arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 21
Anbe… Azhage! chevron_right பகுதி 21 / 21

அத்தியாயம் 21

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 21

அன்று அமர், ஆல்யாவின் முதலாவது திருமணநாள். விடிந்தும் விடியாத அந்தக் காலைப்பொழுதில் கண்விழித்த ஆல்யா திரும்பிப் பார்த்தாள். பக்கத்தில் அவனில்லை. ஒரு கல்யாண வேலை சம்பந்தமாக திருகோணமலை வரை போயிருந்தான். 

படிப்பை முடித்த கையோடு பெண் கணவனின் தொழிலில் தன்னையும் இணைத்துக் கொண்டது. அதில் அமருக்கு அத்தனை உடன்பாடில்லை என்றாலும் ஆல்யா பிடிவாதமாக இருந்து சாதித்துவிட்டாள். பி எஸ்ஸி முடித்த பெண்ணிற்குக் கரண்டி பிடிக்கும் இடத்தில் என்ன வேலை?! இது அவனது வாதம்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்க இருக்கிற இடத்துல நான் இருக்கணும், அவ்வளவுதான்.” மனைவியை வேறு எங்கும் வேலைக்கு அனுப்பும் எண்ணம் இல்லாததால் அமர் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவன் தலையணையை மிருதுவாக வருடிக் கொடுத்தது பெண். அவன் வீட்டைவிட்டுப் போய் இன்றோடு மூன்று நாட்களாகிவிட்டது. இந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களைக் கடந்தாற் போலவிருந்தது. 

திருகோணமலையில் வசதியில்லாத ஏழைப் பெண்கள் இருபது பேருக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கின்றார்களாம். அருணாசலம் ஐயா மூலமாக இவனுக்குத் தகவல் கிடைத்தது. அன்றைக்கு அந்தப் பெரியவர் ஆஃபீஸ் வந்தபோது இவளும் அங்கேதான் இருந்தாள். 

“எப்பிடி இருக்கீங்க தம்பி?”

“நல்லா இருக்கேன் ஐயா, உட்காருங்க.” 

“அமர், கொஞ்சம் பெரிய கல்யாணம், ஆயிரம் பேருக்கு விருந்து, ஆளுங்க அதிகமா தேவைப்படுது, உதவி பண்ணுப்பா.” விஷயத்தை விளக்கமாக பெரியவர் சொல்லவும் அமருக்கு அத்தனை மகிழ்ச்சி.

“ரொம்ப நல்ல விஷயமா இருக்கு, கண்டிப்பா இதுல என்னோட பங்கும் இருக்கும், நான் ஃப்ரீயாவே பண்ணிக் குடுக்கிறேன் ஐயா.”

“நிஜமாத்ததான் சொல்றியா தம்பி?!” அந்த மனிதர் மகிழ்ந்து போனார்.

“எனக்கும் நாலு தங்கைங்க இருந்திருந்தா நானும் இப்பிடியெல்லாம் பண்ணித்தானே இருக்கணும், இப்பவும் அப்பிடியே நினைச்சுக்கிறேன்.”

“என்னம்மா? உம் புருஷன் இப்பிடி அள்ளிக் குடுக்கிறேன்னு சொல்றான், நீ என்ன சொல்றே?” இவளையும் பேச்சில் இணைத்தார் பெரியவர்.

“அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ஐயா.” அந்தப் பதிலில் பூரித்துப் போன பெரியவர் கிளம்பிப் போய்விட்டார்.

எழுந்து குளியலை முடித்துக்கொண்டு தொழுகையை நிறைவேற்றியவள் கிச்சனுக்கு வந்தாள். அவனில்லாத பொழுதுகளில் ஆஃபீஸை இவள்தான் இப்போதெல்லாம் பார்த்துக் கொள்கிறாள். புதிதாக இன்னொரு குழுவையும் தயார் செய்திருந்தான் அமர். ஒரு நாளில் இரண்டு கல்யாணங்கள் வந்தால் இவர்களால் சமாளிக்க இயலவில்லை. மனைவியைத் தொழிலுக்குத் தயார் பண்ணியவன் ஒரு குழுவை அவளிடம் ஒப்படைத்திருந்தான். மேற்பார்வையை மாத்திரம் அவன் வசம் வைத்திருந்தான்.

“ஆல்யா…” இவள் நடமாட்டம் தெரியவும் இன்பமும் அங்கு வந்தார். 

“நான் டீ போட்டுக் குடுக்கிறேம்மா.” சும்மாவே அவளை எந்த வேலையும் செய்ய விடமாட்டார். இப்போது இவள் ஆஃபீஸுக்கு வேறு போகிறாள். மருமகளைத் தாங்கிக் கொண்டார் பெரியவர்.

“தம்பி பேசினாங்களா?”

“இல்லை மாமி, நேத்து ராத்திரி பேசினாங்க, விடிஞ்சு இன்னும் கூப்பிடலை.”

“அன்னைக்குத்தான் உங்கக் கல்யாணம் நடந்த மாதிரி இருக்கு, ஆனா ஒரு வருஷம் ஆயிடுச்சு!” டீயை அவர் நீட்ட இளையவள் வாங்கிக் கொண்டாள்.

“என்ன ஐடியால இருக்கீங்க?” தயங்கியபடி வந்தது இன்பத்தின் கேள்வி.

“எதைப்பத்தி மாமி?”

“இல்லை… கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு… படிப்பும் முடிஞ்சு போச்சு, கொழந்தை ஒன்னைப் பெத்துக்கலாமில்லை, நாங்களும் வயசோட பேரன், பேத்தின்னு பார்க்கணுமில்லைம்மா.” இன்பம் மிகவும் நாசூக்காகத்தான் கேட்டார். ஆல்யா தலையைக் குனிந்து கொண்டாள். முகம் இலேசாகச் சிவந்து போனது. 

“நீங்க படிச்ச புள்ளைங்க, உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, எம் மனசுல இருக்கிற ஆசையை நான் சொன்னேம்மா.” என்றவர் மருமகளது தலையைத் தடவிவிட்டுப் போனார். தனது அறைக்கு வந்தவள் அவன் வாங்கி வைத்துவிட்டுப் போன புதிய ஆடையை உடுத்திக் கொண்டாள். மாமி கேட்ட விஷயமே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இதுவரை அவர்கள் இருவரும் இதுபற்றிப் பேசியதில்லை. அன்றைக்கு ஒரு நாள், நமக்கொன்னு பொறந்தா எப்பிடியிருக்கும், என்று கேட்டதோடு சரி. அதற்கு மேல் அமர் அதைப்பற்றிப் பேசியதில்லை. அவன் பேசாததால் அவளும் அதைப்பற்றி யோசிக்கவில்லை.

“வாங்க மேடம்.” வனஜா அக்கா இவள் வந்ததும் வராததுமாக வரவேற்றார். ஆஃபீஸில் வேலை செய்யும் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகுவார்கள். அமரிடம் பேசத்தயங்கும் விஷயங்களையும் இவளிடம் இயல்பாக இப்போது எல்லோரும் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

“சார் இன்னும் ஊர்ல இருந்து வரலையா? மேடமோட முகம் டல்லடிக்குது!” அவர் கேலி போல சொல்லவும் ஆல்யா புன்னகைத்தாள். கிச்சனில் வேலை செய்யும் பெரியவர் இவளிடம் ஒரு கிண்ணத்தைக் கொண்டுவந்து நீட்டினார். நெய் மணக்க சர்க்கரைப் பொங்கல் இருந்தது.

“திருமணநாள் வாழ்த்துகள்மா.” பெரியவர் சொன்ன பிறகுதான் வனஜா காலண்டரைப் பார்த்தார்.

“அட ஆமா! இன்னைக்கு உங்களோட வெட்டிங் அனிவர்சரி இல்லை? வாழ்த்துகள் ஆல்யா, அடடா! இன்னைக்குன்னு பார்த்து சார் வேற ஊருல இல்லையே!” அதன்பிறகு அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கேலி கரைபுரண்டோடியது. ஆல்யாவும் ஒரு புன்னகையோடு எல்லாவற்றையும் இரசித்துக்கொண்டாள். 

“அதுக்குள்ள ஒரு வருஷம் ஆச்சில்லை? நம்பவே முடியலை! ஆமா, எப்போ பேபி?” இரகசியமாக பத்மா அக்கா கேட்டார். இந்தக் கேள்வி இன்றைக்கு இரண்டாம் முறையாகக் கேட்கப்படுகிறது.

“சாருக்கு இப்ப விருப்பமில்லையோ என்னவோ? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறாங்க போல.” அவர்களே கேள்வியும் கேட்டு அதற்கு அவர்களே பதிலும் சொல்லிக் கொண்டார்கள். ஆல்யா புன்னகைத்துக் கொண்டாள். விடிந்ததிலிருந்து அமர் இன்னும் அவளை அழைக்கவில்லை. இவள் அழைத்த போதும் அவன் பேசவில்லை. பிஸியாக இருக்கிறானா? இன்றைக்குப் புறப்படுவதாகச் சொன்னானே? அலைபேசி சிணுங்கியது. சல்மா அழைத்துக் கொண்டிருந்தார்.

“ஆல்யா, அமர் வந்துட்டானா?”

“இல்லைம்மா, இன்னைக்கு வருவாங்க.” 

“வீட்டுக்கு வந்துட்டுப் போ, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் புது ட்ரெஸ் எடுத்து வெச்சிருக்காங்க.”

“எதுக்கும்மா இதெல்லாம்? நாங்க என்ன சின்னப் புள்ளைங்களா, அனிவர்சரி கொண்டாட?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, அப்பாதான் எடுத்து வெச்சிருக்காங்க, நீ வீட்டுக்கு வந்துட்டுப் போ.” அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அமர் அழைத்தான்.

“சரிம்மா, அமர் மச்சான் கூப்பிடுறாங்க, நீங்க லைனை கட் பண்ணுங்க.” என்றவள் கணவனின் அழைப்பை ஏற்றாள்.

“என்னாச்சு? ஏன் இவ்வளவு நேரமும் கூப்பிடலை?”

“கொஞ்சம் வேலை இருந்துச்சு ஆலி, எங்க இருக்கே? லைன் பிஸியா இருந்துச்சு.”

“அம்மா பேசினாங்க, புது ட்ரெஸ் எடுத்து வெச்சிருக்காங்களாம், வீட்டுக்கு வரட்டாம்.”

“சரி, போகும்போது கேக் வாங்கிட்டுப் போ, ஆஃபீஸ்ல எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கிக் குடு.”

“நீங்க எங்க இருக்கீங்க?” மனைவியின் குரல் வாடியிருந்தது.

“வந்துக்கிட்டே இருக்கேம்மா, நாலு மணிபோல வந்திருவேன்.” அதற்கு மேல் ஆஃபீஸில் இருக்காமல் பெண் தங்கள் வீட்டிற்கு கேக்கோடு போனது.

“வா ஆல்யா, இப்பெல்லாம் நீ இங்க வர்றதே அபூர்வமா போச்சு.” சல்மா குறைப்பாட்டார்.

“இதே பல்லவியைத்தான் மாமியும் பாடுறாங்க, நான் வீட்டுல இருக்கிற நேரம் குறைஞ்சு போச்சாம்.” என்றவளிடம் அந்தப் பையை நீட்டினார் அம்மா.

“உனக்குப் புடவை வாங்கியிருக்கேன், புடிச்சிருக்கா பாரு.”

“புடவையா?” ஆசையாக வாங்கிப் பார்த்தாள் மகள். அழகான மஸ்டர்ட் நிறத்தில் அரக்கு நிற பார்டர் வைத்த சில்க் காட்டன் சேலை. தலைப்பும் அரக்கு நிறத்தில் இருந்தது.

“இந்தா, ப்ளவுஸையும் தைச்சு வாங்கிட்டேன், இன்னைக்கே உடுத்திக்கோ.”

“வீட்டுக்குப் போய் உடுத்திக்கிறேம்மா.” என்றவள் அம்மாவோடு சமையலறைக்குப் போனாள்.

“ஏன்டீ! கல்யாணமாகி ஒரு வருஷமாச்சு, அவ என்னடான்னா படிப்பு படிப்புன்னு படிப்பைக் கட்டிக்கிட்டு அலையுறா, உனக்கென்ன வந்துச்சு? நீயாவது ஒன்னைப் பெத்துக்கப்படாதா? இங்க ஒருத்தனைக் கல்யாணம் பண்ணுடான்னா, இப்ப என்ன அவசரங்கிறான், நீங்க ஆளாளுக்கு என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? எங்களுக்கு வயசு திரும்புதுன்னு நினைப்பா?” சல்மா புலம்ப ஆரம்பிக்கவும் உண்மையிலேயே ஆல்யா திடுக்கிட்டுப் போனாள். 

‘என்ன இது?! இன்றைக்குச் சொல்லி வைத்தாற் போல அத்தனைப் பேரும் இதைத்தான் பேசுகிறார்கள்?!’

“முன்னாடியெல்லாம் கல்யாணம் ஆன அடுத்த மாசமே இந்தக் கேள்வியைக் கேட்டிருவாங்க, உங்களுக்கு நாங்க நாகரிகமா ஒரு வருஷம் டைம் குடுத்தது போதாதா? இந்த இன்பம் இதையெல்லாம் என்னன்னு கேட்கமாட்டாளா?”

“அதெல்லாம் காலையிலேயே கேட்டாச்சு.” இளையவள் வாய்க்குள் முணுமுணுத்தாள். 

“பார்த்தியா! நாங்க மட்டுமில்லை, இனி ஒவ்வொருத்தரா கேட்பாங்க.” இங்கு நின்றால் இன்றைக்கு முழுவதும் அம்மா இதைத்தான் புலம்புவார் என்று அறிந்தவள் மெதுவாக தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். குளித்துவிட்டு அம்மா வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாள். சரியாக அப்போது அமரும் வந்து சேர்ந்தான். 

“வாங்க தம்பி, ஆல்யா! தம்பி வந்துட்டாங்க.” 

“வர்றேன் மாமி.” இவள் வெளியே போவதற்கு முன்பாக அவன் உள்ளே வந்திருந்தான். புடவையில் இருந்த மனைவியைப் பார்த்தபோது இயல்பாக விசிலடித்தான். பார்வை அத்துமீறியது. 

“என்ன அம்மிணி, புதுப்புடவையில அசத்துறீங்க!”

“நீங்க என்ன லேட்டு? நாலு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு ஆறு மணிக்கு வர்றீங்க?”

“அருணாசலம் ஐயா வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்னு பிடிவாதமா நின்னுட்டாரு, மறுக்க முடியலைம்மா, அவங்க வீட்டுல கொஞ்ச நேரம் போயிடுச்சு.”

“போய் குளிச்சுட்டு வாங்க, மாமி காத்துக்கிட்டு இருப்பாங்க.” மனைவியின் கன்னத்தில் முத்தவிட்டவன் அவள் கொடுத்த டவலை வாங்கிக் கொண்டு போய்விட்டான். அம்மாவோடும் மனைவியோடும் பேசியபடி நேரத்தைச் செலவழித்தவன் கொஞ்ச நேரம் கணக்கு வழக்குகளைப் பார்த்தான். அவனுக்கும் கணனிக்கும் நடுவில் வந்து இப்போது நின்றுகொண்டாள் பெண். மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தவன் அவள் இடையைக் கட்டிக்கொண்டான்.

“அப்பா உங்களுக்கும் ட்ரெஸ் எடுத்துக் குடுத்திருக்காங்க.”

“எங்கக் காட்டு பார்ப்போம்.” கப்போர்டிலிருந்து அவள் எடுத்துக் கொடுத்தாள்.

“நல்லாருக்கு, நாளைக்கு உடுத்தலாம்.” என்றவன் வேறு எதையோ எடுத்தான். 

“அது என்ன?”

“இது என்னோட வொய்ஃபுக்கு நான் ஆசையா வாங்கினது.” அவள் கரம்பிடித்து அந்த வளையலை அணிவித்தான் அமர். ஐந்து சவரன் இருக்கும். தடிமனான ஒற்றை வளையல். அறையின் மெல்லிய வெளிச்சத்தில் மின்னியது. டிஸைன் அவ்வளவு அழகாக இருந்தது.

“இது எதுக்கு?!”

“இந்த ஒரு வருஷத்துல எனக்குச் சந்தோஷம்னா என்னன்னு முழுசா காட்டினதுக்கு.” சொல்லிவிட்டு அவள் இதழில் மிக மென்மையாக முத்தமிட்டான் கணவன். கை இடையை அழுத்தியது.

“அமர்…”

“ம்ஹூம்! பெயர் சொல்றே!” என்றவன் மூன்று நாட்கள் அவளைப் பிரிந்திருந்த துயரை ஆற்றிக்கொண்டான். கணவனின் மார்பில் சுகமாகத் தலைவைத்துப் படுத்திருந்தது பெண்.

“அமர் மச்சான்…”

“ம்…”

“இன்னைக்கு என்னாச்சுதுன்னு கேளுங்க.”

“என்னடா ஆச்சு?”

“காலையில மாமி ஒரு விஷயம் கேட்டாங்க, அதே கேள்வியை ஆஃபீஸ்ல வெச்சு பத்மா அக்கா கேட்டாங்க, வீட்டுக்குப் போனதும் அம்மாவும் அதே விஷயத்தைப் பேசினாங்க.”

“அடேயப்பா! அப்பிடி எதை எல்லாரும் இன்னைக்குப் பேசினாங்க?” அமருக்கு விஷயம் என்னவென்று புரிந்தது.‌ ஆனாலும் புன்னகையோடு கேட்டான்.

“அது… கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சாம்…”

“சரி, இப்போ அதுக்கு என்னவாம்?” கேட்டவனின் மார்பில் முகத்தை இன்னும் கொஞ்சம் அழுத்திக் கொண்டாள் மனைவி. அவள் தலையை அவன் கரம் வருடிக் கொடுத்தது.

“ஆலி… உனக்கு இப்பதானேடா இருபத்திரெண்டு வயசு…”

“அதுக்கு?” அவன் முகம் பார்த்துச் சட்டென்று கேட்டாள் பெண்.

“இல்லைடா, நான் சுயநலமா யோசிக்க முடியாதில்லை, உன்னைப் பத்தியும் யோசிக்கணுமில்லை?”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? அதான் படிப்பு முடிஞ்சிருச்சில்லை?”

“அது சரிதான், ஆனா… பின்னாடி நீ வருத்தப்பட்டிரக் கூடாது, இந்தக் கிழவனைக் கட்டிக்கிட்டதால இந்த வயசுலேயே இதெல்லாம் பண்ண வேண்டியதா போச்சுன்னு.” அவன் விளக்கத்தில் அவளுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது. தன் தலையைத் தலையணைக்கு இடம் மாற்றிக்கொண்டாள்.

“ஆலிம்மா…”

“எங்கூட பேசாதீங்க நீங்க!”

“ஏய்! என்னடா இது? எதுக்கு இப்போ கோபப்படுறே நீ?”

“கோபப்படாம? உங்களைக் கொஞ்சுவாங்களா? இதென்னப் பேச்சுன்னு எப்பப் பார்த்தாலும் இதையே பேசுறீங்க? ஒன்னு என்னைச் சின்னப் பொண்ணுன்னு சொல்றீங்க, இல்லைன்னா உங்களைக் கிழவன்னு சொல்றீங்க, உங்கப் பிரச்சினை என்ன இப்போ? நான் தெரியாமத்தான் கேட்கிறேன், உங்கப் பிரச்சினை என்ன?” அவள் குரல் உயர்ந்தது.

“ஏய்! மெல்லப் பேசுடா, அம்மா காதுல விழுந்திரப் போகுது.”

“நல்லா விழட்டும், காலையில உங்கம்மா எழுந்ததும் முதல் வேலையா இதைத்தான் போய் சொல்லுவேன், உங்க மகனோட பேச்சைப் பாருங்க மாமின்னு சொல்லுவேன்.”

“என்ன ஆல்யா இது?” மனைவியின் கோபம் பார்த்து அவன் தணிந்து பேசினான்.

“இல்லை மச்சான், உங்கப் பேச்சு எப்பவுமே தப்பாத்தான் இருக்கு…” அவளை மேலே பேசவிடாமல் தடுத்தான் அமர்.

“ஆலிம்மா, ப்ளீஸ், என்னைப் புரிஞ்சுக்கோ, எனக்கு… கூடவே வளர்ந்ததால நீ சின்னப் பொண்ணுங்கிற விஷயம் மனசுல பதிஞ்சு போச்சு, உன்னோட எதிர்காலத்தை நான் அநியாயம் பண்ணிரக் கூடாதுங்கிற பயம் எனக்கு எப்பவும் இருக்கு.”

“என்ன மச்சான் பேச்சு இது? நீங்க எப்பிடி எனக்கு அநியாயம் பண்ண முடியும்? உங்கமேல விழுந்து பழகினது நான், சும்மா இருந்த உங்கக்கிட்ட லவ்வை சொன்னது நான், உங்க நினைப்பா அலைஞ்சது நான், இதுல நீங்க எப்பிடி எனக்கு அநியாயம் பண்ண முடியும்?”

“இதெல்லாம் எனக்கும் புரியுதுடா, ஆனாலும்… நிதானமா இருக்கணும்னு அடிக்கடி நான் எனக்குச் சொல்லிக்குவேன், உனக்கு இன்னும் வயசிருக்கு, உன்னை நான் எதுக்கும் அவசரப்படுத்திரக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன்.”

“ஓ… அதுக்குத்தான் இவ்வளவு நிதானமா?” அவள் பார்த்த பார்வையில் அவன் முகத்தில் அசடு வழிந்தது. 

“எல்லாரும் கேட்கிறாங்கிறதுக்காக இல்லை, எனக்கு… வேணும்.”

“என்ன வேணும்? சாக்லேட்டா?” அவன் சிரித்தான்.

“கொன்னுடுவேன் அமர்!” கண்களை உருட்டி ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள் மனைவி. 

“அப்பிடியா! சரி, எங்க அம்மிணி இப்ப என்னைக் கொல்லுங்க பார்ப்போம்!” இரு கரங்களையும் விரித்து அவன் அவளை அழைக்க அந்த வெற்று மார்பில் அடைக்கலம் புகுவதைத் தவிர அவளுக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. 

***

அன்றைக்குத் திருமணம். ரெஹானும் ஹானியும் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாளில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.‌ ஆடம்பரங்கள் எதுவும் கூடாது என்பது மணப்பெண்ணின் முக்கிய நிபந்தனை. பள்ளிவாசலில் நிக்காஹ். அதன்பிறகு அவர்கள் வீட்டில் உறவினர்களுக்கு விருந்து. பழைய வீடு, புதிய வீடு இரண்டிலும் விருந்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

ஹானியின் பெற்றோர்களும் இலங்கை வந்திருந்தார்கள். அமைதியாக தங்கள் பெண்ணின் திருமணத்தில் அவர்களும் கலந்து கொண்டார்கள். மாடியில் அவர்கள் தங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் அமர் செய்து கொடுத்திருந்தான். இளைய மகனின் குடும்பத்தை இன்பம் நன்றாக கவனித்துக் கொண்டார்.

“ஆல்யா, நீ கொஞ்ச நேரம் உட்காரு, ரெஸ்ட் எடு.”

“பரவாயில்லை மாமி.”

“சொன்னா கேட்கணும்.” தனது ஐந்து மாத வயிற்றை மெதுவாகத் தடவிக்கொண்டாள் பெண். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் மருமகளை அமரவைத்தார் இன்பம்.

“கொஞ்ச நேரத்துக்கு நீ எந்திரிக்கக் கூடாது, வேலைகளைப் பார்க்க இங்க அத்தனைப் பேரு இருக்காங்க, நீ எதுக்கும்மா சிரமப்படுத்திக்கிறே?” 

“மாமி, உங்களை அப்பா கூப்பிடுறாங்க.” என்றபடி வந்த இஷான் சில நொடிகள் தங்கையின் முகத்தைப் பார்த்தான்.

“என்னாச்சு மாமி? ஏதாவது பிரச்சினையா?” அவன் முகத்தில் சட்டென ஒரு பயம் தொற்றிக் கொண்டது.

“அதெல்லாம் ஒன்னுமில்லை தம்பி, ஒரு இடத்துல உட்காராம இவ அங்க இங்கன்னு ஓடித்திரியுறா, அதான் இங்க உட்காருன்னு புடிச்சு வெச்சிருக்கேன்.”

“பெரியவங்க சொன்னா அதைக் கேட்கமாட்டியா, உன்னை யாரு இப்ப வேலை பார்க்கச் சொன்னது?” அண்ணனின் குரல் உயர்ந்து வந்தது. ஆல்யாவிற்குக் கல்யாணம் ஆன நாளிலிருந்து அண்ணன், தங்கை இருவருக்குள்ளும் எந்தப் பேச்சுவார்த்தையும் இருந்ததில்லை. கரீமிற்கு ஆக்சிடென்ட் ஆனபோது கூட ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஆண்கள் இருந்த பகுதிக்கு வந்தான் இஷான். அமரோடு எந்த உறவும் இல்லை என்றாலும் ரெஹான் போய் அழைக்கவும் அந்தக் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே வந்துவிட்டான் இஷான். இந்த இரண்டு நாட்களும் எந்தக் கோபத்தையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கல்யாண வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். 

“என்ன சொல்றா உங்க சின்னப் பொண்ணு?” தங்கை கர்ப்பமாக இருப்பது அவனுக்கும் தெரியும் என்பதால் அம்மாவிடம் நேற்று பேச்சுக் கொடுத்தான். சல்மா அந்தக் கேள்வியில் பூரித்துப் போனார்.

“அவளுக்கென்ன! ஆண்டவன் புண்ணியத்துல மகராசியா இருக்கா! அமர் அவளை அப்பிடித் தாங்கிறான், இன்பமும் அப்பிடிப் பார்த்துக்கிறா எம் பொண்ணை, ஆல்யாவைப் பார்க்கிறப்ப எனக்கும் உங்கப்பாக்கும் எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?”

“ம்…” இலேசான முகச்சுளிப்போடு அம்மாவின் கூற்றை ஏற்றுக் கொண்டான் இஷான். உண்மையும் அதுதானே!

“எதுக்கு இஷான் இன்னும் அவளோட மல்லுக்கு நிற்கிறே? அவகூட பேசு, வாயும் வயிறுமா இருக்கிற பொண்ணு, நாம தேடிக் குடுத்திருந்தாலும் இப்பிடியொரு நல்ல வாழ்க்கையை அவளால வாழ்ந்திருக்க முடியுமான்னு தெரியலை, அந்த ஆண்டவந்தான் அவளுக்கு இப்பிடியொரு நல்ல மனுஷனைக் குடுத்திருக்கான், இன்னும் சும்மா முறுக்கிக்கிட்டுத் திரியாதே.” அம்மா ஏற்கனவே ஒரு அதட்டல் போட்டிருந்தார். 

“ரெஹான்.” இளையவனை அழைத்தான் இஷான். தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் அவசரமாக இவனிடம் வந்தான். தன் அண்ணனின் திருமணத்தின் போது பட்டும் படாமல் வந்து கலந்து கொண்டவன் தனது திருமணத்தில் இப்படி இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்வது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

“என்ன மச்சான்?”

“எங்கடா உங்கண்ணன்?”

“அண்ணா வாசல்ல இருக்காங்க, என்னாச்சு மச்சான்?”

“முதல்ல போய் அவனை அவளை ஒரு இடத்துல உட்காரச் சொல்லு.”

“யாரை? ஆல்யாவையா?”

“ஆமாண்டா, எல்லா வேலையையும் அள்ளிப் போட்டுக்கிட்டுச் செய்யுறா, உங்கம்மா வேற திட்டுறாங்க, இவன் போய் சொன்னாத்தான் அவ கேட்பா, முதல்ல இவனைப் பொண்டாட்டியைக் கவனிக்கச் சொல்லு.”

“சரி மச்சான்.” ரெஹான் அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லவும் மனைவியைத் தேடிக்கொண்டு வந்தான் அமர். 

“ஆல்யா…” சமையலறை நாற்காலியில் அமர்ந்திருந்தாள் பெண்.

“தம்பி, ஆல்யாவை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க, ரொம்ப நேரமா நடந்து திரியுறா.” இது இன்பம்.

“கொஞ்சம் ஜூஸ் போட்டுக் குடுங்கம்மா.” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் ரூமிற்கு வந்துவிட்டான். 

“எனக்கு ஒன்னுமில்லை, சும்மா எல்லாரும் கவலைப்படாதீங்க.”

“கால் வீங்கிப் போச்சு பார்த்தியா.” என்றவன் அவன் கட்டிலில் அவளைக் கால்நீட்டி வசதியாக உட்கார வைத்தான். பாதங்கள் இரண்டும் சிவந்து போய் இலேசாக உப்பியிருந்தன. அமர் மெதுவாகப் பிடித்துவிட்டான்.

“உங்கண்ணா சத்தம் போடுறானாம்.” சொன்னவன் முகத்தில் சிரிப்பு.

“என்னவாம் அவருக்கு?”

“அவரோட செல்லத் தங்கையை நான் நல்லாப் பார்த்துக்காம வேலை வேலைன்னு ஓடுறேனாம்.”

“அடேயப்பா! அத்தனை அக்கறை இருந்தா அவர் பார்த்துக்க வேண்டியதுதானே!”

“தம்பி…” கதவைத் தட்டிவிட்டு இன்பம் கையில் க்ளாஸோடு உள்ளே வந்தார்.

“கொஞ்ச நேரம் நீங்களும் இங்க உட்காருங்க தம்பி, வேலையை மத்தவங்க பார்க்கட்டும்.” என்றுவிட்டுப் போனார். பானத்தை அருந்தி முடித்த மனைவியைத் தோளில் சாய்த்துக் கொண்டான் அமர். அவன் கை அவள் வயிற்றைத் தடவிக்கொடுத்தது.

விருந்து மிகவும் அமோகமாக நடந்து முடிந்திருந்தது. குடும்பத்தார், நண்பர்கள் என அனைவரும் கலைந்து போயிருந்தார்கள். முக்கியமான அங்கத்தவர்கள் மாத்திரம் வீட்டு ஹாலில் எஞ்சியிருந்தார்கள்.

“அடுத்தது இஷான் தம்பியோட கல்யாணந்தான்.” இன்பம் ஆரம்பித்து வைத்தார்.

“நல்லா சொல்லுங்க இன்பம், எப்ப கல்யாணத்தைப் பத்திப் பேசினாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு பதில் வருது.” இது சல்மா. 

“என்னாச்சு மச்சான்? ஏதாவது லவ்…” கேட்ட ரெஹானை முறைத்தான் இஷான்.

“அடப்போடா! லவ்வுமில்லை, ஒரு மண்ணுமில்லை, மனசுக்குப் புடிக்க வேணாமா? சும்மா கண்டவளோட ஃபோட்டோவையும் காட்டுறாங்க.”

“ஓ… மச்சான், ஃபாரீன் போற ஐடியா இருக்குன்னு முன்னாடி ஒரு தடவைச் சொன்னீங்கல்லை, இப்பவும் அந்த ஐடியா இருக்கா, எங்கக் கம்பெனியில ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.”

“டேய் ரெஹான், முதல்ல அதை என்னன்னுப் பாருடா, கல்யாணத்துக்கு இப்ப என்னடா அவசரம்?”

“உங்க டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எனக்கு மெயில் பண்ணுங்க மச்சான், இறங்கி வேலை பார்க்கலாம்.” 

“என்ன அங்க குசுகுசுன்னு பேச்சு? எந்தக் கோட்டையைப் புடிக்க ரெண்டு பேரும் திட்டம் போடுறீங்க?” இது கரீம்.

“இல்லை மாமா, மச்சானுக்கு ஃபாரீன் போற ஐடியா இருக்கு, அதான் எங்க கம்பெனியில ட்ரை பண்ணலாமான்னு கேட்டேன்.”

“எல்லாரும் இப்பிடி வெளிநாடு வெளிநாடுன்னு கிளம்பிப் போனா வயசு போன காலத்துல நாங்கெல்லாம் என்னப் பண்ணுறது? ஏன் அமர்? உனக்கும் அப்பிடி ஏதாவது ஐடியா இருக்கா? நீயாவது எங்களை இங்க இருந்து பார்த்துக்குவேயில்லை?” 

“உங்களை விட்டுட்டு நான் எங்க மாமா போகப்போறேன்?” சிரித்தபடி அமர் சொல்ல அவன் தோளில் தட்டினார் கரீம்.

“பார்த்தியாடா பெரிசோட குசும்பை? பெத்த புள்ளை நான் இங்க இருக்கேன், அந்த மனுஷன் உங்கண்ணனைக் கேள்வி கேட்கிறதை?” இஷான் முணுமுணுக்க ரெஹான் சிரித்தான்.

“இளைய மாப்பிளைன்னா மாமாவும் மாமியும் உசுரை விடுறாங்க மச்சான்.”

“எல்லாம் இந்தப் பயலோட நடிப்புடா, அதை அந்தப் பெரிசுங்க ரெண்டும் நம்புது.” சொன்ன இஷானும் இப்போது இளையவனோடு சேர்ந்து சிரித்தான். சூழ்நிலை மிகவும் இதமாக இருந்தது. 

ஆறு மணிபோல மணமக்கள் மீண்டும் அலங்காரம் செய்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தார்கள். ரெஹான் தனது புது மனைவியைக் கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தான். இளைய மகன் அடித்த லூட்டியைப் பார்த்துவிட்டு இன்பம் தனது அறைக்குள் போய்விட்டார்.

“மதினி, இப்போ நீங்க வாங்க.”

“நானா? நான் எதுக்கு? எனக்கா இன்னைக்குக் கல்யாணம்?” கூப்பிட்ட ரெஹானை முறைத்தாள் ஆல்யா.

“கல்யாணம் பண்ணினாத்தான் ஃபோட்டோ எடுக்கணுமா? இது வளைகாப்பு ஃபோட்டோ.” வேண்டுமென்றே அவளைச் சீண்டினான். 

“ஆல்யா, சும்மா ஒரு ஞாபகார்த்தந்தானே, அண்ணா நீங்களும் வாங்க.” ரெஹானைப் போல அவளும் அமரை அண்ணா என்றுதான் அழைத்தாள். அமர் என்ன நினைத்தானோ, ஆல்யாவோடு சேர்ந்து சில படங்கள் எடுத்துக் கொண்டான். மனைவியின் ஐந்து மாத வயிறு தெரியும் வண்ணம் பக்கவாட்டில் படங்களை எடுத்தான். எல்லா ஆர்ப்பாட்டமும் ஓய்ந்த போது மணி இரவு பத்து. வீடே அமைதியாக இருந்தது. 

இரவுக் குளியலை முடித்துக்கொண்டு ஆல்யா வெளியே வந்தபோது கட்டிலில் அமர்ந்த படி அவளுக்காக் காத்திருந்தான் கணவன். அன்றைக்கு முழுவதும் வெப்பம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் ஸ்லீவ்லெஸ் நைட்டி அணிந்திருந்தாள். அறையில் ஏஸி ஓடிக்கொண்டிருந்தது. இவளைக் காணவும் தனது கரத்தை அவளுக்காக நீட்டினான் அமர். அவள் வந்து உட்கார்ந்ததும் அவளது பாதங்களைத்தான் அவன் கண்கள் ஆராய்ந்தன.

“உங்கத் தம்பி இன்னைக்கு அடிச்ச லூட்டி கொஞ்ச நஞ்சமில்லை.”

“என்னப் பண்ணினான்?”

“சுத்திவர ஆளுங்க இருக்கிறதைப் பத்தி அவருக்குக் கவலையே இல்லை, ஒரு கட்டத்துல ஹானிதான் நான் ரூமுக்குப் போறேன் ஆல்யான்னு போயிட்டா.” அமரும் இந்த நாடகத்தைக் கவனித்திருந்தான். ஆனால் மனைவியிடம் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை. புன்னகைத்தான்.

“ரெஹான் மச்சானுக்குக் குடுக்கிற பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? இனி அவங்க வீடு தேடணுமில்லை?”

“எல்லாத்தையும் இப்பவே கொண்டுபோக முடியாதுடா, லீகலா எவ்வளவு அவங்களால கொண்டுபோக முடியுமோ அதை எடுத்துட்டுப் போகட்டும், ஹானியோட அம்மா, அப்பாவும் இருக்காங்கல்லை, அவங்களும் கொண்டு போகலாம், அப்புறமா நாம போகும்போதும் கொஞ்சத்தைக் கொண்டு போகலாம்.”

“இது நல்ல ஐடியாதான், இன்னைக்கு என்ன எங்கண்ணா புதுசா ஆரம்பிக்கிறான்? அவனும் லண்டன் போகப்போறானாம்?!”

“அங்க நல்ல வேலை கிடைச்சா போகட்டுமே, நல்லதுதானே.”

“நல்லதுதான்…”

“எதுக்கு இந்த இழுவை, மாமா, மாமியை நாம பார்த்துக்கலாம்.” என்றவன் மனைவியைத் தன்னோடு அணைத்துக் கொண்டான். கூந்தலை உயரத் தூக்கிக் கட்டியிருந்தாள். கையில்லாத ஆடையும், கழுத்து வளைவும், கன்னக் கதுப்பும் அவனுக்கு வேறு ஆசைகளை மூட்டியது. 

“ஆலி…” 

“ஆலிக்கு என்னவாம்?” அவன் பார்வை அவளுக்குப் புரிந்தது. சிரித்தபடி கேட்டாள். 

“தம்பிக்குத்தானே இன்னைக்குக் கல்யாணம், அண்ணாக்கு இல்லையே!” இது மனைவி.

“நம்ம கல்யாணத்தன்னைக்கு நாமதான் எதுவுமே பண்ணலையே!”

“நீங்கப் பண்ணலை, உங்களை எதுவும் பண்ண வேணாம்னு நான் அன்னைக்குச் சொல்லலையே!”

“என்னம்மா இப்பிடிப் பிரிச்சுப் பேசுறே? நீ படிப்பை முடிக்கணும்னுதானே நான் அன்னைக்கு…” பேச்சை முடிக்காமல் அவன் உதடுகள் அவள் கழுத்து வளைவில் கோலம் போட ஆரம்பித்திருந்தன.

“படிப்பு மட்டுமா? கரீம் மாமாவோட சின்னப் பொண்ணோட…” பேச்சை ஆரம்பித்தவள் மேலே பேசாமல் கணவனை முறைத்துப் பார்த்தாள். இவை எப்போதும் அவன் சொல்லும் வார்த்தைகள். அவளைக் கோபப்படுத்தும் வார்த்தைகள்.

“இல்லையில்லை, அது அப்போ ஆலி, அப்போ இருந்த அமர் அப்பிடித் தப்புத்தப்பா யோசிச்சான், ஆனா இப்ப அப்பிடியில்லை, சத்தியமா அப்பிடியில்லைம்மா.” அவன் அவசரமாக ஒப்புவிக்கவும் ஆல்யா வாய்விட்டுச் சிரித்தாள். தானும் மனைவியோடு சேர்ந்து சிரித்தவன் அவள் கூந்தல் காட்டில் முகம் புதைத்தான். இரவும் நிலவும் அவளது செல்லச் சிணுங்கல்களோடு நகர்ந்து கொண்டிருந்தன.

இனிதாய் ஒரு குடும்பம்! நிறைவாய் ஒரு இல்லறம்!

முற்றும்.

 

 

forum 6 கருத்துகள் உள்ளன

  1. Super நான் இந்த கதையை அமேசான்ல படிச்சேன் இப்போ உங்க கதை எதுவும் அமேசான் ல இல்ல இனிமே எப்ப போடுவீங்க சீக்கிரம் போடுங்க

  2. இலங்கையை உங்கள் தயவில் சுற்றி பார்த்தாகி விட்டது. இயற்கை காட்சிகளை நேரில் பார்ப்பது மாதிரி த்த்ரூபமாக எழுதியிருக்கிறீர்கள். அருமையான குடும்பக்கதை. மிக நன்றாக இருந்தது.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்