அத்தியாயம் – 3
அத்தியாயம் – 3
யது கோபமாக முறைத்துக் கொண்டிருக்க, “உண்மை சுடத்தான் செய்யும். கோபம் வரத் தான் செய்யும்.” என்று யதுவின் முகம் பார்த்து கூறியபடியே தன் முன் இருந்த புத்தகத்தை மூடிவைத்தாள் ராதா.
“நீங்க யார் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்கன்னு தெரியுமா?” என்று யது நாற்காலியில் சாய்ந்து தன் புருவம் உயர்த்தி ராதாவை பார்த்துக் கேட்டான்.
“ஏன் தெரியாம?” என்று ராதா புன்னகைத்தாள்.
“தப்பு பண்ணிடோம்முன்னு பயந்து ஓடும் கோழை இல்லை. ஒரு தைரியமான மனிதர் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” என்று ராதா இன்முகமாகக் கூறினாள். ‘இவள் என்னை கலாய்க்கிறாளா? இல்லை உண்மையில் பாராட்டுகிறாளா?’ என்று யது சிந்தித்தான்.
“இந்த மிரட்டும் வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். பிரச்சனை பண்ணாம, பணத்தை எடுத்துட்டு கிளம்புங்க.” என்று ராதா கோபமாக கூறினாள்.
“நான் செய்த தப்புக்கு நீங்க ஏன் உங்க பணத்தை செலவழிக்கணும்.” என்று யது கோபமாக கேட்க, “ஆஹான்… நீங்க செய்தது தப்புனு உங்களுக்கு தெரியுதா?” என்று ராதா கேலியாக கேட்டாள்.
“உன் செயல் ஒவ்வொன்றும் என்னைக் கோபப்பட வைக்குது. நான் கோபத்தில் எதாவது தப்பா பேசிடுவேன். உன் கிட்ட பணம் வாங்கும் அளவுக்கு, நான் தரம் தாழ்ந்து போகலை…” என்று ராதாவை கடுப்பாக பார்த்தபடி யது கூறினான்.
“நீங்க தரம் தாழ்ந்து ரொம்ப நேரம் ஆச்சு. ஏதோ சூழ்நிலை, காலையில் இடிச்சிட்டு அவசரமா போய்ட்டிங்க. அதை கூட மன்னித்து விட்ரலாம். ஆனால் வந்த பிறகும், அந்த பொண்ணு எப்படி இருக்கான்னு கேட்கணும்னு உங்களுக்குத் தோணலை. இந்தா பணம்… இந்தா பணம்முன்னு அதிலேயே நிக்கறீங்க.” என்று ராதா தன் கண்களை உருட்டி கோபமாக கூறினாள்.
என்னை மன்னிக்க இவள் யார் என்று தோன்றினாலும், ‘அவள் கேட்பது நியாயம் தானே. டீச்சர் அம்மா சரியா கேள்வி கேக்கறாங்க!’ என்று எண்ணியபடி அவளை அமைதியாகப் பார்த்தான் யது.
ராதா அத்துடன் நிறுத்தாமல், “படிப்பு சொல்லி கொடுத்த உங்க ஸ்கூலில் நல்ல விஷயங்களைச் சொல்லி தரலை. உங்க அம்மா, அப்பா நல்ல விஷயங்களைச் சொல்லி கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லை. மனைவி, குழந்தைன்னு இருந்திருந்தா நீங்களே தெரிஞ்சிருப்பீங்க.” என்று உதட்டைப் பிதுக்கி ராதா சோகமாக கூறினாள்.
“பணத்தால், உங்கள் அதிகார பலத்தால் மட்டும் எல்லாத் தவறுகளையும் சரி செய்ய முடியாது. ஒழுங்கா நடந்துக்கணும். தப்பு நடந்த பின் சரி பண்ண முடியாது.” என்று ராதா அழுத்தி, நிதானமாகக் கூறினாள்.
“உங்களுக்கு சுய ஒழுக்கம் தேவை. வண்டி ஓட்டும் பொழுது நிதானமா ஓட்டுங்க. இனிமேல் இந்தத் தப்பை பண்ணாதீங்க. இப்ப பணத்தை எடுத்துட்டு கிளம்புங்க.” என்று அறிவுரை கூறி ராதா யாதுவைய் வழி அனுப்பினாள்.
‘நான் இவள் ஸ்டுடென்ட்டா?’ என்று எண்ணம் தோன்றியது யதுவிற்கு.
“நீங்கச் சொன்ன மாதிரி பணத்தை நான் எடுத்துகிறேன். நீங்க சொல்றது சரி தான். நான் படித்த பள்ளியில் உங்களை மாதிரி நல்லது சொல்ற ஆசிரியர் இல்லை. சரியானதைச் சொல்லி தர அம்மா அப்பாவும் இல்லை. ஆனால் மனைவி, குழந்தைகளுக்கு வழி இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கண்சிமிட்டி யது வினவ, “இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கு?” என்று ராதா புன்னகையோடு கேட்டாள்.
“உங்களை மாதிரி சுவாரசியமா பேசுற மனைவி கிடைத்தால், வாழ்க்கை நல்லா இருக்குமில்லை?” என்று யது நேரடியாகக் கேட்டான்.
‘யது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று அவன் மனசாட்சி இடித்துரைக்க, ‘அட்வைஸ் பண்ற, அதுவும் எனக்கே. உன்னைத் திணற வைக்கிறேன்.’ என்று யதுவின் அறிவு சிந்தித்தது.
ராதா மறுப்பாகத் தலை அசைத்து, “ரொம்ப கஷ்டப்படுவீங்க…” என்று அழுத்தமாகக் கூறி அவனைக் கூர்மையாக பார்த்தாள்.
யது பேச தொடங்க, அவன் அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டி, வெளியில் இருக்கும் பணியாளை அழைத்து, “அக்கா, ரெண்டு ரோஸ் மில்க் வாங்கிட்டு வர முடியுமா?” என்று தன்மையாக கேட்டாள்.
“எங்க ஸ்கூல் கான்டீன் ரோஸ் மில்க் ரொம்ப நல்லா இருக்கும் குடிங்க…” என்று ராதா மெதுவாகக் கூற, யது அவளைக் குழப்பமாக பார்த்தான்.
‘ராதா, நீ பேசிய ஏதோ ஒரு வார்த்தை அவனைக் காயப்படுத்தி இருக்கிறது. பொறுமையா இரு.’ என்று ராதாவின் மனம் கூற, ‘அதுக்கு இவன் கிட்ட இருந்து பணம் வாங்க முடியுமா? புத்திசாலித்தனமா பேசி வெளிய அனுப்பு…’ என்று ராதாவின் தன்மானம் அவளை எச்சரித்தது.
“உங்க முகத்தைப் பார்த்தால், நீங்க சாப்பிடாமல் பசியில் இருக்கிற மாதிரி தெரியுது. அது தான் தப்பு தப்பா பேசுறீங்க. குடிச்சிட்டு நிதானமா பேசுங்க…” என்று ராதா தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கி பொறுமையாக கூறினாள்.
‘இவளுக்குக் கோபம் வரவில்லையா? இல்லை வராதது போல் நடிக்கிறாளா?’ என்று ஆராயும் கண்களோடு ரோஸ் மில்க் குடித்தபடி ராதாவை பார்த்தான் யது.
“என்ன முதல் நாள் சந்தித்த பெண்ணிடம் நீங்க பேசிய பேச்சுக்கு ஏன் கோபம் வரலைன்னு பார்க்கறீங்களா?” என்று ராதா ரோஸ் மில்க் அருந்தியபடியே கேட்க, யது அவளை மௌனமாகப் பார்த்தான்.
ராதா மேலும் பேசுமுன் அவளை நிறுத்தி, “நீங்க எனக்கு அறிவுரை சொன்னது போதும். ரொம்ப போர் அடிக்குது.” என்று எழுந்தான் யது.
“பணம் வாங்கிக்க மாடீங்க. அப்படி தானே?” என்று யது எழுந்து நின்று மீண்டும் கோபமாக கேட்க, “ஆம்” என்று மேலும் கீழும் தலை அசைத்தாள் ராதா.
“பிடிவாதக்காரி…” என்று முணுமுணுத்து வாசலை நோக்கிச் சென்றான் யது.
அங்குச் சென்று, ராதாவை திரும்பி பார்த்து, “தேங்க்ஸ்…” என்று சிரித்தமுகமாக கூறிவிட்டு வேகமாக வெளியே நடந்தான் யது
மெலிதாக புன்னகைத்தாள் ராதா.
‘பேச வேண்டியதைப் பேசி, என்னைத் திட்டவும் செய்து, பிரச்சனையையும் தவிர்த்து விட்ட இந்தப் பெண் புத்திசாலி தான்…’ என்று யது சிந்திக்க, அவன் அருகே ஓடி வந்தார் தலைமை ஆசிரியர்.
“மிஸ். ராதா கொஞ்சம் கறாரா பேசுவாங்க…” என்று தயங்கியபடியே கூற, “சரியாகத் தான் பேசுறாங்க.” என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றான்.
யதுவை குழப்பமாகப் பார்த்தார் தலைமை ஆசிரியர்.
‘அந்த டீச்சர் பேசுறது நமக்கே செட் ஆகாது. இவர் எப்படி சரின்னு சொல்றார்?’ என்று சிந்தித்தபடி தன் அறையை நோக்கி நடந்தார் தலைமை ஆசிரியர்.
ராதா பேசிய விதத்தை எண்ணியபடி யது நடக்க, ‘உன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது’ என்று யதுவின் அறிவு கூறியது.
மனமோ பல வருடங்கள் கழித்து தன் பசியறிந்து உண்ணவிட்ட அவளை நினைத்து புளங்காகிதம் அடைந்தது.
‘இறைவன் அனைவருக்கும் அனைத்தும் கொடுப்பதில்லை.’ என்று எண்ணியபடி ராதா தன் தோள்களைக் குலுக்கி விட்டு, தன் வேலையில் மூழ்கினாள்.
ராதாவின் எண்ணம் மேலோங்க, ‘இவள் ஆபத்தானவள். என் எண்ணப் போக்கை மாற்றக் கூடிய எந்தச் சக்தியும் என்னை நெருங்கக் கூடாது. ஐ நீட் எ பிரேக் வித் எ ட்ரிங்க்…’ என்று அவன் மனது கூற, தன் காரை வேகமாகச் செலுத்தினான் யது.
பல எண்ணங்கள் தோன்றினாலும், எங்கும் செல்ல மனமில்லாமல் யதுவின் எண்ணங்களையும் தாண்டி அவன் கார் வீட்டை நோக்கிப் பயணித்தது. என்றும் இல்லாத தனிமை இன்று அவனை வாட்டியது.
வழக்கத்திற்கு மாறாக வீட்டிற்குச் சீக்கிரமாக வந்த யதுவை ஆச்சரியமாகப் பார்த்தனர் வேலை ஆட்கள்.
யது தன் தலையைப் பிடித்தபடி, பால்கனியில் இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
தலை விண்வினென்று வலித்தது. ‘சாப்பிடாததால் வலிக்கிறதா? இல்லை அவளுடன் பேசி பேசி வலிக்கிறதா? நான் இன்று அங்குப் போனது, தப்பு…’ என்று தனக்கு தானே முணுமுணுத்தான் யது. ‘அவளும் அவள் சட்ட திட்டங்களும்…’ என்று கடுப்பாக கூறினான் யது.
‘கண்ணா அது! முறைத்துப் பார்க்கும் விழிகள்.’ என்று சிடுசிடுத்தான் யது.
அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக, யதுவின் அலைபேசி ஒலிக்க, “சொல்லுங்க நிரஞ்ஜன்…” என்று தன் தலையைத் தடவியபடியே கூறினான்.
“…” நிரஞ்சன் ஏதோ கூற, “நான் வீட்டுக்கு வந்துட்டேன். இனிமேல் நாளைக்கு தான் வருவேன். நாளைக்கு வந்து எல்லா வேலையையும் பார்க்கறேன்…” என்று கூறி தன் அலைபேசி பேச்சை முடித்தான் யது.
யது கண்மூடி நாற்காலியில் சாய்ந்து அமர, ராதாவின் பேசும் கண்கள் அவனைப் பார்ப்பது போல் தோன்ற, பதட்டமாகக் கண் முழித்தான் யது.
‘கண் மூடினால் தோன்றும் அளவுக்கு அவள் அழகியா?’ என்று யதுவின் அறிவு அவனைப் பார்த்து கேலியாக வினவ, ‘இல்லையா பின்னே, பேசும் விழிகள்… தவறை சுட்டிக் காட்டும் அவள் செவ்விதழ்கள்… அசைந்தாடும் கூந்தல்… தேவையான நிறம்…’ என்று அவன் மனது கூறியது.
‘நீ பார்க்காத அழகியா?’ என்று அவன் அறிவு வினவ, ‘உன்னிடம் பணத்துக்காக நெருங்க நினைக்கும் பெண்கள். உன் கம்பீரத்தில் மயங்கிய பெண்கள். உன்னை மயக்க நினைக்கும் பெண்கள். அவர்களும் இவளும் ஒன்றா? உன் பணத்தை உன்னிடமே கொடுத்து, உன் தவறை பல வருடங்களுக்குப் பின் தாயாகக் கண்டித்த ராதா மதிக்கப்பட வேண்டியவள்.’ என்று யதுவின் மனம் கூறியது.
‘யதுநந்தன் பெயருக்கு ஏற்றார் போல் ராதா.’ என்று தனக்கு தானே அவன் சிந்திக்க, தன் சிந்தனை ஓட்டத்தை எண்ணிப் பயந்தவனாக அங்கிருந்து எழுந்தான்.
‘யது, என்ன யோசிக்கிற? உன் மனதை அவள் குழப்பிவிட்டாள். இன்னைக்கு பார்த்த பெண், ஒரே நாளில் உன்னைக் கவர்ந்துவிட்டாளா? இனக் கவர்ச்சி…’ என்ற எண்ணம் தோன்ற கேலியாகச் சிரித்துவிட்டு வீட்டில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.
நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பித்தது.
ராதாவை பெண் பார்க்கும் நாளும் வந்தது.
சித்ரா, ராதவை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். “ராதா நீ அழகு டி. உனக்கு அலங்காரம் தேவை இல்லை.” என்று கூறி அவளுக்கு கைகளால் திருஷ்டி கழித்தாள்.
“அத்தை, உனக்குக் கல்யாணமா? புது மாமா வர போறாங்களா? நீ இன்னைக்கே அவங்களோடு போய்டுவியா?” என்று சஞ்சனா வரிசையாகக் கேள்வி கேட்க, ராதா அவள் தலையை தடவியபடி சஞ்சனாவை அமைதியாகப் பார்த்தாள்.
“ஏய்… சஞ்சு சும்மா இரு… தொணதொணன்னு கேள்வி கேட்டுகிட்டு…” என்று சித்ரா தன் மகளைக் கண்டித்தாள்.
“அண்ணி. எனக்கு இந்தப் பெண் பார்க்கும் விஷயம் பிடிக்கலை. எங்கயோ கோவில், அப்படி இப்படின்னு எங்கயாவது பார்த்தா கூட பரவாயில்லை. அவங்க என்னைப் பார்க்கும் பொழுது நான் என்ன பண்ணட்டும்?” என்று ராதா சித்ராவின் காதில் கிசுகிசுத்தாள்.
“ராதா, இப்படி குதர்க்கமாக பேசக் கூடாது…” என்று சித்ரா ராதவை கண்டித்தாள். ராதாவின் முகம் வாட, அவளைச் சமாதானம் செய்யும் விதமாக, அன்பாகப் பேசினாள் சித்ரா.
“எந்தப் பெண்ணுக்கு தான் பெண் பார்க்கும் வைபவம் பிடிச்சிருக்கு. ஆனாலும் காலகாலமா நடந்துகிட்டு தான் இருக்கு. நீங்க என்னைப் பார்க்க வரலை?”
நிரஞ்சன், தன் தாய், தந்தை, தங்கை குடும்பத்தோடு ஹாலில் காத்திருக்க, “கேட்கிற கேள்விக்கு மெதுவா பதில் சொல்லு.” என்று பல அறிவுரைகளோடு ராதா ஹாலுக்கு அழைத்து வரப்பட்டாள்.
நிரஞ்சனின் தாய் பல கேள்விகளைக் கேட்க, ராதா பணிவாக பதில் கூறினாள். சில பல கேலி பேச்சோடு பெண் பார்க்கும் வைபவம் இனிதாக நிறைவேறியது.
நிரஞ்சன் அமைதியாக ராதாவை பார்த்துக் கொண்டிருந்தான். ராதாவின் எண்ண ஓட்டத்தை நம்மால் கணிக்க முடியவில்லை.
“பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று நிரஞ்சனின் தாய் சத்தமாகக் கூற, நிரஞ்சன் ராதவை பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.
ராதா அங்கு நடப்பவற்றைச் சற்று மிரட்சியோடும், தயக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது, அலுவலகத்தில் இருந்த யதுவின் மொபைல் ஒலிக்க, “யதுநந்தன் ஸ்பீக்கிங்” என்று கம்பீரமாக கூறினான்.
யதுநந்தனின் எதிர்முனையில், “சார், எங்கள் ஸ்கூலில் ஆண்டு விழா உங்களை அழைக்கலாமுன்னு கூப்பிட்டேன்…” என்று தலைமை ஆசிரியர் பணிவாக கூற, யது முகம் சுழித்து மறுப்பாகத் தலை அசைத்தான்.
‘ஸ்கூல் ப்ரோக்ராம் பார்க்கிற அளவுக்கெல்லாம் நேரம் இல்லை.’ என்று எண்ணியவனாக அமைதி காத்தான்.
திடீரென்று, ஞானோதயம் பெற்றவனாக, “எந்த ஸ்கூல்?” என்று கேள்வியாக நிறுத்தினான் யது.
தலைமை ஆசிரியர் பள்ளிக்கூடத்தின் பெயரைக் கூறியவுடன், அவனுக்கு ராதாவின் கண்டிப்பான கண்கள் நினைவு வர, “வருகிறேன்.” என்று கூறினான்.
‘அவளை ஒரு முறை பார்த்தால் என்ன தப்பு?’ என்று அவன் மனம் கூற, ‘பொண்ணுங்க விஷயத்தில் மட்டும் தான் உனக்கு நல்ல பெயர். அதையும் கெடுக்க வேண்டாம்’ என்று யதுவின் அறிவு எச்சரித்தது.
அறிவின் எச்சரிப்பைப் பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு, மனதின் வார்த்தைகளை ரசித்தான் யதுநந்தன்.




