அத்தியாயம் 02
அத்தியாயம் 02
அமர் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக அவனிடம் வந்தார் இன்பம். அவர் முகத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு. இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அண்ணன் தம்பி இருவர் மேலும் எந்தச் சுயநலமும் இல்லாத அன்பைப் பொழியும் ஜீவன்.
“தம்பி, சாப்பிடுறீங்களா?”
“இல்லைம்மா, கொஞ்சம் லேட்டாகட்டும்.”
“மாமா என்ன சொன்னாங்க?” அதற்கு மேல் அவரால் பொறுக்க முடியவில்லைப் போலும்.
“மஹி அடுத்த மாசம் நாட்டுக்கு வர்றாளாம், கல்யாணத்தை எப்போ வெச்சுக்கலாம்னு கேட்டாங்க.”
“நல்லது நல்லது, நீங்க என்ன சொன்னீங்க?” அவர் முகம் பூரித்துப் போனது.
“எதுக்கும் இன்னொரு தடவை மஹிக்கிட்ட இதைப்பத்தித் தெளிவாப் பேசுங்கன்னு சொன்னேன்.”
“ஏன்? என்னாச்சு தம்பி? எதுக்காக அப்பிடிச் சொன்னீங்க?”
“அம்மா, வெளிநாட்டுக்குப் போய் பெரிய படிப்பெல்லாம் படிச்சு மஹி இப்போ டாக்டர் ஆகியிருக்கா, அவளுக்கு இந்தச் சமையல்காரனைக் கட்டிக்க விருப்பம் இருக்கணுமில்லை?”
“சமையல்காரன்னா என்னத் தரக்குறைவா? உங்களுக்கு என்னக் குறை? எதுக்காக நீங்களே உங்களை இப்பிடிக் குறைச்சுப் பேசுறீங்க?”
“நான் பேசலைம்மா, நான் என்னைக்குமே நான் பண்ணுற தொழிலைக் குறைவா நினைச்சதில்லை, ஆனா அதே நினைப்பு எனக்கு வரப்போறவளுக்கும் இருக்கணும்னு நான் எப்பிடி எதிர்பார்க்கிறது? அதைவிட ஒரு சாதாரண பொண்ணைக் கட்டிக்கிட்டா நல்லதுன்னு எனக்குத் தோணுது, நான் நினைக்கிறது தப்பா?” இளையவனின் கேள்வியில் இன்பம் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அமர் சொல்வதை அவர் எப்படி மறுக்க முடியும்!
“எம்மேல இருக்கிற பாசத்துல மாமாவும் மாமியும் முடிவெடுத்து, ஒருவேளை அது மஹிக்குப் புடிக்காம இருந்தா நாம என்னம்மா பண்ணுறது? அதால ஆறுதலா முடிவெடுக்கிறது நல்லதுன்னு தோணுது.”
“அதுவும் சரிதான்.” என்றவரின் குரல் உள்ளே போயிருந்தது. அமரின் திருமணத்தை நெடுநாளாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் இன்பம். இந்தத் திருமணத்தை எடுத்து நடத்த அமரின் பெற்றோர் இல்லை என்பதால் இதைப்பற்றி எப்போதும் சல்மாவிடம் பேசுவார். அவர்கள்தானே ஏதாவது செய்ய வேண்டும்? ஆனால் இன்றைக்கு இளையவன் பேசிய பேச்சை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!
“ஏன் தம்பி? இந்த… பெரிய பெரிய ப்ளேன்ல எல்லாம் சாப்பாடு குடுப்பாங்களாமே? அதையும் ஒரு சமையல் கம்பெனிதானே பண்ணும்? அப்போ அந்தக் கம்பெனியோட முதலாளி என்ன குறைஞ்ச ஆளா? அவரு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணினா தப்பா?” இன்பம் எங்கே வருகிறார் என்று அமருக்குப் புரிந்தது. அவர் அருகில் வந்தவன் அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“அம்மா, நீங்க டெய்லி எனக்காகவும் தம்பிக்காகவும் ஆண்டவன்கிட்ட எவ்வளவு பிரார்த்தனைப் பண்ணுறீங்கன்னு எனக்குத் தெரியும், எனக்காக இல்லைன்னாலும் உங்களுக்காகவாவது ஆண்டவன் எனக்கொரு நல்லப் பொண்ணைத்தான் தருவாரு, நீங்க எதை நினைச்சும் வருத்தப்படாதீங்க.” என்றான் இதமாக.
இன்பத்தின் கண்கள் இப்போது கலங்கிப் போயின. முதிர்கன்னியாக, யாரின் ஆதரவும் அற்றிருந்த அவருக்குத் தாய் என்னும் ஸ்தானத்தையும் கொடுத்து இந்த வீட்டின் பொறுப்பையும் கொடுத்து அவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று சொன்னவன் இந்த அமர். அவனை, அவன் மனைவியை, நாளைக்கு அவனுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை எப்படியெல்லாம் தாங்க வேண்டும் என்று அவருக்கொரு பட்டியலே உண்டு.
“எதை நினைச்சும் வருத்தப்படாதீங்கம்மா, இந்த வீட்டுக்கு எப்ப ஒரு பொண்ணு வரணும்னு ஆண்டவன் விதிச்சிருக்கானோ அப்ப அவ தானா வருவா, நமக்கெல்லாம் புடிச்சவளா, இந்த வீட்டுக்குப் பொருத்தமானவளா இருப்பா, கண்டிப்பா நமக்கு நல்லதுதான் நடக்கும்.” உறுதியாகச் சொன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தவர் தானும் தலையை ஆட்டி அவன் கூற்றை ஆதரித்தார்.
தனது அறைக்குள் வந்தவன் கட்டிலில் உட்கார்ந்தான். இரண்டு அறைகள் கொண்ட பழைய வீடு. முன்பெல்லாம் அண்ணன் தம்பி இருவரும் ஆளுக்கொரு அறையில் தங்கிக்கொள்ள இன்பம் ஹாலில் உறங்குவார். ரெஹான் வெளிநாடு போன பிற்பாடு அவனது அறையில் இன்பம் இருக்கிறார். இப்போதைக்கு அவர்களுக்கு இந்த வீடு போதுமானதாக இருந்தது. ஆனால் கல்யாணம் என்று வந்துவிட்டால் என்ன செய்வது? இந்த வீட்டை நம்பி வரும் பெண்ணிற்கு இந்த சௌகர்யங்கள் போதுமா?
பாத்ரூம் கூட வீட்டிற்கு வெளியேதான் இருந்தது. இருவரும் ஆண்பிள்ளைகள் என்பதால் அது ஒரு பிரச்சனையாக இவர்களுக்கு இதுவரைத் தோன்றவில்லை. இரவில் வெளியே போவதென்றாலும் கொல்லைப்புற கதவைத் திறந்து கொண்டு போய்விடுவார்கள். இன்பமும் அதை ஒரு குறையாக இதுவரை நினைத்ததில்லை. ஆனால் இனி அப்படி இருக்க முடியுமா? ஆசையாக தனக்கொரு ப்ளாக் ஆடியை வாங்கியவன் இதுவரை வீட்டைச் செப்பனிட நினைக்கவில்லை. அலைபேசியை எடுத்தவன் இஷானை அழைத்தான்.
“சொல்லுடா மச்சான்.” ஆர்ப்பாட்டமாக வந்தது அவன் குரல்.
“பேச முடியுமா? ஃப்ரீயா இருக்கியா?”
“இவ்வளவு நாளும் மச்சான், வெறும் ஃப்ரெண்ட்டு, இனி அப்பிடியாடா, வீட்டு மாப்பிள்ளை, என்ன வேலை இருந்தாலும் நீ கூப்பிட்டா பேசத்தானேடா வேணும்.” சொல்லிவிட்டு அவன் சிரிக்க,
“ஆமா, வீட்டு மாப்பிள்ளைக்கு நல்ல மரியாதை குடுத்தே நீ!” என்று இவன் கடுப்பானான்.
“சரிங்க மாப்பிள்ளை சார், இப்போ எதுக்கு மாப்பிள்ளை சார் என்னைக் கூப்பிட்டீங்க நீங்க?”
“டேய் ! விளையாடாதடா, நான் ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கேன்.”
“என்னப் பிரச்சினை உனக்கு இப்போ? அப்பாக்கிட்டயும் நாலு தடவை மஹிக்கிட்டக் கேளுங்க, மஹிக்கிட்டக் கேளுங்கன்னு சொன்னியாம்!”
“பயமா இருக்குடா மச்சான்.”
“நாட்டுக்கு வந்ததும் கல்யாணம், மாப்பிள்ளைப் பார்க்கிறோம்னு அப்பா மஹிக்கிட்டச் சொல்லிட்டாங்க மச்சான், அவளும் நீங்க யாரைப் பார்த்தாலும் எனக்கு ஓகேன்னு சொல்லிட்டாடா.”
“யாரைப் பார்த்தாலும் ஓகேன்னுதான் சொல்லியிருக்கா, அமர் ஓகேன்னு சொல்லியிருக்காளா? மச்சான் புரிஞ்சுக்கோடா, எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்குடா.”
“டேய்! உனக்கென்னடா குறை? ஏன்டா இப்பிடியெல்லாம் பேசுறே? உன்னை ஏன் மஹி வேணாம்னு சொல்லப் போறா?”
“சொல்லலைன்னா சந்தோஷம், ஆனா உங்கப்பா அம்மாவோட தூண்டுதல்ல அவ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லக்கூடாது, மச்சான் புரிஞ்சுக்கோடா, என் வொய்ஃபை பத்தி எனக்குள்ளயும் நிறைய கனவுகள் இருக்குடா.”
“ம்… புரியுது, இப்போ உனக்கு என்ன வேணும்? மஹிக்கிட்ட நேரடியா இந்த விஷயத்தைப் பேசி க்ளியர் பண்ணணும், அவ்வளவுதானே?”
“ஆமா, ப்ளீஸ்டா, அதைப் பண்ணு.”
“டன்! அவ நாட்டுக்கு வந்ததும் முதல் வேலையா இதைப்பத்தி அவக்கிட்டப் பேசுறேன்.”
“தான்க்ஸ்டா மச்சான், அப்புறம் இன்னொரு விஷயம்டா.”
“என்ன? அந்தச் சின்னக் குரங்கு என்னைப்பத்தி ஏதாவது வத்தி வெச்சாளா?” இஷான் கேட்கவும் வாய்விட்டுச் சிரித்தான் அமர்.
“அந்தக் கூத்தை ஏன்டா கேட்கிறே! இன்னைக்கு வீட்டுக்குப் போயிருந்தேன், முகத்தைப் பார்த்துப் பேசமாட்டேங்கிறா! பெரிய பொண்ணு மாதிரி முக்காடெல்லாம் போட்டுக்கிட்டு ரெண்டு வார்த்தையில பதில் சொல்லிட்டுப் போயிட்டாடா.”
“உடம்புக்கு முடியலைப் போல, நான் பேசும்போதும் வாய்ஸ் அவ்வளவு நல்லா இருக்கலை.”
“இப்போ லீவா அவளுக்கு?”
“ஏதோ ரெண்டு நாள் சேர்ந்தாப் போல லீவு வந்திருக்கு, அதான் வீட்டுலயே இருக்கா, ஆள்தான் வளர்ந்திருக்கா, ஆனா அந்த லொள்ளு இன்னும் குறையலைடா.”
“பாவம்டா அவ, சின்னப் பொண்ணுடா.”
“வீட்டுல நான் மூத்தவனா அவ மூத்தவளான்னு புரிய மாட்டேங்குது, அன்னைக்குக் கேட்கிறா, என்ன ஒழுங்கா இருக்கியா? இல்லை இன்னும் சிகரெட் புடிக்கிறியான்னு.” இஷான் சொல்லவும் அமர் சிரித்த சிரிப்பில் அந்த வீடே அதிர்ந்தது.
“உனக்கு அவதான்டா லாயக்கு.”
“அதைவிடு, நீ என்னமோ சொல்ல வந்தியே.”
“மச்சான், வீட்டைக் கொஞ்சம் திருத்தினா என்னன்னுத் தோணுது, இல்லை… புதுசாக் கட்டிடலாமா? ஏதாவது ஐடியா குடுடா.”
“ரெஹான் என்ன சொல்றான்?”
“இன்னும் அவங்கிட்ட இதைப்பத்தி நான் பேசலைடா.”
“அம்மா அப்பா வாழ்ந்த வீடு, எப்பிடிடா அதை விட்டுட்டு வேற வீட்டுக்குப் போறது?”
“அதுவும் மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு, இப்போ என்னடா பண்ணுறது?”
“அவசரப்படாதே, யோசிக்கலாம், எப்பிடி இருந்தாலும் உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடி வீட்டு விஷயத்துக்கு ஒரு முடிவெடுக்கிறது நல்லதுதான், எத்தனை நாளைக்கு இந்தப் பழைய வீட்டுலயே வாழப்போறீங்க? உனக்குன்னு நம்ம ஏரியாவுல ஒரு இமேஜ் இருக்குடா மச்சான்.”
“அதைப்பத்தியெல்லாம் நான் நினைக்கலைடா, என்ன நம்பி வர்ற பொண்ணு கஷ்டப்படக்கூடாது, அவ்வளவுதான், மச்சான்… அப்புறம் இன்னொரு விஷயம்டா…”
“என்ன இழுக்கிறே? தைரியமாச் சொல்லு, சீதனம் ஏதாவது வேணுமா?” குறும்பாகக் கேட்டான் இஷான்.
“கொலையே விழும்! டேய்! கல்யாணத்துக்கு அப்புறம் என்னால உங்க வீட்டுல வந்து இருக்க முடியாதுடா.”
“டேய் மச்சான்! என்னடா சொல்றே? இது என்னடா புதுசா இருக்கு?! நீ நம்ம வீட்டுல வந்து இருக்காம வேற எங்க இருக்கப்போறே? இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியுமா?”
“இல்லைடா, நான் இன்னும் அதைப்பத்தி மாமாக்கிட்டப் பேசலை, அந்த விஷயத்தை நீதான் உங்க வீட்டுல பேசணும், கல்யாணத்துக்கு அப்புறமா உன்னோட தங்கச்சி இந்த வீட்டுலதான் வந்து வாழணும்.” அமர் உறுதியாகச் சொல்லவும் இஷானின் முகத்தில் கவலை படிந்தது. அவனுக்கு அவன் மூத்த தங்கையைப் பற்றி நன்றாகத் தெரியும். அவளுக்கு எல்லாம் கனகச்சிதமாக இருக்க வேண்டும். எந்தக் குறையையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுசரித்தல் என்பது அவளுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
அமரைப் பற்றி இஷானுக்கு எந்தக் குறையும் இல்லை. பிறந்தது முதல் அவனை இவனுக்குத் தெரியும். படிப்பைப் பாதியில் விட்டதைத் தவிர குறையென்று சொல்ல அவனிடம் எதுவுமேயில்லை. சமூகத்தில் இன்றைக்கு அவனுக்கென்றொரு நல்ல பெயருண்டு. நியாயமான முறையில் சம்பாதித்து வைத்திருக்கிறான். ஆனால் இவர்கள் வீட்டில் இருக்கும் நேர்த்தியை அமரின் வீட்டில் எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை அமரின் தாய் உயிரோடு இருந்திருந்தால் அவர்கள் வீட்டிலும் அந்த நேர்த்தி இருந்திருக்கலாம். இரு ஆண்பிள்ளைகள் வாழ்ந்த வீட்டில் அதையெல்லாம் எதிர்பார்ப்பதுதான் தவறென்று தோன்றியது இஷானுக்கு.
மூன்று பிள்ளைகளையும் ஒன்றுபோல பார்த்தாலும் மஹிராவை ஒருபடி அதிகமாகவே கவனிப்பார் கரீம். அதிகமாகப் பேசமாட்டாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். ஆனால் அவளுக்கு ஒன்று வேண்டுமென்றால் அது அவளுக்கு வேண்டும். பிடிவாதம் கொஞ்சம் அதிகம். அதனால் அவளுக்கும் சல்மாவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். ஒரு தாயாக மகளை அடிக்கடி கடிந்து கொள்வார் சல்மா. அப்படிப்பட்ட தங்கை எப்படி அமரின் வீட்டில் வந்து வாழ்வாள்?! இஷான் குழம்பிப் போனான்.
நண்பனைப் பற்றிக் குறையென்று எதுவுமில்லை. ஆனால் அவன் பின்புலம் தன் தங்கையைத் திருப்திப் படுத்தாது என்பது இவனுக்கு உறுதி. தங்கள் வீட்டில் வந்து இருக்கும் போது அமருக்குத் தங்கள் வாழ்க்கைத் தரம் புரிந்துவிடும் என்று இஷான் நினைத்திருந்தான். ஆனால் அமர் இப்படியொரு யோசனையில் இருப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வழக்கப்படி கல்யாணத்தின் பிறகு மாப்பிள்ளை, பெண் வீட்டில் தங்குவதுதானே முறை! அதை ஏன் அமர் மாற்ற நினைக்கிறான்?!
***
அடுத்து வந்த நான்கைந்து நாட்களுக்கு கரீமின் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. மூத்த பெண் மஹிரா தனது படிப்பை முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பியிருந்தாள். கிட்டத்தட்ட ஆறு வருடங்களை ரஷ்யாவில் கழித்திருந்தது பெண். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு முறைதான் இலங்கை வந்திருக்கிறாள். அதுவும் சல்மாவின் தெண்டிப்பில்தான்.
“இப்போ எதுக்கு இப்பிடிப் படிப்பு படிப்புன்னு உன்னையே கஷ்டப்படுத்திக்கிறே? ஒரு மாசம் லீவு விட்டுருக்காங்கல்லை? அதை எங்கக்கூட வந்து கழிக்கிறதுல உனக்கென்ன சிரமம் மஹி? ஏன் இப்பிடிப் பண்ணுறே?” இப்படிச் சண்டைப் போட்டுத்தான் மகளை ஒரு மாதம் தங்களோடு வந்து தங்கச் செய்தார் அம்மா.
“என்னடீ ஆல்யா இவ? புள்ளைங்க படிப்புன்னா தெறிச்சு ஓடுறாங்க, நான் பெத்தது புத்தகத்தைக் கட்டிக்கிட்டு அழுது!”
“நல்லதுதானேம்மா.”
“ஏன்டீ! உண்மையைச் சொல்லு, உங்கக்கா உண்மையிலேயே அங்க இருந்து படிக்கிறாளா, இல்லை… யாரையும் பார்த்துக்கிட்டாளா?” அம்மா ஒரு தினுசாகக் கேட்கவும் வாய்விட்டுச் சிரித்தாள் ஆல்யா.
“யாரு? உங்கப் பொண்ணா?! எங்கூடப் பேசுறதே அபூர்வம், இதுல முக்கால்வாசி நேரம் அந்தம்மா படிப்பு, எம் படிப்பு, இதைத் தவிர வேறெதுவும் பேசாது, ஸ்பெஷல் செய்யணுமாம், அதை ரஷ்யாவுல செஞ்சா அவங்க மொழி தெரியணுமாம், அதால யூகே போகலாமான்னு யோசிக்குறாளாம்.”
“வெளக்குமாறு பிஞ்சிரும், அவ வயசுல இருக்கிற பொண்ணுங்கக் கல்யாணம் பண்ணி ஆளுக்கு ரெண்டு புள்ளைங்களைப் பெத்து வெச்சிருக்காளுங்க, எனக்கு ஊருக்குள்ள தலையைக் காட்ட முடியலை, இந்த லட்சணத்துல இவளுக்கு ஸ்பெஷல் கேட்குதா ஸ்பெஷல்! எல்லாம் உங்கப்பா குடுக்கிற இடம்! இன்னைக்கு வரட்டும் அவரு!” அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் பேச்சு அபாயகரமான பாதையில் போகும் என்பதால் இளையவள் தனது ரூமிற்கு வந்துவிட்டாள்.
ஆல்யா… இருபத்தியொரு வயது இப்போதுதான் முடிந்திருக்கிறது. அந்த வயதிற்குரிய குறும்புத்தனம் அந்த முகத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மஹிராவோடு ஒப்பிடும் போது கொஞ்சம் நிறம் குறைவுதான். ஆனால் அந்தக் குழந்தை முகம் எல்லோரையும் கவர்ந்துவிடும். அதிகம் பேசமாட்டாள். ஆனால் தன் வட்டத்தில் அவள் குறும்பு அளவில்லாமல் இருக்கும். எப்போதும் அண்ணாவோடு சண்டித்தனம், அக்காவோடு ஒட்டுதல்.
மஹிரா வெளிநாடு போன பிற்பாடு முதலில் கொஞ்சம் திணறினாள் பெண். எப்போதும் தன்னோடு கூடவே இருந்தவள் தள்ளிப்போனது இளையவளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் அவள் அக்காள் அவளைக் கொஞ்சுபவள் எல்லாம் கிடையாது. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் அவள் படிப்பும், அது சம்பந்தமான புத்தகங்களும்தான்.
“யாருக்கா அது? உங்க கெமிஸ்ட்ரி மாஸ்டரா? என்ன இப்பிடி செமையா இருக்காங்க?!”
“அடி வாங்கப்போறே! என்னமா சொல்லிக் குடுக்கிறாங்க தெரியுமா? உனக்குத் தெரியுமில்லை ஆல்யா, இந்த ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்னை வெச்சு செய்யும்னு, இப்போ எனக்கு அதெல்லாம் சூப்பரா புரியுது!” தன் உலகத்தில் இருந்துகொண்டு தன் கவலையைப் பேசும் அக்காளை வினோதமாகப் பார்ப்பாள் ஆல்யா. இதுதான் மஹிரா. ஆனாலும் அந்த அக்காளின் பிரிவு அவளை இலேசாக வாட்டியது உண்மைதான்.
அக்கா மாத்திரமல்லாது அண்ணாவும் வேலை என்று கொழும்பு போனது அவளை இன்னும் தனிமையாக்கியது. நல்ல வேளையாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவும் பெண் அதைப் பற்றிக்கொண்டு கிளம்பிப் போனது. வாழ்க்கையில் சின்னதாக ஒரு மாற்றம் கிடைத்தது அவளுக்கு. வெளியூர் இல்லை என்பதால் தினமும் காலையில் கிளம்பிப் போய் மாலையில் வீடு வந்து விடுவாள். படிக்கும் நேரங்கள் தவிர அவளை அலைக்கழிக்கும் ஒரு முகம்!
எப்போது அந்த முகம் அவளுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது என அவளுக்குத் தெரியாது. எப்போதும் தன் அண்ணாவோடு பார்க்கும் அந்த முகத்தை அவளுக்கு மிகவும் பிடிக்கும். முன்பெல்லாம் அவர்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்த போது அடிக்கடி அவர்கள் வீடு வரும் அந்த முகம் பிற்பாடு அதை வெகுவாகக் குறைத்துக் கொண்டது.
“இந்த அமருக்கு என்னாச்சுங்க? முன்ன மாதிரி நம்ம வீட்டுக்கு வர்றதில்லை?” ஒருநாள் சாப்பிடும்போது கணவரிடம் புலம்பினார் சல்மா.
“மஹி வயசுக்கு வந்திடுச்சில்லை? அதால நம்ம வீட்டுக்கு அடிக்கடி போகக்கூடாதுன்னு தங்கச்சி சொல்லிக் குடுத்திருக்கும் போல, மச்சான் சொல்லிச் சிரிச்சாரு.” சொல்லிவிட்டு கரீமும் சிரித்தது இன்றைக்கும் ஆல்யாவிற்கு நியாபகம் இருந்தது. அப்போது அமரின் தாய் உயிரோடு இருந்தார்கள். ஒருநாள் திடீரென்று அந்தத் தாய் இல்லாமல் போனபோது அந்த வீடு வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது போல ஆகிவிட்டது.
இன்னும் இவளுக்கு அந்த நாள் நியாபகம் இருக்கிறது. புதிதாக முளைத்திருந்த மீசையோடு இருக்கும் அமர் மச்சானை இவளுக்கு நிரம்பவும் பிடிக்கும். தன் அண்ணனிடம் கிடைக்காத பாசத்தையும் பரிவையும் காட்டும் அந்த வாலிபனை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ரெஹான் மச்சானும் நல்ல மாதிரித்தான். ஆனால் அமர் என்றால் இவளுக்கு விசேஷம்!
“அமர் மச்சான்…” தன் அன்னையின் இழப்பை ஜீரணிக்க முடியாமல் தலை கலைந்து முகம் சிவந்து கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தவன் தன் கையைப் பிடித்த அந்தச் சிறுமியை அணைத்துக் கொண்டான்.
“அழுறீங்களா?” அந்தக் கேள்வி அவனை இன்னும் உலுக்கி இருக்கும் போலும். அவன் கண்களில் அருவி இறங்கியது. அதுவரை அடக்கி வைத்திருந்தவன் குலுங்கிக் குலுங்கி அழுத போது அந்தச் சின்னப் பெண் நொறுங்கிப் போனாள். அதன்பிறகு ஒரு ஐந்து வருடங்கள் அவர்கள் வாழ்க்கை எப்படியோ ஓடியது. மீண்டும் ஒரு நாள் அந்த வீடு தன் தகப்பனையும் இழந்துவிட்டு அனாதரவாக நின்றது.
ஆனால் இப்போது அமர் கலங்கவில்லை. ஒரு பாறை போல இறுகிப் போயிருந்தான். புதிதாக வயதிற்கு வந்திருந்த அந்தச் சின்னப் பெண்ணிற்கு இப்போது தன் அமர் மச்சானிடம் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் அவள் பார்வை அவனிடம்தான் இருந்தது. எந்த உணர்ச்சியையும் வெளியே காட்டாமல் எல்லோரையும் விட்டுத் தள்ளி நின்றது அந்த முகம்!
அதன்பிறகு வாழ்க்கை வேகமாக ஓடிப்போனது. படிப்பை மூட்டைக் கட்டி வைத்துவிட்டுத் தன் தந்தையின் தொழிலை அமர் கையில் எடுத்த போது ஆல்யா வெகுவாக வருத்தப்பட்டாள். ஆனால் அவனது கடுமையான உழைப்பும், அவனெடுத்த விஸ்வரூபமும் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உழைத்து உழைத்து அவன் உடம்பு முறுக்கேறியிருந்தது.
“ஏன்டீ? அந்த சமையல்காரரு உங்க சொந்தமாமே? பார்க்க அட்டகாசமா இருக்காருடீ!”
“சமையல்காரரு கிமையல்காரருன்னு சொன்னே, வாயைக் கிழிச்சுத் தச்சிடுவேன், ஏன்? உங்கம்மாவுந்தான் டெய்லி சமைக்கிறாங்க, அதுக்காக அவங்களை நீ சமையல்காரின்னு சொல்லுவியா?”
“ஏய்! அந்த மனுஷனைச் சொன்னா இவ ஏன்டீ இப்பிடி வரிஞ்சு கட்டிக்கிட்டுச் சண்டைக்கு வர்றா? அப்ப என்னமோ இருக்குடீ!” நண்பிகள் சேர்ந்து இவளை மடக்கிய போது ஆல்யாவின் முகம் சிவந்து போனது.
“எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைடீ ஆல்யா!” இன்னொரு பெண் கலாய்க்க அதன் பிறகு அமர்தான் இவளின் ஆதர்ஷ நாயகன் என்று அவள் வட்டத்தில் பெயராகிப் போனது. ஒரு நாள் புத்தம் புதிய ப்ளாக் ஆடியில் அமரைப் பார்த்த பெண்கள் வாயைப் பிளந்தார்கள்.
“ஆல்யா! என்னடீ இது?! உன்னோட ஆளு இப்பிடிக் கலக்குறாரு! எவளாவது கொத்திக்கிட்டுப் போகப்போறா, பார்த்துக் கவனமா இருந்துக்கோ.” அவர்கள் சொல்வது உண்மை என்பது போல அமரின் மீது இளம் பெண்களின் பார்வை அதிகமாகத்தான் வீழ்ந்தது. ஆனால் அவனது வளர்ச்சியும் அவனெடுத்த விஸ்வரூபமுமே அவளுக்கு எதிராக மாறிப்போனது.
“சல்மா, நம்ம மஹிக்கு, அமரைப் பார்த்தா என்னன்னு எனக்குத் தோணுது, நீ என்ன நினைக்கிறே?” ஒருநாள் சாப்பாட்டு வேளையில் அப்பா கேட்டபோது ஆல்யா துடித்துப் போனாள்.
“நானும் இதையேதான் நினைச்சேங்க, நீங்களும் அதையே சொல்றீங்க!” அம்மாவும் அப்பாவிற்குச் சாதகமாகப் பேசியபோது இளையவளால் எதுவும் பண்ண இயலவில்லை.
“நீ என்னம்மா நினைக்கிறே? உங்கக்காக்கு அமர் மச்சான் பொருத்தமா இருப்பானா?”
“அப்பா… அக்கா டாக்டர்…”
“அதுக்கு என்னடீ இப்போ? உங்கக்கா டாக்டர்னா அவ கல்யாணம் பண்ணிக்கமாட்டாளா? இல்லை புள்ளை குட்டிதான் பெத்துக்கமாட்டாளா?” ஏதாவதொரு காரணம் சொல்லி இந்த விஷயத்தைத் தட்டிவிடலாம் என்று எண்ணியவளின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போட்டார் சல்மா. இது போதாதென்று அலைபேசி மூலமாக இஷானின் அபிப்பிராயமும் கேட்கப்பட்டது.
“இதுல யோசிக்க என்னப்பா இருக்கு? அமர் மாதிரி ஒரு பையன் கிடைக்க நம்ம மஹி குடுத்து வெச்சிருக்கணும், நீங்க இன்னைக்கே அமர்கிட்டப் பேசிடுங்க, இல்லைன்னா நான் பேசட்டுமா?” அப்பன் ஒரு அடி பாய்ந்தால் மகன் ஒன்பது அடி பாய்ந்தான்.
“கொஞ்சம் பொறுப்பா, நாம முதல்ல இதைப்பத்தி மஹிக்கிட்டக் கேட்கலாம், ஒருவேளை அவ மனசுல வேற ஏதாவது அபிப்பிராயம் இருந்தா?”
“என்னப்பா பேசுறீங்க? அவ மனசுல அப்பிடி என்ன எண்ணம் இருக்கப் போகுது?”
“அப்பிடியில்லை இஷான், இந்த விஷயத்தைச் சொன்னப்போ சின்னக்குட்டி என்ன சொல்லிச்சுத் தெரியுமா? அக்கா டாக்டராம், ஒருவேளை அதே நினைப்பு மஹி மனசுலயும் இருந்துட்டா? பேச்சை ஆரம்பிச்சதுக்கு அப்புறமா நம்மால ஒன்னும் பண்ண முடியாது.”
“அந்தச் சின்னக் கழுதைக்கு என்னத் தெரியும்னு அவளை நீங்க கேட்கிறீங்க.” அதன் பிறகு தன் அண்ணன் தன்னை வசைபாட ஆரம்பிக்கவும் ஆல்யா எழுந்து தன் அறைக்குப் போய்விட்டாள். தான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்று தெரியாமல் அண்ணன் பேசியது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதையும் தாண்டி… தான் ஆசைப்பட்ட அமர் மச்சான் தன் அக்காளுக்கா? அதுவும் இந்த வீட்டிலா?! அதன்பிறகு வந்த ஒவ்வொரு நாளையும் ஆல்யா வேதனையோடுதான் கழித்தாள்.
மஹிராவிடம் இந்த விஷயம் பற்றி அம்மா பேசியபோது அவள் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடித்திருந்தால் போதும் என்று சொல்லிவிட்டாளாம். ஒருநாள் இரவு இளையவளின் தலையில் இடியை இறக்கினார் சல்மா. ஒருவேளை மஹிரா இந்தக் கல்யாணத்திற்கு மறுப்புச் சொல்லக் கூடும் என்ற இவள் எதிர்பார்ப்பும் தவிடு பொடியானது.
“கல்யாணக் கதையை எடுத்ததும் உங்கக்கா ஏதாவது மறுப்புச் சொல்லுவான்னு நான் நினைச்சேன் ஆல்யா, ஆனா அவ எதுவுமே சொல்லலை, அமரைப் பார்க்கலாமான்னு கேட்டேன், அது உங்க இஷ்டம்னு சொல்லிட்டாடீ!”
அம்மாவிற்கு மகள் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதில் அவ்வளவு ஆனந்தம்.
அந்த வீடே தங்கள் மூத்த மகளின் திருமணத்திற்காகக் கோலாகலமாக ஆயத்தமான போது ஒருத்தி மட்டும் அமைதியாகத் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.
இனி அவள் வாழ்க்கையில் என்ன இருக்கின்றது என்பது ஒருபுறம் இருக்க இனி அவளால் இந்த வீட்டில் எப்படி வாழ முடியும்?! காலம் அந்த இளம் பெண்ணிற்கு வைத்திருப்பது என்ன?!




