arrow_back
50:50 அத்தியாயம் 17
50:50 chevron_right பகுதி 17 / 25

அத்தியாயம் 17

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  17

 யதுநந்தன் கண்கள் கலங்க, அவன் கண்ணீரை அந்த த்ரீ-டி  கண்ணாடி மறைத்துக் கொண்டது.

 அவர்கள் படம் முடிந்து வெளியே வர, ராதா அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி நடந்து வந்தாள். கோபம் மறைந்து வருத்தம் குடி கொண்டிருந்தது.

 இருவரும் காரில் ஏற, ‘அட லூசு ராதா, நீ இப்படி சோக கீதம் வாசித்தால், அவங்க இப்படி தான் இருப்பாங்க.’ என்று தனக்கு தானே கூறி கொண்டாள்.

 யதுநந்தன் சாலையை பார்த்து அமைதியாக வண்டியைச் செலுத்த, ராதா அவன் முகம் பார்த்து, “எனக்கு இந்த மாதிரி குட்டி ரோபோட் வாங்கி குடுங்க.” என்று தீவிரமாக கூறினாள்.

 யதுநந்தன் ராதாவை திரும்பிப் பார்க்க, அவள் கண்களில் குறும்போடு, “அந்த ரோபோ நான் சொல்வதை எல்லாம் கேட்கும். சிலரை மாதிரி இருக்காது.” என்று சாலையை பார்த்தபடி கூறினாள்.

“நீ சொல்றதெல்லாம் செய்றதுக்கு, என்னை விட, ஒரு சிறப்பான ரோபோ உனக்குக் கிடைக்காது ராதா.” என்று யதுநந்தன் புன்னகையோடு கூறினான்.

 அவன் புன்னகையை பார்த்து, “என்ன சிரிப்பு? செய்றதையும் செய்திட்டு, இப்படி தான் மொத்த பாப் கார்ன்  யையும் குப்பைத் தொட்டியில் போடுவீங்களா? எத்தனைப் பேர் இந்த உலகத்தில் சாப்பாடு இல்லாமல் கஷ்ட படுறாங்க… பணம் இருக்கும் திமிர்.” என்று ராதா கோபமாக கூறினாள்.

“ஓய்… என்ன மனுஷன் ஏதோ அமைதியாக வந்தால், இது தான் சாக்குன்னு திட்டுற… தப்பு செய்தவர்களை விட, அதற்குக் காரணம் ஆனவர்களுக்குத் தான் தண்டனை அதிகம். அப்படிப் பார்த்தால், உன்னைத் தான் திட்டனும்.” என்று யதுநந்தன் வண்டியைத் திருப்பியபடியே கூறினான்.

“ஆமாம்… நான் தான் உங்களை பாப் கார்ன்  வாங்கிக் குப்பையில் போடுங்கன்னு சொன்னேன். எனக்கு வேண்டுதல் பாருங்க.” என்று ராதா முழுதாக அவன் பக்கம் திரும்பி, சண்டைக்குத் தயாரானாள்.

“அட… இப்படி கூட வேண்டுதல் வைத்துக் கொள்ளலாமா ராதா? வெரி இன்டெரெஸ்ட்டிங்… இந்த மாதிரி வேண்டுதல் வைத்துக்கோ. நாம் ஈஸியா செய்திறலாம்.” என்று யதுநந்தன் லகுவாக கூறினான்.

 அப்பொழுது அவன் செல்லும் சாலையைக் கவனித்த ராதா, “வீட்டுக்குப் போகாமல் எங்க போறீங்க?” என்று பதட்டமாக கேட்டாள்.

“காலையில் இருந்து விரதம் இருந்திருக்க… உன் விருப்பப்படி கோவிலுக்கு போவோம். ஆனால், இது தான் முதலும், கடைசியும்… இனி இப்படிச் செய்யக் கூடாது.” என்று கண்டிப்போடு கூறினான் யதுநந்தன்.

 ராதா சிரித்த முகமாகத் தலை அசைக்க, இருவரும் கோவிலுக்கு சென்றனர்.

 ராதா அந்தக் கோவிலில் அவளுக்கான வேண்டுதலைச் செய்ய, யதுநந்தன் அவளுக்காகக் காத்திருந்தான்.

ராதா வேண்டுதலை முடித்து, அவன் அருகே வந்தமர்ந்தாள்.

 ‘கடவுள்… என்பது நமக்கு மேலே இருக்கும் சக்தி. நாம் எல்லாருக்கும் நல்லது செய்தால் நமக்கு நல்லது செய்யும். தப்பு செய்தால் தண்டனைக் கொடுக்கும். நாம யாருக்காவது பயப்படணும் இல்லையா? அதுக்கு தான் சாமி கும்பிடுறோம். மற்றபடி எந்த சாமியும் நம்ம கிட்ட லஞ்சம் கேட்பதில்லை.’ என்று ராதா முன்பு கூறியது நினைவு வர யதுநந்தன் அவளை மௌனமாகப் பார்த்தான்.

 யதுநந்தனின் எண்ண ஓட்டத்தை அவன் கண்கள் வெளிப்படையாகக் கூற, “கடவுள், கேட்கலைன்னாலும், மனிதர்கள் மன நிம்மதிக்காகவும், ஒரு பற்றுதலுக்காகவும் வேண்டுதல்கள் செய்வது உண்டு.” என்று தரையை பார்த்தபடி கூறினாள் ராதா.

“மன நிம்மதி கிடைச்சிருச்சா ராதும்மா?” என்று அவள் முகம் பார்த்து கேட்க, “ஒரு புது நம்பிக்கை கூட வந்திருக்கு.” என்று சிரித்த முகமாகக் கூறினாள் ராதா.

“நீ சந்தோஷமா இருந்தா போதும். வேற என்ன வேணும்?” என்று புன்னகையோடு யதுநந்தன் கூற, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு காரை நோக்கிச் சென்றனர்.

 வீட்டிற்குள் சென்று ஹாலில் இருந்த சோபாவில் சோர்வாக சாய்ந்தமர்ந்தாள் ராதா.

 ராதா மறைக்க நினைத்த வேதனைகள் அவள் முகத்தில் வெளிப்படையாகத் தெரிய, அவள் பாதங்களை பதட்டத்தோடு பார்த்தான் யதுநந்தன்.

 ராதாவின் பாதங்களில் இருந்த காயங்களை பார்த்து யதுநந்தன் மனம் நொடிந்து போக, தன் பாதங்களை மறைக்க முயற்சித்தாள் ராதா.

 ராதாவை பார்த்து கோபமாக முறைத்த யதுநந்தன், அதே கோபத்தோடு அவளை கைகளில் ஏந்தி அவளை அவர்கள் அறைக்கு தூக்கி சென்றான்.

 ராதா மறுத்தும் யதுநந்தன் கேட்கவில்லை. ‘விதி என்னைத் துரத்தினாலும், சோதனைகள் என்னைச் சூழ்ந்தாலும், நீங்கள் என் அருகில் இருக்கும் வரை, ராதா சந்தோஷமாக இருப்பாள்.’ என்றெண்ணி யதுநந்தனின் முகத்தைக் காதல் பொங்கப் பார்த்தாள் ராதா.

 ராதாவை சாய்வாக மெத்தையில் அமர வைத்து, யதுநந்தன் விலகிச் செல்ல அவனைக் கைபிடித்து நிறுத்தினாள் ராதா.

 யதுநந்தன் அவளைக் கோபமாக முறைக்க, “உங்க ஊரில் இப்படி தான் கோபப்படுவாங்களா?” என்று கண்ணில் குறும்போடு சந்தேகம் கேட்டாள் ராதா.

“பேசாத. உன் மேல் செம கடுப்பில் இருக்கேன்.” என்று யதுநந்தன் கடுப்பாக கூற, ராதா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“இப்ப எதுக்கு சிரிக்கிற?” என்று யதுநந்தன் குழந்தை போல் முகத்தை சுளித்துக் கொண்டு கேட்க, அவனை அவள் அருகில் அமர வைத்து, “உங்க கடுப்பும், கோபமும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று கண் சிமிட்டிக் கூறினாள் ராதா.

 ராதாவின் முகத்தில் மீண்ட சந்தோசம், யதுநந்தனை தொற்றிக் கொண்டாலும், அதை மறைத்து அவளைக் கோபமாக முறைத்தான் யதுநந்தன்.

“அப்புறம் முறைச்சிக்கோங்க. நான் விரதமுன்னு காலையில் இருந்து சாப்பிடலை. கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடலாமுன்னு பார்த்தா, கோபம் வந்து நீங்க என்னை இங்க தூக்கிட்டு வந்து விட்டுடீங்க. நான் இப்ப எப்படி சாப்பிடறது?” என்று ராதா பொய் கோபத்தோடு கேட்டாள்.

அவள் கேட்ட விதத்தில் யதுநந்தன் பெருங்குரலில் சிரித்தான் யதுநந்தன்.

“இங்க வரவைத்துச் சாப்பிடுவோம்.” என்று கூறி, இருவரும் பேசி சிரித்தபடி உணவை முடித்துக் கொண்டனர்.

 ராதா உறங்கிவிட, அவள் பாதங்களில் ஏற்பட்ட காயத்தை வருடிக் கொடுத்தான் யதுநந்தன். அதைப் பார்த்த யதுநந்தனின் கண்கள் கலங்கியது.

‘இவள் எதற்காக இப்படிச் செய்கிறாள். சொன்னாலும் கேட்க மாட்டாள்.’ என்று எண்ணினான் யதுநந்தன்.

அவன் கண்ணில் இருந்து வழிந்த நீர்த்துளி அவள் பெருவிரலை தொட, ராதா பதறி எழுந்தாள்.

“என்னதிது?” என்று ராதா பதட்டமாக கேட்க, யதுநந்தன் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.

“ப்ளீஸ்… ஏன் இப்படி இருக்கீங்க? எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.” என்று ராதா சிடுசிடுப்பாக கூறினாள்.

“ராதா… இனி இப்படி எல்லாம் செய்யாத ராதா. எனக்கும் தான் இது சுத்தமா பிடிக்கவில்லை. நமக்குக் குழந்தை இல்லைனா கூடப் பரவாயில்லை. ஆனால், நீ இப்படி எல்லாம் வேண்டுதல் செய்றது எனக்குச் சுத்தமா பிடிக்கலை.” என்று யதுநந்தன் சோர்வாக அழுத்தமாக கூறினான்.

 ராதா கலங்கும் பொழுது, யதுநந்தன் சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொள்வது போல, ராதா இப்பொழுது சூழ்நிலையை அவள் கையில் எடுத்துக் கொண்டாள்.

“எந்த வருத்தமும் வேண்டாம்… எத்தனை வருஷம் கழித்து குழந்தை வருதோ அப்ப வரட்டும். நான் தான் பிரார்த்தனையை முடித்துவிட்டேனே!” என்று ராதா தெளிவான குரலில் கூற, யதுநந்தன் சிரித்த முகமாகச் சம்மதமாக தலை அசைத்தான்.

 ராதா, அப்பொழுது மீன் தொட்டியை பார்க்க, “அழகிய மீன்களே! தாங்களும் வருந்த வேண்டாம். என் வேண்டுதலின் பலனால் உங்களுக்கும் விரைவில் மீன் குட்டி வரும்.” என்று ராதா மீன்களை ஆசிர்வதிக்க, அந்த மீன்கள் புன்னகையோடு தன் உடலை அசைத்து அசைத்து வேகமாக நீந்தியது.

 ‘அடுத்த மாசம் தான் அப்பாயிண்ட்மெண்ட். அது வரை ராதா இப்படியே சோர்வடையாமல் இருக்க வேண்டும்.’ என்ற எண்ணத்தோடு யதுநந்தன் உறங்கினான்.

 

பத்து நாள் கழித்து,

 அன்று பள்ளி விடுமுறை.

 யதுநந்தன் தன் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்க, அவன் மொபைல் ஒலித்தது.

 தன் கோப்புகளை  பார்த்தபடி, அவன் மொபைலை ஆன் செய்தான்.

“ராதும்மா… சொல்லுமா…” என்று அன்பாகக் கூறினேன் யதுநந்தன்.

“நீங்க இப்ப வீட்டுக்கு வரணும்.” என்று ராதா ஆணையிட, “ராதா… இது என்ன குழந்தை மாதிரி… எனக்கு இன்னும் அரை மணி நேரத்தில் மீட்டிங் இருக்கு.” என்று அவன் பொறுமையாக கூறினான்.

“அப்படினா! வர முடியாதா?” என்று ராதா கொஞ்சும் குரலில் கேட்க, அவள் வேண்டுதலை நிராகரிக்க முடியாமல், “சரி வர முயற்சிக்கிறேன்.” என்று கூறி தன் பேச்சை முடித்தான் யதுநந்தன்.

 ‘இப்ப எதுக்கு கூப்பிடறா? இப்படி எல்லாம் வரச் சொல்லும் ஆளே கிடையாதே. இப்ப ராதா ரொம்ப மாறிட்டா…’ என்ற சிந்தனையோடு தன் வேலைகளைத் தொடர்ந்தான் யதுநந்தன்.

 ராதா அவன் வரவிற்காக வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அவளை ஏமாற்றாமல் சிறிது நேரம் கழித்து, வீட்டிற்கு வந்தான் யதுநந்தன்.

 ராதாவின் முகத்தில் அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 ‘இல்லை… ராதா வேண்டுமென்றே தன் கண்களைக் காட்ட மறுக்கிறாள்.’ என்றெண்ணினான் யதுநந்தன்.

 ராதா, அவனிடம் ஒரு கிபிட் பாக்ஸை  நீட்டினாள்.

“என்ன?” என்று யதுநந்தன் புருவம் உயர்த்த, அதைப் பிரித்து பார்க்கும் படி செய்கை காட்டினாள் ராதா.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

அத்தியாயம்  18 ராதா தன்னை மறைக்க முயற்சித்தாலும், யதுநந்தன் அவளைக் கண்டுகொண்டான். அவள் கூறவிருக்கும் விஷயத்தையும் கணித்து விட்டான். ஆனால் அவளிடம் கேட்கவில்லை. ‘கேட்டு இல்லை என்று ஆகிவிட்டால்… ராதா எப்படித் தாங்குவாள்’ என்ற எண்ணம் தோன்ற மௌனமாக அந்த கிப்டை பெற்றுக் கொண்டான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்