arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 07
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 7 / 20

அத்தியாயம் 07

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 07

இந்திரா மதிமயங்கி அமர்ந்திருந்தது சில நொடிகள்தான். சட்டென்று தன்னைச் சுதாரித்தவள் அவனிடமிருந்து விலகினாள். ஆனால் அவன் அதையும் அனுமதிக்கவில்லை. வரம்பு மீறிய செயல் என்றாலும் அதை அவள் மனதும் ரசித்தபோது பெண் திகைத்துப் போனாள்.

“என்னோட மனசுல இருக்கிறதை உங்கிட்ட நான் சொல்லிட்டேன், ஆனா எனக்கு இன்னும் நீ பதில் சொல்லலை.” வாகாக அவள் தோளில் சாய்ந்தபடி அவன் பேச ஆரம்பித்திருந்தான். நெருக்கம் அதீதமாக இருந்தது. ஆனாலும் இது பேச வேண்டிய சந்தர்ப்பம். சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நேரம்.

“சம்மதம் சொல்லாத பொண்ணுக்கிட்ட இப்பிடி நடந்துக்கிறது சரியா தேவ்?”

“தப்புத்தான், ஆனா கண்டிப்பா சம்மதம் கிடைக்கும் இந்திரா, அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு.”

“தேவ்… நாம சில விஷயங்களைத் தெளிவா பேசி முடிவெடுக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.”

“சொல்லும்மா.” வாய் பேசினாலும் அவள் தோள் சாய்ந்திருந்த தலை அங்கேதான் இருந்தது. நீளமான அந்த இரயில் பயணம் அவர்களுக்கு வசதியாக அமைந்து போனது.

“ஏற்கனவே ஒருதடவை நமக்கான துணையை நாம தேர்வு பண்ணியிருக்கோம்.”

“சின்னத் திருத்தம், நாமளா தேர்வு பண்ணலை, தேர்வு பண்ணிக் குடுத்தாங்க, நாம ஏத்துக்கிட்டோம்.”

“இல்லேங்கலை, ஆனா மனசுக்குப் புடிச்சுப்போய்தானே ஏத்துக்கிட்டோம்!”

“அதுல என்ன தப்பிருக்கு இந்திரா? எதையும் நாம மறுக்கலை, குடும்பத்துக்கு எதிரா நடக்கலை, எல்லாம் நாம எதிர்பார்த்த மாதிரி இருந்திருந்தா இன்னைக்கு நீயும் நானும் இப்பிடி, இங்க உட்கார்ந்திருக்க மாட்டோம்.”

“அது சரிதான், ஆனா…”

“ரொம்பக் குழப்பிக்காதே.”

“உங்களை மாதிரி என்னால அவசரமா முடிவெடுக்க முடியலை தேவ், பயமா இருக்கு, விக்ரம் மேல வந்த வெறுப்பு நாளைக்கு உங்கமேலயும் வந்துட்டா…” அவள் முழுதாக முடிப்பதற்கு முன்பாக நிமிர்ந்து உட்கார்ந்தான் இளையவன். அவள் கண்களை அவன் கண்கள் ஊடுருவிப் பார்த்தன. இதழ்கள் உரசிக்கொள்ளும் தூரத்தில் நாகரிகம் காத்து விலகி நின்றன.

“உன்னால முடியாது இந்திரா, என்னை வெறுக்க உன்னால முடியாது, அன்னைக்கு ஏர்போர்ட்ல விக்ரம் உன்னோட முகத்துல விழுந்த முடியை ஒதுக்கிவிட்டான், அப்போ உன்னோட முகத்துல ஒரு அசௌகரியத்தை நான் பார்த்தேன், ஆனா இப்போ…” என்றவன் வாக்கியத்தை முடிக்கவில்லை.‌ அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கும் புரிந்தது.

“உங்கிட்ட இதுக்கு மேலயும் நான் உரிமை எடுத்துக்கிட்டாலும் என்னை நீ விலக்கப் போறதில்லை, என்னை உனக்குப் புடிக்குது பொண்ணே! என்னோட அருகாமையை நீ ரசிக்கிறே இந்திரா, இல்லைன்னா எதுக்கு இந்த ஃபங்ஷனுக்கு என்னை நீ கூட்டிட்டு வரணும்? ஏன்? உனக்கு இங்க தனியா வரத்தெரியாதா?” இப்போது பெண் தலையைக் குனிந்து கொண்டாள்.

“எந்தப் பொண்ணுக்கிட்டயும் இவ்வளவு உரிமை எடுத்துக்கிற தைரியம் எனக்கும் இதுவரைக்கும் வந்ததில்லை, நிதிலாக்கிட்டக் கூட, இத்தனைக்கும் அவ உன்னைவிட அழகா இருப்…” அவன் முழுதாக முடித்திருக்கவில்லை. அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டவள் எழுந்து அப்பால் இருந்த கதவுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவள் முகத்தில் தெரிந்த கோபம் பார்த்து இவன் புன்னகைத்தான்.

தன்னிடம் இத்தனை உரிமையாகக் கோபப்படத் தெரிந்த பெண்ணுக்கு ஏன் இன்னும் அவள் மனம் புரியவில்லை! நான் சொன்ன வார்த்தைகள் அவளை ஏன் கோபப்படுத்துகின்றன என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறாள்? இல்லை அவளுக்கு அதையும் நான்தான் உணர்த்த வேண்டுமா? அருகே சென்று அவள் முகம் பார்க்க வசதியாக நின்றுகொண்டான். முகத்தில் வந்து மோதிய காற்றில் அவள் கூந்தல் கலைந்து பறந்தது.

“பயமா இருக்கு தேவ்.” அவள் குரல் கலங்கியது. அவள் கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்தவன்,

“சரி, உன்னை நான் வற்புறுத்தலை, நீ நிதானமா சிந்திச்சு முடிவெடு, அதுவரைக்கும் நான் தள்ளியே இருக்கேன்.” அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் அப்போது பெண்ணுக்குப் புரியவில்லை. ஆனால் ஹோட்டல் திரும்பிய போது அவள் திகைத்துப் போனாள்.

“எங்க கிளம்பிட்டீங்க தேவ்?!” எதற்காக இத்தனை ஆச்சரியம் அந்தக் குரலில்?!

“கொழும்புக்குப் போறேம்மா, உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு, அதான் கிளம்பி வந்தேன், பார்த்துட்டேன்.” அவன் அழகாகப் புன்னகைத்தான்.

‘அவ்வளவுதானா?’ என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளைப் பெண் விழுங்கிக் கொண்டாள். எந்த உரிமையில் அந்தக் கேள்வியை அவளால் அவனைப் பார்த்துக் கேட்க முடியும்?! தொண்டையில் எதுவோ சிக்கிக் கொண்டது போல வலித்தது. எப்போது அவனை மீண்டும் பார்ப்பது? ஊருக்குப் போனாலும் என்னோடு பேசுவாயா? என்னை நியாபகத்தில் வைத்துக் கொள்வாயா? இப்படி ஏதேதோ கேள்விகள் தோன்றினாலும் எதையும் வாய்விட்டுக் கேட்கமுடியவில்லை.

அவள் முகம் பார்த்து மனம் படித்தவனும் எதுவும் பேசவில்லை.‌ மௌனமாக அவளையே வேடிக்கைப் பார்த்திருந்தான்.‌ சீக்கிரமான முடிவு என்றாலும் தீர்க்கமாக அவன் எடுத்ததைப் போல அவளும் முடிவெடுக்க வேண்டும். இந்த உலகமே எதிர்த்தாலும் தேவன் எனக்கு வேண்டும் என்ற உறுதி அவளுக்குள் பிறக்க வேண்டும். அதற்கான கால அவகாசத்தை அவளுக்கு வழங்க வேண்டும்.

அதற்கு மேலும் அதிக நேரம் எடுக்காமல் அன்று மாலையே கொழும்பை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். அவளைப் பிரிவது அவனுக்குமே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் இந்தப் பிரிவு அவசியம் என்பதால் புறப்பட்டான். விழிகளில் சோகம் வடிய அவனையே பார்த்திருந்தவளைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது.

“கவனமா இரு இந்திரா, ஏதாவது அவசரம்னா கால் பண்ணு, டைமுக்கு சாப்பிடு, இப்போதைக்கு அவசரப்பட்டு ஹோட்டலை காலி பண்ணிடாதே, ஆறுதலா வீடு பார்த்துக்கலாம்.”

“ம்…”

“வெயில்ல ரொம்ப அலையக் கூடாது சரியா.”

“தேவ்… இன்னொரு நாள் நின்னுட்டுப் போங்களேன்.” அவள் கேட்டபோது அவனுக்கும் ஆசையாகத்தான் இருந்தது.

“வேணாம்டா, இதுக்கு மேலயும் ஒரே ரூம்ல நாம ஒன்னா இருக்கிறது சரின்னு தோணலை, இந்த தேவன் அத்தனை நல்லவன் இல்லைம்மா.” என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான்.

திரும்பி வரும்போது புகையிரதத்தைத்தான் தெரிவு செய்திருந்தான். அந்தப் பயணம் அவன் மனதுக்கு இதமாக இருந்தது. வழி நெடுகிலும் அவன் மனம் சிந்தனை செய்த வண்ணமே இருந்தது. எந்த தைரியத்தில் இத்தனைப் பெரிய முடிவை அவன் எடுத்திருக்கிறான் என்று அவனுக்கே தெரியாது. ஏற்கனவே ஓர் உறவால் ஏமாந்து போனவன் இத்தனைச் சீக்கிரத்தில் எப்படி இன்னொரு உறவை ஏற்றுக்கொண்டான்?! ஏற்றுக்கொண்டது மாத்திரமல்லாது எப்படி அவனால் அந்தப் பெண்ணிடம் இவ்வளவு உரிமையோடு நடந்துகொள்ள முடிந்தது?!

வாழ்க்கையே விசித்திரமும் விந்தைகளும் நிறைந்ததுதானா?! சீட்டில் கண்மூடி அமர்ந்தவன் மனக்கண்ணில் நிதிலா வந்தாள். எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அவளோடு இப்போது உரையாட அவனால் முடிந்தது. இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது ஒருவித இயலாமையோடு புறப்பட்டவன் மனது இப்போது திடப்பட்டிருந்தது.

‘சாரி நிதிலா, உனக்குக் கெடுதல் பண்ணணும்னு நான் சத்தியமா நினைக்கலை, உனக்கும் எனக்குமான வாழ்க்கையில் நான் நிறைய எதிர்பார்த்தேன், அது எதுவும் நடக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமாத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன், எனக்குத் தெரிஞ்சு நான் உனக்கும் நல்லதுதான் பண்ணியிருக்கேன், அதை நீ புரிஞ்சுக்கணும்.’

டெலிபதி என்று சொல்வார்களே. அதை இதற்கு முன்பு தேவன் அனுபவித்ததில்லை. ஆனால் அந்த நொடி அது என்னவென்று புரிந்துகொண்டான். அலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான். நிதிலா ஏதோ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவளை அறிந்த நாள் முதலாக அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டதில்லையே! இப்போது என்ன திடீரென்று?! ஆர்வம் மேலிட என்னவென்று பார்த்தான்.

“தேவ்! புரிந்து கொள்வீர்கள் என்று ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்தேன், என் மனதிலிருப்பதை வீட்டாரிடம் சொல்லத் தைரியம் இருக்கவில்லை, அதனால்தான் அத்தனை ஒதுக்கம், வாழ்க்கையைப் பற்றிய கனவுகள் எனக்குள்ளும் உண்டு, ஆனால் அது இன்னொரு மனிதரோடு, மன்னித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், உங்களுக்கான வாழ்க்கையைக் கூடிய விரைவில் அமைத்துக் கொள்ளுங்கள்.” அழகான ஆங்கிலத்தில் வந்து வீழ்ந்திருந்தது குறுஞ்செய்தி. தேவன் முகத்தில் புன்னகைத் தோன்றியது.

“காமாட்சி அம்மா.” உடனேயே அந்த அம்மாளை அழைத்தான்.

“சொல்லுங்க தம்பி.”

“அனுபவம் அனுபவந்தான், நீங்க வாழ்ந்து பார்த்தவங்கன்னு நிரூபிச்சுட்டீங்க.” இவன் குரலில் அவ்வளவு துள்ளல். இதமாக உணர்ந்தான்.

“புரியலை தம்பி, என்ன திடீர்னு இந்த காமாட்சி அம்மாவைப் புகழ்றீங்க?” கேட்டவருக்குச் சற்றுமுன் வந்த குறுஞ்செய்தியை விளக்கிச் சொன்னான்.

“ரெண்டும் ரெண்டும் நாலுன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமில்லை தம்பி, உங்களுக்கு அந்தப் பொண்ணு மேல ஆசை இருந்ததால அதைத்தாண்டி சிந்திக்க முடியலை, நான் மூனாவது மனுஷி, எனக்கு அது சட்டுன்னு புரிஞ்சிடுச்சு, அவ்வளவுதான்.”

“ம்… நான் இப்ப அங்கதான் கிளம்பி வர்றேம்மா.”

“சரிப்பா, நைட்டுக்கு இட்லி பண்ணிடுறேன்.” அவரிடம் பேசி முடித்துவிட்டு அதே குறுஞ்செய்தியை இந்திராவுக்கும் அனுப்பி வைத்தான். முகத்தில் புன்னகை உறைய அந்த இரயில் பயணத்தை முழுதாக அனுபவித்தான் தேவன்.

அதேவேளை தனது அறையில் கண்மூடி படுத்திருந்தாள் பெண். மனதுக்குள் அலை அடித்துக் கொண்டிருந்தது. எதையோ இழந்தது போலிருந்தது. அவன் கிளம்பிப் போனதிலிருந்து அந்த அறையே வெறுமையாக இருப்பது போல உணர்ந்தாள். திடீரென்று கிளம்பி வந்தான். என்னவெல்லாமோ சொன்னான். இப்படி நடுக்கடலில் விட்டுவிட்டுப் போய்விட்டானே! இதற்கு அவன் வராமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

அலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தாள்.‌ அவன்தான் ஏதோ அனுப்பியிருந்தான். அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து அந்தக் குறுஞ்செய்தியைப் படித்தாள். பெருமூச்சொன்று வெளியானது. மனது எப்படி உணர்கிறது என்று அவளால் வகை பிரித்து அறிய முடியவில்லை.

இந்தக் கல்யாணத்தை நிறுத்தியதால் தேவனுக்கு வரவிருந்த கெட்ட பெயர் இனி வரப்போவதில்லை. அந்தப் பெண்ணின் சாபம் இவனுக்கு வரப்போவதில்லை. ஆனால் ஒரு திருமணம் நின்று போனதே என்று வருத்தமாக இருந்தது. அந்தத் திருமணம் நின்றிருக்காவிட்டால் தேவன் இன்னொரு பெண்ணுக்குச் சொந்தமானவன் என்ற எண்ணம் வலியைத் தோற்றுவித்தது.

பெண்ணுக்கு ஹோவென்று அழவேண்டும் போலிருந்தது. விக்ரமைத் தொடர்பு கொண்டு அவர்களது திருமணத்தை நிறுத்திவிட்டாள். ஆனால் அத்தனைச் சுலபத்தில் விக்ரம் பின்வாங்குவான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. இதற்கு நடுவே தேவன் வேறு அவளை அலைக்கழிக்கிறான். அவனை மறுக்கவும் முடியவில்லை, அவன் கேட்பதற்குச் சம்மதம் சொல்லவும் முடியவில்லை. இது என்ன வேதனை ஆண்டவா! நிம்மதியைத் தேடி வந்தவளுக்கு ஏன் இப்படியொரு சோதனையைக் கொடுத்தாய்?!

அவள் மனசாட்சி அவளோடு மல்லுக்கு நின்றது. தேவனை அவளால் மறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவன் அவளுக்கு வந்த சோதனையா? கடந்து போனவற்றை மறந்துவிட்டு அவனுக்குச் சம்மதம் என்று ஒரு வார்த்தைச் சொன்னால் அவள் வாழ்க்கையே வண்ணமயம் ஆகிவிடாதா? நிச்சயமாக அவள் இன்பமுறுவாள். ஆனால் தேவனுக்குக் கஷ்டங்கள் வரும். விக்ரம் என்ற முள்ளு அவனைப் பயங்கரமாகக் குத்தும், காயப்படுத்தும். அதை அவளால் தாங்க முடியுமா? தலை வலிப்பது போலிருந்தது. இரவு உணவைக் கூட உண்ணாமல் அப்படியே கண்ணயர்ந்தாள் பெண்.

***
இரண்டு நாட்கள் கடந்திருக்கும். அன்றைக்குப் பௌர்ணமி தினம். இலங்கையில் ஒவ்வொரு பௌர்ணமி தினமும் அரசாங்க விடுமுறை நாள். பொழுது அப்போதுதான் புலர்ந்திருக்க காமாட்சி அம்மா கிட்சனில் படு மும்முரமாக சமையலைக் கவனித்துக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவர் வீட்டிற்கு யாரோ விருந்தினர்கள் வருகிறார்களாம். சமையலை முடித்துவிட்டு அவசரமாகக் கிளம்ப வேண்டும் என்று ஏற்கனவே தேவனிடம் சொல்லியிருந்தார்.

“இன்னைக்கு ஒருநாள் நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன், நீங்க கிளம்புங்கம்மா.” தேவன் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

“இடியாப்பமும் கோழிக்கறியும் பண்ணி வெக்கிறேன் தம்பி, சாப்பிடுங்க, நைட்டுக்கு வரும்போது வீட்டுல இருந்து சமைச்சு எடுத்துட்டு வர்றேன், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கப்பா.”

“ஐயோ! இது கூட நீங்க பண்ண வேணாம்மா.”

“டைம் இப்போ என்னப்பா?” அடிக்கடி அவர் நேரத்தைக் கேட்ட வண்ணம் இருக்கவும் ரேடியோவை ஆன் பண்ணினான். காலையில் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டில் வானொலி கண்டிப்பாக ஒலிக்கும். ஏனென்றால் அதில் அடிக்கடி நேரத்தைக் குறிப்பிடுவார்கள். இலங்கை வானொலியில் காலைநேர ஒலிபரப்பு இனிமையான பாடல்களோடு காற்றலையில் வந்து கொண்டிருந்தது.

‘அவள் வருவாளா… அவள் வருவாளா…’ பாடல் ஒலிக்க தேவன் முகத்தில் ஓர் புன்னகை. கடந்த இரண்டு நாட்களாக இந்திராவை அவன் தொடர்பு கொள்ளவில்லை. அவளைத் தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்தான். நிதானமாகச் சிந்தித்து அவளாக ஓர் முடிவிற்கு வரட்டும். அதுவரை அமைதியாக இருப்போம் என்று முடிவெடுத்திருந்தான்.

“யாரு தம்பி வருவாங்க?” பாடலை இவன் முணுமுணுக்கவும் பெரியவர் கேலி பண்ணினார்.

“நம்மளையெல்லாம் தேடி யாரும்மா வரப்போறாங்க!” இவன் சொல்லும் போதே வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

“யாரும் வரமாட்டாங்கன்னு சொன்னீங்க! இந்தா யாரோ வந்துட்டாங்க.” சொல்லிவிட்டுப் பெரியவர் சிரிக்க இவனும் சிரித்தான்.

“கொஞ்சம் யாருன்னு பார்க்கிறீங்களா, கையில மாவு தம்பி.”

“சரிம்மா.” என்றவன் வாசலுக்கு வந்து கதவைத் திறந்தான். தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு இந்திரா நின்றிருந்தாள்.

“இந்திரா!” இவன் ஆச்சரியத்திற்கு அளவில்லாமல் இருந்தது. இவனைக் கண்ட மாத்திரத்தில் அவள் கண்களில் இலேசான நீர் படலம். கீழுதட்டை மடித்துக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்துவது அப்பட்டமாகத் தெரிந்தது. அவனை நெருங்கி வந்தவள் தன் முன் நெற்றியை அவன் வலது புஜத்தோடு முட்டியபடி நின்றாள்.

“யாரு தம்பி வந்திருக்காங்க?” உள்ளிருந்து குரல் கேட்கவும் பெண் சட்டென்று விலகியது.

“உள்ள வான்னு கூப்பிட மாட்டீங்களா தேவ்?”

“ஏய்! என்னப் பேச்சு இது? வா வா.” என்றவன் அவள் உள்ளே வந்ததும் கதவை மூடினான். இத்தனைக் காலையில் வந்திருக்கிறாள் என்றால் அங்கிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட்டிருப்பாள்?! வீட்டின் முன்னாலிருந்த தோட்டம் குளுகுளுவென அவளை வரவேற்க அவள் வருகையால் அவன் மனதும் குளிர்ந்து போனது. இந்த இரண்டு நாட்களாக அவளை அழைக்கவில்லையே தவிர அவள் நினைவாகவே இருந்தது.

“எத்தனை மணிக்கு அங்கிருந்து கிளம்பினே? ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனில்லை?” பதில் பேசாமல் தோட்டத்து மலரொன்றைத் தடவியபடி நின்றிருந்தாள். இவன் முகம் பார்க்கவில்லை. அந்த மலர் முகத்திலும் மலர்ச்சி இல்லை.

“என்னாச்சுடா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? வீட்டுல ஏதாவது ப்ராப்ளமா?” இந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை.

“யாரு தம்பி பெல் அடிச்சது?” கேட்டபடி வந்த காமாட்சி அம்மாவும் கொஞ்சம் திகைத்தவர் போல அப்படியே நின்றுவிட்டார். இந்த நேரத்தில் இந்தப் பெண்ணை அவர் அங்கே எதிர்பார்க்கவில்லை என்று முகம் சொன்னது.

“தேவ், சாரி… நான் உங்களைத் தொல்லைப் பண்ணுறேனா?”

“என்னப் பேச்சு இது இந்திரா!” அவன் முகமும் குரலும் கசங்கின.

“உங்களோட கொஞ்சம் பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு, ஃபோன்ல பேசுறதை விட நேர்ல பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன், இன்னைக்கு லீவு, ஆஃபீஸ் கிடையாது.” அவள் வருகைக்கான காரணங்களை அடுக்கியது பெண்.

“உள்ள வாம்மா.”

“இல்லை வேணாம், நாம வெளியே எங்கேயாவது போய் பேசலாம், உங்களோட பேசிட்டு நான் அப்பிடியே கிளம்பிடுறேன்.”

“இந்திரா…”

“ப்ளீஸ் தேவ்… நான் சொல்றதை நீங்களாவது கொஞ்சம் கேளுங்களேன்.” அதைச் சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் கோர்த்தது. நீங்களாவது கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? வேறு யாரோ அவள் பேச்சைக் கேட்கவில்லை என்பதுதானே? அப்படியென்றால் வீட்டாரோடு சண்டைப் போட்டிருப்பாளா? இவள் பேச்சைக் கேட்காமல் அவர்கள் இந்தப் பெண்ணை நோகடித்திருப்பார்களா?

“இதோ வர்றேன்.” என்றவன் அவசரமாக உள்ளே போய் ஃபோன், வாலெட்டோடு வந்தான்.

“அம்மா, நான் வெளியே போய்ட்டு வர்றேன், நீங்க எல்லா வேலையும் முடிஞ்சதும் வீட்டைப் பூட்டிட்டுக் கிளம்புங்க.”

“சரி தம்பி.” அந்த அம்மாள் முகத்திலும் அத்தனை மலர்ச்சி இல்லை. அன்றைக்கு இந்தப் பெண் வந்தபோது எப்போது கிளம்புகிறாய் என்று கேட்காத குறையாக வழியனுப்பி வைத்தது இப்போது நியாபகம் வந்தது. அதனால்தான் இப்போது வீட்டினுள் வராமல் தேவனை வெளியே அழைத்துச் செல்கிறாள் என்று பெரியவருக்குப் புரிந்தது. கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக இருந்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்தவன் ஓர் ஆட்டோ பிடித்தான். அவளையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த ஓர் ரெஸ்டாரன்ட்டுக்கு வந்தான். நேரம் அப்போது காலை ஒன்பது மணி. ஓர் ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்வு செய்து அமர்ந்து கொண்டார்கள். கூட்டம் அதிகமிருக்கவில்லை. டீ ஆர்டர் பண்ணினான்.

“சொல்லு இந்திரா.”

“என்னால முடியலை தேவ், எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு, அம்மா சத்தம் போடுறாங்க, அந்த விக்ரம் அவங்களை நல்லா ஏத்திவிடுறான்.” கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது.

“என்னால தனியா சமாளிக்க முடியலை, நீங்களும் என்னைத் தனியா விட்டுட்டு வந்துட்டீங்க.” கண்ணீரோடு அவள் குறைப்பட்டபோது அவனுக்கு வேதனையாக இருந்தது. அவள் முகம் பார்க்கும்படி எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவன் அவளருகில் போய் அமர்ந்து கொண்டான்.

“என்னால முடியலை தேவ்!” என்றவள் அதற்கு மேலும் அழுகையை அடக்காமல் அவன் தோள் சாய்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ஆறுதலாகச் சாய ஓர் தோள் கிடைத்ததும் அவள் துக்கம் வெடித்துச் சிதறியது. தேவனும் எதுவும் பேசாமல் அவளை அழ அனுமதித்தான்.

இரண்டு நாட்கள் அவள் பட்ட வேதனைகள் எல்லாம் கரைந்து வெளியே வரட்டும் என்று பொறுமைக் காத்தான். அவள் தலையை அவன் கை தடவிக் கொடுத்தது. ஆர்டர் பண்ணிய டீ வரவும் தன்னைச் சுதாரித்தவள் நேராக அமர்ந்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“டீயை குடி இந்திரா.” இருவரும் அமைதியாக டீயை பருகினார்கள்.

“தனியா எல்லாம் உன்னை அம்போன்னு விட்டுட்டு வரலை, உனக்கு யோசிக்க டைம் தேவைப்பட்டுச்சு, உனக்குத் தனிமை தேவைப்பட்டுச்சு, அதாலதான் தள்ளி வந்தேன், உம்மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும், ஆனா அது உனக்கும் தெரியணும்.” என்றவன் அவள் கைகளைத் தன் கரங்களுக்குள் எடுத்துக் கொண்டான்.

“சொல்லு இந்திரா, இப்ப நான் என்னப் பண்ணணும்னு நீ சொல்லு.”

“…” கண்கள் இரண்டும் அலைப்புற்றன. ஆனால் பதிலில்லை.

“உனக்கு எல்லாமுமா இருக்க நான் ரெடி, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“தேவ்!”

“எதுக்கு இவ்வளவு ஆச்சரியப்படுறே? அப்பிடி என்ன தப்பா நாம பண்ணிடப் போறோம்?”

“அப்போ விக்ரம்?”

“அவனை நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா?”

“சத்தியமா இல்லை.”

“என்னைக் கல்யாணம் பண்ணலைன்னாலும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணுவியே தவிர அந்த விக்ரமைத் திரும்பியும் பார்க்க மாட்டேதானே?”

“ஆமா.”

“அப்ப நான் சொல்றதைக் கேளு, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“அந்த விக்ரம் உங்களை ஹர்ட் பண்ணுவான்.”

“அதைப் பார்த்தா நாம வாழ முடியுமா? அப்பிடி என்னத்தைப் பண்ணிடுவான் அவன்?”

“என்ன வேணும்னாலும் பண்ணுவான், எந்த எல்லைக்கும் போவான்.” அவள் குரலில் பயம் தெரிந்தது.

“அதை அப்போ பார்த்துக்கலாம், இப்போ நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“நான் சொல்றதைச் சரியா புரிஞ்சுக்கோங்க தேவ், இந்த ரெண்டு நாள்ல நான் தெரிஞ்சுக்கிட்ட உண்மை என்ன தெரியுமா? உங்களை விட்டு என்னால இருக்க முடியலை.” இதைச் சொல்லும்போது மீண்டும் அவள் கண்கள் குளமானது. குரல் நலிந்தது. தேவன் பிடித்திருந்த அவள் கரங்களில் அழுத்தம் கூட்டினான்.

“நீங்க கூட இல்லாதது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆஃபீஸ்ல லீவு போட முடியாது, இல்லைன்னா நான் நேத்தே வந்திருப்பேன், அவ்வளவு உங்களை எனக்குப் புடிக்குது தேவ்.”

“அப்ப என்னடா உன்னோட பிரச்சினை?”

“உங்க வீட்டுலயும் சரி, என்னோட வீட்டுலயும் சரி, நிறைய சிக்கல்கள் வரும், எல்லாரும் உங்க மேல பழி போடுவாங்க, என்னால அதை அனுமதிக்க முடியாது, என்னோட வீடு உங்களை முழு குற்றவாளியா பார்க்கும், சூர்யா உங்களைத் தப்பா பார்க்கிறதை என்னால தாங்கிக்க முடியாது.” பரபரவென அவள் தனது காரணங்களை அடுக்க தேவன் ஒரு நொடி மௌனம் சாதித்தான்.

“பிரச்சினைகள் வரும்னு எனக்கும் தெரியும்டா, உன்னோட வீடு எம்மேல பழி போடுற மாதிரி எங்கம்மாவும் உம்மேல பழி போடுவாங்க, இதெல்லாம் இயற்கை, அதையெல்லாம் தாண்டித்தான் நாம வரணும், நாம ஒன்னா வாழணும்னா இதையெல்லாம் தாங்கிக்கணும் இந்திரா, கஷ்டப்படணும், அதுக்கு நான் ரெடியா இருக்கேன், உனக்காக என்ன வேணும்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன், நீ எனக்கு சரின்னு ஒரு பதில் சொல்லு.”

“தேவ்!” என்று கதறியவள் அவன் மார்பைச் சரணடைந்து மீண்டும் குலுங்கி அழுதாள்.

“நான் உங்களைப் பார்த்திருக்கக் கூடாது தேவ், நீங்க என்னோட கண்ணுல பட்டிருக்கக் கூடாது, உங்களுக்கு நான் பொருத்தமில்லை.”

“ஆனா இதெல்லாம் நடக்கணுங்கிறதுதான் விதி இந்திரா, அதை யாராலயும் மாத்த முடியாது.” என்றவன் அவள் முதுகை வருடிக் கொடுத்தான். தன்னைச் சரணடைந்தவளை மெதுவாக அணைத்துக் கொண்டான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 08

அத்தியாயம் 08பௌர்ணமி தினம் என்பதால் அன்றைக்குக் கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. ஷாப்பிங் மால், தியேட்டர் என எங்கும் போக முடியாது என்பதால் பெண்ணைத் தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வந்தான் தேவன்."வேணாம் தேவ், உங்க வீட்டுல காமாட்சி அம்மா இருப்பாங்க.""அவங்க இப்போ வீட்டுக்குக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்