அத்தியாயம் 16
அத்தியாயம் 16
யதுநந்தன் மௌனமாக மீன் தொட்டியை பார்த்துக் கொண்டிருக்க, அவன் எண்ணங்கள் ராதவை சுற்றியது. ராதா போர்வை வழியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பதில் தெரியா கேள்விகளோடு அவன் மனது அலை பாய, நித்திரா தேவி அவனை வட்டமிட்டாள். தூக்கம் கண்களை தழுவ, மெத்தையில் படுத்து கண்ணுறங்கினான் யதுநந்தன்.
அவன் மூச்சு சீராக வெளிவருவதை அறிந்து கொண்டு, ராதா போர்வையிலிருந்து வெளியே வந்தாள்.
இருட்டில் பால்கனியில் இருந்த நாற்காலியில் சோர்வாக சாய்ந்தமர்ந்தாள்.
‘அவங்களும் வருத்தப்படுறாங்க. எனக்காக அதை மறைக்கிறாங்க.’ என்ற எண்ணம் தோன்ற ராதாவின் கண்களில் நீர் வழிந்தது.
அதைத் துடைக்க மனமின்றி தன் கண்களை இறுக மூடினாள்.
‘அம்மா, அப்பாவையும் பறித்துக் கொண்டு, இப்பொழுது குழந்தையையும் தர மறுப்பது என்ன நியாயம்’ என்று ராதா யதினந்தனிற்காக தெய்வத்தை மனதார கோபித்துக் கொண்டாள்.
‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற எண்ணத்தோடு வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ராதா.
எதையும் அறிந்து கொள்ள முடியாத சோகம் அவளைச் சூழ, தன் கால்களை மடக்கி, அதனுள் தன் முகத்தைப் புதைத்து விசும்பி அழுதாள் ராதா.
திடீரென்று ஓர் எண்ணம் தோன்ற, ராதா விசுக்கென்று தலையை நிமிர்த்தி தன் அலைபேசியில் தாயை அழைத்தாள்.
“அம்மா… ஏதோ பரிகாரமுன்னு சொன்னீங்களே?” என்று ராதா அழுத்தமாகக் கேட்க, தன் மகளின் குரலும், அவள் பேசிய நேரத்தையும் மனதில் குறித்து கொண்டு, அவள் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறினார்.
சிறுது நேரம் தன் தாயிடம் பேசிவிட்டு அலைபேசி பேச்சை முடித்தாள் ராதா.
‘நம்பிக்கை இருக்கிறதோ… இல்லையோ… நான் இதைச் செய்தே ஆக வேண்டும்.’ என்ற முடிவோடு அறைக்குள் நுழைந்து தூங்க முயற்சித்தாள் ராதா.
மறுநாள் காலையில்,
இருவரும் எதுவும் பேசாமல் ஜாக்கிங் சென்றனர். ராதாவின் மனநிலை அறிந்து மௌனம் காத்தான் யதுநந்தன்.
ஜாக்கிங் முடிந்து இருவரும் தோட்டத்தில் இருந்த நாற்காலியில் சாய்ந்தமர்ந்தனர்.
ராதா அங்கிருந்த செடிகளை பார்த்தபடி அமர்ந்திருக்க, யதுநந்தன் அவளைப் பார்த்தபடி பாடினான்.
நான் பாதி நீ மீதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
என்று கண்ணில் குறும்போடு யதுநந்தன் பாட, ‘பாட்டு வரி மாறுதே!’ என்ற எண்ணத்தோடு அவனை குறுகுறுவென்று பார்த்தாள் ராதா.
ராதாவின் பார்வையை ரசித்தபடி, அவள் முகம் பார்த்து, மீண்டும் அதே வரிகளைப் பாடினான் யதுநந்தன்.
நான் பாதி நீ மீதி கண்ணே…
“நான் என்ன மீதியா?” என்று ராதா சிணுங்களாக கேட்க, “பாதியில் மீதி என்ன?” என்று தீவிரமாக கேட்டான் யதுநந்தன்.
“பாதி.” என்று ராதா, தன் கண்களை சுருக்கிக் கூற, “அப்புறம் பாதின்னு சொன்னால் என்ன? மீதின்னு சொன்னால் என்ன?” என்று தன் வினாவைப் பதிலாக்கி முடித்தான் யதுநந்தன்.
அங்கிருந்த செய்தித்தாளை அவன் மீது வீசி, ராதா அவனைக் கோபமாக முறைத்தாள்.
அந்தச் செய்தித்தாளை லாவகமாக பிடித்து,
“அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே…” என்று யதுநந்தன் உணர்ந்து பாடினான் யதுநந்தன்.
ராதா சுதாரிப்போடு அவனைப் பார்க்க,
“அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…” என்று புருவம் உயர்த்தி யதுநந்தன் கூற, ராதா தர்மசங்கடமாக நெளிந்தாள்.
அவன் பேச போகும் விஷயத்தைத் திசை திருப்பும் விதமாக, “நீங்க என்னை எப்படி மீதின்னு சொல்லலாம்?” என்று அவனிடம் சண்டைக்கு தயாரானாள் ராதா.
“நீ போர்வைக்குள் ஒளிந்து நான் கூப்பிட கூப்பிடத் திரும்பாமல் படுத்திருந்தியே… அது சரின்னா… இதுவும் சரி தான்.” என்று யதுநந்தன் நாற்காலியில் சாய்ந்து புன்னகையோடு கூறினான்.
“என் ராதும்மா, நான் கூப்பிடணுமுன்னு நினைத்தாலே திரும்புவா. நேற்று போர்வைக்குள் இருந்த ராதா தூங்கவும் இல்லை. அவள் என் ராதாவும் இல்லை.” என்று ராதாவின் முகம் பார்த்து யதுநந்தன் கூற, ராதாவின் முகம் வாடியது.
“என் ராதா, தூக்கத்தில் கூட நான் கூப்பிட்டா முழிச்சிப்பா. தூங்கறவங்களை எழுப்ப முடியும்… ஆனால் தூங்குவது போல் இருப்பவர்களை எழுப்ப முடியாதுன்னு சொல்வதற்கான அர்த்தம் எனக்கு நேற்று தான் முழுசா புரிஞ்சிது.” என்று யதுநந்தன் அழுத்தமாகக் கூறி, அங்கிருந்து எழுந்து சென்றான்.
அவன் செல்லும் வழியை மறைத்து, “கோபமா?” என்று ஒற்றை வார்த்தையாகக் கேட்டாள் ராதா.
ராதாவின் கண்களில் தெரிந்த ஏக்கம், ‘இல்லை.’ என்று பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தாலும், ராதாவின் செயல் கண்டிக்க தக்கது என்று எண்ணினான் யதுநந்தன்.
யதுநந்தன் தன் தலையை மறுப்பாக அசைத்து, அவள் கன்னங்களை தன் கைகளால் பிடித்து, “கோபம் இல்லை. வருத்தம். என் ராதாவிற்கு என்னை விடத் தனிமை ரொம்ப பிடிச்சிருக்கோன்னு வருத்தம். இந்த உலகத்தில் நமக்கு எது இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. நான் உனக்காக இருக்கிறேன். அதை மனசில வச்சுக்கோ.” என்று கூறி அங்கிருந்து வேகமாகச் சென்றான்.
அவன் செல்லும் திசையைப் புன்னகையோடு பார்த்தபடி நின்றாள் ராதா. அந்தப் புன்னகையின் பொருள்! யதுநந்தனின் புரிதலா? இல்லை அவன் அவள் மேல் கொண்ட அன்பா?
குளித்து உடை மாற்றி, யதுநந்தன் அலுவலகத்துக்குத் தயாராக, ராதா பள்ளி கூடத்திற்குக் கிளம்பினாள்.
ராதாவின் முகத்தைப் பார்த்த, யதுநந்தனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘ஒருவேளைக் கோபமாக இருப்பாளோ?’ என்ற எண்ணம் தோன்ற, “ராதா.” என்று மென்மையாக அழைத்தான்.
“சொல்லுங்க.” என்று ராதா கூற, “நாம இன்னைக்கு ரோபோட் 2.0 படத்துக்கு போறோம். மத்தியானம், நீ ஸ்கூல் இருந்து சீக்கிரம் கிளம்பத் தயாரா இரு.” என்று யதுநந்தன் கூறினான்.
“என்னை நீங்க சமாதானப்படுத்த வேண்டாம்.” என்று ராதா மிடுக்காகக் கூறினாள்.
“யாரும் யாரையும் சமாதானம் செய்யலை. நாம இன்னைக்கு படத்துக்கு போறோம்.” என்று யதுநந்தனும் அதே மிடுக்கோடு கூறினான்.
“நான் வரலை.” என்று ராதா அழுத்தமாகக் கூறிக்கொண்டே அங்கிருந்து நகன்றாள்.
அவள் கைகளை பிடித்து நிறுத்தி, “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையாகக் கேட்டான் யதுநந்தன்.
“ம்… அதில் ஐஸ்வர்யா ராய் நடி க்களைல… அதனால் தான்…” என்று ராதா கூற, அவளைச் சந்தேக கண்களோடு பார்த்தான் யதுநந்தன்.
யதுநந்தனின் சிந்தனை போக்கை தடுக்கும் விதமாக, அவன் மார்பில் சாய்ந்து, “அவங்க ஏன் நடிக்கலை தெரியுமா?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள் ராதா.
“நீங்க, நியூயார்க் போன பொழுது, அந்த மெழுகு சிலை மியூசியமில் அவங்க சிலை பக்கத்தில் நின்னு போட்டோ எடுக்காமல், என் மனைவி ராதா பக்கத்தில் மட்டும் தான் நீங்க நிற்ப்பேன்னு சொன்னது தான் காரணம்.” என்று கொஞ்சும் குரலில் கூறினாள் ராதா.
ராதாவின் தோள் தொட்டு அவளை நேராக நிறுத்தி, அவள் கண்களை பார்த்தான் யதுநந்தன்.
அவள் கண்களில் பதட்டம் தெரிய, “நமக்குக் கல்யாணம் ஆகி, எத்தனை வருஷம் ஆகுது ராதா?” என்று நிதானமாகக் கேட்டான் யதுநந்தன்.
“நான்கு.” என்று தன் விரல்களைக் காட்டினாள் ராதா. தலை அசைத்து, “நீ என்ன பேசுவ? எப்படி பேசுவன்னு… எல்லாம் எனக்குத் தெரியும். அதனால் இப்படி மொக்கைக் கதை சொல்லாம, உனக்கு என்ன பிரச்சனைன்னு உண்மையைச் சொல்லு.” என்று அழுத்தமாகக் கேட்டான் யதுநந்தன்.
“சாயங்காலம் கோவிலுக்கு போகிறேன்.” என்று ராதா தலை குனிந்து கூற, “எதுக்கு?” என்று ஒற்றை வார்த்தையாக தன் கேள்வியை கேட்டான் யதுநந்தன்.
ராதா பரிகாரத்தை கூற, அவளை அமைதியாகப் பார்த்தான் யதுநந்தன்.
அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து, அவள் முன் மண்டியிட்டான் யதுநந்தன்.
“நான் இதை இத்தனை வருடத்தில், பல முறை கூறி இருந்தாலும், திரும்ப சொல்றேன் கேட்டுக்கோ.” என்று மெதுவாகக் கூறினான் யதுநந்தன்.
“என் அம்மா, அப்பா இரண்டு பேருமே உன்னை மாதிரி தான். அவர்களால் வளர்க்கப்பட்டவன் நான். நானும் என் தாய், தந்தை இருக்கும் வரை அப்படி தான் இருந்தேன். அவங்க இறந்த பிறகு, எல்லார் மேலையும்… எல்லா விஷயத்திலும் எனக்கு ஒரு வெறுப்பு. சலிப்பு… நான் வழி தடுமாறியதிற்கு அதுவும் ஒரு காரணம். ஒழுங்கு, நியாயம் பேசுறவங்க, நிறையப் பேர் அதைப் பேச்சில் மட்டும் தான் வச்சிருந்தாங்க. செயலில் இல்லை.” என்று வெறுப்பாகக் கூறினான் யதுநந்தன்.
ராதா அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, “ஆனால், பல வருஷத்திற்கு அப்புறம், நான் உன்னைப் பார்த்தேன். சொல்லும் செயலும் ஒன்றாக. என் அம்மா என்னை வளர்க்க நினைத்த விதமாக… அது தான் என்னை உன் பக்கம் ஈர்த்திருக்கணும். நான் உனக்காக எதையும் விட்டுக் கொடுக்கலை… விரும்பி வாழறேன் ராதும்மா.” என்று கண்களில் காதல் பொங்க கூறினான் யதுநந்தன்.
“எங்க அம்மா, அப்பா எப்ப இறந்தாங்க தெரியுமா? ஒரு கோவிலுக்கு போயிட்டு வரும் பொழுது தான்.” என்று கூறும் பொழுது, அவன் கண்கள் கலங்கியது.
இவை அனைத்தும் ராதாவிற்கு தெரிந்திருந்தாலும், யதுநந்தன் என்றாவது ஒரு முறை தான் இப்படி மனம்விட்டுப் பேசுவான் என அறிந்து, முதல் முறை கேட்பது போல் அமைதியாக அமர்ந்திருந்தாள் ராதா.
“எது நடக்கணுமோ… அது நடக்கும் ராதா.” என்று அவன் பொறுமையாக கூற, ராதா சம்மதமாக தலை அசைத்தாள்.
“நீங்களும் நேத்து ராத்திரி வருத்தப்படீங்க.” என்று ராதா அவன் தலை கோதிக் கூற, “நான் வருத்தப்பட்டது உண்மை தான். எனக்கு வேறு எதைப் பற்றியும் கவலை இல்லை. உன்னைப் பற்றி மட்டும் தான் கவலை.” என்று கூறினான் யதுநந்தன்.
அங்கிருந்து எழுந்த ராதா, “எனக்கென்ன, நான் நல்லா தானே இருக்கேன்.” என்று கூறி அறையைவிட்டு வெளியே செல்ல ராதா எத்தனிக்க அவளை கை பிடித்து நிறுத்தினான் யதுநந்தன்.
அவளை தன் கைவளைவிற்குள் நிறுத்தி, “நம்ம உலகத்தில், நீ பாதி… நான் பாதி ராதா. இவ்வளவு நான் என் ஏற்றம் இறக்கம் இரண்டிலும் நீ துணை நின்ன… நானும் அப்படி தான். ஆனால் சந்தோஷமாக இருந்தோம். ஏதோ இப்பொழுது நமக்குக் கஷ்ட காலமாக இருக்கலாம். இந்த நிலை மாறும்.” என்று ராதாவிற்கு சமாதானம் சொல்வது போல் தனக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டான் யதுநந்தன்.
“மதியானம், படத்துக்கு போறோம் ரெடியா இரு.” என்று யதுநந்தன் கூற, ராதா மௌனமாகத் தலை அசைத்தாள்.
இருவரும் உணவு மேஜை அருகே செல்ல, ராதா அவனுக்குப் பரிமாறினாள்.
“நீயும் வா ராதா. இல்லை… நீங்க சாப்பிடுங்க… நான் கிளம்ப இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அப்புறம் சாப்பிடுறேன்.” என்று ராதா கூற, சம்மதமாகத் தலை அசைத்து தன் உணவை முடித்துக் கொண்டு கிளம்பினான் யதுநந்தன்.
ராதாவும் பள்ளிக்குச் செல்ல, மதிய உணவுக்கு பின், சில வேலைகளை முடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தான் யதுநந்தன்.
இருவரும் திரையரங்கு சென்றனர்.
2.0 படம் ஆரம்பிக்க, கண்ணாடி அணிந்து இருவரும் படத்தில் மூழ்கினர். ராதா அனைத்துக் கவலைகளையும் மறந்து படத்தில் மூழ்கினாள்.
இடைவேளையில் இருவரும் வெளியே வர, “ராதா, ஐஸ் கிரீம் சாப்பிடறியா?” என்று யதுநந்தன் கேட்க, ராதா வேகமாக மறுத்தாள்.
யதுநந்தன், பாப் கார்ன் வாங்கி வர, “வேறு என்ன வேணும் ராதா?” என்று அவன் அக்கறையாகக் கேட்க, அவள் எதுவும் வேண்டாம் என்று மறுத்தாள்.
“ஏன் ராதா எதுவுமே வேண்டாமுன்னு சொல்ற?” என்று யதுநந்தன் ராதாவின் முகம் பார்த்துக் கேட்க, “நான் இன்னைக்கு விரதம்.” என்று தயக்கத்தோடு கூறினாள்.
யதுநந்தன் அவளைக் கோபமாக முறைத்தான். “அப்படின்னா காலையில் அதனால் தான் நீ என் கூப்பிட சாப்பிடலை. இதை என்கிட்டே சொல்லவும் இல்லை. அப்படி தானே?” என்று யதுநந்தன் கர்ஜிக்கும் குரலில் கேட்டான்.
ராதா தன் தலையை மேலும் கீழும் அசைக்க, “இப்ப பாப் கார்ன் சாப்பிட மாட்ட?” என்று அவன் கேள்வியாக நிறுத்த, ஆமென்று தலை அசைத்தாள்.
யதுநந்தன் தான் வாங்கிய பாப் கார்ன் யை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வழக்கத்தை விட வேகமாக நடந்தான்.
அவன் வேகத்தைத் தாக்கு பிடிக்க முடியாமல் அவன் பின் ஓடினாள் ராதா.
அவன் கைகளை பிடித்து, அவனோடு ராதா நடக்க, யதுநந்தனின் கைகள் இறுகியது.
“ப்ளீஸ் கோபப்படாதீங்க.” என்று ராதா செய்ய ஆரம்பித்த சமாதானம் வீண் முயற்சியாகத் தோற்றுக் கொண்டிருந்தது.
ராதா அவனிடம் சமாதானம் பேச, அப்பொழுது படம் ஆரம்பித்தது. “ராதா… பேசாமல் படம் பார்.” என்று அவன் கண்டிப்பாக கோபத்தோடு கூற ராதா மௌனமாகப் படம் பார்த்தாள்.
அப்பொழுது படத்தில் குட்டி ரோபோட் வர, “ரோபோட்க்கு கூட குட்டி வருது… ஏன் நமக்கு வரலை?” என்று அவனின் கோபத்தை மறந்து அவனிடமே பரிதாபமாக சந்தேகம் கேட்டாள் ராதா.
அவள் கேட்ட கேள்வியில், யதுநந்தனின் கோபம் சுக்கு நூறாக உடைந்து. ‘நான் இவளை எப்படி சமாதானம் செய்வேன்?’ என்று கேள்வி அவன் முன் பூதாகரமாய் எழுந்தது.
ராதவை எண்ணி யதுநந்தனின் கண்கள் கலங்கியது.




