அத்தியாயம் 07
அத்தியாயம் 07
அந்த ப்ளாக் ஆடிக்குள் இப்போது அசாத்திய அமைதி நிலவியது. இரண்டு பேரும் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். இருவருக்குள்ளும் ஆசைகளும் கனவுகளும் இருந்தன. ஆனால்… மாதவன் அதை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தான். பெண்ணின் நிலை அப்படியல்ல! அவள் சூழ்நிலைக் கைதி!
“ஏதாவது பேசு சுமித்ரா.”
“…” அவள் எதுவும் பேசவில்லை. மௌனத்தையே கடைப்பிடித்தாள். அவள் மனநிலை என்னவென்று மாதவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவள் மனதிலும் ஆசை இருக்கிறது. ஆனால் அதைக் காட்ட மறுக்கிறாள். அவள் குடும்பம், அவர்களின் பொருளாதார நிலை என அவன் கவலைப்படாத விஷயங்களை நினைத்துக் கவலைப்படுகிறாள்.
“நேரமாகுது, வீட்டுக்குப் போகலாமா?” அதற்குமேல் மாதவனும் எதுவும் பேசவில்லை. காரை ஸ்டார்ட் செய்தவன் அவள் வீட்டிற்குச் சற்று அப்பால் நிறுத்தினான்.
“நீ எதுவும் சொல்லப் போறதில்லையா சுமித்ரா?”
“நான் சொல்ல என்ன சார் இருக்கு? இது… நடக்காது.” அவள் பதிலில் அவனுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டான்.
“சரி, நீ சொல்ற மாதிரியே இது நடக்காதுன்னு வெச்சுக்குவோம், ஒருவேளை எங்க வீட்டுல இதுக்குச் சம்மதம்னு சொல்லிட்டாங்கன்னா நீ என்ன பண்ணுவே? அப்போ உன்னோட பதில் என்னவா இருக்கும்?” இப்போது ஆச்சரிய மிகுதியில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண். இவன் கனவேதும் காண்கிறானா?! மனது நினைத்ததை அந்தக் கண்கள் அப்பட்டமாக அவனுக்குச் சொல்லின.
“சரி, பார்க்கலாம் விடு.” என்றவன் அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்பிவிட்டான். அந்த ப்ளாக் ஆடி நேராக முரளி மனோகரின் வீட்டிற்குத்தான் சென்றது.
“வா மாதவா.” மனிதர் வாசல்வரை வந்து வரவேற்றார்.
“வீட்டுல யாருமில்லையா மாமா?”
“இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா? எல்லாரும் வெளியே போயிருக்காங்க, நான் மட்டுந்தான் இருக்கேன், நீ வா.” என்றவர் உள்ளே அழைத்துச் சென்று தேநீர் வழங்கினார்.
“இன்னைக்குக் காலைலதான் வந்தியா? உன்னோட காரை பார்த்தேன்.”
“ஆமா மாமா.”
“என்ன பண்ணப் போறே? உங்கப்பா இதுக்குச் சம்மதிப்பான்னு நீ நினைக்கிறியா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் மனிதர்.
“உன்னோட தம்பிதான் சொன்ன பேச்சுக் கேட்கமாட்டான், ஆனா என்னோட மாதவன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்னு உங்கம்மா பெருமையா சொல்லுவாங்களே, அவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறே நீ?”
“நான் எதுவும் திட்டம்போட்டுப் பண்ணலை மாமா.”
“அது எனக்குப் புரியுது, உன்னோட வீடு புரிஞ்சுக்குமா? முதல்ல சுமித்ரா என்ன சொல்றா?” இப்போது மாதவன் பெருமூச்சு விட்டான். இந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
“புரியுது, இன்னைக்கு முழுக்க அந்தப் பொண்ணோட முகம் சரியா இல்லை, உடம்புக்கு முடியலைன்னு ஆஃபீஸ் நம்பிடுச்சு, ஆனா அதை நான் நம்பலை, நீ நிறையவே போராட வேண்டியிருக்கும்பா, எதுக்கும் இன்னொரு தடவை யோசனைப் பண்ணு.”
“மாமா மனசுக்குப் புடிச்ச விஷயத்தை என்னால விட்டுக்குடுக்க முடியாது.”
“உன்னோட வயசை நானும் கடந்துதான் வந்திருக்கேன், நம்மளால இழக்கவே முடியாதுன்னு இந்த நிமிஷம் நினைக்கிற பல விஷயங்கள் பத்து வருஷத்துக்கு அப்புறமா நம்ம நினைப்புலயே இருக்காதுடா, வாழ்க்கை முழுதும் ஒரு போராட்டத்துலயே கழிஞ்சிடும், நல்லா யோசிச்சுக்கோ.”
அன்று இரவே மாதவன் தங்கள் ஊருக்கு வந்துவிட்டான். வீட்டிற்கு வந்தபோது மணி பத்தாகிவிட்டது. வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டுத்தான் தலவாக்கலை சென்றிருந்தான். போகும்போது இருந்த உற்சாகம் இப்போது முழுதாக வடிந்து போயிருந்தது.
“மாதவா…”
“என்னம்மா?” மனம் முழுக்கச் சோர்வோடு படுத்திருந்தவன் அம்மாவின் அழைப்பில் கண்களைத் திறந்தான்.
“வர்ஷா வீட்டுல இருந்து இன்னைக்கும் கால் பண்ணியிருந்தாங்க.” இப்போது மகன் எழுந்து அமர்ந்து தனக்குப் பக்கத்தில் கை காட்டவும் செல்லம்மா வந்து அமர்ந்து கொண்டார்.
“வர்ஷா விஷயத்துல சட்டுன்னு சம்மதம் சொல்ல முடியலைம்மா, மனசுக்கு என்னமோ புடிக்கலை.”
“ஓ… வேற யாரையாவது புடிச்சிருக்கா மாதவா?”
“வேணாம்மா, இப்போதைக்கு எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க, ப்ளீஸ்.” அதற்குமேல் அம்மா எதுவும் பேசவில்லை. என்ன நினைத்தாரோ, மகனின் தலையைத் தடவிக் கொடுத்தவர் கதவை மூடிக்கொண்டு போய்விட்டார்.
சரியாக அந்நேரம் அவன் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அவள்தான் அனுப்பியிருந்தாள். பத்திரமாக ஊர் வந்துவிட்டதைத் தெரிவித்தவன் கசப்பாகப் புன்னகைத்தான். உடல், மனம் இரண்டும் சோர்ந்து போக அப்படியே கண்ணயர்ந்துவிட்டான் மாதவன்.
***
ஒருமாதம் கடந்திருந்தது. அன்றைக்கு உயர்தர பரீட்சை முடிவுகள் வர இருந்தன. தங்களின் பெறுபேறுகளை எதிர்பார்த்த வண்ணம் மாணவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். மதியத்திற்கு மேல்தான் ஆன்லைனில் முடிவுகளைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிடுவாத முன்பே அறிவிப்பு வந்திருந்தது.
“சுமி! சுமதிக்கு நல்ல ரிசல்ட் வருமில்லை?” சுமித்ராவும் அப்போது வீட்டிற்கு வந்திருந்தாள். அன்று வெள்ளிக்கிழமை. அடுத்து வார இறுதி என்பதால் மூன்று நாட்களையும் குடும்பத்தோடு செலவழிப்பதாக ஏற்பாடு.
“அவளுக்கென்னம்மா? அவ நல்லா பண்ணியிருக்கா, நல்ல ரிசல்ட்தான் வரும்.” என்றவளும் அன்று உற்சாகமாகத்தான் காணப்பட்டாள். கடந்து ஒரு மாதத்தில் அவளது குடும்பம் தலவாக்கலைக்கு இரண்டு முறை வந்திருந்தது. முதல் சம்பளம் வாங்கிய கையோடு சமையலுக்குத் தேவையான வசதிகளை மகளுக்குச் செய்து கொடுத்தார் மணிமேகலை.
“உனக்கு இங்க நிறைய செலவு இருக்கு, இந்தமாத சம்பளத்தை நீயே வெச்சுக்கோம்மா.” பணத்தைத் தன்னிடம் நீட்டிய மகளிடம் அப்பா சொன்ன வார்த்தைகள் இவை. சுமித்ராவின் வாழ்க்கை ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது. தலவாக்கலை வாழ்க்கைக்கு அவள் பழக்கப்பட்டிருந்தாள். அம்பிகாவின் குடும்பம் மிகவும் உதவியாகவும் நெருக்கமாகவும் ஆகிப்போனார்கள்.
அன்றைக்குப் பார்த்த மாதவன்தான். அதன்பிறகு அவனை அவள் பார்க்கவில்லை. குறுஞ்செய்திக்குப் பதில் சொன்னவன் அதன்பிறகு அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. இவளாக அழைக்கவும் தைரியம் இல்லாததால் பெண் வாளாவிருந்தாள். இவள் பயந்தது போல ஆஃபீஸிலும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. முரளி மனோகரை காண்பதற்கு இவளுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
“அம்மா!” சுமதி போட்ட சத்தத்தில் அந்த வீடே அதிர்ந்தது.
“அக்கா! எனக்கு மெடிசின் கிடைச்சிருச்சு! அப்பாக்கு கால் போடுங்க!” இணையத்தில் தன் பெறுபேறுகளைத் தெரிந்துகொண்ட பெண் கூப்பாடு போட்டது.
“ஆண்டவா!” மணிமேகலை அழவே ஆரம்பித்துவிட்டார். கட்டாயம் தங்கை மருத்துவத்திற்குத் தெரிவு செய்யப்படுவாள் என்று தெரிந்ததால் சுமித்ரா அமைதியாக அப்பாவை அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.
“ஐலன்ட் ரேங்க் என்ன சுமிம்மா?”
“எட்டுப்பா.”
“சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்! ஆண்டவன் என்னைக் கை விடலை.” ராஜசேகரின் கண்ணீர் குரல் இது.
“அக்கா! வா பெரிய வீட்டுக்குப் போய் வரலாம், உங்கிட்டப் பணம் இருக்கில்லை? இன்னைக்கு நல்லதா ஸ்வீட் வாங்கிட்டுப் போகலாம்.”
“பெரிய வீட்டுக்கு எதுக்கு சுமதி?” பெரியவள் தடுமாறினாள்.
“என்னக்கா பேசுறே? மாதவன் சாருக்கு விஷயத்தைச் சொல்ல வேணாமா? எனக்கு எவ்வளவு உதவி பண்ணியிருக்காங்க?”
“அது சரிதான், நீ அப்பா வந்ததும் அங்க போகலாமே? நான் எதுக்கு?”
“என்னக்கா என்னோட அவசரம் புரியாம நீ பேசுறே! அப்பா வரும்வரைக்கும் என்னால காத்துக்கிட்டு இருக்க முடியாது, நீ வா எங்கூட.”
“அதான் சுமதி கூப்பிடுறா இல்லை, போயிட்டு வாயேன் சுமி.” அம்மாவும் வற்புறுத்தவும் அதற்குமேல் சுமித்ராவால் மறுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். போகும் வழியில் ஸ்வீட் வாங்கிக் கொண்டார்கள்.
“வாங்கம்மா! வாங்க வாங்க!” பெரியவீட்டு கூர்க்காவின் வரவேற்பே பலமாக இருந்தது.
“தாத்தா! என்னோட ரிசல்ட் தெரியுமா?”
“தெரியும் சுமதிக்கண்ணு! பெரிய தம்பி சொன்னாங்க, ரொம்ப நல்லா பாஸ் பண்ணியிருக்கீங்கன்னு சொன்னாங்க.”
“மாதவன் சார் வீட்டுல இருக்காங்களா?”
“கார் இருக்கு சுமதி.” கூர்க்காவை முந்திக்கொண்டு பதில் சொன்னாள் அக்கா. அதற்குமேல் சுமதி தாமதிக்கவில்லை. கடகடவென வீட்டின் முன்னால் சென்று நின்றவள்,
“மாதவன் சார்!” என்றாள் சத்தமாக. அவள் குரலுக்காகவே காத்திருந்தவன் போல மாதவனும் சட்டென்று வெளியே வந்தான்.
“சார்! என்னோட ரேங்க் பார்த்தீங்களா?” சின்னவளின் ஆர்ப்பரிப்பில் அவனும் பொங்கிச் சிரித்தான். ஏதோ தன் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்றை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது போலவிருந்தது அந்தச் சிரிப்பு.
“வாங்க டாக்டர் மேடம்! உங்களுக்காகத்தான் எங்கேயும் வெளியே போகாம காத்துக்கிட்டு இருக்கேன், அம்மா!” அவன் உள்நோக்கிக் குரல் கொடுத்ததும் செல்லம்மாவும் வெளியே வந்தார். அவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
“அடடே சுமதி! சொன்ன மாதிரி ரொம்ப நல்லா பாஸ் பண்ணியிருக்கேம்மா! எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா!”
“இதெல்லாம் மாதவன் சார் இல்லைன்னா நடந்திருக்காதும்மா.”
“அடப்போம்மா நீ வேற! கஷ்டப்பட்டுப் படிச்சது நீங்க, இதுல நான் எங்க வந்தேன்?”
“முதல்ல ஸ்வீட் எடுங்க சார்.” என்றவள் இதுவரை அமைதியாக நின்றிருந்த சுமித்ராவின் கையிலிருந்த இனிப்பை வாங்கிக் கொடுத்தாள். அதை வாங்கி ருசித்தவன்,
“இதோ வந்தர்றேன் சுமதி, கொஞ்சம் வெயிட் பண்ணு.” என்றுவிட்டு உள்ளே போனான். அவன் திரும்பி வரும்போது கையில் சின்னதாக ஒரு பெட்டி இருந்தது.
“போன வாரமே எங்க டாக்டருக்கு இதை நான் வாங்கி வெச்சுட்டேன், இந்தா சுமதி.” என்று நீட்டினான்.
“என்ன சார் இது?”
“பிரிச்சுப் பாரு.” உள்ளே அழகானதொரு தங்க நிற கைக்கடிகாரம் இருந்தது.
“யூனி போகும்போது இதை நீ கட்டிக்கிட்டுப் போகணும்.”
“கண்டிப்பா சார், ரொம்ப தேங்க்ஸ்.”
“எவ்வளவு நேரம் வாசல்லயே நின்னு பேசப்போறீங்க? உள்ள வாங்கம்மா, உள்ள வா சுமித்ரா.”
“அவங்க நம்ம வீட்டுக்குள்ள எல்லாம் வரமாட்டாங்கம்மா.” பட்டென்று மகன் சொல்லவும் செல்லம்மா மகனைத் திரும்பிப் பார்த்தார். தன் ஆனந்த உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சுமதி இந்தப் பேச்சைக் கவனிக்கவில்லை. பேச்சு ஆபத்தான திசையை நோக்கிப் போகவும் சுமித்ரா அவசரமாக அந்த இடத்தைவிட்டு அகல முயன்றாள்.
“கிளம்பலாமா சுமதி?”
“சரிக்கா.” என்றவள் மாதவனிடமும் செல்லம்மாவிடமும் சொல்லிக்கொண்டு சைக்கிளை நோக்கிப் போய்விட்டாள். விடைபெற்ற பெண்களைப் பார்த்துப் புன்னகைத்த செல்லம்மாவும் உள்ளே செல்லத் திரும்பினார்.
“இன்னைக்கு வெள்ளிக்கிழமை, பச்சைத் தண்ணியைத் தலைக்கு ஊத்தலையா?” யாரும் பக்கத்தில் இல்லை என்ற தெம்பில் மாதவன் வார்த்தைகளைச் சிதறவிட்டான். அந்த வார்த்தைகள் கொடுத்த திகைப்பை மறைத்துக்கொண்டு பெண் அப்பால் போய்விட்டாள். ஆனால் செல்லம்மா ஸ்தம்பித்துப் போய்விட்டார்.
‘மாதவன் என்ன சொல்கிறான்?!’ அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதுவானாலும் அதைப்பேச இது சமயமல்ல என்று நினைத்தவர் உள்ளே போய்விட்டார். ஆனாலும் மகனின் வார்த்தைகள் அவர் தலைக்குள் வண்டுபோல குடைந்தன.
அடுத்தநாள் சனிக்கிழமை ஊரில் ஒரு கல்யாணம். நேற்று வந்த பரீட்சை முடிவுகள் பற்றித்தான் கல்யாண வீட்டிலும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சுமித்ரா வீட்டிற்கும் அழைப்பு வந்திருக்க எல்லோரும் கிளம்பி வந்திருந்தார்கள். பெரிய வீட்டின் சார்பாக மாதவனும் செல்லம்மாவும் வருகை தந்திருந்தார்கள்.
“என்ன ராஜசேகர்! பொண்ணு அட்டகாசமா பாஸ் பண்ணியிருக்கா போல! எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு.” பார்ப்பவர்கள் எல்லோரும் இப்படியே பேச ராஜசேகர் தம்பதியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“பெரிய பொண்ணும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா போல? தலவாக்கலையிலன்னு கேள்விப்பட்டோம், நிஜமா?” பேச்சு முழுவதும் இவர்கள் குடும்பத்தைப் பற்றியே இருந்தது.
“பொண்ணு வேலைக்கும் போயிட்டா, அடுத்ததா இனி அவ கல்யாணம்தான் போல?”
“எங்க வீட்டுலயும் பசங்க இருக்காங்க அண்ணா, அதையும் கொஞ்சம் மனசுல வெச்சுக்கோங்க.” சொந்தத்தில் ஒரு பெண்மணி சொல்லவும் மணிமேகலைக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் ராஜசேகர் பிடி கொடுக்கவில்லை. அமைதியாகப் புன்னகைத்தார்.
“என்னக்கா! விட்டா உனக்கு இங்கேயே மாப்பிள்ளைப் பார்த்திடுவாங்க போல!” இது சுமதி.
“அவங்களுக்கு வேற வேலை இல்லை, எனக்கெதுக்கு இப்போ கல்யாணம்? நான் கேட்டனா?”
“நீ கேட்டெல்லாம் பண்ணிக்குடுக்க மாட்டாங்க, ஏற்கனவே அம்மா இந்தப் பேச்சை வீட்டுல ஆரம்பிச்சுட்டாங்க, அப்பாதான் கொஞ்சம் நிதானமா இருக்காங்க, இவங்க இப்பிடி ஆளாளுக்குக் கேட்டா சீக்கிரமே நம்ம வீட்டுலயும் விசேஷந்தான்.” சுமதியின் பேச்சில் சுமித்ராவுக்குப் பக்கென்றது. இது என்ன புது குழப்பம்? ஏதேச்சையாக அவள் கண்கள் அப்போது மாதவனைப் பார்க்க அவனும் இவளைத்தான் பார்த்தபடி இருந்தான். அந்தப் பார்வையில் மட்டும் அத்தனை வெப்பம்!
“ஹாய் சுமித்ரா.” இவளின் எதிரே வந்து நின்றது நிமலன்.
“ஹாய் சீனியர், எப்பிடி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன், என்ன சுமதி, நல்லா படிக்கணுந்தான், அதுக்காக இப்பிடியா? புள்ளையா இல்லை மெஷினா நீ? இந்தப் படிப்பு படிச்சிருக்கே! வாழ்த்துகள்மா.” என்றவன் சின்னவளின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
“தேங்க் யூ அண்ணா.”
“இங்கப்பாரு, இதே மாதிரி யூனிக்குப் போயும் நல்லா படிக்கணும், ஆமா… எப்ப ஸ்டார்ட் பண்ணுவாங்க உங்க பேட்சசை?”
“கூடிய சீக்கிரமே ஆரம்பிக்கிறதாத்தான் சொல்றாங்க.” இளையவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளை யாரோ அழைக்கவும் அங்கே போய்விட்டாள்.
“அதுக்கப்புறம் சுமி, வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?”
“உங்களுக்கெப்பிடி தெரியும் சீனியர்?”
“அதெல்லாம் தெரியும், புது இடம், புது மனுஷங்க, கஷ்டமா இருக்கா?”
“ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு, ஆனா இப்போ பழகிடுச்சு, என்னை விடுங்க சீனியர், சுமதியை நினைச்சாத்தான் கவலையா இருக்கு, தனியா கொழும்புக்கு வந்து எப்பிடி சமாளிக்கப் போறான்னு தெரியலை.”
“ஹாஸ்டல் கிடைக்குமா?”
“சந்தேகந்தான், கிடைச்சா நல்லா இருக்கும், ஆனா கிடைக்குமான்னு தெரியலை.”
“கவலையை விடும்மா, அதான் நாங்கெல்லாம் இருக்கோமில்லை, பார்த்துக்கலாம்.”
“உங்க நம்பர் குடுக்குறீங்களா சீனியர், ஏதாவது அவசரம்னா உங்களைக் கூப்பிட வசதியா இருக்கும்.”
“கண்டிப்பா.” என்றவன் தனது அலைபேசி எண்ணை அவளோடு பகிர்ந்து கொண்டான். இதுவரை நேரமும் இவர்களது உரையாடல், சுமித்ராவின் முகபாவம் என அனைத்தையும் மாதவன் கவனிக்கத் தவறவில்லை. தன்னிடம் ஒரு வார்த்தைப் பேச அவ்வளவு தூரம் யோசிக்கும் பெண் நிமலனிடம் சகஜமாக பேசியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
“எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா?” தனிமையில் அவளிடம் எரிந்து வீழ்ந்தான்.
“சார்?!”
“அதானே! என்னைப் பார்த்தா உங்களுக்கு சார் மாதிரித்தான் தெரியும், எங்கிட்டப் பேசுறதுக்கு உங்களுக்கிட்ட ஒன்னுமே இல்லை, ஆனா நிமலன்கிட்ட மட்டும் அவ்வளவு ஈஸியா பேசுறீங்க? ரொம்ப சீரியஸா எதையோ டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தீங்க! என்னைத் தவிர உங்களுக்கு மத்தவங்க எல்லாருமே நல்லவங்க இல்லை மேடம், நான் மட்டுந்தான் தீண்டத்தகாதவனா?” சுமித்ராவின் கண்கள் இப்போது கலங்கிப் போயின. என்ன மாதிரியான வார்த்தைகள் இவை?!
“முதல்ல எம்முன்னாடி அழுறதை நிறுத்திடீ!”
“மாதவா!” வார்த்தைகளை அவன் கடித்துத் துப்ப, செல்லம்மாவின் குரல் எங்கிருந்தோ வந்தது. இப்போது இளையவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள்.
“என்ன தம்பி பேச்சு இது?! அதுவும் ஊரான் வீட்டுப் புள்ளையைப் பார்த்து!”
“அம்மா, உங்களுக்கு இங்க என்ன வேலை?”
“உன்னோட பேச்சு, பார்வை எதுவுமே சரியில்லை, நானும் உன்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன், சுமித்ரா, உங்களுக்குள்ள அப்பிடி என்னம்மா பிரச்சினை? எதுக்காக மாதவன் உங்கிட்ட இப்பிடி மரியாதை இல்லாம பேசுறான்?”
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லைம்மா, நான் போறேன்.”
“அதான் போயிட்டியே! இப்ப எதுக்குப் புதுசா போறேன்னு சொல்லிட்டுப் போறே?” மகனின் பேச்சில் இப்போது செல்லம்மா முழுதாகத் திகைத்துப் போனார்.
“மாதவா, நா கிளம்பலாம் வா.” என்றவர் மகனின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக காருக்கு அழைத்து வந்தார். இதற்கு மேலும் அங்கே நிற்பது சரியென்று படவில்லை. நல்லவேளையாக இப்போது நடந்தது எதுவும் யார் கண்ணிலும் படவில்லை. ஆனால் இந்த வாக்குவாதம் சுமதியின் காதில் விழுந்திருந்தது.
“சுமதி, அக்கா எங்க? கூட்டிட்டு வா நாம வீட்டுக்குப் போகலாம்.” அம்மா சொல்லவும் அக்காவைத் தேடிக்கொண்டு வந்த பெண்ணின் காதில் அனைத்தும் விழுந்திருந்தன. பேசுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று பெண் அமைதி காத்தாள். ஆனால் அன்றிரவு பேச்சை ஆரம்பித்தாள்.
“அக்கா, உனக்கும் மாதவன் சாருக்கும் என்னப் பிரச்சினை?” இவள் கேட்டதுதான் தாமதம். சுமித்ராவின் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை வடித்தன. சட்டென்று எழுந்து சென்ற சுமதி அறையின் கதவை மூடிவிட்டு வந்தாள்.
“அக்கா, என்னாச்சுக்கா? எங்கிட்டச் சொல்லமாட்டியா?” அதற்கு மேலும் எதையும் மறைக்காமல் தங்கையிடம் கொட்டிவிட்டாள் அக்கா.
“நிஜமாவா?! நம்ம மாதவன் சாரா?! என்னால நம்பவே முடியலை! அவங்க வீட்டுல பார்த்த பொண்ணு ஃபோட்டோவை எங்கிட்டக் காட்டி பொண்ணு எப்பிடி இருக்கான்னு கேட்டாங்களே? அவங்களுக்குப் பொண்ணைப் புடிச்சிருக்குன்னுதான் நான் நினைச்சேன்.”
“அந்தப் பொண்ணைப் புடிக்கலைன்னு சொன்னா வீட்டுல வேற பொண்ணைப் பார்க்கப் போறாங்க, ஆனா இது… இது நடக்கிற காரியமா சுமதி? இதுக்கு என்னால என்ன பதில் சொல்ல முடியும் சொல்லு?”
“அக்கா… நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதே, உனக்கு… மாதவன் சாரை…” சுமதி முழுதாக முடித்திருக்கவில்லை, சுமித்ரா வெடித்து அழுதாள். தங்கைக்கு, அக்காவின் மனது புரிந்து போனது.
“எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை சுமதி, எங்கிட்ட இதுக்குமேல எதுவும் கேட்காதே.”
“அழாதேக்கா, உனக்கு எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.”
“இது நடக்குமா சுமதி? நம்ம வீடு சம்மதம் சொன்னாலும் பெரிய வீட்டு ஆளுங்க இதுக்கு ஒத்துக்குவாங்களா? அவங்க நம்மளைப் பார்க்கிற பார்வை என்னன்னு உனக்குத் தெரியாதா? அந்தம்மா நம்ம மேல பாசமா இருக்காங்க, அதுக்காக என்னை அந்த வீட்டு மருமகளா ஏத்துக்குவாங்களா? இதையெல்லாம் அந்த மனுஷன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு.”
“அந்த வீட்டுல மாதவன் சாரும் அவங்க அம்மாவும் மட்டுந்தான் நம்மளையெல்லாம் மனுஷங்களா மதிக்கிறதே, மத்தவங்க யாரும் நின்னுகூட பேசமாட்டாங்க.”
“கல்யாணம் பண்ணுறதா இருந்தா எங்கேயாவது ஓடிப்போய்த்தான் பண்ணிக்கணும்.”
“இப்ப என்னதான் சொல்றாரு?”
“அவருக்குப் பதில் சொல்லட்டாம், இவ்வளவு பிரச்சினைகள் இருக்குன்னு சொன்னா அதை நான் பார்த்துக்கிறேன்னு சொல்றாரு.”
“ஓ…”
“பதில் சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் சுமதி? சொல்லிட்டு? அதுக்கப்புறம் உட்கார்ந்து அழுறதைத் தவிர என்னால வேற என்ன பண்ண முடியும் சொல்லு?”
“அக்கா… ஒருவேளை அவங்க வீட்டை அவரால சமாளிக்க முடியும்னு நினைக்கிறாரோ?” தன்னால் முடியும் என்று அப்போது நிரூபித்துக் கொண்டிருந்தான் மாதவன்.
“என்ன தம்பீ நடக்குது? உம் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே?” மகனிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார் செல்லம்மா. குரலிவ் அவ்வளவு ஆதங்கம். தன் மகனா இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்ற வருத்தம் அம்மாவின் முகத்தில் கொட்டிக் கிடந்தது.
“எனக்கு சுமித்ராவைப் புடிச்சிருக்கும்மா.” எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மகன் சொல்ல அப்படியே அங்கிருந்த கட்டிலில் தன்னை மறந்து அமர்ந்துவிட்டார் செல்லம்மா. இப்படியொரு வார்த்தையை சரண் சொல்லியிருந்தால் அவர் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார். ஏனென்றால் இதை ஏற்கனவே இளைய மகனிடம் அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் பெரிய மகன் இப்படியொரு வார்த்தையைச் சொல்வான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
“மாதவா, என்னடா பேச்சு இது? அவங்க எப்பிடி… நமக்கும் அவங்களுக்கும்…” அதற்குமேல் அம்மாவால் பேச முடியவில்லை.
“ஏம்மா? சுமித்ராக்கு என்ன குறை? அழகில்லையா? படிப்பில்லையா? நல்ல குணமில்லையா? அந்தப் பொண்ணைப் பத்தி உங்களால தப்பா ஒரு வார்த்தை சொல்லிட முடியுமா?”
“அது இல்லை மாதவா…”
“ஸ்டேட்டஸ் பார்க்கிறீங்களாம்மா?” ஒரு தினுசாக மகன் கேட்கவும் செல்லம்மாவின் வாய் அடைத்துப் போனது. வெளியே இல்லை என்று சொன்னாலும் உண்மை அதுதான்.
“மாதவா, நான் ஸ்டேட்டஸ் பார்க்கலைப்பா, ஆனா அந்தக் குடும்பத்துக்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, நீ வளர்ந்த விதம் வேற, நம்ம குடும்பத்துப் பழக்க வழக்கங்களை அனுசரிக்க சுமித்ரா கஷ்டப்படுவா.”
“இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமாவே படலைம்மா.”
“உன்னோட வயசு அப்பிடி, உம் மனசுல இப்போ ஆசை இருக்குப்பா, சுமித்ரா தரப்புல இருக்கிற குறைகள் உனக்குத் தெரியாது, ஆனா போகப்போக…”
“அம்மா, எனக்கு சுமித்ராவை ரொம்பப் புடிச்சிருக்கு, கல்யாணம்னு நான் ஒன்னு பண்ணிக்கிட்டா அது அவதான், அவ இல்லைன்னா வேற யாருமில்லை.” அம்மாவைப் பேசவிடாமல் மகன் உறுதியாகச் சொன்னான்.
“அப்பாவைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா தம்பி?”
“இதுல அப்பாவைப் பத்தி யோசிக்க என்னம்மா இருக்கு? கட்டிக்கப் போறது நான், எனக்கு சுமித்ராவைப் புடிச்சிருக்கு, இதுக்கு மேல என்ன வேணும்?” பல நாடுகள், பலதரப்பட்ட மனிதர்கள் என்று பார்த்திருந்த மாதவனுக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் செல்லம்மாவின் முகம் வீழ்ந்து போனது. மகனுக்கு எப்படி எடுத்துச்சொல்லிப் புரியவைப்பது என்று அவருக்கு விளங்கவில்லை. அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தார்.





