arrow_back
KAADHAL PESA VAA KANNE அத்தியாயம் 13
KAADHAL PESA VAA KANNE chevron_right பகுதி 13 / 13

அத்தியாயம் 13

visibility 630
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (27 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 13

பத்து நாட்கள் கடந்திருக்கும். அதற்குள்ளாக எந்தத் தாமதமும் செய்யாமல் நிச்சயதார்த்தம் வரை வந்திருந்தான் ஜெகதீஷ். பெண் வீட்டார் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனார்கள். பெரிய இடம், நல்ல மனிதர்கள், நல்ல பின்புலம் என்று எந்தக் குறையும் இல்லாமல் ஒரு சம்பந்தம் அமைந்ததில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.

“என்ன மச்சான் சொல்றீங்க? நம்ம ஷக்தியை அவங்க பொண்ணு கேட்டாங்களா?!” விஷயம் அறிந்த போது நமச்சிவாயம் வெகுவாக சந்தோஷப்பட்டார்.

“ஆமா மாப்பிள்ளை, எங்களுக்கும் என்ன பதில் சொல்றதுன்னு ஒன்னும் புரியலை.” இது மாணிக்கம்.

“இதுல யோசிக்க என்ன மச்சான் இருக்கு? அவங்களைப் பத்தி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கேன், ஊரைவிட்டு ரொம்ப நாள் முன்னாடியே கொழும்புக்குப் போயிட்டாங்க, அங்க போனதுக்கு அப்புறமா அவங்களுக்கு இன்னும் ஏறுமுகந்தான், நீங்க எதைப்பத்தியும் யோசிக்காம சட்டுன்னு சம்மதம் சொல்லுங்க.”

“சரி மாப்பிள்ளை, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.” எப்போதும் போல தன் மாப்பிள்ளையின் பேச்சுக்கு மறுப்புச் சொல்லவில்லை மாணிக்கம். ஆனாலும் தனக்குத் தெரிந்த இன்னும் சிலரிடமும் ஜெகதீஷைப் பற்றி விசாரித்திருந்தார். யாரும் ஒரு குறையும் சொல்லவில்லை.

“கந்தசாமி, அப்போ சரின்னு சொல்லிடலாமா?”

“தயங்காதீங்க ஐயா, நான் விசாரிச்ச வரைக்கும் எல்லாரும் நல்ல மாதிரியாத்தான் சொல்றாங்க.”

“இருந்தாலும் மனசு பயப்பிடுது.”

“இல்லையா பின்னே, ஒரு பொண்ணைத் தூக்கிக் குடுக்கிறதுன்னா சும்மாவா? ஆனாலும் நம்ம ஷக்திப் பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டசாலிதான், நீங்க தேடியிருந்தா கூட இப்பிடியொரு சம்பந்தம் அமைஞ்சிருக்காது.” 

அனைவரது ஆலோசனை, ஆசீர்வாதம் என அனைத்தோடும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்று முடிவெடுத்திருந்தார்கள்.‌ நேற்றைக்கே மாப்பிள்ளையின் சொந்தக்காரர்கள் ஊருக்கு வந்துவிட்டார்கள். இன்றைய நிகழ்வை முடித்துக்கொண்டு மாலை கிளம்புவதாக ஏற்பாடாகியிருந்தது.‌ ராஜ் பவனிலிருந்து அனைவருக்கும் உணவு அனுப்பப்பட்டது.

“அம்மா, எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க.” தன்னால் முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் ஏற்பாடு பண்ணியிருந்தான் ரங்கராஜ்.‌ ஷக்தியின் திருமணத்தை இப்போது நடத்தும் எண்ணம் இல்லாததால் கையில் எந்தச் சேமிப்பும் இருக்கவில்லை. அத்தையின் வீட்டுக்கு முழுதாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததால் பேங்கிலும் பணம் இருக்கவில்லை.

“ரங்கா.”

“சொல்லுங்க மாமா.” ஒரு வாரம் முன்னாடி வந்தனாவோடு அவள் வீட்டுக்குப் போயிருந்த போது அழைத்தார் தங்கவேல்.

“இந்தாப்பா, இதை வெச்சுக்கோ.” மாமா ஏதோவொரு பையை நீட்டவும் என்னவென்று புரியாமல் இவன் வாங்கினான்.‌ மகள் கர்ப்பமான பிறகு எல்லா கோபங்களையும் மறந்துவிட்டு மருமகனோடு பழையபடி பேச ஆரம்பித்திருந்தார் தங்கவேல். 

“என்ன மாமா இது?!” பையைத் திறந்து பார்த்த ரங்கராஜ் திகைத்துப் போனான். ஏனென்றால் உள்ளே கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது. 

“உங்கிட்ட ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன், வந்தனா கல்யாணத்துக்காகக் கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருக்கேன்னு, நீதான் அந்தக் கஷ்டத்தையே எனக்குக் குடுக்கலையே!” கோபம் இருந்தது அந்தக் கேலியில். மீரா வாய் பொத்திச் சிரித்தாள்.

“அதுசரி மாமா, அதுக்காக அந்தப் பணத்தை இப்போ எதுக்கு எங்கிட்டக் குடுக்கிறீங்க?”

“உனக்கு இப்போ பணத்தேவை இருக்கில்லை ரங்கா? இதை வெச்சுக்கோ, அத்தை வீட்டுக்கும் இப்பதான் பெரிய தொகை ஒன்னைக் குடுத்திருக்கே, ஷக்தி கல்யாணத்தை இவ்வளவு அவசரமா நீ எதிர்பார்த்திருக்கமாட்டே.”

“அதெல்லாம் சரிதான் மாமா, ஆனாலும்…”

“தம்பி, மாமா சொல்றதைக் கேளுங்க, அவங்க எல்லாத்தையும் யோசிச்சுட்டுத்தான் இந்தப் பணத்தை உங்கக்கிட்டக் குடுக்கிறாங்க.” இது ரேவதி. கணவனும் மனைவியும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருந்தார்கள். 

“இது வந்தனாவோட பணம் மாமி, அவ கல்யாணத்துக்கு உங்களால இதைச் செலவு பண்ண முடியாம போச்சுன்னா அவளுக்கு நகையா வாங்கிக் குடுங்க.”

“வந்தனா வேற நீங்க வேற இல்லை தம்பி, நீங்க சொல்ற மாதிரியே பண்ணினாலும் இந்தப் பணத்தை இப்ப நீங்க உபயோகப்படுத்திட்டு உங்களுக்கு வசதிப்படுறப்போ வந்தனாக்கு நகையா வாங்கிக் குடுங்க, எல்லாம் ஒன்னுதானே?” இந்த அன்பிற்கு எப்படி நன்றி சொல்வதென்று ரங்கராஜுக்குப் புரியவில்லை.‌ நெகிழ்ந்து போனான்.‌ 

“மாமா…”

“அட! என்னப்பா நீ? எதுக்கு இப்போ இவ்வளவு உணர்ச்சிவசப்படுறே? இது நம்ம வீட்டு விசேஷம், நீ கஷ்டப்படும் போது என்னால அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? நாளைக்கு எங்களுக்கு ஒன்னுன்னா முதல் ஆளா வந்து நிற்கப் போறது நீதானே? மீராக்கு ஒரு நல்லது நடக்கும்போது நீதானே முன்னாடி நிற்கணும்? உன்னைவிட்டா எங்களுக்கு வேற யாரு இருக்கா?” 

“மாமா…” என்றவன் தங்கவேலை இறுக அணைத்துக் கொண்டான். 

“அடடா! மாமாவும் மருமகனும் பாசப்பயிர் வளர்க்கிறாங்கப்பா!” மீராதான் கேலி பேசி சூழ்நிலையை இதமாக்கினாள். வந்தனாவிற்கும் கண்கள் கலங்கின. அவர்கள் திருமணத்தினால் தங்கவேலிற்கும் ரங்கராஜிற்கும் இருந்த நல்ல உறவில் விரிசல் விழுந்திருந்தது. அது இன்று சரியானது போல உணர்ந்தாள்.

நல்ல சம்பந்தம் அமைந்திருந்தாலும் பணத்திற்கு என்ன செய்வது என்று ரங்கராஜ் சிந்தித்தபடிதான் இருந்தான். அதிலும் மாப்பிள்ளை வீடு பெரிய இடம்.‌ முன்பானால் அத்தையின் வீட்டில் எதைப்பற்றியும் யோசிக்காமல் மாணிக்கம் பணம் வாங்கியிருப்பார். இப்போது அதற்கும் வழியிருக்கவில்லை. தெய்வமாகத்தான் இப்படியொரு ஏற்பாட்டை தங்கவேல் மூலமாகப் பண்ணியிருக்க வேண்டும். 

வீட்டிற்கு வந்தவன் எல்லோரையும் ஹாலில் உட்கார வைத்து நடந்ததைச் சொன்னான். மாணிக்கம் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார். சுலக்சனா இதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.‌ பணம் கொடுத்தது தன் அண்ணன் என்பதால் அதை இலகுவாகக் கடந்து போனார். 

“ரங்கா, எங்கிட்டயும் கொஞ்சம் பணம் இருக்கு, நானும் குடுக்கிறேன்.”

“தேவையில்லை திவ்யா, இந்தப் பணம் இப்போதைக்குப் போதும், கண்டபடி செலவு பண்ணத் தேவையில்லை, இனி அடுத்ததா கல்யாணம் வரும், அப்போ நான் வாங்கிக்கிறேன்.” மாணிக்கத்திற்குத் தான் விட்ட தவறு என்னவென்று இப்போது விளங்கியது.‌ மகன் போலல்லாமல் பணம் கையில் கிடைத்துவிட்டால் தாராளமாகச் செலவு செய்வார். அப்படித்தான் மீனாட்சி வீட்டின் கடன் ஏறியது.

“இப்பவே கல்யாணத்தையும் வெப்பாங்களாப்பா?”

“தெரியலைம்மா, அதைப்பத்தி நான் இன்னும் ஜெகாகிட்டப் பேசல்லை.”

“பேசணும் தம்பி, நம்மால அவ்வளவு சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ண முடியாது, பெரிய இடம், பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டுத்தான் யோசிக்கணும், இல்லைன்னா திரும்பவும் கடன் படவேண்டி வரும்.”

“நான் பேசுறேம்மா.” அம்மா சொல்வதுதான் சரியென்று பட்டது மகனுக்கும். 

நிச்சயதார்த்தம் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வீட்டளவில்தான் செய்தார்கள். ஆனால் எந்தக் குறையும் வைக்கவில்லை. பெண் வீட்டைச் சுற்றி நிறைய இடம் இருந்ததால் ப்ளாஸ்டிக் நாற்காலிகளை வாடகைக்கு எடுத்துப் போட்டிருந்தார்கள். ஜனக்கட்டு அதிகமாகத்தான் இருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பகலுணவும் தயாரானது. 

ஷக்தியை அலங்காரம் செய்திருந்தார்கள். பட்டுப்புடவையில் பெண் மிகவும் அழகாக இருந்தாள். ரங்கநாயகி தன் மருமகளுக்கு ஆரம் ஒன்று அணிவித்தார். ஜெகதீஷ்தான் கள்ளுண்ட வண்டு போல ஷக்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ரங்கராஜிற்கு நண்பனின் நிலை புரிந்தாலும் கேலி பண்ணிச் சிரிக்க வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மணப்பெண்ணின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் ஜெகதீஷை ஒருவழி பண்ணியிருப்பான். ஆனால் அவனால் முடியாததை அவன் நண்பர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.

“வந்தனா, ஆனாலும் உனக்கு ரங்கா இப்பிடியொரு அநியாயம் பண்ணியிருக்கக் கூடாது.”

“என்ன திவ்யா?” பெண்களின் அறையில் பேச்சு ஆரம்பமானது. 

“இல்லை, நீயுந்தான் கல்யாணம் பண்ணினே, ஆனா இந்த மாதிரி விசேஷம் எதுவுமில்லாம, காத்திருப்புகள் இல்லாம சட்டுன்னு கல்யாணம், சட்டுன்னு ஃபர்ஸ்ட் நைட்…” என்று இழுக்க அங்கிருந்த பெண்கள் எல்லாரும் சிரித்தார்கள். இவளுக்கு வெட்கமாகிப் போனது.

“அதுமட்டுமா? காலதாமதம் எதுவுமில்லாம…” என்று அவள் வயிற்றை யாரோ பார்க்கவும் மீண்டும் சிரிப்புச் சத்தம். முகம் சிவந்து போக இவள் வெளியே வந்துவிட்டாள். ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த ரங்கராஜ் மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளிடம் வந்தான்.

“என்ன வந்தனா?”

“ஒன்னுமில்லை அத்தான்.” என்றவள் அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் அப்பால் போய்விட்டாள். அவர்கள் சொல்வது உண்மைதானே! எந்தக் காத்திருப்பும் இல்லாமல் எல்லாம் அவசர கதியில் நடந்தேறிவிட்டது. ஆனால் அதில் எந்தக் குறையும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. மாறாக இன்பமாகத்தான் இருந்தது. முதலிரவன்று கணவன் காட்டிய முகம் இப்போதும் நியாபகம் வந்தது. 

மீனாட்சி தன் குடும்பத்தோடு வந்திருந்தார். அர்ச்சனா மாத்திரம் வந்திருக்கவில்லை. அவள் கணவரோடு எங்கோ வெளியூர் போயிருந்தாள். தங்கவேலும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். யாரும் எந்த மனஸ்தாபங்களையும் மனதில் வைத்திருக்காமல் வந்திருந்தார்கள். நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.

“ரங்கா…”

“என்னடா மாப்பிள்ளை?” ஜெகதீஷை இப்போது மாப்பிள்ளை என்று அழைக்க ஆரம்பித்திருந்தான். விழா முடிவுற்று அனைவரும் கலைந்து போயிருந்தார்கள். நெருங்கிய சொந்தங்கள் மாத்திரமே வீட்டிலிருந்தார்கள். மாலை ஆகியிருந்தது.

“டேய்… நான் ஒன்னு கேட்பேன், நீ தப்பா எடுத்துக்கக் கூடாது.”

“என்னடா மாப்பிள்ளை?”

“அது வந்து… ஷக்தியைக் கொஞ்சம்… வெளியே கூட்டிட்டுப் போக பர்மிஷன் குடுடா.” இதற்கு என்ன பதில் சொல்வதென்று இவனுக்குப் புரியவில்லை.

“ப்ளீஸ்டா, கல்யாணத்தை வேற தள்ளி வெச்சுட்டே, புரிஞ்சுக்கோடா, அதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சுதில்லை, கொஞ்சம் என்னைப்பத்தியும் யோசிச்சுப் பாருடா.” நண்பன் கேட்ட விதத்தில் சிரிப்பு வந்தது. 

“டேய்! நான் எப்பிடிடா? நீ வந்தனாவைப் புடி.” என்றுவிட்டு அப்பால் போய்விட்டான். நண்பனின் மனது புரிந்தது. ஓர் ஆண்மகனாக அவனின் நிலைமையைப் புரிந்து கொண்டாலும் ஓர் அண்ணனாகத் தள்ளி நின்றான்.

“வந்தனா…”

“சொல்லுங்கண்ணா.” புன்னகையோடு வந்த பெண்ணிடம் இவன் தனது கோரிக்கையை வைக்கவும் அவள் புன்னகை இன்னும் விரிந்தது. 

“வெளியே வெயிட் பண்ணுங்க.” என்றவள் அடுத்த ஐந்தாவது நிமிடம் ஷக்தியோடு வெளியே வந்தாள்.

“ரொம்ப லேட் பண்ணிடாதீங்கண்ணா.”

“இல்லைம்மா, இல்லையில்லை.” என்றவன் அந்த ப்ளாக் ஆடியின் கதவைத் தன் மனைவிக்காகத் திறந்துவிட்டான். அடுத்த நொடி கார் மின்னலாக மறைந்துவிட்டது.

“வந்தனா, அப்பாக்குத் தெரிஞ்சா என்னாகிறது?” அவர்கள் புறப்படும் வரை காத்திருந்த ரங்கராஜ் மனைவியிடம் வந்தான்.

“சீக்கிரமா வந்திடுவாங்க, நீங்க யாருக்கிட்டயும் எதுவும் சொல்லிக்கிட்டு இருக்க வேணாம்.”

“என்னம்மா இந்தப் பயல் இப்பிடி அடாவடி பண்ணுறான்? இவ்வளவு நாளும் எவ்வளவு கெத்தா பிஸினஸ், பணம், அரசியல்னு திரிஞ்சவன் இன்னைக்குக் கெஞ்சிக்கிட்டு நிற்கிறான்?!”

“ஏன்? நீங்க என்ன பண்ணினீங்களாம்?” மனைவியின் குரலில் வழிந்த காதலில் இவனுக்குச் சிரிப்பு வந்தது.

“உங்களை மாதிரித்தான் உங்க ஃப்ரெண்டும்.” என்றவளைத் தோளோடு இவன் அணைக்க,

“ஐயையோ! என்ன இது?” என்றவள் சட்டென்று விலகினாள்.

“இங்க இன்னைக்கு ஆள் நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு, நைட் நாம நம்ம வீட்டுக்குப் போவோமா?” அவன் கேட்ட தினுசிலேயே வில்லங்கம் இருப்பதைப் புரிந்து கொண்டவள் சிரித்தாள்.

“என்னடீ சிரிப்பு?” அவன் சரசம் அதிகமாகியது. குழந்தை உண்டான பிறகு இவர்களை வாடகை வீட்டிற்குப் போக சுலக்சனா அனுமதிக்கவில்லை. அவர் கொஞ்சம் இறங்கி வந்தாலும் மாணிக்கம் முறைத்துவிட்டால் அனுமதி கொடுக்கமாட்டார். அம்மாவை விட அப்பாதான் இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார் என்று புரிந்தபோது இவர்களுக்கு மகிழ்ச்சிதான் கூடியது. 

“இன்னைக்கு அத்தனைப் பொண்ணுங்களும் என்னைக் கேலி பண்ணுறாங்க.”

“என்னவாம்?”

“எல்லாம் உங்களாலதான் அத்தான்.” என்றவள் எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். அவள் முகம் காட்டிய நாணத்தை அவன் கண்டு கொண்டான். ஏதோ கேலி பண்ணியிருப்பார்கள் என்று புரிந்து கொண்டவனும் உள்ளே போய்விட்டான். 

அதேவேளை அந்த ப்ளாக் ஆடி ரங்கராஜின் வாடகை வீட்டின் முன்பாக வந்து நின்றது. சுற்றிவர இருந்த வயல் பூமியிலிருந்து காற்று சிலசிலுவென வீசியது. மனம் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்க பக்கத்தில் இருந்தவளைத் திரும்பிப் பார்த்தான் ஜெகதீஷ். அன்றைக்கு ஷக்தி புடவையில் மிகவும் அழகாக இருந்தாள். சட்டென்று அவளை இழுத்து அணைத்தான் ஜெகதீஷ்.

“ஐயையோ! யாராவது வந்துடப் போறாங்க!”

“இங்க யாரு வரப்போறாங்க?” என்றவன் அவளை விடுவித்தான். அவன் முகம் பார்க்க முடியாமல் பெண் தலையைக் குனிந்தது. அவள் கன்னக் கதுப்பை அவன் இடது கரம் தடவிக்கொடுத்தது.

“இன்னைக்கு நடந்த விசேஷம் மனசுக்கு நிறைவா இருந்துச்சா?”

“ம்…”

“ஃபோன்லயும் பேச மாட்டேங்கிறே, நேர்லயும் பேச மாட்டேங்கிறே, அப்ப நான் என்னதான் பண்ணுறது ஷக்தி?”

“அது…” என்றவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்னம்மா? மனசுல என்ன இருக்குன்னு சொல்லு.”

“இவ்வளவு சீக்கிரமா இதையெல்லாம் நான் எதிர்பார்க்கலை, அண்ணா பாவம், என்னால சிரமப்படுறாங்களோன்னு தோணுது.”

“ஏன்?”

“இப்பதான் அத்தை வீட்டோட கடனை முடிச்சிருக்காங்க, அப்பவும் எம் பேர்ல கொஞ்சம் பணத்தை பேங்க்ல போடலாம்னு சொன்னாங்க, நாங்கதான் வேணாம்னு சொன்னோம், இப்ப கல்யாணத்துக்கு அவசரமில்லைன்னு சொல்லிட்டு இப்பிடியெல்லாம் நடக்கும் போது…”

“ஓ… ரங்காவைக் கஷ்டப்படுத்துறோம்னு வருத்தமா இருக்கா? அதால எதையும் உன்னால என்ஜாய் பண்ண முடியலை, அப்பிடித்தானே?”

“ம்…” 

“உங்கண்ணா எங்கிட்டத்தானேம்மா பணம் வாங்கியிருக்கான், நான் பணத்துக்கு எந்த அசரமும் பண்ணலையே?”

“நீங்க பண்ணலைன்னாலும் நாங்க குடுக்கணுமில்லை?”

“நீங்க நாங்கன்னு எதுக்குப் பிரிச்சுப் பேசுறே?”

“அது… பணம்னு வந்துட்டா… இப்பக்கூட அண்ணி வீட்டுல இருந்துதான் பணம் குடுத்திருக்காங்க.”

“ஓ…‌ நான் அதை என்னன்னு பார்க்கிறேன், நீ வருத்தப்படாதே.” 

“கல்யாணத்தைக் கொஞ்சம் தள்ளி வெக்கலாம்.” அவள் சொல்லவும் அவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது. கல்யாணத்தைக் கூடிய சீக்கிரமே வைக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். காத்திருப்பு மிகவும் கஷ்டமாக இருந்தது.

“சரி, நான் உன்னோட வழிக்கே வர்றேன், கல்யாணத்தைத் தள்ளி வெக்கலாம், ஆனா மேடம் என்னை அப்பப்ப கவனிக்கணும்.”

“அப்பிடீன்னா?” அவள் கண்களை விரிக்க அவனுக்கு அள்ளிக் கொள்ளலாம் போலிருந்தது.

“அப்பிடீன்னா… ஃபோன் பண்ணினா பேசணும், அடிக்கடி இப்பிடி எங்கூட வெளியே வரணும்.”

“நீங்கதான் இந்த ஊர்லயே இல்லையே, அப்போ எப்பிடி உங்கக் கூட வர்றது?”

“அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ண எனக்குத் தெரியும் மேடம், நீ வருவியா?”

“ம்…” அவள் தலையை ஆட்டவும் அந்த நொடியைத் தனக்குப் பிடித்த மாதிரி சமைத்துக் கொண்டான் ஜெகதீஷ். முதலில் வெட்கப்பட்ட பெண்ணும் இலேசாக வளைந்து கொடுத்தது. மெல்லிய முத்தச் சத்தம் ஒன்று அந்த ப்ளாக் ஆடிக்குள் கேட்டது.

அதேவேளை தன் மனைவியோடு தனதறையில் படுத்திருந்தான் ரங்கராஜ். கடன் தொகை கொஞ்சம் ஏறிப்போனாலும் மனதில் மகிழ்ச்சி இருந்தது. நிறைவாக உணர்ந்தவன் மனைவியின் வயிற்றைத் தடவிக் கொடுத்தான். இன்றைக்குத் தங்கள் வீட்டிற்குப் போவதற்கு எவ்வளவு முயற்சி எடுத்த போதும் சுலக்சனா அதை அனுமதிக்கவில்லை. தனிமை பறிபோனது போல உணர்ந்தான் இளையவன்.

“வாடகை வீடுன்னாலும் அந்த வீட்டுல இருக்கிறது தனி இன்பந்தான் இல்லை வந்தனா?” சொன்ன கணவனைக் குறும்பாகப் பார்த்தாள் மனைவி.

“இன்னைக்கு அத்தனைப் பேரும் என்னைக் கேலி பண்ணினாங்க தெரியுமா?”

“என்னவாம்?”

“நிச்சயதார்த்தம் நடக்கலை, எந்தக் காத்திருப்பும் இல்லையாம், டிரெக்டா கல்யாணம், அதோட ஃபர்ஸ்ட் நைட், இப்ப குழந்தையாம், உங்கக்காவே கேலி பண்ணுறாங்க.” அவள் சொல்ல அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“அவ கெடக்கிறா, அவளுக்கு வேற வேலையில்லை! நமக்குக் கிடைச்ச சந்தோஷத்தை நாம எதுக்கு வந்தனா விட்டுக் குடுக்கணும்?”

“உங்க தங்கை என்ன சொல்லுறா?”

“ஜெகாக்கிட்டப் புலம்பியிருக்கா, அண்ணா பாவம்னு.”

“ஐயோ! ஏனாம்?!”

“கல்யாணத்தைப் பத்தி இப்ப நாங்க யோசிக்கலை, அண்ணாக்குக் கடனுக்கு மேல கடன், கொஞ்ச நாள் கழிச்சுக் கல்யாணத்தை வெச்சுக்கலாம், அண்ணாவை அவசரப்படுத்தாதீங்கன்னு சொல்லியிருக்கா.” நெகிழ்ந்து போய் சொன்னான் ரங்கராஜ். 

“பரவாயில்லையே, சின்னப் பொண்ணா இருந்தாலும் இவ்வளவு பொறுப்பா யோசிச்சிருக்காளே ஷக்தி!”

“ஜெகா கொலை வெறியில இருக்கான், நீயும் உன்னோட தங்கச்சியும் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டீங்களாடான்னு கேட்கிறான்.”

“ஏன்? அவருக்கென்னாச்சு?”

“எல்லாரும் நம்மளை மாதிரித்தான் அம்மிணி…” என்றவன் மனைவியின் கழுத்து வளைவில் வாசம் பிடித்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த மனைவியின் நெருக்கம்.

“அத்தான்…” சிணுங்கிய மனைவியை அவன் கண்டுகொள்ளவில்லை. 

“ஹேய்! ஒன்னும் பண்ணலைடீ, சும்மா இரு.” 

“உங்க பேச்சும் பார்வையும் இன்னைக்கு நல்லாவே இல்லை.”

“அட! அந்தளவுக்கு இன்னைக்கு நீ என்னைக் கவனிச்சியா?”

“ம்… உங்க மீனாட்சி அத்தை வீட்டாளுங்க, எங்கம்மா, அப்பா எல்லாரும் இன்னைக்கு வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, எங்க உங்கப்பா இப்பிடியே கோபமா இருந்திடுவாங்களோன்னு நான் பயப்பிட்டேன்.”

“அம்மாக்கிட்ட நேத்து பேசும்போது அப்பா உன்னைப் பத்தித்தான் பேசியிருக்காரு.”

“என்னன்னு அத்தான்?!” நேரடியாக இதுவரை மருமகளிடம் மாணிக்கம் பேசியதில்லை. ஆனால் தன்னை அவர் கவனிக்கிறார் என்று அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருப்பார். இவளுக்கு ஏதாவது தேவை என்று தெரிந்துவிட்டால் உடனடியாக மனைவியை அழைப்பார். இல்லாவிட்டால் ஷக்தியை அழைப்பார். அப்படியான மனிதர் தன்னைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறாரா? ஆச்சரியமாக இருந்தது வந்தனாவிற்கு.

“ரொம்பப் பொறுப்பான புள்ளையாம், தங்கவேல் பொண்ணை நல்லா வளர்த்திருக்காராம், இந்த வீட்டுக்கு வாரிசு வந்த உடனேயே எல்லாம் நல்லதா நடக்குதாம், கூடிய சீக்கிரமே இந்தக் கடனையெல்லாம் முடிச்சிடணும் சுலோன்னு சொன்னாராம்.”

“நிஜமாவா அத்தான்?!” அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்களில் இலேசாக நீர் திரண்டது. அத்தனை மகிழ்ச்சி. மாணிக்கத்தின் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தை, இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

“ம்…‌ அம்மாக்கு இதை நிதானமா உங்கிட்டச் சொல்றதுக்கு நேரமில்லை, எப்பிடியும் நாளைக்கு உன்னோட காதுக்கு இந்த விஷயம் வந்திடும், அம்மாக்கும் அவ்வளவு சந்தோஷம், அப்பா இவ்வளவு சீக்கிரமா மனசு மாறுவார்னு யாரும் எதிர்பார்க்கலை.”

“இதைச் சொன்னா எங்க வீட்டுலயும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”

“மீனாட்சி அத்தை உங்கூடப் பேசினாங்களா?”

“பேசல்லை, ஆனா முகத்தைத் திருப்புவாங்களோன்னு நினைச்சேன், அப்பிடி எதுவும் நடக்கலை, நாந்தான் எல்லாருக்கும் டீ கொண்டுபோய் குடுத்தேன், எதுவும் சொல்லாம வாங்கிக்கிட்டாங்க.”

“எல்லாக் காயத்தையும் காலம் மாத்திடும் வந்தனா, நமச்சிவாயம் மாமா எவ்வளவு பெருந்தன்மையா எங்கிட்ட ஏன் நீ பணம் கேட்கலைன்னு உரிமையா கோபிக்கிறாரு.”

“நிஜமாவா?!”

“ஆமா, யாருக்கு இந்த மனசு வரும் சொல்லு? அவரோட பொண்ணை நான் வேணாம்னு சொல்லிட்டு இன்னொரு பொண்ணு பின்னாடி போயிருக்கேன், அப்பிடியிருந்தும் எம்மேல அவருக்குக் கோபமே இல்லை.”

“பேசாம அவங்க பொண்ணையே கட்டியிருந்தா இந்நேரம் நல்லா இருந்திருப்பீங்க.” அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“என்னடீ சொன்னே?” அந்தப் பேச்சை எடுத்தாலே அவனுக்கு ஆத்திரம் வரும் என்று தெரிந்தும் அவள் வாயை விட்டாள்.

“நான் ஒன்னும் சொல்லலை அத்தான்.”

“ஆமா ஆமா, நீ ஒன்னுமே சொல்லலை, நீ அவ்வளவு நல்ல பொண்ணு பாரு, உன்னைப் பேசவிட்டு நான் வேடிக்கைப் பார்க்கிறேன் பாரு, அதான் நான் பண்ணுற பெரிய தப்பு.” என்றவன் பேசிய அந்த வாய்க்குத் தண்டனைக் கொடுக்க ஆரம்பித்திருந்தான். வந்தனா மலர்ந்து சிரித்தாள்.

எத்தனையோ குழப்பங்களுக்கு மத்தியில் குடும்பங்களின் சம்மதம் இல்லாமல் ஆரம்பித்த அவர்கள் வாழ்க்கை இன்று அனைவரின் ஆசீர்வாதத்தோடும் பூரணமானது போல இருந்தது. அத்தனைப் பேரின் கோபங்களுக்கு மத்தியில் ஆரம்பித்த வாழ்க்கையை எப்படி வாழப் போகிறோம் என்று மலைத்து நின்றவர்களை இன்றைக்குக் காலம் ஆசீர்வதித்திருக்கிறது.‌ கடவுள் அவர்கள் மேல் கருணை வைத்திருக்கிறான். அந்தக் கருணை காலம் உள்ளவரை அவர்களைக் காத்து நிற்கும்!

நிறைவு.

forum 10 கருத்துகள் உள்ளன

  1. அதிரடி ஆட்டம் தான்
    ஆடி கார் ஓனர்….
    அப்பாடா….
    அப்பவும் மனம் மாறி
    அனைவரும் ஒன்றாகி
    அத்தான் மனம் குளிர
    அம்மணி சந்தோஷம் தானே…..

உங்கள் கருத்தைப் பகிருங்கள்