அத்தியாயம் 20
அத்தியாயம் 20
யதுநந்தன் போர்வைக்குள் மறைந்து கொள்ள… ராதா, “என்னங்க… என்னங்க…” என்று ஆனந்த கூச்சலிட்டாள்.
“என்ன ராதா?” என்று தூக்க கலக்கத்தோடு யதுநந்தன் வினவ, “இவ்வளவு நேரம் என்ன தூக்கம்?” என்று அவன் அருகே சென்று கோபமாகக் கேட்டாள்.
அவனை இழுத்துக் கொண்டு மீன் தொட்டி அருகே சென்றாள் ராதா. அந்தக் குட்டி மீனை விரல்களால் காண்பித்து, “குட்டி மீன்… பாருங்கள்.” என்று தன் கண்களை விரித்து சந்தோஷமாக கூறினாள் ராதா.
“என்னைக்கோ முட்டை இட்டிருக்கு போல… நாம கவனிக்கவேயில்லை பாருங்க?” என்று ராதா மனத்தாங்கலாகக் கூறினாள்.
“மீன் தொட்டி… நிறைய கற்கள்… உள்ள நிறைய குட்டி குட்டி செடிகள் இருப்பதால் கண்டுபிடிக்க முடியலையோ?” என்று தன் கன்னத்தில் கை வைத்துக் கேட்டாள் ராதா.
‘பழைய ராதா முழுசா வந்தா நீ மாட்டினா டா யது’ என்று அவன் அறிவு அவனை எச்சரிக்க, ராதா பேசுவதை கவனிக்காதது போல் குட்டி மீனை பார்த்துக் கொண்டிருந்தான். ராதாவின் முகம் பார்ப்பதை தவிர்த்தான் யதுநந்தன்.
யதுநந்தன் குட்டி மீனை பார்த்துக் கொண்டிருந்ததால், அவளும் தன் கவனத்தைக் குட்டி மீன் பக்கம் திருப்பி, “ரொம்ப அழகா இருக்குல்ல?” என்று உணர்ச்சி பொங்கும் குரலில் கேட்டாள்.
யதுநந்தன் அவள் மகிழ்ச்சியை ரசித்தபடி மேலும் கீழும் தலை அசைத்தான்.
“ஆனால், ஒரே ஒரு முட்டைப் போட்டு… ஒரு குட்டி மீன் தான் வருமா? நிறைய வராதா?” என்று ராதா தன் அடுத்த சந்தேகத்தை கேட்க, யதுவின் பதட்டம் அதிகரித்தது.
“ராதா… நான் என்ன மீனை பற்றியா படித்திருக்கிறேன்? இப்படி கேள்வி கேட்டா என்ன அர்த்தம்? அந்த மீன் கிட்டயே கேளு.” என்று கடுப்பாக கூற, “ம்ம்ம்… அப்படி என்ன கேட்டுட்டேன்னு இப்படி கோபப்படுறீங்க. நான் இந்த மீன் கிட்டயே எல்லாம் கேட்டுக்கிறேன்.” என்று சலிப்பாக கூறி தன் முகத்தை மீன் தொட்டி பக்கம் திருப்பிக் கொண்டாள் ராதா.
யதுநந்தன் ராதாவின் கேள்விகளுக்கு பயந்து, குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
மறுநாள் சஞ்சனாவின் நீராட்டு விழா… இருவரும் ஆர்வமாக கிளம்பினர்.
யதுநந்தனுக்கு பிடித்த ப்ளூ நிற சேலையை அணிந்து கொண்டு, அவன் வாங்கி கொடுத்து, ஜிமிக்கி, வைர நெக்லஸ், வளையல் அணிந்து கொண்டு ராதா தேவதையாக கிளம்பினாள். சந்தன நிற சட்டை அணிந்து யதுநந்தனும் கம்பீரமாக காட்சி அளித்தான்.
அவளைப் பார்த்த யதுநந்தன், தன் கண்களால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.
இருவரும் மண்டபத்திற்குச் செல்ல, ராதாவை பார்த்த அவள் நெருங்கிய தோழி, “ராதா… எத்தனை வருஷம் கழித்து பார்த்தாலும், நீ அப்படியே இருக்க டீ.” என்று அவளை அணைத்துக் கொண்டு கூற, அப்பொழுது அவர்களைக் கடந்து சென்ற நடுத்தர வயது பெண்மணி, “குழந்தை பெத்துக்கிட்டா உடம்பில் மாற்றம் வந்திருக்கும். அவ இன்னமும் அப்படியே தானே இருக்கா. புருஷன் பொண்டாட்டிக்கு அந்தக் கவலை இருக்கிற மாதிரி தெரியலியே. புது ஜோடி மாதிரி, சந்தோஷமா தானே சுத்துறாங்க.” என்று முணுமுணுத்தார்.
ராதாவின் தோழி சங்கடமாக நெளிய, “நாளையிலிருந்து, தினமும் உங்கள் வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் அழுதிட்டு போறோம்.” என்று சிரித்த முகமாகக் கூறினாள் ராதா.
தோழியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, ராதா சஞ்சனா அருகே செல்ல, அங்கு சித்ராவின் தயார் கோபமாக அமர்ந்திருந்தார்.
ராதா, உள்ளே செல்ல, “இதோ பாரு ராதா. எனக்கு என் பேத்தி வாழ்க்கை ரொம்ப முக்கியம். என் அண்ணன் மகள், சஞ்சனாவுக்கு அத்தை முறை. அவ இரண்டு ஆம்பிளை புள்ளை பெத்த மகராசி. அவ தான் சஞ்சனாவுக்கு தண்ணி ஊத்தணும்.” என்று சித்ராவின் தாயார் கறாராகக் கூறினார்.
“அம்மா.” என்று சித்ரா பதறியபடி அழைக்க, “நீ சும்மா இரு. எத்தனை வருஷத்திற்குத் தான் பயந்துகிட்டே இருப்ப.” என்று சித்ராவின் தாயார் சித்ராவை கண்டித்தார்.
மீனாட்சி, லோகநாதன் தன் கைகளை பிசைய, சித்ரா தர்ம சங்கடமாக உணர்ந்தாள்.
அப்பொழுது ஸ்ரீதர், யதுநந்தன் இருவரும் உள்ளே நுழைய, சித்ராவின் தயார் பேசியதைக் கேட்டு ஸ்ரீதர் கோபமாக உள்ளே செல்ல எத்தனித்தான். ஸ்ரீதரின் கைகளை பிடித்து மறுப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன்.
“பாட்டி, அவங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாது. என் பக்கத்தில் ராதா அத்தை தான் நிற்கணும்.” என்று சஞ்சனா பிடிவாதமாக கூறினாள்.
“சஞ்சனா.” என்று சஞ்சனவை பார்த்து மறுப்பாகத் தலை அசைத்து, ராதா சித்ராவின் தாயாரை பார்த்துப் பேசினாள்.
“சரி… அத்தை. நீங்கச் சொன்ன மாதிரி நான் தண்ணீர் ஊற்றவில்லை. ஆனால், ஒரு கண்டிஷன்.” என்று ராதா தன் பேச்சை நிறுத்தினாள்.
‘என்ன?’ என்பது போல் சித்ராவின் தயார் ராதாவை பார்க்க, “ஒரு வேளை, எனக்கு அடுத்த வருஷம் குழந்தை பிறந்திருச்சுனா… நீங்க இதே மாதிரி மண்டபத்தில் இத்தனை பேரைக் கூப்பிட்டு உங்க பேத்தி சஞ்சனாவுக்கு நீங்க உங்க செலவில் விழா பண்ணனும். அப்ப என் மருமகள் சஞ்சனாவுக்கு நான் தண்ணீர் ஊற்றனும். உங்களுக்கு இது சம்மதம்னா நான் இன்னைக்கு பக்கத்தில் வரலை.” என்று ராதா கண்டிப்பாக கூறினாள்.
“ஏய் சித்ரா… உன் நாத்தனார் பேசுறது சரி இல்லைன்னு நீ சொல்ல மாட்ட?” என்று சித்ராவின் தாய் சித்ராவை பார்த்துச் சிடுசிடுக்க, “அத்தை… அண்ணி கிட்ட என் பேச்சு. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.” என்று விடாப்பிடியாக நின்றாள் ராதா.
சித்ராவின் தாயார் தர்மசங்கடமாக முழிக்க, “ராதா… பாவம் பெரியவங்க. நீ வா… வந்து நடக்க வேண்டிய வேலையைப் பார்.” என்று அவளை நாசுக்காக அங்கிருந்து அழைத்துச் சென்றான் யதுநந்தன்.
விழா சிறப்பாக முடிய, ராதாவும், யதுநந்தனும் அவர்கள் இல்லம் நோக்கிச் சென்றனர்.
ராதா சிந்தனையில் ஆழ்ந்தவளாக, அவர்கள் அறையை ஒட்டிய பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
“ராதா…” என்று யதுநந்தன் தயக்கமாக அழைத்தான்.
ராதா அவனை முகம் திருப்பி பார்க்க, “டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட்போட்ருக்கேன்.” என்று அவன் மெதுவாகக் கூற, “நான் சொல்லனுமுனு நினைத்தேன். நீங்களே போட்டுடீங்க.” என்று ராதா கூற அவன் தன் தலையை அசைத்துக் கொண்டான்.
இவன் நினைப்பதை அவள் செய்வதும், இவள் நினைப்பதை அவன் செய்வதும் இவர்களுக்குள் சகஜமாக இருந்தது.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது.
மீன் குட்டியை பார்த்த ஒரு சில நாட்கள் ராதா சந்தோஷமாக இருந்தாலும், அவள் உற்சாகம் நாளுக்கு நாள் வடிந்து கொண்டே இருந்தது. யதுநந்தனும் சற்று உற்சாகம் குறைந்தே காணப்பட்டான். அவன் கவனம் எதிலும் நிலைக்கவில்லை. யதுநந்தனின் மனநிலையை அறிந்து, ராதா அவன் முன் உற்சாகமாகக் காட்டி கொண்டாள்.
அவர்கள் அப்பாயிண்ட்மெண்ட்முடிந்து ஒரு வாரத்தில் மருத்துவமனையிலிருந்து முடிவுகளும் வந்தது.
யதுநந்தன் முடிவுகளைப் பற்றி ராதாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. ‘பகிர்ந்து என்னவாகப் போகுது’ என்ற எண்ணத்தில் மறைத்து விட்டான். ஆனால், யதுநந்தனின் உள்ளம் குற்ற உணர்ச்சியில் தவித்தது.
ஒரு மாதம் ஓடியது.
யதுநந்தனின் கவனம் அலுவலகத்தில் இல்லை. யதுநந்தன், டாக்டர் கூறியதை நினைத்துக் கொண்டிருந்தான்.
‘உங்க இரண்டு பேருக்கும் பெரிய பிரச்சனை. இன்றைய உணவு முறை. ரொம்ப நேரம் மொபைல் யூஸ் பண்றது. அதீத நேரம் லேப்டாப் முன்னாடி இருக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான், இந்தக் காலத்தில் நிறைய பிரச்சனைகளுக்கு காரணம். மாத்திரை தரேன் சாப்பிடுங்க. உங்களுக்கு இன்னும் வயசிருக்கு. காத்திருப்போம். அப்புறம் வேறு எதாவது யோசிப்போம்.’ என்று அவர் கூறியது நினைவு வர, சலிப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன்.
அதன் பின் மருத்துவர் கூறியதும் அவன் காதில் ஒலித்தது.
‘ராதாவின் கர்ப்பப்பை பலவீனமா இருக்கு. ஏற்கனவே ஒரு அபார்ஷன் வேற நடந்துருக்கு. பயப்பட வேண்டாம். ஆனால் அவங்களை பத்திரமா பார்த்துக்கணும்.’ என்று மருத்துவர் கூறியது யதுநந்தனின் காதில் இப்பொழுதும் ஒலிக்க, யதுநந்தன் தன் நாற்காலியில் சோர்வாக சாய்ந்தான்.
அப்பொழுது, பதட்டத்தோடு அவன் மேலாளர் கதவை தட்ட, யதுநந்தன் நினைவுலத்திற்கு திரும்பி, “கெட் இன்…” என்று கூறினான்.
“சார்…” என்று தயக்கத்தோடு பேச ஆரம்பிக்க, யதுநந்தன் மௌனமாக தலை அசைத்தான்.
“யதுநந்தனின் கவனக்குறைவால், அவர்களுக்கு வரவிருந்த ப்ராஜெக்ட் கை நழுவிச் செல்ல சில பல லட்சங்கள் நஷ்டம்” இதைத் தான் அவர் முழுங்கி விழுங்கி தயக்கமாக கூறினார்.
யதுநந்தன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “சரி விடுங்க. பார்த்துக்கலாம்.” என்று நிதானமாகக் கூறினான்.
‘சம்பாதித்து யாருக்கு என்னவாகப் போகுது.’ என்ற எண்ணத்தோடு மௌனம் காத்தான்”.
இன்னும் சில விடுபட்ட வேலைகளை அவர் கூற, “இன்னைக்கு எல்லா பிரச்சனைகளையும் சரி செய்திருவோம்…” என்று கூறினான் யதுநந்தன்.
மறுநாள் யதுநந்தனின் பிறந்தநாள்.
அன்று பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டுவதற்காக, அறை முழுக்க அலங்காரம் செய்து, அவனுக்காகக் காத்திருந்தாள்.
“வர தாமதமாகும்…” என்று யதுநந்தன் மெசேஜ் செய்ய, “இன்னும் சில வேலைகளை முடித்து விடலாம்.” என்ற எண்ணத்தோடு புன்னகைத்துக் கொண்டாள் ராதா.
பத்து மணி… பதினொன்றாகி… பன்னிரண்டாகி… ஒரு மணி ஆக ராதா அவனுக்காகக் காத்திருந்தாள்.
ராதா, அவனை மொபைலில் அழைக்க, “ராதா. நீ தூங்கு. நான் வர நேரம் ஆகும். இங்க சில பிரச்சனைகள்.” என்று யதுநந்தன் கூற, ராதா மௌனமாகத் தலை அசைத்து கேட்டுக் கொண்டாள் ராதா.
யதுநந்தன் இரண்டு மணிக்கு வந்தான்.
ராதா அவனுக்காக விழித்திருக்க, “ஏன் ராதா… எனக்காக இவ்வளவு நேரம் காத்திருக்க? என்னால் முடிந்த அளவுக்கு நான் உன்னோடு தான் இருக்கேன் ராதும்மா. இன்னைக்கு முடியலை சாரி டா.” என்று அவள் தலை கோதிக் கூறி விட்டுப் படுக்க சென்றான் யதுநந்தன்.
ராதா பேச வந்ததைக் கேட்க உடலில் தெம்பில்லாமல், சோர்வாக படுத்து உறங்கிவிட்டான் யதுநந்தன்.
ராதா வேறு வழின்றி உறங்கிவிட்டாள்.
ராதா தாமதமாக எழுந்தாள். அவன் எழுந்து வருவதற்குள் யதுநந்தன் குறிப்பு வைத்துவிட்டு அலுவலகத்திற்குக் கிளப்பிவிட்டான். “ராதும்மா… குட் மார்னிங்… கொஞ்சம் வேலை அதிகம். இன்னைக்கு சீக்கிரம் வந்துருவேன்.” என்று குறிப்பு இருந்தது.
அவன் அக்கறை, அவன் அன்பு அனைத்தும் இதமாக இருந்தாலும்… ‘எதுவோ சரி இல்லை… இப்பொழுதெல்லாம் அவங்க என் கண்களை பார்த்துக் கூட பேசுவதில்லை. இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய சுவர் எழும்பினார் போல் இருக்கிறது.’ என்று எண்ணினாள் ராதா.
‘இது என்று முதல்?’ என்று ராதா சிந்திக்க, ராதாவின் மூளை வேகமாக வேலை செய்தது. தங்கள் அலமாரியில் உள்ள, மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்து தன் டாக்டர் தோழிக்கு வாட்சப் செய்தாள். அவளிடம் விவரம் கேட்க, அவள் கூறிய மற்ற விஷயங்கள் அவளுக்கு மனதில் பதியவில்லை. ‘கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது…’ என்று மட்டுமே ராதாவின் மனதில் அழுத்தமாகப் பதிந்தது.
அவள் மெடிக்கல் ரிப்போர்ட் உள்ளே வைத்துவிட்டுச் சோர்வாக கதவை மூட, ஒரு பை கீழே விழுந்தது.
அதில் ஒரு குட்டி மீன் வாங்கியதற்கான பில் இருக்க, ராதா விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்தது.
‘நான் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை, நந்தனும் இழந்து விட்டான்.’ என்று தனக்கு தானே சோர்வாக பொதுவாக கூறினாள். அலுவலகத்திற்கு அழைத்து மனஜரிடம் பேசி அலுவலக நிலவரத்தை அறிந்து கொண்டாள் ராதா.
அலுவலகத்தில் ஏற்பட்ட நஷ்டம், யதுநந்தன் முகத்தில் சமீப காலமாகத் தெரியும் சோக ரேகைகள் பற்றி ஆழமாகச் சிந்தித்தாள் ராதா.
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். ஒரு காகிதம் எடுத்து அந்தக் கடிதத்தை எழுதினாள்.
என் நந்தனுக்கு,
நந்தன்… நந்தன்… நந்தன்… என்று ஆனந்தமாக அழைக்க ஆசைப் படுகிறேன்.
நீங்கள் பல முறை கேட்டும் நான் உங்களை இவ்வாறு அழைக்கவில்லை. இன்று இந்தக் கடிதத்தின் மூலமாக அழைக்கிறேன்.
நான் என் உடலால் இங்கிருந்து கிளம்புகிறேன். என் மனம்… என் மனம்… சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
என்னைச் சமாதானம் செய்வதற்காகவும், என்னை மகிழ்விப்பதற்காகவும் நீங்கள் உங்களை வருத்திக் கொள்வதை பார்க்கும் சக்தி எனக்கில்லை.
நான் உங்கள் அருகில் இல்லை என்றால்… என்னை பற்றிய அழுத்தம் குறைந்து, நீங்கள் சற்று மனநிம்மதியோடு வாழ ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று நான் நம்புகிறேன்.
நமக்குள் கசப்பான உணர்வுகள் வருமுன், இனிதான நினைவுகளோடு நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.
இதற்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. மன்னிப்பு கேட்க கூடிய செயலை நான் செய்யவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய இந்தச் செயல் உங்களுக்கோ, என் குடும்பத்திற்கோ, இந்த உலகத்திற்கோ தவறாகத் தெரிந்தால்… அது உங்கள் பார்வையால் தான்… உங்கள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் விரும்பும்
உங்கள் ராதா… (ராதும்மா)
கடிதத்தை படிக்க மனமின்றி அதை அப்படியே மடித்து, அதை மீன் தொட்டியின் மேல் வைத்தாள் ராதா.
50 50 என்று பதிக்கப்பட்டு அங்கிருந்த பச்சை, சிவப்பு கூஜா முன்னாடி நின்றாள் ராதா.
இத்தனை வருடங்களில் அவர்கள் வாழ்ந்த அவர்களின் வாழ்வின் அடையாளமாக அந்தப் பச்சை கூஜா பல கூழாங்கற்ககளால் நிரம்பி இருந்தது.
இருவரும் மனஸ்தாபம் இன்றி வாழ்ந்ததின் அடையாளமாகச் சிவப்பு கூஜா காலியாக இருந்தது.
அந்த சிவப்பு கூஜாவின் அருகே சென்று, அந்த காலியான கூஜாவை பார்த்தாள் ராதா. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அந்தக் கூஜாவிற்குள் விழுந்தது. இத்தனை வருடங்களாக காலியாக இருந்த சிவப்பு கூஜா, ராதாவின் கண்ணீரை மனவலியோடு ஏற்றுக் கொண்டது.
தன் மன நிலையை அங்கிருந்த சோபாவில் அமர்ந்து நிதானப்படுத்திக் கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் அங்கிருந்து கிளம்பினாள் ராதா.
50:50 வாழ்வின் ஓட்டம் தொடரும் சில தடங்கல்களோடு…




