arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 02
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 2 / 20

அத்தியாயம் 02

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

நேரம் நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது. அறையில் முடங்கிக் கிடக்க முடியாமல் வெளியே வந்தான் தேவன். இதமான தென்றல் உடலை வருடிச் சென்றது. இந்த இதத்தை இரவில் மாத்திரம்தான் இங்கே அனுபவிக்கலாம். லண்டனில் அடிக்கும் குளிருக்கும் இங்கே வதைக்கும் வெப்பத்திற்கும் எத்தனை வித்தியாசம்!

இயற்கையை வியந்தபடி கொஞ்ச நேரம் நடந்தவன் மீண்டும் ஹோட்டலுக்கு வந்தான்.‌ சற்றுத் தொலைவில் அந்தப் பெண் இந்திரா நடந்து செல்வது தெரிந்தது. அலைபேசியைக் காதுக்குக் கொடுத்தபடி யாரோடோ சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

“இங்கப் பாரு சூர்யா, என்னை மறுபடி மறுபடி தொல்லைப் பண்ணாதே, நான் ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை.” கோபமாகப் பேசியபடியே அவள் ‘பப்’ இருக்கும் இடத்தை நோக்கி நடக்கவும் தேவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. மெதுவாக அவளை நோக்கி நடந்தான்.

அவன் சந்தேகித்தது உண்மை என்பது போல அந்தப் பெண் உள்ளே நுழைந்து என்னவோ ஆர்டர் பண்ணிக் கொண்டிருந்தது. இப்போது இவன் அவளிடம் போய் என்ன பேசினாலும் எடுபடாது என்று புரிந்தவன் அவளைக் கண்காணிக்க வசதியான ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டான். இதுவெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லைப் போலும். மிகவும் சிரமப்பட்டு அந்தப் பானத்தை அருந்திக் கொண்டிருந்தாள்.

“இந்திரா…” மூன்றாவது முறையாக அவள் ஆர்டர் பண்ணவும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து வந்தான் தேவன்.

“ஹாய் தேவன்! நீங்களும் இங்கதான் இருக்கீங்களா? கரெக்ட், உங்களுக்கும் மனசுல என்னவோ ஒரு சோகம் இருக்கு, இல்லைன்னா காலையில யாருக்கிட்டயோ பொய் சொல்லியிருக்க மாட்டீங்களே!” பேச்சு சற்றுக் குழறலாக வந்தது.‌

“போதும் இந்திரா, இதுக்கு மேல இங்க இருக்காம ரூமுக்குப் போங்க.”

“ஏன்? நீங்களும் ரூமுக்குப் போகாம இங்கதானே இருக்கீங்க? அப்ப நான் மட்டும் ஏன்‌ போகணும்?” அவள் விவாதத்தில் அவனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலவிருந்தது. இருக்கும் நிலையில் இந்தப் பெண்ணுக்கு இப்போது பெண்ணியம் வேறு கேட்கிறதா?

“இல்லைம்மா, நானும் இப்ப ரூமுக்குத்தான் போறேன், அப்பிடியே ஒன்னா போகலாமேன்னுதான் சொன்னேன்.”

“ஓ… உங்களுக்குத் தனியா போக ஒரு மாதிரியா இருக்கா?” என்றவள் எழுந்தாள். எழுந்த வேகத்திலேயே மீண்டும் நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தாள்.‌ அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. இவன் ஒரு கையை நீட்டவும் அதைப் பற்றிக் கொண்டவள் மறு கையால் தோள் பையை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டாள். சரியாக அந்நேரம் அவள் அலைபேசி அலறியது. அதை அவள் கண்டுகொள்ளவில்லை.

“ரூம் நம்பர் என்ன?” இரண்டு முறை அவன் கேட்டபோதும் அவளிடம் பதிலில்லை.‌

“இந்திரா! உங்க ரூம் நம்பர் என்ன?” லிஃப்ட்டை நெருங்கியிருந்தார்கள். இந்தப் பெண்ணை என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை.

“தெரியாது தேவன்.” அவள் கண்கள் இலேசாகச் சொருகியது.

“ரூம் கீ எங்க?” அந்த கார்ட் இருந்தாலாவது அவளது அறை எண்ணைக் கண்டுபிடிக்கலாமே.  ஆனால் அந்தக் கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை. ரிசப்ஷனில் சென்று கேட்பதற்கு இவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. ஒரு வயதுப் பெண்ணின் அறையைத் திறக்க வேண்டும் என்று எப்படி அவர்களிடம் கேட்பது? உதவி கிடைத்தாலும் அவனைப் பற்றிய தவறான எண்ணங்களை அது உருவாக்கும்.

ஒரு பெருமூச்சுடன் தனது அறைக்கு அவளை அழைத்து வந்தான். அவள் இப்போது சுயநினைவோடு இல்லை. தன்மேல் பாதி சரிந்திருந்த பெண்ணைக் கட்டில் வரை அழைத்து வந்தவன் அவளை அங்கேயே உறங்கச் சொன்னான். இப்போது மீண்டும் அவள் அலைபேசி அலற ஆரம்பித்தது. ஒரு சலிப்போடு அவள் கழுத்தில் கிடந்த பையை எடுத்தவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான். சூர்யா என்றது அழைப்பு. எதைப்பற்றியும் யோசிக்காமல் தேவன் அழைப்பை ஏற்றான்.

“ஏய் இந்திரா! உனக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா? எத்தனைத் தடவைதான் உன்னைக் கூப்பிடுறது? அறிவு வேணாம்? நீயா எங்கயோ போய் உட்கார்ந்திருக்கே! வீட்டுல அம்மா, அப்பாக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?” அந்தப்புறம் இளங்குரல் ஒன்று இவளை மிரட்டியது.

“ஹலோ…”

“ஹலோ! ஹலோ! யாரது?! ஹூ இஸ் திஸ்?!” திடீரென தன் அக்காளின் அலைபேசியில் ஓர் ஆண் குரல் கேட்கவும் அந்த இளம் குரல் பதறியது.

“சூர்யா.”

“யாரு சார் நீங்க? இந்திராவோட ஃபோன் உங்களுக்கு எப்பிடிக் கிடைச்சது? என்னோட பேர் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“கொஞ்சம் பொறுமையா பேசுங்க சூர்யா, இந்திராவை நான் ஹீத்ரோவுல மீட் பண்ணினேன், அங்க வெச்சு அவங்க உங்கக் கூட பேசினதை நான் கேட்டேன்.”

“அதுக்கும் நீங்க எங்கக்கா ஃபோன்ல பேசுறதுக்கும் என்ன சார் சம்பந்தம்? இப்ப இந்திரா எங்க?!”

“நீங்க வீடியோ கால்ல வாங்க சூர்யா, அப்பதான் உங்களுக்கு எம்மேல நம்பிக்கை வரும்.” என்றவன் அழைப்பை வீடியோவுக்கு மாற்றி பெண்ணைக் காட்டினான். தன்னைப் பற்றிய தவறான எண்ணங்கள் எங்கேயும் எப்போதும் விதைக்கப்படுவதை தேவன் விரும்புவதில்லை.

“உங்கக்காவைப் பார்த்தீங்களா? பப்ல இருந்து அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தேன்.”

“வாட்! அக்கா ட்ரிங் பண்ணினாளா? இந்திரா குடிச்சாளா?” தம்பி ஆச்சரிய மிகுதியில் உறைந்தான்.

“நீங்க எந்த பாஷையில எத்தனைத் தடவைக் கேட்டாலும் இதுதான் உண்மை.” என்றவன் நடந்தவற்றை விபரித்தான்.

“உங்கக்காவோட ரூம் நம்பர் கூட எனக்குத் தெரியாது, இப்போ அவங்களை என்ன பண்ணுறதுன்னும் எனக்குத் தெரியாது, அங்க தனியா விட்டுட்டு வர மனசு வரலை, அதாலதான் கையோட கூட்டிட்டு வந்துட்டேன், இப்ப நான் என்ன பண்ணுறதுன்னு நீங்களே சொல்லுங்க சூர்யா.”

“சார்… சாரி சார், அக்கா ஃபோன்ல உங்க வாய்ஸ் கேட்டதும் நான் பதறிட்டேன், அக்கா ஏனிப்பிடி நடந்துக்கிறா? இதெல்லாம் வீட்டுல தெரிஞ்சா…”

“சூர்யா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க, இங்க என்ன நடக்குதுங்கிறதை நீங்க உங்க வீட்டுல சொல்றது நல்லது, அப்பதான் அவங்களுக்கு இந்திராவோட மனசு என்னன்னு புரியும், இந்தக் கல்யாணத்துல அவங்களுக்கு அவ்வளவு நாட்டம் இருக்கிற மாதிரி எனக்குத் தோணலை.”

“உங்களுக்கு எப்பிடி இதெல்லாம்…” தங்கள் வீட்டு விஷயத்தை இன்னொரு மனிதன் பேசுவதை இளையவன் விரும்பவில்லைப் போலும்.

“இந்திரா உங்கக்கிட்ட பேசினதை வெச்சு நானே புரிஞ்சுக்கிட்டேன்.”

“வீட்டுல அம்மா, அப்பாக்கு இந்த வரனை ரொம்பப் புடிச்சிருக்கு சார், அவங்க மனசை மாத்துறது ரொம்பக் கஷ்டம்.”

“ஆனா கல்யாணம் பண்ணி வாழப்போறது இந்திரா, அவங்க விருப்பந்தான் இங்க ரொம்ப முக்கியமில்லையா?”

“அது எனக்குப் புரியுது சார், ஆனா இங்க யாரும் அதை ஏத்துக்கமாட்டாங்க, அந்த மனுஷன் வேற அக்கா மேல ரொம்பப் பைத்தியமா இருக்காரு.” இவர்களது பேச்சுச் சத்தத்தில் பெண் இலேசாகப் புரண்டது.

“என்னோட நம்பரை நோட் பண்ணிக்கோங்க சூர்யா, அந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவளது ஃபோனை அவளருகில் வைத்தான். இதற்கு முன்பு இந்தப் பானங்களை அருந்திப் பழக்கமில்லாததால் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தது பெண். அறையைவிட்டு இவன் வெளியே வரவும் சூர்யா அழைக்கவும் சரியாக இருந்தது.

“சூர்யா, நல்லா கவனிங்க, இந்திரா எங்கூட இப்போ பேலஸ் ஹோட்டல்ல தங்கி இருக்காங்க, எத்தனை நாள் இங்க இருக்கப் போறாங்கன்னு எனக்குத் தெரியாது, ஆனா நான் மூனு நாள்தான் இங்க இருப்பேன், அதுவரைக்கும் உங்கக்காவை முடிஞ்சவரைப் பார்த்துக்கிறேன், அதுக்கப்புறம் என்ன பண்ணுறதுன்னு நீங்கதான் சொல்லணும்.”

“சார், என்னால அங்க இப்போ கிளம்பி வரமுடியாது, நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு சார்.”

“ஓ… என்ன பண்ணுறீங்க சூர்யா?”

“மெடிஸின் சார், ப்ரூனல் யூனிவர்ஸிட்டி, ஒரு எக்ஸாமைக்கூட என்னால மிஸ் பண்ண முடியாது, அக்கா ஏன் இப்பிடியெல்லாம் பண்ணுறா சார், ஒரு தம்பியா என்னோட நிலைமைல இருந்து யோசிச்சுப் பாருங்க, வீட்டுக்குத் தெரியாம இதெல்லாம் பண்ணுறவ எவ்வளவு பொறுப்பா இருக்கணும்! இவ பாட்டுக்கு பப்புக்கு போய் குடிச்சிருக்கா, நீங்க நல்லவரா இருக்கப் போக ஹெல்ப் பண்ணுறீங்க, இதுவே வேற யாராவது…” அதற்கு மேல் பேசமுடியாமல் அந்த இளைஞன் அழுதான்.

“நோ நோ, இந்த நாட்டுல அப்பிடியெல்லாம் யாராவது தப்பா நடந்துட்டு உயிரோட போக முடியுமா? ஆனா ஏன் இந்திரா இப்பிடியெல்லாம் நடந்துக்கிறாங்க? அப்பிடியென்ன கஷ்டம் அவங்களுக்கு?”

“இந்தக் கல்யாணத்துல அவளுக்கு இஷ்டமில்லை, ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, இப்ப அந்த மனுஷன் எனக்கு வேணாம்னு சொல்றா, வீட்டுல இவ சொல்ற காரணங்களை யாரும் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க.”

“என்ன காரணம் சொல்றாங்க?” இந்தப் பெண் கிட்டத்தட்ட தனது நிலைமையில் இருக்கிறது என்று எண்ணினான் தேவன்.

“அவளோட சுயம் தொலைஞ்சு போகுதாம், இவளுக்கும் சேர்த்து அந்த மனுஷனே முடிவெடுக்கிறாராம், இவ இஷ்டத்துக்கு ஒன்னுமே பண்ண முடியலையாம்.”

“ஓ… உங்களுக்கு என்ன தோணுது சூர்யா?”

“அக்கா சொல்றது ஒருவகையில சரிதான், ஆனா விக்ரம் அக்காக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னுதான் எனக்குத் தோணுது, தனியா பிஸினஸ் பண்ணுறாங்க, தாத்தா மட்டுந்தான் சொந்தம்னு இருக்காங்க, செல்லமா வளர்ந்துட்டாங்க, அவங்க நினைச்சதையே நடத்திப் பழகிட்டாங்க, அக்கா எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவாங்க.”

“ம்… கொஞ்சம் பொறுமையா விட்டுப்பிடிங்க, அவங்களும் ஏதோவொரு குழப்பத்துலதானே கிளம்பி வந்திருக்காங்க, நிதானமா யோசிச்சு முடிவெடுக்கட்டும், என்னால முடிஞ்சவரை நானும் இந்திராக்கு எடுத்துச் சொல்றேன்.”

“தேன்க் யூ சார், உங்களை நான் அண்ணான்னு கூப்பிடட்டுமா?” அந்தக் கேள்வியில் சட்டென்று தேவனின் முகத்தில் புன்னகை அரும்பியது. இவனுக்கு நான் அண்ணா என்றால் இவனது அக்காவிற்கும் நான் அண்ணனா?! அந்தக் கெட்டிக்காரத்தனத்தை இவன் வெகுவாக ரசித்தான். இல்லாமலா ப்ரூனல் யூனிவர்ஸிட்டியில் இவன் இடம் பிடித்திருக்கிறான்!

“தாராளமா சூர்யா, எதைப்பத்தியும் யோசிக்காம நாளைக்கு நல்லபடியா எக்ஸாமை முடிங்க, முடிச்சுட்டுக் கூப்பிடுங்க, இந்திராக்கிட்ட நிதானமா பேசுங்க, அவங்களுக்குக் கோபம் வர்ற மாதிரி பேசாதீங்க, ட்ராவல் பண்ணினது எனக்கு டயர்டா இருக்கு சூர்யா, நான் சோஃபால எப்பிடியாவது கொஞ்ச நேரம் தூங்க ட்ரை பண்ணுறேன்.”

“சாரிண்ணா, அக்காவால உங்களுக்குத் தேவையில்லாத சிரமம்.”

“பரவாயில்லை விடுங்க, ஒரே நாட்டுக்காரங்களா ஆகிட்டோம், இதுகூட பண்ணலைன்னா எப்பிடி?” என்றவன் தன்னால் முடிந்தவரை இளையவனுக்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். தான் எதற்காக இங்கு வந்தோம், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபோது தலை சுழன்றது. தூக்கம் கண்ணை நிறைக்க எதைப்பற்றியும் யோசிக்காமல் அறைக்கு வந்தவன் ஒரு தலையணையை எடுத்து சோஃபாவில் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டான். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நம்மைப் படைத்தவன் எதற்காக இருக்கிறான்?! விதி தன் ஆட்டத்தை ஆரம்பித்திருந்தது.

***
அடுத்தநாள் காலை தேவன் கண்விழிக்கும் போது மணி எட்டு. அப்போதும் இந்திரா தூங்கிக் கொண்டுதானிருந்தாள். சோஃபாவில் தூங்கியது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கவும் எழுந்தவன் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான். குளியலறைக்குள் சென்றவன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வரும்போது அவளிடம் இலேசான அசைவு தெரிந்தது. அலைபேசியை எடுத்தவன் சூர்யாவை வீடியோ காலில் அழைத்தான்.

“அண்ணா.” டுபாயில் காலை எட்டு மணியென்றால் லண்டனில் அதிகாலை ஐந்து மணி. நேரத்தைப் பொருட்படுத்தாது அழைத்திருந்தான் தேவன். அப்போதும் கட்டிலில் தூங்காமல் படிக்கும் மேசையில் அமர்ந்திருந்தான் தம்பி. தேவன் எதுவும் பேசவில்லை. அலைபேசியை பெண்ணின் புறமாகத் திருப்பினான். அக்காவைக் கண்டதும் தம்பிக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது.

“அறிவு கெட்டவளே!” தனக்கு முன் பிறந்தவளை அற்புதமாக அழைத்தான் இளையவன்.

“சூர்யா! தேவன் சார் எப்பிடி என்னோட ரூமுக்கு வந்தாரு?!” என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டாள். நடக்கும் நாடகத்தைப் பெரியவன் அமைதியாகப் பார்த்திருந்தான்.

“ஓ! அது உன்னோட ரூமா? நல்லா பாரு, அது டுபாய் ஷேக்கோட ரூமில்லை?”

“டேய்! கேலி பண்ணுறியா? இது என்னோட…” அப்போதுதான் அந்த அறையை ஆராய்ந்தாள் பெண். அது அவளது அறையல்ல. எதையும் சிந்திக்க முடியாமல் தலைவேறு விண்ணென்று வலித்தது.

“உனக்கு அறிவிருக்கா?! என்ன மயித்துக்கு நேத்து பப்புக்கு போன? அந்த மனுஷன் நல்லவரா இருக்கப் போயி உன்னைக் கூட்டிக்கிட்டு வந்தாரு, இதுவே வேற யாருமா இருந்தா என்ன ஆகியிருக்கும்?! கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா?”

“சூர்யா…” தம்பியின் ஆக்ரோஷத்தில் பெரியவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. மிரண்டு விழித்தபடி அந்த அறையை அவள் பார்வை வலம் வந்தது. சோஃபாவில் கிடந்த தலையணையை அவள் கண்கள் கவனித்தன. குற்றவுணர்வோடு தேவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“முன்ன பின்ன நீயெல்லாம் இங்க பப்புக்கு போயிருக்கியா? அம்மாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தியா?”

“சூர்யா!” அவள் குரலில் இப்போது பயம் தெரிந்தது.

“பயம் வருதில்லை? இந்தப் பயம் நேத்து எங்கப் போயிச்சு? பெருசா பெண்ணியம் பேசுவியே, இப்போ பேசு உன்னோட முட்டாள்தனமான பெண்ணியத்தை!”

“சூர்யா… அது வந்து…”

“பேசாதே! அம்மா சொல்றது எவ்வளவு கரெக்ட்னு இப்ப எனக்குப் புரியுது, நீ ஒரு இடியட்! கடைஞ்செடுத்த இடியட்! இப்பிடியெல்லாம் பண்ணுவேன்னு தெரிஞ்சுதான் உனக்கு விக்ரம் மாதிரி ஒரு ஆளை செலக்ட் பண்ணியிருக்காங்க, இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, உனக்கு விக்ரம்தான் சரி, அந்த மனுஷனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.” என்று ஆணித்தரமாகச் சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

எதுவும் பேசாமல் பெண் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தது. அவளது கையிலிருந்த தனது அலைபேசியை வாங்கியவன் அறையைவிட்டு வெளியே வந்து மீண்டும் சூர்யாவை அழைத்தான்.

“சாரிண்ணா, ஏதோ கோபத்துல நான் லைனை கட் பண்ணிட்டேன்.”

“பரவாயில்லை சூர்யா, அங்க இப்ப ஏர்லி மார்னிங்னு தெரிஞ்சும் நான் ஏன் எடுத்தேன்னா…”

“ஐயையோ! அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைன்னா, உண்மையைச் சொன்னா நான் நைட் தூங்கவேயில்லை, இந்தப் பொண்ணை நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தேன், ரொம்ப சாரின்னா, அக்காவால உங்களுக்கு வீணான சிரமம்.”

“அதைவிடுங்க, கொஞ்ச நேரம் நல்லா தூங்கி எந்திரிச்சுட்டு எக்ஸாம் போங்க.”

“வா போன்னே பேசுங்கண்ணா, எதுக்கு இந்த மரியாதையெல்லாம்?”

“சரிப்பா, நான் அப்புறமா பேசுறேன், நீ எக்ஸாமை முடிச்சுட்டு கால் பண்ணு, நாம பேசலாம், இப்ப நல்லா ரெஸ்ட் எடு.” என்றவன் அறைக்குள் வந்தான்.

“தேவன் சார்… நான்…”

“ரூம் கீ எங்க?” இவன் கேட்கவும் அவசர அவசரமாக அவளது தோள் பையை ஆராய்ந்தவள் அங்கிருந்த கார்டை எடுத்துக் காட்டினாள்.

“ம்… ரூமுக்குப் போய் குளிச்சுட்டு ஃப்ரெஷ்ஷா வந்தா வெளியே போய் ஏதாவது சாப்பிடலாம்.”

“ம்…” என்று தலையை ஆட்டியவள் கட்டிலைவிட்டு எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவளால் நேராக நிற்க முடியவில்லை. சற்றே தள்ளாடியவள் மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.

“பழக்கமில்லாத விஷயங்களை எல்லாம் பண்ணக்கூடாது இந்திரா, எதுக்கு இந்த விஷப்பரீட்சை?”

“சாரி…” குரல் வெகுவாக இறங்கிப் போயிருந்தது. அங்கிருந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்தவன் அதை அவளிடம் நீட்டினான்.

“சூடா குடிச்சா நல்லா இருக்கும்.” எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவள் வாயைக்கூட கொப்பளிக்காமல் டீயை அருந்தினாள்.

“இப்போ எப்பிடியிருக்கு?”

“கொஞ்சம் பரவாயில்லை.” அவள் சொல்லவும் அவளது கரத்தைப் பிடித்து எழுப்பியவன் அவளோடு கூட நடந்தான். அவளது அறைவரை வந்தவன்,

“குளிச்சுட்டு வாம்மா, நான் ரூம்ல வெயிட் பண்ணுறேன்.” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

இந்திராவிற்குத் தலை பாரமாக இருந்தது. கண்கள் இரண்டும் எரிந்தன. வாய்விட்டு அழுதால் கொஞ்சம் நன்றாக இருக்கும் போலிருந்தது. தான் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்று புரிந்தவள் குளியலறைக்குள் சென்று நன்றாகக் குளித்தாள். நேற்றைய நாள் படம் போல மனதில் விரிந்தது.

நேற்று முழுவதும் அவள் சூர்யாவோடு சண்டை போட்டபடிதான் இருந்தாள். ஹீத்ரோவில் வைத்து அணைத்த ஃபோனை டுபாய் வந்ததும் ஆன் பண்ணினாள். அதற்குள்ளாக தம்பியிடமிருந்து பல அழைப்புகள், குறுஞ்செய்திகள். ஏற்கனவே மனதிலிருந்த குற்றவுணர்ச்சி, இப்போது தம்பியோடு மல்லுக்கு நிற்பது என்று அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தது.

பப்பிற்கு போகவேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. இதுவரை அவள் அதுபோன்ற இடங்களுக்குப் போனதுமில்லை. ஆனால் நேற்று அவளிருந்த மனநிலையில் அப்படி நடந்திருக்கிறாள்.‌ அவளையும் மீறி காரியங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அது இவ்வளவு தூரம் கொண்டுபோய் தன்னை நிறுத்தும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. தேவன் சார் அறையில் அவள் நேற்றைய இரவைக் கழித்திருக்கிறாள். நினைத்த போது இலேசான நடுக்கம் பிறந்தது.

சூர்யா இன்று காலையில் பேசியது வருத்தமாக இருந்தது. அதுவும் யாரென்றே தெரியாத அந்நிய மனிதன் முன்பாக. ஆனால் அதே அந்நிய மனிதனின் அறையில்தானே அவளது நேற்றைய இரவு கழிந்தது!

குளித்து முடித்தபோது உடம்பும் மனதும் கொஞ்சம் இலேசானது போல இருந்தது. பழுப்பு நிறத்தில் ஆரஞ்சு வண்ணப் பூக்கள் போட்ட ஜார்ஜெட் ஆடையை அணிந்தவள் தேவனது அறையை நோக்கி நடந்தாள்.

நேரம் பத்தை நெருங்கியிருந்ததால் இவள் வந்ததும் நேராக ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் சென்றான் தேவன்.‌ இது தனக்குத் தேவையில்லாத தலைவலி என்று தெரிந்தபோதும் ஏனோ அந்தப் பெண்ணைத் தவிர்க்க முடியவில்லை. சொல்ல முடியாத ஏதோவொரு சோகம் அவளை அழுத்துகிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. அவளுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணியவன் அவளோடு அமர்ந்து கொண்டான்.

“இந்திரா, இப்பிடியெல்லாம் நான் பேசுறது சரியான்னு எனக்குத் தெரியலை, ஆனா பேசுறது நல்லதுன்னு தோணுது.” அவள் பதில் சொல்லவில்லை. மௌனமாக அவன் பேசுவதைக் கேட்டபடி இருந்தாள்.

“நீங்க திரும்பவும் லண்டன் போறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.” இவன் சொல்லி முடித்தபோது அவள் முகத்தில் எந்தச் சலனமும் தோன்றவில்லை. ஆனாலும் ஓர் மறுப்புத் தெரிந்தது.

“நீங்க இருக்கிற மனநிலையில இப்பிடித் தனியா இருக்கிறது பாதுகாப்பில்லைன்னு நான் நினைக்கிறேன்.”

“தேவன் சார், உங்களுக்கு இது புரியாது, எனக்குப் புடிக்காத வாழ்க்கைக்குள்ள என்னைப் புடிச்சுத் தள்ளப் பார்க்கிறாங்க.” இப்போது தேவன் கசப்பாகப் புன்னகைத்தான். எனக்கா உன்னுடைய நிலைமை புரியாது என்று கேட்கவேண்டும் போலிருந்தது. ஆனாலும் அவளைப் பேசவிட்டான்.

“எனக்கும் சேர்த்து முடிவெடுக்கிற மனுஷன் எனக்கு வேணாம் சார், மூச்சு முட்டுது, கஷ்டமா இருக்கு, இப்பிடியே இருந்துச்சுன்னா நான் தொலைஞ்சு போயிடுவேன்.”

“ஆனா விக்ரம் உங்களுக்குப் பொருத்தமா இருப்பார்னு உங்க வீட்டுல நினைக்கிறாங்க.”

“வீட்டுல நினைக்கிறது சரி சார், அதை நான் நினைக்கணுமில்லை? எனக்கு அந்த மனுஷனைப் புடிக்கணுமில்லை?”

“புடிக்காமலா கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னீங்க?” தன்னிடம் கேட்கவேண்டிய கேள்வியை அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான் தேவன்.

“அப்ப மறுக்கிறதுக்கு எந்தக் காரணமும் இருக்கலை, நல்ல ஃபேமிலி, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை, சொந்தமா பிஸினஸ் பண்ணுறாரு, பார்க்க நல்லா இருக்காரு, இப்பிடி எல்லாமே நல்லாத்தான் இருந்துச்சு, ஆனா நிலைமை இப்போ அப்பிடியில்லை, இந்தக் கல்யாணம் நடந்தா என்னையே நான் தேட வேண்டியிருக்கும், கஷ்டப்படுவேன்னு தோணுது.”

“இதையெல்லாம் விக்ரம்கிட்ட நீங்க பேசினீங்களா? அவருக்குப் புரியவெச்சீங்களா?”

“தான் தப்புப் பண்ணுறோம்னு புரிஞ்சுக்கிறவங்கதான் மத்தவங்க என்ன பேசுறாங்கன்னு காது குடுத்துக் கேட்பாங்க, அவரைப் பொறுத்தவரை அவர் பர்ஃபெக்ட், எப்பவுமே எல்லாத்தையுமே சரியா பண்ணுற மனுஷன், அவர்கிட்டப் போய் எதை உங்களால விளக்க முடியும்? பாறாங்கல்லுல யாராவது போய் தலையை முட்டிக்குவாங்களா? வேஸ்ட் சார்.”

“சரி, இப்ப என்ன பண்ணுறதா உத்தேசம்?”

“நான் ஸ்ரீலங்கா போகணும் தேவன் சார், எனக்கு மூனு மாசம் ப்ளேஸ்மென்ட் இருக்கு, கம்பெனிகாரனே லீவும் குடுத்து, சம்பளமும் குடுக்கிறான், இந்த மூனு மாசத்தையும் நான் நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணணும், எனக்கு இப்ப அதுமட்டுந்தான் வேணும்.”

“ஆனா விக்ரம் உங்கமேல ரொம்பப் பிரியமா இருக்காங்கன்னு சூர்யா சொல்றாரே!”

“மண்ணாங்கட்டி! எது சார் பிரியம்? அவரோட இஷ்டத்துக்கு நான்‌ ஆடுறதுக்குப் பெயர்தான் பிரியமா? அவங்க அம்மா மாதிரி அவர் என்னைப் பார்க்கிறாராம், ஸ்டுப்பிட்! முதல்ல பொண்டாட்டி மாதிரி பாருடா! அதுக்கப்புறமா அம்மா மாதிரி, ஆட்டுக்குட்டி மாதிரி பார்க்கலாம்.”

“ஸ்ரீலங்கா போய் உங்களால தனியா சமாளிக்க முடியுமா? சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?”

“எங்க சைட் ஆளுங்கன்னு இப்ப அங்க யாருமே இல்லை, எல்லாரும் ஃபாரின்லதான் இருக்காங்க, விக்ரமோட ஃப்ரெண்ட்டு ஃபேமிலி அங்க இருக்காங்களாம், அவங்க எல்லாம் பார்த்துக்குவாங்களாம், மருமகன் சொன்னதும் எங்க வீட்டுல எதைப்பத்தியும் யோசிக்காம தலையை ஆட்டிட்டாங்க.” அசிரத்தையான பதில். தேவன் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டான்.

சற்று நேரம் இருவரும் அமைதியாக ஆர்டர் பண்ணிய உணவை உண்டார்கள். எதிரே அமர்ந்திருக்கும் மனிதரிடம் தன் உள்ளத்தில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்த ஆறுதலில் அவள் அமைதியாக உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் தேவனின் சிந்தனை வேறாக இருந்தது. இப்போது இவன் எப்படிப் பேசினாலும் இவளிடம் எடுபடப் போவதில்லை. விக்ரம் என்ற மனிதன் மேல் முழுதாக வெறுப்பை வளர்த்து வைத்திருக்கிறாள்!

ஆனால் நேற்று ஏர்போர்ட்டில் வைத்து இவன் பார்த்த மனிதனின் கண்களில் அவ்வளவு காதல் வழிந்ததே! இந்தப் பெண்ணின் மேல் எந்த ஆதிக்க உணர்வையும் அந்தக் கண்கள் காட்டவில்லையே! தனக்கு இருக்கும் பிரச்சனைக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குழப்பம் தனக்குத் தேவையில்லாதது என்று அறிவு எவ்வளவு எடுத்துச் சொன்னபோதும் தேவனின் சிந்தனை அவளைச் சுற்றியே அலைந்தது.

சின்னப் பெண். தனக்கு வர இருக்கும் நல்லதொரு வாழ்க்கையைப் பாழ்பண்ணிக் கொள்கிறாள் என்றுதான் தோன்றியது. எடுத்துச் சொல்லியெல்லாம் ஒரு மனிதனது குணத்தை மாற்ற முடியாது என்று தேவனுக்குப் புரியவில்லை. தன் எதிர்பார்ப்புகளை எப்படி நிதிலாவால் பூர்த்தி செய்ய முடியாதோ அப்படித்தான் விக்ரமும் என்று இவன் விளங்கிக் கொள்ளவில்லை.

“சரிம்மா, உங்க ஃப்ளைட் எப்போ?”

“இன்னும் ரெண்டு நாள்ல சார்.” இருவருக்கும் ஒரே விமானம்தான்.‌ அந்த வகையில் தேவனுக்கு நிம்மதியாக இருந்தது.

“ஓகே இந்திரா, தனியா எங்கேயும் போகாதீங்க, எங்கூட வாங்க, உங்க ஃப்ரெண்ட்டு வீட்டுல இருக்கிறதா சொல்லி இப்போதைக்கு சமாளிங்க, அப்புறமா என்ன பண்ணுறதுன்னு யோசிக்கலாம்.”

“எதுக்கு சார் உங்களுக்கு வீணான சிரமம்?”

“சிரமம் எல்லாம் ஒன்னுமில்லை, ஆனா உங்க வீடு இப்பவே பதட்டப்பட ஆரம்பிச்சிருக்கும், நீங்க சரியான விளக்கம் குடுக்கலைன்னா அடுத்த ஃப்ளைட்ல விக்ரம் ஸ்ரீலங்கா வருவாரு, அது உங்களுக்குப் பரவாயில்லையா?”

“ஐயையோ! தேவன் சார், விளையாட்டுக்குக் கூட அப்பிடிச் சொல்லாதீங்க.”

“அப்ப நிலைமையை நீங்கதான் புத்திசாலித்தனமா கையாளணும், உங்க வீட்டுக்கு நீங்களே தகவல் சொல்றதுதான் பெட்டர்னு எனக்குத் தோணுது, அவங்க போட்ட ஃப்ளைட்ல நீங்க வரலை.”

“அவங்க இல்லை, அந்த விக்ரம்.” பெண்ணின் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.

“சரி இந்திரா, விக்ரம் போட்ட ஃப்ளைட்ல நீங்க வரலை, அவங்க கணக்குப்படி இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க கொழும்புல இருக்கணும், அது இல்லைங்கிறப்போ தேவையில்லாத பதட்டம் ஆரம்பிக்கும், அதுக்கு முன்னாடி நீங்களே எல்லாத்தையும் விக்ரம்கிட்ட விளக்கிச் சொல்றது கெட்டிக்காரத்தனம் இல்லையா?” இவன் விளக்கத்தில் அவள் சற்றே சிந்திக்க ஆரம்பித்தாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் தேவன் அமைதியாகிவிட்டான். இனி முடிவு அவள் கையில்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 03

அத்தியாயம் 03ரெஸ்டாரன்ட்டில் இருந்து வெளியே வந்ததும் தேவன் தனது அறைக்கு வந்துவிட்டான். இந்திராவோடு வெகுநேரம் பேசியிருந்தான். ஒருகட்டத்தில் அவள் சிந்திக்க ஆரம்பிக்கவும் அவளுக்குத் தனிமை கொடுத்துவிட்டு வந்துவிட்டான். பெண்ணும் அவளது அறைக்குப் போய்விட்டது. சரியாக அப்போது இவன் அலைபேசி சிணுங்கியது. சூர்யாதான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 3 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்