arrow_back
En Ragasiya Kanavu Nee அத்தியாயம் 05
En Ragasiya Kanavu Nee chevron_right பகுதி 5 / 7

அத்தியாயம் 05

visibility 157
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 05

ஒரு வாரம் கடந்திருந்தது. அன்றைக்கு சுமித்ரா தலவாக்கலைக்குச் செல்கிறாள். வேலை உறுதிப்படுத்தப்பட்ட கையோடு நியமன கடிதமும் வந்துவிட்டது. இந்த வாரமே வேலைக்குப் புறப்பட்டு வரச்சொல்லியிருந்தார்கள்.

“பெரியவளுக்கு வேலை கிடைச்சது சந்தோஷமா இருந்தாலும் திரும்பவும் அவளை விட்டுட்டு இருக்கிறது மனசுக்குக் கஷ்டமா இருக்குங்க.” மணிமேகலை சோகமாகச் சொல்லவும் ராஜசேகர் சிரித்தார். சுமித்ரா பல்கலைக்கழக படிப்பை முடிக்கும்வரை ஹாஸ்டலில்தான் இருந்தாள். விடுமுறைக்கு மாத்திரம்தான் வீட்டிற்கு வருவாள்.

“அதுக்கு என்ன மணி பண்ண முடியும்? பசங்க வளர்ந்துட்டாலே அப்பிடித்தானே? நாளைக்குச் சின்னவளுக்கும் நல்ல ரிசல்ட் வந்தா அவளும் கிளம்பிடுவா, அதுக்கப்புறம் நாம ரெண்டு பேருந்தான் இங்க உட்கார்ந்திருக்கணும்.”

“அதுவும் சரிதான்.” இவர்கள் ஊரிலிருந்து தலவாக்கலை பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால் பேருந்தில்தான் செல்ல வேண்டும். தனியாக வாகனம் பிடித்துச் செல்வதற்கு ராஜசேகரின் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.

“ஹலோ.” அந்த நம்பரை சுமித்ரா தனது அலைபேசியில் சேமித்து வைத்திருந்தாள். நடுத்தர வர்க்கத்தைக் கூட எட்டவில்லை என்றாலும் தன் பெண்கள் இருவருக்கும் நல்ல மாடலில் அலைபேசி வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. இன்றைய படிப்புகள் அதிகமாக ஆன்லைனிலேயே நடைபெறுவதால் அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை மனிதர்.

“சுமித்ரா.” அந்தக் குரல் அவள் நாடி, நரம்பெங்கும் பரவிப் படர்ந்தது. அழைப்பது மாதவன்தான் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அன்றைக்கு வேலைபற்றிய விபரங்களை அவன் கேட்டபோது தனது அலைபேசி எண்ணை இவளோடு பகிர்ந்திருந்தான். வீட்டிற்கு வந்த பிற்பாடு அந்த எண்ணை அலைபேசியிலும் மனதுக்குள்ளும் பதிந்துகொள்ளப் பெண் மறக்கவில்லை.

“இன்னைக்குக் கிளம்புறீங்களோ?”

“ஆமா சார்.” தட்டுத்தடுமாறி வந்தது பதில். அன்றைக்கு அவர்கள் வீட்டிலிருந்து வந்தவள்தான். அதன்பிறகு மாதவனை அவள் பார்க்கவில்லை. அலைபேசி எண் இருந்தபோதும் அழைத்துப் பேச தைரியம் இருக்கவில்லை.

“அதை எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலையா?” அவன் சட்டென்று ஒருமைக்குத் தாவ இவள் தவித்துப் போனாள்.

“சொல்லியிருக்கணும்… ஆனா அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்தா அவ்வளவு நல்லா இருக்காதில்லை சார்.”

“ஓ… அன்னைக்கும் சொல்லாம கொள்ளாம வீட்டுக்குப் போயிட்டே?!” என்றைக்கு என்று அவளுக்குச் சொல்லத் தேவையிருக்கவில்லை. அன்றைய மாலைப்பொழுது அவளுக்குக் கொடுத்த வேதனையை என்றைக்கும் மறக்கப் போவதில்லை பெண்.

“ஏன்? உனக்கு வர்ஷாவைப் புடிக்கலையா?” அவன் கேட்டதுதான் தாமதம். அழைப்பைப் பெண் துண்டித்துவிட்டாள். நாகரிகமில்லாத செயல் என்று தெரியும். தன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை அவனுக்குள் இந்தச் செய்கை விளைவிக்கும் என்பதையும் அவள் அறிவாள். ஆனாலும் அதற்குமேல் அவனோடு பேச அவளால் முடியவில்லை.

“சுமித்ரா! எல்லாம் ரெடியா இருக்கா?” ஹாலில் இருந்து அம்மா குரல் கொடுக்கவும் தன்னைச் சட்டென்று மீட்டுக் கொண்டவள்,

“எல்லாம் ரெடிம்மா.” என்றாள் சத்தமாக. கண்கள் நிறைந்து போனது. என்னமாதிரியான எண்ணம் இது?! நான் ஏன் இப்படி முட்டாள் போல நடந்து கொள்கிறேன்?! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல இதுவென்ன நிறைவேறாத ஆசை?! முதலில் யாரிடம் இதைச் சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும் சிரிக்கமாட்டார்களா?! சின்னவளான சுமதியிடம் இவளால் இதைச் சொல்ல முடியுமா?!

“அக்கா, இந்த சல்வாரையும் எடுத்து வெச்சுக்கோ, உனக்கு இப்போ அங்க நிறைய உடுப்புத் தேவைப்படும்.”

“இது உன்னோட புதிய சல்வார் சுமதி, இதை எனக்குக் குடுத்துட்டு நீ என்ன பண்ணப் போறே?”

“ஆமா! நான் இங்க எங்க போகப்போறேன்? நீ கொண்டு போக்கா, புடவை மட்டும் உடுத்தாம இப்பிடி சல்வாரும் உடுத்து, முதல் சம்பளம் வாங்கினதும் இன்னும் கொஞ்சம் நல்லதா நாலு ட்ரெஸ் வாங்கிக்கோ என்ன?”

“ம்… சரி.”

“எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணுறே? கண்ணெல்லாம் கலங்கி முகம் சிவந்து போச்சு, வீட்டைவிட்டுப் போறது உனக்கு முதல் தடவையா என்ன? ஹாப்பியா இருக்கா.” தங்கை சொல்லவும் சுமித்ரா புன்னகைத்தாள்.

“சுமதி, உங்கிட்ட ஒரு விஷயத்தை நான் சொல்லாம மறைச்சுட்டேன்.”

“என்னக்கா?”

“உனக்கு எக்ஸாம் நடந்துக்கிட்டு இருந்தப்போ என்னோட ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு நான் போனேனில்லை?”

“ஆமா, பக்கத்துக் கோவில்லதானே நடந்துச்சு.”

“அன்னைக்கு அந்தக் கல்யாணத்துக்கு மாதவன் சாரும் வந்திருந்தாங்க, அவங்கக்கிட்ட இந்த வேலை விஷயமா நான் பேசினேன், அவங்கதான் நமக்கு ஏதோவொரு வகையில ஹெல்ப் பண்ணியிருக்கணும்னு தோணுது.”

“அப்பிடியா?! மாதவன் சார் பண்ணக்கூடிய ஆள்தான், ஆனா உனக்குத் திறமை இருக்குக்கா, இல்லைன்னா சார் இந்த விஷயத்துல இறங்கமாட்டாங்க.”

“இருக்கலாம், நான் முறையா அவங்க வீட்டுக்குப் போய் நன்றி சொல்லிட்டேன், ஆனாலும் ஒழுங்கா பேச முடியல்லை, நீ அவங்களைப் பார்க்கும் போது இன்னொரு தடவை நன்றி சொல்லிடு.”

“சரிக்கா.”

“அவங்களுக்கு நாம ஸ்வீட் வாங்கிட்டுப் போறதான்னு அன்னைக்கு நான் எதுவும் வாங்கிட்டுப் போகலை சுமதி.”

“அவங்களுக்கு வாங்கிட்டுப் போற அளவுக்கு நாம ஒன்னும் பெரிய ஆளுங்க இல்லைதான், ஆனா அம்மா கையால ஏதாவது பண்ணிக்கிட்டுப் போயிருக்கலாமேக்கா?” மணிமேகலைக்கு நல்ல கைப்பக்குவம். இனிப்பு வகைகள் நன்றாகச் செய்வார். இது ஏன் இவளுக்குத் தோன்றாமல் போனது?!

“கரெக்ட்தான், நீ போகும்போது அம்மாக்கிட்டச் சொல்லி வட்டிலாப்பம் பண்ணிட்டுப் போ, அவங்களுக்கு அது ஒருவேளை புடிக்கும்.”

“ஒரிஜினல் கருப்பட்டி வாங்கி வட்டிலாப்பம் பண்ணி அசத்திடலாம், நீ கவலைப்படாதே.” அதற்கு மேலும் ராஜசேகர் தாமதிக்கவில்லை. பதினைந்து கிலோமீட்டர்தான் என்றாலும் அடிக்கடி மழைவரும் பிரதேசம் என்பதால் காலையிலேயே போவதென்று முடிவாகி இருந்தது.

“சுமித்ரா, கிளம்பலாமாம்மா?”

“சரிப்பா.” என்றவள் ஒரு பையைத் தூக்கிக் கொண்டாள். அப்பா இன்னொரு சூட்கேஸை தூக்கிக் கொண்டார். சுமதி சைக்கிளில் பஸ் ஸ்டாப்வரை வருவதாகச் சொல்லி கூட நடந்தாள். கவலைத் தோய்ந்த முகமாக எல்லோரையும் வழியனுப்பி வைத்தார் மணிமேகலை.

தலவாக்கலைக்கு இவர்கள் வந்து சேரும்போது மணி இரண்டாகிவிட்டது. சின்னதாக ஒரு குவார்ட்டர்ஸ் வழங்கியிருந்தார்கள். புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு இப்படி வசதிகள் கிடைப்பதில்லை. இது மாதவனின் ஏற்பாடு. இவர்களின் குடும்ப நிலை தெரிந்ததினால் முரளி மாமாவிடம் சொல்லி இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருந்தான்.

“பரவாயில்லை சுமி, குவார்ட்டர்ஸ் எல்லாம் குடுத்திருக்காங்க!” அப்பா ஆச்சரியப்படவும் அதற்குமேலும் மறைக்க முடியாமல் மாதவனிடம் வேலை விஷயமாக அவள் பேசியதைச் சொன்னாள் பெண்.

“ஓ…” ராஜசேகர் எதுவும் பேசாமல் சிறிது நேரம் யோசித்தபடி வாங்கி வந்திருந்த உணவை உண்டார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தவர் மகளை அங்கே இருக்கச் சொல்லிவிட்டுப் போய் மதிய உணவு வாங்கி வந்திருந்தார். பக்கத்திலேயே ஹோட்டல் ஒன்றும் இருந்தது மனிதருக்குத் திருப்தியைக் கொடுத்தது. மகள் எதற்கும் அலைய வேண்டியதில்லை என்று நினைத்துக் கொண்டார்.

“சுமி, அந்தப் பையன் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாரு, மழை பேஞ்சப்போ அதை நாம கண்கூடா பார்த்தோம், இப்பவும் அதேமாதிரி உன்னோட விஷயத்துலயும் நடந்திருக்காரு, அவருக்கு நாம ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம், அதை எப்பவும் நீ மனசுல வெச்சுக்கணும், வேலையில ரொம்ப கவனமா இருக்கணும், அந்தத் தம்பிக்குத் தெரிஞ்சவங்க இங்க இருப்பாங்க, அவங்கக்கிட்ட நல்ல பெயர் வாங்கணும்.” அதற்குமேல் யோசிக்க அந்தக் கள்ளம், கபடம் அறியாத மனிதருக்குத் தெரியவில்லை.

“சரிப்பா.” அன்று முழுவதும் ராஜசேகர் மகளுடனேயே இருந்தார். சின்னதாக ஓர் அறை, அதோடு சேர்ந்தாற் போல ஒரு குளியலறை. அவ்வளவுதான் இவளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவே தாராளம் என்பது போலத்தான் இவர்கள் உணர்ந்தார்கள். பழைய கட்டில் ஒன்றிருந்தது. ஆனால் மெத்தை இருக்கவில்லை. வீட்டைக் கழுவிச் சுத்தம் பண்ணியவர்கள் கடைக்குச் சென்று புதிய மெத்தையும் தலையணையும் வாங்கி வந்தார்கள்.

“எதுக்குப்பா இப்போ தேவையில்லாம இந்த வீண் செலவு?”

“பரவாயில்லைம்மா, சம்பளம் வாங்கினதும் இன்னும் கொஞ்சம் பொருட்கள் வாங்கிக்கலாம், இப்போதைக்கு அப்பாவால முடிஞ்சதை வாங்கிக் குடுக்கிறேன்.”

“சரிப்பா.” ஆரம்பகட்ட ஊதியமாக ஐம்பதாயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குடும்பமே மகிழ்ந்து போனது. நிதி வழங்கும் அமைப்புகளைப் பொறுத்து ஒவ்வொரு ப்ராஜெக்ட்டுக்கும் சம்பளம் மாறுபடுமாம். எண்பத்து ஐயாயிரம் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஏற்கனவே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். இத்தனை வருட உழைப்பின் பின் ராஜசேகர் அண்மையில்தான் அந்தத் தொகையை எட்டியிருந்தார். அந்த வகையில் அப்பாவிற்கு அத்தனைத் திருப்தி.

அந்த ஒற்றைப் படுக்கையில் அப்பாவும் மகளும் அன்றைய இரவைக் கடத்தினார்கள். நிலத்தில் தூங்க முடியாதபடி குளிர் அதிகமாக இருந்தது. நிலத்தில் விரிக்கப் பாயும் இருக்கவில்லை. அக்கம்பக்கம் மனிதர்கள் இருந்தாலும் ஏனோ மகளைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல அப்பாவுக்கு மனம் வரவில்லை.

“இன்னைக்கு ஒரு நாள்தானேப்பா, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.” மகளின் சௌகரியம் கெட்டுவிடும் என்று கவலைப்பட்ட அப்பாவுக்குப் பதில் சொல்லிவிட்டு சுமித்ரா கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை. அன்றைய நாளின் பரபரப்பில் அவனது நினைவுகளை அவள் ஒதுக்கி வைத்திருந்தாலும் அந்த முகத்தை மறந்துவிடவில்லை.

என்ன மாதிரியான வார்த்தைகள் அவை?! வர்ஷாவை உனக்குப் பிடிக்கவில்லையா என்று என்னிடம் ஏன் கேட்கிறான்?! அன்றைக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இவள் மனதில் தோன்றிய முதல் உணர்வு அவள் மாதவனுக்குப் பொருத்தமில்லை என்பதுதான். வசதியான வீட்டுப் பெண் என்று பார்த்தபோதே தெரிந்தது. பெரிய வீட்டின் மூத்த மருமகள் என்றால் நிச்சயமாக அப்படித்தான் இருப்பாள். உள்ளுக்குள் வலித்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை.

மாதவன் பெரிய வீட்டுப் பையன் என்றாலும் அவனிடம் ஓர் எளிமைத் தெரியும். எல்லோருடனும் சகஜமாகப் பழகுவான். பள்ளிக்கூட நாட்களில் அந்தக் குணம் இல்லை என்றாலும் வெளியூர், வெளிநாடு என்று போன பிற்பாடு வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொண்டான் இளவல். பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் மறந்து எல்லோருடனும் அவனால் இயல்பாகப் பழக முடிந்தது. அந்த எளிமைக்கும் வர்ஷாவின் மேல்தட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் ஒத்துவருமா?!

அடுத்தநாள் காலையிலேயே பெண் எழுந்துவிட்டாள். தேநீர் தயாரிப்பதற்குக் கூட அந்த வீட்டில் வசதிகள் இருக்கவில்லை. ஒரு ஸ்டவ்வும் சிலிண்டரும் வாங்கிக் கொண்டால் சின்னதாக சமையலையே முடித்துவிடலாம். அப்பா இன்னும் கண்விழிக்கவில்லை என்பதால் தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டாள். சரியான நேரத்திற்கு எழுந்த ராஜசேகர் தானும் குளித்துத் தயாரானார்.

“நான் போய் டீ வாங்கிட்டு வர்றேம்மா.”

“அப்பா, நானும் உங்கக்கூட வர்றேன்பா, எனக்கும் அந்த ஹோட்டலைப் பார்த்த மாதிரி இருக்கும்.”

“அதுவும் சரிதான்.” என்றவர் மகளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். முதல்நாள் வேலைக்குப் போவதால் சுமித்ரா புடவைக் கட்டியிருந்தாள். அழகான காட்டன் புடவை.

“வாங்க வாங்க, நீங்கதான் பக்கத்து வீட்டுக்குப் புதுசா வந்திருக்கிறதா?” முப்பது வயதுப் பெண். இடுப்பில் குழந்தையோடு நின்றிருந்தாள்.

“ஆமா, எம் பேரு ராஜசேகர், இது என்னோட மூத்த பொண்ணு சுமித்ரா, இவதான் இங்க வேலைக்குச் சேர்ந்திருக்கா.”

“அப்பிடியா? எம் பேரு அம்பிகா, என்னோட வீட்டுக்காரரும் இங்கதான் வேலை பார்க்கிறாரு, அவர் பேரு முருகேசன்.”

“நல்லதும்மா, வயசுப் பொண்ணைத் தனியா விட்டுட்டுப் போறோமேன்னு கவலையா இருந்துச்சு…”

“ஐயையோ! நீங்க பயப்பிடுற மாதிரி இங்க எதுவும் இல்லை, நான் அஞ்சு வருஷமா இங்கதான் இருக்கேன், எந்தப் பயமும் இல்லைண்ணா.” அம்பிகாவின் வீடு ஒற்றைப் படுக்கையறையோடு இருந்தது. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடுகளைக் கொடுப்பார்கள் போலும்.

“பக்கத்து ஹோட்டல்லதான் சாப்பாடு வாங்கினோம்.”

“ஆமா, அங்க சாப்பாடு பரவாயில்லை, நல்லா இருக்கும், சுமித்ராக்குச் சமைக்க வரும்னா அதுக்கு ஏத்த மாதிரி ஏற்பாடு பண்ணிக்கோங்க, சின்னதா நாலைஞ்சு பாத்திரம் வாங்கினா போதும், முட்டை, காய்கறி எல்லாம் இங்கேயே கிடைக்கும், இறைச்சி, மீன் வாங்கணும்னாத்தான் கொஞ்சம் தூரம் போகணும், உங்களுக்கு ஓகேன்னா நாங்க வாங்கும்போது சேர்த்து வாங்கிடலாம்.” இயல்பாக நட்புக்கரம் நீட்டிய அம்பிகாவை, சுமித்ராவிற்குப் பிடித்துப் போனது.

“ரொம்ப சந்தோஷம்மா, உங்களோட பேசினது மனசுக்கு நிறைவா இருக்கு.” என்றவர் சட்டென்று மணிமேகலையை அழைத்து அவரையும் அம்பிகாவோடு பேசச் செய்தார். பெண்கள் இருவர் பேச ஆரம்பித்தால் கேட்கவும் வேண்டுமா?!

ஹோட்டலுக்குச் சென்று டீயும் காலை உணவும் உண்டவர்கள் நேராக அங்கிருந்து ஆஃபீஸுக்குச் சென்றார்கள். ஹோட்டல் முதலாளியிடம் தனது மகள் அங்கு புதிதாகக் குடிவந்திருப்பதைச் சொல்லத் தவறவில்லை அப்பா. அங்கிருந்த மனிதர்கள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்களாக இருந்தார்கள். இங்கு வரும்போது மனதிலிருந்த கவலை காணாமல் போனதுபோல உணர்ந்தார் ராஜசேகர்.

“அப்ப நான் கிளம்பட்டுமா சுமிம்மா?”

“சரிப்பா.”

“வேலையில எப்பவும் கவனமா இருக்கணும், ஒரு லட்சியத்தோட இந்தப் படிப்பை எடுத்துப் படிச்சிருக்கே, எம் பொண்ணுங்களால எப்பவுமே எனக்குப் பெருமைதான் வந்திருக்கு, அந்த வகையில நான் பாக்கியசாலி, எப்பவும் அந்தப் பாக்கியத்தை ஆண்டவன் எனக்குக் குடுக்கணும், என்ன தேவைன்னாலும் தயங்காம அப்பாக்கு கால் பண்ணும்மா.”

“சரிப்பா.” மகள் தைரியமாகத்தான் பதில் சொன்னாள். ஆனால் அப்பாவின் கண்கள் கலங்கிப் போயின. மகளின் தலையைத் தடவியவர் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் கிளம்பிவிட்டார். இருபத்தி இரண்டு வயதுப் பெண். வாழ்க்கையைத் தைரியமாக அவள் எதிர்கொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கத் தெரிய வேண்டும். எத்தனைக் காலம்தான் தன் சிறகுகளுக்குள் பிள்ளைகளை அடைகாக்க முடியும்?!

“குட் மார்னிங் சார்.” உள்ளே நுழைந்தவள் கையிலிருந்த கடிதத்தை நீட்டினாள்.

“உள்ள வாங்க.” என்றவர் ஆஃபீஸ் போன்றிருந்த அந்தக் கட்டடத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். ஓர் அறையின் கதவின் முன்பாக இவளை நிறுத்தியவர்,

“கொஞ்சம் பொறுங்க.” என்றுவிட்டு உள்ளே சென்றார். இங்கே எல்லோரும் தமிழ்தான் பேசினார்கள். சிங்களமும் இவளுக்குச் சரளமாக வரும் என்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. கதவிலிருந்த பெயர்ப்பலகை உள்ளே இருப்பவர் ‘முரளி மனோகர்’ என்றது. மாதவன் சொன்ன முரளி மாமா இவர்தானா?!

“உள்ளே போங்க.” இவளுக்கு அனுமதி வழங்கிவிட்டு அந்த மனிதர் போய்விட்டார். படபடக்கும் நெஞ்சோடுதான் உள்ளே சென்றாள் இளையவள்.

“குட் மார்னிங் சார்.” இவள் குரல் சன்னமாக வந்தது. முக்கியமான கோப்பு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார் போலும். தலையை மட்டும் ஆட்டியவர் நாற்காலியைக் காட்டினார். பெண் உட்கார்ந்து கொண்டாள். சிறிதுநேரம் அந்த அறையிலிருந்த மின் விசிறியும் மணிக்கூடும் மாத்திரமே பேசின. மனிதர் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவாக இருந்தார். கடகடவென எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

“பெயர் சுமித்ரா, இன்னைக்குத்தான் புதுசா வேலையில சேர்றீங்கல்லை?”

“ஆமா சார்.”

“இதுக்கு முன்னாடி எங்கேயும் வேலை பார்த்த அனுபவம் இல்லையில்லை?”

“இல்லை சார்.” பவ்வியமாகச் சொன்னவளிடம் அவளின் கலாசாலை விபரங்கள் பற்றிக் கேட்டார். பல விரிவுரையாளர்களை அவருக்குத் தெரிந்திருந்தது.

“உங்களைப் போல நிறையப் பேர் இந்த வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தாங்க, ஆனா நான் உங்களைத் தெரிவு செய்யக் காரணம் உங்களுக்கு இந்த வேலை மேல இருக்கிற ஈடுபாடுதான், ஒரு விஷயத்தைப் பண்ணும்போது அந்த விஷயத்துமேல ஆசை, பற்று இதெல்லாம் இருக்கணும், வந்தமா வேலையைப் பார்த்தமா சம்பளத்தை வாங்கி பாக்கெட்ல போட்டமான்னு போற ஆளுங்க எனக்குத் தேவையில்லை, நான் உங்கக்கிட்ட இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன் யங் லேடி.” என்றவர் அங்கிருந்த மணியைத் தட்ட மீண்டும் அந்த மனிதர் ஓடிவந்தார்.

“சதீஷ், இவங்களுக்கு இங்க எல்லாத்தையும் சுத்திக் காமிங்க, எங்க, என்ன நடக்குதுன்னு இன்னைக்குப் பார்க்கட்டும், நாளைக்கு வேலையை ஸ்டார்ட் பண்ணட்டும்.”

“சரிங்க சார்.” என்றவர் இவளை அழைத்துக் கொண்டு போய்விட்டார். அவர்கள் தலை மறைந்ததும்,

“வெற்றி! மாதவனோட கல்யாண விஷயம் எந்தளவுல இருக்கு?” என்று வெற்றிவேலை அலைபேசியில் அழைத்துக் கேட்டார் மனிதர்.

“பொண்ணு வீட்டுக்காரங்க வந்து போனாங்க முரளி, அனேகமா இந்த இடம் சரிவரும்.”

“சீக்கிரமா கல்யாணச் சாப்பாடு போடு, நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் காத்துக்கிட்டு இருக்கிறது!”

“மாதவன் யாருக்கோ வேலை ஒன்னு கேட்டானில்லை? அது என்னாச்சு?” மகன் யாருக்காக வேலை கேட்டான் என்று அப்பாவுக்குத் தெரியாது. தன்னிடம் எதற்கும் வந்து நிற்காத மகன் உதவி கோட்கவும் சட்டென்று கை காட்டிவிட்டார். ஆனால் முரளி மாமா சுதாரித்துக் கொண்டார். ஏனென்றால் புடவையில் புதிதாகப் பூத்த பூப்போல வந்து நின்ற அந்தப் பெண் சுமித்ரா!

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ கல்யாண வேலையைக் கவனி, தள்ளிப் போடாதே.” என்றவர் மதியம் போல சுமித்ராவைக் கண்காணித்தார். சிறிதே ஓய்வு கிடைத்துவிட்டால் அலைபேசியை நோண்டும் இன்றைய இளைய சமுதாயத்தை அவருக்குப் பிடிக்காது. இன்றைக்கு முழுவதும் அவளுக்கு ஓய்வுதான் வழங்கப்பட்டிருந்தது.‌ ஆனாலும் அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமராமல் ஏதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

“சதீஷ், சுமித்ரா இன்னைக்கு என்னப் பண்ணினாங்க?” மாலை எல்லோரும் வீட்டிற்குச் சென்ற பிற்பாடு விசாரணை ஆரம்பித்தது.

“ஃபீல்ட் வொர்க் இங்க எப்பிடிப் பண்ணுவாங்கன்னு முருகேசன் சார்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க, அவருதான் இவங்களோட பக்கத்து வீடு போல இருக்கு. லேப்பை போய் பார்த்தாங்க, அங்க ஏற்கனவே இருக்கிற சாம்பிள் எல்லாம் பார்த்து குறிப்பெடுத்தாங்க சார்.”

“ம்… பழக எப்பிடி இருக்காங்க?”

“நல்லவங்க மாதிரித்தான் தெரியுறாங்க, சிரிச்ச முகம், வேலையில நல்ல ஆர்வம் இருக்கு, வசதியான குடும்பம் மாதிரி தெரியலை சார்.”

“ம்….” அதனால்தான் மாதவன் இத்தனை அக்கறை எடுத்தானா? தங்குவதற்கு ஏதாவது வசதி செய்து கொடுங்கள் என்று கேட்டதன் அர்த்தம் அந்தப் பெண்ணின் பொருளாதார நிலைமையா? இல்லாவிட்டால் அவள்மேல் கொண்ட அக்கறையா?! அதேநேரம் செல்லம்மாவும் மகனிடம் சுமித்ராவின் புகழைத்தான் பாடிக்கொண்டிருந்தார். அன்று மகள் ரேவதியும் வீடு வந்திருந்தாள்.

“அன்னைக்கு விருந்தாளிங்க வந்திருந்ததுல நான் சுமித்ராவைக் கவனிக்கலை மாதவா, பாவம், அவ்வளவு உதவி பண்ணிட்டு எதுவும் சாப்பிடாம போயிட்டா.”

“ம்…” அந்த வீட்டில் வேலை செய்பவர்களைப் போல சுமித்ராவையும் அம்மா பேசியது மாதவனுக்குப் பிடிக்கவில்லை.

“அது யாரும்மா சுமித்ரா?”

“பக்கத்து எஸ்டேட்டுல வேலை பார்க்கிறவங்களோட பொண்ணு, ரொம்ப நல்ல மாதிரி.”

“ஓ… வேலை பார்க்கிறவங்களோட பொண்ணா?”

“அக்கா, வேலை பார்க்கிறவங்களோட பொண்ணுன்னு ரொம்ப சாதாரணமா நினைக்க வேணாம், மூத்த பொண்ணு எதையாவது சாதிக்கணுங்கிற லட்சியத்தோட ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணி வேலைக்குப் போயிருக்கு, ரெண்டாவது பொண்ணு கண்டிப்பா நல்ல ரேங்க் வாங்கி இந்த முறை மெடிசின் போகும்.”

“ஓ…” ரேவதியின் பார்வை அம்மாவைச் சட்டென்று நோக்கியது. செல்லம்மாவிற்கும் மகனது பேச்சு சற்றுத் திகைப்பைக் கொடுத்தாலும் ரேவதியைப் போல சந்தேகப்படவில்லை.

“ரெண்டு பொண்ணுங்களுமே ரொம்ப நல்ல மாதிரிம்மா, சின்னவ மனசுல எதையும் வெச்சுக்காம படபடன்னு பேசிடுவா, பெரியவ கொஞ்சம் அழுத்தக்காரின்னு நினைச்சேன், ஆனா அந்தப் பொண்ணும் அப்பிடியில்லை, நல்லா பேசுறா.”

“அதை விடுங்கம்மா, மாதவனோட கல்யாணப் பேச்சு எந்தளவுல இருக்கு? அம்மாவும் மகனும் என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”

“நான் என்னத்தை முடிவு பண்ணுறது ரேவதி? மாதவன்தான் பதில் சொல்லணும், கட்டிக்கப்போறது அவன்தானே?”

“என்ன மாதவா? நீ என்ன முடிவு பண்ணியிருக்கே?”

“அக்கா, அப்ப சொன்னதைத்தான் இப்பவும் நான் சொல்றேன், என்னை எதுக்கும் அவசரப்படுத்த வேணாம், இது என்னோட வாழ்க்கை, அவசரத்துல முடிவெடுத்துட்டு அவகாசத்துல யோசிக்கிற விஷயமில்லை.”

“வர்ஷாவை நீ மறுக்கிறதுக்கு எந்தக் காரணமும் இல்லையே!”

“உங்களுக்கு இல்லாம இருக்கலாம்.” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.

“என்னம்மா இவன் இப்பிடிப் பேசுறான்?!” மகளின் கேள்வியில் அம்மாக்கும் கவலைத் தொற்றிக் கொண்டது.

“கண்ட கண்ட பொண்ணுங்களைப் பத்திப் பேசுறதை விட்டுட்டு உங்க மகனுக்கு நல்ல புத்தி சொல்லுங்க.” என்ற மகளும் கோபமாகக் கிளம்பிவிட்டாள்.

மாதவன் தனது அறையில் அமைதியாக நின்றிருந்தான். மனம் குழம்பிய குட்டை போல கிடந்தது. அன்றைய திருமணத்தில் அவளைப் பார்த்துப் பேசியது முதல் அவன் மனம் அலைபாய்ந்தபடியே கிடக்கிறது. ரேவதி சொல்வது போல வர்ஷாவை மறுக்க அவனிடம் எந்தக் காரணமும் இல்லை. ஆனாலும் அவள்மேல் ஓர் ஈர்ப்பு வர மறுக்கிறது.

எதற்காக நேற்று அந்தப் பெண்ணை அழைத்து அப்படியொரு கேள்வி கேட்டோம் என்று அவனுக்கு இந்த நொடிவரை புரியவில்லை. என்ன மாதிரியான கேள்வி அது?! தன் நெருங்கிய நட்புகளிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏன்? சுமதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில் கூட தவறில்லை. ஏனென்றால் அந்தச் சின்னப் பெண் இவனோடு சகஜமாகப் பேசும், பழகும். ஆனால் சுமித்ரா அப்படியல்ல.

“சுமித்ரா!” அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே அவனுக்குள் ஒரு பரவசம் உருவானது. அத்தனை சுலபத்தில் பேசுபவள் அல்ல அவள். தன்னம்பிக்கையும் லட்சியமும் கொண்ட அந்தப் பெண்ணிடம் அவனுக்குப் பிடித்துப் போக நிறையக் காரணங்கள் இருந்தன.

ஒரு பெண்ணுக்கு அழகு முக்கியம் என்று பலரும் சொல்ல அவன் கேள்விப்பட்டதுண்டு. இந்தப் பெண்ணிடம் அழகையும் தாண்டி ஓர் நிமிர்வு இருக்கிறது. சாதிக்க ஆசைப்படும் அவள் தைரியம் பிடித்திருந்தது. படித்து முடித்த கையோடு ஒரு திருமணத்தை செய்துகொண்டு குழந்தைகளோடு மாரடிக்கும் பெண்களால் என்ன பிரயோஜனம்?! ரேவதியிடமும் இதைத்தான் அடிக்கடி சொல்வான்.

“அக்கா, கல்யாணம் பண்ணிக் கொழந்தையும் பொறந்துட்டதால இனி வாழ்க்கையில சாதிக்க எதுவுமே இல்லைன்னு முடிவு பண்ணிட வேணாம், படிச்ச படிப்புக்கு ஏதாவது பண்ணலாம்கா, நம்ம ஃபேக்டரியிலேயே எதாவது வேலை செய்யலாமே?” இதுதான் மாதவன். வெளிநாடுகளில் பலதரப்பட்ட பெண்களையும் பார்த்ததால் இப்படிப் பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது அவனுக்குப் பிடிக்காது.

தனக்கென ஒரு லட்சியத்தை உருவாக்கி, அதற்கான பாதையைக் கண்டுபிடித்து, அதற்காக உழைத்த சுமித்ராவை அவனுக்கு நிறையவே பிடித்தது. அவளின் அழகையும் தாண்டி எதுவோ ஒன்று அவனை அவள் பக்கமாக இழுத்தது. இந்த ஈர்ப்பு சரியா, தவறா என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் தன்னைவிட இந்த ஈர்ப்பினால் அந்தப் பெண் பயங்கரமாகப் பாதிப்படைவாள் என்று உள்மனது அடித்துச் சொன்னது. சிந்திக்கவும் திராணியற்று நின்றிருந்தான் மாதவன்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 06

அத்தியாயம் 06அன்று வெள்ளிக்கிழமை. சுமித்ரா தலைக்குக் குளித்திருந்தாள். எப்போதும் வீட்டில் அம்மா தலைக்கு ஊற்றுவதென்றால் வெந்நீர் வைத்துக் கொடுப்பார். தலவாக்கலை இவர்கள் ஊரைவிட இன்னும் குளிராக இருந்தது.‌ ஆனாலும் பெண் குளிர்நீரைத் தலைக்கு ஊற்றியிருந்தாள்.கூந்தலைத் தளர்வாகப் பின்னியவள் புடவையை உடுத்திக் கொண்டாள்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →