arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 20
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 20 / 20

அத்தியாயம் 20

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.8/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 20

அந்த ப்ளாக் ஆடி வீட்டின் முன்பாக வந்து நின்றது. இந்திரா இன்னும் ஆச்சரியத்தின் உச்சத்திலேயே இருந்தாள். சற்று முன்பு பேசியது அவள் மாமியார்தானா? தன் மகனும் இந்திராவும் வேறு வேறல்ல என்று தன் வாயாலேயே ஒப்புக்கொள்கிறார் என்றால் என்ன அர்த்தம்?! தன்னை மனதளவால் தேவனின் மனைவி என்று ஏற்றுக் கொண்டாரா?! இந்த வீட்டின் மருமகள் என்று சொல்லாமல் சொல்கிறாரா?!

“இந்திரா…” அன்றைய மாலைப்பொழுது கொடுத்த மயக்கம், சற்று முன்பு அம்மா கொடுத்த இன்ப அதிர்ச்சி என்று தேவனின் குரல் கனிந்து போயிருந்தது.

“ம்…”

“வீடு வந்திருச்சு, இப்பிடியே உட்கார்ந்திருக்கப் போறியா?”

“தேவ்… உங்கம்மா…” தன்னைப் போல மனைவியும் ஓர் இனிய மனநிலையில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தான்.

“இந்திரா… எங்கம்மா தப்பானவங்க கிடையாது.”

“ஐயையோ! நான் அப்பிடிச் சொல்லலை தேவ்.” மிரிஸ்ஸவில் தாரிணி நடந்துகொண்ட விதம் இருவருக்கும் மறந்து போயிருந்தது. வாழ்க்கை என்றால் மறப்பதும் மன்னிப்பதும்தானே! அதை அந்த இளையவர்கள் புரிந்து கொண்டார்கள்.

“என்னவோ ஒரு காரணம் அவங்களுக்கு இருந்திருக்கு, எதைப்பத்தியும் யோசிக்காம தப்புப் பண்ணிட்டாங்க, இப்போ அவங்களுக்கு நீ யாருன்னு புரிஞ்சிருக்கும், மனசு மாறியிருக்கு, இந்த நேரத்துல நாம ரெண்டு பேரும் பழசைத் தூக்கிப் பிடிக்க வேணாம்டா, கொஞ்சம் விட்டுக் குடுக்கலாம்டா.”

“புரியுது தேவ்.” தன்னைக் காயப்படுத்தாமல் இதமாகப் பேசும் கணவன் மேல் காதல்தான் இன்னும் இன்னும் அதிகமானது. இவனுக்காக யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். தன்னை நோக்கித் திரும்பியிருந்தவனை இழுத்து அவன் இதழில் முத்தம் வைத்தாள்.

“வேணாம்மா, ஏற்கனவே நான் செம ஹாப்பி மூட்ல இருக்கேன், நீ வேற சலங்கைக் கட்டிவிடாதே.” அவன் பேசியதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னும் கொஞ்சம் அவனோடு இழைந்தாள்.

“நான் எதைச் சொன்னாலும் கேட்கிறதில்லைங்கிற முடிவுல இருக்கியா…” என்றவன் அதன்பிறகு வேறாகிப் போனான். அந்தக் கறுப்பு இயந்திரத்தையும் அது நடுத்தெருவில் நிற்பதையும் மறந்தே போனார்கள். இன்பமும் இதழ் உரசலும் சற்று நேரம் நீடித்தன.

“தேவா…” அப்பாவின் குரலில் சட்டென்று இருவரும் விலகினார்கள்.

“கார் வந்த சத்தம் கேட்டு ரொம்ப நேரமாச்சேப்பா! என்னாச்சு?” பரதனின் முகத்தில் கவலைத் தெரிந்தது. ஆஃபீஸிலிருந்து மருமகள் தனியாக வந்தது, மகன் கால் பண்ணி மனைவியைத் தேடியது என எல்லாமாகச் சேர்ந்து அந்தத் தந்தையைக் கவலைக்குள்ளாக்கி இருந்தது. இவருக்குள் ஏதோ மனஸ்தாபம் என்று அவர் தப்பாக எண்ணிக் கொண்டார்.

“ஒன்னுமில்லைப்பா, சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம், அம்மா எங்க?” அப்பாவின் கண்கள் மகனின் முகத்தை அவசரமாக ஆராய்ந்தன. அங்கே கவலை ரேகைகள் எதுவுமில்லை என்று தெரிந்ததும் ஆசுவாசமாகப் பேச ஆரம்பித்தார்.

“பழைய மூவி ஒன்னு டீவில போகுது, அதைத்தான் ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டு இருக்கோம்.” இப்போது இந்திராவும் காரிலிருந்து இறங்கினாள்.

“வாம்மா, ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா இல்லையா?” பேசியபடியே மூவரும் வீட்டினுள் வந்தார்கள்.

“சாப்பிட்டோம் மாமா, உங்களுக்கும் ஹாட் பாக்ஸ்ல போட்டுக் கொண்டு வந்திருக்கேன்.”

“தேவா நில்லு! இதென்ன புதுப் பழக்கம்? ராத்திரி பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றது?!” சோஃபாவில் அமர்ந்தபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் குரல் கோபமாக வந்தது. தேவன் எதுவும் பதில் பேசாமல் அவர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான். காஃபி டேபிளில் காலை நீட்டி அமர்ந்திருந்தார் தாரிணி.

“அம்மாடி இந்திரா, நீயும் உட்காரு.” இது பரதன். அவர்கள் மூவரும் பேசிக்கொள்ளட்டும் என்று தங்கள் அறைக்குள் போக எத்தனித்த இளையவள் அப்படியே நின்றாள். இந்த வீட்டிற்கு வந்தது முதல் தாரிணி இருக்கும் இடத்திற்கு அவள் வந்ததில்லை. பரதனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு ஹாலில் அவரது நடமாட்டம் இருப்பதால் இவள் தங்கள் அறையில், அல்லது கிச்சனில் என தனது நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்வாள். ஆனால் இப்போது என்ன செய்வது?

தேவன் மனைவியையே பார்த்திருந்தான். அவளை வற்புறுத்தவில்லையே தவிர மனைவிக்கும் அம்மாவுக்கும் இடையில் நல்லதொரு உறவு மலர வேண்டும் என்று அவன் மனது வெகுவாக ஆசைப்பட்டது. எல்லா வீடுகளையும் போல தன் வீடும் மாற வேண்டும் என்ற பேரவா மனதுக்குள் இருந்தது.

தேவனும் அம்மாவும் ஒரு சோஃபாவில் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரே கிடந்த இருக்கையில் பரதன் அமர்ந்தார். அது இருவர் அமரக்கூடியது என்பதால் மாமாவின் அருகில் போய் அமர்ந்தாள் இந்திரா. அப்பா, மகன் இருவரது முகமும் ஒன்றாக மலர்ந்தன. அம்மா இருக்கும் இடத்தை எப்போதுமே தவிர்க்கும் மனைவி இன்றைக்கு அப்படி நடந்து கொள்ளாததில் மகனது மனம் மலர்ந்து விகசித்தது.

பெண்பிள்ளை இல்லாத வீடு அது. மகனோடு மாத்திரமே வாழ்ந்து பழகியிருந்த பரதனுக்கு மருமகளின் வருகை மிகமிக சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தாரிணி கொடுக்கத் தவறிய அன்பு முழுவதையும் அவரே வாரிவாரி வழங்கினார். மாமா என்ற உறவையும் தாண்டி அப்பா என்ற பாசத்தோடு தன்னிடம் ஒட்டிக்கொண்ட மருமகளை மகள் போலவே பாவித்தார் பெரியவர். இப்போதும் தன்னருகே உரிமையோடு அமர்ந்த பெண்ணின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார்.

“அதென்ன பேச்சு தேவ்? என்னால எதுக்கு உங்களுக்குள்ள பிரச்சினை வருது?” நேரடியாக தாரிணி கேட்கவும் இந்திராவுக்கு ஒருமாதிரியாகிப் போனது. இப்போதும் தேவன் எதுவும் பேசிவிடவில்லை. மனைவியைத்தான் பார்த்தான்.

“என்னாச்சு தேவா? என்ன பிரச்சினை உங்களுக்குள்ள?” இது பரதன்.

“இந்த வீட்டுல நான் கஷ்டப்படுறேனாம்பா.”

“அப்பிடி யாரு சொன்னது?”

“உங்க மருமகள்.” இப்போது தன்னருகில் அமர்ந்திருந்த பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தார் பரதன்.

“ஏம்மா? ஏன் அப்பிடிச் சொன்னே? இந்த வீட்டுல எங்க புள்ளைக்கு அப்பிடியென்ன கஷ்டம்?” இந்திரா வாயைத் திறக்கவே இல்லை. நிலத்தைப் பார்த்தபடி குனிந்து கொண்டாள். பரதனும் தாரிணியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

“அம்மாக்கு ரீஷ்மாவைப் புடிச்சிருக்காம், ரீஷ்மாக்கு என்னைப் புடிச்சிருக்காம், ரீஷ்மாவை நான் கல்யாணம் பண்ணியிருந்தா சந்தோஷமா இருந்திருப்பேனாம், இப்ப என்னடான்னா அம்மாக்கும் அவளுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு நான் அல்லாடுறேனாம்.” தேவன் பிலாக்கணம் விரிக்க பரதன் கடகடவென சிரித்தார்.

“இப்பிடியெல்லாம் யாரு உங்கிட்டச் சொன்னது? உன்னோட பொண்டாட்டியா?” தாரிணி நெற்றிக் கண்ணைத் திறந்தார்.

“இதென்ன புதுக்கதை தேவா? ரீஷ்மாக்கு உன்னைப் புடிக்குமா? தேவராஜ்தானே பேச்சு வாக்குல ஒருதடவை சொன்னான், அப்பக்கூட உன்னை அவங்க வீட்டு மாப்பிள்ளையாக்க விருப்பம்னு சொன்னானே தவிர ரீஷ்மாக்கு அப்பிடியொரு எண்ணம் இருக்கிறதா சொல்லலையே?!”

“அதை உங்க ஃப்ரெண்ட்கிட்ட நீங்கதான் கேட்கணும்பா.”

“ஐயையோ! வேணாம் மாமா, இந்த விஷயத்தைப் பெரிசு பண்ண வேணாம், ரீஷ்மா ரொம்ப நல்ல பொண்ணு, அவங்களைக் காயப்படுத்த வேணாம்.”

“ஆமா, மத்தவங்க காயப்படக் கூடாது, ஆனா எம் புள்ளை காயப்படணுமோ?” வாய்க்குள் முணுமுணுத்தார் தாரிணி.

“இதுக்கெல்லாம் காரணம் நீங்கதாம்மா.”

“நான் என்னடா பண்ணினேன்?”

“உங்களுக்கு ஏன் இந்திராவைப் புடிக்கலை? ரீஷ்மா வந்ததும் உட்கார வெச்சுப் பேசத் தெரியுதில்லை? ஆனா இத்தனை நாள்ல இந்திராக்கிட்ட ஒரு வார்த்தைப் பேசியிருக்கீங்களா?” நேரடியான தாக்குதல்.

“இது நியாயமான கேள்வி தாரிணி, இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்.” சந்தர்ப்ப சமயம் வாய்க்கவும் பரதனும் மகனோடு களத்தில் இறங்கிவிட்டார்.

“அப்பாவும் மகனும் இன்னைக்கு என்னை வெச்சு செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களோ? ஏதோவொரு கோபம், சொல்லத் தெரியலை, நாம பார்த்த பொண்ணை விட்டுட்டு இன்னொருத்தியைக் கையைக் காட்டுறானேன்னு கண், மண் தெரியாத கோபம் வந்துச்சு, நிதிலா வேற யாருமா இருந்திருந்தா பிரச்சினை இல்லை, ஃப்ரெண்ட்டோட பொண்ணு, இதுதான் பொண்ணுன்னு அத்தனைப் பேருக்கு முன்னாடியும் தம்பட்டம் அடிச்சாச்சு, அந்த நேரம் வந்து அவளைப் புடிக்கலைன்னு சொன்னா கோபம் வராதா தேவா?”

“அம்மா… நிதிலாவை வேணாம்னு சொன்னதுக்கும் இந்திராக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நிதிலா வேணாம்னு நான் முடிவெடுத்ததுக்கு அப்புறம்தான் இந்திராவையே சந்திச்சேன்.” என்றவன் அவர்கள் முதல் சந்திப்பை அம்மாவிடம் விபரித்தான்.

“அது யாருடா விக்ரம்?” இப்போது தாரிணியின் குரல் உயர்ந்தது. சட்டென்று இந்திரா இருக்கையை விட்டு எழ எத்தனிக்க பரதன் அவள் கையைப் பிடித்து அமர வைத்தார்.

“உட்காரும்மா, அதான் பேசி முடிக்கிறதுன்னு முடிவாகிடுச்சில்லை? இன்னைக்கு எல்லாத்தையும் பேசி முடிச்சிரலாம், வீட்டுல இருக்கிறதே நாலு பேரு, இதுல நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா நின்னா நல்லாவா இருக்கு?”

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு தேவ், யாரந்த விக்ரம்? அவன் எதுக்கு எனக்கு கால் பண்ணி என்னென்னமோ சொல்லணும்?”

“அம்மா…” தேவன் எதையோ பேச தயங்குபவன் போல அமைதியாக இருந்தான். பிற்பாடு தன்னைச் சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அந்த விக்ரம் பாவம்மா, அவனுக்கு நான் நியாயம் பண்ணலை.”

“தேவ், என்ன மாதிரியான வார்த்தைகள் இது? அவன் நல்லவன்னு நான் சொல்லலையே?!” இத்தனை நேரமும் அமைதியாக இருந்த பெண் இப்போது அவசரமாக வாய் திறந்தாள்.

“இல்லை இந்திரா, எனக்கும் நிதிலாக்கும் இடையே கல்யாணப் பேச்சு இருக்குன்னு தெரிஞ்சதும் நீ என்னைவிட்டுத் தள்ளித்தான் போனே, ஆனா நான் அப்பிடி எதுவும் பண்ணலையே! விக்ரம்தான் உங்க வீட்டுல உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைன்னு தெரிஞ்சும் நான் சுயநலமாத்தான் நடந்துக்கிட்டேன், உன்னை விக்ரம்கூட சேர்த்து வைக்க நான் எந்த முயற்சியும் எடுக்கலை.”

“நீங்க முயற்சி எடுத்திருந்தாலும் நான் சம்மதிச்சிருக்கப் போறதில்லை.”

“இருக்கலாம், ஆனா நான் சுயநலமா நடந்துக்கிட்டேங்கிற குற்ற உணர்ச்சி இப்பவும் எம் மனசுக்குள்ள இருக்கு, அதாலதான் அன்னைக்கு அவன் கை நீட்டினப்ப கூட நான் அமைதியா வாங்கிக்கிட்டேன்.”

“எதுக்கு இப்போ அதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு? உங்க மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் கை நீட்டி அடிக்க அந்த விக்ரம் யாரு? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? கேட்கிறதுக்கு ஆளில்லைன்னு நினைப்பா? அன்னைக்கே நாம போலீஸுக்குப் போயிருக்கணும் தேவ், நீங்கதான் எங்களை எதுவும் பண்ணவிடல்லை.” படபடவென இவள் பொரிந்து தள்ள பெரியவர்கள் இருவரும் மீண்டுமொரு முறை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“சரிசரி, இப்ப எதுக்கு அந்தப் பழைய பேச்செல்லாம்? கொண்டுவந்த புட்டும் மட்டன் குழம்பும் ஆறிடப் போகுது, வா தாரிணி, நாம சாப்பிடலாம்.” பரதன் நிலைமையைச் சீர்பண்ண நினைத்தார். அது சற்றே வேலை செய்ய எல்லோரும் எழுந்து டைனிங் டேபிளுக்குப் போனார்கள். இந்திரா பரிமாற பெரியவர்கள் இருவரும் உண்ண ஆரம்பித்தார்கள்.

“ம்… செம டேஸ்ட்டா இருக்கும்மா.” பரதன் சப்புக் கொட்டிக்கொண்டே சாப்பிட்டார். அம்மாவின் அருகில் அமர்ந்திருந்த மகனும் மனைவி சமைத்ததைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினான்.

“அம்மா பண்ணுறது இவ்வளவு சாஃப்ட்டா வராதில்லை தேவா?” இது தாரிணி.

“ஏம்மா, நீங்க பண்ணுறதும் நல்லாதான் இருக்கும்.” அன்றைய இரவு மிகவும் இதமாக அந்த வீட்டில் கழிந்தது.

அடுத்தநாள் கோடைக்காலத்திற்கான விடுமுறை தினம். எல்லோரும் வீட்டிலேயே இருந்தார்கள். மதிய வேளையில் கூடும் சந்தையில் பக்கத்து ஊர்களிலிருந்து கிடைக்கும் சுத்தமான காய்கறிகள் மிகவும் பிரசித்தம் என்பதால் அப்பாவும் மகனும் கிளம்பிவிட்டார்கள்.

நேற்றைய இரவிற்குப் பிறகு மனது மிகவும் சந்தோஷமாக இருப்பது போல உணர்ந்தாள் இந்திரா. தாரிணி மேல் மனஸ்தாபம் இருந்தாலும் குடும்பம் என்று ஆனபிறகு ஆளுக்கொரு பக்கமாக இருப்பது சரியென்று தோன்றவில்லை. எல்லாவற்றையும் மறக்க வேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும் தேவனுக்காக அனைத்தையும் மறக்க வேண்டும். அன்பான மாமனாருக்காக இந்த வீட்டை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

“தேவா…” மாமியார் அழைக்கும் குரல் கேட்கவும் சட்டென்று இளையவளின் காதுகள் கூர்மையாகின. இலேசாக அவர் இருமும் சத்தமும் கேட்டது. ஆண்கள் இருவரும் வீட்டில் இல்லை என்று அவருக்குத் தெரியாதா? எதற்காக தேவனை அழைக்கிறார்?! மீண்டும் இருமல் சத்தம். இம்முறை சற்று பலமாகக் கேட்டது.

“என்னங்க…” மீண்டும் தாரிணி அழைக்கும் சத்தம் கேட்கவும் இவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதுவரை மாமியாரின் அறை என்ன நிறம் என்றுகூட அவளுக்குத் தெரியாது. அந்த அறைப்பக்கம் அவள் எட்டிப் பார்த்ததும் இல்லை. மீண்டும் இருமல் சத்தம் பலமாகக் கேட்கவும் எதையும் யோசிக்காமல் அவசரமாக அங்கே சென்றாள்.

“தேவா… தண்ணீ…” இவள் அறையை எட்டிப் பார்க்கும் போது நெஞ்சை நீவியபடி பலமாக இருமிக் கொண்டிருந்தார் தாரிணி. இவளது தலையைக் கண்டதும் வாயில் கையை வைத்து தண்ணீர் குடிப்பது போல அபிநயம் காட்டினார். சட்டென்று சமையலறைக்குள் சென்றவள் அவசரமாக தண்ணீரை எடுத்துக்கொண்டு விரைந்தாள். இவளிடமிருந்து தண்ணீரை வாங்கியவர் மளமளவென அருந்தினார்.‌

“என்னாச்சு?”‘ மிகவும் தயக்கத்திற்கு மத்தியில் கேட்டாள் இந்திரா.‌

“தெரியலை…” மீண்டும் பலமான இருமல். ஆனாலும் மருமகளின் கேள்விக்குப் பதில் வந்தது. இந்திராவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தாரிணி தன்னோடு பேசுகிறாரா?!

“மாமாவும் தேவும் மார்கெட் போயிருக்காங்க, ஃபோன் பண்ணி வரச்சொல்லட்டுமா?”

“வேணாம்…”

“ரொம்ப இருமலா இருக்கே?”

“புரையேறிடுச்சு… அவ்வளவுதான்…” என்றவர் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் அருந்தினார். இப்போது இலேசாக இருமல் அடங்கியிருந்தது.

“சூடா ஏதாவது கொண்டுவரட்டுமா?”

“ம்… காஃபி…” இப்போதும் தாரிணியால் ஒழுங்காகப் பேச முடியவில்லை. அதுவே போதும் என்பது போல மீண்டும் சமையலறைக்கு விரைந்தவள் காஃபி தயாரித்தாள். இருவரும் பேசிக் கொண்டாலும் பேச்சில் அத்தனை நெருக்கம் இருக்கவில்லை. ஆனால் பெரியவர் தன்னோடு பேசியதே பெரிய விஷயம் என்றுதான் இவளுக்குத் தோன்றியது. சரியாக அப்போது அந்த ப்ளாக் ஆடி வீட்டின் முன்பாக வந்து நின்றது.

“தேவ்!” காரின் சத்தம் கேட்டதுதான் தாமதம். வாசலுக்கு விரைந்து வந்தாள் பெண்.

“என்னாச்சு இந்திரா?”

“அத்தையைப் பாருங்க, ரொம்ப இருமலா இருக்கு.”

“என்னாச்சு தாரிணிக்கு?” அப்பாவும் மகனும் அவசரமாக உள்ளே விரைந்தார்கள்.

“என்னம்மா ஆச்சு?!”

“ஒன்னுமில்லை தேவா, சாய்ஞ்சுக்கிட்டு இருந்தேனா, புரையேறிடுச்சு.”

“டாக்டர்கிட்ட போகலாம் தாரிணி, மருமகள் இவ்வளவு பதட்டப்படுதே?!”

“சாதாரண இருமல், இதுக்கு எதுக்கு உங்க மருமக இவ்வளவு பதட்டப்படணும்? முதல்ல போய் மூனு பேருக்கும் காஃபி போடச் சொல்லுங்க.” தாரிணியின் அதட்டலில் இந்திராவின் முகம் வாடிப் போனது. எதுவும் பேசாமல் சமையலறைக்குள் போய்விட்டாள். அப்பா, மகனைப் பார்க்க அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் மனைவியின் பின்னோடு சென்றான். அமைதியாக சமையலறையில் நின்றபடி காஃபி தயாரித்தவளைப் பார்த்தபோது கவலையாக இருந்தது. பின்னோடு நின்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“என்னடா ஆச்சு?”

“உங்கம்மாக்கு…”

“அத்தைக்கு.” மனைவியின் பேச்சைத் திருத்தினான் தேவன்.

“அத்தைத்கு ரொம்ப முடியாம போச்சு தேவ், நான் பயந்து போயிட்டேன், நீங்க ரெண்டு பேரும் வேற வீட்டுல இல்லை, இருமல் ஜாஸ்தியாகி கண்ணெல்லாம் சிவந்து போச்சு.”

“ம்… இதுக்குப் போய் யாராவது பயப்பிடுவாங்களா?”

“அப்பிடியில்லை தேவ், அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா தனியா என்னால என்னப் பண்ண முடியும்?” இப்போது இலேசாக மனைவியின் கண்களில் நீர் திரளவும் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான் கணவன்.

“அம்மா பட்டுப் பட்டுன்னு பேசினது வருத்தமா இருக்கா?”

“ம்ஹூம்… பேசினாங்களே! அதுவே பெரிய விஷயம்.”

“அம்மா கெட்டவங்க இல்லைடா, உம்மேல ஏதோவொரு கோபம் அப்ப வந்திடுச்சு, என்னப் பண்ணுறோம்னு தெரியாம நடந்துக்கிட்டாங்க, வயசுல பெரியவங்க, மன்னிச்சிடலாம் இந்திரா, ப்ளீஸ்டா.” தன்னிடம் கெஞ்சும் கணவனைப் பார்த்தபோது கோபம் மறைந்து சிரிப்பு வந்தது. காதல் பொங்கியது.

“யாருக்காக இல்லைன்னாலும் இந்த தேவ்க்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம், உங்கம்மாவை மட்டுமில்லை, இந்த உலகத்தையே மன்னிச்சிடலாம்.”

“தேவ்க்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா?”

“கண்டிப்பா, இப்போ காஃபி போடலாம்.”

“யாருக்கு வேணும் இந்த காஃபி, நீ வேற ஏதாவது குடு.” அவன் சரசம் பண்ண ஆரம்பிக்கும்போது மீண்டும் தாரிணியின் குரல் கேட்டது.

“தேவா! உன்னோட சம்சாரம் இப்போ காஃபி குடுப்பாளா இல்லை சாயந்தரம்தான் ரெடியாகுமா?”

“இதோ வர்றோம்மா.” என்று சத்தமாக பதில் சொன்னவன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டுவிட்டு தயாராயிருந்த காஃபியோடு வெளியே போனான். ஒரு புன்னகையோடு அவனையே பார்த்திருந்தாள் இந்திரா.

ஒரு மாதம் கடந்து போயிருந்தது. அன்றைக்கு தாரிணி ஹாஸ்பிடல் செல்ல வேண்டும். எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே அதற்கான கடிதம் வந்திருந்ததால் அன்றைக்கு எல்லோரும் வீட்டிலிருந்தார்கள். சூர்யாவும் வருவதாகச் சொல்லியிருந்தான். இவர்கள் எப்போது ஹாஸ்பிடல் செல்வதாக இருந்தாலும் அந்த இளம் மருத்துவன் இவர்களோடு இணைந்து கொள்வான்.

“என்னாச்சுக்கா? ஏன் டல்லா இருக்கே? பெரிசு ஏதாவது காரசாரமா பேசிச்சா?” இரகசியமாகக் கேட்டான் தம்பி.

“அவங்களை எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுன்னு எனக்குத் தெரியலைடா! பேசுறாங்க, ஆனா எங்கூடத்தான் பேசுறாங்கன்னு யாராவது சொன்னாத்தான் எனக்கே புரியுது, பேசுறாங்களா, ஏசுறாங்களான்னே தெரிய மாட்டேங்குது, தன்மையான வார்த்தையே கிடையாது, சடார் புடார்னு பேசுறாங்க, சமயத்துக்கு எனக்கு அவ்வளவு கோபம் வருது, ஆனாலும் தேவ்க்காக பொறுத்துக்கிட்டு இருக்கேன்.” அக்காவின் முறைப்பாட்டில் தம்பி சத்தமாகச் சிரித்தான்.

“அக்கா, அவங்களுக்கு எதையுமே சரியா வெளிக்காட்டத் தெரியலை, முன்னாடி உம்மேல கோபம் வந்தப்பவும் இப்பிடித்தான், மிரிஸ்ஸக்கு வந்து எல்லாத்தையும் கவுத்துக் கொட்டினாங்க, அதே மாதிரித்தான் இப்பவும், உங்கூடப் பேசணும், ஆனா அதை எப்பிடிப் பண்ணுறதுன்னு தெரியலை, என்னக்கா? என்னப் பண்ணுது உனக்கு?” சூர்யா பேசிக்கொண்டிருக்கும் போதே பெரியவளின் முகத்தில் அசௌகரியம் தெரிந்தது.

“தெரியலைடா, நேத்துல இருந்தே ஒருமாதிரியா இருக்கு, ரொம்ப டயர்டா இருக்கு, இன்னைக்கு லண்டன்வரை போக முடியும்னு தோணலை, அதாலதான் ஆஃபீஸுக்குப் போகலை.” சோர்வாகச் சொன்னவளை அழைத்துக் கொண்டு ஓபிடி க்கு வந்தான் தம்பி. அதிக கூட்டம் இல்லை என்பதால் இலகுவாக இருந்தது.

“என்னாச்சு சூர்யா?” பதட்டமாக வந்தான் தேவன்.

“இவ்வளவு வீக்கா இருக்கா, என்னன்னு பார்க்க மாட்டீங்களாண்ணா?” சூர்யாவின் குரலில் உண்மையாகவே கோபம் தெரிந்தது.

“டேய்! என்னடா சொல்றே? நல்லாத்தானே இருக்கா?”

“என்ன நல்லா இருக்கா? கண்ணைப் பாருங்க.” என்றவன் அக்காவின் கண்ணைக் கீழே இழுத்துக் காண்பித்தான். இரத்தப் பசையற்றுக் காணப்பட்டது. இளம் பெண் மருத்துவர் ஒருவர் இந்திராவிடம் வந்து உள்ளே அழைத்துப் போனார்.

“இந்த மாசம் அக்காக்கு டேட் தள்ளிப் போகுதா?” இவன் கேட்ட கேள்வியில் தேவன் திருதிருவென விழித்தான்.

“ஓ… அதுகூட தெரியாம குடும்பம் நடத்துறீங்க! அம்மாவைக் கண்டதும் பொண்டாட்டி மறந்து பேச்சில்லை?” குறை சொன்னவன் தானும் உள்ளே போய்விட்டான். தேவனுக்குக் கண்ணைக் கட்டியது. சூர்யா என்ன சொல்கிறான்?!

தங்கள் வீட்டுக்கு வந்ததிலிருந்து தேவன் கொஞ்சம் உற்சாகமாகத்தான் காணப்பட்டான். தங்கள் திருமணத்திற்கு அம்மாவின் அனுமதி கிடைக்கவில்லை என்பதைப் புறக்கணித்திருந்தாலும் இந்திராவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நல்லதொரு பிணைப்பு உருவாகிவிடாதா என்று அவன் மனம் ஏங்கியது. அதற்குச் சகாயம் செய்வது போல அமைந்து போனது தாரிணிக்கு ஏற்பட்ட விபத்து. கெட்டதிலும் ஓர் நல்லதை இறைவன் வைப்பான் என்பது இதுதான் போலும்!

இந்திராவின் விருப்பத்தை மீறி அவளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை தேவன் விரும்பவில்லை.‌ ஆனால் தங்களின் வீட்டுக்கு அவள் வரவேண்டும், தன் பெற்றோருடன் நல்லதொரு உறவில் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவனது மனம் ஆசைப்பட்டது. அமெரிக்கப் பயணம், அம்மாவின் விபத்து என காரணங்கள் அவனுக்குச் சாதகமாக அமையவும் அதைப் பயன்படுத்திக் கொண்டான். அம்மா மலையேறுவதும், தனக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் மனைவியைச் சமாதானம் செய்வதுமென இருந்த தேவன் மனைவியின் உடல்நிலையைக் கவனிக்க மறந்திருந்தான். கட்டுப்பாடுகளற்று இனித்த இரவுகள் இப்போது இலேசாகக் கண்சிமிட்டிச் சென்றன.

“அண்ணா!” ஆர்ப்பாட்டமாக வந்த சூர்யா இவனைக் கட்டி அணைத்துக்கொண்டான்.

“ரொம்ப ஹாப்பியா இருக்கு! அம்மா அப்பாக்கு கால் பண்ணி சொல்லணும், அவ்வளவு சந்தோஷப்படுவாங்க, அத்தைக்கும் மாமாக்கும் நீங்க சொல்றீங்களா? இல்லை நான் சொல்லட்டுமா? அக்காவைப் போய் பாருங்க, உங்களைத்தான் தேடுறா.” இடைவெளி விடாமல் பேசியவன் அவசர அவசரமாக அலைபேசியை எடுத்துக் கொண்டு போய்விட்டான். தேவன் மலைத்துப் போனான்.

இவன் உள்ளே வரவும் அந்த இளம் பெண் மருத்துவர் ஓர் சிரிப்போடு இவனுக்கு வாழ்த்துச் சொன்னாள். நன்றி சொன்னவனுக்கு நிகழ்காலத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அறைக்குள் இருந்த மனைவியும் இவனுக்குக் குறையாத அதிர்ச்சியை முகத்தில் சுமந்து நின்றிருந்தாள்.

“தேவ்!” இவனைக் கண்டதும் ஓடிவந்து அணைத்துக் கொண்டவளைத் தானும் இறுக்கிக் கொண்டான். தாங்கள் நின்றிருப்பது ஹாஸ்பிடல் என்பதை இருவரும் மறந்து போனார்கள்.

“இந்திரா… என்னடா? சூர்யா என்னெல்லாமோ சொல்றான்?! என்னால நம்ப முடியலை! எப்பிடி இவ்வளவு சீக்கிரமா?” முட்டாள் போல கேள்வி கேட்ட கணவனை அண்ணார்ந்து பார்த்தவள் அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“என்னைக் கேட்டா?”

“வேற யாரைடீ கேட்கிறது?”

“ஒவ்வொரு தடவையும் அம்மா சத்தம் போடும்போது சமாதானம் பண்ணுறேன் பேர்வழின்னு யாரோ கொஞ்சினாங்கல்லை? அவங்களைப் போய் கேளுங்க, நல்லா விளக்கிச் சொல்லுவாங்க.” இப்போது அவன் சிரித்தான்.

“அடியேய் சின்னப் பொண்ணே! உன்னால முடியுமா? நீ இதுக்கெல்லாம் ரெடியா இருக்கியா?”

“ரொம்ப லேட்டா யோசிக்கிறீங்க தேவ்.”

“சத்தியமா நம்ம பர்ஃபோமன்ஸ் இந்தளவுக்குப் போதும்னு…” அதற்குமேல் அவனை அவள் பேசிவிடவில்லை. வாயிலேயே ஓர் அடி வைத்தவள் வெளியே வந்துவிட்டாள்.

“பேச்சைப் பாரு, வெட்கம் கெட்டுப்போய்.” மனைவியின் முணுமுணுப்பைக் கேட்டுச் சிரித்தவன் அவளைப் பின்தொடர்ந்தான்.

“தேவா! உம் பொண்டாட்டியை ஒரு இடத்துல அடங்கி உட்காரச் சொல்லு!” வீட்டுக்கு வந்ததும் வராததுமாக தாரிணி ஆர்ப்பாட்டம் பண்ணத் தொடங்கிவிட்டார். காதில் வந்து வீழ்ந்த செய்தியில் குடும்பத்தின் அத்தனைப் பேரும் திக்குமுக்காடிப் போனார்கள். தாரிணியின் முகம் மலர்ந்து கிடந்தது.

“ஏங்க! நீங்க உங்க வேலைக்கு லீவு சொல்லிடுங்க, ரெண்டு, மூனு மாசத்துக்கு நீங்க வேலைக்குப் போக முடியாது.”

“என்ன?!” மனைவியின் உத்தரவில் பரதன் அசந்து போனார்.

“ஏம்மா? மருமகள்தானே உண்டாகியிருக்கா? அதுக்கு நான் ஏன் மூனு மாசம் லீவு போடணும்?!”

“பார்த்தியா சூர்யா உங்க மாமா பேச்சை? பொறுப்பான மனுஷன் மாதிரியா பேசுறாரு? எனக்கும் கால் முடியாம இருக்கு, இந்த நேரத்துல அவர்தானே வீட்டுல இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கணும்?”

“ஏன் சூர்யா? அவ்வளவு கவனமா இருக்கணுமா என்ன?” மனைவிக்குத் தெரியாமல் இரகசியமாகக் கேட்டார் பரதன். சூர்யாவுக்குச் சிரிப்பு வந்தது.

“அத்தை, எதுக்கு இவ்வளவு கவலைப்படுறீங்க? அக்கா கவனமா இருந்துப்பா.”

“ம்ஹூம், அதெல்லாம் சரி வராதுப்பா, முன்னாடியெல்லாம் கல்யாணம் ஆனா அடுத்த வருஷமே கொழந்தைப் பொறந்துடும், ஆனா இப்பெல்லாம் அப்பிடி இல்லை, ஒரு கொழந்தையைப் பெத்துக்கிறது பெரிய சீன வித்தை மாதிரி ஆகிப்போச்சு, அதுலயும் இப்போ பசங்க ஆயிரத்தெட்டு பிளான் போடுறாங்க, எங்க உங்கக்காவும் அதுமாதிரி காலம் கடத்திடுவாளோன்னு நான் ரொம்பவே பயப்பிட்டேன், ஆனா ஆண்டவன் என்னைச் சோதிக்கலை, தேவன்தான் ஒன்னோட நின்னு போனான், ஆனா அவனுக்கு அப்பிடி ஆகிடக்கூடாது, இந்த வீட்டுல நிறைய கொழந்தைங்க சத்தம் கேட்கணும், ஏங்க! அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணணும், இங்க பண்ணுறது கஷ்டம், நாம ஊர்ல ஏற்பாடு பண்ணலாமா?” ஆர்ப்பரித்த மனைவியைத் தங்கள் அறைக்குள் அழைத்துக்கொண்டு போனார் பரதன். இப்போது இந்திராவின் தலை வெளியே தெரிந்தது.

“நீ சொன்னது சரிதான்கா, இந்தம்மாவை எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுன்னே தெரியலை, எப்ப உருகுவாங்க, எப்ப மிரட்டுவாங்கன்னு புரியவே மாட்டேங்குது!” சிரித்தவாறே தம்பி விடைபெற்றுக் கொண்டான்.

அன்றைய இரவுப்பொழுது… வீடே ஆனந்த அமைதியில் ஆழ்ந்திருந்தது. தன் மார்பில் தலைசாய்த்திருந்த மனைவியின் தலையை வருடியபடி இருந்தான் தேவன். முகத்தில் புன்னகை உறைந்திருந்தது.

“தேவ்…”

“என்னடா?”

“நாளைக்கு நான் ஆஃபீஸ் போகட்டுமா?”

“முடியுமா உன்னால?”

“எனக்கு ஒன்னுமில்லைங்க, நான் நார்மலாத்தான் இருக்கேன்.”

“இந்த மாதிரி டைம்ல கஷ்டமா இருக்கும்னு சொல்லுவாங்களே, அப்பிடி உனக்கு எதுவுமில்லையா?”

“ம்ஹூம், ஆனா உங்கம்மாதான்…”

“எங்கம்மாக்கு என்னடா?”

“மாமாவையே ஆஃபீஸ் போக வேணாம்னு சொல்றாங்க, என்னை…” முழுதாக முடிக்காத மனைவியின் முகத்தைத் தனக்காக உயர்த்தினான் தேவன். தனக்குள் வந்திருக்கும் இன்னொரு உயிரின் இன்பக் கிளர்ச்சியால் அவள் பேரழகி போல ஜொலித்தாள். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த இதழ்களில் முத்தம் வைத்தவன் சிறிது நேரம் இன்பம் சுகித்தான்.

“இந்திரா…‌ அம்மா கரடுமுரடா பேசுறதால உம்மேல அக்கறை இல்லைன்னு அர்த்தமில்லைடா.”

“ஐயையோ! நான் அப்பிடி சொல்லலை தேவ், சில நேரம் மாமா மாத்திரைப் போட லேட்டானா முடிஞ்சு போச்சு! பட்டுன்னு ஒரு சத்தம் வரும், உங்கப்பா என்னைப் பார்த்து சிரிச்சுட்டு ஓடிப்போய் மாத்திரைப் போடுவாரு, அத்தை எப்பவும் இப்பிடித்தானா? அவங்களுக்கு சாஃப்ட்டா பேச வராதா?”

“அப்பிடீன்னும் சொல்ல மாட்டேன், ஆனா பெரும்பாலும் அவங்களோட அணுகுமுறை இப்பிடித்தான், மென்மைக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் தூரந்தான்.” என்றவன் சிரித்தான்.

“ஆனா அம்மாவுல இப்போ நிறைய மாற்றங்கள் தெரியுதுடா, உன்னைப்பத்திப் பேசுறாங்க, அக்கறை எடுக்கிறாங்க, உனக்காக யோசிக்கிறாங்க, இல்லைன்னா அப்பாவை வேலைக்குப் போக வேணாம்னு சொல்லுவாங்களா?”

“ம்…”

“இந்திரா… ரெண்டு வாரத்துக்கு உன்னால லீவ் போட முடியுமாடா?”

“எதுக்கு தேவ்?”

“இப்போதைக்கு அம்மா உன்னை வேலைக்குப் போக விடுவாங்கன்னு எனக்குத் தோணலைடா, நம்ம நன்மைக்குத்தானே சொல்றாங்க, ரெண்டு வாரம் வீட்டுல இருந்துட்டு அதுக்கு அப்புறமா நீ ஓகேன்னா பார்க்கலாம், உனக்கும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும்.”

“கேட்டுப் பார்க்கிறேன்.” என்றவள் இன்றும் கொஞ்சம் வாகாக அவன் மார்பில் சாய்ந்தாள்.

“அம்மா சொன்னா அதுக்கு மறுபேச்சில்லையா தேவ்?” வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள். இப்போது அவளைக் கட்டிலில் கிடத்தியவன் புரண்டு அவள் முகம் பார்த்தான்.‌ அவள் தன்னைச் சீண்டுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது.

“அம்மாக்குப் புடிச்சாலும் சரி, புடிக்கலைன்னாலும் சரின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கிட்டப் பேசுற பேச்சாடி இது? உன்னையெல்லாம்…” அவன் பார்த்த வேலையில் அவள் குலுங்கிச் சிரித்தாள்.

“இந்திரா, என்னை எப்பவும் நீ தப்பா புரிஞ்சுக்கப்படாது, அம்மா கெட்டவங்க கிடையா…” அவனை மேலே பேசவிடாமல் அவள் தடுத்தாள்.

“எனக்குப் புரியுது தேவ், இதையே எத்தனைத் தடவை சொல்லப் போறீங்க, நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், மிரிஸ்ஸவுல வெச்சு உங்கம்மா ஏன் அப்பிடி நடந்துக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியாது, எம்மேல அப்பிடியென்ன கோபம் அவங்களுக்கு இருந்துச்சுன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது.”

“நிதிலா அவங்க ஃப்ரெண்ட்டோட பொண்ணு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்குமே இந்த விஷயம் தெரிஞ்சு போச்சு, அது இல்லைன்னு ஆனதும் அவங்களுக்கு வெட்கமாகிடுச்சு, நிதிலாவை மறுத்த என்னைத் திட்டுறதுக்கு அவங்களுக்கு அவகாசம் கிடைக்கலை, அதுக்கு முன்னாடி நான் உன்னை நோக்கிக் கையைக் காட்டிட்டேன், எம்மேல இருந்த அத்தனைக் கோபமும் உம்மேல பாய்ஞ்சிடுச்சு.”

“புரியுது தேவ், கொஞ்சம் நிதானமா நிலைமையை ஹான்டில் பண்ணியிருக்கலாம், அதுக்கு அவங்க கோபம் இடம் குடுக்கலை, ஆனா உங்க மனசு மாறினதுக்கு என்னைக் கோபிச்சது எந்த வகையில நியாயம்?” அவள் சொல்லி முடிக்கவும் அவளை இறுக்கமாக அணைத்தவன்,

“அப்பதான் ஒரு பொண்ணை வேணாம்னு ஒதுக்கியிருக்கேன், நான் இருந்த மனநிலைக்குப் பொண்ணுங்க பக்கமே திரும்பிப் பார்த்திருக்கக் கூடாது, ஆனா என்னை அவ்வளவு சீக்கிரமா இன்னொரு கல்யாணத்துக்கு முடிவெடுக்க வெச்சது யாருடீ?” என்றான் சரசமாக.

“யாரு நானா?”

“வேற யாரு? டுபாய்ல இருக்கும் வரைக்கும் இந்தப் பொண்ணை எப்பிடி அந்த விக்ரம் கூட சேர்த்து வெக்கலாங்கிற எண்ணந்தான் வந்திச்சு, ஆனா அதுக்கப்புறம்…”

“அப்புறம் என்னாச்சு?”

“என்னடி ஆச்சு எனக்கு? எனக்கு என்னாச்சுன்னு உனக்குத் தெரியாது?” என்றவன் அதன்பிறகு முழுதாக இந்திராவின் கணவனாக மாறிப் போனான். இரவின் குளுமையும் இதமான மனநிலையும் அவர்களுக்குத் தாலாட்டுப் பாடின. தேவனின் அம்மா, அப்பா என்ற மனநிலை மாறி அத்தை, மாமா என்கிற சிந்தனைக்கு மாறியிருந்தாள் இந்திரா.

காலம் கடந்துபோன விஷயங்களை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொடுத்திருந்தது. குடும்பம் என்ற அழகான அமைப்பு விட்டுக்கொடுக்கச் சொல்லிக் கொடுத்தது. கணவனின் இறுகிய அணைப்பு உனக்கு எப்போதும் நானிருக்கிறேன் என்ற உறுதியைக் கொடுக்க சுகமாகக் கண்மூடினாள் பெண்.

மனைவி என்ற மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன் அவளையும் புதிதாக முளைத்திருந்த உயிரையும் தன் உயிரெனக் காப்பவன் போல அரவணைத்துக் கொண்டான். இரவு, நிலவோடு இதமாக நகர்ந்து கொண்டிருந்தது.

முற்றும்.

forum 7 கருத்துகள் உள்ளன

  1. அருமையாக இருந்தது…எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ந்தியை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுவது மாதிரி மிக மிக அருமையான கதை..வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்