arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 20
Anbe… Azhage! chevron_right பகுதி 20 / 21

அத்தியாயம் 20

visibility 4
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 20

அடுத்தநாள் காலை அழகாக விடிந்திருந்தது.‌ அமருக்கு இன்றைக்கும் வேலைகள் அதிகம் இருந்தன. ஆனாலும் மனைவி தன்னை அதிகம் தேடுகிறாள் என்பதால் நிதானமாக ஆயத்தமானான். நேற்றைய இரவு இருவருக்குமே தித்திப்பாக அமைந்திருந்தது. அவர்கள் வீடு வந்தபோது நள்ளிரவாகியிருந்தது.                                                                               

“ஆல்யா, இன்னைக்கும் நான் வர லேட்டாகும், சும்மா கண்டதையும் யோசிக்காம நேரத்துக்குச் சாப்பிடணும்.”

“நான் நேரத்துக்குச் சாப்பிடுவேன், நீங்கதான் அதை ஒழுங்கா பண்ணமாட்டேங்கிறீங்க.”

“சரிசரி.” என்றவன்,

“ஏம்மா, இன்னைக்கு ரெஹானோட ப்ளான் என்ன? எங்கேயாவது வெளியே போறானா?” என்று கேட்டான்.

“இல்லை, அப்பிடி எதுவும் எங்கிட்டச் சொல்லலை, மதினியோட கார் நேத்து பீச் வரைக்கும் போச்சுதோன்னு கேலி பண்ணினாரு.”

“அவனுக்கெப்பிடி தெரியும்? நீ ஏதாவது சொன்னியா?”

“ம்ஹூம், இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன், நாங்களும் இதே ஊர்லதான் பொறந்து வளர்ந்தோம் மதினின்னு சொன்னாங்க.”

“தெரிஞ்சவங்க யாரும் சொல்லியிருப்பாங்க.” கணவனின் பதிலில் ஆல்யாவைப் பயம் பிடித்துக்கொண்டது. தங்களைப் பார்த்தவர்கள் வேறு என்னவெல்லாம் பார்த்தார்களோ?! மனைவியின் முகத்தைப் பார்த்தவன் சிரித்தான். அவளைத் தன்னருகே இழுத்தவன்,

“உன்னை யாரும் பார்க்கலை, நீ அதை நினைச்சு பயப்படாதே.” என்றான் அவள் தலையில் மோதி. பெண்ணுக்கு இப்போதுதான் சுவாசம் சீரானது.

“எங்கேயாவது வெளியே போகணும்னா எனக்கு கால் பண்ணச் சொல்லு, காரை கொண்டு வந்து குடுக்கிறேன்.”

“இல்லையில்லை, அவங்களுக்கு கார் வேணும்னா கேப் புக் பண்ணட்டும்.” சட்டென்று மனைவி சொன்ன பதிலை அமர் இரசிக்கவில்லை. 

“என்னப் பேச்சும்மா இது? வீட்டுல கார் இருக்கும் போது எதுக்கு கேப்?”

“எங்க வீட்டுல ஒரு கார் சும்மாதானே இருக்கு, அதை எடுத்துட்டுப் போகட்டும்.” இப்போதும் அவள் பதில் வித்தியாசமாகவே வந்தது.

“ஏய்! அவன் என்னோட தம்பி, அது உனக்கு ஞாபகம் இருக்கில்லை?” அமரின் குரல் இலேசாக இப்போது உயர்ந்தது. 

“யாரா இருந்தாலும் சரி, நம்ம காரை குடுக்க முடியாது.” அவள் திட்டவட்டமாக சொல்லவும் அமரின் நெற்றி சுருங்கியது. மனைவி எப்போதும் இப்படிப் பேசுபவள் அல்ல என்பதால் அவள் முகத்தைத் தனக்காகத் திருப்பினான் அமர்.

“என்னாச்சு உனக்கு? நீ இப்பிடி பேசுற ஆள் கிடையாதே!”

“ரெஹான் மச்சானுக்கு நீங்க புது கார் வேணும்னாலும் வாங்கிக் குடுங்க, ஆனா நம்ம காரை குடுக்க முடியாது.” அடம்பிடித்ததாள் பெண்.

“அதான் ஏன்?” தன்னிடம் கோபம் காட்டியவனின் கன்னத்தில் சப்பென்று ஒரு அடி வைத்தாள் ஆல்யா. கண்களில் கண்ணீர் நிறைந்து போனது.

“நேத்து ராத்திரி அந்த கார்ல வெச்சு இல்லாத சேட்டையெல்லாம் எங்கூட பண்ணிட்டு இன்னைக்கு அதே காரை உங்க தம்பிக்குத் தூக்கிக் குடுப்பீங்களா? அதுக்குள்ள அந்தக் கூத்தெல்லாம் மறந்து போச்சா?” காரமாகக் கேட்டவள் அவனிடமிருந்து விலகினாள். அப்போதுதான் அவள் மறுப்பிற்கான காரணம் அவனுக்குப் புரிந்தது. விலகியவளை விலகவிடாமல் தடுத்தான்.

“கொஞ்சமாவது பொண்டாட்டி மேல லவ் இருந்தா இதெல்லாம் புரியும், இங்கதான் ஒரு மண்ணும் இல்லையே!” என்றாள் கண்ணீர் குரலில். அமருக்கு ஐயோ என்றிருந்தது. இது எப்படி அவனுக்குத் தோன்றாமல் போனது!

“சாரிடா, உன்னை மாதிரி எனக்கு யோசிக்கத் தெரியலை.”

“ஆனா இவ எப்பிடி என்னோட தம்பிக்கு இல்லைன்னு சொல்லலாம்னு கோபப்பட மட்டும் தெரியும், கார் என்னோடது, ஞாபகமிருக்கில்லை?” அவள் மிரட்டினாள்.

“அட ஆமா! அது வேற இருக்கில்லை! ஆனாலும் ரெஹான் பாவம் ஆல்யா.” வேண்டுமென்று மனைவியைச் சீண்டினான்.

“கொன்னுடுவேன்.” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவளைக் கொஞ்ச நேரம் கவனித்துவிட்டுத்தான் கிளம்பினான் அமர். இவர்கள் இருவரும் அறையைவிட்டு வெளியே வரும்போது சோஃபாவில் அமர்ந்திருந்த இன்பம் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.

“அம்மா, நான் கிளம்புறேன்.”

“சரிப்பா.” ஹாலை கடந்து இருவரும் முன் வாசலுக்கு வரும்போது ரெஹானும் ஹானியும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். பழைய வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று அங்கிருந்த அனைத்தையும் அவளுக்குக் காட்டியிருந்தான் ரெஹான். ஏதோ பேசிச் சிரித்தபடி வந்த இருவரும் பெரியவனைக் காணவும் அப்படியே நின்றுவிட்டார்கள். ரெஹான் தலையைக் குனிந்து கொண்டான்.‌ ஆனால் அந்தப் பெண் தயங்கவில்லை. நேராக அமரின் முகம் பார்த்து ஸலாம் சொன்னது.

“அஸ்ஸலாமு அலைக்கும்.” ஒரு எதிரி, அல்லது பகைமை பாராட்டுபவன் தன்னிடம் வந்து ஸலாம் கூறினாலே அதற்குப் பதில் சொல்லாமல் போக முடியாது. தன்னெதிரில் நிற்பவள் தனக்கு எதிரியுமல்ல, பகையாளியுமல்ல. சொல்லப் போனால் நாளைக்குத் தன் தம்பியின் மனைவி ஆகப்போகிறவள். உன் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று முகமன் சொல்பவளை எப்படிக் கடந்து செல்வது?! அமர் திணறினான். இருந்தாலும் அவன் உதடுகள் இயல்பாக அவளுக்குப் பதில் சொல்லின. 

“வ அலைக்கும் ஸலாம்.” இதை அங்கிருந்த மற்றவர்கள் எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போனார்கள். அமர் எப்போதும் அதிகம் பேசாதவன். இன்பத்திடம் கூட அளந்துதான் பேசுவான். அவன் அதிகம் பேசும் ஒரே நபர் அவன் மனைவி! 

“நேத்து ஆல்யா எல்லாம் சொன்னாங்க.” அந்தப் பெண் ஆரம்பித்ததுதான் தாமதம். ரெஹான் அவசரமாக வந்து அவள் கரத்தைப் பிடித்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்த பெண் பேச்சைத் தொடர்ந்தது.

“உங்க மனசுல இருக்கிற பயம் நியாயமானதுதான், ஏன்னா நீங்க ரெஹானுக்கு அண்ணா மாத்திரமில்லை, அப்பா, அதுவும் எனக்குத் தெரியும், சின்ன வயசுல இருந்தே இந்த மார்க்கத்துல ஒரு பற்று, ஆசை, அது எங்க வீட்டுலயும் தெரியும், அதால அவங்க எந்த எதிர்ப்பும் சொல்லலை, உங்க தம்பியை எனக்கு ரொம்பப் புடிக்கும்… இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை…” அந்தப் பெண் கோர்வையாக சொல்லி முடித்தாள். அமர் அவள் பேசும்வரை அமைதியாக அங்கேதான் நின்றிருந்தான். இப்போதும் அவன் பதிலேதும் சொல்லிவிடவில்லை. ஆனால் தன் தம்பியையும் அந்தப் பெண்ணையும் ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போனான். 

ரெஹானுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆல்யாவை அவன் ஆச்சரியமாகப் பார்க்க அவளும் அதிசயித்தவள் தன் கணவனின் பின்னோடு போனாள். அமர் காரில் ஏறி அமர்ந்ததும் மறுபுறம் வந்து அவளும் ஏறி உட்கார்ந்தவள் அவன் கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தம் வைத்தாள்.

“ஏய்! என்னப் பண்ணுற நீ?!” 

“அம்மாடியோவ்! அந்த வாய்ல இருந்து முத்து உதிராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், ஆனாலும் ஒரு சிரிப்பு வந்துதே! அதுவே பெரிய விஷயம்டா சாமி!”

“அடிவாங்கப் போறே, முதல்ல இறங்கு நீ, எனக்கு லேட்டாகுது.”

“ஆனாலும் ஒரு வார்த்தைப் பேசியிருக்கலாமில்லை.” கெஞ்சிய மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான் அமர்.

“பேசக்கூடாதுன்னு இல்லைம்மா, எனக்குப் பேச வரலை, உன்னையும் அம்மாவையும் தவிர நான் வேற யாருக்கிட்டப் பேசியிருக்கேன் சொல்லு?” அவன் சொல்வதும் சரிதானே! அவன் வேறு யாரிடம் அதிகம் பேசியிருக்கிறான்?! கணவனின் இரு கன்னங்களையும் பிடித்துக் கிள்ளியவள் மலர்ந்து சிரித்துவிட்டு இறங்கிப் போய்விட்டாள். 

***

இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தன. ஹீத்ரோ விமான நிலையம், லண்டன். அமரும் ஆல்யாவும் எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடந்தபடி வந்துகொண்டிருந்தார்கள். முதல் முறையாக இருவரும் இங்கிலாந்து வருகிறார்கள். பார்ப்பதற்கும் இரசிப்பதற்கும் நிறைய விடயங்கள் இருந்தன. 

ஆல்யா தனது படிப்பை முடித்திருந்தாள். அதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. எதைச் செய்வதென்றாலும், உன் படிப்பு முடியட்டும்மா, என்ற அமரின் தாரக மந்திரம் இப்போது நின்று போயிருந்தது. பத்து நாட்கள் இவர்களோடு இருந்துவிட்டு ரெஹானும் ஹானியும் லண்டன் வந்துவிட்டார்கள். உல்லாசமாக வெளியே திரிய அவர்களை இன்பம் அனுமதிக்கவில்லை. இப்போதே அக்கம் பக்கத்தில் இருக்கும் சிலர்,

“யாரு இன்பம் அது? உங்க வீட்டுக்கு யாரோ புதுசா வந்திருக்காங்கப் போல?” என்று விசாரித்துவிட்டார்கள். கல்யாணம் முடியும் வரை ஊர் வாய்க்கு அவல் கொடுக்க வேண்டாம் என்பது அம்மாவின் எண்ணம்.

“ரெஹான் மச்சான் வந்ததும் எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போகலாம்னு சொன்னீங்களே?” குறைப்பட்ட மனைவியைச் சமாதானம் செய்ய முடியாமல் அமர்தான் திணறினான்.

“அம்மா சொன்னா சரியா இருக்கும் ஆல்யா, இப்போ அந்தப் பொண்ணை வெளியே கூட்டிட்டுத் திரியுறது நல்லதில்லைடா, புரிஞ்சுக்கோ.” 

ரெஹான் புதிதாக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். நல்ல சம்பளம். அதில் அமருக்கு அத்தனைத் திருப்தி. தன் தம்பி நன்றாகப் படித்து, நல்லதொரு வேலையில் அமர்ந்துவிட்டான். எதையோ சாதித்தது போலவிருந்தது. ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்ததாக போனபோது வாழ்க்கையே இருண்டது போல இருந்த நாட்கள் நியாபகம் வந்தன. அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு இந்த நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இறைவன் தங்கள் மேல் எத்தனைக் கருணை காட்டியிருக்கிறான்!

“ஹாய்!” ஆல்யா இங்கிருந்து கை காட்டினாள். இவர்களை அழைத்துச் செல்வதற்காக ஹானிதான் ஏர்போர்ட் வந்திருந்தாள். புதிதாக சேர்ந்த வேலை என்பதால் ரெஹானுக்குப் பல கெடுபிடிகள் இருந்தன. அவனால் விடுமுறை எடுக்க முடியாது. அதனால் அண்ணாவையும் மதினியையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஹானி எடுத்திருந்தாள்.

“ஜர்னி எப்பிடி இருந்துச்சு? ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஹானி, இந்த சாப்பாட்டு மேட்டரை என்னோட மச்சான் கைல ஒப்படைச்சா இதைவிட சூப்பரா பண்ணுவாங்க.” இவள் பதிலில் ஹானி சிரித்தாள்.

“இமிக்ரேஷன்ல ஒன்னும் பிரச்சினை இல்லையில்லை?”

“இல்லைம்மா, ஒன்னும் பெருசா கேட்கலை, சொந்தக்காரங்க இங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க, தம்பியும் அவனோட ஃபேமிலியும் இருக்காங்கன்னு சொன்னோம்.” இது அமர். தம்பியின் வருங்கால மனைவியிடம் இயல்பாகப் பேசினான். 

“ரெஹான் மச்சான் எத்தனை மணிக்கு வருவாங்க?”

“வேலை அஞ்சு மணிக்குத்தான் முடியும், ட்ராஃபிக் டைம், வந்து சேர எப்பிடியும் ஏழு மணியாகிடும்.” ஹானி சொன்னதைப் போல ரெஹான் வந்தபோது மணி ஏழாகிவிட்டது. இவர்கள் தங்குவதற்காக ‘ப்ரீமியர் இன்’ இல் ரூம் போட்டிருந்தார்கள். ரெஹான் இன்னும் சில பையன்களோடு சேர்ந்து ஒரு வீட்டில் தங்கியிருந்தான். தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு ஹானி எவ்வளவு வற்புறுத்தி அழைத்தபோதும் அதை அமர் விரும்பவில்லை.

“இல்லைம்மா, தப்பா எடுத்துக்காதீங்க, ஹோட்டல் ரூம்தான் எங்களுக்கு வசதி.” அதற்கு மேல் யாரையும் அவன் பேசவிடவில்லை. மஹிராவின் வீட்டில் தங்க கணவன், மனைவி இருவரும் பிரியப்படவில்லை.

“ஹானி வீட்டுல தங்கலாம்ணா, அவங்க ரொம்ப நல்ல மாதிரி.” ரெஹானும் எடுத்துச் சொன்னான்.

“இல்லைடா, அது நல்லா இருக்காது, இன்னும் கொஞ்ச நாள் போனா நீ தனியா வீடு எடுத்துருவல்லை, அப்ப நம்ம வீட்டுல நாங்க வந்து தங்கிறோம், இப்போ ஹோட்டல் போதும் ரெஹான்.” அதற்கு மேல் அமரிடம் யாரும் அதைப்பற்றி விவாதிக்கவில்லை. 

“என்ன மதினி? லண்டன் என்ன சொல்லுது?” ஆர்ப்பாட்டமாக வந்து சேர்ந்தான் இளையவன்.

“ஆமா! மதினி மதினின்னு சும்மா வெறும் வாய் சவடால்தான், ஒரு நாள் லீவு போட்டுட்டு ஏர்போர்ட்டுக்கு வர முடியலை!” ஆல்யா நொடித்துக் கொண்டாள்.

“ஐயையோ! சாரிம்மா, லீவு எடுத்தா வேலையை விட்டுத் தூக்கிடுவான், நாளைக்கு வெள்ளிக்கிழமை, அதுக்கப்புறம் சனி, ஞாயிறு நான் ஃப்ரீ, சும்மா ஜமாய்ச்சுடலாம்!”

“ஏய்! அவ சும்மா சொல்றாடா, நீ தப்பா எடுத்துக்காதே.” ரூமிற்கு வந்ததும் வராததுமாக கொண்டுவந்திருந்த பொருட்களைக் கடைபரப்பிக் கொண்டிருந்தாள் ஆல்யா. இன்பம் தனது இளைய மருமகளுக்கு நிறைய பொருட்கள் அனுப்பியிருந்தார். மாமியாரும் மருமகளும் தினமும் வீடியோ காலில் பேசிக்கொள்வார்கள். போதாதற்கு சல்மா வேறு தனது மூத்த மகளுக்குச் சாமான்கள் அனுப்பியிருந்தார். பத்து மணிவரை நன்றாக அரட்டை அடித்துவிட்டுத்தான் ரெஹானும் ஹானியும் கிளம்பிப் போனார்கள். 

“நான் நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன்.” நாளைக்கு மதியம் ஹானியின் வீட்டில் இவர்களுக்கு விருந்து. அதைத்தான் பெண் குறிப்பிட்டிருந்தாள். அன்று இரவு தூங்கும் போது அமர் தன் மனைவியிடம் நிறைய பேசினான். ஒருவர் பின் ஒருவராக அம்மா, அப்பா போனது. அப்பா போன பிற்பாடு தொழில் செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தொழில் புரியாமல் தடுமாறியது என பலதும் பேசினான்.

“அப்பெல்லாம் உங்கப்பா ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்காங்க, ஏதாவது பண்ணிச் சாதிக்கணுங்கிற வெறி இருந்துச்சு, ஆனா என்னப் பண்ணுறதுன்னு புரியலை, படிப்பை விட்டுட்டுத் தொழில்ல இறங்கிறதான்னு பயமா இருந்துச்சு, படிப்பை விட்டுட்டா நாளைக்கு நம்ம நிலைமை என்னாகிங்கிற வருத்தம் நிறையவே இருந்துச்சு, படிச்சவங்களுக்குத்தானே இந்த சமூகத்துல மரியாதை, இப்பிடி கரண்டி புடிக்கிறவங்களை யாராவது மதிப்பாங்களாங்கிற பயம் இருந்துச்சு.” ஆல்யா கணவனின் மார்பைத் தடவிக் கொடுத்தாள்.

“ஏன் இப்பிடி என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டீங்கன்னு அம்மா, அப்பா ஃபோட்டோ முன்னாடி நின்னு பலநாள் அழுதிருக்கேன்.” என்றவன் இப்போது ஒரு பெருமூச்சு விட்டான். 

“கஷ்டத்தைக் குடுத்த ஆண்டவன் நிறைய கருணையும் காட்டியிருக்கான், என்னை எங்கயும் அவன் சறுக்க விடலை, நான் ஒவ்வொரு அடி தூக்கி வெக்கும் போதும் அவன் எங்கூட இருந்திருக்கான், அன்னைக்கு நான் நினைச்சிருப்பேனா, ஒருநாள் இப்பிடி லண்டன் வரைக்கும் நான் வருவேன்னு, என் தம்பி இங்க வந்து இப்பிடி வேலை பார்ப்பான்னு!” உணர்ச்சி வசப்பட்டவனின் குரல் கரகரத்தது. கண்களில் இலேசாக கண்ணீர் துளிர்த்தது.

“நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தான்.” என்ற மனைவியைப் பார்த்துச் சிரித்தான் அமர்.

“எங்க யூனியில இந்தக் கரண்டி புடிச்ச மனுஷனைப் பார்த்து எத்தனைப் பொண்ணுங்க சைட் அடிச்சிருக்காங்கத் தெரியுமா?” 

“சும்மா போடி கதை அளக்காம!” அது அவனுக்கும் தெரியும். ஆனாலும் சமாளித்தான்.

“நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறீங்களா? அந்த ப்ளாக் ஆடில நீங்க வந்து இறங்கும் போது… ம்ப்ச்… சான்சே இல்லை மச்சான்!” அவள் அனுபவித்துச் சொன்னாள்.

“போதும் நிறுத்து!”

“உங்களைப் பாதுகாக்கிறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆகிடும், அன்னைக்கு யூனி ஃபங்ஷனுக்கு வந்திருந்தீங்கல்லை? அப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே? படிச்சவங்களுக்குத்தான் மரியாதை, தொழில் பண்ணுறவங்களுக்கில்லை எங்கிறதெல்லாம் அந்தக் காலம் மச்சான், புதிய ஜெனரேஷன் அப்பிடி கிடையாது.” 

“வாழ்க்கையில கொஞ்சம் முன்னேறிட்டோம்னு பார்த்தா இந்தப் பொண்ணு அடுத்த பிரச்சினையோட வந்து நிற்குது.” மனைவியின் மார்பில் வசதியாக சாய்ந்து கொண்டவன் அவளை இப்போது வம்பிழுத்தான். ஆல்யா அமைதியாகிவிட்டாள்.

“இந்தச் சின்னப் பொண்ணோட எப்பிடி நான் குடும்பம் நடத்துறதுன்னு அன்னைக்கு நான் மலைச்சுப் போய்ட்டேன்.” சொன்னவனின் வாயில் அடித்தாள் பெண்.

“ஏய்! நான் உண்மையைத்தான் சொல்றேன், அப்ப என்னோட மனநிலை அப்பிடித்தான் இருந்துச்சு.” அவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டவள் அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்துக் கொண்டாள். எப்போது பார்த்தாலும் இது என்ன பேச்சு?! அவளைச் சீண்டுவது போல! புன்னகைத்தவன் அவளருகில் வந்தான். 

“எதுக்கு இப்போ அம்மிணிக்குக் கோபம் வருது? நான் அன்னைக்கு என்னோட மனசுல என்ன இருந்துச்சுன்னுதானே சொன்னேன்!”

“அதை எத்தனைத் தடவைதான் சொல்லுவீங்க? விருப்பமில்லாத உங்களை நான் கட்டாயப்படுத்திக் கட்டிக்கிட்ட மாதிரி இருக்கு.”

“அப்பிடியில்லைம்மா.”

“போதும் விடுங்க, உங்க கரீம் மாமாவோட சின்னப் பொண்ணுக்கு நீங்க பாவப்பட்டு வாழ்க்கைக் குடுத்த கதையை.”

“நான் அப்பிடிச் சொல்லலை ஆலி, பாவப்பட்டு வாழ்க்கைக் குடுத்தவந்தான் கல்யாணமாகி எட்டு மாசத்துல இப்பிடி பொண்டாட்டி பொண்டாட்டின்னு கவுந்து கிடக்கிறானா?”

“ஆமா, இவர் கவுந்துட்டாலும்!”

“ஆலி… லைட்டா குளிருது…” 

“அதான் போர்வை நல்ல கனமா இருக்குதில்லை, இழுத்துப் போர்த்திக்கிட்டுத் தூங்குங்க.”

“அது எதுக்கு?” என்றவன் அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான். 

“சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா அதைப் புடிச்சுக்குவியா நீ?”

“நீங்க எதுக்கு அதையே திரும்பத் திரும்பச் சொல்றீங்க? உங்கப் பின்னாடி நான் அலைஞ்சு திரிஞ்சேன்னு சொல்லிக்கிறதுல உங்களுக்கு அவ்வளவு பெருமையா?”

“ஆமா, பெருமைதான், அதுக்குப் பழிவாங்கிற மாதிரி இப்போ என்னை நீ உம் பின்னாடி அலையவிடலை?” என்றவன் அதன்பிறகு காரியத்தில் கண்ணாகிப் போனான். லண்டன் குளிருக்குப் போர்வை மாத்திரமல்ல, அப்போது அவனுக்கு மனைவியும் தேவைப்பட்டாள்.

அடுத்தநாள் பத்து மணிபோல ஹானி வந்துவிட்டாள். இவர்கள் ஹோட்டலிலேயே காலை ஆகாரத்தை முடித்திருந்தார்கள். ரெஹான் வேலை முடிந்த பிற்பாடு இவர்களோடு வந்து இணைந்து கொள்வான். ஹானியின் பெற்றோர் மிகவும் அருமையான மனிதர்களாக இருந்தார்கள். இவர்களோடு எந்தப் பாகுபாடும் இல்லாமல் பேசினார்கள், பழகினார்கள். ரெஹான் மேல் அவர்களுக்கு மிகவும் மரியாதை இருக்கிறது என்பது பேச்சிலேயே புரிந்தது. 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மதிய நேர தொழுகையை அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றில் முடித்தான் அமர். மதிய உணவிற்குப் பிறகு ஹானியின் வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் ரெஹானும் வந்துவிட அந்த இடம் கலகலப்பாகிப் போனது. ஆறு மணிக்கு மேலாக நால்வரும் கிளம்பி மஹிராவின் வீட்டுக்குப் போனார்கள். அங்கே அதிக நேரம் தங்க அமருக்கு விருப்பமில்லை.

“எதுக்கு ஹோட்டல்ல தங்கிக்கிட்டு, எங்க வீட்டுல தங்கியிருக்கலாமே?” டாக்டர் குறைப்பட்டுக் கொண்டார்.

“என்னடீ இது?! எங்க இருந்து இந்த வெள்ளைக்காரியைப் புடிச்சான் இவன்?!” தனிமையில் தங்கையிடம் தன் அதிருப்தியை வெளியிட்டாள் மஹிரா.

“அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரிக்கா, கொஞ்ச நாள் பழகிப் பார்த்தா உனக்கே புரியும்.”

“ஆமா, அதான் இப்ப எனக்கு ரொம்ப முக்கியம், அமர் என்ன சொல்றான்? உங்கூட நல்லா இருக்கானா?” சந்தேகக் குரலிலேயே கேள்வி வந்தது. 

“அதான் பார்க்கிறேயில்லை, நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம்னு, டாக்டருங்களுக்கு மட்டுமில்லை, கரண்டி புடிக்கிறவங்களுக்கும் இப்ப லண்டனுக்கு வீசா குடுக்கிறாங்களாம்!” முறைத்துப் பார்த்தத் தன் அக்காளை அலட்சியம் செய்துவிட்டு ஹாலுக்கு வந்துவிட்டாள் பெண். அதன்பிறகு அதிக நேரம் அங்கே இருக்க ஆல்யா விரும்பவில்லை.

அடுத்துவந்த இரண்டு நாட்களும் ரெஹானுக்கு விடுமுறை என்பதால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்கள்.‌ இவ்வளவு காலமும் படிப்பில் கவனம் செலுத்தியதால் ரெஹானும் பெரிதாக இதுபோன்ற இடங்களைப் பார்த்திருக்கவில்லை. அந்த இரண்டு நாட்களையும் முழுதாக அனுபவித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

“ரெஹான், நாம இங்க ஒரு வீடு வாங்கினா என்ன?” வின்ட்சர் கோட்டையைப் பார்வையிடும் போது கேட்டான் அமர்.

“லண்டன்ல இப்போ விலை ரொம்ப ஜாஸ்திண்ணா, மோர்கேஜ்லதான் வாங்கணும்.”

“ம்… வட்டியில்லாம மோர்கேஜ் பண்ணலாம்னு சொல்றாங்களே?”

“அதுவும் இருக்குண்ணா, ஆனா எந்தளவு நம்ப முடியும்னு தெரியலை, கொஞ்சம் ரிஸ்க்தான்.”

“ஓ… நீங்க என்ன ஐடியால இருக்கீங்க? எப்போ கல்யாணம்?” அண்ணாவின் இந்த நேரடியான தாக்குதலில் ரெஹான் தலையை ஒரு நொடி குனிந்தான்.

“இன்னும் ஒரு வருஷம் போகணும்னா.”

“ஏன் ரெஹான்? அதான் நல்ல வேலை கிடைச்சிருச்சில்லை? எதுக்குத் தாமதிக்கிறே?”

“இல்லைண்ணா, இப்பதானே சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அதோட… ஹானி என்ன சொல்றான்னா…” தம்பி எதையோ சொல்லத் தயங்கினான்.

“என்னடா?!”

“கல்யாணத்துக்கு அப்புறமா அவங்க வீட்டுல நாங்க இருக்கிறதுல அவளுக்கு விருப்பமில்லை.”

“எதுக்கு நீங்க அங்க இருக்கணும்? உங்களுக்குன்னு ஒரு வீட்டை வாடகைக்கு எடுங்க.”

“அதாண்ணா, லண்டன்ல இப்ப வீட்டு வாடகை ரொம்ப ஏறிக்கிட்டே போகுது, ஒருத்தரோட சம்பளத்தை முழுசா வாடகைக்கும் பில்லுக்கும் தூக்கி வெக்கணும்.”

“ம்…”

“அதால… முதல்ல ஒரு வீட்டை வாங்கிட்டு அதுக்கப்புறமா கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்னு சொல்றா.”

“அந்தப் பொண்ணு சொல்றதும் சரிதானே? எங்கிட்டக் கொஞ்சம் பணம் இருக்குடா, அதை நான்…”

“ஐயையோ! அது நடக்கவே நடக்காதுண்ணா.” பெரியவனை முந்திக்கொண்டு வந்தது சின்னவனின் பதில். அமர் தம்பியை ஒரு தினுசாக பார்த்தான்.

“நீங்க எனக்கு நிறைய பண்ணிட்டீங்க, ஒரு தம்பிக்கு, ஒரு அண்ணன் எவ்வளவு பண்ண முடியுமோ அதைவிட பல மடங்கு பண்ணிட்டீங்க, இதுக்கு மேல ஒரு ரூபா உங்கக்கிட்ட நான் வாங்கமாட்டேன்.”

“என்னடா பிரிச்சுப் பேசுறே?”

“அப்பிடியில்லைண்ணா, நானே சம்மதிச்சாலும் இதுக்கு ஹானி ஒத்துக்கமாட்டா, உங்களுக்குன்னு இப்ப ஒரு குடும்பம் இருக்கு, நீங்க இனி அவங்களுக்காக வாழணும், நாளைக்கு உங்களுக்குப் பொறக்கப்போற கொழந்தைங்களுக்கு நீங்க சேர்த்து வெக்கணும், இதுவரைக்கும் அம்மாவை நீங்கதான் பார்த்துக்கிட்டீங்க, இனி அம்மாவை நாந்தான் பார்த்துக்குவேன், நீங்க இனி ஆல்யாவைப் பத்தி மட்டுந்தான் யோசிக்கணும்.” இவ்வளவு முதிர்ச்சியைத் தன் தம்பியிடமிருந்து அமர் எதிர்பார்க்கவில்லை.

“அப்ப நீ என்ன பண்ணப்போறே?”

“லண்டன்ல வீடு வாங்கிறதுங்கிறது முடியாத காரியம்ணா, அப்பிடீன்னா மோர்கேஜ் ,வட்டின்னுதான் போகணும், அதுல எனக்கும் உடன்பாடில்லை, ஹானியும் ஒத்துக்கமாட்டா, அதால கொஞ்சம் லண்டனை விட்டுத் தள்ளிப் போகலாம்னு முடிவெடுத்திருக்கோம்.”

“அப்ப வேலையை என்னடா பண்ணுறது?”

“கொஞ்சம் கஷ்டந்தான், ஆனா ஒரு ரெண்டு வருஷத்துக்குப் பல்லைக் கடிச்சுக்கிட்டு இழுத்துட்டா பின்னாடி எல்லாம் ஸ்மூத்தா இருக்கும், ஹானியும் நல்ல வேலையிலதான் இருக்கா, ரெண்டு பேரும் சேமிச்சோம்னா அவ்வளவு பெரிய கஷ்டமில்லைண்ணா.”

“எங்கிட்ட இருந்து சும்மா இல்லைன்னாலும் கடனா வாங்கிக்கோடா.” 

“இதை வேணும்னா ஹானிக்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன், இப்ப குடுக்கிற மாதிரி குடுத்துட்டு அதுக்கப்புறம் திரும்பக் குடுக்கும் போது வேணாம்னு சொல்லக்கூடாது.” தன்னையே மிரட்டும் தம்பியை வியப்போடு பார்த்தான் அமர். ரெஹான் வளர்ந்துவிட்டான், பொறுப்பு வந்துவிட்டது. இப்படித்தான் அவனுக்கு நினைக்கத் தோன்றியது. மனதுக்கு நிறைவாக இருந்தது. 

பத்து நாட்களையும் லண்டனில் இன்பமாகக் கழித்துவிட்டு ஃப்ளைட் ஏறினார்கள் அமரும் ஆல்யாவும். எந்த வேலையுமில்லாமல் தங்குதடையின்றி மனைவியோடு பத்து நாட்களைச் செலவழித்த திருப்தி அமரின் முகத்தில் தெரிந்தது. ஆல்யாவும் லண்டன் குளிரிலும் கணவனின் அன்பிலும் மெருகேறி இருந்தாள்.

“ரெஹான் பேசுற பேச்சைப் பார்த்தியா? என்னமோ பெரிய மனுஷன் மாதிரி திட்டமெல்லாம் போடுறான், எங்கிட்ட இருந்து கடனாத்தான் காசு வாங்குவானாம், அதுக்கும் அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமாம், எல்லாத்துக்கும் ஹானி, ஹானிங்கிறான்!” சொன்ன அமரைப் பார்த்து ஆல்யா வெடித்துச் சிரித்தாள்.

“இதாவது பரவாயில்லை, எங்கிட்ட என்ன தெரியுமா சொன்னாரு? படிப்பு படிப்புன்னு ஓடினது போதும், எங்கண்ணாவோட ஒழுங்கா குடும்பம் நடத்து, மஹியை மாதிரி மேல படிக்கிறேன், கீழ படிக்கிறேன்னு ஆரம்பிச்சே உன்னைத் தேடி வந்து அடிப்பேன்னு சொன்னாரு.” இப்போது அமர் சிரித்தான். 

“உங்களை மாதிரியில்லை, ஹானி ஹானின்னு உயிரை விடுறாரு உங்கத் தொம்பி!” அவள் நொடித்தாள். 

“அடிப்பாவி! அப்போ நான் உம்மேல ஆசையா இல்லையா?”

“இருக்கீங்களா என்ன?” சந்தேகமாகக் கேட்டவளை அவன் ஒரு தினுசாகப் பார்த்தான். தலையைச் சரித்துப் பற்கள் தெரிய அவனைப் பார்த்துச் சிரித்தாள் மனைவி.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 21

அத்தியாயம் 21அன்று அமர், ஆல்யாவின் முதலாவது திருமணநாள். விடிந்தும் விடியாத அந்தக் காலைப்பொழுதில் கண்விழித்த ஆல்யா திரும்பிப் பார்த்தாள். பக்கத்தில் அவனில்லை. ஒரு கல்யாண வேலை சம்பந்தமாக திருகோணமலை வரை போயிருந்தான். படிப்பை முடித்த கையோடு பெண் கணவனின் தொழிலில் தன்னையும் இணைத்துக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்