அத்தியாயம் 19
அத்தியாயம் 19
ராதாவின் தாய் கூறியதை கேட்ட யதுநந்தனின் கை முஷ்டி இறுகி அவன் கண்களில் சிவப்பேறியது. ராதா ஒரு நொடி கூட இடம் கொடுக்காமல் விசும்பிக் கொண்டிருந்தாள்.
அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன். அவளைச் சுற்றி பலரும் பேசிக் கொண்டிருக்க, எந்த குரலும் அவள் செவியை எட்டவில்லை. அவள் கண்ணில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. சுற்றுப்புறம் மறந்து, இவ்வுலகத்தையும் மறந்து பித்து பிடித்தாற் போல் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் ராதா.
ராதாவின் தலையை ஸ்ரீதர், ஆதரவாகத் தடவி கொடுக்க, “நீ கொஞ்சம் பார்த்து நடந்திருக்கணும் ராதா.” என்று சலிப்பான குரலில் கூறினாள் சித்ரா.
“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என்று யதுநந்தனின் குரல் கர்ஜனையாக ஒலித்தது.
தலை குனிந்து விசும்பிக் கொண்டிருந்த ராதா, அவன் குரலில் சுயநினைவுக்கு வந்தாள்.
‘என் நந்தனின் குரல். ஐயோ, நான் என் நந்தனுக்கு என்ன பதில் சொல்லுவேன்?’ என்ற கேள்வி மனதில் எழ, ராதாவின் உலகம் தட்டாமாலை சுற்றியது.
‘என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் கூட, என்னைச் சமாதானம் செய்யும் நந்தன், இன்று விலகி நிற்கும் காரணம் என்ன? என்னை வெறுத்து விட்டாரா?’ என்று சந்தேகம் மனதில் வர, அவனை அச்சத்தோடு பார்த்தாள் ராதா.
ராதாவின் கண்களில் தெரிந்த பயம், யதுநந்தனை சுக்கு நூறாக உடைத்தது.
‘எத்தனை கம்பீரமான ராதா! அவளைப் பார்த்து நான் அஞ்சிய நாட்கள் எத்தனை இனிமையானவை? இழப்புகளும், ஏமாற்றங்களும் மனிதர்களை இத்தனை பலவீனமாக மாற்றிவிடுமா? நான் இவளை எப்படித் தேற்றுவேன். என்னால் என் ராதாவை மீட்டு வர முடியுமா?’ இப்படியாக்கப்பட்ட கேள்விகள் அவன் மனதில் எழ, ராதாவின் அருகே செல்ல தயங்கி அவளைப் பார்த்தபடி அமைதியாக நின்றான்.
யதுநந்தனின் கர்ஜனைக்கு பின் யாரும் சிறிது நேரம் பேசவில்லை.
ராதாவின் தாய் மீனாட்சி, “டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போலாமுன்னு சொல்லிட்டாங்க. நாங்க ராதாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று யதுநந்தனை பார்த்து தயக்கமாகக் கூற, யதுநந்தன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
“வேண்டாம் அத்தை. எல்லாரும் முடிந்து போன கதையை பேசுவீங்க. என்னை விட, யாரும் ராதாவை நல்லா பார்த்துக் கொள்ள முடியாது. அவள் என்னுடன் இருக்கட்டும்.” என்று அழுத்தமாகக் கூறினான் யதுநந்தன்.
நாக்கு தானே மாற்றியும் பேசும். விரைவில் அவன் நாக்கும் மாற்றிப் பேசப் போகும் நாள் வரும் என்று அறியாமல் பேசினான் யதுநந்தன்.
“ராதாவின் விருப்பம்…” என்று சித்ரா இழுக்க, ராதா எந்தப் பேச்சிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்தாள்.
“என் விருப்பம் தான்… அவள் விருப்பமும்…” என்று உறுதியாகக் கூறினான் யதுநந்தன்.
“ராதா… நீ என்ன சொல்ற?” என்று ஸ்ரீதர் கேட்க, ராதா பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் ராதா.
“ராதா…” என்று அவள் அருகில் சென்று யதுநந்தன் அவள் தோள்களை தொட, அவன் தோள் சாய்ந்து கதறினாள் ராதா.
‘அன்பு… பொறுமை… இவை எதுவும் வேலைக்காகாது…’ என்று எண்ணிய யதுநந்தன் அவளிடம் கண்டிப்பாக பேச முயற்சித்தான்.
“ராதா. இழப்பு தான்… வருத்தம் தான்… ஆனால் பெரிய இழப்பெல்லாம் இல்லை.” என்று அழுத்தமாகக் கூறினான் யதுநந்தன்.
“சாலையில், ஓடிச் சென்று நீ அந்தக் குழந்தையை காப்பாற்றவில்லை என்றால் என் ராதா சுயநலவாதியாகி விட்டாளோ என்று நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். இழப்புகளும், சோதனைகளும் நம் சுயத்தை மாற்ற கூடாது. அது தானே சிறந்த குணம். என் ராதும்மா சிறந்தவள்.” என்று பொறுமையாக கூறினான்.
‘இவளுக்கு இத்தனை சோதனை வரும் என்று தான் ஆண்டவன் இப்படி ஒரு சிறப்பான கணவனைக் கொடுத்தான் போலும்.’ என்று தன் தங்கையைக் குறித்து எண்ணினான் ஸ்ரீதர்.
அனைவரும் அவனை அதிசயித்துப் பார்க்க, “என்னை அம்மான்னு கூப்பிட குழந்தை வராதுன்னு தெரிந்து தான்… நீங்க என்னை ராதும்மான்னு கூப்பிட்ருக்கீங்க போல…” என்று ராதா சோகமாக கூற, யதுநந்தன் அவளைக் கோபமாக முறைத்தான்.
“ராதா…” என்று யதுநந்தன் கோபமாக அழைக்க, தன் கண்களை துடைத்துக் கொண்டு, “சரி… சரி… நான் இனி அப்படிப் பேசவில்லை.” என்று அவனை சமாதானப்படுத்தும் குரலில் கூறினாள் ராதா.
“தப்பு உன் மேல் தான் ராதா. கடவுள் கொடுக்கும் பொழுது கொடுத்திருப்பார். நீ தான் வேண்டுதல், விரதம், பரிகாரமுன்னு அவரைத் தர்மசங்கடத்தில் விட்டுட்ட… அது தான் அவர் குழம்பி போய்ட்டார். இப்ப நடந்ததில் ஒரு நல்ல விஷயமும் இருக்கு. என்னனு சொல்லு?” என்று யதுநந்தன் கேள்வியாக நிறுத்தினான்.
அனைவரும் யதுநந்தனை குழப்பமாக பார்க்க, “நமக்கு எதுவும் பிரச்சனை இல்லை… நிச்சயம் குழந்தை வருமுன்னு தெரியுது.” என்று ராதா மெல்லிய புன்னகையோடு கூறினாள்.
“இது என் ராதா.” என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டினான் யதுநந்தன்.
தன் துன்பத்தை மறைத்து அவனுக்காகச் சிரித்தாள் ராதா. யதுநந்தன், தன் துன்பத்தை விழுங்கிக் கொண்டு அவளுக்காக உற்சாகமாக காட்டிக் கொண்டான்.
“பில் செட்டில் பண்ணிட்டு வரேன் ராதா.” என்று கூறி யதுநந்தன் செல்ல, அவனோடு ஸ்ரீதர் சென்றான்.
அவர்கள் வெளியே சென்ற உடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் கைகளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான் யதுநந்தன்.
யதுநந்தனின் தோள்கள் குலுங்கியது. ஸ்ரீதர் செய்வதறியாமல் அவன் தோள்களைத் தட்டி கொடுத்தான்.
யதுநந்தன் சென்ற உடன், ராதா தன் முகத்தை தலையணைக்குள் புதைத்துக் கொண்டாள்.
அவள் கண்ணீரின் வீரியத்தைத் தாங்க முடியாமல் தலையணை தவித்தது.
இழப்பு இருவரையும் பலவீனமாக மாற்றியது.
சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்ப, எதிரே வந்தார் நிரஞ்சனின் தாயார்.
அவர் ராதாவை பார்க்க, “ரொம்ப வருஷம் கழித்து உண்டாகி… அதுவும் கலைஞ்சிருச்சாமே?” என்று ராதாவிடம் அங்கலாய்க்க, ராதா அவரை மௌனமாகப் பார்த்தாள்.
“என் பையன் நிரஞ்சனுக்கு கல்யாணாம் ஆகி, ராஜா கணக்கா ஆம்புளை பிள்ளை.” என்று அவர் கூற, “ரொம்ப சந்தோசம்… பேரனையாவது உங்க மகன் மாதிரி வளர்க்காமல், நல்ல படியா வளருங்க.” என்று உணர்ச்சி இல்லாத குரலில் கூறினான் யதுநந்தன்.
அப்பொழுது யதுநந்தனை கவனித்த நிரஞ்சனின் தாயார், “இந்த பொண்ணு ராசி சரி இல்லைனு தான் அந்தக் கல்யாணத்தை நிறுத்தினேன். பாருங்க உங்க வாழ்க்கையும் பாழா போச்சு. பேசாம நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் பெண் பார்க்கறேன்.” என்று இலவச ஆலோசனை கொடுத்தார் நிரஞ்சனின் தாயார்.
“முதலில் அதை செய்ங்க… அப்புறம் ஜெயிலில் கம்பி எத்தனை என்று பார்க்க வேண்டியதிருக்கும்.” என்று அத்தனை நேரம் அமைதியாக இருந்த ராதா நிதானமாகக் கூற, யதுநந்தன் முகத்தில் குறும்பு புன்னகை பூத்தது.
நிரஞ்சனின் தாயார் அவர்கள் கழுத்தை நொடித்துக் கொண்டு செல்ல, ‘இவர்களைப் போல் பல மனிதர்களை வாழ்வில் கடக்க வேண்டும்.’ என்ற எண்ணத்தோடு இருவரும் காரை நோக்கி நடந்தனர்.
காலம் அதன் போக்கில் நகர்ந்தது.
எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்த காலமே அது.
யதுநந்தன் அவள் மனதை மாற்ற, பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான். இருவரும் தங்கள் கவனத்தை அவர்கள் வேலையில் திருப்பினர்.
ராதா அவனுக்காக அழுதாள்…
அவனுக்காகச் சிரித்தாள்…
அவனுக்காக வாழ்ந்தாள்…
அவனது உலகம் ஆகிப் போனாள்.
ஏமாற்றங்களை ஏற்க கற்றுக் கொடுத்த காலம் அது… பெரிய நம்பிக்கை எதுவும் வளர்த்துக் கொள்ளாமல், அவர்களும் அவர்களுக்காக வாழக் கற்றுக் கொண்டார்கள்.
சில வருடங்கள் ஓடியது…
அன்று மாலை…
ராதா, “நாளை மறுநாள் சஞ்சானவின் நீராட்டு விழா. எல்லாம் ரெடி பண்ணியாச்சா? என்று யதுநந்தன் கேட்க, ராதா தீவிரமாக அந்த மீன் தொட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ராதா.” என்று யதுநந்தன் சத்தமாக அழைக்க, நிதானமாக நானவுலகத்திற்கு திரும்பினாள் ராதா.
‘ராதாவிடம் இப்பொழுது அதீத நிதானம்… பழைய குறும்பில்லை… கோபமில்லை… கண்டிப்பும் இல்லை…’ என்றெண்ணினான் யதுநந்தன்.
ராதா புன்னகையோடு அவன் பக்கம் திரும்பி, “எப்ப வந்தீங்க? நான் கவனிக்கவில்லையே…” என்று இயல்பாகக் கூறி, அவன் அருகே வந்தாள்.
“நீ இப்ப என்னைக் கவனிப்பதே இல்லை ராதா.” என்று அவன் குழைவாக கூற, அழகாகச் சிரித்தாள் ராதா.
‘அவள் கண்களில் எட்டாத புன்னகையை கண்களில் எட்ட வைத்துவிட வேண்டும்.’ என்ற வெறி அவன் மனதில் தோன்ற, தீவிரமாகச் சிந்தித்தான் யதுநந்தன்.
அப்பொழுது அங்கிருந்த மீன் தொட்டி கண்ணில் பட, யதுநந்தனுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது.
“ராதா. நான் வெளிய போகணும்.” என்று அவசரமாகக் கூற, “இப்ப தானே வந்தீங்க?” என்று ராதா கேள்வியாக நிறுத்தினாள்.
“முக்கியமான வேலை…” என்று கூறி கிளம்பிச் சென்றான் யதுநந்தன்.
திரும்பி வந்த யதுநந்தன், ராதாவிற்கு தெரியாமல் ஒரு பையை அவர்கள் அறையில் மறைத்து வைத்தான்.
‘ராதா முன்பு போல் இருந்திருந்தால், ஆயிரம் கேள்விகள் கேட்டிருப்பாள்.’ என்று தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி தள்ளி நாளைச் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்தித்தான்.
மறுநாள் காலை நாலு நாற்பத்தி ஐந்து
“என்னங்க… ஜாக்கிங் வரலையா?” என்று ராதா கேட்க, “ராதும்மா… ரொம்ப சோர்வா இருக்கு. நீ போயிட்டு வா. நான் நாளைக்கு வரேன்.” என்று தூக்க கலக்கத்தோடு கூறினான் யதுநந்தன்.
ராதா சம்மதமாக தலை அசைத்துக் கிளம்பினாள்.
அவள் சென்றதை உறுதி செய்துவிட்டு, கதவை தாளிட்டான் யதுநந்தன்.
அவன் நேற்று வாங்கி வைத்திருந்த பையிலிருந்து ஒரு சிறிய மீன் குட்டியை தொட்டியில் நீந்த விட்டான் யதுநந்தன். மீண்டும் கதவை திறந்து வைத்துவிட்டு போர்வைக்குள் நுழைந்து கொண்டான்.
ராதா ஜாக்கிங் முடிந்து அறைக்குள் நுழைந்தாள். ராதா வழக்கம் போல் மீன் தொட்டியை பார்க்க, யதுநந்தன் அவளைப் போர்வைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ராதாவின் முகத்தில் உண்மை புன்னகை வந்துவிடாதா! அவள் கண்களில் குறும்பு புன்னகை பூத்து விடாதா?’ என்ற ஏக்கம் ஒரு புறம்… ‘கண்டுபிடித்து விடுவாளோ?’ என்ற பயம் ஒருபுறம் என்ற பல உணர்வுகளோடு ராதாவை பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன்.




