அத்தியாயம் 12
அத்தியாயம் 12
தன் நண்பனோடு சிரித்தபடி உள்ளே வந்தான் ரங்கராஜ். அத்தனை பிஸியாக இருப்பவன் தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்ததில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வெளியே போயிருந்த மாணிக்கமும் வீடு வந்துவிட வீட்டிலிருந்த அனைவரையும் நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“ஜெகா, இவர் என்னோட அப்பா, ராஜ் பவனை ஆரம்பிச்சு இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்த்தது அப்பாதான்.”
“வணக்கம் தம்பி.” மகன் தன்னை அப்படி அறிமுகம் செய்து வைத்ததில் மாணிக்கத்திற்குப் பெருமையாக இருந்தது.
“வணக்கம் அங்கிள், ரங்கா உங்களைப்பத்தி நிறைய எங்கக்கிட்டப் பேசுவான், உங்களோட கடுமையான உழைப்புதான் உங்க குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திச்சுன்னு பெருமையா பேசுவான்.”
“அதெல்லாம் ஒன்னுமில்லை தம்பி, நான் கஷ்டப்பட்டு உருவாக்கினதை எம் புள்ளை நாசம் பண்ணாம இன்னும் உயர்த்தணும்னு நினைக்கிறானே, எனக்கு அதுதான் ரொம்ப சந்தோஷம்.” அப்பாவும் மகனை விட்டுக்கொடுக்கவில்லை.
“அது உண்மைதான்.”
“இது அம்மா.”
“வணக்கம்பா, வீட்டுல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆன்ட்டி.”
“இது என்னோட அக்கா திவ்யா, இது தங்கை ஷக்தி.” பெண்கள் இருவரும் புன்னகைத்தார்கள்.
“இது என்னோட வொய்ஃப் வந்தனா.”
“வீட்டுக்கு அடங்கின பையனா இருந்த எங்க மச்சானைக் குடும்பத்தை விட்டே தூக்கின காதல் தேவதையா?” ஜெகதீஷ் கேலியாகக் கேட்கவும் ரங்கராஜ் சிரித்தான். வந்தனாவிற்கு ஒருமாதிரியாகிப் போனது. தலையைக் குனிந்து கொண்டாள்.
“சாப்பிடலாம் தம்பி, வாங்க.”
“ஐயையோ! இல்லை ஆன்ட்டி, நான் அவசரமான வேலையா ஊருக்கு வந்தேன், அப்பிடியே ரங்காவையும் பார்த்துட்டுப் போகலாம்னுதான் கால் பண்ணினேன்.”
“அதனால என்னப்பா, எங்களுக்கு சமைச்சது, எங்கக்கூட நீங்களும் ரெண்டு வாய் சாப்பிடப் போறீங்க, வாங்க தம்பி.”
“வா ஜெகா, அதான் அம்மா அவ்வளவு சொல்றாங்கல்லை?” நண்பனை டைனிங் டேபிளுக்கு நகர்த்தினான் ரங்கராஜ். மாணிக்கமும் வந்து அமர்ந்தார்.
“ஷக்தி, நீயும் சாப்பிடு, உனக்கு க்ளாசுக்கு டைமாகுதில்லை?” அம்மா அழைக்கவும் அவளும் வந்து அமர்ந்து கொண்டாள். திவ்யா எல்லோருக்கும் பரிமாறினாள்.
“வந்தனாக்கு நான் உள்ள கொண்டு போய் கொடுக்கிறேன்.” சுலக்சனா ஒரு ப்ளேட்டோடு உள்ளே போய்விட்டார்.
“சாப்பிடுறதுல ஏதாவது ப்ராப்ளம் இருக்கா மச்சான்?”
“வாமிட் வருதுடா, அவளால ஒன்னும் சாப்பிட முடியுதில்லை.”
“இங்கப்பாரு ரங்கா, இந்த நேரத்துல தனியா இருக்காம பெரியவங்களோட இருக்கிறதுதான் நல்லது, அவங்களுக்குத்தான் அனுபவம் இருக்கும்.”
“நல்லா சொல்லுங்க தம்பி.” இது மாணிக்கம். நண்பர்கள் இருவரும் இப்போது ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“நீங்க என்ன ஷக்தி பண்ணுறீங்க?”
“நான்… யூனியில கோர்ஸ் பண்ணுறேன்.” என்றவள் தான் படிப்பதை விரிவாகச் சொன்னாள்.
“எக்ஸாம் ஒரு தடவைதான் பண்ணினா, இன்னொரு தடவைப் பண்ணு, கண்டிப்பா உனக்கு யூனி கிடைக்கும்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், கேட்கலை ஜெகா.” ஷக்தி கெட்டிக்காரப் பெண். இன்னொரு முறை முயற்சி செய்யாமல் போனாளே என்ற தனது ஆதங்கத்தை நண்பனிடம் பகிர்ந்து கொண்டான் அண்ணன்.
“எதுக்கு டைமை வேஸ்ட் பண்ணணும்னுதான் பண்ணலை, அதோட இந்த கோர்ஸை முடிச்சா ஈஸியா டீச்சிங் கிடைச்சிடும்.” தன் தரப்பு நியாயத்தைப் பெண்ணும் சொன்னது.
“அவங்க சொல்றதும் சரிதான் ரங்கா, இந்த ஃபீல்டுக்கு இப்போ நல்ல டிமாண்ட் இருக்கு, படிப்பு முடியும்போது சொல்லுங்க, நமக்குத் தெரிஞ்சவங்களைப் புடிச்சு நல்ல இடத்துல ஜாப் எடுக்கலாம்.”
“ரொம்ப தேங்க்ஸ் சார்.” ஷக்திக்கு மகிழ்ச்சியாகிப் போனது. மனமார நன்றி சொன்னாள். அந்த நன்றியை வாங்கிக் கொண்டவனின் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. அவன் கண்கள் ஷக்தியை ஒரு நொடி ஆரவமாகப் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை.
“ரங்கா எல்லாம் சொன்னான் தம்பி, ரொம்பப் பெரிய உதவி பண்ணியிருக்கீங்க, சொன்ன வாக்குத் தவறாம ஒரு வருஷத்துல பணத்தைத் திருப்பிக் குடுத்திருவோம்பா.”
“ஐயோ அங்கிள்! என்ன இதெல்லாம்? இப்பிடிப் பேசி என்னை அந்நியப்படுத்தாதீங்க, ரங்கா எப்பவுமே உதவின்னு யாருக்கிட்டயும் கேட்கமாட்டான், அப்பிடிப்பட்டவன் கேட்கும் போது நான் பண்ணாம இருப்பனா?”
“உங்க மனசு யாருக்கும் வராது தம்பி.” மாணிக்கம் கொஞ்சம் உருக்கமாகப் பேசியது போலத்தான் இருந்தது. தேவையில்லாத செலவுகள் செய்து கடனை அதிகப்படுத்தியது நான்தான் என்ற நினைப்பு இருந்திருக்கும் போலும்.
“அப்ப நான் கிளம்புறேன் மச்சான்.” என்ற ஜெகதீஷ் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.
“ஊருக்கு வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வாங்க தம்பி.”
“சரி ஆன்ட்டி, அது மாதிரி நீங்க கொழும்புக்கு வரும்போது கண்டிப்பா எங்க வீட்டுக்கும் வரணும், முடிஞ்சா அப்பா, அம்மாவை ஒரு தடவை ஊருக்குக் கூட்டிட்டு வாறேன்.”
“கண்டிப்பா தம்பி.” சிரித்த முகமாக எல்லோரும் வந்தவனை வழியனுப்பி வைத்தார்கள். சொன்னது போல கூடிய சீக்கிரமே தன் பெற்றோரோடு இங்கே வந்து அவன் நிற்கப் போகிறான் என்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை!
***
அன்றைக்கு அர்ச்சனாவிற்குத் திருமணம். ரங்கராஜின் வீட்டிலிருந்த அனைவரும் புறப்பட்டுப் போயிருந்தார்கள். வந்தனாவை அவள் அம்மாவின் வீட்டில் கொண்டுவந்து விட்டிருந்தார்கள். சுலக்சனா கல்யாண வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்ததால் இந்த ஏற்பாடு. அதில் ரேவதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
“அந்தப் பொண்ணுக்குச் சீக்கிரமாவே கல்யாணம் நடக்கிறது சந்தோஷம்னா அதால நீ இங்க வந்து நம்ம வீட்டுல இருக்கிறது இன்னும் சந்தோஷம்.”
“ஆமாக்கா, அம்மா சொல்றது கரெக்ட், என்னதான் அத்தான் உங்கூட சந்தோஷமா இருந்தாலும் அர்ச்சனாக்குக் கல்யாணம் ஆகிறவரை அவங்களுக்கு நிம்மதி இருக்காது, நம்மளால அந்தப் பொண்ணுக்கு இப்பிடி ஆச்சோன்னு வருத்தம் இருக்கும்.” இது மீரா. எப்போதும் போல அவள் சிந்தனை இப்போதும் வீரியமாக இருந்தது.
“உண்மைதான், உங்க அத்தை உன்னை நல்லா பார்த்துக்குவான்னு எனக்குத் தெரியும், ஆனாலும் நம்ம பொண்ணு இப்ப இங்க இல்லையேன்னு கவலையாத்தான் இருந்துச்சு, என்னோட கவலையைத் தீர்த்து வெக்கிற மாதிரி இந்தக் கல்யாணத்தை ஆண்டவன் கொண்டு வந்துட்டான், உங்கப்பாக்கும் அவ்வளவு சந்தோஷம்.”
அம்மாவும் பெண்கள் இருவரும் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கவேல் திருமணத்திற்குப் போயிருந்தார். நமச்சிவாயம் எந்தக் கோபமும் இல்லாமல் இவர்கள் வீடு வரை வந்து பத்திரிகை வைத்திருந்தார். மனஸ்தாபங்களை மறந்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கும்போது தங்கவேலும் மனதைச் சமாதானம் செய்துகொண்டார்.
“மாணிக்கம் மாமா எப்பிடிக்கா? உங்கூடப் பேசுவாரா?”
“இல்லை மீரா, நேரடியா பேச மாட்டாரு, ஆனா என்னைக் கண்டா சட்டுன்னு அத்தையைக் கூப்பிட்டு விட்டுருவாரு, எனக்கு என்ன தேவையோ, இல்லைன்னா வாந்தி எடுக்கப் போறேனோன்னு அவருக்குப் பயம்.”
“அடேயப்பா! மருமகள் மேல அக்கறைதான்!”
“ஒருவகையில பார்த்தா அது அக்கறைதான் மீரா, இந்தக் கல்யாணம் வந்ததால பெரும்பாலும் அவர் வீடு தங்கிறதில்லை, எப்பவும் அர்ச்சனா வீட்டுக்குப் போயிடுவாரு, வீட்டுல இருக்கிற நேரத்துல நான் ரொம்ப வெளியே வரமாட்டேன்.”
“பையன் மேல ஆரம்பத்துல இருந்த கோபம் இப்ப வடிஞ்சிருக்கும், அதுவும் வாரிசு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மனுஷன் மனம் மாறிட்டாரு.” அம்மா சொன்னதைப் பெண்கள் இருவரும் ஆமோதித்தார்கள்.
திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. நமச்சிவாயம் வசதியான மனிதர் என்பதால் தனக்குத் தெரிந்த பெரிய புள்ளிகள் அனைத்தையும் அழைத்திருந்தார். ரங்கராஜ் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தான். ஆர்த்தியின் கல்யாணம் அவன் நினைவிற்கு வந்தது. அன்றைக்குத் தங்கவேல் மாமா தன் குடும்பத்தோடு வந்ததும் தான் அவர்களிடம் போய் பேசியதும் என்று பழைய நினைவுகள் நிழலாடின.
“என்ன தம்பி? முகம் பளிச்சுன்னு இருக்கு?” கந்தசாமி கேட்கவும் இவன் புன்னகைத்தான். இன்றைக்கும் சாப்பாடு ராஜ் பவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
“ஒன்னுமில்லைண்ணே, ஆர்த்தியோட கல்யாணம் ஞாபகம் வந்திடுச்சு, அன்னைக்கு மாமா குடும்பத்தோட வந்திருந்தாரு.”
“அடடா! அன்னைக்கு மாமா பொண்ணா வந்தவங்க இன்னைக்குத் தம்பியோட சம்சாரம்!” இளையவனின் மனதைப் படித்தாற் போல சொன்னார் கந்தசாமி. ரங்கராஜும் இப்போது சிரித்துவிட்டான்.
“தம்பி, இங்க வா நீ.” மாணிக்கம் அவசரமாக வரவும் இவர்கள் பரபரப்பானார்கள்.
“என்னப்பா?” இப்போதெல்லாம் அப்பாவும் மகனும் இலேசாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள்.
“அந்தத் தம்பி வந்திருக்கு.”
“யாரு?”
“உன்னோட சினேகிதப் பையன், ஜெகதீஷ்.”
“ஓ…” என்றபடி வாசலுக்கு வந்தான் ரங்கராஜ். நண்பனுக்குப் பத்திரிகை வைத்திருந்தான். முறையாகத் திருமணத்திற்கும் அழைத்திருந்தான். அத்தனை பிஸியாக இருப்பவன் வருவான் என்று இவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
“ஜெகா! வா வா, என்னடா அதிசயம்! உன்னோட பிஸி ஷெட்யூல்ல கல்யாணத்துக்கு வந்திருக்கே! என்னால நம்ப முடியலைடா!” அப்போதுதான் ரங்கராஜ் கவனித்தான். ஜெகதீஷ் தனியாக வரவில்லை. தன் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தான்.
“அம்மா, சிஸ்டர்ஸ் எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?” ஜெகதீஷின் அம்மா படு காஷுவலாகப் பேசவும் ரங்கராஜ் கொஞ்சம் திகைத்துத்தான் போனான். ஏனென்றால் ஜெகதீஷின் இந்த நிலைமைக்குக் காரணம் அவன் அம்மாவின் பின்புலம்தான். முன்னாள் அமைச்சரின் மகள் அவர். மிகவும் பிரபலமான அமைச்சர் அந்த மனிதர். என்னதான் பெரிய பின்புலம் இருந்தாலும் ஜெகதீஷ் நண்பர்களிடம் மிக இயல்பாகப் பழகுவான். ஆனால் அவன் உயரம் அறிந்து நண்பர்கள் கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பார்கள்.
“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, நீங்களும் அப்பாவும் கல்யாணத்துக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி, வாங்கம்மா.” இப்போது ஜெகதீஷின் அப்பா இவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். இவர்களை உள்ளே அழைத்துச் சென்றவன் அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தான். நமச்சிவாயம் வந்திருப்பவர்கள் யாரென்று அறிந்து ஆச்சரியப்பட்டுப் போனார்.
“இது அம்மா, இது அக்கா திவ்யா, இது தங்கை ஷக்தி.” வீட்டுப் பெண்களை அறிமுகம் செய்து வைத்தான் ரங்கராஜ். எல்லோருக்கும் வணக்கம் வைத்த ஜெகதீஷின் அம்மா ஷக்தியின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார். அவர் பெயர் ரங்கநாயகி. இந்த நொடிவரை வர இருப்பது என்ன என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லை.
“வாங்கம்மா, வந்து சாப்பிடுங்க.” தன் மகனுக்கு உதவி செய்த பையனின் பெற்றோர் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் சுலக்சனா நன்றாகக் கவனித்தார். அத்தோடு அவ்வளவு உயரத்தில் இருந்த போதும் எந்த பந்தாவும் காட்டாமல் அன்று தங்கள் வீட்டிற்கு வந்து இயல்பாகப் பேசி, உண்ட ஜெகதீஷ் மேல் அவருக்கு மரியாதை வந்திருந்தது.
“நீங்க மத்தவங்களைக் கவனிங்க சுலக்சனா, அதான் ஷக்தி இங்க இருக்கால்லை.” ரங்கநாயகி சொல்லவும் ஒரு புன்னகையோடு அப்பால் போனார் சுலக்சனா. அது மாத்திரமல்லாது அவர் ஷக்தியோடு பேச ஆரம்பிக்கவும் இவருக்கு ஆறுதலாக இருந்தது.
“என்ன ரங்கா? ரொம்ப சிம்பிளா இருக்காங்க?!”
“ஜெகா எப்பவும் இப்பிடித்தாம்மா, ஆனா அவனோட பேரன்ட்ஸும் இப்பிடி இருக்கிறது எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு.”
“அவங்களைக் கவனிக்கச் சொல்லி ஷக்திக்கிட்டச் சொல்லியிருக்கேன், கொஞ்சம் நீயும் என்னன்னு பார்த்துக்கோ.” என்றவர் யாரோ அழைக்கவும் போய்விட்டார். கல்யாண கலாட்டாக்கள் எல்லாம் முடிந்து இவர்கள் வீடு வந்தபோது பத்துமணி தாண்டியிருந்தது. ரங்கராஜ் மனைவியைப் பார்க்கப் போய்விட்டான். வந்தனாவால் கல்யாண வீட்டிற்கு வருமளவிற்கு உடல் ஒத்துழைக்கவில்லை.
அடுத்தநாள் காலை மனைவியையும் அழைத்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டான் மகன். அன்றைக்கு மாலையும் மறுவீட்டு விருந்து இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று மனைவியை அழைத்து வந்திருந்தான். வந்தனாவிற்கு உதவி தேவை என்றால் ரேவதி மாமியை அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.
“ரங்கா, கொஞ்சம் வெளியே வாப்பா.” அம்மா அழைக்கவும் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தவன் ரூமிலிருந்து வெளியே வந்தான்.
“என்னம்மா?” வெளியே வந்தவன் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த காரை அப்போதுதான் பார்த்தான்.
“யாரும்மா அது? ஜெகதீஷ் மாதிரி இல்லை?”
“ஆமாப்பா, எனக்கும் அப்படித்தான் தெரியுது, நீ என்னன்னு பாரு.” ரங்கராஜ் சட்டென்று வெளியே வந்தான். ஜெகதீஷ் மாத்திரமல்லாது அவனது பெற்றோரும் கூட வந்திருந்திருப்பது இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“வாங்க வாங்க, வா ஜெகா.”
“கல்யாண வேலையெல்லாம் இன்னும் பாக்கி இருக்குமில்லை தம்பி? நாங்க வந்து தொல்லைப் பண்ணுறோமா?”
“ஐயையோ! அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லைம்மா, நீங்க உள்ளே வாங்க.” இப்போது ரங்கராஜின் மொத்தக் குடும்பமும் ஹாலில் கூடியது.
“ஷக்தி எங்கப்பா?”
“அவ குளிக்கிறா, இருங்க, நான் டீ கொண்டு வர்றேன்.”
“இல்லை சுலக்சனா, நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசத்தான் இப்போ இங்க வந்திருக்கேன்.” உள்ளே செல்ல இருந்தவரைத் தடுத்து பேச்சை ஆரம்பித்தார் ரங்கநாயகி.
“சொல்லுங்கம்மா.”
“எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாதும்மா, உங்க வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து ஜெகா மனசுல ஒரு ஆசை, அவனுக்கு ஷக்தியைப் புடிச்சிருக்கு, இதுநாள் வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்காதவன் இப்போ கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்கான், எதுக்கு சும்மா நாளைக் கடத்தணும்னுதான் நாங்களும் ஊருக்குக் கிளம்பி வந்தோம்.”
“…” ரங்கராஜின் வீட்டினருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேச்சைத் தொலைத்தவர்கள் போல அப்படியே நின்றிருந்தார்கள். இப்படியொரு விஷயத்தை அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
“உங்களுக்கெல்லாம் இந்த விஷயம் ரொம்ப அதிர்ச்சியா இருக்கலாம், ஒன்னும் அவசரமில்லை, நீங்க ஆறுதலா யோசிச்சு முடிவு சொன்னா போதும்.” இது ஜெகதீஷின் அப்பா. மிகவும் சாதாரணமாக இவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார்கள்.
“அம்மா… உங்களவுக்கு நாங்க…”
“இதெல்லாம் என்ன பேச்சு ரங்கா? பெரிய பெரிய இடத்துல இருந்தெல்லாம் பொண்ணுங்க வந்துச்சு, ஆனா உன்னோட ஃப்ரெண்டுக்குத்தான் யாரையும் புடிக்கலையே!” இப்போது தன் நண்பனைப் பார்த்தான் ரங்கராஜ்.
‘என்னடா இதெல்லாம்?!’ என்பது போல இருந்தது அந்தப் பார்வை. இப்போது ஜெகதீஷ் எழுந்து ரங்கராஜை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்திருந்தான்.
“மச்சான், என்னைத் தப்பா எடுத்துக்காதடா, வீட்டுக்குள்ள ஒருநாள் விட்டதுக்கே இவன் பொண்ணு கேட்டு வந்துட்டான்னு என்னைக் கேவலமா நினைக்காதே.”
“டேய்! என்னடா பேசுறே? நான் உன்னைப் போய் அப்பிடியெல்லாம் நினைப்பனா? இது என்னோட கற்பனைக்கும் எட்டாத விஷயம்டா.”
“புரியுது, நீ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதே, ஷக்தியை எனக்குப் பார்த்த உடனே புடிச்சிடுச்சு, ஆனா என்னோட மனசுல என்ன இருக்குன்னு எனக்கு உறுதியா தெரியவேண்டி இருந்துச்சு, அதுக்குத்தான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன், அப்புறமாத்தான் அப்பா, அம்மாக்கிட்டப் பேசினேன், அவங்களும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க, இப்ப எனக்குப் பதில் சொல்ல வேண்டியது நீங்கதான்.”
“ஜெகா, என்னோட வீட்டு நிலைமை என்னன்னு உனக்கு நல்லாத் தெரியும், நான் உங்கிட்டக் கைநீட்டிக் கடன் வாங்கியிருக்கேன்.”
“டேய்! அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைடா, உன்னோட தங்கச்சியை நான் நல்லா பார்த்துக்குவேன்னு உனக்கு நம்பிக்கை இருந்தா அவளை எனக்குக் கட்டிக்குடு, உனக்கு நான் குடுத்த பணத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை, புரிஞ்சுதா?”
“ம்…” தலையை ஆட்டிக் கொண்டாலும் அவர்கள் உயரம் என்ன? நமது உயரம் என்ன என்ற சிந்தனை வராமல் இருக்கவில்லை. இளையவர்கள் இருவரும் உள்ளே வந்தார்கள்.
“என்னப்பா? பேசிட்டீங்களா?” ரங்கநாயகி கேட்கவும் மையமாகப் புன்னகைத்து வைத்தார்கள்.
“அப்ப நாங்க கிளம்புறோம், நீங்க யோசிச்சு நல்லதா ஒரு முடிவைச் சொல்லுங்க.” என்றுவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.
“டேய் மச்சான்! நான் உன்னைத்தான் மலைபோல நம்பியிருக்கேன்.” போகிற போக்கில் ஒரு வெடியைப் போட்டுவிட்டுப் போனான் ஜெகதீஷ்.
“என்ன சுலோ இதெல்லாம்? இவங்க உயரத்துக்கு நம்மளால நின்னு புடிக்க முடியுமா?”
“எனக்கும் அதுதான் ஒன்னும் புரியலைங்க, அவசரப்படாதீங்க, நாம பேசலாம்.” என்றவர் மகனைப் பார்த்தார்.
“அந்தத் தம்பி உங்கிட்ட என்ன பேசிச்சு ரங்கா?”
“அம்மா, அவன் இந்த விஷயத்துல உறுதியா இருக்கிற மாதிரித்தான் எனக்குத் தெரியுது, நாம கையை நீட்டிப் பணத்தை வேற வாங்கியிருக்கோம், அதை நான் சொன்னப்போ, அதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு சொல்றான்.”
“ஓ…”
“பையன் எப்பிடி? உனக்கு நல்லா தெரிஞ்சவனா? கெட்ட பழக்கம் எதுவும் இல்லையே?”
“இல்லைப்பா, அதுல எல்லாம் சொக்கத் தங்கம்தான், எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது, ஸ்கூல் காலத்துலயே அவன் நல்ல மாதிரி, எனக்கு அவங்க உரயம் பார்த்துத்தான் பயமா இருக்கு, அவங்க வீட்டுக்குச் சீர் செய்யவே நாம போராடணும், ஆனா அந்த வீட்டுக்குப் போனா ஷக்தி நல்லா இருப்பா, அதுல எந்தச் சந்தேகமும் வேணாம்.”
“ஒரே பையன், வேற பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை, அவங்க அம்மாவும் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியுறாங்க…” இதற்கிடையில் விஷயம் ஷக்தியின் காதுகளுக்குப் போக அவள் மலைத்துப் போய் அமர்ந்துவிட்டாள். இது என்ன திடீர் திருப்பம்?!
“ஷக்தி, இங்க வா.” அண்ணன் அழைக்கவும் வெளியே வந்தாள் பெண். கூடவே திவ்யா, வந்தனா.
“அண்ணா…”
“வீட்டுல நடக்கிற பேச்சு உங்காதுலயும் விழுந்திருக்கும், நீ சின்னப் பொண்ணு இல்லை, உன்னோட அபிப்பிராயம் என்னன்னு சொல்லு.”
“அண்ணா… அது வந்து…”
“நீ எதைப்பத்தியும் யோசிக்காம ஜெகதீஷை உனக்குப் புடிச்சிருக்கான்னு மாத்திரம் சொல்லு.”
“இப்பிடி சட்டுன்னு கேட்டா எப்பிடிண்ணா? அவங்க யாரு என்னன்னு எனக்கு எதுவும் தெரியாது…”
“ம்…” என்றவன் திவ்யாவையும் வந்தனாவையும் பார்த்தான். அவர்கள் முகத்தில் சம்மதத்தின் சாயல்தான் தெரிந்தது.
“திவ்யா, நீ ஏதாவது சொல்லேன்.”
“எனக்கு இது என்னமோ நல்ல இடம்னுதான் தோணுது, குறைன்னு சொல்றதுக்கு எதுவுமில்லையே!”
“எதுக்கும் ஒருதடவை ஷக்தி உங்க ஃப்ரெண்டோட பேசிப் பார்க்கட்டும், அவங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் வர்றது நல்லதுதானே?” இது வந்தனா.
“வந்தனா சொல்றதும் சரிதான், கட்டிக்கப் போறவங்க ஒரு தடவைப் பரஸ்பரம் பேசிக்கிறது நல்லது ரங்கா.” திவ்யாவும் அந்தக் கருத்தை ஆதரிக்க பெற்றவர்களைப் பார்த்தான் மகன்.
“நீங்க இந்தக் காலத்துப் பசங்க, உங்களுக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணுங்க.” என்றார் மாணிக்கம். ரங்கராஜ் மனதுக்குள் சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டான்.
அடுத்தநாள் ரங்கராஜ் தனது மனைவி, சகோதரிகளோடு ஷாப்பிங் கிளம்பியிருந்தான். வந்தனா சொன்ன விஷயம் அவனுக்குச் சரியென்று பட்டது. கந்தசாமி அண்ணனையும் கலந்தாலோசித்தார். அவருக்கும் அது நல்லதாகவே பட எல்லோரும் வெளியே வந்திருந்தார்கள். பொண்ணும் பையனும் பேசுவது நல்ல விஷயந்தான். அதற்காகத் தனியாக அனுப்ப முடியாதே! ஜெகதீஷுடனும் ஏற்கனவே பேசியிருந்தான்.
“மச்சான்! ரொம்ப தேங்க்ஸ்டா, சத்தியமா இதை உங்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை.”
“ஜெகா, ஆனா ஒரு விஷயத்துல நான் ரொம்ப உறுதியா இருக்கேம்பா, ஷக்திக்கு உன்னைப் புடிக்கணும், இல்லைன்னா இந்தக் கல்யாணத்துக்கு நான் நிச்சயமா சப்போர்ட் பண்ணமாட்டேன்.”
“சரிடா சரிடா.” அவன் பதிலில் நெரிந்த உறுதியை ரங்கராஜ் ரசிக்காமலில்லை. சரியாகச் சொன்ன நேரத்துக்கு ஜெகதீஷ் வந்துவிட்டான். அந்த ப்ளாக் ஆடி ஜம்மென்று வந்து நின்றது.
“வந்தனா, கார் சூப்பரா இருக்கில்லை?”
“ஆமா திவ்யா, ரொம்ப நல்ல பையன்னு அத்தான் சொல்றாங்க, உண்மையிலேயே இந்த சம்பந்தம் அமைஞ்சா நம்ம ஷக்தி லக்கின்னுதான் எனக்குத் தோணுது.”
“அண்ணீ, எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.” இவர்கள் பேசுவது தெரியாமல் படபடத்த ஷக்தியைத் தட்டிக்கொடுத்தாள் வந்தனா.
“சும்மா பேசிப்பாரு, புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம், இல்லைன்னா நாம ஷாப்பிங் பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம்.” ஜெகதீஷ் வரும்போது அங்கே இருப்பதற்கு ஒருமாதிரியாக இருக்கவும் ஒரு ஃபோன் பேசிவிட்டு வருவதாக ரங்கராஜ் அப்பால் போய்விட்டான்.
“வாங்கண்ணா.” வந்தனாதான் மலரந்த முகமாக வரவேற்றாள். ஷாப்பிங் மால் ஒன்றிற்கு வந்திருந்தார்கள்.
“எப்பிடிம்மா இருக்கே? இப்போ உடம்புக்கு ஓகேவா?” என்றபடி மற்றைய இரு பெண்களையும் பார்த்துப் புன்னகைத்தான். ஆனாலும் கண்கள் ஷக்தியையே வட்டமிட்டன.
“ரங்கா எங்கம்மா?”
“ஒரு ஃபோன் பண்ணிட்டு வர்றேன்னு போனாங்க, நீங்க பேசிட்டு இருங்க.” என்றுவிட்டு திவ்யாவும் வந்தனாவும் அப்பால் போக ஷக்தியைப் பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்தான் ஜெகதீஷ். கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் நல்ல திருத்தமான முகம். கம்பீரமான தோற்றம்.
“ஹலோ ஷக்தி, எப்பிடியிருக்கே? என்ன எதுவும் பேச மாட்டேங்கிறே? அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ நல்லாத்தானே பேசினே? இப்போ என்னாச்சு?”
“அது…”
“இங்கப்பாரு ஷக்தி, நீ பயப்பிடுற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கலை, எனக்கு உன்னைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுது, உனக்கும் அதேமாதிரி எண்ணம் வந்துச்சுன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லைன்னா எனக்குக் குடுத்து வெக்கலைன்னு நான் நினைச்சுக்கிறேன்.” இந்த அணுகுமுறை பெண்ணுக்குப் பிடித்திருந்தது.
“நீங்க ரொம்ப வசதியா வாழ்ந்தவங்க, என்னால உங்க உயரத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.”
“அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, கொஞ்ச நாள் எங்க வீட்டுல வந்து இருந்தா நீ எல்லாத்தையும் தானா புரிஞ்சுக்குவே, எனக்கு இப்போ முக்கியம் உனக்கு என்னைப் புடிச்சிருக்காங்கிறதுதான், நான் கொஞ்சம் கறுப்பா வேற இருக்கேன்…” அவன் இழுக்கவும் அவள் சிரித்தாள்.
“கறுப்பா இருந்தாலும் நீங்க களையாத்தான் இருக்கீங்க, ஆம்பிளைக்கு எதுக்குக் கலர்?” பேசிய பிறகுதான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று பயந்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ரொம்ப தேங்க்ஸ், மனசுல இருக்கிறதை வெளிப்படையா பேசினதுக்கு.”
“உங்க வீட்டுல எப்பிடி? அம்மா ரொம்ப கண்டிப்போ? உங்கப்பா அதுக்கு எதிர்மாத்தமா அளந்துதான் பேசுறாங்க.”
“அம்மா கண்டிப்பெல்லாம் கிடையாது, ஆனா ரொம்பச் செல்லமெல்லாம் குடுக்கமாட்டாங்க, இல்லைன்னா இவ்வளவு பெரிய தொழிலை நடத்த முடியாதில்லை, அப்பா எல்லாத்துலயும் நிதானம், பேச்சும் அப்பிடித்தான்.”
“நீங்க எப்பிடி?”
“அதை நான் சொல்றதைவிட நீயா எங்க வீட்டுக்கு வந்து தெரிஞ்சுக்கோ, என்ன? வர்றியா?”
“வரட்டுமா? நான் உங்களுக்கும் உங்க வீட்டுக்கும் சரியா இருப்பனா?”
“கண்டிப்பா, அதிலென்ன சந்தேகம் உனக்கு?” அவள் சம்மதம் சொல்லிவிட்ட மகிழ்ச்சி ஜெகதீஷின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நாம ஷாப்பிங் பண்ணலாமா? நான் உனக்கு ஏதாவது வாங்கிக் குடுக்கட்டுமா?”
“இல்லை, அண்ணா ஏதாவது தப்பா எடுத்துக்குவாங்க, நான் அண்ணா கூடவே போறேன்.”
“ஏன்? உங்கண்ணா அவரோட வொய்ஃபுக்கு வாங்கிக் குடுக்கும்போது நான் உனக்கு வாங்கிக் குடுக்கக் கூடாதா?” என்றவன் அலைபேசியை எடுத்து ரங்கராஜை அழைத்தான்.
“மச்சான் எங்கடா இருக்கே?”
“இங்கதான் கடையில இருக்கோம், வந்தனாவும் திவ்யாவும் புடவை பார்த்துக்கிட்டு இருக்காங்க, ஷக்தியையும் கூட்டிட்டு வா, அவளும் ஏதாவது வாங்கட்டும்.”
“அதெல்லாம் ஓகே, ஆனா இன்னைக்கு பில் எம் பொறுப்பு.”
“டேய் மச்சான், வீட்டுப் பொண்ணுங்களை ஷாப்பிங் கூட்டிட்டு வந்தது நான்டா.”
“அது சரிதான், ஆனா இப்போ அவங்க உன்னோட வீட்டுப் பொண்ணுங்க மாத்திரமில்லை, என்னோட வீட்டுப் பொண்ணுங்களுந்தான், அப்ப நானும் பணம் குடுக்கலாமில்லை?”
“மச்சான்! என்னடா சொல்றே? ஷக்தி என்ன சொல்லுறா?”
“அவளை மாதிரி இல்லையாம் அவங்க அண்ணா, சரியான டியூப் லைட்டாம், அவரோட மனசுல இருக்கிற பொண்ணைக் கண்டுபிடிக்கிறதுக்கே அவருக்கு இன்னொரு பொண்ணு தேவைப்பட்டுச்சாம், இந்த லட்சணத்துல அவரு எப்பிடி என்னோட மனசைப் புரிஞ்சுக்கப் போறார்னு கேட்கிறா.”
“டேய் டேய்! ஓட்டாதடா மச்சான்.” ரங்கராஜ் அங்கே சிரிக்க இங்கே ஷக்தி இவனை வியப்பாகப் பார்த்தாள். சட்டென்று கண்ணடித்துச் சிரித்தான் ஜெகதீஷ். வெட்கப்பட்ட பெண் தலையைக் குனிந்து கொண்டது.






ஆமாம்….
நண்பனை போல நாள் கடத்தாமல் நடத்தி கொண்டான்
நல்லதை…. 🤩
அழகான பதிவு❤️
Very nice.
அருமையான பதிவு