arrow_back
50:50 அத்தியாயம் 5
50:50 chevron_right பகுதி 5 / 25

அத்தியாயம் 5

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  5

 ராதா எழுந்துகொள்ள, அவளை வழி அனுப்ப மனமில்லால் அவளை மென்மையாகப் பார்த்தபடி அந்த கேள்வியை கேட்டான் யது.

“பெரியவங்க பார்த்து வைக்கிற துணை நிச்சயமா பொருத்தமான துணையா இருக்குமா ராதா?” என்று யது பட்டும்படாமலும் கேட்டான்.

 ‘நான் எதை கேட்க நினைக்கிறேன்? என் ஆழ் மனம் எதை கேட்க நினைக்கிறது? என்ன பதில் எதிர்பார்க்கிறேன்? நான் கேட்க நினைப்பதை ராதா புரிந்து கொள்வாளா?’ என்று பல கேள்விகள் யதுவின் மனதில் தோன்ற யது ராதாவை அமைதியாகப் பார்த்தான்.

 ராதா அமைதியாக அவனைப் பார்க்க, “என்ன டீச்சர், நீங்க பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டுட்டேன்னா?” என்று யது புன்னகையோடு கேட்டான்.

         “சாரி…” என்று கூறிக்கொண்டே நிரஞ்சன் உள்ளே நுழைய, “சார் கேட்ட கேள்வி என் காதிலும் விழுந்திருச்சு.” என்று புன்னகையோடு ராதவை பார்த்து நின்றான் நிரஞ்சன்.

 ‘நிச்சயம் பொருத்தமாக இருக்கும்…’ என்று பதில் கூற வேண்டும் என்ற ஆணை நிரஞ்சனின் கண்களில் இருப்பது போல் ராதா உணர்ந்தாள்.

 யதுவின் கண்களை ஆராய முற்பட்டு தோற்று போனாள் ராதா.

“எந்த தம்பதிகளும், ஒருவருக்காக ஒருவர் உருவாக்கப்படுவதில்லை… அன்பான தம்பதிகள் உருவாக்கப்பட்டது போல் வாழ்கிறார்கள்… நம்ம வாழ்க்கை நாம் வாழும் விதத்தில் தான் இருக்குன்னு நான் நம்பறேன்.” என்று கூறி ராதா அங்கிருந்து தலை அசைத்து விடைபெற்று வேகமாகக் கிளம்பினாள்.

 தான் கூறிய வார்த்தைகள் தன் வாழ்க்கையை திசைமாற்றப் போகும் விதம் தெரியாமல் பதிலைக் கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றாள் ராதா.

 ‘இவளிடம் கேள்வி கேட்டது என் தப்பு’ என்று எண்ணி தன் வேலையில் கவனத்தை திருப்பினான் யதுநந்தன்.

 ‘இப்ப இவ என்ன சொல்றா?’ என்று நிரஞ்சன் அறையை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் ராதாவை குழப்பமாக பார்த்தான்.

 நிரஞ்சனின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, “என்ன நிரஞ்சன் எப்பவுமே மொபைல் தானா?” என்று கேலியாக பேசினான் யது.

 ‘ஜாலியா தான் பேசுவார். ஆனால் நாம் உரிமை எடுத்துக் கொள்ள கூடாது. வேலை விஷயத்தில் மனிதர் கிடுக்குபிடி…’ என்று எண்ணி நிரஞ்சன் யதுவை அமைதியாகப் பார்த்தான்.

 நிரஞ்சனின் பதிலுக்காக யதுநந்தன் அவன் முகத்தைப் பார்க்க, “இல்லை சார். மேடம் டீச்சர். அவங்க அப்பா ரிடைர்ட் ஹெட் மாஸ்டர். குடும்பமே ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் மாதிரி இருக்காங்க.” என்று நிரஞ்சன் சோகமாக கூறினான்.

“காலையில் பேச முடியாது. ஜாக்கிங், யோகா, வீட்டு வேலைன்னு பிஸி ஆக இருக்காங்க. அப்புறம் ஸ்கூலில் ரூல்ஸ்…மொபைல் சுவிட்ச் ஆப்… பண்ணிருவாங்க. சாயங்காலம் டியூஷன் கிளாஸ் எடுக்கிறாங்க. நைட் மொபைல் யூஸ் பண்ண மாட்டங்களாம். கேட்டா, கல்யாணத்துக்கு அப்புறம் பேச தானே போறோம்ன்னு சொல்றாங்க. எங்க வீட்டிலேயும் பெண் கிட்ட இப்ப பேச வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன்…” என்று நிரஞ்சன் யதுநந்தனிடம் கொண்டுவந்த கோப்புகளை காட்டியபடியே கூறினான்.

 நிரஞ்சனின் பேச்சு யதுவிற்கு ரசிக்கவில்லை. யதுநந்தன் தன் கவனத்தை வேலையில் செலுத்த முயன்றாலும் ராதாவின் முகம் அவன் கண்முன் தோன்றியது. அலை பாய்ந்து கொண்டிருந்த மனதை அடக்கி முழு கவனத்தையும் வேலையில் செலுத்தினான் யதுநந்தன்.

 வேலையை முடித்துவிட்டு, தன் நாற்காலியில் சாய்வாக அமர்ந்தான் யதுநந்தன்.

‘எந்த தம்பதிகளும், ஒருவருக்காக ஒருவர் உருவாக்கப்படுவதில்லை… அன்பான தம்பதிகள் உருவாக்கப்பட்டது போல் வாழ்கிறார்கள்…’ என்று ராதா கூறிய வார்த்தைகள் அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

யதுநந்தன் தன் மேஜையின் மீதிருந்த பேனாவை சுழற்றியபடி, தீவிரமாக யோசித்தான்.

 ‘தன்னிடம் இருப்பதைப் பறிக்கும் சக்தி இறைவனுக்கு இருந்திருக்கலாம்! ஆனால் என் ஆசையை நிராசையாக மாற்றும் சக்தி யாருக்கும் கிடையாது.’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டான் யதுநந்தன்.

 இருள் கவ்வ, அலுவலகத்தில் இருந்து, வீட்டிற்குச் சென்றான் யதுநந்தன்.

 வழக்கமாக அவனைச் சூழ்ந்து கொள்ளும் தனிமை இன்று யதுவை சூழ்ந்து கொள்ளவில்லை.

அவன் அருகே ராதா இருப்பது போன்ற பிரமை தோன்றியது.

 ராதா அருகே இருப்பது போல் தோன்றுவது இன்பமாக இருந்தாலும், அது பிரமை என்று தோன்றிய நொடி யதுவின் கோபம் அதிகரித்தது.

 கோபமாக, வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

 காலையில் கண்ணியமாக நடந்து கொண்ட யதுநந்தன் இப்பொழுது இல்லை.

 மது அருந்த எண்ணி, வீட்டில் இருக்கும் பாட்டிலை திறந்தான் யதுநந்தன். ‘ராதா இதற்கும் சட்டம் பேசுவாள்…’ என்ற எண்ணம் தோன்ற பாட்டிலை மூடி வைத்தான் யது.

 ராதாவின் அருகே நிரஞ்சன் நிற்பது போல் காட்சி தோன்ற, தன் கையிலிருந்த பாட்டிலைச் சுவரின் மீது தூக்கி எறிந்தான் யதுநந்தன்.

 பாட்டில் சுக்கு நூறாகச் சிதறி விழுந்தது. தன் ஆசையும் இதைப் போல் உடைந்து விடுமோ என்ற அச்சம் யதுவை சூழ்ந்தது.

 ‘இருமுறையே சந்தித்த பெண்ணால், என்னை இப்படி மாற்ற முடியுமா?’ என்று யதுவின் மனம் கேட்க, ‘அவள் எனக்கு வேண்டும் என்ற எண்ணமா? இல்லை ராதா எனக்கு இல்லை என்ற ஏமாற்றத்தின் கோபமா?’ என்று சுய ஆராய்ச்சியில் இறங்கினான் யதுநந்தன்.

 ‘நான் அவளை மறந்திருந்தாலும், அவள் ஏன் இன்று என் அலுவலகத்திற்கு வந்தாள்?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.

 “அதுவும் சாதாரண மேனேஜர் நிரஞ்சனை மணந்து கொள்கிறேன் என்று கூறுவதற்காகவா?” என்று வெறி பிடித்தார் போல் கத்தினான் யதுநந்தன்.

 “நான் ஏன் ராதாவை சந்திக்க வேண்டும். ராதா எனக்காக, அவள் எனக்காக மட்டும் தான்… அவள் நந்தனின் ராதா.” என்று தனக்கு தானே கோபத்தில் உறுமினான்.

‘என்னை விட, நிரஞ்சன் எந்த விதத்தில் உசத்தி?’ என்ற கேள்வி யதுநந்தனின் மனதில் எழுந்தது.

 ‘எனக்கென்று யாரும் இல்லை. அவனுக்கென்று தாய் தந்தை இருப்பதாலா?’ என்ற எண்ணம் யதுவிற்குள் சொல்லிலடங்கா வேதனையைக் கிளப்பியது.

 ‘அவன் என்னை விட எத்தனைப் படி கீழ்… என்று எடுத்துக் காட்டுகிறேன்.’ என்று சூளுரைத்து அதற்கான வேலைகளை பற்றி சிந்தித்தான் யதுநந்தன்.

 நாட்கள் அதன் போக்கில் நகர, ஆண்டு விழாவின் நாளும் வந்தது.

ராதா பச்சை நிற மெல்லிய பட்டுப் புடவையில் அங்கும் இங்கும் குழந்தைகளோடு அலைந்து கொண்டிருந்தாள்.

ராதாவின் முகத்தில் இருந்த கவனம், அவள் கண்களில் இருந்த கணக்கீடு இன்று நடந்து கொண்டிருக்கும் விழாவில் ராதாவிற்கு பெரும் பங்கு இருப்பதைப் பறை சாற்றியது. யதுநந்தனின் கண்கள் யாரும் அறியா வண்ணம் ராதாவை உரிமையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

 ராதாவை மனதில் கொண்டும், அழைத்துவிட்டார்களே என்றும் தான் யதுநந்தன் அங்கு வந்திருந்தான். நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில், குழந்தைகள் யதுநந்தனின் மனதைக் கவர்ந்து விட்டார்கள். குழந்தைகளின் பாடல் தேன்மழையாக எங்கும் இனித்தது. பரதநாட்டியம் முதல் இன்றைய நவீன நடனம் வரை குழந்தைகளின் திறமை ஆசிரியர்களின் உழைப்பைப் பறை சாற்றியது.

 இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப கருத்து சொல்லும் நாடகம், நகைச்சுவை நாடகம், தமிழின் பெருமை பேசும் நாடகம் என பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டது.

 அந்த மாலைப் பொழுது யதுநந்தனுக்கு மறக்க முடியாத மாலைப் பொழுதாக அமைந்தது.

 யாரும் எதிர் பாராவண்ணம் விழா முடியும் வரை யதுநந்தன் பொறுமையாக அமர்ந்திருந்தான்.

 விழா முடிந்து தலைமை ஆசாரியரைப் பாராட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் யதுநந்தன்.

தலைமை ஆசிரியர், ஆனந்தத்தில் உச்சியில் இருந்தார்.

 அப்பொழுது பதட்டமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் ராதா கண்ணில் பட, அவரிடம் விடைபெற்று ராதாவை நோக்கிச் சென்றான் யதுநந்தன்.

“என்ன ஆச்சு?” என்று யதுநந்தன் தன் கையில் கார் சாவியை சுழட்டியபடியே வினவினான்.

“வண்டி ஸ்டார்ட் ஆகலை. அண்ணன், அப்பா இரண்டு பேரும் கால் எடுக்கலை. அது தான் ஆட்டோவிற்க்காக பார்த்துட்டு இருக்கேன்.” என்று ராதா சாலையை பார்த்தபடி கூறினாள்.

“எல்லாரும் கிளம்பும் நேரம். ஆட்டோ கிடைப்பது கஷ்டம். நான் ட்ரோப் பண்றேன்” என்று யதுநந்தன் கூற, ராதா அவனைத் தயக்கமாக பார்த்தாள்.

 அப்பொழுது, ராதாவின் அலைபேசி ஒலிக்க, “என்ன அம்மா சொல்றீங்க?” என்று ராதா பதட்டமாக கேட்டாள்.

 சில நிமிட உரையாடலுக்குப் பின், யதுநந்தன் அருகே வந்தாள் ராதா.

 ராதாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன். ராதாவின் முகத்தில் உள்ள சோர்வு அவனை வாட்டியது. சில நிமிடங்கள் முன் வரை அன்று மலர்ந்த பூவாக ஜொலித்த அவள் முகம் வாடியிருக்க, “ராதா என்ன ஆச்சு?” என்று தன்மையாக கேட்டான் யதுநந்தன்.

“அப்பாவுக்கு நெஞ்சு வலி. எல்லாரும் ஹாஸ்பிடலில் இருக்காங்க. என்னை ஹாஸ்பிடலில் ட்ராப் பண்ண முடியுமா?” என்று சோர்வாக கேட்டாள் ராதா.

“வாங்க.” என்று கூறி வண்டியைக் கிளப்பினான்.

 ராதா எதுவும் பேசும் மனநிலைமையில் இல்லை. அவளைச் சமாதானம் செய்யும் விதம் தெரியாமல் அமைதியாகக் காரை செலுத்தினான் யதுநந்தன்.

 ராதாவின் நண்பன் என அறிமுகமாகி, அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருந்தான் யதுநந்தன்.

“என்ன நடந்தது?” என்று கேட்டு தெரிந்து கொண்ட ராதா, தன் தாய்க்கு ஆதரவாக அவர் அருகே அமர்ந்து கொண்டாள்.

 சித்ரா, சஞ்சனா இருவரும் வீட்டில் இருக்க, தேவையான வேலைகளை ஸ்ரீதரும், யதுநந்தனும் செய்து கொண்டிருந்தனர்.

 ராதாவின் தந்தை ஆபத்தான கட்டத்தை தாண்ட, மருத்துவமனையில் யதுநந்தனை தனியாகச் சந்தித்தாள் ராதா.

 யதுநந்தனின் சட்டையை பிடித்து, “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கோபமாக கேட்டாள் ராதா. யதுநந்தன் அமைதியாக ராதாவை பார்க்க, “தெரியாத மாதிரி நடிக்க வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். ஏன் இப்படி செய்தீங்க?” என்று மீண்டும் கோபமாக கேட்டு யதுநந்தனை முறைத்துப் பார்த்தாள்.

 ராதாவின் கேள்வி புரியாமல், ‘இவள் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்னால் தீங்கு விளைவிக்க முடியுமா?’ என்று எண்ணி யதுநந்தன் ராதாவை பரிதாபமாக பார்த்தான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 6

அத்தியாயம்  6 ராதா யதுநந்தனின் சட்டையை பிடித்துக் கொண்டு, “ஏன் இப்படி பண்ணீங்க?" என்று கோபமாக கேட்டாள். ராதா தன்னை குற்றம் சாட்டுவது யதுவிற்கு வருத்தத்தை அளிக்க, அவள் தன்னை கேள்வி கேட்கும் முறை கட்டுக்கடங்கா கோபத்தை உண்டு பண்ணியது. அவள் கைகளை கொத்தாகப் பிடித்து…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்