arrow_back
50:50 அத்தியாயம் 15
50:50 chevron_right பகுதி 15 / 25

அத்தியாயம் 15

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  15

 ராதா ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான். அந்த நொடியில், தன்னை தானே சுதாரித்துக் கொண்டாள் ராதா.

 ‘சந்தோஷமா இருக்கும் பொழுது ஒரு ஜோடி ஒற்றுமையா இருக்கிறது பெரிசில்லை. பிரச்சனை வந்தாலும், கஷ்டம் வந்தாலும், தன் சரி பாதி தவறு செய்திருந்தாலும் விட்டுக்கொடுத்து… ஒற்றுமையா இருக்கிறது தான் பெரிய விஷயம்.’ என்று தன் தாய் கூறுவது நினைவு வர, ராதா அவனை மௌனமாகப் பார்த்தாள்.

 

“ஏன் ராதா என் கிட்ட சொல்லலை? நான் வருத்தப்படுவேன்னு சொல்லலியா?” என்று யதுநந்தன் தீவிரமாகக் கேட்க, ராதா மறுப்பாகத் தலை அசைத்தாள்.

 “இல்லை. அவங்க கேட்டது, அவங்க பேசினது எனக்கு ஒரு விஷயமாகவே தெரியலை.” என்று ராதா மெத்தையில் எழுந்தமர்ந்து கூற, யதுநந்தன் அழகாகச் சிரித்தான்.

 “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.” என்று யதுநந்தன் கூற அவனை தன் கண்களைச் சுருக்கி, ‘இதை எதற்கு இப்பொழுது சொல்கிறான்’ என்றெண்ணி அவன் பேசுவது புரியாமல் பார்த்தாள்.

“சித்ரா அம்மா சொன்ன விதம் தப்பா இருக்கலாம், ஆனால் அவங்க சொன்னது நியாயமான விஷயம் தானே? என் கிட்ட எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தது நிஜம் தானே?” என்று யதுநந்தன் நிதானமாகக் கூற, ராதா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“அது தான் இப்ப இல்லையே?” என்று ராதா படக்கென்று கூற, “அது அவங்களுக்குத் தெரியாது இல்லையா?” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“தெரியாமல் யாரும் எதையும் பேச கூடாது.” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.

“அதை நீ சொன்ன விதம் ரொம்ப தப்பு ராதா.” என்று அவள் தலை கொதி, அன்பாகக் கூறினான் யதுநந்தன்.

“நீங்க இந்த ஒரு வருஷத்தில் ரொம்ப மாறிட்டிங்க.” என்று ராதா புன்னகையோடு கூறினாள்.

“பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது இயற்கை தானே!” என்று யதுநந்தன் கேலி போல் பேசினான்.

 ராதா மறுப்பாகத் தலை அசைத்தாள். “நீங்க நார்ன்னு சொன்னால் இதை உலகம் நம்பாது. நான் ஆயிரம் குழப்பத்தோடு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனால் நான் உங்களுக்காக விட்டுக் கொடுத்ததை விட, நீங்க எனக்காக விட்டுக் கொடுத்தது தான் அதிகம். என் மனம் நோகும் படி நீங்க நடந்துக்கிட்டதே இல்லை. இந்த ஒரு வருடம் அவ்வளவு வேகமா போன மாதிரி தெரியுது. இந்த ஒரு வருடத்தின் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் பொக்கிஷம் மாதிரி பாதுகாக்கப்பட வேண்டிய நாட்கள்.” என்று ராதா உணர்ச்சி பொங்க கூறினாள்.

            யதுநந்தனின் தோளில் சாய்ந்து, “லவ் யூ சோ மச்…” என்று ராதா கூற, யதுநந்தன் அவளை அணைத்துக் கொண்டான்.

“ராதா. ஒரு வருஷம் ஆச்சு. நாம ஏன் செக் அப் பண்ண கூடாது?” என்று யதுநந்தன் கேட்க, ராதா அவனை ஆராயும் கண்களோடு பார்த்தாள்.

“ஒரு வருஷம் தானே ஆகுது.” என்று ராதா கண் சிமிட்டிக் கூற, யதுநந்தன் யோசனையோடு தலை அசைத்தான்.

“உலகம் ஆயிரம் பேச தான் செய்யும். நாம நமக்காக வாழனும்.” என்று ராதா எழுந்து சென்று மீன் தொட்டி அருகே நின்று பேசினாள்.

 அந்தப் பெண் மீனை, ஆண் மீன் துரத்திக் கொண்டிருக்க, பெண் மீன் வேகமாக ஓடியது.

 அங்கிருந்த கோப்புகளை காட்டி, “எதையும் எடுத்த இடத்தில் ஒழுங்கா வைக்கிறதில்லை.” என்று முணுமுணுத்தாள் ராதா.

“ஹே… டார்லிங்… எல்லாம் மாறுமா? அதைச் செய்ய தான் என் பெட்டெர் ஹாப் நீ இருக்கியே?” என்று யதுநந்தன் மெத்தையில் படுத்து கேலி பேசினான்.

 ராதா கோப்புகளை உரிய இடத்தில் வைத்துவிட்டு, மீன் தொட்டி அருகே சென்றாள்.

“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா.” என்று ராதா தலை சாய்த்துக் கேட்க, யதுநந்தன் சம்மதமாக தலை அசைத்தான்.

“ஆனால், சிரிக்கக் கூடாது…” என்று ராதா சட்டம் பேசினாள்.

“சிரிக்கக் கூடாத மாதிரி விஷயம் சொல்லு.” என்று யதுநந்தன் சட்டம் பேச, ராதா தன் முகத்தை அந்த மீன்களின் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

 யதுநந்தன் அவள் அருகே சென்று ராதாவின் முகத்தை கைகளால் ஏந்தி, “என் ராதா இப்படி எல்லாம் சின்ன விஷயத்துக்குக் கோபப்படலாமா?” என்று குழைவாக கேட்க, ராதா அவனைத் தீவிரமாக பார்த்தாள்.

“நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்த நொடி எனக்கு ஒரு விஷயம் தோணுது. இந்த மீன்களுக்கு ஒரு குட்டி மீன் வரும் பொழுது, நமக்கும் ஒரு குழந்தை வரும்.” என்று ராதா நம்பிக்கையோடு கூற, ராதவை கூர்மையாகப் பார்த்தான் யதுநந்தன்.

 அவள் பேசுவது முட்டாள்தனமாகத் தோன்றினாலும், ராதாவின் மனதை, அவள் நம்பிக்கையை மறுக்க மனமில்லாமல், “நீ சொன்னால் சரி தான் ராதா.” என்று மெதுவாகக் கூறினான் யதுநந்தன்.

“அது வரைக்கும், நீங்கத் தேவையில்லாமல் யோசித்து, உங்கள் மனதை குழப்பிக்க கூடாது.” என்று ராதா பிடிவாதமாக கூற, யதுநந்தன் சம்மதமாக தலை அசைத்தான்.

 அவர்களின் அன்பு, பாசம் மென்மையாக வளர வளர வருடங்கள் உருண்டோடின.

 ராதா பள்ளி பொறுப்பை எடுத்துச் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தாள். யதுநந்தன் அவளின் அனைத்துச் செயல்களுக்கும் உறுதுணையாக நின்றான்.

அன்று பள்ளி விழா.

 சில வருடங்களுக்கு முன், ராதாவிற்க்காக, பள்ளி விழாவில் கலந்து கொண்ட யதுநந்தன் தான் இவன் என்று கூறினால் நம்ப முடியாத அளவிற்கு யதுநந்தன் தீவிரமாக அவர்கள் பள்ளி விழாவில் செயல் பட்டுக் கொண்டிருந்தான்

 ராதா அனைத்துக் குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல் பாவித்து, மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

 விழாவைக் காண, ராதாவின் பெற்றோர் வந்திருந்தனர்.

 ராதாவை காண அவள் தயார் அங்கு வர, “அம்மா. ஒரு இரண்டு நிமிஷம்.” என்று கூறி குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 அந்தக் குழந்தையின் தாயார், ராதாவிடம் தோழமையாகப் பேசி கொண்டிருந்தாள்.

 அப்பொழுது, “உங்க குழந்தை என்ன படிக்கிறாங்க? இங்க தான் படிக்கிறாங்களா?” என்று அந்த மாணவனின் தாயார் கேட்க, “இல்லை, எனக்கு இன்னும் குழந்தை இல்லை.” என்று ராதா மெதுவாகக் கூறினாள்.

 அங்கு இன்னும் சில பெற்றோர்கள் இருக்க, அங்கு அமைதி சூழ்ந்தது.

 ராதாவின் தாய் அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் வந்த விஷயத்தை மறந்து மௌனம் காத்தார். அவர்கள் வெளியே செல்ல, ராதா அவள் தாயோடு மெதுவாக நடந்தாள்.

 ராதா பின்னே வருவது தெரியாமல், “இந்த பொண்ணு இப்படி சட்டம் பேசும் பொழுதே நினைத்தேன்… அவங்களுக்கு இன்னும் குழந்தை இல்லைன்னு. குழந்தை வந்தா நம்ம கஷ்டம் புரியும்.” என்று மற்றோரு மாணவனின் தாய் அங்கலாய்க்க, அனைவரும் அமைதியாகத் தலை அசைத்தனர்.

 அவர்கள் பேச்சு ராதாவின் காதில் விழ, அவள் உதட்டில் மெல்லிய புன்னகை தோன்றியது.

“ராதா. நீ ஊரில் ஆயிரம் குழந்தைகளை பார்த்தாலும் அது உன் குழந்தை ஆகாது. முதலில் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணுங்க.” என்று கூறினாள் ராதாவின் தயார்.

 ‘சமீபகாலமாக என் மனதில் ஓடும் எண்ணம் தான். அன்று யதுநந்தன் கூறும் பொழுதே போயிருக்க வேண்டுமோ?’ என்று எண்ணினாள் ராதா.

 தன் தாயிடம் சம்மதமாகத் தலை அசைத்தாள் ராதா.

“ராதா, நீயும், மாப்பிள்ளையும் கோவிலுக்கு போங்க… அப்படியே சில பரிகாரங்களும்…” என்று அவள் தாய் ஆரம்பிக்க, “அம்மா… ஆஸ்பத்திரிக்கும் போறேன்… கோவிலுக்கும் போறேன்… ஆனால் பரிகாரங்கள் எல்லாம் முடியாது அம்மா. எனக்கும் அதில் இஷ்டம் இல்லை. அவங்களுக்கும் அதில் நம்பிக்கை கிடையாது.” என்று கறாராக கூறினாள் ராதா.

 ராதாவின் தாய் முகம் வாட, “அம்மா. நல்லது நடக்க வேண்டிய நேரம் நடக்கும்.” என்று தன் தாய்க்குச் சமாதானம் கூறுவது போல், தனக்குத் தானே கூறிக் கொண்டாள் ராதா.

ராதா தன் முழு கவனத்தையும் பள்ளி விழாவில் திருப்பினாள்.

 ‘இந்தப் பெண் எப்படி தான் இப்படி இருக்கிறாளோ?’ என்று எண்ணி ராதாவின் தாய் அமைதி காக்க, ராதா அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு யதுநந்தன் அருகே சென்று அமர்ந்தாள்.

 அவளுக்குத் தண்ணீர் கொடுத்த யதுநந்தன், “ஏதும் பிரச்சனையா ராதா?” என்று அவள் முகம் பார்த்து அக்கறையாகக் கேட்டான் யதுநந்தன்.

“எங்க இருந்தாலும் என்னையே நோட்டம் விட வேண்டியது.” என்று ராதா செல்லமாக கோபித்துக் கொண்டு, மறுப்பாகத் தலை அசைக்க அவள் கண்களை பார்த்தான் யதுநந்தன்.

 முதன் முறையாக ராதாவை பார்த்த பொழுது, அவன் கண்களில் இருந்த ஆசை… அவசரம்… இப்பொழுது இல்லை.

 யதுநந்தனின் கண்களில் ராதா மீதான அன்பு… அக்கறை… உரிமை… இவள் என்னவள் என்ற கர்வம் குடி கொண்டிருந்தது.

 யதுநந்தன் ராதாவை பார்க்க, “மாமா… அத்தை கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க? ஸ்கூல் ப்ரோக்ராமை பாருங்க.” என்று சஞ்சனா யதுநந்தனிடம் கூற, “பெரிய மனுஷி… நீங்க சொன்னால் சரி தான்.” என்று கூறி தன் கவனத்தை மேடை பக்கம் திருப்பினான் யதுநந்தன்.

சஞ்சனா நன்கு வளர்ந்திருந்தாள்.

 ராதாவின் கவனம் முழுதும், மேடையின் பக்கம் திரும்ப அவர்கள் நேரம் காற்றாய் பறந்தது.

அன்றிரவு.

“ராதா, ஹாஸ்பிடல் அப்பாயிண்ட்மெண்ட்புக் பண்ணிருக்கேன். இங்க இருக்கிறதிலேயே பெரிய டாக்டர். அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட்.” என்று கூற ராதா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன நீ சொல்லித் தான் நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியணுமா? நீ சொல்லாமலே புரியும் ராதும்மா…” என்று அவன் கர்வம் அழியும் நாளும் விரைவில் வரும் என்றறியாமல் யதுநந்தன் கர்வமாக கூற, அவன் மார்பில் சரண் புகுந்தாள் ராதா.

 அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, “ராதா, இப்ப எதுக்கு இந்த அழுகை?” என்று அவன் கண்டிப்போடு கேட்டான்.

 ராதா தன் உதட்டைப் பிதுக்கி, தன் தலையை இருபக்கமும் அசைத்து, ‘தெரியவில்லை…’ என்பது போல் செய்கை காட்ட, அவளை தன் கை வளையத்திற்குள் நிறுத்திக் கொண்டான் யதுநந்தன்.

“ராதா… மருத்துவம் எங்கயோ வளர்ந்திருச்சு. இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. நமக்கு இன்னும் வயசிருக்கு. எதுக்கு இப்படி பீல் பண்ற?” என்று ராதாவை சமாதானம் செய்யும் குரலில் கேட்டான் யதுநந்தன்.

 யதுநந்தன், மீன் தொட்டியை கை காட்ட, அங்கு இரு மீன்கள் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தது.

“நீ தானே சொன்ன, இங்குக் குட்டி மீன் வரும் பொழுது நமக்கும் குழந்தை வருமுன்னு. இந்த மீன் உன்னை மாதிரி அழுதுகிட்டு இருக்கா?” என்று கேலியோடு கேள்வியாக நிறுத்தினான் யதுநந்தன்.

 யதுநந்தனின் முயற்சி புரிய, அவன் மனம் நோகவிடாமல், சிரித்த முகமாகத் தலை அசைத்தாள் ராதா.

இருவரும் தங்கள் உணர்வுகளை மறைத்து சிறிது நேரம் பேசிவிட்டு, படுக்கச் சென்றனர்.

 ராதா தன் துக்கம் வெளியே தெரியாமல் இருக்க, போர்வையால் தன் முகத்தை மூடிக் கொண்டு, கண்களையும் இறுக மூடிக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.

“ராதா… ராதா…” என்று இருமுறை அழைத்து சத்தம் வராததால், யதுந்தான் பால்கனிக்கு சென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

 ‘ராதா… முன் போல் இல்லையே… ரொம்ப வருத்தப்படுற மாதிரி தெரியுது. ஒரு வேலை டெஸ்ட் ரிசல்ட் ஏதாவது எதிர்மறையா வந்திருச்சுன்னா ராதா தாங்குவாளா?’ என்ற எண்ணத்தோடு நடக்க, அவனறியாமல் அவன் கால்கள் மீன் தொட்டி அருகே வந்து நின்றது.

 ‘ராதாவின் சந்தோஷத்திற்காக, ஒரு குட்டி மீன் வந்துவிடாதா?’ என்ற எண்ணத்தோடு அந்த மீன் தொட்டியை ஆசையாகப் பார்த்தான் யதுநந்தன்.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 16

அத்தியாயம்  16 யதுநந்தன் மௌனமாக மீன் தொட்டியை பார்த்துக் கொண்டிருக்க, அவன் எண்ணங்கள் ராதவை சுற்றியது. ராதா போர்வை வழியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். பதில் தெரியா கேள்விகளோடு அவன் மனது அலை பாய, நித்திரா தேவி அவனை வட்டமிட்டாள். தூக்கம் கண்களை தழுவ,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்