அத்தியாயம் 1
அத்தியாயம் 01
ஹீத்ரோ விமான நிலையம், லண்டன். நேரம் காலை ஆறு மணி. எதிரே வருபவர் யாரென்று தெரியாத வண்ணம் புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. குளிர்காலம் மெதுவாக மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது. தனது ப்ளாக் ஆடியை விமானநிலைய விதிமுறைகளுக்கு உட்பட்டு மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் தேவன்.
அவனது விமானம் மதியம் இரண்டு மணிக்குத்தான் புறப்படுகிறது. இத்தனை முன்கூட்டி அவன் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் வந்திருந்தான். கடந்த சில நாட்களாக அவன் அவனாகவே இல்லை. இயல்பு தொலைந்து போயிருந்தது. கொஞ்சம் தனியாக உட்கார்ந்து நிம்மதியாக மூச்சுவிட்டால் நன்றாக இருக்கும் போலிருந்தது.
காரை அதற்குரிய இடத்தில் பார்க் செய்தவன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினான். இரண்டு வாரங்கள் விமான நிலையத்திலேயே காரை பார்க் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்திருந்தான். டெர்மினல் மூன்றை நோக்கி நடந்து கொண்டிருந்தான் தேவன். A380 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிப் பயணப்படுகிறான். டுபாயில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு அதன்பிறகு இலங்கை செல்கிறான். எப்போதும் பயணம் செல்வதற்கு முன்பாக எங்கு செல்வது, என்னவெல்லாம் பார்ப்பது என்று அனைத்தையும் திட்டமிட்டு விடுவான். ஆனால் இந்தப் பயணம் அவ்வாறன்று. எந்தத் திட்டமிடலும் இல்லாமல் நேற்று நண்பகல் போல டிக்கெட்டை உறுதி செய்துவிட்டு இன்று காலை புறப்படுகிறான்.
“ஹலோ!” திடீரென ஒரு குரல் கேட்கவும் இயல்புக்கு வந்தவன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். பார்க்கிங்கில் இருந்து டெர்மினலுக்குச் செல்லும் சாலைக் கடவையில் நின்றிருந்தான். இவன் பாதையைக் கடக்கப் போகின்றான் என்று எண்ணி எதிரே வந்த ஒரு பிஎம்டபிள்யூ இவனுக்காக வழிவிட்டுக் காத்திருந்தது.
“சாரி.” தன் பிழையை உணர்ந்தவன் அவசர அவசரமாகச் சாலையைக் கடந்து டெர்மினலை நோக்கி நடந்தான். இப்போது இயல்பாக இவன் கண்கள் அந்த பிஎம்டபிள்யூவை நோட்டமிட்டது. ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். பார்ப்பதற்கு நம் ஊர்க்காரர்கள் போல்தான் தெரிந்தார்கள். அந்தப் பெண்ணின் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கிய படி அந்த மனிதன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். கண்களில் காதல் வழிந்து கொண்டிருந்தது. மனதுக்குள் ஒரு சலிப்பு உருவாக டெர்மினலுக்குள் நுழைந்தான் தேவன்.
சூடாக ஏதாவது அருந்தினால் நன்றாக இருக்கும் போலிருந்தது. காஃபி ஷாப்பை தேடி ஒரு காப்பச்சீனோவை ஆர்டர் பண்ணியவன் சாவதானமாக அமர்ந்தான். லண்டனில் தனியார் கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறான். வயது இருபத்தி ஒன்பது. கை நிறையச் சம்பளம், பார்ப்பதற்கும் வாட்டசாட்டமாக இருப்பான். அம்மா, அப்பா இருவரும் இலங்கையர்கள். இவனுக்கு நான்கு வயதாக இருக்கும் போது இங்கிலாந்து வந்துவிட்டார்கள்.
இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் அம்மா, அப்பா இருவரது சொந்தங்களும் தாய்நாட்டில்தான் இருக்கிறார்கள். அடிக்கடி இலங்கை சென்று அவர்களோடு விடுமுறையைச் செலவழிப்பது இவர்கள் வழக்கம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, தேவனின் அம்மா தாரிணி அவரது நண்பியைச் சந்திக்கும் வரை.
“கண்ணா, இந்த ஃபோட்டோவைப் பாரு.” ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்போடு ஒரு ஃபோட்டோவை அம்மா கொண்டு வந்து காட்டியபோது இவன் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.
“யாரும்மா இது?”
“என்னோட ஃப்ரெண்ட்டு பொண்ணு, அழகா இருக்கால்லை?” உண்மையிலேயே அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தது. திருத்தமான முகம். வசீகரிக்கும் புன்னகை.
“யாரு தாரிணி இது?” அப்பா பரதனும் அப்போது அங்கேதான் இருந்தார்.
“என்னோட ஒன்னா படிச்ச லட்சுமியோட பொண்ணு, பேரு நிதிலா, இந்தப் பொண்ணை நம்ம தேவனுக்குப் பார்த்தா என்னன்னு எனக்குத் தோணுதுங்க.”
“அம்மா!” மகன் வெளிப்படையாக அலற, கணவன் அமைதியாக மனைவியைப் பார்த்தார். கடந்த மாதம் அவர்களது பள்ளிக்கால நண்பிகளின் ஒன்றுகூடல் ஒன்று லண்டனில் நடைபெற்றிருந்தது. அன்றிலிருந்து தாரிணி மிகவும் பிஸியாக அலைகிறார்.
“என்னம்மா திடீர் முடிவு?”
“என்னங்க பேசுறீங்க? தேவனுக்கும் வயசாகுதில்லை? காலாகாலத்துல கல்யாணம் பண்ண வேணாமா?”
“ம்… அது சரிதான், ஆனா இவங்க யாரு, என்னன்னு தெரியாம…”
“லட்சுமி ரொம்ப நல்ல மாதிரிங்க, ரெண்டு, மூனு வாரமா நிதிலாவைப் பார்க்கிறேன், எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, அவ்வளவு பொறுப்பில்லாம எம் பையனுக்கு நான் பொண்ணு பார்ப்பேனா?” மனைவி சொல்வது சரியென்றுதான் பரதனுக்கும் பட்டது. தன் ஒற்றை மகனுக்கு அத்தனைச் சுலபத்தில் பெண் பார்த்துவிடும் ஆளல்ல தாரிணி
பெண்ணின் பின்புலம் மிகவும் நன்றாக இருந்தது. தமிழர்கள் அதிகம் வாழும் இடத்தில் அவர்களுக்கென்று ஓர் நகைக்கடை இருந்தது. பணத்துக்குப் பஞ்சமிருக்கவில்லை. பெண்ணும் படித்திருந்தாள், அழகாக இருந்தாள். குறையென்று சொல்ல எதுவும் இருக்கவில்லை. மாப்பிள்ளையும் பெண்ணும் தனியாகச் சந்தித்துப் பேசினார்கள். தேவனுக்கு எல்லாம் திருப்தியாகத்தான் இருந்தது. நிதிலா மிகவும் அமைதியான பெண்ணாக இருந்தாள். மிகவும் வெட்க சுபாவமாகக் காணப்பட்டாள். இவனும் ஆரம்பத்தில் அதைப் பெரிதுபடுத்தவில்லை. பெண்களின் சாதாரண குணம் என்று எண்ணிக் கொண்டான்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்.” சட்டென்று கலைந்தவன் நிமிர்ந்து பார்த்தான். வாகாக நீட்டியிருந்த இவன் கால்களைத் தாண்டிச் செல்ல முடியாமல் ஒரு பெண் நின்றிருந்தாள். பிஎம்டபிள்யூவில் அமர்ந்திருந்த பெண் என்று இவன் மூளை அவசரமாகத் தகவல் வழங்கியது.
“சாரி.” என்றவன் கால்களை மடக்கிக் கொண்டான். இன்றைக்கு இரண்டாவது முறையாக இந்தப் பெண்ணிடம் சாரி சொல்கிறோம் என்று எண்ணியது மனது.
“இப்போ உன்னோட பிரச்சினை என்னடா? எனக்கும் சேர்த்து அந்தாள் ப்ளான் போடுவாரு, நான் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டுப் போகணுமா? என்னால முடியாது, நான் வேற ஃப்ளைட்ல போறேன், டுபாய்ல மூனு நாள் தங்குறேன், நல்லா டுபாயைச் சுத்திப் பார்க்கிறேன், அதுக்கப்புறந்தான் ஊருக்குப் போவேன், உங்களால என்ன முடியுமோ அதைப் பண்ணுங்க, பெருசா வந்துட்டான் எனக்குப் பாடம் எடுக்க.” தன்னைத் தாண்டிப் போன பெண் கொஞ்சம் சத்தமாகப் பேசவும் தேவனது கவனம் திரும்பியது. படபடவென்று தமிழில் யாரிடமோ பொரிந்து கொண்டிருந்தாள்.
இதேதடா தலைவலி என்று நினைத்தவன் சற்று அப்பால் தெரிந்த கண்ணாடித் தடுப்புக்கு அருகில் போய் நின்று கொண்டான். வானத்தில் ஒவ்வொரு விமானமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒன்றரை நிமிடங்களுக்கு ஒரு விமானம் வருவதும் போவதுமாக இருப்பதாக எங்கோ படித்தது அப்போது நியாபகம் வந்தது.
“சூர்யா ப்ளீஸ்டா, என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு, என்னால முடியலைடா, எங்கடா இருந்து புடிச்சீங்க இந்தாளை? நான் நிற்கிறதுக்கு நடக்கிறதுக்கு எல்லாம் ஐடியா குடுக்கிறான்டா, என்னால முடியலைடா.” மீண்டும் அந்தப் பெண் புலம்புவது கேட்டது.
“உங்கப்பா, அம்மாக்கிட்ட என்ன வேணும்னாலும் சொல்லு, இல்லை அந்த மடையனை எப்பிடி வேணும்னாலும் சமாதானம் பண்ணு, இப்ப ஆளை விடு.” என்றவள் அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். வாயில் ஏதோ கெட்ட வார்த்தையை முணுமுணுப்பது இங்கே இருக்கும் இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
‘யாரந்த மடையன்? இவளோடு காரில் வந்தவனா? இருக்காதே! அத்தனைக் காதலோடு இந்தப் பெண்ணை அவன் பார்வை வருடியதே! யாரிந்த சூர்யா?!’ தன் எண்ணத்தை வியந்தபடி இன்னும் கொஞ்ச தூரம் அப்பால் போனான் தேவன். யாரென்றே தெரியாத பெண்ணைப் பற்றி இவ்வளவு தூரம் சிந்திப்பது தவறு என்று புத்திக்குப் புரிந்தது. அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். நிதிலா என்றது. முகத்தில் ஒரு சலிப்புத் தோன்ற அழைப்பை ஏற்றான்.
“ஹலோ.” அவள்தான் என்று தெரிந்த போதும் உரிமையாகப் பெயர் சொல்லி அழைக்க மனம் வரவில்லை.
“தேவ்… எங்க இருக்கீங்க?” நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவன் ரசித்த குரல்தான். ஆனால் இப்போது மனது வேறாக உணர்ந்தது.
“ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன்.”
“இவ்வளவு ஏர்லியா போயிட்டீங்க! ஏதாவது வேலை இருந்துச்சா?” காதுக்கு வலித்து விடுமோ என்று பயந்தது போல வந்தது அவள் குரல். இந்த உறவு ஆரம்பித்த காலத்தில் இந்த மென்மையான குணத்தை அவன் மிகவும் ரசித்தான். மிகவும் அடக்கமான பெண் என்று அவளைச் சிலாகித்தான். ஆனால் அதே குணம் காலப்போக்கில் நிறம் மங்கிப் போனது. அந்த மென்மை எல்லாவற்றுக்கும் அம்மாவிடம் ஆலோசனைக் கேட்டது. எதிர்பாராத சந்தர்ப்பங்களில் திருதிருவென விழித்தது.
“ஃப்ரெண்ட் ஒருத்தனும் எங்கூட இப்போ வர்றான், அவங்கூடத்தான் பேசிக்கிட்டு இருக்கேன், நான் அப்புறமா கூப்பிடுறேன்.” என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தான். பொய்தான்! ஆனாலும் இந்த நொடி அதைச் சொல்வது தவறில்லை என்று தோன்றியது. எதேச்சையாகத் திரும்பியவன் கண்களில் இப்போதும் அந்தப் பெண் தென்பட்டாள். இவனுக்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் தான் குடித்த காஃபி கப்பை எறிவதற்காக வந்திருந்தாள். முகத்தில் இருந்த ஏளனப் புன்னகை இவன் சொன்ன பொய்யை அவள் கண்டுகொண்டாள் என்று சொன்னது.
“சாரி…” இவனை அறியாமலேயே இவன் வாய் முணுமுணுத்தது.
“சார், ஒரு நாளைக்கு எத்தனைத் தடவைதான் சாரி சொல்லுவீங்க? இதெல்லாம் அரசியல்ல சகஜம் சார்.” இயல்பாக, நெடுநாள் பழகியவள் போல அவள் சொல்லவும் இவன் முகத்தில் புன்னகைத் தோன்றியது.
“எங்க சார் போறீங்க? இந்தியாவா? ஸ்ரீலங்காவா?”
“ஸ்ரீலங்கா.”
“ஓ… எமிரேட்ஸ்? ரெண்டு மணி ஃப்ளைட்டா?”
“ஆமா… நீங்க?”
“அதே ராட்சசக் கப்பலில்தான் அடியேனும் பயணிக்கிறேன்.” மிகவும் பவ்வியமாக தலையைச் சரித்து அவள் சொன்னபோது இவன் சிரித்துவிட்டான். இருபத்தி இரண்டு வயதிருக்கும். சின்னப் பெண்ணாகத் தோன்றினாள்.
“தனியா போறீங்களா?”
“சார், இந்தக் கேள்வியை நான் உங்களைப் பார்த்துக் கேட்கலையே! அப்ப ஏன் நீங்க மட்டும் கேட்கிறீங்க? பொண்ணுங்க எங்கேயும் தனியா போகக் கூடாதா?”
“வொய் நாட்? தாராளமா போகலாம், வீட்டுல அம்மா வயசானவங்க, அவங்களை நான் தூரமா எங்கேயும் தனியா அனுப்பமாட்டேன், அந்த ஞாபகத்துல சொல்லிட்டேன்.”
“வயசானவங்களுக்கு ஹெல்ப் வேணுந்தான் சார், ஜஸ்ட் டுவென்டி டூ, எனக்கு ஹெல்ப் தேவையில்லை சார்.” ஸ்டைலாக அவள் தோளைக் குலுக்கிய போது இவனுக்குச் சிரிப்பு வந்தது.
“தேவன்.” என்றான் தன்னை அறிமுகப் படுத்துவதற்காக.
“இந்திரா.” இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“ஏன் தேவன் சார்? ரெண்டு மணி ஃப்ளைட்டுக்கு எதுக்கு இப்பவே வந்திருக்கீங்க? நல்லதா ஒரு தூக்கம் போட்டுட்டு வந்திருக்கலாமே?”
“அதே தூக்கத்தை நீங்க போடாம எதுக்கு இப்போ இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க?”
“என்னோட ஃப்ளைட்தான் பத்து மணிக்குக் கிளம்புதே.”
“புரியலைம்மா.” பெண் தெளிவாகக் குழப்பிவிட்டுச் சிரித்தது.
“வீட்டுல எனக்கு புக் பண்ணின ஃப்ளைட் பத்து மணிக்குக் கிளம்புது, ஆனா நான் போகப்போற ஃப்ளைட் ரெண்டு மணிக்குக் கிளம்புது.”
“ஓ… வீட்டுல இது தெரியுமா?”
“சூர்யாக்குத் தெரியும், சூர்யா என்னோட தம்பி, அவனுக்கு மட்டும் தெரிஞ்சா போதும், வேற யாருக்கும் சொல்லணுங்கிற அவசியம் எனக்கில்லை.” இந்தப் பெண் தவறு செய்கிறாள் என்று புரிந்தபோதும் தேவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்போதுதான் முதல்முதலாகப் பார்க்கும் பெண்ணிடம் இவ்வளவு பேசுவதே பெரிது. அதைவிடுத்து அறிவுரை சொல்வது நாகரிகமில்லை என்று தோன்றியது. அத்தோடு அவள் காதுபட இவன் வேறு பொய் சொல்லியிருக்கிறான். அப்படி இருக்கும்போது எப்படி அறிவுரை சொல்வது?!
சிறு பெண்ணாக இருக்கிறாள். பார்க்க வேறு நன்றாக இருக்கிறாள். அப்போதுதான் அந்தப் பெண்ணை அவன் கண்கள் நன்றாக கவனித்தன. நீல நிற ஸ்லிம் ஃபிட் டெனிமும் வெள்ளை நிற குர்தாவும் அணிந்திருந்தாள். ஒற்றைப் பின்னல் முதுகு வரை இருந்தது. இவன் தோள்வரை வளர்ந்திருந்தாள். ஆனால் இவனளவு நிறம் இருக்கவில்லை. பார்த்த உடனே சட்டென்று மனதில் பதிந்துவிடும் முகம்.
“ஓகே இந்திரா, பை.” ஏனோ அந்தப் பெண்ணைவிட்டு ஒதுங்கிப் போ என்று மனது சொல்லவும் தேவன் விடைபெற்றுக் கொண்டான். இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாமே என்ற முகபாவம் அவளிடம் தோன்றியபோதும் அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை.
நேரம் அப்போதுதான் ஏழு முப்பது. எமிரேட்ஸ் விமானத்திற்கான செக் இன் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. தனது உடமைகளை ஒப்படைத்தவன் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தான். சிறிது நேரம் கடைகளைப் பார்வையிட்டவன் வசதியாக ஓர் இடம் பார்த்து அமர்ந்து கொண்டு லேப்டாப்பை எடுத்தான். பார்ப்பதற்கென்று ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருந்த திரைப்படம் ஒன்றை எடுத்தவன் அதில் மூழ்கிப் போனான்.
“தேவன், எங்கப்பா இருக்கே?” அப்பாதான் அழைத்திருந்தார். மகனின் மனதில் ஏதோவொரு அதிருப்தி இருப்பதை அந்தத் தந்தை புரிந்து கொண்டிருந்தார்.
“ஏர்போர்ட்லதான் இருக்கேன்பா.”
“சரிப்பா, வீட்டைச் சுத்தம் பண்ணச் சொல்லி சொல்லியிருக்கேன், சமையலுக்குக் காமாட்சி அம்மா வந்திருவாங்க, நீ எதைப்பத்தியும் கவலைப்படாம என்ஜாய் பண்ணு.”
“சரிப்பா.” என்றவன் அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை. பேச தைரியம் இருக்கவில்லை. அப்பா பரதனுக்கும் மகனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால் நிதானமாக யோசித்து மகன் ஓர் முடிவுக்கு வரட்டும் என்று அமைதியாகிவிட்டார்.
நேரத்தை நெட்டித் தள்ளியவன் தனது விமானத்திற்கான அழைப்பு வரவும் கேட்டை நோக்கி நடந்தான். எங்கேயும் அந்தப் பெண் இந்திரா கண்ணில் படவில்லை. நல்லதுதான் என்று நினைத்தவன் விமானத்திற்குள் நுழைந்தான். எமிரேட்ஸின் இராட்சச விமானம். மேல் தளம் முழுவதும் உயர் வகுப்புப் பயணிகள். கீழ் தளத்தில் உழைக்கும் வர்க்கம். தனது இருக்கையைக் கண்டு பிடித்தவன் அமர்ந்து கொண்டான். விமானத்தின் சிறகுகளில் பனி படர்ந்திருந்ததால் அதை அகற்றுவதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். தேவன் இப்போது கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
மூடிய கண்களுக்குள் நிதிலா வந்தாள். ஆனால் அவளை நினைத்த மாத்திரத்தில் அவனுக்குள் தோன்ற வேண்டிய நூதனமான உணர்வுகள் காணாமல் போயிருந்தன. முதல்முதலாக அம்மா, நிதிலாவைப் பற்றிப் பேசியபோது இவனுக்கு அத்தனை ஆர்வம் வரவில்லை. முன்பின் தெரியாத ஒரு பெண்ணை எப்படிக் கல்யாணம் செய்வது என்றுதான் எண்ணினான். ஆனால் அவளைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறிப்போனது.
பார்க்க மிகவும் அழகாக இருந்தாள் பெண். இங்கேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால் இருவரது எண்ணங்களும் பெரும்பாலும் ஒன்று போலவே இருந்தன. ஆனால் சுயமாக முடிவெடுக்கும் விஷயத்தில் மிகவும் பின்தங்கியவளாக இருந்தாள்.
“தேவ், அம்மாக்கிட்டக் கேட்டுப் பதில் சொல்லட்டுமா?” அவள் அவனோடு அதிகமாக பேசிய வார்த்தைகள் இதுவாகத்தான் இருக்கும். ஒரே பெண், வசதியான குடும்பம் என்பதால் பெண்ணைப் பொத்திப் பொத்தி வளர்த்திருந்தார்கள் பெற்றோர். அதனால் சுயமாக எந்த விடயத்தையும் செய்வதில் அவளுக்கு அதிக தயக்கம் இருந்தது.
ஆரம்பத்தில் இதை ஒரு பெரிய குறையாக தேவனும் நினைக்கவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல அவனுக்குள் ஓர் சலிப்புத் தோன்ற ஆரம்பித்தது. நிதிலா தனக்குச் சரியான துணையாக இருப்பாளா என்ற கேள்வி எழுந்தது. யாரிடமும் இதைப்பற்றிப் பேசவும் முடியவில்லை. அம்மாவுக்கு இவன் மனது தெரிந்தால் ஒரு நாட்டியமே ஆடுவார். அப்பாவுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். மகனின் முகத்தை அடிக்கடி ஒரு கேள்வியோடு பார்த்தாலும் வாய்திறந்து எதுவும் கேட்கவில்லை.
“எக்ஸ்கியூஸ் மீ சார்.” கண் திறந்தவன் எதிரே விமானப் பணிப்பெண் நின்றிருந்தாள். குறிப்பிட்ட நேரத்திலிருந்து விமானம் புறப்பட தாமதமானதால் எல்லோருக்கும் உண்பதற்கு ஏதாவது வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
“டீ ஆர் காஃபி சார்?”
“டீ ப்ளீஸ்.” அந்தப் பெண் கொடுத்துவிட்டுப் போன டீயும் பீட்சாவும் தொண்டைக்குள் இதமாக இறங்கியது. உணவை உண்டபடியே சுற்றியிருந்த பயணிகளை ஆராய்ந்தான். இளம் வயதினர் பலர் இருந்தார்கள். டுபாய் செல்லும் விமானம் என்பதால் உல்லாசப் பயணிகள் பலர் தங்கள் இணைகளோடு சேர்ந்திருந்தார்கள். கலகலப்பான அவர்கள் பேச்சும் சிரிப்பும் இவனை மிகவும் கவர்ந்தது. நினைவடுக்குகளை அவசர அவசரமாக ஆராய்ந்தான் இளையவன். நிதிலா எப்போதாவது இப்படி அவனோடு சிரித்துப் பேசியிருக்கிறாளா? இல்லை என்றுதான் பதில் வந்தது.
இவர்களது திருமணப் பேச்சு ஆரம்பித்த பிற்பாடு தாரிணியின் நண்பி ஒருவரின் வீட்டில் கிரகப் பிரவேசம் நடந்தது. தாரிணியின் நட்பு வட்டம் என்றால் அதில் லட்சுமியும் அடக்கம். அம்மாக்கள் இருவரும் விழாவிற்குச் சென்றதால் நிதிலாவும் தேவனும் கூட அந்த விழாவில் கலந்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள இதுவொரு நல்ல சந்தர்ப்பம் என்றுதான் தேவனும் நினைத்தான்.
இதுபோல பெண்கள் அதிகம் கூடும் விழாக்களுக்குச் செல்ல சிறிது யோசிப்பவன் அன்றைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அம்மாவோடு கிளம்பிப் போனான். சிரத்தை எடுத்துத் தன்னை அலங்கரித்திருந்த மகனை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டார் தாரிணி. மிகவும் ஆவலோடு அன்றைக்குப் புறப்படுட்டு வந்தவனுக்கு எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணோடு நேரம் செலவழித்து அவளைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அதற்கான வாய்ப்பே அமையவில்லை.
“நிலா, இதைக் கொண்டு போய் தேவனுக்குக் குடுங்க.” அவள் அம்மா ஒரு ட்ரேயை கொடுத்து அனுப்பிய போது மாத்திரம்தான் இவனோடு பெண் பேசவே செய்தது. அதன் பிறகு இவனாகப் பேச்சை ஆரம்பித்தும் ஒவ்வொரு பதிலுக்கும் தன் அம்மாவின் முகத்தையே பார்த்த பெண் இவனுக்குச் சலிப்பை உருவாக்கினாள். அவர்களுக்குள் பேசி மகிழ எத்தனை விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பெண் ஏனிப்படி நடந்து கொள்கிறது?!
“ஒரே பொண்ணு, ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க, வசதியான ஆளுங்க வேற, யாரும் ஏமாத்திடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்திருப்பாங்க போல, அதான் நிதிலா இப்பிடி இருக்கா, போகப்போக எல்லாம் சரியாகிடும் தேவா, உன்னை அவ புரிஞ்சுக்குவாடா.” அம்மா சொன்ன சமாதானம் முதலில் அவனுக்குச் சரியாகத்தான் தோன்றியது. ஆனால் இந்த ஐந்து மாத காலத்தில் அம்மா சொன்ன மாற்றம் நிகழவேயில்லை.
அவள் மாறவேயில்லை. வேலை செய்யும் இடத்தில் அவன் நண்பர்கள் தங்கள் காதலியோடு இன்பமாகக் கழித்த பொழுதுகளைப் பற்றிப் பேசி மகிழும்போது சொல்லிக்கொள்ள இவனிடம் எதுவும் இருக்காது. அலங்காரப் பதுமைப் போல கண்ணைக் கவரும் வண்ணம் தன்னைச் சிங்காரித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் அம்மாவின் முகம் பார்க்கும் நிதிலாதான் அவனுக்கு நியாபகம் வந்தாள்.
“குட் ஆஃப்டர்நூன் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், திஸ் இஸ் யுவர் கேப்டன் ஸ்பீக்கிங்.” அந்தக் குரலில் கலைந்தவன் நிகழ்காலத்திற்கு வந்தான். விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. விமானப் பணிப்பெண்ணை அழைத்தவன் ஒருவேளை தான் தூங்கினால் உணவு பரிமாறும் போது தொல்லை செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டான். மூடிய விழிகளுக்குள் பல உருவங்கள். அதில் புதிதாக இன்று பார்த்த இந்திராவும் அடக்கம் என்பதுதான் விந்தை!
டுபாய் சர்வதேச விமானநிலையம். பலமுறை இங்கே வந்திருப்பதால் எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளியே வந்தவன் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த வாகனத்தில் ஏறி தான் தங்கவிருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். மூன்று நாட்கள் இங்கேதான் ஜாகை. இங்கிருக்கும் அத்தனை முக்கியமான இடங்களையும் இவன் ஏற்கனவே பார்த்திருக்கிறான். அதனால் எங்கேயும் உலா கிளம்பாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அவனது வாழ்க்கைப் பற்றிய மிக முக்கியமான முடிவை அவன் இந்தப் பயணத்தில் எடுத்காக வேண்டும். நிதிலா என்ற பெண்ணோடு தன் மீதி வாழ்க்கை சுகப்படுமா என்ற சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. அம்மாவிற்காக, அவர் நட்புக்காக என்றெல்லாம் இவனால் கல்யாணம் செய்துகொள்ள முடியாது. நிதானமாக சிந்திக்க வேண்டும்.
அறைக்கு வந்தவன் நேராகக் குளியலறைக்குச் சென்று நிதானமாகக் குளித்தான். இதற்கு முன்பும் இந்த ஹோட்டலுக்கு அவன் வந்திருந்ததால் எந்த அசௌகரியமும் இருக்கவில்லை. ஹோட்டலுக்கு அடுத்ததாக ஓர் இலங்கை உணவகம் இருக்கிறது. சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும். குளியலை முடித்தவன் லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்தான்.
“என்ன சார்? என்னை ஃபாலோ பண்ணுறீங்களா?” அந்தக் குரலில் அதிர்ந்தவன் அப்படியே நின்றுவிட்டான். லிஃப்ட்டை நோக்கித் தன் உடமைகளோடு வந்து கொண்டிருந்தாள் இந்திரா. இவனைப் பார்த்ததும் நடை நின்றிருந்தது.
“இந்தக் கேள்வியை நாந்தாங்க உங்களைப் பார்த்துக் கேட்கணும், உங்களுக்கு முன்னாடி நான் இங்க வந்துட்டேன்.”
“ஒருவேளை நான் இங்கதான் வரப்போறேன்னு தெரிஞ்சு முன்கூட்டியே வந்திருக்கலாமில்லை?”
“எனக்கு இது தேவைதான்.” வாய்க்குள் இவன் முணுமுணுக்க வாய்விட்டுச் சிரித்தது பெண்.






Good one p
Nice start.
ஹலோ ஹீரோ சார், நிதிலாங்கிற பொண்ணோட உங்க வாழ்க்கை சுக படுமான்னு தெரியாது, ஆனா இந்திராவோட உங்க வாழ்க்கை நல்லா சுவாரசியமா போகும்னு மட்டும் தெரியுது…😉😉
❤️❤️❤️❤️❤️❤️