அத்தியாயம் 22
அத்தியாயம் 22
ராதாவின் பக்கம் மௌனமாகவே இருக்க, தன் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக, சிவப்பு கூஜாவில் கற்களை நிரப்பிக் கொண்டிருந்தான் யதுநந்தன்.
‘இந்தப் பிரிவு இருவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.’ என்ற எண்ணம், யதுநந்தனுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.
ஒரு மாதம், சென்ற நிலையில்… இரவு நெருங்கும் வேளையில்… யதுநந்தன் அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் மொபைல் ஒலிக்க, “சொல்லு ஸ்ரீதர்…” என்று மொபைலை ஸ்பீக்கரில் ஆன் செய்து தன் வேலைகளைப் பார்த்தபடி, கூறினான்.
“யது… நான் உன்னை பார்க்கணும்.” என்று ஸ்ரீதர் கூற, யதுநந்தன் ஒரு நொடி யோசித்தான்.
“நான் ஆபிசில் இருக்கேன்.” என்று மெதுவாகக் கூறினான் யதுநந்தன்.
“இவ்வளவு நேரம் ஆபீஸ் இல் என்ன பண்ற?” என்று ஸ்ரீதர் வினவ, “வீட்டுக்குப் போனால் மட்டும், என்ன வாழப்போகுது?” என்று வெறுப்பாகக் கேட்டான் யதுநந்தன்.
“அவன் பேச்சை விடுத்து, நான் இப்ப உங்க ஆபீஸ் வரேன்.” என்று கூறி தன் பேச்சை முடித்தான் ஸ்ரீதர்.
தன் வேலைகளை முடித்து விட்டு, தன் இருக் கைகளையும் கோர்த்து தன் விரல்களைப் பார்த்தபடி ஸ்ரீதருக்காக காத்திருந்தான் யதுநந்தன்.
“யது…” என்று அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் ஸ்ரீதர்.
சவரன் செய்யப்படாத முகமும், சோர்வு நிறைந்த அவன் கண்களையும் மனதிற்குள் குறித்துக் கொண்டான் ஸ்ரீதர்.
சுற்றி வளைத்துப் பேச விரும்பாமல், “என்னைக்கு உன் மனைவியை உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போக போற யது?” என்று நேரடியாக கேட்டான் ஸ்ரீதர்.
மெல்லிய புன்னகையோடு, “இதே மாதிரி, உங்க தங்கை கிட்ட, என்னைக்கு அவங்க புருஷன் வீட்டுக்கு போறாங்கன்னு கேட்கலையோ ஸ்ரீதர்?” என்று ஆழமான குரலில் கேட்டான் யதுநந்தன்.
“அவ இப்ப என் தங்கையா இருந்திருந்தா, அவள் கன்னத்தில் பளார்ன்னு ஒன்று கொடுத்து, இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கணும்… மரியாதையா உன் புருஷன் வீட்டுக்குக் கிளம்பி போ… அப்படின்னு சொல்லிருப்பேன்.” என்று தன் பேச்சை நிறுத்தினான் ஸ்ரீதர்.
யதுநந்தன், ஸ்ரீதர் கூறுவது புரிந்து புன்னகையோடு அவனைப் பார்த்தான்.
ஸ்ரீதர் மேலும் தன பேச்சைத் தொடர்ந்தான். “ஆனால் அவங்க இப்ப ராதா யதுநந்தன். எங்களால் கிட்ட நெருங்கக் கூட முடியவில்லை. யார் கூடவும் பேச மாட்டேங்கிறா. சாப்பிட மாட்டேங்கிறா. எங்களுக்கு அவளைப் பார்த்தா பாவமா இருக்கு. என்ன செய்றதுன்னு தெரியலை.” என்று அழுத்தமாக ஆரம்பித்து மேஜையைப் பார்த்தபடி குரல் கம்ம முடித்தான் ஸ்ரீதர்.
“அவளுக்காக யோசிக்கவாது யாரவது இருக்காங்க. என்னைப் பற்றி நினைக்கக் கூட யாரும் இல்லையே.” என்று யதுநந்தன் கோபமாக கூற, “நீ அப்படி நினைக்கிறியா யது?” என்று ஸ்ரீதர் யதுநந்தனின் முகம் பார்த்து கேட்டான்.
“நான் உனக்காக ராதா கிட்ட எவ்வளவோ பேசிட்டேன். ஆனால், அவ என்ன நினைக்கிறானே எனக்குத் தெரியலை. நீ அவளை கூட்டிட்டு போகலைனாலும் பரவாயில்லை. ஒரு தடவை அவளை வந்து பார்த்திட்டு போகலாமே.” என்று ஸ்ரீதர் தன்மையாக கூறினான்.
‘அவளைப் பார்த்துவிட்டு, உங்கள் வீட்டில் அவளை விட்டுவிட்டு என்னால் போக முடியுமா? நான் இப்ப இருக்கும் மனநிலையில் அவளைப் பார்த்தால் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியலை.’ என்று எண்ணினான் யதுநந்தன்.
“ராதாவுக்காக நீ என் கிட்ட இவ்வளவு பேசணுமா ஸ்ரீதர்? நான் அவளை எவ்வளவு மிஸ் பன்றேன்னு உனக்குத் தெரியாது.” என்று கலங்கிய குரலில் கூறினான்.
“தெரியாமல் என்ன? அது தான் உன் முகமே சொல்லுதே. ராதாவும் இப்படி தான் இருக்கா. இரண்டு பேரும் எதற்காக இப்படி பிடிவாதம் பண்றீங்கன்னு தெரியலை.” என்று சிரித்த முகமாகக் கேட்டான் ஸ்ரீதர்.
“நான் வரேன் ஸ்ரீதர்.” என்று தலை அசைத்தான் யதுநந்தன்.
ஸ்ரீதர் வீட்டிற்கு அழைத்துக் கூற, இருவரும் கிளம்பினர்.
விஷயம் அறிந்த ராதா, ஜன்னல் வழியாக அவள் நந்தனின் வரவுக்காக காத்திருந்தாள்.
யதுநந்தன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.
யதுநந்தன் ராதாவை தேடவில்லை. அவள் ஜன்னல் வழியாகத் தான் பார்ப்பாள், என்றறிந்தவன் போல் தன் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினான். யதுநந்தன் பார்ப்பது தெரிந்ததும், ராதா தன்னை மறைத்துக் கொண்டாள்.
யதுநந்தன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. ‘எத்தனை நாள் கழித்து, நான் சிரிக்கிறேன். என் முகத்தில், ராதாவால் மட்டும் தான் புன்னகையை வரவழைக்க முடியும்.’ என்று எண்ணியபடி வீட்டிற்குள் நுழைந்தான் யதுநந்தன்.
ராதா வெளியே வர தயங்கி அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.
“ராதா, மாப்பிளைக்கு தண்ணீர் கொடு.” என்று மீனாட்சி கூற, வேறு வழியின்றி வெளியே வந்தாள் ராதா.
பாதி ஆளாக மாறியிருந்த ராதாவை, அதிர்ச்சியாகப் பார்த்தான் யதுநந்தன்.
‘அப்படி என்ன பிடிவாதம்? இவள் இங்கிருந்து என்ன சாதிக்கிறாள்? என்னுடன் வர வேண்டியது தானே?’ என்று எண்ணியவாறே, யதுநந்தனின் பார்வை அவளைத் தொடர்ந்தது.
‘யதுநந்தன் அருகே சென்று தண்ணீர் கொடுக்கும் பலம் தனக்கு இருக்கிறதா? சர்வ நிச்சயமாக நான் உடைந்து விடுவேன்’ என்ற எண்ணம் தோன்ற, சஞ்சனாவை அழைத்து அவளிடம் தண்ணீர் கொடுத்து அனுப்பிவிட்டாள் ராதா.
கதவருகே நின்று, யதுநந்தனை பார்த்துக் கொண்டிருந்த ராதா, ‘இவர் நான் இல்லை என்றால், ஒரு ஷேவ் கூடவா பண்ண கூடாது? இது என்ன மேட்ச் இல்லாத சட்டை பண்ட்…’ என்று அவனைத் திட்டியவாறு யதுநந்தனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
யதுநந்தன், ஸ்ரீதரிடமும் மற்றவர்களிடமும் பேசி கொண்டிருக்க, ராதா தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘நான் செய்தது தவறோ… சரி தவறாக இருந்தால் என்ன? இது தான் சாக்குன்னு அப்படியே என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பிச்சிட்டு, அவங்க என்னைப் பார்க்க கூட வரக் கூடாதா? இன்னைக்கு அண்ணன் போய் சொல்லித் தான் வந்திருக்கணும். நான் மட்டும் அப்படியே இவங்க வந்த உடன், என் வருத்தம்… என் கோபம் அனைத்தையும் விட்டுவிட்டு அப்படியே வரவேற்கணும். இது என்ன பெண்ணாக படைக்கப்பட்டவளின் சாபக்கேடா?’ என்ற சிந்தனையோடு அமர்ந்திருந்தாள் ராதா.
அவள் சிந்தனை மேலும் தறிகெட்டு ஓடியது.
‘நான் அவங்களுக்காகத் தானே வந்தேன். நான் செய்தது தப்பு என்றால்… டாக்டர் விஷயத்தை என்னிடம் சொல்லாதது… குட்டி மீன் வாங்கி விட்டது… எனக்காகச் செய்தலும் தப்பு தானே…’ என்று தனக்கு தானே முணுமுணுத்தாள் ராதா.
மீனாட்சி உணவு தயார் செய்து யதுநந்தனை டைன்னிங் ரூமிற்க்கு அழைக்க, யதுநந்தன் ஸ்ரீதர், லோகநாதன் இருவரையும் அழைத்தான்.
“இல்லை… மாப்பிள்ளை நீங்களும், ராதாவும் சாப்பிடுங்க.” என்று குறிப்பாக கூற, தலை அசைத்துச் சென்றான் யதுநந்தன்.
யதுநந்தன் அமர்ந்திருக்க, சித்ரா ராதாவை அழைத்து, “ராதா நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடு. நீ சரியாகவே சாப்பிடறதில்லை.” என்று கூறி ராதாவையும் யதுநந்தனோடு அமரச் செய்தாள் ராதா.
ராதா மௌனமாகத் தலை அசைக்க, “அம்மா… தாயே. இந்த மௌன விரதத்தை விடு. அது தான் உன் மாப்பிள்ளை வந்தாச்சே…” என்று சித்ரா கண்டிப்பாக கூற யதுநந்தன் ராதாவை பார்த்து மெலிதாக சிரித்தான்.
சித்ரா யதுநந்தனுக்கு இட்லி பரிமாற எத்தனிக்க, “அண்ணி, அவங்களுக்கு ஓட்டை இல்லாத இட்லி வைங்க…” என்று கூறி தன் தலையை குனிந்து கொண்டாள் ராதா.
சித்ரா இட்லி பரிமாறிய உடன், “அண்ணி, அவங்களுக்கு இட்லிக்குப் பொடி வேணும்.” என்று பொதுவாக கூறினாள்.
அடுத்து சித்ரா, சட்னி பரிமாற, “அவங்களுக்குச் சட்னிக்கு எண்ணெய் வேண்டாம்.” என்று ராதா மீண்டும் கூற, சித்ரா அவளைக் கடுப்பாக பார்த்தாள்.
யதுநந்தன், “நீங்க வைங்க… நான் பார்த்துகிறேன்.” என்று சிரித்த முகமாகக் கூறினான். அவ்வப்பொழுது, ராதாவையும் குறும்பாகப் பார்த்தான்.
சித்ரா ராதவை பார்த்து, “இவ்வளவு நாள் எங்க கிட்ட ஒரு வார்த்தை பேச முடியலை. இப்ப என்ன இவ்வளவு பேச்சு உனக்கு?” என்று சிடுசிடுப்பாக கேட்டு, “வாய் பேசாம சாப்பிடு.” என்று ராதவை பார்த்து அக்கறையாக மிரட்டினாள்.
சித்ரா அடுத்து யதுநந்தனுக்கு சாம்பார் ஊற்ற, “அண்ணி… அவங்களுக்குத் தனியா ஒரு கிண்ணத்தில் தான் சாம்பார் வேணும். நான் எடுத்துட்டு வரேன்.” என்று ராதா சமையல் அறை நோக்கிச் சென்றாள் ராதா.
யதுநந்தன் ‘இவளை என்ன செய்யலாம்?’என்ற எண்ணத்தோடு ராதாவை ஆழமாகப் பார்த்தான்.
ராதா சென்றவுடன், “நான் உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்காதீங்க. யாரவது ஒருத்தர் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகணும். அது யாராக இருந்தால் என்ன? இன்னைக்கு தான் அவ முகத்தில் ஒரு உயிரோட்டம் இருக்கு. நீங்க வா ன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். உங்களோடு வந்துருவா. நீங்க ராதவை கூட்டிட்டு போய்டுங்க.” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள் சித்ரா.
ராதா அங்குக் கிண்ணத்தோடு வர, “உன் மாப்பிள்ளைக்கு எப்படி பரிமாறணும்னு எனக்குத் தெரியலை. உன் பாடு உன் மாப்பிளை பாடு.” என்று கூறி சித்ரா அவர்களுக்குத் தனிமை கொடுத்துச் சென்றாள்.
‘மனம் விட்டுப் பேசினால் எந்தப் பிரச்சனையும் சரி ஆகி விடும்.’ என்ற நம்பிக்கையோடு சித்ரா அங்கிருந்து அகன்றாள்.
சித்ரா சென்றவுடன், “நான் பரிமாறினா நீங்க சாப்பிடுவீங்களான்னு தெரியலியே.” என்று ராதா முணுமுணுக்க, யதுநந்தன் அவளைச் சீற்றமாக பார்த்தான்.
50:50 சரிபாதியாக ஒற்றுமையாக அவர்கள் வாழ்வை அழகாக நகர்த்திய இவர்கள், இன்று சரி பாதியாக எதிர்பக்கமாக நின்று சண்டையிட தயாரானார்கள்.
“என்னை வேண்டாமுன்னு விட்டுட்டு போனது நீ.” என்று யதுநந்தன் கோபமாக கூற, “எங்கையோ போனவளை… அது தான் சரியான நேரமுன்னு உங்க அம்மா வீட்டுக்கு போன்னு அனுப்பிச்சி வச்சது நீங்க…” என்று அழுத்தமாக கூறினாள் ராதா.
“தப்பை நீ பண்ணிட்டு, அதை என் மேல் தூக்கி வைக்கிற?” என்று யதுநந்தன் கடினமாக கூறினான். ராதா மௌனமாக அவனை பார்க்க, “ஓ… நீங்க எங்க போனாலும், தேடி கண்டுபிடிச்சி உங்களை வெத்தலை பாக்கு வச்சி அழைத்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணுமா?” என்று யதுநந்தன் அடுத்த கேள்வியை கோபமாக கேட்டான்.
“அது… சரி… ஒரு மாதம் என்னை பார்க்கணும்னு கூட தோணாத உங்க கிட்ட அதெல்லாம் நான் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.” என்று ராதா உடைந்த குரலில் கூறினாள்.
“நீ வர வேண்டாம். ஆனால், ஒரு கால் பண்ணிருக்கலாமே. நீ கூப்பிட்டு நான் வராமல் இருத்திருப்பேனா? மேடம் உங்களால் அதைக் கூட செய்ய முடியலையே.” என்று யதுநந்தன் குற்றம் சாட்டும் குரலில் கூறினான்.
நம்பிக்கை, புரிதல், அன்பு, விட்டுக் கொடுத்தல், நிறைந்திருந்த இவர்கள் மனதில்… முதல் முறையாக நீயா? நானா? என்ற அகங்காரம் நிறைந்த கேள்வி அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மனதில் புகுந்து கொண்டது.
நான் என்ற அகங்காரமும் அன்பும் போட்டியிட வெல்லப் போவது எதுவோ?
“ஆமாம்… தப்பு… எல்லாத் தப்பும் என் மேல் தான். உங்களைத் தவிர, உலகில் வேற சிந்தனை இல்லாமல் வாழ்ந்ததும்… உங்களையே உலகமாக நினைத்ததும் என் தப்பு… இந்த நிலையிலும், எதற்காக வாழ்கிறேன்… யாருக்காக வாழ்கிறேன்… என்று தெரியாமல் இந்த உடலில் உயிர் இருப்பது தான் பெரிய தவறு. எவ்வளவு கம்பீரமா, தைரியமா இருந்த என்னை இப்படி பலவீனமாகியது உங்கள் அன்பு. நீங்கள் என் மேல் வைத்த பாசம். அதை இன்றும் எதிர்ப்பார்க்கும் என் பலவீனமான மனசு. எத்தனை ஒழுங்காக இருந்தாலும்… கண்டிப்பாக இருந்தாலும்… எவ்வளவு தைரியமாக இருந்தாலும்… நானும் ஒரு சராசரி பெண் தானே.” என்று ராதா உடைந்த குரலில் கூறினாள்.
முதல் நாள் பணம் வாங்க மறுத்து, தன்னை நிற்க வைத்து கேள்வி கேட்ட ராதா யதுநந்தனின் கண்முன் தோன்றினாள். அன்றைய யதுநந்தனின் பேச்சுக்கு ரோஸ் மில்க் கொடுத்து அனுப்பி வைத்த ராதாவை தேடினான்
‘இன்றும் அதே பிடிவாதம். ஆனால் கம்பீரம்?’ என்று எண்ணினான் யதுநந்தன்.
“ராதா, ஏதோ தெரியாமல் செய்துவிட்டாள். நானும் ஒரு மாதம் இவளிடம் பேசாமல் இருந்தது தவறு.” என்ற எண்ணம் தோன்ற, யதுநந்தனின் கோபம் வடிந்து, அன்பு மேலோங்கியது.
“ராதா… கிளம்பு என் கூட வீட்டுக்கு வா. நாம வீட்டில் போய் பேசிக்கலாம்.” என்று குரல் கரகரக்க கூறினான் யதுநந்தன்.
“இப்படி வருத்தப்பட்டு யாரும் என்னை எங்கும் அழைத்துச் செல்ல வேண்டாம். நானும் யார் கூடவும் எங்கும் வரவில்லை…” என்று பழைய ராதாவாக கூற, “ராதா…” என்று கோபமாக கர்ஜித்தான் யதுநந்தன்.
“நீங்க எதுக்கு கோபப்படுறீங்க? நான் கோபப்படணும்… நான் பண்ணது தப்பாகவே இருக்கட்டும். தப்பு பண்ணா உன் வீட்டுக்கு போன்னு சொல்றீங்க? உன் வீடுன்னா? என் வீடு எது? இத்தனை வருஷம் அது தெரியாமல் நான் வாழ்ந்திருக்கிறேன் பாருங்க.” என்று ராதா கோபமாக கேட்டுக் கொண்டே, நடந்த சம்பவங்களின் மனஅழுத்தம் தாங்காமல் மயங்கி விழுந்தாள்.
ராதாவின் பேச்சில் நிம்மதி அடைந்த, யதுநந்தனின் மனம் அவள் மயங்கி விழுந்ததில் ஸ்தம்பித்து நின்றது.
இவர்களைத் துரத்திய விதி, இன்று இவர்களை அரவணைக்கக் காத்திருக்கிறது.
நமக்குத் தீங்கு செய்யும் விதி தானே நமக்கும் நல்லதும் செய்கிறது.
கெடுதல் நடக்கும் பொழுது விதியைப் பழிக்கும் நாம், நல்லது நடக்கும் பொழுது விதியை பாராட்டுகிறோமா?





forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!