அத்தியாயம் 2
ஒரு வாரம் கடந்த நிலையில் அந்த சந்திப்பு நடந்திருந்தது. ரங்கராஜ் இதை சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அன்று மீராவை கலாட்டா செய்த பையன்களை அவனுக்குத் தெரியும். நல்ல பிள்ளைகள்தான். ஏதோ விளையாட்டாக கேலி பண்ணியிருப்பார்கள் என்று நினைத்திருந்தான். ஆனால் இன்றைக்கு அந்தப் பையன்களில் ஒருவன் தன்னைப் பார்க்க வந்தபோது இவனுக்கு ஆச்சரியமாகிப் போனது.
பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தியவன் ஹாலை நோட்டம்விட்டான். அப்பாவைக் காணவில்லை. வெளியே எங்கேயோ போயிருக்க வேண்டும். வாசலில் அவரது செருப்பையும் காணவில்லை. நேராக வீட்டின் பின் முற்றத்திற்குப் போன மகனை ஆச்சரியமாகப் பார்த்தார் அம்மா.
“ரங்கா, என்னாச்சு? இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கே?”
“அப்பா எங்கம்மா?”
“ஏதோ வேலையா வெளியே போயிருக்காங்க, ஏம்பா?”
“உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், எங்கூட வாங்க.” என்றவன் மாமர நிழலில் அம்மாவை உட்கார வைத்து அன்றைக்கு நடந்த நிகழ்வைச் சொன்னான்.
“வயசுப் பசங்க, சும்மா ஏதோ குறும்பு பண்ணுறாங்கன்னு நினைச்சுத்தான் அப்பிடி அன்னைக்கு மீராக்கிட்டச் சொன்னேன், ஆனா நிஜமாவே அந்தப் பையன் இன்னைக்கு என்னைப் பார்க்க வருவான்னு நான் நினைச்சும் பார்க்கலைம்மா.”
“மாமாக்கு இதெல்லாம் தெரியுமா தம்பி?”
“இல்லைம்மா, நான் இன்னும் எதுவும் சொல்லலை.”
“சொல்ல வேணாம்பா, பாவம் மாமா, ஆம்பிளைப் பிள்ளைங்க இல்லாத வீடு, அவருக்கு இந்தப் பஞ்சாயத்தை எல்லாம் பார்க்க முடியாது.”
“இல்லைம்மா, பையன் ரொம்பத் தீவிரமா இருக்கான், அவனோட பேச்சுல அவ்வளவு உறுதி தெரிஞ்சுது.”
“என்ன படிச்சிருக்கானாம்?”
“என்ஜினியர்மா.”
“என்னது? என்ஜினியரா?! என்ஜினியர் மாப்பிள்ளை எடுக்கிற அளவுக்கு மாமாக்கிட்ட வசதி இல்லையே தம்பி!”
“அது எனக்குத் தெரியாதாம்மா, ஆனா பையன் வீட்டுல எந்த எதிர்பார்ப்பும் இல்லையாம், அவனோட விருப்பந்தான் முக்கியமாம், எங்க வீட்டுல என்னோட விருப்பம் எல்லாருக்கும் தெரியும்னு சொல்றான்.”
“என்ன ரங்கா இது?! எனக்கு எதுவுமே புரியலையே!”
“ஆனா பையன் தெளிவா இருக்கான்மா, எனக்கு இன்னும் படிப்பு முடியலை, ரெண்டு வருஷப் படிப்பு இருக்கு, அதுக்கப்புறமா ஒரு வேலை தேடணுமாம், இதெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாத்தான் கல்யாணமாம், ஆனா மீரா அவனுக்குத்தான்னு அவனுக்கு உறுதியாத் தெரியணுமாம், உங்க மாமா வீட்டுல பேசுங்கண்ணான்னு சொல்றான்.”
“பையனோட குடும்பம் எப்பிடி? நம்ம ஊர் காரங்களா?” அம்மாவின் கேள்விக்கு மகன் பதில் சொன்னபோது சுலக்சனா ஆச்சரியப்பட்டுப் போனார்.
“ஐயையோ! அவங்க ரொம்ப நல்ல மாதிரி தம்பி, இந்த சம்பந்தம் அமைஞ்சா மீரா அதிர்ஷ்டசாலிதான், ஆனா… வந்தனா…”
“வந்தனாக்கு என்ன?”
“பெரியவ இருக்கும் போது சின்னவளுக்கு எப்பிடிக் கல்யாணம் பேசுறது?”
“அதுக்கு?”
“முதல்ல அண்ணாக்கிட்டச் சொல்லி வந்தனாக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லணும், அவளுக்கும் வயசு ஏறுதில்லை? இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடியே படிச்சுக்கிட்டு இருக்கப்போறா?”
“ஏம்மா? நல்லா படிக்கிற பொண்ணு, படிச்சு ஒரு உத்தியோகம் பார்க்க ஆரம்பிச்ச பின்னாடிதானே கல்யாணம் பண்ணணும்?”
“அது சரிதான், ஆனா தங்கச்சிக்கு நல்ல வரன் வரும்போது அக்கா முட்டுக்கட்டையா நிற்கக் கூடாதில்லை, கல்யாணத்தைப் பண்ணிட்டு வந்தனா படிக்கட்டுமே, அது ஒன்னும் தப்பில்லையே?” கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையை ரங்கராஜ் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இன்றைக்குத்தான் நிஜத்தில் பார்க்கிறான்.
***
அன்றைக்கு ரங்கராஜின் பிறந்தநாள். காலையிலேயே அம்மா சர்க்கரைப் பொங்கல் செய்திருந்தார். அந்த நாளை இனிப்புடன் ஆரம்பிக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஷக்தி தன் அண்ணனுக்கு ஓர் ஷர்ட் வாங்கிப் பரிசளித்தாள். கூடவே ஒரு வாழ்த்து அட்டை.
“உனக்கேதும்மா பணம் இதுக்கு?”
“நீங்கெல்லாம் குடுக்கிற பார்க்கெட் மணியை சேர்த்து வெச்சிருந்தேண்ணா.”
“அடடா! அது உனக்குக் குடுத்த மணி.”
“அப்பிடிச் சொல்லாத ரங்கா, தங்கிட்ட இருக்கிற பொருள்ல தன்னோட அண்ணாக்குச் செய்யணும்னு அவ நினைச்சிருக்கா, அதை நீ தடுக்காதே, இந்த நினைப்பு வீட்டுல இருக்கிற ஒவ்வொரு பொம்பிளைப் பிள்ளைக்கும் இருக்கணும், இல்லைன்னா நாளைக்குக் கல்யாணம் ஆனதும் இங்க இருந்து புடுங்கத்தான் பார்ப்பாளுங்க.” அம்மாவின் அறிவுரை சரியென்றுதான் பட்டது இளையவனுக்கும்.
சற்று நேரத்திலெல்லாம் திவ்யா தன் குடும்பத்தோடு வந்துவிட்டாள். தம்பியின் பிறந்தநாளுக்கு அவளும் ஒரு ஷர்ட்டும் அவனுக்குப் பிடித்த பலகாரங்களும் செய்து கொண்டுவந்திருந்தாள். தன் பெண்களைப் பார்த்தபோது சுலக்சனாவிற்கு சந்தோஷமாகிப் போனது.
“பரவாயில்லை சுலோ, பொண்ணுங்களை நல்லாத்தான் வளர்த்திருக்கே.” கணவரின் பாராட்டு வேறு அவரை ஆனந்தப்படுத்தியது. அப்போது சரியாக அந்த கார் அவர்களின் வீட்டின் முன்பாக வந்து நின்றது. பார்த்தபோதே தெரிந்தது. அது மீனாட்சியின் வீட்டு கார் என்று.
“யாரு வந்திருக்கிறது? மீனாட்சியா?” முகம் முழுக்கப் புன்னகையாக எழுந்து வாசலுக்குப் போனார் மாணிக்கம். ஆனால் வந்தது அர்ச்சனா. தானாகவே காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்தாள்.
“அடடே! அர்ச்சனா, வாம்மா வா வா, தனியாவா வந்தே?”
“ஆமா மாமா, இன்னைக்கு அத்தானோட பர்த்டே இல்லையா, பார்த்து விஷ் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன்.
“வா அர்ச்சனா.” இது சுலக்சனா.
“நல்லா இருக்கீங்களா மாமி? அத்தான் எங்க?”
“உள்ளதான் இருக்கான்மா, இப்பதான் திவ்யாவும் வந்தா.”
“அப்பிடியா?” ஒத்த வயதுப் பெண்கள் என்பதால் அந்த இடம் சற்று நேரத்தில் கலகலப்பாகிப் போனது.
“எங்கண்ணாவை விஷ் பண்ணினது போதும், என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்தே?” இது ஷக்தி. அந்த வார்த்தைகளை அண்ணன் ரசிக்கவில்லைப் போலும். தங்கையை ஒரு பார்வைப் பார்த்தான். ஆனால் இவை எதையும் அர்ச்சனா கணக்கில் கொள்ளவில்லை.
“அத்தானுக்கு நான் வாங்காம வேற யாரு வாங்கப் போறாங்க?” என்று சவால் விட்டவள் அழகானதொரு நீள் சதுர வெல்வெட் பெட்டியை நீட்டினாள்.
“இதெல்லாம் எதுக்கு? பர்த்டே கொண்டாடுற வயசா எனக்கு?” இது ரங்கராஜ். அந்தப் பெண் பரிசுப் பொருளோடு அப்போது வந்தது அவனுக்கு அசௌகரியமாக இருந்தது.
“அப்பிடியென்ன வயசாச்சு அத்தான் உங்களுக்கு? பிரிச்சுப் பார்த்துப் புடிச்சிருக்கான்னு சொல்லுங்க.”
“நான் அப்புறமா பார்க்கிறேன்.” மகனின் விலகலை அம்மாவின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.
“அதான் புள்ளை ஆசையா வாங்கிக் குடுக்குதில்லை, என்னன்னு பிரிச்சுப் பாரு தம்பி.” இது மாணிக்கம். அவர் மனதுக்குள் ஆயிரம் கற்பனைகள் இருந்தபடியால் நடப்பதை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். சங்கடமாக உணர்ந்தாலும் அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாமல் அந்தப் பெட்டியைத் திறந்தான் மகன். தங்க நிறத்தில் மிகவும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்தது.
“வாவ்! ரொம்ப அழகா இருக்கு அர்ச்சனா.” திவ்யாவின் முகம் மலர்ந்து போனது. மீனாட்சி அத்தையின் வீட்டினருக்குத் தங்கள் வீட்டு ஆண்பிள்ளையை மாப்பிள்ளையாக்கும் எண்ணம் இருப்பது இந்த வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த எண்ணத்தில் இவர்களுக்கும் உடன்பாடு உண்டு என்பதால் யாரும் எதையும் தவறாக நினைக்கவில்லை.
“புடிச்சிருக்கா அத்தான்?”
“ம்…” என்றவன் ஓர் அலைபேசி அழைப்பு வரவும் சட்டென்று முன் தோட்டத்திற்குச் சென்றுவிட்டான். சற்று முன்புவரை இருந்த சந்தோஷம் அர்ச்சனா வந்த பிறகு காணாமல் போனது போல இருந்தது. எதற்காக இந்தப் பெண் இப்போது இங்கே வந்தது?! எண்ணங்களோடு போராடிய படி இருந்தவன் வந்த அழைப்பை ஏற்கவுமில்லை, பேசவுமில்லை.
“அம்மா, முக்கியமான ஒரு கால் வந்திருக்கு, நான் உடனேயே கிளம்பணும்.” என்று வெளியே இருந்தபடியே அம்மாவின் அலைபேசிக்கு அழைத்துச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
“தம்பி, அந்தப் பொண்ணு வந்திருக்கு…”
“அந்தப் பொண்ணோட உட்கார்ந்து நான் என்ன பண்ணப் போறேன்? அதான் வீட்டுல இத்தனை லேடீஸ் இருக்கீங்கல்லை, நல்லா கவனிச்சு அனுப்புங்க.” கொஞ்சம் கோபமாக வந்து வீழ்ந்த வார்த்தைகளில் சுலக்சனாவிற்குக் கவலை உண்டானது.
நேராக ஹோட்டலுக்கு வந்துவிட்டான் ரங்கராஜ். மனதுக்குள் எதுவோ ஒன்று நிரடுவது போலிருந்தது. அது அர்ச்சனாவின் வரவால் உண்டானது என்பதை இப்போது இவனால் தெளிவாக உணர முடிந்தது. இவன் தனது பைக்கை நிறுத்துவதற்கும் தங்கவேல் தனது இருசக்கர வாகனத்திலிருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.
“வாங்க மாமா.”
“பிறந்தநாள் வாழ்த்துகள் மருமகனே!”
“ஐயையோ! என்ன மாமா நீங்க போய் எனக்கு வாழ்த்துச் சொல்லிக்கிட்டு.” லஜ்ஜையில் சிவந்த முகத்தோடு அம்மானைப் பார்த்துச் சிரித்தான் இளையவன்.
“காலம் பறந்து போச்சு ரங்கா! நீ அன்னைக்குத்தான் பொறந்த மாதிரி இருக்கு, ஆனா அதுக்குள்ள இருபத்தி எட்டு வருஷம் ஓடியே போயிருச்சு பார்த்தியா! நீ பொறந்தப்போ எங்கப்பா, அதான் உன்னோட தாத்தா, எனக்குப் பேரன் பொறந்திருக்கான்னு வெடி கொளுத்திக் கொண்டாடினாரு.”
“ஐயையோ!” மாமனும் மருமகனும் இப்போது வாய்விட்டுச் சிரித்தார்கள்.
“இந்தா, இது உனக்குத்தான், உனக்குப் பூந்தி லட்டு பிடிக்கும்னு கொண்டு வந்தேன்.” எவர்சில்வர் பாத்திரத்தில் நெய்வடிய மஞ்சள் நிற உருண்டைகள் நாக்கில் எச்சிலை ஊறவைத்தன.
“மாமி பண்ணினாங்களா மாமா?”
“மாமிக்கு இதெல்லாம் பண்ணுற அளவுக்கு இப்போ பொறுமையும் இல்லை, ரொம்ப நேரம் நிற்கவும் முடியாது, இது வந்தனா பண்ணினா, நேத்து முழுக்க வீட்டுல இதே பேச்சு, அத்தானுக்கு நாளைக்கு பர்தடேன்னு ரெண்டு பேரும் பண்ண ஆரம்பிச்சாங்க, சின்னதைத்தான் உனக்குத் தெரியுமே, வேலைன்னு வந்துட்டா ஒரு புத்தகத்தைக் கையில தூக்கிரும், கடைசியில வந்தனாதான் எல்லாம் பண்ணினா.”
“நீங்களும் சாப்பிடுங்க மாமா.”
“இல்லைப்பா, முன்ன மாதிரி அதிகம் ஸ்வீட் சாப்பிடுறதில்லை, கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கிறது நல்லதுதானே, ஆஃபீஸுக்கு டைமாச்சு, நான் கிளம்புறேன்.” என்றவர் அத்தோடு புறப்பட்டுவிட்டார்.
கையிலிருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது இதுவரையும் வெறுமையாகக் கிடந்த உள்ளம் நிறைவது போலிருந்தது. கையைக் கூட கழுவாமல் அந்த லட்டுகளை உண்ண ஆரம்பித்திருந்தான். கொஞ்ச நேரம் முன்பாகத்தான் வீட்டில் அத்தனை இனிப்பாகப் பொங்கல் சாப்பிட்டிருந்தான். சாதாரணமாக இவ்வளவு இனிப்பெல்லாம் உண்பவன் கிடையாது. ஆனால் இந்த லட்டு இன்றைக்கு தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு சென்றது.
அதேவேளை தன் அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வந்தனா. அந்த நொடி அவள் உணர்வது மகிழ்ச்சியா? சங்கடமா? கவலையா? எதுவென்று அவளுக்குத் தெரியாது. அந்த உணர்வை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு அவளிடம் சக்தி கிடையாது. உடைத்துச் சொன்னால் அவர்களிடம் பணம் கிடையாது.
அவர்கள் வீட்டுப் பொருளாதாரம் அத்தனை மோசமானது இல்லை. அப்பா தங்கவேல் அரசாங்க உத்தியோகஸ்தர். நான்குபேர் வாழும் அவர்கள் குடும்பத்தைத் தாராளமாக நடத்தும் அளவிற்கு இருந்தது அந்த மனிதரின் வருமானம். ரேவதியும் நல்ல பெண்மணி. கணவரின் ஊதியத்தை முத்துப் போல செலவழிப்பார், சேமிப்பார். அது போக வீட்டிலேயே காய்கறித் தோட்டம், சின்னதாக கோழிப்பண்ணை என அவர் பங்கிற்கும் ஏதாவது செய்வார்.
ஆனால் இந்த வாழ்க்கை முறை அவள் அத்தையின் வீட்டோடு நின்று பிடிக்கப் போதாது. அத்தை சுலக்சனா அருமையான பெண்தான். தன் அண்ணன் பெண்களின் மீது அவ்வளவு பாசம் அவருக்கு. ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளமாட்டார். அது இவர்களுக்கும் தெரியும்.
மாமா மாணிக்கமும் நல்ல மனிதர்தான். பார்த்தால் நன்றாகப் பேசுவார். இந்தப் பிள்ளைகளின் படிப்பு பற்றி விசாரிப்பார். ஆனால் அதற்கு மேல் போகமாட்டார். அதேபோல இவர்களையும் ஓர் எல்லைக்கு மேல் தள்ளியே நிறுத்தும் அவர் பேச்சு. மரியாதைக் குறைவாக நடத்தமாட்டார் என்றாலும் ஓர் அன்னியோன்யம் இருக்காது. அதனால் இவர்களும் தங்கள் எல்லை தெரிந்து நடந்து கொள்வார்கள்.
ஆனால் அவர் தங்கையின் வீடென்று வந்துவிட்டால் மனிதரின் நடவடிக்கைகள் முழுதாக மாறிவிடும். செல்வத்தில் ஓங்கி நிற்கும் அவர் தங்கை மீனாட்சி என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த வீட்டுப் பெண்களைத் தாங்குவார். இவரது கஷ்ட நஷ்டங்களில் அவர்கள் தோள் கொடுப்பதால்தான் இவ்வளவும் என்று இவர்களுக்கும் தெரியும். அதில் நியாயமும் இருப்பதால் அமைதி காப்பார்கள்.
அந்த வீட்டுப் பெண்களில் ஒன்றைத்தான் அத்தானுக்குப் பார்ப்பதென்று முடிவாகி இருக்கிறதாம். அதை நினைத்த மாத்திரத்தில் வந்தனாவின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் நிறைந்தது. மூத்த பெண் ஆர்த்தியைத்தான் பார்ப்பார்கள் என்று முதலில் பேசிக்கொண்டார்கள். நல்லவேளையாக அந்தப் பெண் வேறு யாரையோ காதலித்துக்கொண்டு வந்து நின்றது. இப்போது அர்ச்சனாவைத்தான் பார்ப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
“அத்தை…” தனது அத்தனைக் கலக்கங்களையும் தூக்கி எறிந்துவிட்டு சுலக்சனாவை அழைத்திருந்தாள் வந்தனா. இன்றைக்கு அவனது பிறந்தநாள். ஒரு தடவையாவது அவனது குரலைக் கேட்டுவிடமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது. எதற்கு இந்த வீணான ஆசைகள் என்று அவளுக்கு விளங்கவும் இல்லை. ஆனாலும் இளமை ஏங்கித் தவிக்கிறது.
“அடடே! வந்தனா, சொல்லும்மா, வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“இருக்காங்க அத்தை, நீங்க சௌக்கியமா?”
“எனக்கென்னடி ராஜாத்தி, நான் நல்லாத்தான் இருக்கேன்.”
“இன்னைக்கு அத்தானோட பர்த்டே இல்லையா, நான் விஷ் பண்ணினேன்னு சொல்லுங்கத்தை.”
“இப்பதான் கிளம்பி ஹோட்டலுக்குப் போனான்மா, புள்ளைக்குப் பொறந்தநாள்னு பொங்கல் செஞ்சேன், அதுக்கே நானென்ன சின்னப்புள்ளையா பர்த்டே கொண்டாடன்னு கேட்கிறான்.” இப்போது பதில் சொல்லாமல் இளையவளும் புன்னகைத்தாள்.
“ஆனா திவ்யாவும் ஷக்தியும் விடலை, ரெண்டு பேரும் ஷர்ட் வாங்கிக் குடுத்தாங்க.”
“அம்மா லட்டுப் பண்ணி அப்பாக்கிட்டக் குடுத்துவிட்டாங்க, அத்தானுக்கு பூந்தி லட்டுப் புடிக்குமில்லை அத்தை?” பெண் இலேசாகப் பொய் சொன்னது.
“ஆமாடா, வீட்டுல பண்ணுறது அவனுக்கு இன்னும் புடிக்கும், வேலை ஜாஸ்தின்னு நாந்தான் பண்ணமாட்டேன், எதுக்கு அண்ணி இவ்வளவு சிரமப்பட்டுப் பண்ணணும்?”
“அதெல்லாம் பரவாயில்லை, நாங்களும் அம்மாக்கு ஹெல்ப் பண்ணினோம், ஷக்தியும் திவ்யாவும் எப்பிடி இருக்காங்க? எங்க அத்தை ரெண்டு பேரும்?”
“அர்ச்சனா கூட பேசிக்கிட்டு இருக்காங்கம்மா, அந்தப் பொண்ணு காலையிலேயே கிஃப்ட்டோட வந்திடுச்சு, தம்பிக்கு ஏதோ வாட்ச் வாங்கிட்டு வந்திருக்கும் போல, மத்தியானம் சாப்பிட்டுட்டுப் போம்மான்னு மாமா சொல்லவும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க.”
“ஓ… அப்போ நான் அப்புறமா பேசுறேன் அத்தை.” என்றவள் அத்தோடு அழைப்பைத் துண்டித்துவிட்டாள். மீண்டும் கண்களில் கண்ணீர் துளிர்த்ததை அவளால் தடுக்கமுடியவில்லை. எதன் அடிப்படையில் அவள் மனதுக்குள் ஆலமரம் போல ஓர் ஆசை வளர்க்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அதைத் தடுக்கும் வழியும் தெரியவில்லை.
***
அந்த வார இறுதியில் தன் அண்ணன் வீட்டிற்குக் கணவரோடு வந்திருந்தார் மீனாட்சி. வரும்போது கூடை நிறைய பழங்கள், ஸ்வீட், காரம் என தடபுடலாக வந்திருந்தார். அப்போது ரங்கராஜும் வீட்டில்தான் இருந்தான்.
“வாங்க வாங்க.” வாய் நிறைய வரவேற்றாலும் சுலக்சனாவின் மனதிற்குள் மணி அடித்தது. அண்ணன் வீட்டிற்கு ஓர் தங்கை சாதாரணமாக வருவது போல் இருக்கவில்லை அவர்களது வரவு.
“உட்காருங்க.”
“எல்லாரும் வீட்டுல இருக்காங்களா அண்ணி?”
“இருக்காங்க மீனாட்சி, ரங்கா! அத்தை வந்திருக்காங்க.” மனமேயில்லை என்றாலும் மகனை அழைத்தார் அம்மா. வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்ததும் இளையவனின் முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை என்பதை அம்மாவின் கண்கள் வருத்தத்தோடு கவனித்துக் கொண்டது.
“வாங்க மாமா, வாங்கத்தை.” இது ரங்கராஜ்.
“எப்போ வந்தே மீனாட்சி? வாங்க மாப்பிள்ளை.” வீட்டின் பின்புறமாக இருந்து வந்த மாணிக்கம் ஆர்ப்பாட்டமாக வந்து அவர்களின் எதிரே அமர்ந்துகொண்டார்.
“வர்றீங்கன்னு சொல்லவேயில்லை?”
“ஆமா மச்சான், இந்நேரத்துக்கு எல்லாரும் வீட்டுல இருப்பீங்கன்னு தெரிஞ்சுதான் வந்தோம், இதுக்கு மேலயும் காலத்தைக் கடத்துறது நல்லதுன்னு எங்களுக்குப் படலை.”
“புரியலை மாப்பிள்ளை.” இப்போது மாணிக்கத்தின் கண்கள் மனைவியையும் மகனையும் ஓர் நொடி தொட்டுச் சென்றன. தன் அறையில் இருந்த ஷக்தியும் காதைத் தீட்டிக் கொண்டாள். திவ்யாவின் ஜாகை பெரும்பாலும் அவள் கணவன் வீட்டில்தான்.
“ஆர்த்தியோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சு மச்சான், அவங்க சந்தோஷமா இருக்காங்க, அதே கையோட அர்ச்சனா கல்யாணத்தையும் பண்ணிட்டா நல்லதுன்னு எங்களுக்குத் தோணுது.”
“நல்ல விஷயந்தானே மாப்பிள்ளை, தாராளமா பண்ணலாம், நம்ம பொண்ணுக்கும் வயசு ஏறுதில்லை?”
“அதைத்தான் நாங்களும் நினைச்சோம், அது சம்பந்தமா உங்கக்கிட்டப் பேசலாம்னுதான் வந்திருக்கோம்.”
“சொல்லுங்க மாப்பிள்ளை.”மாணிக்கத்திற்கு இப்போது பெருமைத் தாங்கவில்லை. தன் மகனை மாப்பிள்ளை ஆக்கும் எண்ணம் தங்கை வீட்டிற்கு உண்டென்று இவருக்குத் தெரியும். ஆனாலும் இதுவரை வாய் வார்த்தையாக யாரும் அதைப் பேசிக்கொண்டதில்லை. இப்போது நேரடியாகப் பேச்சு வரவும் மனிதர் பறக்காத குறையாக அமர்ந்திருந்தார்.
“உங்களுக்குத் தெரியாதது இல்லை மச்சான், எங்க எல்லாரோட மனசுலயும் ரங்காவை எங்க வீட்டு மாப்பிள்ளயா எடுக்கணும்னு விருப்பம் இருக்கு, அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.” தயங்கியபடி வந்த வார்த்தைகளில் மாணிக்கத்தின் முகம் மலர்ந்து விகசித்தது. ஆனால் சுலக்சனா மகனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தார். உணர்ச்சிகளை வெகுவாக அடக்கியபடி நின்றிருக்கிறான் என்று பார்த்தபோதே புரிந்தது.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை! இப்பிடியொரு வார்த்தையை நீங்க எப்ப சொல்லுவீங்கன்னுதான் நான் காத்துக்கிட்டு இருந்தேன், ரொம்ப ரொம்ப சந்தோஷம்.”
“உங்க எல்லாருக்கும் இந்த விஷயத்துல பூரண சம்மதம் இருக்கும்னு நான் நினைக்கிறேண்ணா.” இது மீனாட்சி.
“கண்டிப்பா மீனாட்சி, அர்ச்சனாவை யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா?”
“அண்ணி, உங்களுக்கு இதுல பூரண சம்மதமா?” தன்னை நோக்கித் திருப்பப்பட்ட கேள்வியில் சுலக்சனா திணறினாலும் பதில் சொல்லத் தயங்கவில்லை.
“ரங்காக்கு இதுல சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான் மீனாட்சி.”
“ரங்கா, இப்ப நீதான் பதில் சொல்லணும், உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டந்தானே?”
“அவன் மறுக்கிறதுக்கு எந்தக் காரணமும் இல்லையேம்மா, அவனுக்கு இதுல பூரண சம்மதந்தான்.” மகனை முந்திக்கொண்டு அப்பா படு உற்சாகமாக பதில் சொன்னார்.
மூத்த பெண்ணின் திருமணம் முடிந்த கையோடு இளைய பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று நமச்சிவாயம் தம்பதியினர் நினைக்கவில்லை. ஆறு மாதங்கள் கடந்த பிற்பாடு அடுத்த கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் அன்றைக்கு அத்தானின் பிறந்தநாளுக்குப் பரிசோடு ஆசையாகக் கிளம்பிய பெண் வீடு திரும்பிய போது அத்தனை உற்சாகமாக வரவில்லை.
“என்னாச்சு அர்ச்சனா? உன்னோட முகம் அவ்வளவு நல்லால்லையே?” மீனாட்சிதான் விசாரித்தார். அப்போது நமச்சிவாயமும் வீட்டில்தான் இருந்தார். அத்தானின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று வீட்டிலிருந்த அத்தனைப் பேரையும் ஒருவழி பண்ணியவள், காலையில் படு உற்சாகமாக ஸ்வீட்டோடு அத்தானைப் பார்க்கச் சென்றவள் இப்போது திரும்பி வந்திருக்கும் கோலம் அத்தனை நல்லதாகப் படவில்லை.
“என்னாச்சு அர்ச்சனா? ரங்கா வீட்டுல இல்லையா?”
“அப்பா… இந்தக் கல்யாணப் பேச்சை நீங்க சீக்கிரமா ஆரம்பிங்கப்பா.”
“ஏம்மா? அப்பிடியென்ன அவசரம்? அக்காக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, இன்னும் ரெண்டு மாசத்துல அர்ஜுனுக்குப் பரீட்சை இருக்கு, எல்லாத்தையும் முடிச்சுட்டு நிதானமா உன்னோட கல்யாண வேலைகளைப் பார்க்கலாமே?” அர்ஜுன் அவர்கள் வீட்டின் கடைக்குட்டி. இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்த வீட்டின் ஆண் சிங்கம்.
“அதெல்லாம் சரிதான்பா, ஆனா அத்தானுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையோன்னு எனக்குத் தோணுது.”
“எதை வெச்சு நீ இப்பிடிச் சொல்ற? அண்ணாக்கும் அண்ணிக்கும் உன்னை அவங்க வீட்டு மருமகளாக்கிறதுல எந்த மறுப்பும் இல்லை.”
“இப்பவும் அவங்களுக்கு மறுப்பு இருக்குன்னு நான் சொல்லலைம்மா, அத்தானுக்குத்தான் என்னவோ பிரச்சினைன்னு தோணுது.”
“எதை வெச்சு நீயா இந்த முடிவுக்கு வந்தே?” அம்மா கேட்ட கேள்விக்கு அன்றைக்குக் காலையில் நடந்ததைச் சொன்னாள் பெண்.
“இதெல்லாம் ஒரு விஷயமா? அவனுக்கு ஏதாவது அவசர வேலை வந்திருக்கும், சொல்லிக்காமக் கிளம்பிப் போயிருப்பான், அதுக்காக நீ என்னெல்லாமோ பேசுறே?” தன் அண்ணன் மகனை அம்மா விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் நமச்சிவாயம் நிதானித்தார். தன் மகள் காரணமில்லாமல் எதுவும் சொல்லமாட்டாள் என்கின்ற தெளிவு அவருக்கிருந்தது.
“சரிம்மா, இதைப்பத்தி நாம அப்புறமா யோசிக்கலாம்.” என்று அப்போதைக்கு அந்த விஷயத்தை ஆறப்போட்டவர் அடுத்தநாளே மனைவியிடம் பேசினார்.
“மீனாட்சி, எதுக்கு நல்ல விஷயத்தை தள்ளிப்போடணும், கல்யாணத்தை உடனே பண்ணலைன்னாலும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறது நல்லதுதானே? உங்கண்ணா வீட்டுல முறைப்படி பேசிட்டு சிம்பிளா நிச்சயதார்த்தத்தை வெச்சுக்கலாம், பிற்பாடு வசதிப்படுறப்போ கல்யாணத்தை நடத்தலாம்.”
“நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன், நீங்க தாராளமா போய் பேசுங்க, எங்கண்ணன் துள்ளிக் குதிக்கப் போகுது.” மீனாட்சி சொன்னது போலதான் இப்போது நடந்தது. ஆனால் அர்ச்சனா சொன்னதும் உண்மைதானோ என்ற சந்தேகம் மீனாட்சிக்கு அந்த நொடி வந்தது. இவ்வளவு பேச்சு நடந்தபோதும் ரங்கராஜ் எதுவும் பேசவில்லை. முகம் இலேசாக இறுகி இருந்தது.
“என்னத்தை அவசரம்? இப்பதானே ஆர்த்தியோட கல்யாணம் முடிஞ்சிருக்கு?” இப்போது நமச்சிவாயம் சட்டென்று தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
“அது சரிதான்பா, எல்லாத்தையும் பேசி முடிச்சு சிம்பிளா வீட்டோட நிச்சயதார்த்தத்தை முடிக்கலாம்னு மாமா அபிப்பிராயப்படுறாங்க.”
“எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்கத்தை, நான்…”
“உனக்கெதுக்கு இப்போ டைம் தேவைப்படுது? அப்பிடி என்னத்தை நீ யோசிச்சு முடிவெடுக்கப் போறே? எப்ப இருந்தாலும் நடக்க வேண்டிய கல்யாணந்தானே இது?” மகனைப் பேசவிடாமல் அப்பா குரலை உயர்த்தினார். வீடு நிசப்தமாகிப் போனது. சில நொடிகள் யாரும் எதுவும் பேசவில்லை.
“இல்லை மச்சான், கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களுக்கு இதுல முழு சம்மதம் இருக்கணும், ரங்கா நல்லா யோசிச்சு பதில் சொல்லட்டும், எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை, நாம கிளம்பலாம் மீனாட்சி.” என்ற நமச்சிவாயம் உடனேயே புறப்பட்டுவிட்டார்.
மாணிக்கம் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். இந்த உலகத்திலேயே அவர் மிகவும் மதிக்கும் நபர் என்றால் அது தன் தங்கையின் கணவர் நமச்சிவாயம்தான். தன் தங்கையைச் சிறப்பாக வாழ வைத்திருப்பது மட்டுமல்லாது தான் சிரமப்பட்ட பொழுதுகளிலெல்லாம் எதைப் பற்றியும் யோசிக்கலாம் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த மனிதரவர். அந்தக் கடன் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறது. ஆனாலும் என் பணத்திற்கு என்னவானது என்று ஓர் வார்த்தை இவர்களைப் பார்த்துக் கேட்டதில்லை.
தன் தங்கையின் குடும்பத்திற்குத் தான் பட்டிருக்கும் நன்றிக்கடனை அடைப்பதற்கு மாணிக்கத்திற்கு இருக்கும் ஒரே வழி அவர் பெற்ற புதல்வன் ரங்கராஜ்தான். அவனை அந்த வீட்டிற்கு மாப்பிள்ளையாக அனுப்பித் தன் நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று இவர் கனவு கண்டிருக்க… மகன் இப்படியொரு பதிலைச் சொல்லிவிட்டானே?! அதுவும் அத்தனை ஆசையாக மாப்பிள்ளைக் கேட்டு வந்தவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் போனதை இவரால் தாங்க முடியவில்லை. மனிதர் ஆடித்தீர்த்துவிட்டார்.
“உம் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே ரங்கா? நீ எது பண்ணினாலும் அப்பா தலையை ஆட்டுவேன்னா? தொழிலை உங்கிட்டத் தூக்கிக் குடுத்திருக்கேந்தான், அதுக்காக இந்த வீட்டுக்கான எல்லா முடிவையும் நீயே எடுக்கலாம்னு நினைச்சுட்டியா?”
“எல்லா முடிவையும் இல்லைப்பா, என்னோட கல்யாணம் சம்பந்தப்பட்ட முடிவை நான் எடுக்கணும்னு நினைக்கிறேன்.” திட்டமாக வந்தது பதில்.
“அப்போ அப்பா உனக்கு நல்லது பண்ணலையா?”
“நீங்க பண்ணுற நல்லதை எனக்கும் புடிக்கணுமில்லைப்பா.”
“ஓ… அர்ச்சனாவை விட நல்ல பொண்ணு உனக்குக் கிடைச்சிருமோ?”
“…” அர்ச்சனாவை விட்டு அவர் சிந்தையில் வேறெந்தப் பெண்ணும் வந்ததில்லையே. தன் தங்கை வீட்டைத் தவிர இந்த மனிதருக்கு வேறென்ன தெரியும்?
“எனக்குப் பதில் சொல்லுடா!”
“இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கிட்டுத் திரிஞ்ச பொண்ணுப்பா, என்னால அப்பிடியெல்லாம் அவளை நினைச்சுப் பார்க்க முடியலை, கல்யாணம் பண்ணுறது பெருசில்லை, அந்தப் பொண்ணோட நான் நல்லா வாழணும், அதுதான் அத்தைக்கும் மாமாக்கும் நான் பண்ணுற பெரிய மரியாதை.” அந்த வார்த்தைகளில் மாணிக்கம் கொஞ்சம் அடங்கினார். அதற்கு மேலும் அங்கே நின்றால் வார்த்தைகள் தடிக்கும் என்று ரங்கராஜ் ஹோட்டலுக்குப் போய்விட்டான்.
“எதுக்கு அவனோட இப்ப மல்லுக்கு நிற்கிறீங்க? அவன் யோசிச்சு நல்ல முடிவா சொல்லுவான், நீங்க அமைதியா இருங்க.”
“அவன் எவ்வளவு நாள் வேணும்னாலும் யோசிக்கட்டும், ஆனா பதில் எனக்குச் சாதகமா வரணும்.” உறுமலாகச் சொல்லிவிட்டு அந்த மனிதரும் வெளிநடப்புச் செய்துவிட்டார்.
“ஏம்மா, அண்ணா மனசுல வேற யாராவது இருப்பாங்களா?”
“என்னடீ ஷக்தி நீ புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடுறே?!”
“இல்லைம்மா, இப்ப இல்லைன்னாலும் எப்பவாவது இந்தப் பேச்சோட அத்தையும் மாமாவும் வருவாங்கன்னு நமக்கெல்லாருக்கும் தெரியும், அப்பிடியிருந்தும் அண்ணா இந்த விஷயத்தை ஆறப்போடுதுன்னா… எனக்கு அவ்வளவு நல்லதா படலை.”
“ஏய்! நீ கண்டதையும் சொல்லி என்னைப் பயமுறுத்தாதே.”
“இல்லைம்மா, எனக்கு டவுட்டாத்தான் இருக்கு, அண்ணா மனசுல என்னவோ இருக்கு.”
“அப்ப அந்தக் கருமத்தை நமக்கிட்டயாவது சொல்லலாமில்லை.”
“அதுவும் சரிதான், வெளியே சொல்லலைன்னாலும் அண்ணா மனசுல என்னவோ இருக்கு, எனக்கு அது சர்வ நிச்சயம்!” இப்போது மகளைப் பயத்தோடு பார்த்தார் அம்மா. ஷக்தி வாய்விட்டுச் சிரித்தாள்.






பணத்தை கொண்டு
பாசம் வளருமா…
பிறந்தநாள் வாழ்த்தை
பரிசாக பெரிதாக ஒரு பொருள் தரும் பெண்ணும்
பாவை செய்த இனிப்பும் இடையில்
பந்தாடப்படும் பாவம் ரங்கா…
பார்வையில் தவிப்பில் பெண்பாவை வாட
👌🏻🙋🏻♀️
ஹீரோ சார் மனதில் வந்தனா தான் இருக்காளோ..?
அப்பாக்கு மகனின் விருப்பத்தை விட பணம் தான் முதலில் இருக்கு.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Nice
அருமையான பதிவு