அத்தியாயம் 21
அத்தியாயம் 21
தவறுவது மனித இயல்பு. எல்லோராலும் எல்லா நேரங்களிலும் சரியாக நடந்து கொள்ள முடியாது அல்லவா?
ராதா மட்டும் அதற்கு விதி விலக்கா?
சொல்லிலடங்கா ஆசைகளோடும், கனவுகளோடும் யதுநந்தனின் விருப்பத்திற்காக இந்த வீட்டிற்குள் நுழைந்த ராதா… இன்று யதுநந்தனின் நிம்மதிக்காக சொல்லிலடங்கா வேதனையோடும், கண்ணீரோடும் கிளம்பிவிட்டாள்.
மாலை ஆறு மணி
“ராதும்மா… ராதும்மா…” என்று அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் யதுநந்தன்.
வீடு நிசப்தமாக இருந்தது. யதுநந்தனுக்கு, மனதில் நெருட அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
ராதா அங்கு இல்லாததால், ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தான்.
அதில் ஒரு அறையில், அவன் பிறந்தநாளுக்காக ராதா செய்து வைத்திருந்த அலங்காரம் வெறுமையாகச் சிரித்தது.
‘அட… யது… இப்படி பண்ணிட்டியே? நேத்து நீ அவள் முகத்தைக் கூட பார்த்துப் பேசவில்லை. பார்த்திருந்தால் கண்டுபிடித்திருப்பாய்… மேடம் செம்ம கோபத்தில் இருப்பாங்களோ. எப்படிச் சரி செய்வது?’ என்ற எண்ணம் தோன்ற மெல்லிய புன்னகையோடு தோட்டத்துக்குச் சென்றான்.
அவன் ராதாவை தேடுகிறான், என்று தெரிந்து கொண்ட, வேலையாட்கள், “அம்மா. வீட்டில் இல்லை.” என்று கூற, அவன் கண்கள் சுருங்கியது.
ராதாவிற்கு மொபைலில் அழைக்க, அது சுவிட்ச் ஆப் என்று கூறியது.
யதுநந்தன், சற்று பதட்டமாக, அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.
அவன் கண்ணில் அந்தக் காகிதம் பட்டது. கைகள் நடுங்க அந்தக் காகிதத்தை பிரித்தான்.
என் நந்தனுக்கு,
நந்தன்… நந்தன்… நந்தன்… என்று ஆனந்தமாக அழைக்க ஆசைப் படுகிறேன்.
நீங்கள் பல முறை கேட்டும் நான் உங்களை இவ்வாறு அழைக்கவில்லை. இன்று இந்தக் கடிதத்தின் மூலமாக அழைக்கிறேன்.
நான் என் உடலால் இங்கிருந்து கிளம்புகிறேன். என் மனம்… என் மனம்… சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
என்னைச் சமாதானம் செய்வதற்காகவும், என்னை மகிழ்விப்பதற்காகவும் நீங்கள் உங்களை வருத்திக் கொள்வதை பார்க்கும் சக்தி எனக்கில்லை.
நான் உங்கள் அருகில் இல்லை என்றால்… என்னைப் பற்றிய அழுத்தம் குறைந்து, நீங்கள் சற்று மனநிம்மதியோடு வாழ ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று நான் நம்புகிறேன்.
நமக்குள் கசப்பான உணர்வுகள் வருமுன், இனிதான நினைவுகளோடு நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.
இதற்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. மன்னிப்பு கேட்க கூடிய செயலை நான் செய்யவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய இந்தச் செயல் உங்களுக்கோ, என் குடும்பத்திற்கோ, இந்த உலகத்திற்கோ தவறாகத் தெரிந்தால்… அது உங்கள் பார்வையால் தான்… உங்கள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் விரும்பும்
உங்கள் ராதா… (ராதும்மா)
யதுநந்தனின் கண்கள் கலங்கியது. பதட்டம் மேலோங்கினாலும், ‘நான் பதட்டப்பட அவசியம் இல்லை. ராதா முட்டாளும் இல்லை. கோழையும் இல்லை.’ என்ற எண்ணம் மேலோங்கத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் யதுநந்தன்.
‘நான் நேற்று பேசிய வார்த்தைகள் அவளைக் காயப்படுத்திருக்குமோ? நான் அப்படி என்ன பேசினேன்?’ என்று சுய ஆராய்ச்சியில் இறங்கினான் யதுநந்தன்.
‘என்னால் முடிந்த அளவுக்கு நான் உன்னோடு தான் இருக்கேன் ராதும்மா.’ என்று யதுநந்தன் பேசிய வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தது.
‘என்னை அறியாமல் என் மனநிலையை வெளியிட்டு இருக்கிறேன்.’ என்று வெறுப்பாக உணர்ந்தான் யதுநந்தன்.
‘ஆனால் ராதா இதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாள்.’ என்று அவன் மூளை வேகமாகச் சிந்தித்தது.
‘முதலில் ராதா இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளுவோம்.’ என்ற எண்ணம் மேலோங்க, ஸ்ரீதருக்கு அழைத்தான் யதுநந்தன்.
மொபைலை ஸ்பீக்கர் ஆன் செய்து,
“ஸ்ரீதர். எங்க இருக்க?” என்று குரல் கம்ம கேட்டான்.
“வீட்டில் தான்… என்ன விஷயம்?” என்று அவன் கேட்க, “கொஞ்சம் வெளிய வந்து பேசு.” என்று நிதானமாகப் பேச முயற்சித்தான் யதுநந்தன்.
ஸ்ரீதரிடம் விஷயத்தைக் கூறி, “வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்று கூறினான் யதுநந்தன்.
“நான் இப்பொழுது அங்க வரேன்.” என்று கூறி ஸ்ரீதர் மொபைல் பேச்சை முடித்தான்.
அந்தக் கடிதத்தை மீண்டும் படித்தான் யதுநந்தன்.
‘நான் உங்கள் அருகில் இல்லை என்றால்… என்னைப் பற்றிய அழுத்தம் குறைந்து, நீங்கள் சற்று மனநிம்மதியோடு வாழ ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று நான் நம்புகிறேன்.’ இந்த வரியைப் படிக்கும் பொழுது, யதுநந்தனின் கோபம் விண்ணைத் தொட்டது.
‘இப்படி ராதா எண்ண, என்ன காரணமாக இருக்கும். அவள் எங்கு சென்றிப்பாள்?’ என்று சிந்தித்தபடி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் யதுநந்தன்.
அவன் கண் வளையத்தில், அந்தக் கூஜா விழுந்தது.
அதன் அருகே சென்றான். “குழந்தை இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? நாங்கள் சந்தோஷமாக தானே வாழ்ந்தோம். இதை ஏன் ராதா புரிந்து கொள்ளவில்லை.” என்று கூழாங்கற்கள் நிறைந்த பச்சை கூஜாவிடம் கோபமாக கேட்டான் யதுநந்தன்.
‘என்னைப் பார்க்காமல், என்னிடம் பேசாமல், அவளால் ஒரு நாள் இருக்க முடியுமா?’ என்று கேட்டு வெறுமையாகச் சிரித்தான் யதுநந்தன்.
தன்னை நிதானப்படுத்த, கோபத்தின் வெளிப்பாடாக, ஒரு கூழாங்கல்லை எடுத்து அந்த சிவப்பு கூஜாக்குள் அவன் இட எத்தனிக்கும் பொழுது, சுத்தமாக இருக்கச் சிவப்பு கூஜா கரை படிந்திருப்பதைப் பார்த்தான். கல்லை கீழே வைத்துவிட்டு, அதைக் கூர்மையாக கவனித்தான். ஆங்காங்கே துளி துளியாய் கரை தெரிய, ‘ராதா இங்கு நின்று அழுத்திருக்கிறாள்… எதற்காக அழுத்திருப்பாள்?’ என்ற கேள்வி அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
‘ஒருவேளை… ஒருவேளை…’ என்று எண்ணி அலமாரிக்குச் சென்று கதவைத் திறந்தான் யதுநந்தன்.
அங்கு மிக நேர்த்தியாக இருந்த மெடிக்கல் ரிப்போர்ட், மற்றும் மீன் குட்டி வாங்கி வந்த பையும் நடந்ததைக் கூற, அதை வெளியே எடுத்து கோபமாக வீசினான் யதுநந்தன்.
“ராதா.” என்று கோபமாக கத்தினான்.
‘எனக்குத் தேவையான விஷயத்தை நீங்களே கூற மாட்டிங்களான்னு சொல்லுவியே ராதா. என் மேல் புதிதில் உள்ள நம்பிக்கை… இப்ப ஏன் இல்லாமல் போச்சு?’ என்று கர்ஜனையாக ஆரம்பித்து சோகமாக தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் யதுநந்தன்.
யதுநந்தன் மனதில் கட்டுங்கடங்கா கோபம் வளர்ந்துகொண்டே போனது.
ஸ்ரீதர் யதுநந்தனின் வீட்டிற்கு வர, யதுநந்தன் அவனுக்காக வாசலில் காத்திருந்தான்.
யதுநந்தன் கோபத்தை கட்டுப்படுத்தி, எதுவும் பேசாமல் அந்தக் காகிதத்தை ஸ்ரீதரிடம் கொடுத்தான்.
அந்தக் காகிதத்தை வாசித்த ஸ்ரீதர், “இது என்ன கோழைத்தனம்.” என்று கோபமாக எகிற, மறுப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன்.
“ராதா கோழை இல்லை ஸ்ரீதர். குழந்தை இல்லைன்னு இந்த உலகத்திற்குப் பயந்து அவள் போகவில்லை. நான் அவளை நினைத்து கஷ்டப்படுறேனு போயிருக்கா. ராதா நல்லது செய்தாலும், தவறு செய்தாலும் அது எனக்காக மட்டும் தான் இருக்கும்.” என்று சமாதானமாக கூறினான் யதுநந்தன்.
“இத்தனை கோபத்திலும், உன்னால் ராதாவை விட்டுக் கொடுத்து பேச முடியவில்லை. அப்படி தானே?” என்று யதுநந்தனின் முகம் பார்த்து கேட்டான் ஸ்ரீதர்.
ஸ்ரீதரின் கேள்விக்குப் பதில் கூறாமல், “என் கணக்கு படி, ராதா அவள் டாக்டர் தோழி இருக்கிற இடத்துக்குத் தான் போயிருக்கணும். அவங்க கிட்டத் தான் கடைசியா பேசிருக்கணும்.” என்று யதுநந்தன் யோசனையாகக் கூறி காரை அங்குச் செலுத்தினான்.
“உன்னை மாதிரி கணவர் கிடைக்க, ராதா கொடுத்து வைத்திருக்கணும்.” என்று ஸ்ரீதர் தன்மையாக கூறினான். “ராதாவை மாதிரி மனைவி கிடைக்க… நான் தான் கொடுத்து வைத்திருக்கணும். தவறுகளில் இருந்து திருந்தி வாழ்வதை விட, தவறுகளை சகித்துக் கொண்டு வாழ்வது கஷ்டம் ஸ்ரீதர். என் ராதா எனக்காக அப்படி வாழ்ந்திருக்கா. அதனால் தான் நான் இப்படி மாறி இருக்கேன்.” என்று ராதாவை எண்ணி பெருமையாக கூறினான் யதுநந்தன்.
“ராதாவுக்கு மன அழுத்தம். இந்தச் சமுதாயம் கொடுக்கும் அழுத்தம் அதிகம். குழந்தை இல்லாத ஆண்களை நடத்துவது போல்… இந்தச் சமுதாயம் பெண்களை நடத்துவதில்லை. மனைவியை இழந்த ஆண்களை நடத்துவது போல், கணவன் இழந்த பெண்களை இந்தச் சமுதாயம் நடத்துவதில்லை.” என்று சலிப்பாக கூறினான் யதுநந்தன்.
“அவ்வளவு ஏன்… ஏதாவது பிரச்சனை வந்துட்டா கூட, மருமகள் வந்த ராசி சரி இல்லைனு சொல்லுவாங்க. யார் வீட்டிலாவது மருமகன் வந்த நேரம் சரி இல்லைன்னு சொல்லறாங்களா?” என்று கேள்வியாக நிறுத்தினான் யதுநந்தன்.
“ராதா செய்தது சரின்னு சொல்றியா யது?” என்று ஸ்ரீதர் பரிதாபமாக கேட்க, “நிச்சயமா இல்லை. அவள் தவறுக்கு இதெல்லாம் ஒரு காரணமுன்னு சொல்றேன்.” என்று அமைதியாகக் கூறினான் யதுநந்தன்.
“யானைக்கும் அடி சறுக்கும்! ராதா மட்டும் என்ன, கற்களால் வடித்த சிலையா? இப்படி தான் இருக்கனுமுனு சொல்றதுக்கு…?” என்று ராதாவிற்காக யதுநந்தன் வக்காலத்து வாங்கினான்
யதுநந்தன், ஸ்ரீதரிடம் நிதானமாகப் பேசி வக்காலத்து வாங்கினாலும், யதுநந்தனின் மனதில், ராதாவின் மீது கோபம் கனன்று கொண்டு தான் இருந்தது.
‘ராதாவை, பளார் பளார் என்று அறைந்து, உன்னால் என்னை விட்டு எப்படிப் போக முடிந்தது? என்று கேட்க வேண்டும்.’ என்ற எண்ணத்தோடு காரை செலுத்தினான் யதுநந்தன்.
யதுநந்தன் எண்ணியது போல் ராதா அவள் தோழி தங்கியிருந்த ஹாஸ்டெலில் இருந்தாள்.
அந்த ஒரு நாளில் கலை இழந்து சோர்வாக காணப்பட்டாள் ராதா. ராதாவை பார்த்த யதுநந்தனின் கோபம் மொத்தமும் வடிந்தது.
யதுநந்தன் ராதாவை ஆழமாகப் பார்க்க, ராதா சிலையாக சமைந்து நின்றாள்.
‘நந்தனின் புத்திசாலித்தனமும், வேகமும் அறிந்ததே… ஆனால் இவ்வளவு வேகம்.’ என்று எண்ணி அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் ராதா.
ஒரு நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு, ராதா அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.
கோபத்தில், ஸ்ரீதர் ராதாவை கன்னத்தில் அறைய முற்பட, அவன் கைகளை பிடித்துத் தடுத்து, “அவங்க ராதா யதுநந்தன்.” என்று அழுத்தமாகக் கூறினான்.
“அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. அவங்களே நினைத்தாலும்.” என்று ராதாவை பார்த்து நிதானமாகக் கூறினான்.
ராதா யதுநந்தனை பிடிவாதமாகப் பார்த்தாள். ‘தவறே செய்திருந்தாலும், அவள் ஒரு வார்த்தை பேசிவிட்டால், எல்லாம் சரி ஆகிரும்.’ என்று யதுநந்தன் எண்ண, ராதா தான் செய்ததில் தவறில்லை என்பது போல் பிடிவாதமாக நின்றாள்.
“சரி. வீட்டுக்குப் போய் நிதானமாகப் பேசுவோம்.” என்று ஸ்ரீதர் சமாதானமாக கூற, “நான் எங்கயும் வரவில்லை.” என்று அழுத்தமாகக் கூறினாள் ராதா.
“நீயே வந்தாலும், உன்னை கூட்டிட்டு போக நான் தயாராக இல்லை.” என்று கோபமாக கூறினான் யதுநந்தன்.
“உன்னை எங்கயோ உன் இஷ்டப்படி இருக்க விட முடியாது. நீ உன் வீட்டிற்குப் போ.” என்று யதுநந்தன் கோபமாக கூறினான்.
“சாரி ஸ்ரீதர்…. என்னை விட என் மனைவியை யாரும் நல்ல பார்த்துக்க முடியாதுன்னு நான் நினைத்தேன். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறுன்னு நான் இன்னைக்கு தெரிஞ்சிகிட்டேன். அவங்க நினைப்பதையும் நான் தெரிஞ்சுக்கலை. அவங்களை நான் நல்லா பார்த்துக்கவுமில்லை. உன்னையும், உன் தங்கையும் உங்க வீட்டில் இறக்கி விட்டு விட்டு போறேன்.” என்று வெறுமையான குரலில் கூறினான் யதுநந்தன்.
யதுநந்தன் பேசிய விதத்தில், அவள் நெஞ்சுக் கூடு ரணமானது போல் உணர்ந்தாள் ராதா.
மேலும் எதுவும் பேசாமல், யதுநந்தன் காரை ராதா வீட்டை நோக்கிச் செலுத்தினான் யதுநந்தன்.
ராதா, ஸ்ரீதர் இருவரும் வீட்டிற்குள் செல்ல, யதுநந்தன் மரியாதை நிமித்தமாக உள்ளே சென்றான்.
“ராதா கொஞ்ச நாள் இங்க இருப்பா.” என்று ஸ்ரீதர் கூற, யதுநந்தன் அமைதியாக நின்றான்.
“மாப்பிளை எதாவது பிரச்சனையா?” என்று மீனாட்சி பதட்டத்தோடு கேட்டார் தாயாக.
“ஏன்மா… நான் இங்க வர கூடாதா? வந்தா அவங்க கிட்ட பிரச்சனையான்னு கேட்பீங்களா? அவங்களைப் பார்த்தா பிரச்சனை பண்ணறவங்க மாதிரி தெரியுதா?” என்று தாயிடம் யதுநந்தனுக்காக பரிந்து கொண்டு சண்டைக்குப் போனாள் ராதா.
‘இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.” என்று வெறுமையாக உணர்ந்தான் யதுநந்தன்.
‘என்னுடன் வரேன்ன்னு சொல்லமாட்டா. அதை தவிர, மற்றதெல்லாம் பேசுவா. ‘ என்று எண்ணத்தோடு அவளைக் கோபமாக பார்த்தான் யதுநந்தன்.
ராதா தலை குனிந்து அமைதியாக நின்றாள். பாவம் அவள் அறியவில்லை, அவனுடன் வலுக்கட்டாயமாகச் செல்லும் காலம் விரைவில் வருமென்று…
யதுநந்தன் தலை அசைத்து விடைபெற்றான்.
அன்றிரவு,
‘ராதா… நீ செய்தது சரி தான். பாவம் நந்தன். அவர் எத்தனை நாட்கள் தான் உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே இருக்க முடியும்? கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும். அப்புறம் யோசித்துக் கொள்ளலாம்.’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டு ராதா தன் அறையில் மெத்தையில் தூக்கம் வராமல் புரண்டாள்.
யதுநந்தன் அவன் அறையில், கூஜா அருகே நின்று கொண்டிருந்தான். சிவப்பு கூஜாவில் ஒரு கல்லை வைத்தான். அந்த முதல் கல்லை வெறுப்பாகப் பார்த்தான் யதுநந்தன்.
அவனறியவில்லை இன்னும் பல கற்களை உள் வாங்க அது காத்திருக்கிறது என்று!
‘எத்தனை நாள் அவளால் அங்கு இருக்க முடியும்?’ என்று இறுமாப்போடு எண்ணினான் யதுநந்தன்.
“ராதா அவள் தான் போனாள். அவளாகத்தான் வர வேண்டும்.” என்று அங்கு நீந்திக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்து கூறினான் யதுநந்தன்.
மறுநாள் காலையில், ராதா எழ நினைத்தும், யதுநந்தனின் எண்ணம் மேலோங்க மெத்தையை விட்டு எழ மனமில்லாமல்… சோர்வாகப் படுத்திருந்தாள்.
யதுநந்தன், எழ மனமில்லை என்றாலும், ராதாவின் எண்ணம் மேலோங்க… எழுந்து தோட்டத்தை சுற்றி ஜாக்கிங் சென்று கொண்டிருந்தான்.
‘ராதா இன்று வந்துவிடுவாள்.’ என்ற நம்பிக்கையோடு தன் நாளைத் தொடங்கினான் யதுநந்தன்.
ராதா என்ன செய்ய காத்திருக்கிறாள்?




