அத்தியாயம் 1
அத்தியாயம் 01
காலைநேரக் காற்றின் குளிர்ச்சி மாதவனின் உடம்பை ஜிவ்வென்று கவ்விக் கொண்டது. அந்தக் குளிர்ச்சியை அனுபவித்தபடி ஜீப்பை வளைத்துத் திருப்பினான். அரைவட்ட வடிவில் ‘ப்ளூ மௌன்டெயின்’ என்ற பெயர் பலகை இளையவனை ஆர்வத்தோடு வரவேற்றது.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல! கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் முன்னோர் உருவாக்கிப் பாதுகாத்த எஸ்டேட் அது. அப்பா வெற்றிவேல் இப்போது அந்த இடத்திற்குச் சொந்தக்காரர். அம்மா செல்லம்மா. பெயருக்கு ஏற்றாற்போல செல்ல அம்மா. இருபத்து எட்டு வயது நிரம்பிய மாதவனின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கை விட அம்மாவின் பங்கு மிகப்பெரியது. அன்பான அம்மா என்ற வார்த்தை செல்லம்மாவுக்கு நன்றாகப் பொருந்தும்.
“வணக்கம் ஐயா.” மாதவனின் ஜீப்பை கண்டதும் ஆங்காங்கே இந்த வார்த்தைகள்தான் கேட்டன. சிங்கப்பூரில் மேற்படிப்பு படித்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் தங்கள் இளைய முதலாளியை அங்கு வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். அங்கு வளரும் தேயிலையை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அதேயளவு மாதவனையும் பிடிக்கும். கொஞ்சம் கண்டிப்போடு பழகும் பெரிய முதலாளியை விட சின்ன முதலாளி மேல் அவர்களுக்குப் பாசம் அதிகம்.
“வணக்கம் சாமி.”
“நில்லு சின்னைய்யா! எத்தனைத் தடவை உங்கிட்ட என்னை அப்பிடிக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்றது?” மாதவனின் குரல் கண்டிப்போடு வந்தது. சின்னைய்யா என்று அவனை விளித்த அந்த வயோதிகர் தன் வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தார்.
“சாமியை எனக்குச் சின்ன வயசுல இருந்து தெரியும், அப்பிடியே கூப்பிட்டுப் பழகிப் போச்சு, இப்ப பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு வந்திருக்கீங்க!” சொல்லும்போதே அவர் கண்கள் பனிக்க நிறுத்தியிருந்த ஜீப்பிலிருந்து இறங்கினான் இளையவன்.
“என்னைவிட வயசுல எவ்வளவு பெரியவன் நீ, என்னைப் போய் அப்பிடிக் கூப்பிடலாமா?” அந்தத் தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்பவர்களை ஒருமையில் விளித்தே பழகியிருந்ததால் மாதவன் பேச்சைத் தொடர்ந்தான். அவன் கரங்கள் இயல்பாகப் பெரியவரின் தோளை அணைத்தன.
“இங்க எத்தனை எஸ்டேட் இருக்குது, எந்த முதலாளியோட பையனாவது தினக்கூலி வாங்குற கூலிக்காரனோட தோள்ல கை போட்டுப் பேசுவாங்களா? எங்க சாமி பேசும்! எங்க சாமி மனசைப் பார்த்து வர்ற வார்த்தை அது!”
“சரி அதை விடு, பையன் எப்பிடி இருக்கான்?”
“அவனுக்கென்ன! சாமி சொன்னதைக் கேட்டு அருமையா படிச்சு என்சினியரிங் முடிச்சுட்டு இப்போ ஒவ்வொரு மாசமும் பணம் அனுப்புறான்.”
“அப்போ எதுக்கு இன்னமும் எஸ்டேட் வேலை பார்த்து நீ கஷ்டப்படுறே?”
“இதுல என்ன சாமி கஷ்டம் இருக்கு? தினமும் இந்த வேலை பார்க்கலைன்னாத்தான் கஷ்டமா இருக்கு.”
“உங்கிட்டப் பேச முடியுமா? நான் கிளம்புறேன், வீட்டுல அம்மாவைக் கேட்டதாச் சொல்லு.”
“சரிங்க சாமி.” சின்னைய்யாவிற்குத் திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த பையன்தான் நிமலன். மாதவனின் வகுப்புத் தோழன். கெட்டிக்காரப் பையன் என்பதால் எப்போதும் இவனுக்கு நிமலன் மேல் அன்புண்டு. படிப்பிற்கு வேண்டிய உதவிகள் செய்து அவன் பொறியியல் பிரிவில் தேர்வானதில் மாதவனின் பங்கு பெரிதும் உண்டு. இப்போது நல்ல வேலையில் அமர்ந்து பெற்றோரை நன்றாக வைத்திருக்கிறான்.
“குட் மார்னிங் சார்.” இது ராஜசேகர். பக்கத்து எஸ்டேட்டில் உயர் பதவியில் இருக்கிறார். இவருக்கு இரண்டு புதல்விகள். மூத்த மகள் சுமித்ரா மேல் இனிவரும் காலங்களில் தான் காதல் கொண்டு பைத்தியமாக அலையப் போகிறோம் என்பதை அறியாமல் அவருக்குப் பதில் வணக்கம் வைத்தான் இளையவன்.
“குட் மார்னிங்.” அந்தப் பிராந்தியத்தில் ‘ப்ளூ மௌன்டெயின்’ கொஞ்சம் பெரிய எஸ்டேட் என்பதால் அக்கம்பக்கத்து எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு இவர்கள் மேல் மரியாதை உண்டு. சரியாக அப்போது மாதவனின் அலைபேசி அழைத்தது.
“சொல்லுங்க அத்தான்.” அக்கா ரேவதியின் கணவர் மோகன் அழைத்துக் கொண்டிருந்தார். மௌனராகம் சினிமாவைப் போல இந்த இணையும் பார்ப்பதற்கு அத்தனை அழகாக, அம்சமாக இருக்கும்.
“நாங்க என்னத்தைச் சொல்றது, நீங்கதான் சொல்லணும் சார், படிப்பெல்லாம் முடிச்சுட்டு வந்துட்டீங்க, உங்கக்கா என்னடான்னா என்னோட தம்பிக்கு இன்னைக்கே பொண்ணு பார்க்கணும்னு ஒத்தக் கால்ல நிற்கிறா, உங்கம்மா அதுக்கு பக்கவாத்தியம் இசைக்கிறாங்க, ஐயா என்ன முடிவுல இருக்கீங்கன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்.”
“எங்கப்பா, அக்காக்கு டாக்டர் மாப்பிள்ளைப் பார்த்ததாத்தானே வீட்டுல சொன்னாங்க, நீங்க எப்ப அத்தான் இந்த வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சீங்க?”
“நீ ஏம்பா பேசமாட்டே! எல்லாம் என்னோட நேரம்!” மோகன் அங்கே சொல்ல இங்கே இவன் வாய்விட்டுச் சிரித்தான்.
“நிஜமாத்தான் கேட்கிறேன் மாதவன், மனசுல என்ன ஐடியா இருக்கு? இப்பவே கல்யாணம் பண்ணிக்கப் போறியா, இல்லை இன்னும் கொஞ்சம் காலம் போகட்டுமா?”
“இப்போதைக்குக் கல்யாணத்தைப் பத்தி எந்த ஐடியாவும் மனசுல இல்லை அத்தான், கொஞ்ச காலம் எஸ்டேட்ல வேலை பார்க்கணும், இங்க இருக்கிற நெளிவு சுழிவெல்லாம் கத்துக்கணும், அதுக்கப்புறம் கல்யாணத்தைப்பத்தி யோசிக்கலாம்.”
“அது சரிதாம்பா, வேலை அது பாட்டுக்குப் போகட்டும், நாம பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம், எடுத்த எடுப்பிலேயே பொண்ணைப் பார்த்துக் கல்யாணமா பண்ணப் போறாங்க! அதுக்கு டைம் எடுக்கும்பா, இப்ப பார்க்க ஆரம்பிச்சாத்தான் அடுத்த வருஷம் கல்யாணம் பண்ண சரியா இருக்கும்.”
“சரித்தான், உங்க இஷ்டம், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.” மோகனுக்கும் ரேவதிக்கும் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. வீட்டுக்கு மூத்த மருமகன் என்பதால் மோகன் எப்போதும் பொறுப்பாகவே நடந்து கொள்வார். மாதவன் மேல் மரியாதையையும் தாண்டி நல்ல நட்புண்டு.
“அண்ணா.” அத்தான் பேசி முடிக்க அடுத்து அழைத்தது சரண். மாதவனின் தம்பி. கணினித் துறையைத் தேர்ந்தெடுத்து கொழும்பில் வசிக்கிறான். அடுத்த வருடம் வேலைக்குச் சேர்ந்துவிடும் கனவில் இருக்கும் வெற்றிவேலின் அடுத்த ஆண் வாரிசு.
“சொல்லு சரண், என்ன காலையிலேயே கூப்பிட்டிருக்கே?”
“அம்மாக்கு கால் பண்ணினேன், நீங்க எஸ்டேட் போறதா சொன்னாங்க, அதான் பேசலாமேன்னு கூப்பிட்டேன்.”
“சிங்கப்பூரும் அழகுதான், என்னதான் அங்கெல்லாம் அழகு கொட்டிக் கிடந்தாலும் நம்ம எஸ்டேட்டுக்கு அப்புறந்தாண்டா! காலையிலேயே எந்திரிச்சு இப்பிடிப் பச்சைப் பசேல்னு இருக்கிற தேயிலைச் செடிகளுக்கு நடுவுல ஜீப்பை ஓட்டுற சுகம் இருக்கே!” அண்ணா ரசித்துச் சொல்லவும் சரண் அங்கே சிரித்தான்.
“உண்மைதாண்ணா.” தேயிலைச் செடிகள் மாத்திரமல்ல, அங்கு வேலை செய்யும் இளம்பெண்களும் சிங்கப்பூர் பெண்களைவிட அழகு என்பதை நிரூபிப்பது போல பல வயதிலும் பெண்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
“வணக்கம் ஐயா.” ஓரிரண்டு குரல்கள் கேட்கவும் சரண் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
“நான் அப்புறமா கூப்பிடுறேண்ணா.” பதில் வணக்கம் வைத்தபடி அலைபேசியை அணைத்தவனைக் கலைத்தது அந்த சைக்கிள் பெல்லின் மெல்லிய ஓசை.
“சுமித்ராக்கா! நானும் உங்கக்கூட வர்றேன்.” சின்னஞ்சிறு குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான் மாதவன். பாசிப்பச்சை நிறத்தில் சாதாரண சல்வார் அணிந்த பெண் ஒன்று ஒற்றைக் காலை நிலத்தில் ஊன்றி நின்றிருக்க அவளுக்குச் சற்றே தொலைவில் பெரிய புத்தகப் பை ஒன்றைத் தோளில் சுமந்தபடி சிறுமி ஒருத்தி ஓடி வந்துகொண்டிருந்தாள்.
“சீக்கிரமா வா கமலி.” அந்த சல்வார் பெண் பின்னே திரும்பியபடி அழைக்கவும் அந்தச் சிறுமி விரைவாக வந்து சைக்கிளின் பின்புற கேரியரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“இவ்வளவு நேரமும் ஸ்கூலுக்குப் போகாம என்ன பண்ணினே நீ?!”
“அதுவாக்கா, அப்பாக்கு ஏதோ வேலை இருந்து சீக்கிரமாவே எஸ்டேட் கிளம்பிட்டாங்க, போகும்போது சுமித்ராக்காவோட ஸ்கூலுக்குப் போன்னு சொல்லிட்டுத்தான் போனாங்க.”
“சரிசரி, பேச்சை விட்டுட்டு சீக்கிரமா ஏறு, அப்பிடியென்ன வேலை உங்கப்பாக்கு இன்னைக்கு?”
“எஸ்டேட்டோட சின்ன முதலாளி இன்னைக்கு வர்றாங்களாம்.” அவர்கள் பேசிக்கொள்வது இவனுக்கும் கேட்டது. சுவாரஸ்யம் கூட காதுகளைத் தீட்டிக் கொண்டான்.
“சின்ன முதலாளி வந்தா இவங்களுக்கு என்னவாம்? எப்பவும் போல இன்னைக்கும் வேலை பார்க்க வேண்டியதுதானே?”
“அது தெரியலைக்கா, அப்பாக்கு மேல வேலை பார்க்கிற ஆஃபீஸர்தான் சீக்கிரமா வரச்சொன்னாங்களாம், அப்பாவும் கிளம்பிப் போயிட்டாங்க.”
“உங்கப்பாக்கு வேற வேலை இல்லை, ஆஃபீஸர் கூப்பிட்டா உடனே ஓடிருவாரா? சின்ன முதலாளி இல்லை, பெரிய முதலாளியே வந்தாலும் எப்பவும் பார்க்கிற வேலையைத்தான் இன்னைக்கும் நான் பார்ப்பேன்னு அடிச்சுச் சொல்ல வேண்டியதுதானே? சின்ன முதலாளி வர்றார்ன்னதும் எதுக்குப் புதுசா ட்ராமா போடணும்?” அவள் நியாயம் அந்தச் சிறுமிக்குப் புரியவில்லைப் போலும். தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள். மாதவனுக்கு இப்போது சிரிப்பு வந்தது. எஸ்டேட்டில் இந்தக் கூத்தெல்லாம் நடக்கிறதா என்று நினைத்துக் கொண்டான்.
“இது யாருக்கா புதுசா?” அவனைக் கடந்து செல்லும்போது அந்தச் சின்னப் பெண் மெல்லிய குரலில் கேட்பது இவனுக்கும் கேட்டது.
“தெரியலையே.” ஜீப்பில் சாய்ந்தபடி மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவனைத் தாண்டி சைக்கிள் சென்றது. காலையிலேயே தலைக்குக் குளித்து கூந்தலைத் தளர்வாக ஓர் க்ளிப்பில் அடக்கியிருந்த அந்த மையிட்ட விழிகள் அவனை ஓர் நொடி பார்த்துச் சாலையில் பார்வையைப் பதித்தது. தன் இளமையைச் சோதிக்க இருக்கும் அந்த விழிகளில் மாதவன் ஓர் நொடி மயங்கியதென்னவோ உண்மைதான்.
“வணக்கம் ஐயா.” மீண்டுமொரு குரல் இவனுக்கு வணக்கம் வைக்க அது அவளுக்கும் கேட்டிருக்க வேண்டும். இவனைத் தாண்டிச் சென்றவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு இவன் யாரென்று இப்போது புரிந்திருக்க வேண்டும். வியந்த பார்வை ஒன்றை இவன்மீது வீசிவிட்டுச் சைக்கிளை மிதித்தாள். தன்னை நோக்கித் திரும்பிய அந்தக் கரு விழிகளை ரசித்தபடி ஜீப்பை ஸ்டார்ட் செய்தான் இளையவன்.
“சுமித்ராக்கா…” இவன் அவர்களைத் தாண்டிச் செல்லும்போது அந்த கமலி இப்போதும் வாய் ஓயாமல் ஏதோ பேசிக் கொண்டிருக்க அந்தப் பெண் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக மாதவனின் தாத்தா அமைத்த ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்குத்தான் அவர்கள் செல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தைத் தாண்டித்தான் எஸ்டேட் அமைந்திருப்பதால் முதலில் அங்கே ஜீப்பை நிறுத்தினான்.
“வாங்க சார்.” இவனைக் கண்டதும் பள்ளிக்கூடத்தின் அதிபர் வாசல்வரை வந்து வரவேற்றார். அத்தனை வயது இருக்காது. நாற்பதுகளில் இருந்த மனிதரைப் பார்த்து இவனும் நட்போடு புன்னகைத்தான்.
“ஸ்கூல் எப்பிடிப் போகுது? வசதிகள் எல்லாம் கரெக்ட்டா இருக்கா?”
“வெற்றிவேல் ஐயா எல்லாத்தையும் கரெக்டா பண்ணிடுவாங்க சார், ஆறாம் வகுப்புவரை இருந்த ஸ்கூலை ஐயா ரொம்பச் சிரத்தை எடுத்துப் பத்தாம் வகுப்புவரை கொண்டு வந்திருக்காங்க.”
“வெரி குட், அத்தோட நிறுத்திடாம இன்னும் மேல கொண்டு போகணும் சார்.” தன்னை ‘சார்’ என்று விளித்த அந்தப் பெரிய வீட்டுப் பையன்மேல் அதிபருக்கு அப்படியொரு மரியாதையும் விசுவாசமும் தோன்றிவிட்டது.
“கண்டிப்பா, நம்ம எஸ்டேட் பசங்க எல்லாம் ரொம்ப நல்லா படிக்கிறாங்க, ஆனா சாதாரண தரத்துக்கும் உயர் தரத்துக்கும் வேற ஸ்கூலுக்கு போக வேண்டியிருக்கு, நீங்க மனசு வெச்சா அதையும் எங்களுக்குப் பண்ணிக் குடுக்கலாம்.”
“கண்டிப்பா பண்ணலாம் சார்.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த சைக்கிள் பாடசாலைக்கு முன்பாக வந்து நிற்க அந்தச் சின்னப் பெண் சட்டென்று குதித்து இறங்கினாள். சின்னவளை இறக்கிவிட்டுச் சைக்கிள் புறப்படும் என்று இவன் எதிர்பார்க்க பச்சை சல்வார் சைக்கிள்கள் நிறுத்துமிடத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. இவன் பார்வையை உணர்ந்த அதிபர்,
“அது சுமித்ரா, அக்ரிகல்சர்ல டிகிரி முடிச்சிருக்காங்க, போன மாசம்தான் ஃபைனல் எக்ஸாம் முடிச்சுட்டு ஊருக்கு வந்திருக்காங்க, பக்கத்து எஸ்டேட்டுல வேலை செய்ற ராஜசேகரோட பொண்ணு, நம்ம ஸ்கூலுக்கு வாலன்டியரா வர்றாங்க.” என்றார் விளக்கமாக.
“ஓ… ரொம்ப நல்லது, அப்போ நான் கிளம்புறேன் சார்.” என்றவன் புன்னகை முகமாக விடைபெற்றுக் கொண்டான்.
பாடசாலையைப் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் குடும்பத்தின் உழைப்பு. அவன் முன்னோர்கள் நட்டு வைத்த விதை இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதை இன்னும் வளரக்க வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதை அவன் புரிந்து கொண்டான். அதிபர் கேட்ட உதவியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். எதற்காக இங்கிருக்கும் பிள்ளைகள் தொலைதூரம் கல்விக்காக அலைய வேண்டும்?! அந்தப் பொறுப்பைத் தன் தோளில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தான் மாதவன்.
எஸ்டேட்டில் அவனுக்கு அன்றைக்கு நல்ல வரவேற்பு. வெற்றிவேல் ஐயாவிற்குப் பிறகு இந்தத் தொழிலைக் கட்டியாளப்போவது மாதவன்தான் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அக்கா ரேவதிக்குப் பெரியவர் வேறு சொத்துக்கள் கொடுத்திருந்ததால் இந்த எஸ்டேட் ஆண்பிள்ளைகளுக்குத்தான். அதிலும் தம்பி சரண் கொழும்புவாசி. நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட பிள்ளை. இந்த எஸ்டேட் மேல் எந்தப் பற்றும் இல்லாதவன். மாதவன்தான் இந்த மண்ணின் மேலும் மக்கள் மேலும் தீராத பாசம் கொண்டவன் என்பதை இங்கு வாழ்பவர்கள் நன்கு அறிந்திருந்ததால் வெற்றிவேலுக்கு அடுத்ததாக அவனைத்தான் முதலாளியாகப் பார்த்தார்கள்.
மதியம்வரை அங்கேயே இருந்து எல்லா இடங்களையும் பார்வையிட்டவன் அதன்பிறகு வீட்டுக்குப் புறப்பட்டான். இது அவனது அம்மாவின் அன்புக் கட்டளை. வாலிப வயதை எட்டியது முதல் வெளியூர், வெளிநாடுகள் என்று படிப்பிற்காக அலைந்தவன் மாதவன். சரணும் அப்படித்தான் என்றாலும் இந்த ஊரையும் மண்ணையும் குடும்பத்தையும் மாதவன் பிரிந்து தவித்ததைப் போல தவித்ததில்லை. அதனால் வீட்டின் மூத்த ஆண் வாரிசான மாதவனை எப்போதும் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் ஆசை.
“வா மாதவா.” இவனது ஜீப் சத்தம் கேட்கவும் வாசல் வரை வந்து வரவேற்றார் செல்லம்மா. பூசினாற் போல உடல்வாகு. நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு. இப்போதுதான் சமையலை முடித்த தோற்றம். அந்தப் பிரதேசத்தின் குளுமை அவர் முகத்திற்குப் பளபளப்பைக் கொடுத்திருந்தது.
“அதான் வீட்டுல சமையலுக்குன்னு ஆள் இருக்கில்லைம்மா, எதுக்காக இன்னமும் நீங்க கிடந்து கஷ்டப்படுறீங்க?”
“எத்தனை சமையல்காரங்க இருந்தாலும் உங்கப்பாக்கு எங்கையால நான் சமைக்கணும், அதுவும் எவ்வளவு காலம் கழிச்சு நீ வந்திருக்கேப்பா, உனக்கு சமைச்சுப் போடுறதுல அப்பிடியென்ன கஷ்டம் எனக்கு வந்திரப்போகுது?”
“நான் ஊருக்கு வர்றப்ப எல்லாம் இதையே சொல்லுங்க.” மகன் சலித்துக் கொள்ளவும் அம்மா சிரித்தார்.
“மாப்பிள்ளை கால் பண்ணினாராப்பா?”
“ம்… ஆமாம்மா.”
“என்ன சொன்னார்?” அத்தானின் காலைநேர அலைபேசி அழைப்பின் ஆதாரப்புள்ளி யாரென்று மாதவனுக்கு இப்போது பிடிபட்டது.
“வேற என்னத்தைச் சொல்லப்போறாரு என்னோட செல்லம்மா? நீங்க என்ன சொல்லச் சொன்னீங்களோ அதைத்தான் சொன்னாரு.”
“அது வந்து… மாதவா…” அம்மா திணறவும் மகன் வாய்விட்டுச் சிரித்தான். இப்போது பிடிப்பட்டவர் போல அம்மாவும் புன்னகைத்தார்.
“உங்களுக்கு எது இஷ்டமோ அதுபோல பண்ணுங்கம்மா, நீங்க சொல்லி நான் மறுத்திடுவேனா? உங்களுக்கு யாரைப் புடிக்குதோ அந்தப் பொண்ணைக் கொண்டு வாங்க, நான் தாலி கட்டுறேன்.”
“நிஜமாத்தான் சொல்றியாப்பா?!”
“இதுல நான் பொய் சொல்ல என்னம்மா இருக்கு? எனக்கு எங்கம்மா எப்பவும் நல்லதுதான் பண்ணுவாங்க.”
“உனக்குன்னு ஏதாவது எதிர்பார்ப்பு இருக்குமில்லைப்பா?”
“அப்பிடி எதுவும் எம்மனசுல இப்போதைக்கு இல்லைம்மா, அப்பிடி ஏதாவது தோணிச்சுன்னா கண்டிப்பா உங்கக்கிட்டச் சொல்றேன், உங்களைவிட்டா எனக்கு வேற யாரு இருக்கா?” பேசியபடியே அம்மாவும் மகனும் உள்ளே போய்விட்டார்கள்.
***
“சுமதி! இங்க வந்து இந்த வடையை எடுத்துக்கிட்டுப் போ!” கிச்சனிலிருந்து அம்மா குரல் கொடுக்கவும் சலித்தபடி அறையைவிட்டு வெளியே வந்தாள் இளைய பெண். அந்த வீட்டின் முதல் குழந்தை சுமித்ரா. இருபத்தி இரண்டு வயதுப் பெண். பல்கலைக்கழக படிப்பைப் போன மாதம் முடித்துவிட்டு அந்த ஊரின் பாடசாலையில் தற்காலிகமாக வேலை பார்க்கிறாள். விவசாயம் படித்திருக்கிறாள். தேயிலை சம்பந்தப்பட்ட துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு நெடுநாளாக இருக்கிறது.
அடுத்த பெண் சுமதி. உயர்தரம் படிக்கிறாள். விஞ்ஞான பிரிவு. எப்படியாவது மருத்துவத் துறைக்குள் போய்விட வேண்டும் என்ற கனவோடு மும்முரமாகப் படிக்கும் பெண். தற்போது வீட்டில் யார், என்ன வேலை சொன்னாலும் கோபம் வரும். தன் படிப்பிற்கு இடையூறு செய்யும் யாரையும் எதையும் அவளுக்குப் பிடிப்பதில்லை. அதில் அடிக்கடி சிக்குபவர் அம்மா மணிமேகலை. அப்பா ராஜசேகர் பக்கத்து எஸ்டேட்டில் நல்ல வேலையில் இருக்கிறார்.
“எதுக்கும்மா சும்மா சும்மா என்னையே கூப்பிடுறீங்க? உங்கக்கிட்ட வடை வேணும்னு இப்ப நான் கேட்டனா?”
“எதுக்கு இப்ப நீ இவ்வளவு சத்தம் போடுறே? சாப்பிடாம வெறும் வயித்தோட உட்கார்ந்து உன்னைப் படிக்கச் சொல்லி இங்க யாரும் சொல்லலை!” அம்மாவும் தன் பங்கிற்குச் சத்தம் போட சுமித்ராவும் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். அம்மாவிற்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தது பெண்.
“எதுக்கும்மா இப்போ அவளைக் கூப்பிடுறீங்க? வடையைக் கொண்டு போய் குடுக்கணும்னா எங்கிட்டச் சொல்லி இருக்கலாமில்லை? “
“நீ சும்மா இரு சுமி, காலையில அந்த ரூமுக்குள்ள போய் அடைஞ்சவதான், இன்னமும் வெளியே வரலை, அவ முகத்தைப் பாரு, சூரிய வெளிச்சம் படாம அப்பிடியே வாடி வதங்கிப் போயிருக்கு, அப்பிடியென்ன படிப்பு வேண்டிக் கிடக்கு இவளுக்கு!”
“இந்த அம்மாவோட என்னால பேச முடியாது, ரொம்ப முக்கியமான கணக்கு ஒன்னைப் பாதியில விட்டுட்டு வந்து இப்ப இந்தச் சண்டை எனக்கு முக்கியமா?” என்று கேட்ட இளைய பெண் மீண்டும் தனது பௌதிகவியல் வினாத்தாளோடு ஐக்கியமாகிவிட்டது.
“பாரு சுமி! நான் பேசிக்கிட்டே இருக்கேன், இந்தச் சின்னது என்னை மதிக்காம எப்பிடிப் போகுதுன்னு!”
“சரி விடுங்கம்மா, எக்ஸாமுக்கு இன்னும் ரெண்டு மாசந்தான் இருக்கு, அவளுக்குப் புடிச்ச மாதிரி அவ படிக்கட்டும், ஏதாவது வேலை இருந்தா எங்கிட்டச் சொல்லுங்க, நான் பண்ணுறேன்.”
“வேலைக்காக நான் சொல்லலை சுமி, படிக்கிறேன் படிக்கிறேன்னு எந்த வேலையும் பார்க்காம இவ ஏதாவது நோயை இழுத்துக்கிட்டா என்ன பண்ணுறது சொல்லு? சுத்தமா அந்த ரூமைவிட்டு அசைய மாட்டேங்கிறா!”
“மணி, இன்னும் ரெண்டு மாசந்தான், அதுக்கப்புறமா நீ சொல்றபடிதான் சுமதி கேட்பா, இப்போ பேச்சை விடு!” ஹாலில் உட்கார்ந்தபடி ஏதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜசேகர் வாயைத் திறக்கவும் வீடு அமைதியானது. ஆனால் அத்தோடு இந்த விஷயத்தை விட்டுவிட்டால் மணிமேகலை அந்த வீட்டின் இல்லத்தரசி அல்லவே!
“பார்த்தியா சுமி உங்கப்பா பேச்சை! நான் எப்ப வாயைத் திறந்து எது பேசினாலும் என்னோட வாயைத்தான் அடைப்பாரு, பொண்ணுக்கும் புத்திமதி சொல்லலாமில்லை? அப்பிடியென்ன படிப்பு வேண்டிக்கிடக்கு? ஏன்? நீயும் படிச்சு யூனிவர்ஸிட்டி போகலையா?”
“அம்மா, டாக்டர் ஆகணுங்கிறது அவளோட கனவு, லட்சியம், நம்ம மாதிரி ஆளுங்களால கோடி கோடியா பணத்தைக் கொட்டி சீட் வாங்க முடியாது, போட்டி போட்டுத்தான் படிக்கணும், நாளைக்கு சுமதி நல்ல ரேங்க் வாங்கிப் பாஸ் பண்ணினா நீங்க சந்தோஷப்பட மாட்டீங்களா?”
“ஏன்டீ நான் சந்தோஷப்பட மாட்டேன்! எம் புள்ளை அப்பிடிப் பாஸ் பண்ணினா எனக்கு எவ்வளவு சந்தோஷம், பெருமை! ஆனா படிப்பு படிப்புன்னு அவ உருக்குலைஞ்சு போறதை என்னால பார்க்க முடியலை, வாய்க்கு ருசியா சாப்பிடமாட்டேங்கிறா, வயிறு நிறைய அவ சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தெரியுமா? கேட்டா ரொம்ப சாப்பிட்டா தூக்கம் வருதும்மா, டீ போட்டுக் குடுங்கன்னு சொல்றா, இப்பிடியொரு படிப்பு இவளுக்குத் தேவையா சுமி?” அம்மா கண்ணைக் கசக்குவதிலும் நியாயம் இருப்பது போல்தான் இவளுக்குத் தோன்றியது. தங்கை அவளை மிகவும் வருத்திப் படிக்கிறாள்.
“இன்னும் கொஞ்ச நாள்தாம்மா, அதுக்கப்புறம் அவளும் எல்லாத்தையும் என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிடுவா.”
“இவ்வளவு கஷ்டப்படுறவளுக்கு ஆண்டவன் கருணைக் காட்டணும், முதல் தரத்துலேயே அவ நல்லா பாஸ் ஆகிடணும் ஆண்டவா! தோல்வியைத் தாங்கிற சக்தி அவளுக்கு இல்லை.” அம்மா மீண்டும் கண்ணைக் கசக்கவும் அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் சுமித்ரா.






Wow awesome
Nice
Nice start ma.
As usual good start
Super aalagi mam, waiting for next episode ❤️
Hi 🤩🤩👌🏻
Superb nd good start mam
😍😍😍
https://youtu.be/Lhk5msDWVlk?si=VudybwNO-GgJsGyS