அத்தியாயம் 06
அத்தியாயம் 06
அந்திமாலைப் பொழுது. சூரியன் தன் வெப்பக் கதிர்களைச் சுருட்டிக்கொண்டு வீடு செல்லும் நேரம். தேவனும் இந்திராவும் அந்தப் பாறை மேல் நின்றிருந்தார்கள். அவர்களைச் சூழ தென்னை மரங்கள். தென்னந் தோப்பு என்று சொன்னால் சரியாக இருக்குமோ!
தென்னைமர குன்று என்று பலராலும் பாராட்டப்படும் அந்த இடம் மிரிஸ்ஸவில் பெரும் பிரசித்தம். உல்லாசப் பயணிகள் தவறவிடாத இடம். இளையவர்கள் இருவரும் தங்களை மறந்து அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வான மகள் சற்றே கண்ணீர் வடிக்க சூரியன் தன் பொற் கதிர்களைக் கடலுக்குள் நுழைத்துக் கொண்டிருந்தான். கடல் பரப்பு முழுவதும் செக்கச் செவேல் என சிவந்து அத்தோடு தங்கத்தையும் கரைத்துப் பூசியிருந்தது. இதுவரை நேரமும் உடலை வாட்டிய வெப்பமும் சற்றே குறைந்து மெல்லிய பூங்காற்று தேகம் தழுவியது.
இன்றைக்கு நடந்த அனைத்துக் களேபரங்களையும் மறந்து இருவரும் இயற்கையோடு இணைந்திருந்தார்கள். மனதுக்குள் இருந்த வெறுப்பா, அல்லது இன்றைக்கு அவன் கொடுத்த தைரியமா, எதுவென்று தெரியவில்லை. இந்திரா அவளது கல்யாணப் பேச்சுக்கு முழுதாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள்.
எல்லா பெண்களையும் போல வீட்டில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தபோது மகிழ்ச்சியோடுதான் ஏற்றுக் கொண்டாள். காதலித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவள் ஆசை. ஆனால் அதற்கு வாய்ப்புகள் அமையவில்லை. அப்படியொரு உணர்வு யாரைப் பார்த்தபோதும் பெண்ணுக்கு வரவில்லை. வீட்டில் பார்த்த மாப்பிள்ளைதான் இந்த விக்ரம்.
பார்க்க நல்ல ஆஜானுபாகுவாக இருந்தான். நல்ல பின்புலம். உறவென்று சொல்ல தாத்தா மாத்திரம்தான் இருந்தார். சொந்தமாக தொழில் செய்து கொண்டிருந்தார்கள். பணத்துக்குப் பஞ்சமிருக்கவில்லை. இதையெல்லாம் தாண்டி வாழ்க்கைக்கு இன்னும் பல காரணிகள் முக்கியம் என்று யோசிக்கும் அளவிற்கு அன்றைய இந்திராவிற்குப் பக்குவம் போதவில்லை. சட்டென்று சம்மதம் சொல்லிவிட்டாள்.
வீட்டில் கட்டுப்பாட்டோடு வளர்ந்தவள் என்றாலும் ஒரு பருவப் பெண்ணுக்குத் தேவையான எல்லா சுதந்திரங்களும் அவளுக்கு வழங்கப்பட்டிருந்தன. தன் ஆடைகள், படிப்பு, அன்றாட வாழ்க்கை என அனைத்தும் அவளால்தான் தேர்வு செய்யப்பட்டன. வரம்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அவளுக்கான சுதந்திரம் தாராளமாக கிடைத்தது. ஆனால் அந்த சுதந்திரத்தில் விக்ரம் கை வைத்தான்.
ஆரம்பத்தில் அதைப் பெண்ணும் பெரிதுபடுத்தவில்லை. எல்லா கணவன்மாருக்கும் தங்கள் மனைவியரிடம் இருக்கும் உரிமை உணர்வு என்று மகிழ்ச்சிதான் உண்டானது. ஆனால் காலப்போக்கில் விக்ரம் விதித்த கட்டுப்பாடுகள் அவளுக்கு மூச்சு முட்டின.
காலை எழுந்தது முதல் மாலை வரை அவளுக்கான நேர அட்டவணையை அவனே தயாரித்தான். அவளது உணவுப் பழக்கவழக்கங்களில் தலையிட்டான். இந்திரா சோம்பேறியான பெண் கிடையாது. அதிகாலையில் இல்லை என்றாலும் பெரும்பாலும் ஆறு மணிக்கு முன்பாக எழுந்து விடுவாள். உடற்பயிற்சி செய்வாள். உணவு விஷயத்தில் கவனமாகத்தான் இருப்பாள். ஆனால் இவற்றையெல்லாம் நாள் தவறாமல் கடைப்பிடிப்பவள் அல்ல.
சில நேரங்களில் இரவு கண்விழித்து வேலை செய்தால் காலையில் கொஞ்சம் அதிகப்படியாகத் தூங்குவாள். அன்றைக்கு உடற்பயிற்சி இருக்காது. கேளிக்கை, குதூகலமான நாட்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உணவு தாராளமாக உள்ளே இறங்கும். வாழ்க்கையை அனுபவித்து வாழ்வாள். ஆனால் விக்ரமின் வாழ்க்கை முறை வேறாக இருந்தது.
மிகவும் இறுக்கமாக இருந்தது அவன் வாழ்க்கை. எந்த நெகிழ்வுகளுக்கும் அவன் தயாரில்லை. ஒரு நாளைக்கு இரண்டு லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பான். அதை அவனும் தினமும் கடைப்பிடிப்பான். அவனது வாழ்க்கைக்கென ஒரு கோடு கிழித்து அதைத் தாண்டாமல் வாழ்ந்தான்.
ஆரம்பத்தில் இந்திரா இவற்றையெல்லாம் பெரிது பண்ணவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இந்தக் கெடுபிடிகள் அவளுக்கு மனவுளைச்சலைக் கொடுத்தன. நீக்குப்போக்கு இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. நேர அட்டவணைப் பள்ளிக்கூடத்திற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் அதையே எப்படி வாழ்க்கை முழுவதற்கும் கடைப்பிடிப்பது?! விக்ரம் தானும் கடைப்பிடித்து அவளையும் கடைப்பிடி என்றான். அப்போதுதான் விரிசல் ஆரம்பமானது.
“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கில்லை?” தன்னை மறந்து தேவன் சொல்ல இந்திராவிடம் பதிலில்லை. பேச்சை மறந்தவள் போல அப்படியே நின்றிருந்தாள். இயற்கை அழகென்று அவளுக்குத் தெரியும். ஆனால் இத்தனை அழகான இயற்கையை இதுவரை அவள் ரசித்ததில்லை! சரியாக அப்போது அவள் அலைபேசி அலறியது. உச்சுக் கொட்டியபடி அதை எடுத்துப் பார்த்தாள்.
“சொல்லு சூர்யா.” அழைப்பு தம்பியிடமிருந்து வந்ததால் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
“என்னக்கா சொல்லச் சொல்றே? என்ன வேலை பார்த்து வெச்சிருக்கே?”
“என்னாச்சு?” என்ன ஆகியிருக்கும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அது இத்தனை சீக்கிரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தேவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அப்போது அவளைத்தான் பார்த்தபடி இருந்தான்.
“விக்ரம் இப்போ அம்மாக்கு கால் பண்ணினாரு, இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிட்டியாம்! என்னாச்சு உனக்கு? ஏன் இப்பிடியெல்லாம் அவசர அவசரமா முடிவெடுக்கிறே?”
“சூர்யா, கொஞ்ச நாளாவே எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு உனக்கு நல்லா தெரியும், நீயும் இப்பிடி பேசாதே.”
“அக்கா, விக்ரம் உனக்கு நல்லா மேட்ச் ஆவாரு, நீ சொல்ற சில்லி ரீஸனுக்காக எல்லாம் ஒரு கல்யாணத்தை நிறுத்துறது முட்டாள்தனம்.”
“நான் சொல்றதை உன்னால புரிஞ்சுக்க முடியாது சூர்யா, என்னோட நிலைமையில நீ இல்லை, அதாலதான் இப்பிடிப் பேசுறே, நான் ரிஸ்க் எடுக்க விரும்பலைடா, அம்மா அப்பாவுக்காக இந்தக் கல்யாணம் நடந்தா அது டிவோர்ஸ்லதான் போய் முடியும்.” அன்றைக்கு தேவன் தன் தந்தையிடம் சொன்ன அதே வார்த்தைகள்.
“என்னக்கா பேசுறே? வாழ்ந்து பார்க்காமலேயே டிவோர்ஸ் அது இதுன்னு முட்டாள் மாதிரி!” தம்பியின் குரலில் அதிருப்தி தெரிந்தது.
“இப்ப உன்னோட பிரச்சினை என்னடா? எனக்கு அந்தாளைப் புடிக்கலை, வேணாம்னு சொல்றேன், முன்னாடி நல்லாத்தான் இருந்துச்சு, ஆனா போகப்போக இது சரிவராதுன்னு தெரிஞ்சு போச்சு, இதுக்கு மேலயும் எதுக்காக தாமதிக்கணும்? சொல்ல வேண்டியதை உரியவங்கக்கிட்டச் சொல்றதுதான் சரி.”
“சொல்லிட்டு நீ அங்க நிம்மதியா உட்கார்ந்திருக்கே, ஆனா வீடு இங்க ரெண்டு படுது, அம்மா தாம் தூம்னு குதிக்கிறாங்க.”
“அது தெரிஞ்ச விஷயந்தானே, அதாலதான் அந்த மனுஷன் அப்பாக்கு கால் பண்ணாம அம்மாக்குப் பண்ணியிருக்காரு.” ஏளனம் அவள் குரலில்.
“இது விளையாடுற விஷயமில்லைக்கா.”
“அதைத்தான் நானும் சொல்றேன், இது என்னோட வாழ்க்கை, விளையாடுற விஷயமில்லை, மேல மேல அதையே பேசுறதுல எனக்கு விருப்பமில்லை சூர்யா, வர்றதை ஃபேஸ் பண்ணுறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.”
“தேவன் அண்ணா எங்க?”
“இங்கதான் இருக்காங்க.”
“ஃபோனை அவங்கக்கிட்டக் குடு.” தம்பி சொல்லவும் அலைபேசி கை மாறியது.
“அண்ணா, இந்திரா பார்த்திருக்கிற வேலையைப் பார்த்தீங்களா?” என்று ஆரம்பித்து இளையவன் படித்த புகாரை நிதானமாகக் கேட்டான் தேவன்.
“இங்க ஒரு பூகம்பமே வெடிக்குது, அம்மா அப்பிடி சத்தம் போடுறாங்க, எதுக்காக இவ இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்கிறா?”
“சூர்யா… உங்கக்கா சரியான முடிவுதான் எடுத்திருக்கான்னு எனக்குத் தோணுது.”
“என்னண்ணா நீங்களும் இப்பிடிப் பேசுறீங்க?!” அதிர்ச்சியும் அதிருப்தியும் கலந்த குரல்.
“இல்லை சூர்யா, ஒரு விஷயத்தை நாம புடிச்சுப் பண்ணணும், அதுவும் இது இந்திராவோட வாழ்க்கை, அதுல எந்தத் தவறும் நடந்திரக் கூடாது, என்னதான் லண்டன்ல பொறந்து வளர்ந்தாலும் அழிச்சு அழிச்சு எழுதற கூட்டமில்லை நாம, இப்ப கஷ்டப்பட்டாலும் தெளிவான முடிவெடுத்து நல்லா வாழணும்.” தேவன் பேசி முடித்தபோது இளையவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.
“நீங்க சொல்றது எனக்கும் புரியுதுண்ணா, ஆனா விக்ரம் இந்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரத்துல விட்டுக்குடுக்க மாட்டார்னுதான் எனக்குத் தோணுது, அவருக்கு அக்காவை ரொம்பப் புடிச்சிருக்கு.” அந்த வார்த்தைகளில் தேவன் கண்களை ஒருமுறை அழுத்தமாக மூடித் திறந்தான்.
“அவருக்கு மட்டும் புடிச்சா போதுமா? இந்திராக்குப் புடிக்க வேணாமா?”
“புடிச்சுத்தானே ஓகே சொன்னா? இப்ப திடீர்னு எல்லாத்தையும் நிறுத்துன்னு சொன்னா சரியா? விக்ரமோட இடத்துல இருந்து நீங்க யோசிச்சுப் பாருங்க.”
“நியாயந்தான், இல்லேங்கலை… அதுக்காக விக்ரமை யோசிச்சு இந்திராவை நீ விட்டுக்குடுக்கப் போறியா?”
“மண்டை வெடிக்குது, அப்பாக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொல்லாம அம்மாக்கு கால் பண்ணியிருக்காரு, இந்திரா சொல்றதை அப்பா கொஞ்சமாவது புரிஞ்சுக்குவாங்க, அம்மா… சான்சே இல்லைண்ணா.” எல்லோர் வீட்டிலும் அம்மாக்கள்தான் பிரச்சனையா என்று தோன்றியது இவனுக்கு.
“பேச்சுவார்த்தை முடிஞ்ச கையோட கல்யாணம் நடந்திருந்தா இவளால இப்பிடியெல்லாம் பேச முடியுமான்னு அம்மா கேட்கிறாங்க, அந்தக் கேள்வி நியாயந்தானே?”
“நியாயந்தான், ஆனா நல்ல வேளையா அப்பிடி எதுவும் நடக்கலை, நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? எது நடந்தாலும் பொறுத்துப் போற ரகமில்லை உங்கக்கா, இப்ப பண்ணுறதைத்தான் அப்பவும் பண்ணியிருப்பா, இந்த மனுஷனோட என்னால வாழ முடியாதுன்னு மூஞ்சுக்கு நேரா சொல்லியிருப்பா, அப்பிடி எதுவும் நடக்கலைன்னு சந்தோஷப்படு சூர்யா, உங்கக்காவோட வாழ்க்கையை ஆண்டவன் காப்பாத்திக் குடுத்திருக்கான்னு நினை.”
“ரொம்பக் குழப்பமா இருக்குண்ணா, வீட்டுல இருந்து நிம்மதியா படிக்க முடியலை, நான் லைப்ரரிக்குப் போகப்போறேன், அப்புறமா கால் பண்ணுறேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான். இவர்களது உரையாடலைக் குலைக்காத வண்ணம் சேலைத் தலைப்பு காற்றில் பறக்க இயற்கையை ரசித்திருந்தாள் இந்திரா.
***
அடுத்தநாள் காலை இருவரும் வெலிகம நோக்கிப் போய்கொண்டிருந்தார்கள். அந்த பஸ் பிரயாணம் இருவருக்கும் மிகவும் வித்தியாசமான ஓர் அனுபவமாக இருந்தது. லண்டன் பஸ்களுக்குப் பழக்கப்பட்டவர்களுக்கு இலங்கையின் போக்குவரத்து மிகவும் புதுமையான அனுபவம்தான்.
‘குறும்ப பே’ இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்திராவுடன் வேலை பார்க்கும் பெண் கௌசல்யாவின் நிச்சயதார்த்தம் அன்று அந்த இடத்தில்தான் நடைபெறுகிறது. அதற்கு இவளையும் அழைத்திருந்தார்கள். கூடவே தேவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டது பெண்.
நேற்று அவள் வாழ்க்கையில் நடந்த எதைப்பற்றியும் கவலைப்படாமல், யோசிக்காமல் இன்றைய நாளை இனிமையாகக் கொண்டாட நினைத்தவளைப் பார்க்கும் போது தேவனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. வேறு யாராக இருந்தாலும் நிச்சயமாக இந்த நிலைமையைக் கையாள கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்திரா முற்றும் மாறுபட்டவளாக இருந்தாள்.
புடவை அவளுக்கு எடுப்பாக இருந்ததால் அன்றைக்கும் பெண் புடவைக் கட்டியிருந்தது. அதே கடைக்கு இவள் மீண்டும் சென்று நின்றபோது அங்கு விற்பனைப் பிரிவில் நின்ற பெண் சிரித்தாள். அவள் பார்வை இவளைக் கேலி பண்ணியது.
“அதான் நேத்து நான் சொன்னேனில்லை மேடம், உங்களுக்குப் புடவை அவ்வளவு அழகா இருக்குன்னு!” லாவெண்டர் நிற விஸ்காஸ் எம்ப்ராய்டரி சேலை. அதே நிறத்தில் ப்ளவுஸ். மிதமான ஒப்பனை. அன்றைய வானிலை கொஞ்சம் இதமாக இருந்தது. அத்தனை வெயில் இருக்கவில்லை. தேவன் சாதாரண ஷர்ட் பேண்ட்டில் இருந்தான். இத்தனை அழகாக ஆயத்தம் செய்துகொண்டு பஸ்ஸில் பிரயாணம் செய்வது மிகவும் வித்தியாசமாக இருந்தது. கார் பயணங்களுக்கு மட்டுமே பழக்கப்பட்டவர்கள் அவர்கள்!
காலை ஒன்பது மணி. கடற்கரையை அண்டியிருந்த அந்த இடம் வெளிநாட்டவர்களின் வசம் இருந்தது. எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு வாசம். வித்தியாசமான மொழிகளில் குரல்கள். கடற்கரை ஓரத்தை ஓர் கல்யாண மண்டபம் போல அமைத்திருந்தார்கள். திறந்த வெளியில் மணமக்களுக்கான பெரிய கூடாரம். பச்சை நிற இலைகளுக்கு நடுவே வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாக பூக்கள் தொங்கியது.
அலைகள் கொஞ்சும் கரையில் விருந்தினர்களுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விரிப்புடன் கூடிய மேசை, மெத்தைகளுடன் கூடிய இருக்கைகள், குளிர்பானங்கள் என அந்த இடமே பார்ப்பதற்குப் பச்சைப் பசேலென இருந்தது. கரைக்கு அப்பால் இருந்த தென்னை மரங்களின் அணிவகுப்பு, செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த மரங்களில் தொங்கிய அழகிய வேலைப்பாடுகள் என அனைத்தும் கண்ணுக்கு விருந்து படைத்தன.
இவர்கள் இருவரும் அங்கு சென்றபோது விருந்தினர்களின் வருகை ஆரம்பமாகியிருந்தது. தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து சுற்றுவட்டாரத்தை ரசித்தார்கள். இந்திராவின் கண்கள் இயற்கையைத் தொட்டுச்செல்ல தேவனின் கண்கள் இயற்கையோடு சேர்த்து தேவதை போல அமர்ந்திருந்த பெண்ணையும் தழுவியது. அலைபேசியை எடுத்தவள் சுற்றுப்புறத்தை நிழலாக்கி தம்பிக்கு அனுப்பி வைத்தாள்.
“மூனு மாசம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த இடத்தைவிட்டுப் போறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் தேவ்.” அவள் வார்த்தைகளை அவனும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.
“பேசாம இங்கேயே ஒரு வீட்டை வாங்கி வாழ்ந்தா என்னன்னு தோணுதுப்பா.”
“ஐயையோ!”
“ஆஃபீஸ்ல என்னோட வேலை பார்க்கிறவங்க அவ்வளவு ஸ்வீட்டா இருக்காங்க, இவங்க பாஷைதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, அதைத்தவிர இந்த ஊரை, கடலை, இயற்கையை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு!”
மணமக்கள் முழு அலங்காரத்தில் வர நிச்சயதார்த்த விழா ஆரம்பமானது. சடங்குகள் ஒரு புறம் நடைபெற ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசை பக்க வாத்தியம் இசைத்தது. இவர்கள் இருவரும் ஒருவித மோனநிலையில் அமர்ந்திருந்தார்கள். மனங்கள் நெகிழ்ந்து போய் கிடந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் தாய் மண்ணில், பாரம்பரிய முறையில் நடக்கும் ஓர் நிச்சயதார்த்தத்தை அலைகளின் தாலாட்டோடு பார்த்திருந்தார்கள்.
நிச்சயதார்த்தம் இனிதே நிறைவுபெற மணமக்கள், அவர்களின் சொந்தக்காரர்கள் என இளைஞர் பட்டாளம் கும்மாளம் போட ஆரம்பித்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் கேலிக்குக் குறைவிருக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டினார்கள். இல்லையென்றால் சொந்தக்காரர்கள் சீண்டலை ஆரம்பித்து வைத்தார்கள். ஆக மொத்தம் அந்த இடமே கலகலவென்றிருந்தது.
கௌசல்யா மிகவும் கலகலப்பான பெண். வேலைக்குப் போன முதல் நாளே இந்திராவோடு கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டாள். சகோதரிகள் இல்லை என்பதால் இவளுக்கும் அந்தப் பெண் மீது ஓர் ஒட்டுதல் வந்துவிட்டது. நிச்சயதார்த்தத்திற்கு அழைத்தபோது எதைப்பற்றியும் யோசிக்காமல் தேவனோடு வந்துவிட்டாள்.
‘மதுரைக்குப் போகாதடீ… அங்க மல்லிப்பூ கண்ணை வெக்கும்.’ பாடல் ஆரம்பிக்க இளவட்டங்கள் குத்தாட்டம் போட ஆரம்பித்தார்கள். கௌசல்யாவை இப்படிப் பார்க்கும்போது மிகவும் ஆனந்தமாக இருந்தது. வருங்கால கணவரோடு சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். இத்தனை ஆனந்தம் அந்தப் பெண்ணுக்குள் எப்படி வந்தது?! ஓர் ஆண் ஒரு பெண்ணின் வாழ்விற்குள் வந்துவிட்டால் அவளுக்குள் இத்தனை மகிழ்ச்சி சாத்தியமா?! ஆனால் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லையே!
இந்திராவின் மனதுக்குள் குழப்பம் உருவானது. விக்ரமின் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஆரம்பத்தில் அவள் மயங்கியது உண்மைதான். ஆனால் காலப்போக்கில் அது மாறிப்போனதே! சாயம் வெளுத்துப் போனதே! தனக்கும் ஒரு நிச்சயதார்த்தம் நடந்திருந்தால் இவ்வளவு சந்தோஷத்தைப் பெண் அனுபவித்திருப்பாளா? சுமை போல தெரிந்த விக்ரமால் அவளை இத்தனைத் தூரம் சந்தோஷப்படுத்தியிருக்க முடியுமா?!
‘சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என் ஜோடி ஆனதென்ன?’ மீண்டும் பாடல் வரி தொடர இவளுக்குள் என்ன நேர்ந்ததோ! சட்டென தனக்கு அருகில் இருப்பவனைத் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் ஒரு புன்னகையோடு களியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மணமக்களைப் பார்த்தபடி இருந்தான். இவள் பார்வையை அவன் கவனிக்கவில்லை.
அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பாதி தேநீர் கோப்பையின் மூலம் எளிதாகச் சொல்லிவிட்டான். ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது?! ஆரம்பத்தில் விக்ரமுடனான உறவும் இனித்ததே. அதேபோல தேவனும் காலப்போக்கில் மாறிப் போவானா? தன் மனதிலிருந்து மறைந்து போவானா? ஏற்கனவே சூடு கண்ட மனது எதையும் நம்ப பயப்பட்டது.
“இந்திரா.” சட்டென கலைந்தவள் அவனைப் பார்த்தாள்.
“என்ன யோசனை?” அவன் முகத்தில் சிரிப்பிருந்தது.
“ஒன்னுமில்லை.” இவள் தலையை ஆட்டினாள்.
“சாப்பிடலாமா?”
“ம்…” இருவரும் உணவு பரிமாறப்படும் இடத்திற்குப் போனார்கள். தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த அனுபவமே அபூர்வமாக இருந்தது. அலைகளில் கால் நனைத்தபடி உணவைப் புசித்தார்கள். மனம் நிறைவாக இருந்தது. ஒருவர் அருகாமையை மற்றவர் அனுபவித்தார்கள்.
“இந்த நாளை என்னால மறக்க முடியாது இந்திரா, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்றவன் அனுமதி வேண்டி அவள் முகம் பார்த்தான்.
“ம்…” பெண்ணும் மறுக்கவில்லை. ஒரு கையில் உணவுத்தட்டிருக்க அடுத்த கையில் அலைபேசியைப் பிடித்தவன் அவளோடு நெருங்கி நின்று நிழல்படம் எடுத்துக் கொண்டான். அந்த அருகாமை அவனை ஒன்றும் செய்யவில்லைப் போலும். ஆனால் பெண் கொஞ்சம் தடுமாறினாள்.
“இந்த ஃபங்ஷன் ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கு, இந்த மக்கள் வாழ்க்கையை அனுபவிச்சு வாழுறாங்க, அதுல மாற்றுக்கருத்து இல்லை.”
“அதைத்தான் நானும் சொல்றேன் தேவ், பேசாம இங்கேயே இருந்துடலாம்.”
“இங்கேயே இருந்துட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறதாம்?” அவன் சிரித்தான்.
“இங்கேயே ஏதாவது வேலை ஒன்னைத் தேடிக்க வேண்டியதுதான்.”
“வாழ்க்கையை ஓட்ட அந்த வருமானம் போதுமா?”
“அங்க போய் லட்ச லட்சமா சம்பாதிச்சு என்னத்தைப்பா கண்டோம்? அதுக்குப் பேசாம இங்க கிடைக்கிறதை வெச்சு நிறைவா வாழலாம்னு தோணுது.”
“கிடைச்சதை வெச்சுக் குடும்பம் நடத்த இந்திராக்குத் தெரியுமா?” அவன் கேள்வி ஆபத்தான திசையை நோக்கிப் போக பெண் சுதாரித்துக் கொண்டது. அவன் கேட்ட கேள்விக்கு அவளுக்குப் பதில் தெரியாது. அதைத் தொடர்ந்து இன்னும் என்னவெல்லாம் கேட்பான் என்றும் பெண்ணுக்குத் தெரியாது. உணவு தீர்ந்து போயிருக்க காலித்தட்டைக் கொண்டு போய் அதற்குரிய இடத்தில் வைத்தவள் மீண்டும் அவனிடம் வந்தாள்.
“கிஃப்ட்டை குடுக்கலாமா?” நிச்சயதார்த்த ஜோடியைச் சுற்றி இப்போது ஆட்கள் அதிகம் இருக்கவில்லை. பரிசினைக் கொடுக்க இதுதான் சரியான நேரம். இருவரும் விழா நாயகன், நாயகியிடம் சென்றார்கள்.
“அடடே! இந்திரா, வாங்க வாங்க.” இது கௌசல்யா. தன் வருங்காலத்திடம் பெண்ணை அறிமுகப்படுத்தியது.
“இது தேவன்.” இந்திராவும் கூட இருந்தவனை அறிமுகம் செய்தாள். ஆனால் அவன்தான் அவள் வருங்காலமா என்பதில் பெரிய குழப்பம் இருந்தது. கௌசல்யாவிடம் தனது நண்பர் ஒருவரை கூட அழைத்து வருவதாக இவள் ஏற்கனவே சொல்லியிருந்தாள். ஆனால் அது ஒரு ஆணாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லைப் போலும். குறும்பாக இவளைப் பார்த்தாள்.
“தேவன்னா? யாரோட தேவன்? யாருக்கு தேவன்?” வெளிப்படையாகவே இவளைக் கேலி பண்ணினாள். இந்திரா மறுத்து எதுவும் கூறவில்லை. தேவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் பரிசினைக் கொடுத்தாள்.
“ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”
“ம்… சாப்பிட்டோம், இந்த ஃபங்ஷன் எங்களுக்கு ரொம்பப் புதிய அனுபவமா இருந்துச்சு மேடம்.” இது தேவன்.
“மேடமா? கௌசல்யான்னு உரிமையா கூப்பிடுங்கண்ணா, அதான் இந்திராக்கு நீங்க ரொம்ப வேண்டப்பட்ட ஆளா போயிட்டீங்களே?” கண்களைச் சிமிட்டியபடி மீண்டும் பெண் கேலியில் இறங்கினாள். இப்போது தேவன் அழகாகச் சிரித்தான். தன்னையும் இந்திராவையும் இணைத்து அந்தப் பெண் கற்பனை செய்வது அவனுக்குப் பிடித்திருந்தது. அதை இந்திரா மறுக்காதது இன்னும் பிடித்திருந்தது.
“நாங்க கிளம்புறோம் கௌசல்யா, ரொம்ப தான்க்ஸ் என்னை இன்வைட் பண்ணினதுக்கு.” அந்த இணையை வாழ்த்திவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். அந்த இடமே பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. அது ஒரு அங்காடி. அந்த வணிக வளாகத்திலே பல கடைகள் காணப்பட்டன. எல்லா இடங்களையும் மௌனமாக இருவரும் சுற்றிப் பார்த்தார்கள்.
“இன்னொரு தடவை நாம இங்க வரணும் இந்திரா, சூர்யாக்கு லீவு கிடைக்கிறப்போ எல்லாரும் ஒன்னா வந்து என்ஜாய் பண்ணணும்.” அவன் கற்பனை, ஆசை அதீதமாக இருந்தது.
இருவரும் புகையிரத நிலையம் வந்திருந்தார்கள். இன்னும் ஆங்கிலேயர் காலத்துக் கட்டடங்கள் அப்படியே இருந்தன. இதுபோன்ற பழமையான புகையிரத நிலையங்களை, புகையிரதங்களை இங்கிலாந்தில் வெகு அபூர்வமாகத்தான் காணலாம். தூரத்தே பெரும் கூச்சலோடு வந்த புகைவண்டியைப் பார்த்த போது சிறுபிள்ளைப் போல குதூகலித்தாள் பெண். கரும்புகையைக் கக்கியபடி வந்து நின்ற அந்த நீண்ட வாகனத்தின் குறுகிய மூன்று படிகளில் புடவைக் கட்டிய பெண்ணால் அத்தனைச் சுலபத்தில் ஏற முடியவில்லை. அவள் தடுமாறவும் பின்னால் நின்றிருந்தவன் இரு கரங்களாலும் இடை பற்றித் தூக்கிவிட்டான்.
“கவனம் இந்திரா.” அவனுக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. ஆனால் அவன் செய்கைகளில் அவள் அடிக்கடி தடுமாறத்தான் செய்தாள்.
உள்ளே அத்தனைக் கூட்டம் இருக்கவில்லை. ஆங்காங்கே ஒருசிலர் மாத்திரமே அமர்ந்திருந்தார்கள். காலியாக இருந்த ஓர் இருக்கையில் அவள் போய் அமர அவள் முகம் பார்ப்பதற்கு வசதியாக அவனும் எதிர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். புடவைக்கு ஏற்றாற் போல சின்னதாக ஹீல் வைத்த செருப்பு அணிந்திருந்தாள். லண்டன் குளிருக்கு ஷூ அணிந்தே பழக்கப்பட்டவளுக்கு இத்தனை நேரம் செருப்பு அணிந்திருந்தது அசௌகரியமாக இருந்தது. செருப்பைக் கழட்டியவள் கால் மேல் கால் போட்டு வாகாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“என்னாச்சு தேவ்? ஏன் அப்பிடி… பார்க்கிறீங்க?” இரயில் நகர ஆரம்பித்திருந்தது. பெண்ணுக்கு வாயில் வார்த்தைகள் வர மறுத்தன. ஏனென்றால் வைத்த கண் வாங்காமல் அவன் அவளையே பார்த்திருந்தான். அவன் பார்வையைத் தொல்லை செய்ய அப்போது அந்த இரயில் பெட்டியில் வேறு யாரும் இருக்கவில்லை, அவளைத் தவிர!
“தேவ்… என்னாச்சு?” அவள் தன்னோடுதான் பேசுகிறாள் என்று அவனுக்கும் புரிந்தது. இப்படிப் பதில் சொல்லாமல் அவளையே வெறித்துப் பார்த்திருப்பது எத்தனை நாகரிகமற்ற செயல் என்றும் அவன் புத்தி அறிந்துதான் இருந்தது. ஆனாலும் அந்தப் பார்வையைத் தொடர்ந்தான். வெளிப்படையாகவே தடுமாறினாள் பெண்!
தேவனுக்கு நடப்பது எல்லாம் விசித்திரமாக இருந்தது. அவன் செய்கைகளை அவனாலேயே நிர்ணயிக்க முடியவில்லை. எதிலிருக்கும் இந்தப் பெண்ணைச் சில நாட்களுக்கு முன்பு அவனுக்கு யாரென்றும் தெரியாது. ஆனால் பார்த்த சில மணித்துளிகளில் அவள்தான் அவனது எல்லாமும் என்று முடிவெடுத்திருக்கிறான்! இத்தனைக்கும் அவன் வாழ்வில் மிகப்பெரியதொரு புயலில் சிக்கி இப்போதுதான் மீண்டிருக்கிறான். முழுமையான மீட்சி என்றுகூட அதைச் சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது எப்படி இவனால் இப்படியெல்லாம் நடக்க முடிகிறது?!
இத்தனைக்கும் இந்தப் பெண் நிதிலாவை விட அழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. நிதிலாவோடு ஒப்பிடும்போது சாதாரணமாகத்தான் இருக்கிறாள். ஆனாலும் ஏதோ ஒன்று அவனை அவள் பால் ஈர்க்கிறது. அது என்னவென்று அவனுக்குத் தெரியாது. இந்தப் பெண் அவன் காயம்பட்ட மனதுக்கு ஏதோவொரு வகையில் மருந்து போடுகிறாள். இதம் கொடுக்கிறாள். அது மட்டும் மறுக்கமுடியாத உண்மை!
“தேவ்!” பெண் ஆச்சரியப்படும் வகையில் அப்படியென்ன செய்துவிட்டான்?! இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் இப்போது நிமிர்ந்து அமர்ந்தான். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த பெண் இப்போது அவன் கை தொடும் தூரத்திற்கு வந்திருந்தாள். புடவை மறைக்காத அவள் பாதத்தை அவன் கரம் தீண்டியிருந்தது. தீண்டியதோடு மாத்திரம் நின்றுவிடாது அதன் மென்மையை உணர ஆரம்பித்திருந்தது!
சட்டென்று அவள் தன் காலை இழுத்துக்கொள்ள முயல அதற்கு இடம் கொடுக்காதவன் இப்போது அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அந்த நெருக்கம் பார்த்து பெண் பதறிப்போனது.
“தேவ்!”
“தப்புன்னு தெரியுது இந்திரா, ஆனாலும் என்னால முடியலை.” என்றவன் அவள் தோளில் சாய்ந்து கூந்தல் வாசம் பிடித்தான். அடுத்தடுத்து அவன் பேசிய வார்த்தைகளில் பெண் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றது. இரயில் எங்கேயும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது!






Nice