arrow_back
En Ragasiya Kanavu Nee அத்தியாயம் 04
En Ragasiya Kanavu Nee chevron_right பகுதி 4 / 7

அத்தியாயம் 04

visibility 627
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 04

திருமணம் இனிதாக நிறைவு பெற்றிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊரில் ஓர் திருமணத்தைப் பார்த்த திருப்தியோடு மாதவன் காரை நோக்கி நடந்தான். சாப்பாடும் பிரமாதமாக இருந்தது. இந்தக் கோவிலுக்கு மாதவன் வந்து வெகு நாட்களாகிறது. காட்டு மரங்களும் குன்றுகளும் சுற்றிவர இருக்க அதைப் பார்த்தபடி வந்தவனின் கண்களில் அந்தப் பெண் மீண்டும் தென்பட்டாள்.

சுமதியின் அக்கா! சுமதிக்கும் இவளுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. சுமதிக்கு எதையும் மனதில் வைத்திருக்க முடியாது. வெளிப்படையாகப் பேசிவிடுவாள். ஆனால் இந்தப் பெண் அப்படியல்ல. அழுத்தம்! மகா அழுத்தம்! அது போதாதென்று மாதவனை வெகுவாகத் தவிர்க்கிறாள்! எல்லோரும் அவனை ஓர் புன்முறுவலோடு, முகமன் கூறுதலோடு கடக்க இவள் மட்டும் குனிந்த தலை நிமிராமல் நடக்கிறாள்.

“இல்லை சுமி, தனியா போக வேணாம், மழை வரப்போகுது, இரு நானும் கூட வர்றேன்.” நிமலனின் குரல் கேட்கவும் மாதவன் சட்டென்று நின்றான்.

“இல்லை சீனியர், உங்களுக்கு இங்க வேலை நிறைய இருக்கு, நீங்க எதுக்கு வீணா சிரமப்படுத்திக்கணும்? நம்ம ஊர் எனக்குப் புதுசா என்ன?” திரும்பத் திரும்ப அந்தப் பெண் நிமலனை சீனியர் என்று அழைக்க ஏனோ இவனுக்குக் கோபம் வந்தது. நிமலனும் இவனும் ஒன்றாகத்தானே படித்தார்கள். அப்படியிருக்க எப்படி நிமலனுக்கு மாத்திரம் இந்தப் பெண்ணைத் தெரிகிறது?!

“சொன்னா கேளு சுமி…” நிமலனை மேலே பேசவிடாமல் சின்னைய்யாவின் குரல் அழைத்தது.

“எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை சீனியர், நீங்க இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க, நான் கிளம்புறேன்.” அவளது பேச்சில் அத்தனை உடன்பாடு இல்லாதவன் போல் அப்பால் சென்றான் நிமலன். மாதவனுக்கு அந்த இடத்தைவிட்டு அசைய மனம் வரவில்லை. அந்தப் பெண்ணின் செய்கைகளைப் பார்த்த வண்ணமே இருந்தான்.

அன்றைக்குப் போல இன்றைக்கும் சைக்கிளில்தான் வந்திருந்தாள். கட்டியிருந்த சேலையின் முன் கொசுவத்தை ஒரு க்ளிப் கொண்டு வலது காலோடு சேர்த்தாள். சைக்கிள் சக்கரத்தில் சேலை மாட்டிவிடக்கூடாது என்ற பாதுகாப்பு நடவடிக்கை இது என்று மாதவன் புரிந்து கொண்டான். எதைப்பற்றியும் யோசிக்காதவள் அடுத்த நிமிடம் சைக்கிளில் ஏறி போய்க்கொண்டிருந்தாள்.

மாதவனும் அதற்கு மேல் தயங்காதவன் தனது ப்ளாக் ஆடியை ஸ்டார்ட் செய்தான். அந்தப் பெண் தனியே போவது ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்போதும் அவள் தன்னைத் தவிர்ப்பவள் என்று தெரிந்தபோதும் அவனால் அவனைக் கட்டுப்படுத்த இயலவில்லை!

ஒரு நிமிடம் கூட கடந்திருக்காது. இலேசாக ஓர் மின்னல் வெட்ட இடியொன்று காதைப் பிளந்தது. ஹோவென்று மழை பொழிய ஆரம்பிக்க மாதவனுக்குத் திக்கென்றது. அந்தப் பெண் எங்கே? இந்தக் கனமழையில் அவளால் அந்த சைக்கிளை ஓட்ட முடியுமா? இதில் புடவை வேறு கட்டியிருந்தாளே! அவன் பயம் சரியென்பது போல சாலையோரம் நின்றிருந்த ஓர் மரத்திற்குக் கீழே மழைக்காக ஒதுங்கி நின்றிருந்தாள் சுமித்ரா.

மரம் நல்ல விசாலமாக இருந்தாலும் அந்த ஒழுகும் குடை அந்தக் குமரியைப் பாதுகாக்கப் போதுமானதாக இருக்கவில்லை. பெண் இலேசாக நனைந்திருக்க அந்த ப்ளாக் ஆடி அவளுக்குப் பக்கத்தில் போய் சர்ரென்று நின்றது. உள்ளிருந்தபடியே காரின் பக்கக் கதவை அவளுக்காக அவன் திறந்துவிட்டான்.

“உள்ள வாங்க சுமித்ரா, மரத்துக்குக் கீழ உங்களால ரொம்ப நேரம் நிற்க முடியாது.” அவன் சொன்ன பிற்பாடும் அவள் உள்ளே ஏற தயங்கினாள். அப்போது பார்த்து மின்னலொன்று கண்ணைப் பறிக்க எதைப்பற்றியும் யோசிக்காமல் பெண் சட்டென்று ஏறிக்கொண்டாள்.

“சாரி சார், உங்க கார் என்னால அழுக்காகிடப் போகுது.”

“அது பரவாயில்லை.” அதற்குமேல் அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தன. தனியாக எதற்கு இந்தப் பெண் திருமணத்திற்கு வரவேண்டும்? மழை வரப்போகிறது என்று தெரிந்த பிற்பாடும் எதற்காக இவ்வளவு நேரம் அங்கே கோவிலில் தாமதிக்க வேண்டும்? ஆனால் இதையெல்லாம் தைரியமாகக் கேட்கும் உரிமை அவனுக்கு இல்லாததால் அமைதியாகவே இருந்தான். மழை இன்னும் கனமாகப் பெய்து கொண்டிருந்தது.

“உங்களுக்கு லேட்டானா…” முகத்தில் வடிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். கூந்தலில் வைத்திருந்த பூவிலிருந்தும் நீர் வடிந்தது.

“பரவாயில்லை, சுமதிக்கு இன்னைக்கு எக்ஸாம் எப்பிடியாம்?” அவன் பேச்சை வளர்த்தான். அந்த அமைதி அத்தனை அழகாக இருக்கவில்லை.

“நல்லா பண்ணியிருக்கேன்னுதான் சொன்னா.”

“வெரிகுட், நீங்க வேலைக்கு அப்ளை பண்ணுறீங்கன்னு அம்மா சொன்னாங்க, அது எந்தளவுல இருக்கு?”

“அப்ளை பண்ணிக்கிட்டுத்தான் சார் இருக்கேன்.”

“ஓ… இன்னும் எதுவும் அமையலையா?”

“அது…” அவள் எதையோ சொல்லத் தயங்கவும் மாதவன் விசித்திரமாகப் பார்த்தான்.

“சொல்ல முடியலைன்னா விட்டுருங்க.”

“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை சார், சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு கனவு இருக்கு.”

“ம்…” அவனுக்குச் சுவாரஸ்யம் கூடியது. இந்தப் பெண்ணுக்குப் பேச வருகிறதே!

“தேயிலைக்கு மத்தியில பொறந்து வளரந்ததாலயோ என்னமோ இந்தப் பசுமையை எனக்கு அவ்வளவு புடிக்கும், அதாலதான் அக்ரிகல்சர் எடுத்தேன்.”

“குட்.”

“தேயிலையைப் பத்திப் படிச்சா மட்டும் போதாது, ஆராய்ச்சி பண்ணணும்.”

“ஓ…” இந்தப் பெண் சாதாரண பெண் இல்லை என்று மாதவனுக்கு அந்த நொடி தோன்றியது.

“தலவாக்கலைக்குப் போகணும், ரிசர்ச் அசிஸ்டன்ட்டா சேரணும், அதுக்குக் குறைஞ்சது செகன்ட் க்ளாஸ் அப்பர் வேணும்.” தலவாக்கலையில்தான் இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கிறது.

“வெச்சிருக்கீங்களா?”

“எங்கிட்ட ஃபர்ஸ்ட் க்ளாஸ் இருக்கு சார்.” அவள் பெருமையாகச் சொன்னாள்.

“சுமதியோட சிஸ்டர்கிட்ட இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதுதான்.” அவன் சுலபமாக ஒப்புக்கொள்ள அவள் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் அத்தனை வசீகரம்!

“வேலை பார்த்துக்கிட்டே மேல, மேலன்னு படிக்கணும் சார், ஆராய்ச்சி பண்ணணும், புதுசா ஏதாவது கண்டுபிடிக்கணும், சாதிக்கணும் சார்.” கண்கள் மின்ன அவள் பேசிக்கொண்டிருக்கும் போது வெளியே மின்னலொன்று வெட்டியது. மின்னல் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் முகம் மாதவனின் நெஞ்சுக்கூட்டுக்குள் பதிந்து போனது.

“அப்ப எதுக்காக வெயிட் பண்ணுறீங்க?”

“அதுக்கெல்லாம் ஒரு நேரம் வரணும் சார், என்னை மாதிரி எத்தனைப் பேர் அப்ளை பண்ணுவாங்க!”

“அவங்களுக்கெல்லாம் உங்களை மாதிரி இந்தத் துறையில ஆர்வம் இருக்காது சுமித்ரா.”

“வேலை குடுக்கிறவங்களுக்கு அது தெரியாதில்லை சார், அவங்களுக்கு நம்ம மனசு தெரியாதில்லை?”

“இப்ப ஏதாவது அப்ளை பண்ணியிருக்கீங்களா?”

“ரெண்டு வாரம் முன்னாடியும் ஒரு ஜாப்புக்கு அப்ளை பண்ணினேன், தலவாக்கலைதான், ஆனா பதில் வரலை, அதுக்காக நாம விட்டுர முடியுமா? தொடர்ந்து முயற்சி பண்ண வேண்டியதுதான்.”

“வீட்டுல ஒன்னும் சொல்லமாட்டாங்களா?”

“அம்மா ஏதாவது சொல்லுவாங்க, ஆனா அப்பா அப்பிடியில்லை சார், எங்கப்பா மாதிரி ஒரு அப்பாவை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க, பெஸ்ட் அப்பா!”

“ஓ!”

“படிக்கணும்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும், அவரோட சக்திக்கு மீறின படிப்பா இருந்தாலும் சரி, அதைச் சுமக்க அவர் எப்பவும் தயங்கினதில்லை.”

“…” அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எங்க வீட்டுல எனக்கும் சரி, சுமதிக்கும் சரி, ரெண்டு பேருக்கும் எல்லாத்துக்கும் முழு சுதந்திரம் உண்டு.”

“நல்லது, நீங்க அப்ளை பண்ணின வேலையோட டீடெயில்ஸ் குடுங்க.” அவன் கேட்கவும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென்று தன் அலைபேசியிலிருந்த தகவல்களை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்தவன்,

“இதை அப்பிடியே என்னோட வாட்ஸ்ஆப்புக்கு அனுப்ப முடியுமா?” என்றான்.

“எதுக்கு சார்?!”

“சும்மாதான், நம்ம சுமதியோட அக்காக்கு நம்மால எதுவும் செய்ய முடியுமான்னு பார்ப்போம்.”

“சார்! நீங்க என்ன சொல்றீங்க?!” அவளால் நம்பவே இயலவில்லை.

“நான் நம்பிக்கைக் குடுக்கலை சுமித்ரா, உங்கக்கிட்டத் திறமை இல்லைன்னா நான் இதுல இறங்கமாட்டேன், உங்களுக்குத் திறமை இருக்கு, எதையாவது சாதிக்கணுங்கிற ஆசை இருக்கு, இந்த வேலைக்காகவே மெனக்கெட்டுப் படிச்சிருக்கீங்க, ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கீங்க, ஒரு முயற்சி செஞ்சு பார்க்கிறது தப்பில்லைன்னு தோணுது, ஆண்டவனோட கருணை இருந்தா நிச்சயமா உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.”

“ரொம்ப தேங்க்ஸ் சார், இந்த வேலை கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை, நீங்க இவ்வளவு என்னைப் புரிஞ்சுக்கிட்டது எனக்கு சந்தோஷமா இருக்கு, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.” இப்போது வெளியே மழை ஓய்ந்திருந்தது.

“மழை நின்னுடுச்சு, நான் கிளம்புறேன் சார்.”

“சரிம்மா, பத்திரமா போயிடுவீங்கல்லை?”

“ஆமா சார்.” அவள் பேச்சில் இப்போது ஒரு புதுத் துள்ளல் தெரிந்தது. மலர்ந்த முகமாக இறங்கியவள் சைக்கிளில் ஏறினாள். இப்போதும் அவனைப் பார்த்து ஓர் புன்னகையைச் சிந்தத் தயங்கவில்லை. மாதவனும் புன்னகைத்தான். இதுநாள்வரை தன்னைத் தவிர்த்த அதே பெண் இன்றைக்குத் தன்னைப் பார்த்து மலர்ந்து சிரிப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த சைக்கிள் முன்னே செல்ல ப்ளாக் ஆடி அவளைப் பின்தொடர்ந்து மெதுவாகச் சென்றது. அந்த காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் அவள் வீடுவந்து சேர்ந்திருக்க அதன் பின்னரே அந்த ப்ளாக் ஆடி வேகமெடுத்தது.

இவர்கள் ஊரிலிருந்து தலவாக்கலை பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வீட்டிற்கு வந்த பிற்பாடு நேராக அப்பாவைத் தேடிக்கொண்டு சென்றான் மகன். இரவு நேரம் என்பதால் வீட்டிலேயே இருந்தார் வெற்றிவேல். அந்த வட்டாரத்தின் முக்கியபுள்ளி என்பதால் மனிதருக்கு நிறைய செல்வாக்கு இருந்தது.

“அப்பா, எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர்…” என்று ஆரம்பித்தவன் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

“உங்களால ஏதாவது செய்ய முடியுமாப்பா?” இப்படியெல்லாம் கேட்பவனல்ல மகன் என்பதால் வெற்றிவேலும் சட்டென்று எதுவும் சொல்லிவிடவில்லை.

“நல்லா தெரிஞ்சவங்களா? வேலை எடுத்துக் குடுத்ததுக்கு அப்புறமா நம்ம பெயரைக் கெடுத்துடக் கூடாது மாதவா.”

“இல்லைப்பா, இந்த வேலையை ஒரு லட்சியமாவே எடுத்துப் படிச்சவங்க, நீங்க என்னை நம்பலாம்.” யார், என்ன என்ற தகவலை மாதவன் அப்பாவிடம் சொல்லவில்லை.

“முயற்சி செஞ்சு பார்க்கலாம், ஏற்கனவே அவங்க இந்த வேலைக்கு யாரையாவது தெரிவு செஞ்சிருந்தா நம்மால ஒன்னும் பண்ண முடியாது.”

“அதையும் நான் அவங்கக்கிட்டச் சொல்லிட்டேன்பா, நம்பிக்கைக் குடுக்கலை, ஆண்டவன் நாடியிருந்தா கிடைக்கும்னுதான் சொல்லியிருக்கேன்.”

“ம்… பார்க்கலாம்.” ஆனால் சரியாக சுமதிக்குப் பரீட்சைகள் நிறைவுபெற்ற தினம் மதியம் போல சுமித்ராவிற்கு ஓர் கடிதம் வந்திருந்தது. ஆர்வமாகப் பிரித்துப் பார்த்த பெண் மூச்சு விடவும் மறந்து போனாள்.

“அம்மா!” அவள் போட்ட சத்தத்தில் அந்த வீடே அதிர்ந்தது.

“அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு!” அவள் சொன்ன வார்த்தைகளில் அந்த வீடே திக்குமுக்காடிப் போனது. சுமித்ரா படிப்பில் கெட்டி. சுமதி போல இல்லை என்றாலும் இவளும் சளைத்தவள் அல்ல. ஆனால் அவர்கள் இவ்வளவு ஆனந்தப்படுவதற்குக் காரணம் இளையவள் ஆசைப்பட்ட வேலை, அதுவும் தலவாக்கலையில் அமைந்து போனதுதான். வேலைக்குப் போயிருந்த அப்பாவிற்கும் உடனே அழைப்புப் பறந்தது.

“அப்பா! அக்காக்கு வேலை கிடைச்சிருச்சு.” இப்போது சுமதி சத்தம்போட்டாள்.

“அப்பிடியா சுமதி! ரொம்ப சந்தோஷம்.” ராஜசேகரின் குரலே அவரின் சந்தோஷத்தின் அளவைச் சொன்னது. திருமணத்தின் போது மாதவனைச் சந்தித்ததையோ, அவனிடம் தன் வேலைபற்றிப் பேசியதையோ வீட்டினரிடம் சுமித்ரா பிரஸ்தாபிக்கவில்லை. சுமதியிடம் எதையும் அவள் மறைப்பதில்லை. ஆனால் அப்போது அவளுக்குப் பரீட்சைகள் நடந்து கொண்டிருந்ததால் அமைதியாக இருந்துவிட்டாள். இப்போதும் தங்கையிடம் அதைச் சொல்லும் எண்ணம் ஏனோ பெரியவளுக்கு வரவில்லை.

அந்த சைக்கிள் பெரிய வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. சுமித்ரா மிகவும் சந்தோஷமான மனநிலையில் இருந்தாள். அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த வேலை கிடைப்பதற்கு முழுக்காரணம் மாதவன்தான். அவன்தான் ஏதோ முயற்சி எடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெறும் தகுதிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு அவளுக்கு இந்த வேலை கிடைக்கப் போவதில்லை.

“வாங்கம்மா, நம்ம சுமதிப் பொண்ணு நல்லா பரீட்சை எழுதியிருக்காங்களா? எங்க அவங்களைக் காணலை? அக்காவும் தங்கையும் ஒன்னாத்தானே எப்பவும் வருவீங்க?!” சுமித்ராவின் தலையைக் காணவும் மாதவனின் வீட்டு கூர்க்கா ஆரம்பித்துவிட்டார். தங்கையை அழைத்துக்கொண்டு வராதது மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும் சுமித்ரா அமைதியாகவே புன்னகைத்தாள். மாதவன் விடயத்தில் தன்னைவிட தங்கை அதிக உரிமை எடுத்துக்கொள்வது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.‌ அதன் காரணம் என்னவென்று ஆராயவும் அவள் பிரியப்படவில்லை.

“நல்லா பண்ணியிருக்கா தாத்தா.” என்றவள் அதற்குமேல் பேசாமல் உள்ளே போய்விட்டாள். மாதவன் வீட்டில் இருக்கிறானா இல்லையா என்று தெரியவில்லை. அவனுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றவும் சட்டென்று புறப்பட்டு வந்துவிட்டாள்.

“வாம்மா, சுமதி நல்லா இருக்காளா?” மீண்டும் சுமதியின் பேச்சு. ஆனால் கேட்டது செல்லம்மா என்பதால் பொறுமையாகத்தான் இருக்க வேண்டியிருந்தது.

“நல்லா இருக்காம்மா, மாதவன் சார் இருக்காங்களா? அவங்களைக் கொஞ்சம் பார்க்கணும்.”

“வர்ற நேரந்தான், உள்ள வாம்மா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த ப்ளாக் ஆடி உள்ளே நுழைந்தது. பெண்கள் இருவரும் முன் வாசலைத் திரும்பிப் பார்த்தார்கள். காரை நிறுத்தியவன் இறங்கி இவர்களை நோக்கித்தான் வந்தான். சுமித்ராவை இங்கே, இப்போது அவன் எதிர்பார்க்கவில்லை என்று பார்வையே சொன்னது.

“சார்! எனக்கு வேலை கிடைச்சிருச்சு சார்!”

“அப்பிடியா! ரொம்ப சந்தோஷம், ஆமா, ஸ்வீட் எங்க?”

“ஐயையோ! உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லணுங்கிற அவசரத்துல அதை மறந்துட்டேன், தேங்க்ஸ் சார்.”

“எதுக்கு?”

“இல்லை… அது வந்து…”

“உங்க திறமைக்கு உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு, அதுக்கு எனக்கு ஏன் சுமித்ரா தேங்க்ஸ் சொல்றீங்க?”

“இல்லை சார், எனக்கு நல்லா தெரியும், நீங்கதான் ஏதோ பண்ணியிருக்கணும், இல்லைன்னா இவ்வளவு நாளும் கிடைக்காத வேலை இப்போ கிடைச்சிருக்குமா?” நடந்தது என்னவென்று தெரியாததால் செல்லம்மா மகனை விசித்திரமாகப் பார்த்தார்.

“என்னாச்சு மாதவா?”

“அது ஒன்னுமில்லைம்மா, நம்ம சுமதியோட அக்கா வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க, தலவாக்கலைக்குப் போகணுங்கிறது அவங்க கனவு.”

“நம்ம முரளி மாமா அங்கதான் இருக்காங்கல்லை?” முரளி என்பவர் வெற்றிவேலின் நெருங்கிய நண்பர்.

“அதனாலதான் அப்பாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வெச்சிருந்தேன், அவங்க எதிர்பார்க்கிற தகுதி இவங்களுக்கு இருந்ததாலதானே வேலை கிடைச்சிருக்கு, அதுக்குப் போய் எனக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்காங்க.”

“சுமித்ரா, முரளிங்கிறது எங்க வீட்டுக்காரரோட நீண்டகால நண்பர், அதுக்காகவெல்லாம் சட்டுன்னு வேலை குடுத்துரமாட்டாரு, ரொம்ப கண்டிப்பு! இவங்க சொன்னதால உன்னை இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துப் பார்த்திருப்பாரே தவிர அதுக்காகவெல்லாம் வேலை குடுத்திருக்க மாட்டாரு.” என்றவர் மகனிடம் திரும்பி,

“மாதவா, இன்னைக்குப் பத்மா வேலைக்கு வரலை, எனக்குக் கையும் ஓடமாட்டேங்கேது, காலும் ஓடமாட்டேங்குது.” என்றார் மிகவும் கவலையாக.

“அதெல்லாம் பரவாயில்லைம்மா, ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிக்கலாம்.”

“என்னப்பா இப்பிடிச் சொல்றே! வீட்டுக்கு முதல்முதலா வர்றவங்களுக்கு ஹோட்டல்ல இருந்தா வாங்கிக் குடுப்பாங்க?” இவர்கள் பேச்சு இப்படியிருக்க சுமித்ராவுக்கு எதற்காகவோ செல்லம்மா வருத்தப்படுகிறார் என்று புரிந்துபோனது. வேலைக்கு அவள் பயந்தவள் கிடையாது என்பதால் சட்டென்று உதவிக்கு வந்தாள்.

“என்னம்மா பிரச்சினை? என்னால உங்களுக்கு ஏதாவது உதவிபண்ண முடியுமா?”

“அது ஒன்னுமில்லை சுமித்ரா, இன்னைக்குப் பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு முதல்முதலா வர்றாங்க.” இப்போது இளையவளின் கண்கள் சட்டென்று மாதவனை நோக்கின. அவனும் இவளைப் பார்த்தவன் உள்ளே போய்விட்டான்.

“மத்தவங்க எல்லா வேலையையும் பார்த்தாலும் பத்மா இருந்தாத்தான் எனக்கு நிம்மதி, என்னோட மனசறிஞ்சு அவளுக்குத்தான் வேலை பார்க்கத் தெரியும்.”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நான் உதவி பண்ணட்டுமா?”

“முடியுமா சுமித்ரா உன்னால?”

“கண்டிப்பா பண்ணுறேம்மா.” என்றவள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வீட்டிற்குத் தகவல் சொன்னாள். ஏதோ மாதவன் செய்த உதவிக்குக் கைமாறாக இதைச் செய்வது போலவே அவளுக்குத் தோன்றியது. தான் பெரிய வீட்டில் இருப்பதைச் சொல்லாமல் தன் நண்பியின் வீட்டிற்குச் சென்றிருப்பதாக அம்மாவிடம் சொன்னவள் அதன்பிறகு செல்லம்மாவோடு ஐக்கியமாகிப் போனாள்.

“ரொம்ப நாள் முன்னாடியே பார்த்த வரன் இது, இந்த மழை வந்துதான் எல்லாத்தையும் தாமதிக்க வெச்சிடுச்சு சுமித்ரா.” நெடுநாட்கள் பழகியவர் போல பேச்சை ஆரம்பித்தார் பெரியவர்.

“நாலு மணிக்கு மேல வர்றதா பொண்ணு வீட்டுக்காரங்க சொல்லியிருக்காங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல ரேவதியும் வந்திடுவா.”

“அது யாரும்மா?”

“எம் பொண்ணுதான் சுமித்ரா!”

“ஓ… சாரிம்மா, எனக்குத் தெரியலை.” என்றவளை விசித்திரமாகப் பார்த்தவர் மீண்டும் வேலையில் கவனமானார். பேச்சு பேச்சாக இருந்தாலும் வேலை தன்பாட்டில் நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே உணவுப் பதார்த்தங்கள் தயார்நிலையில்தான் இருந்தன. ஆனாலும் மீதமிருந்த வேலைகளை மற்றைய வேலையாட்களிடம் ஒப்படைத்தவர் மேசை அலங்காரத்தை இவளிடம் கொடுத்துவிட்டார்.

“சுமித்ரா, வர்றவங்களுக்கு முதல்ல அன்னாசி ஜூஸ் குடுக்கலாம், அதுக்குரிய எல்லாத்தையும் இங்க ஏற்பாடு பண்ணும்மா.”

“சரிம்மா.”

“அதுக்கப்புறமா இந்த மேசையில எல்லா பதார்த்தங்களையும் அழகா அடுக்கி வெக்கணும், பொண்ணு வீட்டுக்காரங்க இங்க வந்துதான் சாப்பிடணும்.”

“சரிம்மா.” சாதாரணமாக சுமித்ராவின் வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் ஹாலில் வைத்துத்தான் உபசரிப்பார்கள். ஆனால் இங்கே பதார்த்தங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் நேராக சாப்பாட்டு மேசைக்கே விருந்தினர்களை அழைத்துவர செல்லம்மா ஏற்பாடு செய்திருந்தார்.

செய்யப்பட்டிருந்த பதார்த்தங்களின் எண்ணிக்கையைப் பார்த்தபோது இவளுக்குத் தலை சுற்றியது. இவ்வளவு சிற்றுண்டி வகைகளையும் வருபவர்களால் எப்படி உண்ண முடியும்?! அதற்கு அவசியமே இல்லை என்று காட்டினார்கள் அந்தப் பெரியவீட்டு மனிதர்கள். பெயருக்கு நான்கைந்து உணவுப் பதார்த்தங்களை அவர்கள் கொறித்துவிட்டுச் செல்ல மீதமிருந்த அனைத்தும் அந்த வீட்டில் வேலை செய்பவர்களின் வீடுகளுக்குத்தான் சென்றன!

பொறுப்பை இவளிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்ற பெரியவர் தன் அலங்காரத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது மணி நான்கு. உதவிக்கென இருந்த பெண் பத்மா அவ்வளவு தூரம் செல்லம்மாவிற்கு ஏன் தேவைப்பட்டார் என்று இவளுக்கு அப்போது புரிந்தது.‌ அழகான பட்டுப்புடவை உடுத்தி வைர நகைகள் அணிந்து அந்த வீட்டின் எஜமானியென செல்லம்மா வந்து நின்றபோது அவரைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் போலவிருந்தது.

“எல்லாம் ரெடியா இருக்கா சுமித்ரா?”

“இருக்கும்மா, ரொம்ப அழகா இருக்கீங்க.” இவள் சொல்லவும் வெட்கப்பட்டவர் இளையவளின் கன்னத்தை வருடிக் கொடுத்தார். மேசை அலங்காரம் வெகு பிரமாதமாக இருந்தது.

“ரொம்ப அழகா ஏற்பாடு பண்ணியிருக்கேம்மா, போசாம இனி இந்த வீட்டுல என்ன விசேஷம் வந்தாலும் உன்னைக் கூப்பிடலாம் போல இருக்கு!” அந்த வீட்டின் விசேடமே அவள்தான் என்று புரியாமல் பேசிக்கொண்டிருந்தார் பெரியவர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

“ரேவதி வீட்டு கார் வந்திடுச்சு, நான் பார்த்துட்டு வந்தர்றேன்.” என்று சென்றவர் சற்று நேரத்தில் கையோடு மகளை அழைத்து வந்து எல்லாவற்றையும் காண்பித்தார். இப்போது சுமித்ரா பின்னணியில் ஒதுங்கிக் கொண்டாள்.

“எல்லாம் கரெக்ட்டா இருக்கா ரேவதி?”

“சூப்பரா இருக்கும்மா, அவங்க எல்லாரும் கிளம்பிட்டாங்களாம், இப்பதான் மோகனுக்கு கால் பண்ணி சொன்னாங்க, பத்து நிமிஷத்துல வந்திருவாங்க, பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்தக் கல்யாண ஏற்பாட்டுல அவ்வளவு இஷ்டமாம், மாதவனோட ஃபோட்டோவை பார்த்துட்டு பொண்ணும் எதுவும் பேசாம சம்மதம் சொல்லிட்டாளாம், இப்ப எல்லாமே உம் புள்ளையோட கைலதாம்மா இருக்கு, அவன் ‘ம்’ ன்னு ஒரு வார்த்தை சொன்னா எல்லாமே முடிவாகிடும்.” இவர்கள் இங்கே பேசுவது உள்ளேயிருந்த சுமித்ராவுக்கும் தெளிவாகக் கேட்டது.

அப்படியென்றால் இந்தக் கல்யாணம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்! கூடிய சீக்கிரமே மாதவனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. அந்த எண்ணமே இலேசான வலியைக் கொடுக்க மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள் பெண். மாதவனின் அக்காவை இப்போதுதான் இவள் முதல்முறையாகப் பார்க்கிறாள். செல்லம்மாவின் அழகை முழுதாகக் கொண்டு வராவிட்டாலும் ரேவதியும் அழகாக இருந்தாள். பட்டுடுத்தி, நகைகள் அணிந்து என அம்மாவும் மகளும் அலங்காரத்தில் ஜொலித்தார்கள். அந்த மேல்தட்டு மக்களைப் பார்த்தபோது சுமித்ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“அம்மா! அவங்க வந்துட்டாங்க!” பெண்கள் இருவரும் நகர்ந்து செல்வது தெரியவும் இவள் வெளியே வந்தாள். இங்கிருந்து பார்த்தபோது முன்வாசல் அத்தனைத் துல்லியமாகத் தெரியவில்லை. நான்கைந்து மனிதர்கள்தான் வந்திருந்தார்கள். இவர்களுக்கா இத்தனை ஏற்பாடு?! சுமித்ராவின் வீட்டில் என்றால் இருபது மனிதர்களுக்குத்தான் இத்தனை ஏற்பாடு செய்திருப்பார்கள்!

“வாங்க வாங்க! உள்ள வாங்க.” செல்லம்மா வரவேற்பது இங்கேயும் கேட்டது. சுமித்ராவின் பார்வை வட்டத்திற்குள் அந்தப் பெண் இப்போது தெரிந்தாள். அடர் சிவப்பு நிறத்தில் அழகான வெல்வெட் ஆடை அணிந்திருந்தாள். முகம் மிகவும் திருத்தமாக இருந்தது. ஆடையின் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசியிருந்தாள். காதுகளில் பெரிய காதணிகள். வைரம் போலும், மின்னியது. கழுத்தில் எதையும் அணியாமல் தவிர்த்திருந்தாள். கூந்தல் அலையலையாகத் தோளில் தவழ்ந்து கொண்டிருந்தது.

அழகிதான்! மறுக்க முடியாது. ஆனால் இந்த அழகு மாதவனுக்குப் பொருத்தமாக இருக்குமா?! செல்லம்மாவின் மென்மைக்கு ஒத்துவருமா?! அவளுக்கு எந்த விதத்திலும் அவசியமே இல்லாத இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டிருந்தாள் சுமித்ரா. சொல்லத் தெரியாத ஒரு வலி அவளைப் பிசைந்து கொண்டிருந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 05

அத்தியாயம் 05ஒரு வாரம் கடந்திருந்தது. அன்றைக்கு சுமித்ரா தலவாக்கலைக்குச் செல்கிறாள். வேலை உறுதிப்படுத்தப்பட்ட கையோடு நியமன கடிதமும் வந்துவிட்டது. இந்த வாரமே வேலைக்குப் புறப்பட்டு வரச்சொல்லியிருந்தார்கள்."பெரியவளுக்கு வேலை கிடைச்சது சந்தோஷமா இருந்தாலும் திரும்பவும் அவளை விட்டுட்டு இருக்கிறது மனசுக்குக் கஷ்டமா இருக்குங்க."…...

அடுத்த அத்தியாயம் படிக்க →