arrow_back
50:50 அத்தியாயம் – 4
50:50 chevron_right பகுதி 4 / 25

அத்தியாயம் – 4

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

 அத்தியாயம்  4

 பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்தப் பள்ளிக்கூடம். குழந்தைகள் ஆண்டு விழாவிற்காக தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 தலைமை ஆசிரியர், அங்குள்ள ஆசிரியரிடம், “மேடம், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. யது சார்க்கு நேரில் அழைப்பும் கொடுத்து, டைமிங் உறுதி செய்யணும்.” என்று அவர் அந்த ஆசிரியை பார்த்து கூறினார்.

 அந்த ஆசிரியர் படபடப்பாக உணர்ந்து தலைமை ஆசிரியரை பார்க்க, தலைமை ஆசிரியர் அவரை கேள்வியாக நோக்கினார்.

“சார். யது சார் ரொம்ப வெயிட் பண்ண வைப்பார். அவர் கிட்ட பேசுறது கஷ்டம். குதர்க்கமாகப் பேசுவார்.” என்று அந்த ஆசிரியை தயக்கமாக கூற, தலைமை ஆசிரியர் அவரை யோசனையாகப் பார்த்தார்.

 சில நொடிகள் யோசனைக்குப் பின், “மிஸ். ராதாவை அனுப்புங்கள்” என்று அழுத்தமாகக் கூறினார் தலைமை ஆசிரியர்.

“சார்… அந்த பெண்ணா? நல்ல தான் பேசுவாங்க. ஆனால், அவங்க எப்ப எப்படி பேசுவாங்கன்னு சொல்ல முடியாதே!” என்று அந்த ஆசிரியை அதிர்ச்சியோடு கேள்வியாக நிறுத்த, “அவங்க சமாளிச்சிருவாங்க.” என்று கூறி அந்தப் பேச்சை அத்தோடு முடித்தார் தலைமை ஆசிரியர்.

 இவர்கள் முடிவின் விளைவாக, ராதா யதுவின் அலுவலகத்தை நோக்கிப் பயணித்தாள்.

யதுவின் அலுவலகம்:

“சார். உங்களைப் பார்க்க, ஸ்கூல் டீச்சர் வந்திருக்காங்க. உங்க அப்பாயிண்ட்மெண்ட் இருக்குனு சொல்றாங்க.” என்று தொலைப்பேசியில்   ரிசெப்ஷனிஸ்ட் கூற, ‘அது தான் வரோமுன்னு சொல்லிட்டோம் இல்லை. இன்னும் நம்ம நேரத்தை ஏன் இப்படி வீணடிக்கணும்…’ என்று யோசித்தான் யது.

 தன் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்து, தன் முன் இருக்கும் வேலைகளையும் பார்த்தான் யதுநந்தன்.

“பத்து நிமிடம் கழித்து, அவங்களை வர சொல்லுங்க…” என்று கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கினான் யது.

 பத்து நிமிடங்கள் கடந்து, இன்னும் பல நிமிடங்கள் கழித்து தான் ராதாவிற்கு அழைப்பு வந்தது.

 கதவின் சத்தத்தோடு, “எக்ஸ்க்யூஸ் மீ…” என்ற குரலில் அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான் யது.

ராதாவின் குரலை அவனால் மறக்க முடியுமா?

“வாவ்…வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்? நீங்கன்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணவே வச்சிருக்க மாட்டனே…” என்று யது குரலில் வருத்தத்தோடு கூறினான்.

“மத்தவங்களை காக்க வைக்கும் நல்ல எண்ணமா?” என்று ராதா சிரித்த முகமாகக் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து, “உங்களைக் காக்க வைக்க கூடாதுன்னு நல்ல எண்ணம்…” என்று நாற்காலியில் சாய்ந்து சிரித்த முகமாகக் கூறினான்.

 ராதா மௌனமாக நிற்க, “ஏன் நிக்கறீங்க? ப்ளீஸ்… டேக் யுவர் சீட்…” என்று அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியைக் கை காட்டி கூற, ராதா அமருகையில், “நான் யாரையும் நிற்க வைத்து பேசுறதில்லை…” என்று அவள் கண்களை பார்த்து ஆழமாகக் கூறினான்.

“இன்னக்கு உங்க டர்ன் போல தெரியுதே?” என்று ராதா அவன் முகம் பார்த்து கேள்வியாக நிறுத்த, “ச்ச… ச்ச… நான் அறிவுரை பண்ற அளவுக்குப் பெரிய ஆளும் இல்லை. என்கிட்டே அவ்வளவு ஒழுங்கும் இல்லை.” என்று வார்த்தையில் தன்னடக்கமாகவும், குரலில் நக்கலோடும் கூறினான் யது.

 ராதா மௌனமாக அவன் அறையை அளவிட, “என்ன இவ்வளவு பெரிய அலுவலகத்தை நிர்வகிக்கும் மனிதரை அன்றைக்கு அப்படி நிற்க வைத்து கேள்வி கேட்டுட்டோமேன்னு யோசிக்கிறீங்களா? பரவால்லை விடுங்க…” என்று யது தோழமையான குரலில் கூறினான்.

 ராதா மறுப்பாக தலை அசைத்து, “இல்லை… அப்படி யோசிக்கலை. இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் நீங்கள், அன்னைக்கி இதை விடப் பொறுப்பாக நடந்திருக்கலாமுன்னு தோணுச்சு.” என்று ராதா கண்களில் குறும்போடு கூறினாள்.

“ஹா… ஹா…” என்று பெருங்குரல் எடுத்துச் சிரித்தான் யதுநந்தன்.

 ‘தான் இப்படி மனம் விட்டுப் பேசி சிரித்து, எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. நான் பாட்டி, தாத்தாவையாது என் கூட இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்திருக்க வேண்டும்.’ என்ற எண்ணம் தோன்றியது யதுவிற்கு.

“உங்களுக்குத் தைரியம் ஜாஸ்தி. என் அறையில் இருக்கீங்க. நான் உங்களை என்ன வேணாலும் செய்ய முடியும். நான் நினைத்தால் தான் நீங்க இங்கிருந்து பத்திரமா போக முடியும். இருந்தாலும் என்னையே விமர்சிக்கிறீங்க.” என்று புருவம் உயர்த்தி யது வினவ, அவன் முன்னே இருக்கும் வேலைகள், ‘உனக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கு உனக்கு இந்தப் வெட்டி பேச்செல்லாம் தேவையா?’ என்று யதுவை பரிதாபமாகப் பார்த்தது.

 யதுவிற்கு வேலை நினைப்பெல்லாம் இருப்பது போல் தெரியவில்லை.

 ராதா அமைதியாக அமர்ந்திருக்க, “என்ன எதுவும் பேச மாட்டேங்கிறீங்க?” என்று யது ராதாவின் கண்களைப் பார்த்து கேட்டான்.

“உங்களைப் பார்க்க தனியாக உங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கேன். உங்களைப் பற்றி விசாரிக்காமல் உங்க இடத்துக்கு வந்திருக்கேன் நினைக்கிறீங்களா?” என்று ராதா புன்னகையோடு கேட்டாள்.

“அட! என்னைப் பற்றிய விசாரிப்பா? உங்க க்ரீன் பௌல், ரெட் பௌல் கான்செப்ட் இல் என் க்ரீன் பௌல் காலியாகவும், ரெட் பௌல் நிரம்பியும் வழிந்திருக்குமே? அதுவும் உங்க கொள்கைகளுக்கு ரொம்ப கஷ்டம். நிறைய ரெட் பௌல் தேவைப்படுமே!” என்று யது யோசனையாகக் கேட்டான்.

 ராதா அழகாக மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“எல்லார் கிட்டயும் நல்ல விஷயங்களும் இருக்கும். கெட்ட விஷயங்களும் இருக்கும்.” என்று பொதுவாக கூறினாள்.

“கெட்ட விஷயங்களில் நல்லதைப் பார்க்கிற சிறந்த குணம் உங்ககிட்ட இருக்கு…” என்று யது வாஞ்சையாகக் கூற, அவனை நேரடியாகப் பார்த்து, “நல்ல விஷயத்தில் தவறை பார்க்கும் மோசமான குணம் என்கிட்ட அதிகமாக இருக்கு.” என்று ஒதுக்கமாகக் கூறினாள் ராதா.

 அவள் பேச்சில் இருந்த விலகலை உணர்ந்து கொண்ட யது ராதாவை ஆழமாகப் பார்த்தான்.

 ராதா தான் கூற வந்த விஷயத்தை கூறுமுன் அவளை அமைதியாக இருக்குமாறு செய்கை காட்டி, “எங்க ஆபீஸ்ல ரோஸ் மில்க் கிடைக்காது, மில்க் ஷேக் சொல்லட்டுமா…” என்று யது ஆர்வமாக வினவினான்.

“நான் இன்னைக்கி பசியோடு வரலை.” என்று ராதா கூற, “களைப்பா இருக்கீங்க.” என்று மெல்லிய நகையோடு கூறி தொலைப்பேசியில் இரண்டு மில்க் ஷேக் கூறினான் யது.

“அன்னைக்கி நீங்க சாப்பிட சொல்லும் பொழுது, நான் வேண்டாமுன்னு சொல்லலை.” என்று யது புன்னகையோடு கூற, ராதா மேலும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

 ‘இவன் பேச்சை வளர்க்கிறான்.’ என்று ராதாவின் உள்ளுணர்வு கூற ராதா தர்ம சங்கடமாக உணர்ந்தாள்.

 அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு, பேச்சை வேறு பக்கம் திசை திருப்பினான் யது.

“அந்த பொண்ணு எப்படி இருக்காங்க?” என்று யது மெதுவாக கேட்க, “காலில் நல்ல அடி. இப்ப பரவாயில்லைன்னு டாக்டர்ஸ் சொல்லிருக்காங்க. ஏதாவது பண உதவி வேணுமான்னு கேட்டோம். தேவை இல்லை நாங்க பார்த்துப்போமுன்னு சொல்லிட்டாங்க…” என்று ராதா தீவிரமான குரலில் கூறினாள்.

 ராதாவின் குரலில் அன்றைய கோபம் இல்லை என்று உணர்ந்தவனாக, மேலும் பேசினான் யது.

“அவங்களுக்கு முழுசா குணம் ஆகுதான்னு பாரத்துக்கோங்க. இல்லைனா நான் அவங்களுக்கு உண்மையா உதவி பண்ண முடியும்… நமக்கு நிறைய டாக்டர்ஸ் தெரியும். எவ்வளவு செலவானாலும் சரி பண்ணிடலாம்.” என்று யது நிதானமாகக் கூறினான்.

 யதுவின் குரலில் அன்றைய கர்வம், உதாசீனம் இல்லை என்று எண்ணி ராதா அவனை உணர்ச்சி துடைத்த பார்வையில் பார்த்தாள்.

 அவள் பார்வையின் பொருள் புரியாமல், “ஐ ரியலி மீன் இட்…” என்று அடிபட்ட பார்வையோடு கூறினான் யது.

“தேங்க்ஸ்…” என்ற ராதாவின் ஒற்றை சொல், அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

 அவள் ஆண்டு விழாவின் தேதி, நேரம் பற்றி பேசவும், “இருங்க. மேனேஜர் கூப்பிடுறேன். என் வேலைகளை பார்த்துட்டு சொல்றேன்…” என்று கூறி யது தொலைப்பேசியில் மனேஜரை அழைத்தான்.

 அப்பொழுது அங்கு வந்த நிரஞ்சன், ராதாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“ஹே ராதா.” என்று அவளிடம் கூற, ராதா நிரஞ்சனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 யதுநந்தன் இவர்களைக் குழப்பமாக பார்க்க, “சார். அவங்க என் வருங்கால மனைவி…” என்று நிரஞ்சன் வெட்கப் புன்னகையோடு கூறினான்.

 அந்த ஒரு நொடியில் யதுநந்தனின் மனதில், அன்றைய ராதாவை பற்றிய குழப்பமான மனநிலை நினைவு வந்தது. இன்று அவனுக்கு சில விஷயங்கள் தெளிவாக புலப்பட்டது. யதுநந்தனின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் வெளிப்படவில்லை.

“இங்க எங்க?” என்று நிரஞ்சன் ராதாவை பார்த்து கேள்வியாக நிறுத்தினான். “ஸ்கூல் பங்ஷன்க்கு யது சார் இன்வைட் பண்ண வந்தேன்.” என்று ராதா பதிலளிக்க, “அதற்காக, நீங்க எதுக்கு வரணும்?” என்று நிரஞ்சன் கேள்வி கேட்டு யதுவின் முன் தன் உரிமையை நிலைநாட்ட முயற்சித்தான்.

“நான் ஏன் வரக்கூடாது?” என்று ராதா நிரஞ்சன் முகத்தைப் பார்த்து அப்பாவியாகக் கேட்டாள்.

 ‘இது என்ன விதண்டாவாதமான பதில்…’ என்று எண்ணி, மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் நிரஞ்சன் அமைதியாக நின்றான். ‘என்ன ஒரு வெள்ளந்தியான பதில்…’ என்று எண்ணினான் யது.

       நிரஞ்சனிடம் தேவையான விஷயங்களை கேட்டுக் கொண்டு, யது அவனுக்கு வேறு வேலை கொடுக்க, அப்பொழுது மில்க் ஷேக் வந்தது.

 நிரஞ்சன் வேறு வழி இல்லாமல் தன் பணியைத் தொடர சென்றான்.

 ‘ஒரு டீச்சருக்கு இவ்வளவு மரியாதையா? யாரையும் மதித்துப் பேசாத இவர் மில்க் ஷேக் கொடுத்து விருதோம்பல் செய்யும் அளவுக்கு ராதாவிற்கு செல்வாக்கு உண்டா? இவர்களது இந்தச் சந்திப்பு தான் முதல் சந்திப்பா?’ என்று பல கேள்விகள் நிரஞ்சனின் மனதில் தோன்றியது.

 இந்த சந்தேகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘வேலை நிமித்தமாக தெரிந்திருக்கும்…’ என்று முடிவுக்கு வந்தவனாக தெளிவான சிந்தனையோடு தன் வேலையைத் தொடர சென்றான் நிரஞ்சன்.

 ராதா மில்க் ஷேக் குடித்து முடிக்க, அவளைப் பார்த்தபடி, “நிரஞ்சன் ரொம்ப லக்கி…” என்று யதுநந்தன் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கூறினான்.

 பல நேரங்களில் பெண்களுக்கு சொல்லாத விஷங்களும் புரியும்.

 இன்று ராதாவால் அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

 ‘இனி இவனை சந்திக்க கூடாது…’ என்று எண்ணியவளாக, “தேங்க்ஸ்…” என்று கூறி, ராதா எழுந்து கொண்டாள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 5

அத்தியாயம்  5 ராதா எழுந்துகொள்ள, அவளை வழி அனுப்ப மனமில்லால் அவளை மென்மையாகப் பார்த்தபடி அந்த கேள்வியை கேட்டான் யது.“பெரியவங்க பார்த்து வைக்கிற துணை நிச்சயமா பொருத்தமான துணையா இருக்குமா ராதா?" என்று யது பட்டும்படாமலும் கேட்டான். 'நான் எதை கேட்க நினைக்கிறேன்? என்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்