரச்சனை வந்தாலும், கஷ்டம் வந்தாலும், தன் சரி பாதி தவறு செய்திருந்தாலும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்