அத்தியாயம் 1
“ராஜ் பவன்” இரண்டு தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, நவீனமாகக் காட்சியளித்தது. ஒரே மாதிரியாக சீருடை அணிந்த ஊழியர்கள் அந்தக் காலை நேரப் பரபரப்பைச் சமாளித்தபடி அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
“ரமேஷ்! அந்த டேபிளை கவனி.” வேஷ்டி சட்டையில் கன கம்பீரமாக கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கராஜ் உத்தரவிட்டான்.
“சரிண்ணா.” ரமேஷ் அப்பால் செல்வதற்கும் கந்தசாமி உள்ளே வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அப்போது காலை ஒன்பது மணி. கந்தசாமி அண்ணன் ஹோட்டலுக்குள் நுழைந்தால் சரியாக மணி ஒன்பது என்பதை அங்கு வேலை செய்பவர்கள் கடிகாரத்தைப் பார்க்காமலேயே புரிந்து கொள்வார்கள்.
“என்ன தம்பி நீங்க இங்க உட்கார்ந்திருக்கீங்க?!” அவரின் ஆச்சரியமான கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தான் ரங்கராஜ். நல்ல உயரம். பொது நிறமாக இருப்பான். இலேசாக மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது வசீகரமாக இருக்கும்.
“வீட்டுல கல்யாணம் வெச்சிருக்காங்க, குடும்பமே அங்கதான் இருக்கு, தாலி கட்ட இன்னும் கொஞ்ச நேரந்தான் இருக்கு, நீங்க என்னடான்னா இங்க உட்கார்ந்து கல்லாவைக் கவனிச்சுக்கிட்டு இருக்கீங்க?!”
“சாமி அண்ணே, இதுல பணம் வெச்சிருக்கேன், மறக்காம பேங்க்குக்குப் போங்க, இன்னைக்குத்தான் கடைசி நாள், பணம் கட்டலைன்னா மானேஜர் கடுப்பாகிருவாரு.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் தம்பி, நீங்க கவலைப்படாம கிளம்புங்க, உங்க மாமா இப்பிடி லேட்டா போனா கோவிச்சுக்கப் போறாரு.”
“அத்தை பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்காங்க, இதுல மாமா என்னை எதுக்கண்ணே கோவிக்கப் போறாரு?”
“நல்லா இருக்கு உங்கப் பேச்சு, மூத்த பொண்ணுக்குத்தான் உங்க மாமா வெளியூர்ல இருந்து மாப்பிள்ளை எடுத்திருக்காரு, அதுவும் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேன்னு, உங்க அத்தை வீட்டுக்கு நீங்கதான் ரெண்டாவது மாப்பிள்ளைன்னு ஊருக்கே தெரியும், நீங்க இப்பிடிப் பேசலாமா?” அந்த வார்த்தைகளில் ரங்கராஜின் முகம் இலேசாக வாடினாற் போல தெரிந்தது.
“என்னாச்சு தம்பி?”
“ஒண்ணுமில்லைண்ணே, நீங்க பார்த்துக்குங்க, நான் கிளம்புறேன், பண விஷயத்தை மறந்திடாதீங்க.” கந்தசாமி தலையை ஆட்டவும் ரங்கராஜ் கிளம்பிவிட்டான். நடந்து போகும் அந்த முழு ஆண்மகனைப் பார்த்தபோது பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரங்கராஜின் அப்பா மாணிக்கம் இந்த ஹோட்டலை ஆரம்பித்த காலத்திலிருந்து இந்த மனிதர் இவர்களிடம் வேலை பார்க்கிறார். மாணிக்கத்திற்கு இருதய அறுவை சிகிச்சை செய்த பிற்பாடு மகனிடம் தொழிலைக் கொடுத்துவிட்டு ஓய்வில் இருக்கிறார். ஆனால் அவ்வப்போது வந்து மேற்பார்வை செய்வார்.
“தம்பியோட முகம் ஏன் சட்டுன்னு இறுகிப் போச்சு?!” தனக்குத்தானே பேசியபடி யோசனையில் ஆழ்ந்தார் பெரியவர். ரங்கராஜின் அத்தையின் வீட்டில்தான் இன்றைக்கு விசேஷம். ஒரேயொரு அத்தை, பெயர் மீனாட்சி. அப்பா மாணிக்கத்தின் தங்கை. நல்ல வளமான வீட்டில் தன் தங்கையைக் கட்டிக் கொடுத்திருந்தார் மாணிக்கம்.
மீனாட்சியின் கணவர் நமச்சிவாயம் நல்ல உழைப்பாளி. தன் வீட்டிற்கு ரங்கராஜை மாப்பிள்ளை ஆக்கவேண்டும் என்பது அவரது ஆசை. மூத்த மகள் ஆர்த்திக்குப் பேசலாம் என்று அவர்கள் நினைத்தபோது பல்கலைக்கழகம் சென்ற பெண் அங்கே காதல் வயப்பட்டு வந்து நின்றாள். பையனையும் குறை சொல்ல முடியாது. மருத்துவத் துறையில் இறுதி ஆண்டில் இருந்தான். டாக்டர் வரன் ஒன்றிற்குச் செய்ய வேண்டிய அனைத்துச் சீர் செனத்தியும் செய்து இந்தக் கல்யாணத்தை நடத்துகிறார்கள். ஆனால் எப்படியாவது ரங்கராஜைத் தங்கள் இளைய பெண் அர்ச்சனாவிற்கு முடித்துவிட வேண்டும் என்பதில் மீனாட்சியும் நமச்சிவாயமும் உறுதியாக இருந்தார்கள்.
“தாலி கட்ட இன்னும் கொஞ்ச நேரந்தான் இருக்கு, நீ என்ன தம்பி இப்பதான் சாவகாசமா வர்றே?” அம்மா சுலக்சனா முணுமுணுக்கவும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான் மகன்.
“இப்ப எதுக்கும்மா இவ்வளவு டென்ஷன்? அதான் காலையிலேயே வந்து இங்க எல்லா வேலையையும் பார்த்துட்டுத்தானே போனேன்? அப்புறம் என்ன?” இலகுவாகச் சொன்ன மகனைப் பார்த்துப் புன்னகைத்தார் அம்மா. அவருக்கும் அது தெரியும். தன் பொறுப்புகளிலிருந்து விலகுபவனல்ல மகன். ஆனாலும் கணவரை நினைத்த போது கொஞ்சம் பயமாக இருந்தது.
மாணிக்கம் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் பக்கத்து ஆட்கள் என்று வந்துவிட்டால் ஓர் மிடுக்கு வந்துவிடும். அதுவும் அவரது தங்கை வீடு என்றால் இன்னும் கொஞ்சம் ஆடிப்பார்ப்பார். நல்ல வசதியான வீட்டில் வாழும் தங்கை அவருக்கு எப்போதும் உயர்வு. மற்றையவர்கள் எல்லாரும் ஒரு படி கீழ்தான் என்று நினைக்கும் ரகம்.
“மாமா வீட்டுல இருந்து எல்லாரும் வந்துட்டாங்களாம்மா?”
“வந்துட்டாங்க ரங்கா.” பட்டுப்புடவை சரசரக்க அம்மா மேடையை நோக்கி நடக்கவும் இவன் கண்கள் அங்கிருந்த கூட்டத்தை அலசியது. மாமா என்றால் சுலக்சனாவின் அண்ணா தங்கவேலின் குடும்பம். தங்கவேல் சாதாரண அரசாங்க உத்தியோகஸ்தர். மனைவி, இரண்டு பிள்ளைகள் என வாழும் சாதாரண குடும்பம். இரண்டும் பெண் பிள்ளைகள்.
“மாமா, இப்பதான் வந்தீங்களா?” தன் அம்மானைத் தேடிச்சென்று குசலம் விசாரித்தான் மருமகன்.
“ஆமா ரங்கா, நீ இப்பதான் ஹோட்டல்ல இருந்து வர்றியா? கல்யாண நாளும் அதுவுமா இன்னைக்குன்னு ஹோட்டலுக்குப் போவியா? தாலி கட்டப் போறாங்க, நீ சீக்கிரமா மேடைக்குப் போ.” மாமா விரட்டவும் மாமியைப் பார்த்து ஓர் புன்னகையோடு தலையை அசைத்தவன் அப்பால் நகர்ந்துவிட்டான். மாமிக்கு அடுத்ததாகப் பெண்கள் இருவரும் அமர்ந்திருப்பது தெரிந்தது. வயதுக்கு வந்த பெண்கள் என்பதால் அவர்களிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டான்.
“ரங்கா வந்துட்டியா, இங்க வந்து நில்லு.” அத்தை மீனாட்சி இவனை அழைத்துத் தன் பக்கத்தில் நிற்கச் செய்தார்.
“ஹாய் அத்தான்.” அத்தையின் இளைய பெண் அர்ச்சனா யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அத்தனைப் பேர் முன்னாடியும் அத்தானைப் பார்த்துச் சிரித்தது. ரங்கராஜின் உதடுகள் ஒரு மில்லிமீட்டர் அசைந்தது. அதற்குப் பெயர் புன்னகையா என்று அவனுக்கே தெரியாது.
“அடேயப்பா! அர்ச்சனா செம தைரியசாலிதான்! இத்தனைப் பேரு முன்னாடி எப்பிடி அத்தானைப் பார்த்துச் சிரிக்கிறா?!” ஆச்சரியப்பட்ட தன் தங்கையைத் திரும்பிப் பார்த்தாள் வந்தனா.
“இதுல நீ இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கு மீரா?”
“ஏன் இல்லை அக்கா? நமக்குந்தான் அவரு அத்தான், அத்தையோட பையன், எல்லா உரிமையும் இருக்கு, ஆனா நம்மளால இப்பிடித் தைரியமா அத்தானைப் பார்த்து ஒரு ஹாய் சொல்ல முடியுமா? ஹாய் எதுக்கு? ஒரு தடவை நம்மளைப் பார்த்து சிரிச்சிருப்பாரா?” தங்கையின் வாதத்தில் இருந்த நியாயம் பெரியவளின் வாயை மூடியது. கையில் வைத்திருந்த பரிசுப் பொருளைப் பார்ப்பவள் போல குனிந்து கொண்டாள்.
வந்தனாவின் மனதுக்குள் ஓர் இயலாமை பரவுவது போலிருந்தது. சில விஷயங்களை நடத்திக்கொள்ள பணம் மிகவும் முக்கியம் என்பது தெளிவாகப் புரிந்தது. அந்தப் பணம் அவர்களிடம் இல்லை. அதனால் இந்த அத்தானோடு வெளிப்படையாக அவர்களால் பேசிவிட முடியாது. ஆனால் அர்ச்சனாவால் முடிகிறது. ஏனென்றால் அவர்கள் வசதி படைத்தவர்கள்.
‘அதுசரி, அர்ச்சனா அவள் அத்தானைப் பார்த்துச் சிரித்தால் உனக்கேன் வலிக்கிறது?!’ மனசாட்சியின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
“அக்கா, தாலி கட்டப் போறாங்க, நீ என்ன யோசனைல இருக்க?” தங்கையின் குரலில் கலைந்தவள் அதன்பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
“கிஃப்ட்டை குடுத்திட்டு நாம கிளம்பலாம்மா.” தங்கவேல் சொல்லவும் அம்மாவும் பெண்களும் எழுந்துவிட்டார்கள்.
“சாப்பிடாம போனா நல்லா இருக்காதுங்க.” இப்போது மையமாகப் புன்னகைத்து வைத்தார் தங்கவேல். இவர்கள் நால்வரும் மேடைக்குச் சென்று கொண்டுவந்திருந்த பரிசைக் கொடுத்துவிட்டு மணமக்களையும் வாழ்த்திவிட்டுக் கிளம்பினார்கள்.
“மாமா, சாப்பிட்டுட்டுப் போங்க.” அங்கேதான் நின்றிருந்த ரங்கராஜ் சொல்லவும் சுலக்சனா அவசரமாகத் தன் அண்ணனின் முகத்தைப் பார்த்தார். இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகலாமே என்ற கெஞ்சுதல் அந்தப் பார்வையில் தெரிந்தது. அவசரமாகப் போகவேண்டும் என்று அவரும் நினைக்கவில்லை. ஆனால் மீனாட்சி, நமச்சிவாயம் என்று வந்துவிட்டால் மனிதர் கொஞ்சம் ஒதுங்கிவிடுவார்.
“பரவாயில்லை ரங்கா…”
“நீங்க எதுவும் சொல்ல வேணாம், எங்கூட வாங்க.” ஏதோ பேச வாயெடுத்த அம்மானை அடக்கிவிட்டு அவர்களைக் கையோடு பந்தி பரிமாறும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். நமச்சிவாயம் நல்ல பசையுள்ள மனிதர் என்பதால் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களைத்தான் சமையலுக்காக ஏற்பாடு பண்ணியிருந்தான் ரங்கராஜ்.
“நீ போய் மத்த வேலைகளைக் கவனி ரங்கா, நான் இங்க பார்த்துக்கிறேன்.” அம்மான் எவ்வளவு சொல்லியும் மருமகன் கேட்கவில்லை. அங்கே பரிமாறிக் கொண்டிருந்த மனிதரை அழைத்து இவர்களை அறிமுகம் செய்துவிட்டுத்தான் கிளம்பினான்.
“ம்… அத்தான் பரவாயில்லைப் போலத்தான் தெரியுறாரு.” வந்தனா தன் தங்கையைப் பார்த்த பார்வையில் அவள் வாய் அத்தோடு மூடிக்கொண்டது.
விருந்தினர்கள் அனைவரும் கலைந்து சென்றபோது மாலை ஆகிவிட்டது.
திருமணம் முடிந்த கையோடு மணமக்களைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். சொந்த பந்தங்கள் அனைத்தும் அவர்களோடு கிளம்பிப் போய்விட்டார்கள். மண்டபத்தைத் துப்புரவு செய்து, கொடுக்க வேண்டியவர்களுக்குப் பாக்கிப் பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்த போது நேரம் மாலை ஆறு மணி. ரங்கராஜ் இன்னும் பகலுணவு உண்ணவில்லை. ஓர் இலையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தவனுக்கு ஓடிவந்து பரிமாறினார்கள்.
“நானே போட்டுச் சாப்பிட்டுக்குவேன், நீங்களும் சாப்பிடுங்க.”
“சரிங்க தம்பி.” அன்றைக்கு முழுவதும் பம்பரமாகச் சுழன்றவர்கள் ஆளுக்கொரு பக்கமாக உண்ண அமர்ந்துவிட்டார்கள். மண்டபத்தை ஒருமுறை கண்களால் அளவெடுத்தான் இளையவன். அவன் அக்கா திவ்யாவிற்கும் இதே மண்டபத்தில்தான் கல்யாணம் நடந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த திருமணம். இப்போது அவளுக்கு மூன்று வயதில் ஓர் பெண் குழந்தையும் உண்டு.
“அந்த மண்டபம் ரொம்பப் பெருசுப்பா, எதுக்கு இவ்வளவு பணத்தை வீணா செலவு பண்ணணும்?” ஐந்து வருடங்களுக்கு முன்பு ரங்கராஜ் கேட்டபோது அப்பா மாணிக்கத்திற்கு அவ்வளவு கோபம் வந்தது.
“நம்ம வீட்டுல நடக்கிற முதல் கல்யாணம் ரங்கா, அந்த மண்டபத்தில உன்னோட அக்கா கல்யாணத்தைப் பண்ணாம வேற எங்க பண்ணச் சொல்றே?” அப்பாவின் கேள்விக்கு மகன் பதில் சொல்லவில்லை. அவர்களது பொருளாதாரம் இதுபோன்ற ஆடம்பரங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. மாணிக்கத்தின் பேச்சிற்கு எதிர்பேச்சுப் பேசாத பெண்கள் வாயை மூடிக்கொண்டார்கள். ஆனால் அன்றைக்கு இரவு வீட்டின் பின் முற்றத்தில் அமர்ந்திருந்த மகனின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் சுலக்சனா.
“என்னடா ராஜா யோசிக்கிறே?”
“அப்பா தப்புப் பண்ணுறார்மா, எதுக்கும்மா நமக்கு இவ்வளவு செலவு? திவ்யாவோட கல்யாண செலவு நம்ம பட்ஜெட்டையும் தாண்டிப் போகுது, அப்பாக்கு ஏம்மா இதெல்லாம் புரியமாட்டேங்குது?”
“உங்க அத்தை வீட்டை நம்பி இதெல்லாம் பண்ணுறாரு.” இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணியின் முகம் வாடிப்போனது.
“எதுக்கும்மா? அவங்க குடுப்பாங்கதான், ஆனா திரும்பக் குடுக்க நமக்கிட்டயும் சக்தி வேணுமில்லை? ஏற்கனவே ஹோட்டலுக்காக நிறையப் பணம் அத்தைக்கிட்ட வாங்கி இருக்கோம், இன்னுமின்னும் வாங்கினா என்னம்மா அர்த்தம்?” இந்தக் கடனுக்கெல்லாம் பலியாடு நீதான் என்பது போல அன்றைக்கு ஓர் பார்வைப் பார்த்தார் சுலக்சனா. அந்தப் பார்வையை இன்றைக்கு வரை இவனால் மறக்க முடியாது.
இந்தக் கடன்கள் எல்லாம் போதாதென்று கடந்த வருடம் மாணிக்கத்திற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மீண்டும் அத்தை குடும்பத்திடம்தான் கையேந்த வேண்டிய நிலை வந்தது. எல்லாமாகச் சேர்ந்து இப்போது கடன் தலைக்கு மேல் நிற்கிறது. ஒரு பெருமூச்சோடு உணவை முடித்தவன் கையைக் கழுவிக் கொண்டான். இப்போதெல்லாம் உறக்கம் வருவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!
***
ஆர்த்தியின் திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்தன. திருமணத்தை ஒட்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் என மீனாட்சி அத்தையின் குடும்பம் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. டாக்டர் மாப்பிள்ளை வேறு. எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது பெண் வீடு.
“தம்பி, இன்னைக்கும் அத்தை என்னை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டிருக்காங்க, மதியத்துக்கு மேல நான் அங்க கிளம்பிடுவேன், வீட்டுல ஷக்தி இருப்பா, நீ வந்து சாப்பிட்டுட்டுப் போ.” இன்றைக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போதே அம்மா சொன்ன வார்த்தைகள் இவை. சாப்பாட்டு வேளை நெருங்குவதால் தங்கை ஷக்திக்கு அழைத்து அவன் ஹோட்டலிலேயே சாப்பிட்டுக் கொள்வதாக தகவல் சொல்லிவிட்டு சாவகாசமாக அந்தச் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
“என்ன தம்பி யோசனை?” புன்னகை முகமாக வந்து நின்றார் கந்தசாமி.
“வேற என்ன யோசனைண்ணே, எல்லாம் தலைக்கு மேல இருக்கிற கடனைப் பத்தித்தான்.”
“அதெல்லாம் இருக்கிறதுதான், இதையெல்லாம் பார்த்தா வாழ முடியுமா? விட்டுத் தள்ளுங்க.”
“ரொம்ப முக்கியமான தேவைக்குக் கடன் பட்டிருந்தா பரவாயில்லை, ஹோட்டலை விரிவுபடுத்துறேன்னு முதல்ல கடன், அப்போ அம்மா எவ்வளவோ சொன்னாங்க, அவங்க பேர்ல இருக்கிற நிலத்தை வித்துட்டு அந்தப் பணத்துல பண்ணலாம்னு, அப்பா கேட்கலை, திவ்யா கல்யாணத்துக்குன்னு ஏற்கனவே பணம் பேங்க்ல போட்டு வெச்சிருந்தாரு, அதுக்குள்ள கல்யாணத்தைப் பண்ணியிருக்கலாம், சக்திக்கு மீறி எல்லாம் பண்ணினாரு, திரும்பவும் கடன் ஏறிச்சு, கடைசியில ஆப்பரேஷன், அப்படியொரு விஷயம் நடக்கும்னு அவரே எதிர்பார்க்கலை, இப்ப எல்லாமா சேர்ந்து கழுத்தை நெரிக்குது.”
“மனசுல பாரத்தை ஏத்திக்காதீங்க தம்பி.”
“எப்பிடீண்ணே? இப்பெல்லாம் கண்ணை மூடினா தூக்கம் வரமாட்டேங்குது.” அங்கலாய்த்தவனைக் கவலையோடு பார்த்தார் பெரியவர். வீட்டிற்கு இளையவன் என்றாலும் பொறுப்பான பிள்ளை. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அவன் வயதுப் பிள்ளைகள் போல ஊர் சுற்றுவதில்லை. ஹோட்டல், வீடு. இதைத்தவிர இவனுக்கு வேறெதுவும் தெரியாது.
மாணிக்கம் நல்ல மனிதர்தான். ஆனால் என்னவோ தெரியாது. தன் தங்கையிடம்தானே கடன் படுகிறோம் என்ற நினைப்பில் எக்கச்சக்கமாக வாங்கிவிட்டார். தன் மகனை அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாக எடுக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிந்ததால் இவரும் கூச்சப்படவில்லை. ஆனால் ஆப்பரேஷன் அவரே எதிர்பாராதது. கணிசமான தொகையை அவரது இருதய அறுவை சிகிச்சை விழுங்கிக் கொண்டது.
“அம்மா பேர்ல இருக்கிற நிலத்தை உங்க பேருக்கு மாத்திட்டாங்க இல்லை தம்பி?”
“ஆமாண்ணே, ஹோட்டலை எம் பேருக்கு மாத்தினப்போ அதையும் அம்மா மாத்தச் சொல்லிட்டாங்க.”
“நல்லதுதான், அந்த நிலம் இப்போ நல்ல விலைக்குப் போகும்னு நினைக்கிறேன்.”
“அனேகமா அதை விற்க வேண்டித்தான் வரும், யாரு தடுத்தாலும் இனி நான் கேட்கமாட்டேன்.”
“அவசரப்படாதீங்க தம்பி, உங்க அத்தை வீடு அந்தப் பணத்தை இன்னும் திரும்பக் கேட்கலையே.”
“அவங்க கேட்காட்டியும் நாம குடுக்கணுமில்லைண்ணே?” இதற்கு என்ன பதில் சொல்வது?! அவர்கள் வீட்டிற்கு நீ மாப்பிள்ளையாகப் போனால் இந்தக் கடன் எதையும் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் எண்ணமும் அதுதான் என்று எப்படிச் சொல்வது.
“கடனை எப்பிடியாவது திரும்பக் குடுக்கணும்ணே.” பிடிவாதமான அந்தப் பதிலில் கந்தசாமி கொஞ்சம் திகைத்துத்தான் போனார். தன் முன்னால் அமர்ந்திருக்கும் இந்த இளைஞனின் மனதில் என்ன இருக்கிறது?! அந்த வீட்டில் பெண் எடுத்தாலும் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறானா? இல்லாவிட்டால் அந்த வீட்டில் பெண் எடுக்கும் எண்ணமே இவனுக்கு இல்லையா?! மனதில் தோன்றிய கேள்விகளை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டார் பெரியவர்.
ராஜ் பவனை காலை ஆறு மணிக்கெல்லாம் திறந்துவிடுவார்கள். காலையில் கூலி வேலைக்குச் செல்பவர்கள் முதற்கொண்டு பாடசாலைக்குச் செல்பவர்கள், ஆஃபீஸ் உத்தியோகத்தர்கள் என சகல விதமான மக்களும் அங்கு வந்து போவார்கள். மேல் தளத்தை நவ நாகரிகமான முறையில் அமைத்திருந்தார்கள். மேல்தட்டு வர்க்கத்தினர் புழங்குவதற்கு ஏற்றவாறு அந்தப் பகுதி இருந்தது. ஓடியோடி உழைக்கும் பணத்தில் பாதியை டாக்டருக்கும் மீதியை என்ன செய்வது என்று தெரியாத மக்கள் அங்கே அடிக்கடி வந்து போவார்கள்.
இப்போதெல்லாம் வாரம் ஒரு முறையாவது இதுபோன்ற ஹோட்டல்களுக்குப் போய் உணவருந்துவது ஃபேஷனாகி வருகிறது. அப்படி அலைமோதும் கூட்டம் அதிகரிப்பதால் ரங்கராஜுக்கு வருமானம் அதிகரிக்கிறது. அதுபோன்ற மக்களைப் பார்க்கும் போது இவனுக்குச் சிரிப்பு வரும். அவன் சிறுவனாக இருந்த காலத்திலெல்லாம் ஹோட்டல் சாப்பாடு என்றால் அன்றைக்கு அம்மாவிற்கு உடம்பிற்கு முடியவில்லை என்று அர்த்தம்.
“என்னால இன்னைக்கு சமைக்க முடியாதுங்க, வரும்போது ஹோட்டல்ல இருந்து சாப்பாடு கொண்டு வாங்க, பசங்க ஸ்கூல்ல இருந்து வந்து சாப்பிடட்டும்.” அம்மா இப்படிச் சொல்லும் நாட்களில் இவருகளுக்குக் கொண்டாட்டம்.
“டேய் ரங்கா! இன்னைக்கு நமக்கும் ஹோட்டல் சாப்பாடுதான்.” அக்கா திவ்யா ஆர்பரிக்க தங்கை ஷக்தி குதிப்பாள். அதை இப்போது நினைக்கும் போது சிரிப்பு வருகிறது. பார்த்துப் பார்த்துச் சமைக்கும் அம்மாவின் சமையல் எங்கே, இந்த ஹோட்டல் சாப்பாடு எங்கே?! ஆனால் புரியாத வயதில் இந்த சுகத்தை இவன் கூட பெரிதாகத்தான் நினைத்திருக்கிறான்.
“பக்கத்து வீட்டு ரம்யா வெள்ளிக்கிழமை ஆனா சமைக்கமாட்டாளாம், சாப்பாடு ஆர்டர் பண்ணித்தான் சாப்பிடுவாங்களாம், ஈவ்னிங் பீச்சுக்குப் போயிடுவாங்களாம்!” கல்யாணம் ஆவதற்கு முன்பு அக்கா திவ்யா இப்படி ஒருநாள் பிலாக்கணம் விரித்தாள். சிரிப்பு வந்தாலும் ரங்கராஜ் பதில் சொல்லவில்லை.
“ஆமா, குடும்பம் வெளங்கிரும்! அவ புருஷன் சம்பாரிக்கிற எல்லாத்தையும் ஒவ்வொரு ஹோட்டலா கொண்டு போய் கொட்டச் சொல்லு, பீச்சுக்கு இவ எதுக்குப் போறா? புருஷனோட சேர்ந்து மீன் புடிக்கிறாளாமா?” அப்பா போட்ட சத்தத்தில் அம்மா வாய்பொத்திச் சிரித்தார். ஆனால் திவ்யாவின் முகம் வாடிப்போனது.
“ஏம்மா திவ்யா, வாழ்க்கைய அனுபவிச்சு வாழணுங்கிறது நல்ல விஷயந்தான், அதுக்காக இப்பிடியெல்லாம் பண்ணணுமா? ஊர்ல யாரைக் கேட்டாலும் டிசைன் டிசைனா வியாதி சொல்லுறாங்க, முன்னாடியெல்லாம் வயசு போனாத்தான் வியாதி வந்துச்சு, இப்போ அப்பிடியில்லை, இப்பிடி ஹோட்டலுக்குக் குடுக்கிற காசுக்கு வீட்டுல ஆரோக்கியமா சமைச்சுச் சாப்பிடலாம், பொம்பிளைங்களுக்கு வேலைதான், இல்லேங்கலை, அதுக்காக என்ன பண்ண முடியும், வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைச்சா வெளியூருக்குப் போங்க, புதுப்புது ஊர்களைப் பாருங்க.” இது அம்மா.
“ஆமா, உங்க புருஷன் அப்பிடி எத்தனை ஊரை உங்களுக்குச் சுத்திக் காட்டிட்டாராம்?” வாய்க்குள் முணுமுணுத்தபடி திவ்யா நகர்ந்ததை நினைக்கும் போது இப்போதும் இவனுக்குச் சிரிப்பு வந்தது.
“நாளைக்கு இவளெல்லாம் கல்யாணம் பண்ணி என்ன கூத்தெல்லாம் காட்டப்போறாளோ தெரியலை தம்பி!” அம்மாவின் கவலை அம்மாவுக்கு. தனக்கென்று வர இருப்பவள் என்ன கூத்தெல்லாம் காட்ட இருக்கிறாளோ?! சட்டென்று தோன்றிய எண்ணத்தில் ரங்கராஜின் முகத்தில் புன்னகைப் படர்ந்தது.
‘வாரத்தில் ஒருநாள் லீவு கேட்பாளா? இல்லை வாரம் முழுவதும் லீவு கேட்பாளா?’ சிரித்தபடியே நிமிர்ந்தவன் நெஞ்சுக்குள் சடாரென ஓர் முகம் தோன்றி மறைந்தது. மின்சாரத்தைத் தொட்டவன் போல திடுக்கிட்டு நிமிர்ந்தான் இளையவன். சத்தியமாக அது அர்ச்சனாவின் முகம் இல்லை.
நேரம் மாலை ஐந்தைத் தாண்டியிருந்தது. ஹோட்டல் சம்பந்தமாக நண்பன் ஒருவனைப் பார்க்க வேண்டியிருந்ததால் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ரங்கராஜ். பிரதான சாலையிலிருந்து கிளைச்சாலைக்கு வண்டியைத் திருப்பியவன் தூரத்தில் நின்றிருந்த பெண்ணை உற்று நோக்கினான்.
அந்த வீதியில் யாரும் இருக்கவில்லை. ஒரு பெண் பிள்ளையின் அருகே இரண்டு வாலிபர்கள் நின்று பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இவனது வண்டியைப் பார்த்ததும் அவர்கள் சட்டென்று கிளம்பிவிட்டார்கள். சுடிதாரின் முந்தானையைத் திருகியபடி நின்றிருந்தவள் மீரா.
“நீ இங்க என்ன பண்ணுறே?”
“அது… வந்து…”
“யாரவங்க?” கூராக வந்தது கேள்வி.
“தெரியலை… கொஞ்ச நாளா…”
“கொஞ்ச நாளா என்ன நடக்குது?” அத்தானின் குரலில் இருந்த உஷ்ணம் பார்த்து இவளுக்கு வெடவெடத்தது.
“இப்பிடித்தான் டியூஷன் போகும்போது வந்து பேசுறாங்க, என்னெல்லாமோ சொல்றாங்க, எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.” அவனை ‘அத்தான்’ என்று விளிப்பதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது.
“வீட்டுல அப்பாக்கிட்டச் சொல்லி இருக்கலாமில்லை?” குற்றம் சொல்லவும் மீரா இவனை ஓர் பார்வைப் பார்த்தாள். அப்பாவிடம் போய் சொல்லும் விஷயமா இது என்று அவள் கேட்பது போலிருந்தது.
“சரிசரி, இனி இப்பிடி ஏதாவது வந்து கலாட்டா பண்ணினா எங்கத்தான் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்கன்னு சொல்லு, இப்போ வண்டியில ஏறி உட்காரு.”
“என்ன?! இல்லை… பரவாயில்லை, நான் நடந்து போயிருவேன்.”
“சொன்னா சொன்னதைக் கேளு மீரா, உன்னை இப்பிடி ரோட்டுல விட்டுட்டு என்னால நிம்மதியா வீடு போக முடியாது, முதல்ல நீ ஏறு.” அதற்கு மேலும் பிகு பண்ணுவது நன்றாக இராது என்பதால் சற்று இடைவெளி விட்டு ஏறி உட்கார்ந்தாள்.
“கவனம், விழுந்திரப் போறே, மாமா பொண்ணுன்னு பேருதான், உன்னையெல்லாம்…” என்றவன் அதற்கு மேல் பேசாமல் பைக்கை அவள் வீட்டிற்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான். பெண் இறங்கிக் கொண்டது.
“உள்ள வாங்க அத்தான்னு கூப்பிட மாட்டியா?”
“இல்லை… உங்களுக்கு ஹோட்டல்ல வேலை இருக்கும்…”
“நான் அப்பிடிச் சொல்லலையே.” அவன் இவ்வளவு இலகுவாகப் பேசி இன்றைக்குத்தான் அவள் முதல்முறையாகக் கேட்கிறாள். இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதால் சட்டென்று மாமா வீட்டிற்கு வரமாட்டான். மீரா உயர்தரம் படிக்கிறாள். அடுத்த வருடம் பரீட்சை என்பதால் படிப்பில் மும்முரமாக இருக்கிறாள். ஆனால் மூத்தவள் வந்தனா அப்படியில்லை. பெரிய பெண். பிஎஸ்ஸி கடைசி வருடம் படிக்கிறாள். நல்ல மாப்பிள்ளைக் கிடைத்தால் அடுத்த மாதமே மாமா திருமணத்தை நடத்திவிடுவார்.
“பெரியவளுக்கு நகை சேர்த்து வெச்சிருக்கேன் ரங்கா, சீட்டொன்னு போட்டதுல பத்து லட்சம் கிடைச்சது, அதைத் தொடாம அப்பிடியே பேங்க்ல போட்டிருக்கேன், நாங்க இப்போ இருக்கிற வீடு பெரியவளுக்குத்தான், வீட்டுக்குப் பின்னால இருக்கிற நிலத்துல சின்னவளுக்கு வீடு கட்டணும், நல்ல பசங்க யாராவது இருந்தா சொல்லு, உன்னோட சினேகிதப் பசங்க யாராவது இருந்தாலும் சொல்லு, கவர்மெண்ட் உத்தியோகமா இருந்தா நல்லது, அதுக்கு மேல போக எங்கிட்டத் தெம்பில்லைப்பா, அடுத்த வருஷத்துக்குள்ள எப்பிடியாவது பெரியவ கல்யாணத்தை முடிச்சுடணும்.” முன்பொருமுறை தங்கவேல் மாமா இவனிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
“உள்ள வாங்க அத்தான்.” மாமாவின் இளைய மகள் ஆசையாக அழைக்கவும் ஒரு புன்னகையோடு இறங்கி உள்ளே வந்தான். மீராவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“அப்பிடியென்ன ஆச்சரியம் நான் உங்க வீட்டுக்கு வர்றதுல?”
“நீங்க எங்க வீட்டுக்கெல்லாம் வருவீங்களா? உங்க மீனாட்சி அத்தை வீட்டுக்குப் போவீங்க.” சொல்லிவிட்டு வாயை இறுக மூடிக்கொண்டாள் பெண். ரங்கராஜின் கண்டனப் பார்வை அவளைத் துளைத்தது.
“யாரு மீரா அது?” கேட்டபடி வந்த வந்தனா அப்படியே நின்றுவிட்டாள். தங்கள் வீட்டு ஹாலில் அத்தானா?! அக்காவின் ஆச்சரியமான பார்வையைப் பார்த்த மீராவிற்கு சிரிப்பு வந்தது.
“உட்காருங்க அத்தான், நான் டீ போட்டு எடுத்துக்கிட்டு வர்றேன்.” மீரா உள்ளே ஓடவும் இவன் பார்வை எதிரில் இருப்பவளைச் சாவகாசமாக அளந்தது. இப்போதுதான் அவளும் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருப்பாள் போலும். புடவை அணிந்திருந்தாள். இவனது அதிசயித்த பார்வைப் பார்த்து,
“இன்னைக்கு யூனில ஒரு ஃபங்ஷன்… அதான்…” என்றாள் பதில் போல.
“டீ… குடிக்கிற மாதிரி வருமா?” என்றான் சமையலறையைப் பார்த்தபடி. வந்தானாவிற்கும் இப்போது சிரிப்பு வந்தது.
“இல்லை, நல்லாவே போடுவா.”
“மாமாவும் மாமியும் எங்க?”
“எங்கேயாவது ரெண்டு பேரும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருப்பாங்க, நான் வீட்டுக்கு வரும்போது அவங்க இல்லை.”
“அக்கா உனக்கும் சேர்த்துத்தான் போட்டேன், எடுத்துக்கோ.” என்றபடி வந்த மீரா ஒரு கப்பை அத்தானிடம் நீட்டினாள். களைத்துப் போய் வந்திருந்த வந்தானாவிற்கும் தங்கை நீட்டிய பானம் இதமாக இருந்தது.
“படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது மீரா?”
“நல்லா போகுது அத்தான்.”
“உங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வெக்கணுங்கிறதுல மாமா ரொம்பக் கவனமா இருக்காரு, நீயும் எப்பிடியாவது யூனிக்கு செலக்ட் ஆகிடணும், உன்னோட கவனம் எங்கேயும் போயிரக்கூடாது.”
“சரி அத்தான்.” அத்தான் எங்கே வருகிறார் என்று மீராவிற்கு நன்றாகப் புரிந்தது.
“நான் கிளம்புறேன்.” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் போய்விட்டான்.
“என்னடீ இங்க நடக்குது? இந்த மனுஷன் எப்பிடி நம்ம வீட்டுக்கு வந்தாரு?!”
“டீயூஷன்ல இருந்து வரும்போது ரெண்டு பசங்க எங்கிட்ட வேணும்னே வம்பு பண்ணினாங்க, அதை அத்தான் பார்த்துட்டாரு, அதான் போகும்போது அட்வைஸ்.” என்றவள் உள்ளே போய்விட்டாள். உள்ளுக்குள் ஓர் உவகைப் பொங்குவதைப் பெரியவளால் தடுக்க முடியவில்லை.






Wow awesome
அத்தானுக்கு ஜோடி அர்ச்சனா இல்லைன்னு ஆகி போச்சு, அடுத்த ஆப்ஷன் வந்தனாவா? இல்ல மீராவா? 🤔🤔
அட்ரா சக்க
அத்தை பொண்ணுகள்
அளவில்லாமல் இருக்கே…..
ஆர்த்தி இல்லைன்னா
அர்ச்சனாவா. …
அடடா….
அத்தான் பார்வை
வந்தனா வா????
👌🏻
எனக்கு என்னவோ மீரா தான் ஹீரோயினா இருப்பாளோ என்று தோணுது.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Nice