அத்தியாயம் 1
அத்தியாயம் 01
ஆஃபீஸ் அறையில் தனது சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி யாரையோ அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தான் அமர். இருபத்தி எட்டு வயது ஆண்மகன். இன்றைய இளைஞர்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக வேஷ்டி சட்டை அணிந்திருந்தான். கண்களில் ஒரு தீட்சண்யம். முகத்தில் ஒரு தேஜஸ். அவன் அழைத்துக் கொண்டிருந்த மனிதர் அழைப்பை ஏற்றிருப்பார் போலும். முதலில் ஸலாம் சொன்னவன் சட்டென்று பேச ஆரம்பித்தான்.
“கரீம் மாமா, கல்யாண வீட்டுக்குக் காய்கறி போயிடுச்சா?”
“போயிடுச்சுப்பா.”
“இன்னும் போய் சேரலைப் போல இருக்கே? எனக்கு இப்போ கால் பண்ணினாங்க.”
“வழியில ஏதாவது தாமதமாகியிருக்கும், நீ கவலைப்படாதே, டைமுக்கு எல்லாப் பொருளும் போய் சேர்ந்திடும்.”
“கொஞ்சம் உங்க ட்ரைவருக்கு கால் பண்ணிப் பாருங்க மாமா, டைமுக்குப் பொருள் போய் சேரலைன்னா எம் பெயர் கெட்டுப் போயிடும்.”
“அதெல்லாம் ஒன்னும் நடக்காது, நான் என்னென்னு இப்பவே பார்க்கிறேன், அப்புறம் அமர்…”
“சொல்லுங்க மாமா.”
“இன்னைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வாப்பா.”
“ஏன் மாமா? ஏதாவது விசேஷமா?”
“ஏன்டாப்பா? நீ மாமா வீட்டுக்கு வர ஏதாவது விசேஷம் வேணுமா?”
“அப்பிடியில்லை மாமா…” அமர் ஒரு தினுசாகச் சிரித்தான். இந்த கரீம் மாமாவின் மகள் மஹிராவைத்தான் அமர் கல்யாணம் பண்ணுவதாக இருக்கிறது. அதில் கரீமிற்கும் அவர் மனைவி சல்மாவிற்கும் அவ்வளவு பிடித்தம். உண்மையைச் சொன்னால் அவர்கள் இருவரும்தான் இந்தப் பேச்சையே ஆரம்பித்தார்கள்.
“மாமா! மஹியோட லெவல் இப்போ வேற.” இந்தப் பேச்சை முதல்முதலாகத் தன்னிடம் கரீம் சொன்னபோது அமர் இப்படித்தான் ஆச்சரியப்பட்டான். ஏனென்றால் மஹிரா இப்போது இருப்பது ரஷ்யாவில். இலங்கையில் மருத்துவப் படிப்பிற்கு அவள் தெரிவாகாததால் மகளை வெளிநாடு அனுப்பிப் படிக்க வைத்தார் கரீம். அவரது பொருளாதாரம் அதற்கு இடம் கொடுத்தது.
கரீம் ஊரிலேயே மிகப்பெரிய தனவந்தர். கிழக்கிலங்கையை வசிப்பிடமாகக் கொண்டவர். மட்டக்களப்பிற்கு அண்மையில் அமைந்துள்ள ராயபுரம் இவர்களது சொந்த ஊர். காய்கறி வியாபாரம்தான் அவரது பிரதான தொழில். ஊருக்கு ஒதுக்குப்புறமாக பல ஏக்கரில் தோட்டங்கள் அவருக்குண்டு. அமரின் தந்தையின் காலத்திலிருந்து இவர்களுக்குள் நல்ல நட்புண்டு.
“அவ என்ன பெரிய படிப்புப் படிச்சாலும் எப்பவும் அவ நம்ம மஹிதான் அமர்.”
“மாமா, எதுக்கும் நீங்க ஒன்னுக்கு ரெண்டு தடவை இதை நல்லா யோசிச்சுக்கோங்க.” அமர் எவ்வளவு எடுத்துச் சொன்னபோதும் கரீமும் அவர் மனைவியும் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இப்படியொரு தங்கமான பையனைத் தவறவிட அவர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.
அமரின் தந்தை காலமாகிப் போனபோது அமருக்கு வயது இருபது. தம்பி ரெஹானுக்கு வயது பதினேழு. அந்தச் சோக சம்பவம் நடப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பாக அமரின் தாய் காலமாகிவிட்டார். மனைவி மேல் மிகவும் பாசம் வைத்திருந்த மனிதருக்கு மனைவியின் மறைவை ஐந்து வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தன் இரண்டு மகன்களையும் அனாதைகளாக்கிவிட்டு அவரும் போய் சேர்ந்துவிட்டார். அன்றிலிருந்து தகப்பனின் கேட்டரிங் தொழிலைக் கையில் எடுத்தவன்தான் இந்த அமர்.
சொந்தமாக இருந்த வீடும் தொழிலும் அவனுக்கு அவனது பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகள். தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தது. பெரிய வீடு இல்லை என்றாலும் இரு ஆண்பிள்ளைகள் வாழத் தாராளமான இடம். அப்பாவின் தொழில், ஆனால் சமையல் தொழில். அதில் அமர் எந்த வருத்தமும் கொள்ளவில்லை. உயர்தரத்தில் ஒரு முறை பரீட்சை எழுதியவனுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. இரண்டாம் முறை எழுதுவதற்கு அவனது குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. படிப்பிற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தவன் தொழிலில் இறங்கிவிட்டான்.
கிழக்கு இலங்கையில் இன்றைக்கு எந்தக் கல்யாண வீடு, விசேஷம் என்றாலும் அங்கு அமரின் கேட்டரிங் ஆட்கள்தான் சமையல். விதம் விதமாக, புதிய முறையில் உணவுப் பதார்த்தங்களைத் தயாரிப்பதில் இவர்கள் பிரசித்தி பெற்றிருந்தார்கள். இன்றைக்கு இருபத்தி எட்டு வயதில் பொருளாதார ரீதியில் கரீமிற்கு நிகரான இடத்திற்கு அமர் வந்திருக்கின்றான் என்றால் அந்த வளர்ச்சிக்குப் பின்னால் அவனது கடுமையான உழைப்பு இருக்கிறது.
தான் படிக்காத படிப்பைத் தன் தம்பிக்கு இன்று வழங்கி இருக்கிறான் தமையன். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவன் இப்போது இங்கிலாந்தில் வணிக மேலாண்மைத் துறையில் பட்டமேற்படிப்புப் படிக்கிறான். தாய் தந்தை இல்லையே என்ற குறையைத் தவிர ஆண்டவன் அவர்களுக்கும் வேறு எந்தக் குறையும் வைக்கவில்லை. அண்ணனும் தம்பியும் பாசத்தோடு வாழ்ந்தார்கள்.
“உங்கம்மாவை நான் எப்பவும் தங்கச்சின்னுதான் கூப்பிடுவேன் அமர், அது வெறும் வார்த்தை இல்லை, கூடப் பொறக்கலையே தவிர உங்கம்மா எனக்குத் தங்கச்சிதான், உங்கப்பா என்னோட மச்சான்தான், நீங்க ரெண்டு பேரும் என்னோட தங்கச்சி பசங்கதான்.” இது கரீம் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். முதலில் தாயையும் பிற்பாடு தந்தையையும் இழந்து நின்ற இந்த இரு பிள்ளைகளுக்குத் துணையாக இருந்தது கரீமும் அவர் மனைவியும்தான். இவர்களின் வளர்ச்சி, நல்லது, கெட்டது என அனைத்திற்கும் கூட நின்றது இவர்கள்தான்.
அன்றைய வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அந்த ப்ளாக் ஆடியை நோக்கி வந்தான் அமர். வாட்டசாட்டமான ஆண்மகன். அந்த வயதிற்கே உரிய களை முகத்தில் தெரிந்தது. உழைக்கத் தயங்காத மனிதன் என்பதை அவனது உரமேறிய உடம்பு சொன்னது. கொஞ்சம் பொது நிறமாகத்தான் இருப்பான் இளையவன். குழந்தையாக இருக்கும் போது நல்ல நிறமாக இருப்பானாம். கரீம் அடிக்கடி அதைச் சொல்வார்.
“தம்பீ, நீ சின்னப் பையனா இருக்கும் போது நல்ல செவசெவேன்னு இருப்பேடா, இப்போ எப்பிடி இப்பிடிப் பொது நிறமா மாறிட்டே?!”
“நம்ம ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு இது ஒன்னுதான் எனக்குக் குறை மாமா, அதோட நான் எப்பவும் அடுப்புக்குப் பக்கத்துல நிற்கிறவன், எனக்கு எங்கிருந்து கலர் வர?”
“உனக்கென்ன அமர்! ராஜா மாதிரி இருக்கேடா!” பெற்ற தந்தையைப் போல வாஞ்சையோடு சொல்வார் கரீம். ஆனால் அமரின் தம்பி ரெஹான் அப்படியில்லை. நல்ல நிறமாக இருப்பான். அது போதாதென்று இப்போதைய இங்கிலாந்து வாசம் அவனை இன்னும் மெருகேற்றி இருந்தது.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் மனதுக்குள் வந்து நின்றாள் மஹிரா. கரீமின் மூத்த மகள். அந்த மனிதருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் இஷான். அவனுக்கும் அமரின் வயதுதான். இரண்டு பேரும் ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறான். அடுத்தது இரண்டும் பெண் பிள்ளைகள். இருவரும் படிப்பில் நல்ல சுட்டி. விஞ்ஞானத் துறையைத் தெரிவு செய்தார்கள். மூத்தவள் மஹிக்குத் தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. போதிய அளவு மதிப்பெண் கிடைக்காமல் போகவும் பெண் துவண்டு போனது.
“எதுக்கும்மா இப்பிடி வருத்தப்படுற? உனக்கு ஆண்டவன் ஒன்னைத் தடுக்கிறான்னா அதுல ஏதோவொரு நலவு இருக்கு, ஆண்டவன் குடுக்கிறதை நாம ஏத்துக்கணும்.” கரீம் எவ்வளவு சொல்லியும் மகள் தெளியவில்லை. தன் பிடியிலேயே உறுதியாக நின்றுவிட்டாள். மகளின் நிலையைப் பார்க்க முடியாத தந்தை அங்கே இங்கேயென்று விசாரித்து வெளிநாடு அனுப்ப முடிவு செய்தார்.
“என்னங்கப் பேசுறீங்க?! பொம்பிளைப் பிள்ளையை எப்பிடி அவ்வளவு தூரம் தனியா அனுப்புறது? படிச்சதெல்லாம் போதும், சீக்கிரமா ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாண ஏற்பாட்டைப் பண்ணுங்க.” இது சல்மா. ஆனால் மஹிரா தன் தந்தையின் மனதைக் கரைத்துவிட்டாள்.
“பாவம் சல்மா, பொண்ணு ஆசைப்படுது, நமக்கிட்டப் பணந்தான் இருக்கே.”
“இப்போப் பணம் இல்லைங்கப் பிரச்சினை, வயசுக்கு வந்தப் பொண்ணை எப்பிடித் தனியா அனுப்புறது? நாட்டுக்குள்ளன்னாப் பரவாயில்லை, இது வெளிநாடு, என்னப் பண்ணுறீங்க நீங்க?!” சல்மாவின் பேச்சு அந்த விஷயத்தில் எடுபடவில்லை. மஹிரா தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டாள். இப்போது இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த ப்ளாக் ஆடியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இப்போது புன்னகை அரும்பியது. மஹிரா பார்க்க அழகாக இருப்பாள். இப்போது வெளிநாட்டு வாசமும் சேர்ந்திருந்தது. அன்றைக்கு ஒரு நாள் மாமாவின் வீட்டிற்குப் போனபோது சல்மா சாதுர்யமாக மகளின் தற்போதைய புகைப்படம் ஒன்றை இவனிடம் காட்டியிருந்தார்.
“தம்பி… இது மஹி கூட படிக்கிற பொண்ணாம், யாழ்ப்பாணத்துப் பொண்ணாம், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்துக்கிறோம்மான்னு சொன்னா.” தகவல் சொல்வது போல மகளின் புகைப்படத்தை இவனிடம் காட்டினார் மாமி. இவனும் பார்க்காதது போல பார்த்துக் கொண்டான். நாட்டில் இருந்ததை விட இப்போது இன்னும் அழகாக இருந்தாள். இன்னும் கண்ணிற்குள் நின்றது அந்த முகம்.
“தம்பி, ஏதாவது சாப்பிடுறீங்களா?” இவன் வீட்டிற்கு வந்ததும் கேட்டார் இன்பம். தூரத்து உறவினர். இவர்களுக்கு உதவியாக இவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார். அவரது சொந்தப் பெயர் ஆயிஷா. ஆனால் அவரை எல்லோரும் ‘இன்பம்’ என்றுதான் அழைத்தார்கள்.
“இன்பம் உங்கக் கூடவே இருக்கட்டும் அமர், நல்ல மாதிரியான பொம்பளை, பொறுப்பா உன்னையும் ரெஹானையும் பார்த்துக்குவா, அவளுக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லை.” இதுவும் கரீமின் ஏற்பாடுதான்.
“இல்லைம்மா, குளிச்சுட்டு வந்தர்றேன், மாமா அவங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க, அங்கப் போகணும்.”
“சல்மா எனக்கும் ஃபோன் பண்ணினா, அடுத்த மாசம் பொண்ணு வர்றாளாமில்லை? சந்தோஷமாச் சொன்னா, சீக்கிரம் கல்யாண ஏற்பாடுகளைப் பண்ணு சல்மான்னு நானும் சொன்னேன்.” இவனை அவன் அறைக்குள் போக விடாமல் பேசிக்கொண்டிருந்தார் இன்பம். முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. இவனையும் ஆழம் பார்ப்பது போலப் பேசிக் கொண்டிருந்தார்.
“தம்பி ஃபோன் பண்ணிச்சு, அவங்கிட்டயும் விஷயத்தைச் சொல்லிட்டேன், நீயும் லீவு போடுற மாதிரிப் பார்த்துக்கோப்பான்னு சொல்லியிருக்கேன்.” மளமளவென திட்டங்கள் தீட்டினார் இன்பம்.
“பார்க்கலாம்மா.” பிடி கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டு உள்ளே போனான் அமர். மனதுக்குள் குப்பென்று ஒரு சந்தோஷம் பரவியது. மஹிரா நாட்டிற்கு வருகிறாள் என்ற செய்தி அவனை மிகவும் சந்தோஷப்படுத்தியது.
எப்போதும் கரீமின் வீட்டிற்கு அவ்வளவு சுலபத்தில் அமர் போகமாட்டான். வயதிற்கு வந்த இரு பெண்கள் அந்த வீட்டில் இருப்பதாலோ என்னவோ ரெஹான் இயல்பாக அங்கு போகும் அளவிற்கு அமரின் போக்குவரத்து இருக்காது. அத்தோடு தொழிலில் அவன் எப்போதும் பிஸியாக இருப்பதும் அதற்கு ஒரு காரணம். கரீமின் இரண்டு பெண்களுமே அழகான பெண்கள்தான். நன்றாகப் படிப்பவர்கள். கூடவே வளர்ந்ததால் அவர்களை எப்போதுமே இந்த வீட்டுப் பையன்கள் இருவரும் ஒரு சகோதர வாஞ்சையோடே பார்ப்பார்கள்.
இந்தத் திருமணப் பேச்சை முதன்முதலாக கரீம் எடுத்தபோது உண்மையிலேயே அமர் திகைத்துப் போனான். கூடவே வளர்ந்தவளை எப்படித் திருமணம் செய்து கொள்வது?! அதுமட்டுமல்லாது மஹி டாக்டருக்குப் படிக்கிறாள். அவன் சமையல் தொழில் பண்ணுகிறான். இவர்கள் இருவருக்கும் எப்படி ஒத்துப்போகும்?! ஆனால் வாழ்க்கைக்கு அது எதுவும் முக்கியமில்லை என்று கரீம்தான் எடுத்துச் சொன்னார். ஒருவேளை தன் மகளையும் இப்படித்தான் சமாதானம் செய்திருப்பாரா? இல்லை, மஹிரா சட்டென்று சம்மதம் சொல்லி இருப்பாளா? எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் அவனைத் தொழில் முழுதாக இழுத்துக் கொள்ளும்.
குளியலை முடித்தவன் புதிய வேஷ்டி சட்டைக்கு மாறினான். சிகையை சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தபோது இன்பம் கையில் சூடான பானத்தோடு காத்திருந்தார். எதையோ பேச நினைப்பவர் போல இவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தார்.
“என்னம்மா?”
“தம்பி, சின்னவனுக்கே வயசு இருபத்தி அஞ்சு முடியப் போகுது, காலாகாலத்துல அவனுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணணும், இப்பிடித் தொழில் தொழில்னு அலையாம கொஞ்சம் நீங்களும் உங்களைப்பத்தி யோசிக்கணும்.”
“ம்… சரிம்மா.”
“உங்க மாமா கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சா நீங்களும் தயங்காம சட்டுப் புட்டுன்னுப் பேசிடுங்க, இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடியே ஒத்தையில திரியுறது? உங்க வயசுப் பசங்க எல்லாம் புள்ளையும் குட்டியுமா அலையுறாங்க, உங்கம்மா உயிரோட இருந்திருந்தா இப்பிடியெல்லாம் உங்களைத் தனியா இவ்வளவு காலத்துக்கு விட்டிருப்பாங்களா?” எதைப் பேசினால் அமரிடம் காரியமாகும் என்று தெரிந்து பேசினார் இன்பம்.
“சரிம்மா.” பானத்தை அருந்தி முடித்தவன் வெளியே நின்றிருந்த காரிற்கு வந்தான். இன்பம் சொல்வதும் சரியென்றுதான் தோன்றியது. அம்மா போன பிற்பாடு அந்த இடம் இன்னும் காலியாக இருக்கிறது. என்னதான் இன்பம் சொந்தத் தாய்போல இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டாலும் அவ்வப்போது மனது தாயின் மடி தேடும். ஆனால் அந்த சுகத்தை இவன் எங்கேயென்று தேடுவான்! தனக்கு மனைவி என்று வருபவளால் மட்டும்தான் அந்த இடத்தை நிரப்ப முடியும்.
நேராக கரீமின் வீட்டை நோக்கிப் போனது அந்த ப்ளாக் ஆடி. ஊரின் மையப்பகுதியில் பெரிய வீடொன்றைக் கட்டியிருந்தார் மனிதர். தனது மூன்று பிள்ளைகளுக்கும் கைநிறைய கொடுக்கும் அளவிற்குச் சொத்துகள் சேர்த்து வைத்திருக்கிறார். ஊரிற்குள் அவருக்கு நல்ல பெயருண்டு. அவர் வீட்டில் பெண் எடுப்பது என்பது உண்மையிலேயே அமருக்கு கௌரவமான விஷயம்தான். அவர் நினைத்திருந்தால் தனது பெண்ணிற்கு ஒரு பெரிய டாக்டரை மாப்பிள்ளை ஆக்கியிருக்கலாம். ஆனால் அவரின் தெரிவு அமர்தான். அவர் மட்டுமல்ல, சல்மாவின் ஓட்டும் அமருக்குத்தான்.
கரீமின் மூத்த மகன் இஷான் இவனோடு படித்தவன் என்பதால் இந்தத் திருமணத்தைப் பொறுத்தவரை அவனைப்பற்றி அமர் நினைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்தத் திருமணத்தைப் பற்றி மஹிராவின் நிலைப்பாடு என்னவென்று அமருக்கு இதுவரைத் தெரியாது. ஆனால் அவளின் சம்மதம் இல்லாமல் கரீம் மாமா இந்த விஷயத்தில் இறங்கியிருக்க மாட்டார் என்பது மட்டும் அவனுக்கு உறுதி. அடுத்தது அவர்கள் வீட்டுக் கடைக்குட்டி ஆல்யா. பி எஸ்ஸி இரண்டாம் வருடம் படிக்கிறாள். இவன் பார்க்க வளர்ந்த பெண். குட்டைச் சட்டைப் போடும் வயதிலிருந்து அவளை இவனுக்குத் தெரியும். குறும்புக்காரி, குண்டுக் கன்னங்களோடு பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். கொஞ்சம் வளர்ந்த பிறகு இவனிடம் அதிகம் பேசமாட்டாள்.
இப்போதெல்லாம் எங்கேயாவது பார்த்தால் ஒரு புன்னகையோடு கடந்துவிடுவாள். அவள் மனதில் தன்னைப்பற்றிய அபிப்பிராயம் என்னவாக இருக்கும்? தன் அக்காவின் கணவராகத் தன்னை அவள் ஏற்றுக் கொள்வாளா?!
ஏதேதோ சிந்தித்தபடி காரை அந்த வீட்டின் முன்பாக நிறுத்தினான் இளவல். வீட்டிற்கு முன்னால் நல்ல விசாலமான தோட்டம் இருந்தது. இறங்கி உள்ளே போகும் போதே இதமான உணர்வொன்று உள்ளுக்குள் பரவியது. அதை அனுபவித்தபடி வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினான்.
“யாரது?” இளங்குரலொன்று உள்ளிருந்து வந்தது. இது ஆல்யாவின் குரல். பல்கலைக்கழக விடுமுறைக் காலங்களில் மட்டும்தான் அவள் வீட்டிலிருப்பாள். இப்போது விடுமுறைக் காலமா என்ன?
“அஸ்ஸலாமு அலைக்கும்.” தன் வரவை அறிவிக்கும் விதமாக வாசலில் நின்றபடியே சத்தமாக ஸலாம் சொன்னான். இப்போது அவள் தலை ஜன்னல் வழியாக இவனை எட்டிப்பார்த்தது. அடுத்த நிமிடம் சட்டென்று வாசல் கதவு திறந்தது.
“வாங்க…” முன்பெல்லாம் இவனோடு வாய்க்கு வாய் பேசும் சிறுபெண் இப்போது பெரிய பெண் போல தலையைக் குனிந்த படி வரவேற்றது. வந்த சிரிப்பை இவன் அடக்கிக் கொண்டான்.
“மாமா இல்லையா ஆல்யா?”
“இல்லை, ஆனா நீங்க வருவீங்க, வந்தா கொஞ்ச நேரம் உட்காரச் சொன்னாங்க, அவசர வேலை ஒன்னு வரவும் வெளியே போறாங்கன்னு சொல்லச் சொன்னாங்க.” தலையைக் குனிந்த படிதான் இப்போதும் வந்தது பதில். முக்காடு பாதி முகத்தை மறைத்திருந்தது. சுடிதார் அணிந்திருந்தாள்.
“உட்காருங்க.” அவள் சொல்லவும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான். இவனுக்கும் ஆல்யாவிற்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் எப்போதும் ஒரு குழந்தையைப் பார்ப்பதைப் போலவே அவளைப் பார்ப்பான். அவளும் முன்பெல்லாம் இவனோடு சரளமாகப் பேசுவாள். ஆனால் இப்போதுதான் ஏதோ பெரிய பெண் போல தலையைக் குனிந்த படி இவன் முகம் பார்க்காமல் பேசுகிறாள்.
“படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?”
“ம்… நல்லாப் போகுது, நான்… அம்மாவை வரச் சொல்றேன்.” என்றவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் உள்ளே போய்விட்டாள். அமருக்குச் சிரிப்பு வந்தது. இவன் பெற்றோர்கள் உயிரோடு இருந்த காலத்தில் இரு வீடுகளுக்கும் இடையில் நல்ல போக்குவரத்து இருந்தது. பிள்ளைகள் சிறுவர்களாக இருந்ததும் அதற்கொரு காரணம்.
கரீமின் மூத்த மகன் இஷானுக்கும் அமருக்கும் இடையே நல்ல நட்புண்டு. இருவரும் தங்களுக்குள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள். கேட்டரிங் தொழிலை இவன் கையில் எடுத்தபோது நண்பனது படிப்பு நின்று போனது இஷானுக்கு வருத்தம்தான். ஆனாலும் அமரை பெரிதும் ஊக்கப்படுத்தியதும் அவன்தான். மஹிராவைப் பார்க்கும் போது தோழமை உணர்வொன்று உருவாகும். அதிகம் பேசாவிட்டாலும் ஒரு புன்னகையோடு கடந்துவிடுவான். ஆனால் இந்தக் கடைக்குட்டி அப்படியில்லை. நன்றாக இவனோடும் ரெஹானோடும் வாயடிக்கும். மல்லுக்கு நிற்கும். சில நேரங்களில் அவளுக்கும் அவள் அண்ணனுக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் இவனிடம் வந்து புகார் சொல்லும்.
“எங்கண்ணா என்னைத் திட்டுறான், அடிக்கிறான் அமர் மச்சான்.” என்று கண்ணைக் கசக்கும் போது இவனுக்கு அவள் மேல் அவ்வளவு பிரியம் உண்டாகும்.
“ஏன்டா மச்சான் இப்பிடிப் பண்ணுறே? சின்னப் பொண்ணுடா அவ.” நண்பனை அமர் கண்டிப்பான்.
“அவளா சின்னப் பொண்ணு? குட்டிச் சாத்தான்டா அவ! அம்மா அப்பாக்கிட்ட என்னை மாட்டி விடுறாடா.”
“அவ மாட்டி விடுற அளவுக்கு நீ என்னப் பண்ணினே?”
“நான் அதெல்லாம் ஒன்னும் பண்ணலைடா மச்சான்.” அண்ணாவின் டெனிம் பாக்கெட்டில் இருந்த துண்டு சிகரெட்டைப் பார்த்துவிட்டு அம்மாவிடம் இவள் மாட்டி வைக்க அது வீட்டில் பெரிய பிரச்சனை ஆகியிருந்தது. தங்கை மேல் கோபம் கொண்டவன் அவள் தலையில் நங்கென்று கொட்டியிருந்தான்.
“குட்டிப் பிசாசே! என்னையாடீ மாட்டி விடுறே? உனக்கு இன்னைக்கு இருக்கு!”
என்று அவளை நான்கு சாத்து சாத்தியிருந்தான். பெரியவள் மஹிரா இந்த விஷயங்களில் எல்லாம் தலையிடமாட்டாள். தானுண்டு, தன் படிப்புண்டு என்று வாழும் ரகம். அவளது ஒரேயொரு ஆசை, இலட்சியம், கனவு எல்லாம் தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பவள் இதுபோன்ற சின்னத்தனமான சர்ச்சைகளில் ஈடுபடமாட்டாள்.
“வாப்பா அமர்.” சல்மா இவனை வரவேற்கவும் சட்டென்று சோஃபாவிலிருந்து எழுந்தான் இளவல். அழகான வாயில் புடவை அணிந்திருந்தார். தலையில் இருந்த முக்காட்டைச் சரி பண்ணிக்கொண்டார்.
“உட்காருப்பா, மாமா இப்போ வந்திருவாங்க, காய்கறி போன லாரியில ஏதோ பிரச்சினைன்னு கால் வந்திச்சு, அதான் போயிருக்காங்க, இப்போ வந்திருவாங்க.” சல்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே கரீமின் கார் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
“அதோ! மாமா வந்துட்டாங்க, ரெஹான் எப்பிடி இருக்கானாம்? முன்ன மாதிரி இப்பெல்லாம் ஃபோன் பண்ணுறதே இல்லை.”
“கொஞ்சம் பிஸியாகிட்டான் மாமி, எங்கிட்டப் பேசியும் ஒரு வாரம் ஆச்சு, படிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்குதுண்ணான்னு அன்னைக்குப் புலம்பினான்.”
“தம்பி வந்து ரொம்ப நேரமாச்சா?” காரின் சாவியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு இவனருகில் வந்து உட்கார்ந்தார் கரீம். கொஞ்சம் பருமனான உடம்பு. வெள்ளைச் சட்டை, வெள்ளை லுங்கி அணிந்திருந்தார்.
“இல்லை மாமா, இப்பதான் வந்தேன்.” என்றவனையே சிறிது நேரம் பார்த்திருந்தார் கரீம். சில நொடிகள் அந்த இடத்தில் கனமான அமைதி நிலவியது. எதையோ பேச ஆயத்தம் செய்பவர் போல இருந்தது பெரியவரின் முகம். சின்ன வயதிலேயே தாயையும் அதன் பிற்பாடு தந்தையையும் இழந்தாலும் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்திருக்கும் அந்தச் சிறு பையனைப் பார்த்து அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அமரின் வளர்ச்சியை முழுதாக அறிந்த ஒரு மனிதர் உண்டென்றால் அது கரீம்தான். இத்தனை வளர்ச்சிக்கு அப்புறமும் வழிதவறிப் போகாமல் இருக்கும் அந்த வாலிபனைத் தன் மகளுக்கு மாப்பிள்ளை ஆக்கிவிடுவதில் குறியாக இருந்தார் பெரியவர்.
“அமர், அடுத்த மாசம் மஹி நாட்டுக்கு வர்றா.” நேரடியாகப் பேச்சிற்கு வந்தார் மனிதர்.
“மஹிக்கும் வயசு இருபத்தி அஞ்சு ஆச்சு, படிக்கணும்னு ஆசைப்பட்டா, இப்போ படிப்பும் முடிஞ்சு போச்சு, இதுக்கு மேலயும் தாமதிக்க வேணாம்னு நாங்க நினைக்கிறோம், நீ என்ன சொல்றே?”
“மாமா… இதுல நான் சொல்ல எதுவுமில்லை, ஆனா…”
“மனசுல இருக்கிறதைத் தாராளமாச் சொல்லுப்பா.”
“இல்லை… நீங்க எதுக்கும் இன்னொரு தடவை மஹிக்கிட்ட இதைப்பத்திப் பேசுங்களேன்.”
“ஏன் இதையே திரும்பத் திரும்பச் சொல்றே அமர்? நாங்க எங்கப் பொண்ணுக்கிட்டக் கேட்காம மாப்பிள்ளைப் பார்ப்பமா? அதோட, மஹி ஏன் உன்னை வேணாம்னு சொல்லப் போறா?”
“என்னன்னுத் தெரியலை மாமா, நீங்க இந்தப் பேச்சை ஆரம்பிச்ச நாள்ல இருந்து எனக்குள்ள ஓடுற கேள்வி இதுதான்… மஹி இப்போ ஒரு டாக்டர், நான்… சமையல்காரன்.” இதை அமர் சொன்னபோது கரீம் வாய்விட்டுச் சிரித்தார். சல்மாவின் முகத்திலும் ஒரு புன்னகைத் தோன்றியது.
“தம்பி, சமூகத்துல உன்னோட இடம் என்னன்னு உனக்குத் தெரியலை, தெரிஞ்சா நீ இப்பிடிப் பேசமாட்டே.” பெரியவரின் வார்த்தைகளின் அர்த்தம் அமருக்கும் புரிந்தது. இன்றைய இளம் பெண்களின் பார்வை அவனை ஆசையோடு தொடர்வதை அவனும் அறிவான். ஆனாலும் தான் ஒரு சமையல்காரன் என்பதை அவன் ஒருபோதும் மறப்பதில்லை.
வெள்ளை வேஷ்டி சட்டையில் ஆஜானுபாகுவாக, வாட்டசாட்டமாக ப்ளாக் ஆடியில் வந்திறங்கும் அந்த இளைஞனை இளம் பெண்கள் பார்ப்பது இயற்கைதான். ஆனால் அவன் செய்வது சமையல் தொழில் என்பதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இது அமருக்குள் எப்போதும் தோன்றும் கேள்வி. தன் உயரம் என்ன என்பதை அவன் அறிவான். ஆனால் அது தான் கரண்டி பிடித்ததால் வந்த உயரம் என்பதை அவன் குறைவாக நினைக்காவிட்டாலும் இன்றைய இளம் சமுதாயம் மனதில் எந்தச் சுணக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக் கொள்ளுமா?!
“மாமா… எதுக்கும் நீங்க இன்னொரு தடவை மஹிக்கிட்ட இதைப்பத்தித் தெளிவாப் பேசிடுங்க, எனக்கு… என்னவோ இதை உங்கக்கிட்டச் சொல்லணும்னு தோணுது, நாளைக்கு வேற எந்தப் பிரச்சினையும் வந்திரக்கூடாது மாமா.” என்றவன் எழுந்து போய்விட்டான்.
இவர்கள் ஹாலில் உட்கார்ந்த படி பேசிக் கொண்டிருந்ததை தனது அறையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் ஒற்றைக் கோடாக இறங்கியது. அந்தக் கண்களில் உலகத்துச் சோகமெல்லாம் நிரம்பி வழிந்தது!




