arrow_back
50:50 அத்தியாயம் 18
50:50 chevron_right பகுதி 18 / 25

அத்தியாயம் 18

visibility 542
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  18

 ராதா தன்னை மறைக்க முயற்சித்தாலும், யதுநந்தன் அவளைக் கண்டுகொண்டான். அவள் கூறவிருக்கும் விஷயத்தையும் கணித்து விட்டான். ஆனால் அவளிடம் கேட்கவில்லை. ‘கேட்டு இல்லை என்று ஆகிவிட்டால்… ராதா எப்படித் தாங்குவாள்’ என்ற எண்ணம் தோன்ற மௌனமாக அந்த கிப்டை பெற்றுக் கொண்டான் யதுநந்தன்.

 யதுநந்தன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, ராதா கொடுத்த கிபிட் பாக்ஸை  நிதானமாகப் பிரித்தான். அவன் நிதானமாக இருக்க முயற்சித்தாலும் யதுநந்தனின் கைகள் நடுங்கியது. அவன் பதட்டம் ஆனந்தமாக மாறும் தருணத்திற்காக ராதா அவனை தன் கண்களால் படம்பிடித்துக் கொண்டிருந்தாள்.

 யதுநந்தன் அந்த கிபிட் பாக்ஸை  திறக்க, அவன் கண்கள் விரிந்தது. அதில் இரண்டு பெரிய காபி கோப்பையும்… அதன் இடையில் ஒரு சிறிய காபி கோப்பையும் இருந்தது.

 யதுநந்தன் எழுந்து நின்று, ராதாவை பார்க்க… அவள் தன் வெட்கத்தை மறைக்க, தன் ஆனந்தத்தை அவனதாக மாற்றி அவன் மார்பில் சரண் புகுந்தாள்.

 ராதாவின் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, முதல் முறையாக அதற்காக மகிழ்ச்சி அடைந்தான் யதுநந்தன்.

 யதுநந்தன் ராதாவை நேராக நிறுத்தி, அவளை உணர்ச்சி பொங்கப் பார்த்தான்.

 இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்கள் பார்வை பரிமாறிக் கொண்ட செய்திகள் ஏராளம்.

செய்தி அறிந்து ராதாவின் குடும்பத்தினர் சூழ, யதுநந்தனின் இல்லம் விழாக் கோலம் பூண்டது போல் காட்சி அளித்தது.

 ராதாவின் தாய் மீனாட்சியின் பாதங்கள் தரையில் நிற்கவில்லை. அவர் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். அவள் தந்தை லோகநாதனின் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி தாண்டவமாடியது.

 சித்ரா ராதாவுக்கு பல அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருந்தாள்.

“ராதா… கொஞ்ச நாள் வீட்டுக்கு வா… அங்க ரெஸ்ட் எடுத்திட்டு வரலாம்.” என்று மீனாட்சி ஆசையாக அழைத்தார்.

“ஆமா ராதா. அம்மா சொல்றது சரி… கொஞ்ச நாள் வீட்டுக்கு வா…” என்று ஸ்ரீதர் அழைக்க, அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தார் லோகநாதன்.

“இல்லை அண்ணா… எனக்கு இங்க என்ன பெரிய வேலை. நான் இங்க ரெஸ்டில் தான் இருப்பேன். கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் வரேன்.” என்று ராதா யதுநந்தனின் முகம் பார்த்து கூறினாள்.

“மாப்பிள்ளை… நீங்க சொல்லுங்க… அப்ப தான் கேட்பா.” என்று மீனாட்சி கூற, “அத்தை… அது வந்து… நீங்க இங்க இருங்களேன்.” என்று பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்தவன் போல் கூறினான் யதுநந்தன்.

 ராதா, “க்ளுக்…” என்று சிரித்தாள்.

யதுநந்தன் அவளை முறைக்க, ராதா அவனைப் பார்த்து கண் அடித்தாள்.

 ‘இத்தனை நாள் இந்த ராதா எங்கு இருந்தாள்?’ என்று எண்ணியவாறு அவளை ஆழமாகப் பார்த்தான்.

 ராதா கேள்வியாக புருவம் உயர்த்த, யதுநந்தன் மறுப்பாகத் தலை அசைத்தான்.

 ராதா படி ஏற வேண்டாம் என்று ஒரு மனதாக முடிவாக, அவர்கள் அறை இடம் மாற்றப்பட்டது. மீன் தொட்டி… கூஜா என அனைத்தும் தான்!

ராதாவின் தாய், அனைவரிடமும் மொபைலில் செய்தியைத் தெரிவிக்க, “மீனாட்சி, கொஞ்சம் பொறுமையா இரு. இரண்டு மாசம் போகட்டும். அப்புறம் எல்லார் கிட்டயும் சொல்லிக்கலாம்.” என்று நிதானமாகக் கூறினார் லோகாந்தன்.

 அவர் கூறுவதில் நியாயம் இருக்க, மீனாட்சி அமைதியாக இருக்க, முயற்சித்தார்.

‘இதற்கு முன்பே ஏற்பாடு செய்த, அதே அப்பாயிண்ட்மெண்ட்இல், மருத்துவரைச் சந்தித்துவிடலாம்’ என்று முடிவு செய்தனர் ராதாவும், யதுநந்தனும்.

 ராதாவை பல முறை அழைத்து அவள் வர மறுத்த காரணத்தினால், அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களுக்குப் பல அறிவுரை வழங்கிவிட்டு அன்று மாலை அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.

 அன்றிரவு, அவர்கள் அறையில் ராதா, மீன் தொட்டியை பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். இரண்டு மீன்கள் வேகமாக நீந்திக் கொண்டிருக்க, “ஒய்! மீன்களே… கவலையே படாதீங்க. உங்களுக்கும் விரைவில் மீன் குட்டி வரும்.” என்று நம்பிக்கை கூறினாள் ராதா.

 யதுநந்தன் அவள் அருகே நின்று, சிரித்த முகமாக அந்த மீன்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது.” என்று அவனை வம்பிழுத்தாள் ராதா.

 யதுநந்தன் அவளை ரசனையோடு பார்த்து, “தேங்க்ஸ் ராதா…” என்று உணர்ச்சி பொங்க கூறினான்.

“என்னன்னவோ சொன்னீங்க. இப்ப தேங்க்ஸ் சொல்றீங்க?” என்று ராதா நக்கல் தொனியில் கேள்வியாக நிறுத்த, யதுநந்தன் புன்னகைத்தான்.

“இல்லை என்றால் வலி தான். ஆனால் அதை தாண்டி உன் வருத்தம் என்னை ரொம்ப பாதிச்சிச்சிருச்சு.” என்று உடைந்த குரலில் கூறினான் யதுநந்தன்.

“நீ சந்தோஷமாக இருந்தால், என்னால் எதையும் ஜெயிக்க முடியும் ராதா.” என்று உணர்ச்சி பொங்க கூறினான்.

“வயிறு பெரிதாக தெரியுதா?” என்று ராதா குழந்தை போல் சந்தேகம் கேட்க, “நாற்பது நாளில் எதுவும் தெரியாதுன்னு அத்தை சொன்னாங்க.” என்று அவள் சந்தேகத்தை போக்கினான் யதுநந்தன்.

“ஓ!” என்றாள் ராதா ஏமாற்றமாக…

“ராதா, நீ என் கூடவே இருக்கனும்.” என்று யதுநந்தன் அழுத்தமாகக் கூற, அவன் தலை கோதி சம்மதமாக தலை அசைத்தாள் ராதா.

“நீ ஏன் இன்னைக்கு அத்தை கூட போகலை” என்று யதுநந்தன் சிறு பிள்ளை போல் வினவ,”உங்களை விட்டுவிட்டு எப்படி போவது? அது தான் போகலை.” என்று இயல்பாகக் கூறினாள் ராதா.

“சரி… ராதா… சும்மா பேசிட்டு இருக்க வேண்டாம். ரெஸ்ட் எடு.” என்று யதுநந்தன் அக்கறையாகக் கூற, ராதா சம்மதமாக தலை அசைத்தாள்.

 யதுநந்தனின் கவனிப்பில், அவர்கள் நாட்கள் இனிதாக நகர்ந்தது.

 ராதாவின் ஐம்பதாவது நாளில் அவர்கள் மருத்துவமனை செல்ல, ராதா கருவுற்றிருப்பதை மருத்துவரும் ஊர்ஜிதம் செய்தார்.

 அவர்கள் மருத்துவமனையிலிருந்து, இனிப்புகள் வாங்கி கொண்டு நேராக ராதாவின் வீட்டிற்குச் சென்றனர்.

 அப்பொழுது அங்கு சித்ராவின் தாய் அமர்ந்திருந்தார். “அட… வாடியம்மா ராதா. எவ்வளவு வருஷம் கழித்து நல்ல செய்தி சொல்லிருக்க. சஞ்சனா பெரிய பெண் ஆகும் பொழுது நீ தான் தண்ணீர் ஊத்தணும். பிள்ளை இல்லாத உன்னை எப்படி தண்ணீர் ஊத்த சொல்றதுன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன். நல்லவேளை, நீ எனக்கு அப்படி ஒரு தர்ம சங்கடத்தை கொடுக்கலை.” என்று பெருமிதமாக சித்ராவின் தாயார் மேடை ரகசியம் பேச, ஸ்ரீதர் சித்ராவை முறைத்தான்.

“அம்மா… நேரமாச்சு நீ கிளம்பு.” என்று சித்ரா தன் தாயிடம் மெதுவாகக் கூறினாள்.

 ராதாவின் வீட்டில் யாரும் சித்ராவின் தாய் பேசுவதைக் கேட்கும் நிலையில் இல்லை. மீனாட்சி இன்றும் சந்தோஷத்தில் தான் இருந்தார்.

 மருத்துவர் கூறிவிட்டதால், இப்பொழுது மீனாட்சி தன் சொந்தபந்தங்களிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

“ஐந்தாம் மாதத்தில் நல்ல நாள் பாருங்க. அறிபழம் வைக்க வேண்டும். ஏழாம் மாதத்தில் நல்ல நாள் பாருங்க வளைகாப்பு வைத்து ராதாவை நம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்.” என்று ராதாவின் தாய் மீனாட்சி கூற, யதுநந்தன் மறுப்பு தெரிவித்தான்.

“வளைகாப்பு…, ஒன்பதாவது மாதம் வைங்க…” என்று அழுத்தமாக யதுநந்தன் கூற, அவை அனைத்தையும் அமைதியாக அழகான புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.

“பொறுமை… பொறுமை… அதற்கு இன்னும் நாள் இருக்கு மெதுவாக முடிவு செய்வோம்.” என்று சமாதானம் செய்தார் லோகநாதன்.

“அப்பா, சொல்வது தான் சரி.” என்று ஸ்ரீதர் கூற, அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் ராதா.

 ஐம்பது நாள் ஆகிவிட்டதால் பள்ளிக்கு செல்வதாக ராதா கூற, சில எதிர்ப்புகள் எழுந்தாலும், அவள் ஆசைக்காக அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

 அவர்களிடம் சம்மதம் பெற்று, இருவரும் அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினர்.

ராதா தூங்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருக்க, “இல்லாத மூளையை ஏன் இப்படிக் கசக்கி புழியனும்?” என்று யதுநந்தன் சந்தேகம் கேட்டான்.

 ராதா அவன் மீதி தலையணையை தூக்கி எறிந்தாள். அதை லாவகமாக பிடித்து, “அப்படி என்ன யோசனை ராதும்மா?” என்று அன் பாக கேட்க, “அது…” என்று தன் ஒற்றை விரலால் அவனைச் செல்லமாக மிரட்டினாள் ராதா.

 யதுநந்தன், அவளைக் குறும்போடு பார்க்க, “பையனா… பெண்ணா?” என்று தீவிரமாக கேட்டாள் ராதா.

“ஏன் ராதா பெயர் யோசிச்சிட்டு இருக்கியா?” என்று யதுநந்தன் ராதாவின் முகம் பார்த்து கேட்க, ராதா மறுப்பாகத் தலை அசைத்து, “பெயர் கூட அப்புறம் வைத்துக்கலாம். இது அதை விட முக்கியம்.” என்று யோசனையோடு கூறினாள் ராதா.

“அப்படி என்ன முக்கியம் மேடம்?” என்று யதுநந்தன் அவள் அருகே அமர்ந்து, கன்னத்தில் கைவைத்து கேட்டான்.

“பையன் என்றாள் கலெக்டர்க்கு படிக்க வைக்கணும். பெண் என்றாள் டாக்டர்க்கு படிக்க வைக்கணும். அது தான் எந்த காலேஜில் படிக்க வைத்தால் சரியா வரும்ன்னு யோசித்தேன்.” என்று ராதா கண்ணில் குறும்போடு கூறினாள்.

 யதுநந்தன் அவள் காதை திருகி, “என் குழந்தைகளை இப்படி கொடுமை படுத்தின… அப்புறம் பாரு…” என்று ராதவை மிரட்ட முயற்சித்தான்.

“இப்பவே அவங்களுக்குத் தான் முக்கியத்துவமா?” என்று ராதா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“எத்தனை குழந்தை வந்தாலும்… என் முதல் குழந்தை ராதும்மா தான்.” என்று யதுநந்தன் நெகிழ்வாக கூற, ராதா அவன் பேச்சை ரசித்தாள்.

“ஏன் இன்னும் மீன் குட்டி வரலை?” என்று ராதா தன் அடுத்த சந்தேகத்தை கேட்க, யதுநந்தன் அந்த மீன் தொட்டியை பார்த்தான்.

 அவர்கள் சுவாரசியமான பேச்சு நீண்டு கொண்டே போனது.

 ஆணாக இருந்தால் இந்தப் பெயர்… பெண்ணாக இருந்தால் அந்தப் பெயர் எனப் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போக, பல கனவுகளோடும், ஆசைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் அவர்கள் நாட்கள் இனிதாக நகர்ந்தது.

அறுபது நாட்கள் முடிந்த நிலையில் ராதா அன்று சோர்வாக காட்சி அளித்தாள்.

“ராதா… இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு.” என்று யதுநந்தன் ராதவை பார்த்து கவலை தோய்ந்த குரலில் அக்கறையாகக் கூறினான்.

மறுப்பாக தலை அசைத்து, “இல்லைங்க அப்புறம் அதுவே பழகிரும். இப்ப கிளம்பி வரேன். நீங்க எப்பவும் போல் என்னை ட்ரோப் பண்ணிருங்க.” என்று ராதா கூற, சம்மதமாகத் தலை அசைத்தான் யதுநந்தன்

 யதுநந்தன், அவளைப் பள்ளி முன் இறக்கிவிட்டு, அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான்.

 எதிரே கார் ஒன்று வேகமாக வந்தது. அப்பொழுது அதைக் கவனிக்காமல், வேனில் இருந்து இறங்கிய பள்ளி சிறுமி குறுக்கே செல்ல, அதிர்ச்சி அடைந்த ராதா வேகமாக ஓடி அந்தச் சிறுமியை அலேக்காக தூக்கி சிறுமியை மறுபக்கம் இறக்கினாள். அவள் விட்ட வேகத்தில், அந்தச் சிறுமி தடுமாறி கீழே விழுந்தாள்.

 அந்தச் சிறுமியின் கையில் ரத்தம் வழியக் குழந்தையை அழைத்துக் கொண்டு யதுநந்தனும், ராதாவும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

 குழந்தையின் பெற்றோரும் வர, யதுநந்தன், ராதா இருவரும் அங்கிருந்து கிளம்ப ராதா மருத்துவமனையில் மயங்கி விழுந்தாள்.

 ராதாவை மருத்துவமனையில் சேர்த்து, அவள் வீட்டிற்கும் தகவல் கொடுத்தான் யதுநந்தன்.

 அனைவரும் வெளியில் அவளுக்காகக் காத்திருக்க, யதுநந்தன் அருகே வந்த மருத்துவர், “ராதா நல்லா இருக்காங்க. பட் ஐ அம் சாரி…” என்று கூறினார் மருத்துவர்.

 மீனாட்சி தன் வாயை சேலையால் மறைத்துக் கொண்டு அழ, யதுநந்தன் அங்கிருந்த நாற்காலியில் அசைவின்றி அமர்ந்தான். லோகநாதன் அதிர்ச்சியில் சிலையாக நின்றார்.

 முதலில் சுதாரித்து கொண்ட, ஸ்ரீதர் மூச்சுப்பேச்சின்றி அமர்ந்த யதுநந்தனை குலுக்கினான்.

 யதுநந்தனின் நெற்றியில் வியர்வைத் துளிகள்…

 உலகமே ஸ்தம்பித்து விட்டது போன்ற உணர்வு யதுநந்தனின் முகத்தில் தெரிந்தது.

எத்தனை ஆசைகள்!

எத்தனை எதிர்பார்ப்புகள்!

 எத்தனை கனவுகள்! அத்தனையும் தகர்ந்தது போல் உணர்ந்தான் யதுநந்தன்.

 ஸ்ரீதரின் எந்தப் பேச்சும் அவன் காதில் விழவில்லை.”யது… ராதாவை பார்க்கணும்.” என்று ஸ்ரீதர் கூற,”ராதா…” இந்தச் சொல் யதுநந்தனை நனவுலகத்திற்கு அழைத்து வந்தது.

 மேலும் கீழும் தலை அசைத்து எதுவும் பேசாமல் ராதவை நோக்கிச் சென்றான் யதுநந்தன்.

 ராதா தன் தாயைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

சில நொடிகளில், தாயிடமிருந்து விலகி அமர்ந்து, தன் தலையில் அடித்துக் கொண்டு, “அம்மா… நான் பாவி… நான் பாவி… என் குழந்தையை நானே கொன்ற பாவி… அவங்க இன்னைக்கு போக வேண்டாமுன்னு சொல்லியும்…, நான் இன்னைக்கு போனது தப்பு… தப்பு… தப்பு…” என்று சுற்றுப்புறம் மறந்து கதறினாள்.

“எவ்வளவு நாள் கழித்து கிடைத்த வரம். நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும். இல்லை மாப்பிளை சொல்வதையாது கேட்டிருக்கணும்.” என்று ராதாவின் தாய் விசும்பலோடு கூற, யதுநந்தனின் கை முஷ்டி இறுகியது. அவன் கண்கள் சிவப்பேறி இழப்பைத் தாங்க முடியாத சோகம் கோபம் இரண்டையும் பிரதிபலித்தது.

பின் குறிப்பு:

 அன்பான வாசகர்களே!

 இந்தப் பகுதியை வாசிக்கும் பொழுது, உங்கள் மனதில் ஏற்பட்ட கனமான தாக்கமே, என் மனதிலும்…

இது தான் கதையின் போக்கு என்பதால்… தவிர்க்க முடியாமல், வார்த்தைகளால் வடிக்க முடியாத வேதனையோடு இந்தப் பகுதியை வடிவமைத்தேன்.

 குழந்தை பேறு… எத்தனை அழகான விஷயம்… ஆனால் இறைவன் எல்லோருக்கும் அந்தப் பாக்கியத்தை எளிதில் கொடுப்பதில்லை.

 ஏன்? இதுவே என் மனதில் தோன்றிய முதல் சந்தேகம்.

 இது தான் விதியோ?

 விதிவசத்தால், இரு வேறு குணங்கள் கொண்ட இருநெஞ்சங்கள் இணைந்தனர். குணம் வேறாக இருப்பினும், ஒருவருக்காக மற்றொருவர்… 50:50 சரிபாதியாக வாழ்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தினர். அவர்கள் இருவருக்குள் பிரிவு வரும் வாய்ப்புக்கள் பலவற்றை விதி அமைத்திருந்தாலும், இருவரும் கைகோர்த்து விதியை மதியால் வென்றனர். இருப்பினும் விதி இவர்களைத் துரத்தத்தான் செய்கிறது.

 ஆனால்… ஓர் இழப்பில் வாழ்க்கை முடிவதில்லை…

 வாழ்க்கையை இலகுவாக கையாளும் யதுநந்தனும், அதே வாழ்க்கையைத் தீவிரமாக கையாளும் ராதாவும் என்ன செய்ய போகிறார்கள்.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

அத்தியாயம்  19 ராதாவின் தாய் கூறியதை கேட்ட யதுநந்தனின் கை முஷ்டி இறுகி அவன் கண்களில் சிவப்பேறியது. ராதா ஒரு நொடி கூட இடம் கொடுக்காமல் விசும்பிக் கொண்டிருந்தாள். அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன். அவளைச் சுற்றி பலரும் பேசிக் கொண்டிருக்க, எந்த…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்