அத்தியாயம் 11
அத்தியாயம் 11
வீட்டிற்குள் புயல் போல வந்தவனை அப்போது அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் வீட்டு வரவேற்பறையில் திடீரென வந்து நின்ற மாதவனைப் பார்த்து சுமித்ராவே திடுக்கிட்டுப் போனாள். எண்ணற்ற கனவுகளோடு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தவன் கலவரமான குரல்கள் கேட்கவும் உஷாராகிவிட்டான். நிலைமை கை மீறிப்போவதை அவன் விரும்பவில்லை.
“மாதவா…” செல்லம்மாவின் கலங்கிய குரலில் அவரைப் பார்த்தவனின் பார்வை அடுத்ததாகத் தன் அக்காளைச் சுட்டது. இதுவரைத் தன் இஷ்டத்திற்குப் பேசிக்கொண்டிருந்த ரேவதியின் வாய்க்கு இப்போது பசைபோட்டு ஒட்டியது யாரென்று தெரியவில்லை!
“அம்மா, உங்களை இங்க என்ன பண்ணச்சொல்லி நான் அனுப்பினேன்? நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றவனின் பார்வை இப்போது சுமதியை நோக்கியது. தீர்க்கமான அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் அவளும் தலையைக் குனிந்து கொண்டாள்.
“மாதவா, முதல்ல இங்க வந்து உட்காரு.” இது மோகன்.
“இல்லை அத்தான், அங்க நிற்கிற சுமித்ரா எங்கிற பொண்ணை நான் கட்டிக்கப் போறேன், அதுல இஷ்டம் இருக்கிறவங்க இங்க இருக்கலாம், இல்லாதவங்க இப்பவே கிளம்பிப் போகலாம்.” இப்போது மோகன் அவசரமாக ராஜசேகரைப் பார்த்தார். இது அவர்கள் வீடு. மாதவன் அவர்களை எங்கே போகச் சொல்கிறான்?!
“அவங்களுக்கும் இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா தாரளமா சொல்லலாம், நான் சுமித்ராவை இப்பவே கூட்டிட்டுப் போறேன்.”
“தம்பி, நீங்க இங்க என்ன நடந்ததுன்னு தெரியாம பேசுறீங்க.” இது ராஜசேகர்.
“இங்க நடந்தது எல்லாத்தையும் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”
“அப்பிடிக் கேட்டிருந்தா எப்பிடி உங்களால இப்பிடிப் பேச முடியும்? எங்க பொண்ணுக்கு நாங்க பார்த்த மாப்பிள்ளையை மேற்கொண்டு பேசவிடாம பண்ணினது நீங்க, உங்க வீட்டுல வந்து எங்க பொண்ணு வாழணும்னு நாங்க என்னைக்கும் ஆசைப்படலை, அந்தத் தகுதி எங்களுக்குக் கொஞ்சமும் இல்லை, அதைப் பொண்ணு கேட்டு வந்தப்பவே நாங்க தெளிவாச் சொல்லிட்டோம், இப்ப நீங்க தேவையில்லாம எங்க தகுதியைப் பத்திப் பேசவேண்டிய அவசியமென்ன?”
“சித்தப்பா, ரேவதி பேசினதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.”
“ஐயையோ! இல்லை தம்பி, மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேச வேணாம், இது எம் பொண்ணோட வாழ்க்கைப்பா, விளையாட்டில்லை, இப்பிடி காலம் முழுக்க உங்களால மன்னிப்புக் கேட்டுக்கிட்டே இருக்க முடியுமா?”
“இப்ப முடிவா நீங்க என்ன சொல்றீங்க? உங்க பொண்ணை எனக்குக் கட்டிக்குடுக்க முடியுமா, முடியாதா?”
“வேணாம் தம்பி, இது சரிவராது, விட்டுருங்க.”
“அப்பிடியெல்லாம் விட முடியாதுங்க.” என்றவன் செல்லம்மாவின் கையிலிருந்த நகைப்பெட்டியை வாங்கினான். அதில் தன் மூத்த மருமகளுக்காகப் பத்துப் பவுனில் பெரிய ஆரம் செய்து கொண்டு வந்திருந்தார் பெரியவர். அதை எடுத்தவன் சுமித்ராவின் கழுத்தில் தானே அணிவித்தான்.
“எங்க வாழ்க்கையைத் தீர்மானிக்கிற அளவுக்கு எங்களுக்கு வயசும் இருக்கு, புத்தியும் இருக்கு, எனக்கு வரப்போறவளை எப்பிடி வெச்சு வாழணும்னு எனக்குத் தெரியும், அதைப்பத்தி நீங்க யாரும் கவலைப்படத் தேவையில்லை, கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டுச் சொல்லி அனுப்புறேன், வந்து சேருங்க.” என்றவன் வெளியே போய்விட்டான்.
மோகன் கையோடு தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர்கள் காருக்குச் சென்றுவிட்டார். பெண்களும் கலைந்து போக செல்லம்மா மணிமேகலையிடம் வந்தார். என்ன பேசுவதென்று தெரியாமல் அவரும் தவித்தபடிதான் நின்று கொண்டிருந்தார்.
“தேவையில்லாத வார்த்தைகள் வந்து வீழ்ந்திடுச்சு, தப்பு எங்க மேலதான், எங்களை மன்னிச்சிடுங்க.”
“ஐயையோ! என்னம்மா நீங்க! எதுக்கு இப்பிடிப் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?”
“இனிமேல் இப்பிடி நடக்காம நான் பார்த்துக்கிறேன், நீங்க பயப்பிடாம சுமித்ராவை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க.” என்றவர் சுமதியின் அருகில் வந்து அவள் தலையைத் தடவிக் கொடுத்தார்.
“சாரிம்மா.” என்றாள் சுமதி மெல்லிய குரலில்.
“உம்மேல எந்தத் தப்பும் இல்லை, ரேவதிதான் தப்பா பேசிட்டா, நீ எதையும் மனசுல வெச்சுக்காத, மாதவன் மேல இப்ப உனக்குக் கோபம் வர்றது நியாயந்தான், ஆனா எம் புள்ளை தப்பானவன் இல்லைம்மா.” என்றவர் இப்போது சுமித்ராவிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் இவள் கண்கள் கலங்கின.
“இனி அழக்கூடாது.” என்றவர் அவள் கண்களைத் துடைத்துவிட்டார். கழுத்துத் தாலி வெளியே தெரியாமல் மறைத்திருப்பாள் போலும். மாதவன் சற்றுமுன் அணிவித்த கனமான ஆரத்தோடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தாள்.
“ரொம்ப அழகா இருக்கேம்மா.” என்றவர் சட்டென்று அவர் கையிலிருந்த கனமான வளையல் ஒன்றைக் கழட்டி அவளுக்கு அணிவித்தார்.
“ஐயோ! இதல்லாம் எதுக்கும்மா?”
“அம்மா இல்லை, இனி அத்தைன்னு சொல்லணும், என்னோட மருமகளுக்குப் போட நான் நகை கொண்டு வந்தா எம் புள்ளை முந்திக்கிட்டான், அதுக்காக நான் சும்மா போக முடியுமா? அதுக்காகத்தான் இந்த வளையல், இந்தப் புடவைல அவ்வளவு அழகா இருக்கே.” என்று மீண்டும் சொன்னவர் அவள் நெற்றியில் முத்தம் வைத்தார்.
“நான் வர்றேன்.” என்று மருமகளிடம் சொல்லிக் கொண்டவர் ராஜசேகரைப் பார்த்துப் புன்னகைத்தார். முகம் இறுகி இருந்தாலும் பெரியவீட்டு மனிதர்களை எதிர்த்துப் பேசி அறியாததால் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்திருந்தார்.
“எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும், மாதவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான், சுமித்ரா சந்தோஷமா இருப்பா.” என்றவர் மணிமேகலையைப் பார்த்துத் தலையை அசைத்துவிட்டுப் போய்விட்டார். புயல் அடித்து ஓய்ந்ததைப் போலவிருந்தது அந்த வீடு. ஆனால் அதற்கு எதிர்மாற்றமாக இருந்தது மாதவனின் வீடு.
“பெரிய வீடுன்னு சொல்லிக்கிட்டா மட்டும் பத்தாது, அதுக்கு ஏத்தமாதிரி நடந்துக்கவும் தெரியணும்.” சொன்னது வேறு யாருமல்ல, சரண்.
“அப்பிடி என்னடா நான் தப்பா நடந்துக்கிட்டேன்?”
“இப்பிடி கேட்க உனக்கு வெட்கமா இல்லையாக்கா? நீயும் இந்த வீட்டுலதானே பொறந்தே? உன்னை நான் கவனிக்கலைன்னு நினைச்சியா? அந்த நிமிஷம் உன்னை என்னோட அக்கான்னு சொல்லிக்கிறதுக்கே வெட்கமா இருந்துச்சு!” சரண் மேலும் பேச அத்தனைப் பேரும் அமைதியாக இருந்தார்கள். ரேவதியின் முகம் சிறுமையில் கறுத்துப் போனது.
“சரியோ தப்போ, உன்னோட தம்பி அந்த வீட்டுப் பொண்ணு கழுத்துல தாலி கட்டியிருக்கான், யாரு என்ன சொன்னாலும் இனி அவதான் இந்த வீட்டோட மூத்த மருமகள், எதை மாத்துறதுக்காக அந்த வீட்டுல போய் அப்பிடிப் பேசினே? இல்லை, நம்ம தம்பி தாலி கட்டிட்டான், இனி நாம எது வேணும்னாலும் பேசலாம்னு பேசினியா? நீ என்ன வேணும்னாலும் பேச முடியாதுன்னு அந்தச் சின்னப் பொண்ணு காட்டிட்டால்லை?”
“சரண், போதும் விடு.”
“நீங்க சும்மா இருங்கம்மா! இதுக்கெல்லாம் காரணம் நீங்க குடுக்கிற இடந்தான், இந்த வீட்டோட ஒரேயொரு பொண்ணுன்னு செல்லம் குடுத்து அது இன்னைக்கு எங்க வந்து நிற்குதுன்னு பார்த்தீங்களா? சரியான நேரத்துக்கு உங்க மூத்த பையன் வரலைன்னா இந்தக் கல்யாணம் இன்னைக்குக் குலைஞ்சு போயிருக்கும், அந்த மனுஷன் இவ்வளவு பேச்சுக்கப்புறமும் உங்களுக்குப் பொண்ணு குடுத்திருப்பார்னு நினைக்கிறீங்களா?”
“அப்பிடி ஏதாவது நடந்திருந்தா நான் என்ன பண்ணியிருப்பேன்? ஆண்டவா!” செல்லம்மா கலங்கவும் மாதவன் வாயைத் திறந்தான்.
“அம்மா, அதான் எதுவும் தப்பா நடக்கலையே, அதுக்கப்புறமும் எதுக்காக வீணா வருத்தப்படுறீங்க, ஆக வேண்டியதைப் பாருங்க.”
“மாதவா, என்னை மன்னிச்சிடுப்பா.” தனிமையில் மோகன் பேசினார்.
“ஐயையோ! என்னத்தான் நீங்க?”
“இல்லைப்பா, நீ வந்ததுக்கு அப்புறமும் எனக்கு நம்பிக்கை வரலை, ரேவதி நடந்துக்கிட்ட முறை ரொம்பத் தப்பு, எல்லாரும் எந்திரிச்சு வெளியே போங்கன்னு அந்த மனுஷன் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நம்மளால என்ன பண்ணியிருக்க முடியும் சொல்லு?”
“எந்திரிச்சு வரும்போது அவரோட பொண்ணையும் கையோட கூட்டிக்கிட்டு நான் வந்திருப்பேன், அவ்வளவுதான் அத்தான்.” சுலபமாகச் சொன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தவர் தன் அலைபேசியை எடுத்துக் காட்டினார்.
“சரண்கிட்ட சொல்லி எடுக்கச் சொன்னேன், இதெல்லாம் வாழ்க்கையில ஒருதரம்தான் வரும்பா.” குங்கும நிறப்புடவையில் சுமித்ரா அத்தனை அழகாக இருந்தாள். அந்தப் புகைப்படத்தை அப்படியே தனது அலைபேசிக்கு மாற்றிக் கொண்டவன் அத்தானை இறுக அணைத்தான்.
“அடப்போடா! நாங்களும் இதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கோம், அதுசரி, சரியான நேரத்துக்கு நீ எப்பிடி அங்க வந்து சேர்ந்தே?”
“சுமித்ராக்கு கால் பண்ணியிருந்தேன், அப்பதான் அக்காவோட குரல் பலமா கேட்டுச்சு, என்னமோ நடக்கப்போகுதுன்னு மனசு சொல்லிச்சு, சட்டுன்னு கிளம்பி வந்துட்டேன்.”
“ரேவதி ஏன் இப்பிடிப் பண்ணுறான்னு எனக்குப் புரியலை மாதவா, அத்தனைப் பேரு முன்னாடி கண்டிச்சா நல்லாவா இருக்கும், நல்லவேளை நீ வந்துட்டே, இப்பவும் உன்னோட மாமனார் வீடு என்ன முடிவெடுக்கும்னு என்னால திட்டமா சொல்ல முடியலை.” மோகன் கவலைப்பட்டது உண்மை என்பதுபோலத்தான் அப்போது ராஜசேகர் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.
“இதுல யோசிக்க எதுவுமில்லைங்க, எனக்கென்னவோ அந்த மாப்பிள்ளைத் தம்பி நம்ம சுமியை நல்லா வெச்சுக்குவார்னுதான் தோணுது.”
“மணி, மாப்பிள்ளை மட்டும் சரியா இருந்தா போதுமா? எனக்கு என்னமோ எதுவும் சரியா படலைம்மா, இவ்வளவு ஆட்கள் கூடியிருக்கும் போதே நம்ம வீட்டுல உட்கார்ந்துக்கிட்டு அந்தப் பொண்ணு அவ்வளவு பேசுது! இதுவே அவங்க வீடா இருந்தா என்னாகிறது?”
“அந்த வீட்டுல அந்தப் பொண்ணு மட்டுந்தான் இருக்காளா? மாப்பிள்ளையோட அம்மா இருக்காங்க, தம்பி இருக்காரு, அதோட இந்தக் கல்யாணத்தைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பொண்ணோட மனநிலை என்னன்னு மாப்பிள்ளைக்கு இப்போ தெளிவா தெரிஞ்சு போச்சு, இனி அவரு இன்னும் கவனமா நடப்பாரு.”
“ஆனாலும் மனசு கேட்கலை மணி.”
“ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு நிம்மதியா இருங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றவர் உறங்கப் போய்விட்டார். தங்கள் அறைக்குள் இருந்த பெண்கள் இருவரும் இன்னும் உறங்கியிருக்கவில்லை. ஆனாலும் எதுவும் பேசாமல் அவரவர் படுக்கையில் சாய்ந்திருந்தார்கள். காலம் அவர்களுக்கு என்ன வைத்துக் காத்திருக்கிறது என்று புரியவேயில்லை!
திங்கட்கிழமை வேலைக்குப் போக வேண்டும். எப்போதும் திங்கள் காலையில்தான் வீட்டிலிருந்து புறப்படுவாள் சுமித்ரா. ஆனால் இந்த வாரம் ஞாயிறு மாலையே கிளம்பி தலவாக்கலைக்கு வந்துவிட்டாள். அதற்குமேலும் அவளால் வீட்டிலிருக்க முடியவில்லை. திருமணத்தைப் பற்றிய சாதக பாதகங்களை அலசியபடியே இருந்தார்கள் பெற்றோர்கள்.
“சுமித்ரா.” இவள் இன்னும் குவார்ட்டஸுக்கு வந்திருக்கவில்லை. மாதவன் அழைத்திருந்தான்.
“சொல்லுங்க.”
“நான் பஸ் ஸ்டான்ட்லதான் இருக்கேன்.”
“ஓ…” இவள் கண்களைச் சுழட்ட அவள் பார்வை வட்டத்துக்குள் விழுந்தது அந்த ப்ளாக் ஆடி.
“காருக்கு வா.” அவன் சொல்லவும் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு இறங்கி நடந்தாள். சிவப்பு நிற சுடிதார். அதற்கு ஏற்றாற்போல வெள்ளையும் சிவப்புமாய் துப்பட்டா. கூந்தலை ஒற்றைப் பின்னலாக்கித் தோளில் போட்டிருந்தாள். எளிமையே உருவாக இருந்தவளை வைத்த கண் வாங்காமல் காரிலிருந்தபடியே பார்த்திருந்தான் இளவல். பயத்தைக் கண்களில் தேக்கியபடி வந்தவள் முன்னால் ஏறி உட்கார்ந்து கொண்டாள். கார் மெதுவாக வேகமெடுத்தது.
“எப்பிடியிருக்கே சுமி?”
“ம்… நல்லா இருக்கேன்.” அதுதான் வழமை என்பதுபோல கார் அருவிக்கரை ஓரமாகச் சென்று நின்றது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடம் அவர்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஓர் இடமாக அமைந்து போனது.
“வீட்டுல என்ன சொல்றாங்க?” அவள் புறமாகத் திரும்பி அமர்ந்து கொண்டான் மாதவன். அவள் வீட்டில் நடப்பதை எல்லாம் இவனிடம் சொல்ல முடியுமா என்ன? அவள் தடுமாற்றத்தை இவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
“பரவாயில்லை, எதுவா இருந்தாலும் சொல்லு சுமி, நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் வேணாம்.”
“அப்பா… கொஞ்சம் பயப்பிடுறாங்க.”
“அது நியாயந்தான், ஆனா எங்க அக்கா எப்பவுமே பெரிய வீட்டுல இருக்கப் போறதில்லை, அப்பிடியே இருந்தாலும் இந்தக் கவலைக்கு அவசியமில்லை.”
“அம்மாவும் இதையேதான் சொன்னாங்க.”
“என்ன சொன்னாங்க?”
“நீங்க எல்லாத்தையும் பார்த்துப்பீங்கன்னு சொன்னாங்க.”
“அந்த நம்பிக்கை உனக்கு இருக்கா?” அவன் கேட்கவும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் சஞ்சலம் குடிகொண்டது. எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அவள் நம்பிக்கை வைப்பது?! மணிமேகலை வாழ்ந்து பார்த்தவர். மனிதர்களை ஓரளவு அவரால் எடைபோடத் தெரிந்திருந்தது. ஆனால் சுமித்ரா! பார்த்தது முதல் சலனத்தை ஏற்படுத்திய மாதவனைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? பெரியவீட்டுப் பையன் என்பதைத் தவிர வேறென்ன தெரியும்?!
“என்னடா?”
“புடிச்சிருக்கு… அதைத்தாண்டி மாதவன் சாரைப்பத்தி எனக்கு வேறென்ன தெரியும்?” இப்போதும் அவனை சார் என்று அழைக்கும் அவளைப் பார்த்தபோது அவனுக்குப் புன்னகை வந்தது. ஒற்றை விரலால் அவள் துப்பட்டாவுக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை வெளியே இழுத்தவன்,
“இதாவது என்னன்னு தெரியுமா? இதை உங்கழுத்துல நான் கட்டியிருக்கேன், உன்னோட இன்ப துன்பம், சுக துக்கம் எல்லாத்துக்கும் நாந்தான் இனி பொறுப்பு, அதாவது உனக்குத் தெரியுமா?”
“அது தெரியுது…”
“இந்தத் தாலியை உங்கழுத்துல கட்டின நாள்ள இருந்து உங்கூட நான் குடும்பமே நடத்திக்கிட்டு இருக்கேன், அதாவது உனக்குத் தெரியுமா?” அவன் வார்த்தைகளில் அவள் சிக்கிக்கொண்டு தவித்தாள்.
“ஆனா நீ இன்னும் ‘மாதவன் சார்’ எங்கிற இடத்துலதான் இருக்கே, எம்மேல முழுசா நம்பிக்கைக் கூட உனக்கு இல்லை.”
“நம்பிக்கை இல்லாமலா நீங்க கூப்பிட்டப்ப எல்லாம் இப்பிடிக் கிளம்பி வர்றேன்? ராத்திரி பத்து மணிக்கு எனக்கு வேற யாராவது கால் பண்ணி கிளம்பி வான்னு கூப்பிட்டிருந்தா கூப்பிட்டவங்க கன்னம் பழுத்திருக்கும்.” படபடவென்று அவள் பேசவும் அவனுக்குச் சுவாரஸ்யம் பிறந்தது.
“அவங்களுக்குக் கன்னம் பழுத்திருக்கும், அப்போ எனக்கு?” சரசமாகத்தான் அவன் கேட்டான். ஆனால் அவள் கண்ணிலிருந்த சஞ்சலத்தோடு இப்போது பயமும் சேர்ந்து கொண்டது.
“எதுக்குடீ இப்போ என்னை இப்பிடிப் பார்க்கிறே?”
“மாதவன் சார், இது நம்ம வாழ்க்கை, விளையாட்டில்லை.” அவள் கழுத்தைத் தீண்டிய அவன் ஒற்றைக் கை அந்த முகத்தை அவனருகே இழுத்தது.
“உனக்கு நான் சாரா சுமித்ரா?”
“ம்ஹூம்… இனி எல்லாமே நீங்கதான்!” சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கின.
“இப்பிடிச் சொல்ற ஒரு பொண்ணை எப்பிடி என்னால நோகடிக்க முடியும் சொல்லு?”
“ஆனா பயமா இருக்குங்க!” என்றவளை அப்படியே தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் மாதவன். அவன் அணிந்திருந்த ஷர்ட்டின் காலரை அவள் கரம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. என்னை விட்டுவிடாதே என்பது போல!
“வசதி இருக்கலையே தவிர வாழ்க்கையைப் பத்தின கனவுகள் நிறைய இருக்கு, ஆடம்பரங்களுக்கு எப்பவும் நான் ஆசைப்பட்டதில்லை, ஆனா என்னோட கனவுகள், லட்சியங்களுக்கு எனக்கு வரப்போற வாழ்க்கைத் துணை உதவியா இருக்கணும்னு நான் ரொம்ப எதிர்பார்ப்பேன்.” சொன்னவளின் முகத்தைக் குனிந்து பார்த்தவன்,
“எது உன்னோட லட்சியம்? அந்த டீ எஸ்டேட்ல போய் உட்கார்ந்துக்கிட்டு நாலு தேயிலைக் கொழுந்தை வெச்சுக்கிட்டு ஆராய்ச்சி பண்ணணும், அதானே?” என்றான் கேலியாக. அவன் சொன்ன விதத்தில் அவளும் புன்னகைத்தாள்.
“அதெல்லாம் தெரிஞ்சுதான் வேலையே வாங்கிக் குடுத்தோம், அடுத்தது என்ன சொன்னே? கனவா? என்ன கனவு வெச்சிருக்கே? என்னை விட அதிகமா உன்னால நம்ம வாழ்க்கையைப் பத்திக் கனவு கண்டிருக்க முடியுமா?” அவன் மார்பில் சாய்ந்தபடி அண்ணார்ந்து பார்த்தவளின் பார்வையில் தீட்சணியம் இருந்தது.
“அப்பிடிப் பார்க்காதே சுமித்ரா.” என்றவன் சட்டென்று அவளை விடுவித்துவிட்டு காரிலிருந்து இறங்கிவிட்டான். சுமித்ரா இதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவளைச் சூழ்ந்திருந்த பாதுகாப்பான உணர்வு அகன்றது போலிருந்தது. தானும் காரைவிட்டு இறங்கியவள் அருவிக்குப் பக்கத்தில் போனாள். பலமுறை இங்கு வந்திருந்தாலும் அந்த அருவியை எப்போதும் அவள் கவனித்ததில்லை.
“சுமித்ரா வேணாம்.” இலேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. ஆனால் காட்டு மரங்களும் அருவிக்கரையும் அவளுக்குப் புதிதில்லையே! அவன் பேச்சை அலட்சியம் செய்தவள் மெல்லிய நீரோடையின் குளிர்ச்சியைக் கை நீட்டி அனுபவித்தாள். அவன் அருகில் வருவது திரும்பிப் பாராமலேயே புரிந்தது.
“போகலாம் சுமி.”
“ரெண்டு மூனு தடவை இங்க வந்திருக்கோம், ஆனா இந்த அருவியை எப்பவும் பார்த்ததில்லை.” என்றவள் தன்னருகில் நின்றவனின் கையை இழுத்து நீரின் குளிர்ச்சியை உணரச் செய்தாள். நீரின் குளிர்ச்சியை விட அவளின் தீண்டல் அவனுக்கு இன்னும் சுகத்தைக் கொடுத்தது.
“கல்யாணத்துக்கு அப்புறம் நாம எங்க இருக்கப் போறோம் சுமி?”
“இப்பதானே வேலையில சேர்ந்திருக்கேன், இன்னும் கொஞ்ச நாள்…” அவள் பேசும்போதே அவன் மறுப்பாகத் தலையை ஆட்டினான்.
“அது சரிவராதுடா, ஏன்? கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு நீ வேலைக்குப் போக மாட்டியா?”
‘எங்கூட அந்தச் சின்ன ரூம்ல உங்களால வந்து இருக்க முடியுமா?’ கேட்க நினைத்தவள் கேட்கவில்லை. எப்படிக் கேட்க முடியும்? வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற தன் மகனை எவ்வளவு தூரம் பிரிந்து வாடினார் என்று ஒருதரம் செல்லம்மா அவர் வாயாலேயே இவளிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது மகன் வீட்டைவிட்டு வர அவர் அனுமதிப்பாரா?
“என்ன யோசனை?”
“இல்லை… என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்.”
“ஏன்? அந்த ஒத்தை ரூம்ல எனக்குக் கொஞ்சம் இடம் குடுக்க மாட்டியா?” அவன் நெருக்கமும் சரசமும் அதிகமானது.
“ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிக்கு அந்த ஒத்தை ரூம் போதுமா?” அவனது நெருக்கத்தையும் சரசத்தையும் அவளும் ரசித்திருப்பாள் போலும். விலக மனமில்லாமல் அப்படியே நின்றிருந்தாள்.
“இந்தக் காட்டு தேவதை எங்க இருக்காளோ அங்க இருக்க நானும் தயார், இந்தத் தலவாக்கலைக்கு ஓடியோடி வரும்போதே அது உனக்குப் புரியலையா?”
“மாதவன் சார், அப்பிடி எங்கிட்ட என்ன இருக்கு?” எப்போதும் அவள் அவனைப் பார்க்கும் பார்வையில் இப்போதும் சிக்கிக் கொண்டான் மாதவன்.
“சார் சொல்லாதடா.”
“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க, நீங்க இந்தளவு பாசம் வெக்க எங்கிட்ட என்ன இருக்கு?” அவள் வலது கரம் அவன் கன்னத்தைத் தடவியது.
“உங்கிட்ட என்ன இல்லை?” அவன் முழுதாக அவளிடம் மயங்கி நின்றிருந்தான்.
“உங்களுக்குத் திருப்பிக் குடுக்க எங்கிட்ட…” அவள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவன் போல அவள் இதழ்களோடு தன் இதழ்களைச் சேர்த்திருந்தான் இளவல். பெண்ணும் விலகவில்லை. அந்த நொடி இந்த நெருக்கத்தை வேண்டுபவள் போல இணக்கமாக நின்றிருந்தாள். தாலி கட்டிய தைரியம், இரு குடும்பங்களுக்கும் இவர்கள் உள்ளத்து ஆசை தெரிந்துவிட்டது என்ற துணிச்சல், மாதவனைப் பெண் கொடுத்த சுகத்திற்குள் பல நொடிகள் திளைக்கச் செய்தன.
“இந்தக் கருமத்துக்குத்தான் போகலாம் போகலாம்னு சொன்னேன்.” அவளை அவன் விடுவிக்க அந்த மார்பிலேயே சாய்ந்து கொண்டாள் பெண்.
“இப்பப் புரியுதா எனக்குக் குடுக்க உங்கிட்ட என்ன இருக்குன்னு! உலகத்துலேயே இந்த மாதவனை மேக்ஸிமம் சந்தோஷப்படுத்த உன்னால மட்டுந்தான் முடியும்.”
“மாதவன் சார்…”
“இன்னொரு தடவை மாதவன் சார்னு கூப்பிட்டா உன்னைக் கொன்னுடுவேன் சுமி.”
“எங்க… என்னைக் கொல்லுங்க பார்க்கலாம்.” புன்னகையோடு அவனுக்குச் சவால் விட்டது பெண்.
“கொல்றதுன்னா, கழுத்தை நெரிச்சுக் கொல்றதுன்னு நினைச்சியா? உன்னை எப்பிடியெல்லாம் என்னால கொல்ல முடியும் தெரியுமா?”
“எப்பிடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொன்னீங்களே, அப்பிடியா?”
“சுமித்ரா…” அவன் கரம் இடை வளைக்கப் பெண் சட்டென்று விலகினாள். இதற்கு மேலும் இங்கே நின்றிருந்தால் அவன் கோடு தாண்டுவான்.
“போகலாம்.” என்றவள் அவன் கரம் பிடித்து காருக்கு அழைத்து வந்தாள். மிட்டாயைத் தொலைத்த சிறுவன் போல நின்றிருந்தான் அந்த வாலிபன்!
“லேட்டாகுது, நான் ரூமுக்குப் போகணும்.”
“என்னையும் கூட்டிட்டுப் போறியா?”
“ஐயோ! அங்க நீங்க உட்கார ஒரு செயார் கூட இல்லை.”
“பரவாயில்லை, கூட்டிட்டுப் போ சுமி.”
“ம்… போகலாம்.” அவள் சம்மதித்த பின்புதான் ப்ளாக் ஆடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.
அந்த இடம் ஒரு காலனி போல இருந்தது. கார் உள்ளே செல்லும் அளவிற்கு விசாலமான தெரு இல்லை என்பதால் தெரு முனையிலேயே காரை நிறுத்தினான் மாதவன். எப்போதும் இங்கே வரும்போது காரை சற்றுத் தள்ளியே நிறுத்துவதால் யாரும் அவனை இதுவரைக் கவனித்ததில்லை. ஆனால் இன்று அம்பிகா வாசலுக்கு வந்துவிட்டார்.
“சுமீ.” அப்போதுதான் கூட வந்த இளைஞனைக் கவனித்தவர் சட்டென்று நிதானித்தார். அம்பிகாவின் வீட்டைத் தாண்டித்தானே சுமித்ராவின் அறை இருந்தது.
“யாரிது?!” அம்பிகாவின் மேடை ரகசியம் இவனுக்கும் கேட்டது. பெண் தடுமாறுவதைச் சில நொடிகள் ரசித்தவன் தானே பதில் சொன்னான்.
“சுமியைக் கட்டிக்கப் போறது நாந்தான்.”
“அப்பிடியா?! சொல்லவே இல்லை?”
“சுமித்ராக்கே அது தெரியாது, இந்த வெள்ளிக்கிழமைதான் வீட்டுல பேசி முடிச்சாங்க, எல்லாம் அவசரமா நடந்து முடிஞ்சிடுச்சு.”
“ஓ… உள்ள வாங்க தம்பி.” என்றவர் தங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றார். அவர் கணவனும் அப்போது வீட்டில் இருந்ததால் ஆண்கள் இருவரும் பேச ஆரம்பிக்க சுமித்ராவை இழுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் சென்றார் அம்பிகா.
“என்னத்தை அவசரமா நடந்துச்சு! ஒரு வார்த்தை உனக்கு ஃபோன் பண்ணிச் சொல்ல முடியாதா?”
“அக்கா, கொஞ்சம் பிரச்சினை ஆகிப்போச்சு, அதாலதான்…”
“பிரச்சினையா? ஆமா, பார்க்கப் பெரியவீட்டுப் பையன் மாதிரி இருக்காரு, மாப்பிள்ளை என்னப் பண்ணுறாரு?”
“எங்க எஸ்டேட் ஓனரோட பையன்.”
“என்ன?! எஸ்டேட் ஓனர் பையனா?!” அம்பிகா வாயைப் பிளந்தார்.
“அந்தக் கதையை நான் அப்புறமா உங்கக்கிட்டச் சொல்றேன்கா, இப்ப அவங்களுக்கு என்னோட ரூமை காட்டணும்.”
“சரி, ஒரு டீ குடிச்சிட்டுப் போகலாம் இரு.”
“இல்லைக்கா, நான்…”
“ம்… நடத்து நடத்து, உங்கையால டீ போட்டு வீட்டுக் காரருக்குக் குடுக்கணுமோ! ஏன்? அந்த டீயை எங்க வீட்டுல போட்டுக் குடுக்க மாட்டியா?” அம்பிகா கேலியில் இறங்க இவள் முகம் சிவந்து போனது.
“அவங்க இங்கயே இருக்கட்டும்கா, நான் டீ போட்டுக் கொண்டு வர்றேன்.”
“ஏய், நான் சும்மா சொன்னேன், அதான் வீட்டுல பேசி முடிவெடுத்துட்டாங்கல்லை, அதுக்கப்புறம் என்ன, நீ கூட்டிட்டுப் போ.” என்றவர் வாசல் வரை வந்தார். அடுத்தடுத்த வீடு. இங்கிருந்து பேசினால் அங்கே கேட்கும். சுமித்ரா தன் அறைக் கதவைத் திறக்கவும் மாதவனும் உள்ளே வந்தான்.
பத்துக்குப் பத்து கூட இல்லை அந்த அறை. மிகவும் சின்னதாக இருந்தது. அவள் மாத்திரம் இருக்கும்போது தாராளமாக இருந்தது இப்போது அவனும் வந்தவுடன் சின்னதாகிப் போனது. அங்கிருந்த ஒற்றைப் படுக்கையில் அவன் அமர்ந்து கொள்ள சுமித்ரா டீ தயாரித்தாள். பெண்ணின் முதல்மாத சம்பளத்தில் அம்மா முக்கியமான பொருட்கள் சிலதை வாங்கிக் கொடுத்திருந்தார். அவள் டீயை நீட்டவும் வாங்கிக் கொண்டான்.
“உனக்கு?”
“இங்க ஒரு கப்தான் இருக்கு, நீங்க குடிங்க.” இரண்டு மிடறுகள் அருந்தியவன் தேநீர் கோப்பையை அவளிடம் நீட்டினான்.
“நீ குடி.”
“நல்லா இல்லையா?” என்றவள் தான் இரண்டு மிடறுகள் அருந்த மீண்டும் அவளிடமிருந்து கோப்பையை வாங்கியவன் தான் அருந்த ஆரம்பித்தான். சுமித்ரா இதை எதிர்பார்க்கவில்லை.
“ரூம் ரொம்பச் சின்னதா இருக்கில்லை சுமி?”
“ம்… எனக்குத் தாராளம், ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிக்கு எப்பிடி வசதி?” டீயைக் குடித்து முடித்தவன் வேண்டுமென்றே அவளை உரசிக்கொண்டு நடந்தபடி,
“இந்தச் சின்ன ரூம்ல, சிங்கிள் பெட்ல இன்னைக்கு நைட் உங்கூடத் தங்க நான் ரெடி.” சன்னமாகச் சொன்னவன் கப்பை அதற்குரிய இடத்தில் வைத்தான். அவன் வார்த்தைகளில் அவள் விக்கித்துப் போனாள்.
“நான் கிளம்பட்டுமா சுமித்ரா?” எதுவும் நடவாதது போல அவன் இயல்பாக விடைபெற்றுக் கொண்டான்.
“சுமி, நாளைக்கு நீ ஃப்ரீயா இருப்பியா?”
“நாலு மணிக்கு மேல ஃப்ரீதான், ஏன்?”
“அம்மா உனக்குப் பட்டுப்புடவை வாங்கணும்னு சொன்னாங்க.”
“அதுக்கு நான் எதுக்கு?”
“ம்ப்ச்… கூப்பிட்டா வரணும், சும்மா கேள்வி கேட்கப்படாது.” அவளுக்குப் புரிந்தது. அவனுக்கு அடிக்கடி அவளைப் பார்க்க வேண்டும். அதற்காக அவன் காரணங்களை உருவாக்குகிறான்.
“சரி.” அவள் சம்மதிக்கவும் புன்னகைத்தவன் கிளம்பிவிட்டான். அந்த ப்ளாக் ஆடி அவள் ஒட்டுமொத்த இன்பத்தையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது!






Very nice
Super aalagi mam ❤️❤️❤️