அத்தியாயம் 19
அத்தியாயம் 19
தேவனுக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. எதற்காக இந்தப் பெண் இப்போது இப்படி நடந்து கொள்கிறாள்?! ஆஃபீஸிலிருந்து சீக்கிரமாக வீடு செல்வதென்றால் தனக்கொரு தகவல் தர முடியாதா? இங்கே போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போவதற்கென்ன?!
“இந்திரா…” வீட்டிற்குள் நுழைந்ததும் இவன் குரல் ஓங்கி ஒலித்தது. அவளைப் பார்க்காமல் முடியாது என்பது போல மனது கிடந்து தவித்தது.
“இந்திரா!” மீண்டும் அவன் குரல். கிச்சனில் அவள் கைப்பையைப் பார்த்த பிறகுதான் அவன் மூச்சு சீரானது. அப்படியென்றால் இங்கேதான் இருக்கிறாள். அவசரமாக வீட்டின் பின்புற கார்டனுக்கு வந்தான். இவனுக்கு முதுகு காட்டியபடி அங்கிருந்த மரம் ஒன்றில் சாய்ந்திருந்தாள். ஓவியம் போல நின்றிருந்தவளைப் பார்த்த போது இதுவரை மனதில் கரைபுரண்டு ஓடிய கோபம் காணாமலேயே போனது.
“இங்க என்னடா பண்ணுறே?” இப்போதும் அவனை நோக்கி ஸ்லோ மோஷனில்தான் திரும்பியது பெண்.
“தேவ்…”
“என்னம்மா?”
“ஏன் ரீஷ்மாவை வேணாம்னு சொன்னீங்க?” அந்தக் கேள்வியில் காணாமல் போயிருந்த அவன் கோபம் கைக்கெட்டும் தூரத்திற்கு வந்திருந்தது. ஆனாலும் அமைதிகாத்தான்.
“அதெல்லாம் இருக்கட்டும், இதென்ன புது பழக்கம்? சொல்லாம கொள்ளாம இங்க வந்து தனியா நிற்கிறது?”
“என்னால முடியலை தேவ், நைட் நிம்மதியா தூங்க முடியலை, அந்தப் பொண்ணு முகந்தான் கண்ணுக்குள்ள வருது, நீங்க தப்புப் பண்ணிட்டீங்கன்னு தோணுது, நிதிலா உங்களுக்கான பொண்ணில்லை, ஆனா ரீஷ்மா சரியா இருந்திருப்பாங்க.”
“மனசுன்னு ஒன்னு இருக்கு இந்திரா, அது சொல்லணும், இந்த ரீஷ்மாதான் உனக்கான பொண்ணுன்னு, ஆனா அது இந்திராவைப் பார்த்துத்தான் அப்பிடிச் சொல்லிச்சு, நான் என்ன பண்ணட்டும்?”
“ச்சூ…” அவள் உச்சுக் கொட்டினாள். முகத்தில் அதிருப்தியைக் காட்டினாள். இவை எல்லாவற்றையும் பார்த்தபோது தேவனுக்குச் சிரிப்பு வந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டுத் தன் சரசத்தைக் கூட சட்டை செய்யாத பெண் அவனுக்கு விந்தையாக இருந்தாள். இவளைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
“இப்ப என்னடா உன்னோட பிரச்சினை?”
“ரீஷ்மா உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பாங்க.”
“சரி, அப்ப அவளையும் கல்யாணம் பண்ணிக்கிறேன், உங்கூட ஒருநாள், அவகூட ஒருநாள், செம ஜாலியா இருக்கும்.”
“விளையாடாதீங்க தேவ், அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா இன்னைக்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்குமா? உங்கம்மாக்கு ரீஷ்மாவை ரொம்பப் புடிக்குது, எவ்வளவு சந்தோஷமா கல்யாணம் பண்ணி புள்ளை, குட்டின்னு வாழ்ந்திருக்கலாம்.” பூனைக்குட்டி இப்போதுதான் வெளியே வந்தது. ஆக மொத்தம் ரீஷ்மா தரப்பு வக்கீலாக இவள் களமிறங்கியிருப்பதன் நோக்கம் இதுதானா?
“புள்ளை, குட்டின்னு வாழ்றதுக்கு ஏற்பாடு பண்ணு, அப்ப எங்கம்மாக்கு அந்தப் பொண்ணைப் புடிக்கிற மாதிரி உன்னையும் புடிக்கும்.” என்றவன் அவன் இடை அணைத்து முத்தம் வைத்தான். சரியாக அவன் அலைபேசி அப்போது சிணுங்கியது.
“சொல்லுங்கப்பா.” பரதன்தான் அழைத்திருந்தார்.
“மருமகள் எங்கப்பா?”
“இங்கதான் இருக்காப்பா, ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, இப்போ வீட்டுக்கு வந்திருவோம்.”
“சரிப்பா, லேட் பண்ணாம வந்திருங்க.”
“என்னாச்சு தேவ்?” கணவன் அழைப்பைத் துண்டிக்க இவள் கேட்டாள்.
“நீ என்ன வேலை பார்த்து வெச்சிருக்கே இந்திரா, உன்னைக் காணல்லைன்னதும் நான் சூர்யாக்கு கால் பண்ணி அங்க இருக்கியான்னு கேட்டேன், அப்பாவைக் கூப்பிட்டுக் கேட்டேன், அதான் இப்ப எல்லாரும் எனக்கு ஃபோனைப் போட்டுக் கேட்கிறாங்க.”
“ஓ…” அது ஒரு விஷயமே இல்லை என்பது போல மாடிக்குப் போனவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். உள்ளே நீர் விழும் சத்தம் கேட்டது. குளிக்கிறாள். இவ்வளவு நேரமும் சும்மா நின்றுவிட்டு இப்போது இவன் பேச ஆரம்பிக்கும் போது அவனைத் தவிர்க்கிறாள். தேவனுக்கு இந்த நொடி மனைவியைச் சமாளிப்பபது பெரும் சவாலாக இருந்தது.
அவள் கேட்ட கேள்வியே அவன் மனதுக்குள் இப்போது ஓடியது. ரீஷ்மாவை ஏன் உனக்குப் பிடிக்கவில்லை?! அந்தக் கேள்விக்கு அவனுக்கே விடை தெரியாத போது எங்கிருந்து அவளுக்குப் பதில் சொல்வது? முதலில் ரீஷ்மா மனதில் இப்படியொரு எண்ணம் இருந்ததே அவனுக்குத் தெரியாது. ஒன்றாக வளர்ந்தவர்கள். தேவராஜ் மாமாவுடனான உறவு நெடுநாளையது. சகோதரி போல பழகிய பெண்மேல் அவனுக்குக் காதல் வரவில்லை.
நிதிலாவுடனான கல்யாணப் பேச்சு ஆரம்பித்த பிறகுதான் ஒருநாள் தேவராஜ், பரதனிடம் நாசூக்காக இதைச் சொல்லியிருக்கிறார். அப்போதும் தேவன் அதைப் பெரிதுபடுத்தவில்லை. அது அவர்களது மனதிலிருந்த ஆசை என்று விட்டுவிட்டான். ஆனால் இப்போது கதை வேறாகப் போகிறது. மனைவி சொல்வதைப் பார்த்தால் இது மாமாவின் ஆசை அல்ல. மகள் மனதிலிருக்கும் காதல்!
குளியலறையிலிருந்து வெளியே வந்தவள் கிச்சனில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். உண்மையைச் சொன்னால் தேவனுக்கு மனைவியிடம் பேசுவதற்குப் பயமாக இருந்தது. தான் எதையாவது பேசப்போக மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடக் கூடாது. மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
ரீஷ்மாவை என்ன காரணத்தினாலோ அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. தன்னைவிட அந்தப் பெண் எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று இந்திரா நினைக்கிறாள். அவள் நினைப்பு நியாயமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தச் சிறந்த பெண்ணை தேவனுக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்?!
“இந்திரா, வீட்டுக்குப் போகலாமா?” தேநீர் தயாரிக்க ஆரம்பித்தவளைப் பின்னிருந்து அணைத்தவன் அவள் இடது கன்னத்தில் முத்தம் வைத்தான். சட்டென்று அவனை விலக்கியவள் அவனிடமிருந்து அவசரமாக விலகினாள்.
“என்னப் பண்ணுறீங்க தேவ்?!”
“என்னாச்சுடா?!” அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ணுறீங்க?” அவள் காட்டிய கோபம் அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“ஏன்? இப்ப இதெல்லாம் பண்ணினா என்னத் தப்பு?”
“இதெல்வாம் அந்தப் பொண்ணு அனுபவிக்க வேண்டியது.”
“எந்தப் பொண்ணு?” அவன் சுருதி ஏறியது. மனைவியின் சிந்தனைப் போக்கு தவறென்று மனது சொன்னது. அதை ஆரம்பத்திலேயே திருத்த வேண்டும் என்று தோன்றியது. பதில் சொல்லாத மனைவி அவன் கோபத்தை இன்னும் அதிககப்படுத்தினாள்.
“எந்தப் பொண்ணுன்னு கேட்டேன் இந்திரா? உன்னோட முட்டாள்தனமான எண்ணங்களுக்கெல்லாம் என்னால மரியாதைக் குடுக்க முடியாது.”
“எது முட்டாள்தனமான எண்ணம்?”
“இப்ப நீ பண்ணுறதுக்குப் பெயர்தான் முட்டாள்தனம், அந்தப் பொண்ணை உனக்குப் புடிச்சுதுன்னா அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கல்யாணம் பண்ணி வை, அதை விட்டுட்டு எனக்கு எதுக்கிப்போ நீ பொண்ணு பார்க்கிறே?”
“இப்ப முட்டாள்தனமா பேசுறது நீங்கதான், உங்களுக்கு யாரு இப்போ பொண்ணு பார்த்தா?”
“நீ இப்போ அதான் பண்ணுறே?”
“அதுக்கு வேற ஆள் பாருங்க, உங்களுக்கு ஏன் அந்தப் பெண்ணைப் புடிக்கலைன்னு கேட்டேன்! அப்பிடி அவகிட்ட இல்லாத எது எங்கிட்ட இருக்குன்னு எம் பின்னாடி வந்தீங்கன்னு கேட்டேன்.”
“ஓ… உம் பின்னாடி நான் வந்துதான் உனக்கு இப்போ தொக்கா போச்சா? எங்கம்மா எது பேசினாலும் என்னைத்தான் தண்டிப்பே, எவளுக்கோ என்னைப் புடிச்சாலும் அதுக்கும் எங்கிட்டத்தான் வந்து பாயுவே, உனக்கு இதுவே தொழிலா போச்சா?”
“ஏன்? உங்கம்மா பண்ணினது தப்பு இல்லையா? அதுக்காக உங்களை நான் கோபிக்கக் கூடாதா?”
“அவங்க பண்ணின தப்புக்காக அவங்களுக்கு நான் எவ்வளவு பெரிய தண்டனைக் குடுத்தேன்னு உனக்கே நல்லா தெரியும், இப்பிடி ஒவ்வொரு காரணத்துக்காகவும் எங்கூட நீ சண்டைப் போடுறதுதான் சரியில்லைன்னு சொல்றேன்.”
“உங்கக்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்டப் போய் சொல்லச் சொல்றீங்க? வந்ததும் வராததுமா ரீஷ்மாவை உட்கார வெச்சு அவ்வளவு அருமையா பேசுறாங்க, அந்தப் பொண்ணை அவங்களுக்கு அவ்வளவு புடிச்சிருக்கு, அந்தப் பொண்ணுக்கும் உங்களை ரொம்பப் புடிச்சிருக்கு, பேசாம அவளையே கட்டியிருந்தா இந்நேரம் குடும்பத்துல நிம்மதி வந்திருக்குமில்லை? எதுக்குத் தேவையில்லாம ஆளுக்கொரு பக்கமா உட்கார்ந்திருக்கணும்? அதைக் கேட்டா உங்களுக்குக் கோபம் வருமா? என்னோட எண்ணம் முட்டாள்தனமா உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு நீங்க மரியாதை குடுக்க மாட்டீங்களா? அப்ப அந்த விக்ரமுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?”
“ச்சே!” ஒட்டுமொத்த வெறுப்பையும் தன் முகத்தில் காட்டியவன் அந்த நொடி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். இந்திராவுக்கு கண்களில் நீர் திரண்டது. இது என்ன மாதிரியான அணுகுமுறை? ஒன்று சண்டைப் பிடிக்க வேண்டும், அல்லது சமாதானம் செய்ய வேண்டும். இரண்டும் இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்துவிட்டுப் போவது எப்படி நியாயம்?!
“சூர்யா…” அடுத்த நொடி சூர்யாவுக்கு அழைப்புப் பறந்தது.
“சொல்லுக்கா.” அக்காவின் மனதை நன்கு அறிந்திருந்த தம்பி இந்த அழைப்பை எதிர்பார்த்திருந்தான். அதுவும் அவளது கண்ணீர் குரல் என்ன நடந்திருக்கும் என்று தம்பிக்கு விளக்கமாகச் சொன்னது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஒரு எரிமலையை எதிர்கொள்ளும் அமைதியோடு பேச ஆரம்பித்தான்.
“உங்கண்ணாக்கு எதுக்குடா இவ்வளவு கோபம் வருது?”
“நீ முதல்ல என்ன நடந்துச்சுன்னு எனக்குச் சொல்லு, அண்ணாக்கே கோபம் வருதுன்னா அப்போ கண்டிப்பா நீ தப்புப் பண்ணியிருக்கேன்னு அர்த்தம்.”
“உங்கண்ணா அத்தனை நல்லவரோ? அவரு பண்ணியிருக்கிற காரியம் என்னன்னு உனக்குத் தெரியுமா?”
“அப்பிடியென்ன தப்பாப் பண்ணிட்டாரு? வர்றவங்க போறவங்க எல்லாரையும் கட்டிக்க அவரென்ன தசரத மகாராஜாவா? மனசுக்குப் புடிச்சவளைக் கட்டிக்கிட்டாரு, அது ஒரு குத்தமா சிம்ரன்?”
“டேய் விளையாடாதே! உனக்கெப்பிடி இதெல்லாம் தெரியும்?”
“நீ என்ன ஏழரையை இழுத்து வெச்சாலும் அது முதல்ல தெரியுறது எனக்குத்தான், அண்ணாக்கும் எனக்குமான உறவு அப்பிடி சிம்ரன்.” தம்பி மீண்டும் கேலி பேசவும் இவளது கோபம் இலேசாக மட்டுப்பட்டது. ஓரிரு கணங்கள் இளையவனும் அமைதிகாத்தான்.
“அக்கா, நீ பண்ணுறது சரியான்னு ஒரு கணம் யோசிச்சுப் பாரு, உம்மேல ஆயிரம் பேர் ஆசைப்படலாம், அவங்களையெல்லாம் உன்னால கட்டிக்க முடியுமா? அப்பிடீன்னா அந்த விக்ரமை நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கலை? உம் மனசுக்குப் புடிக்கலை.”
“என்னோட மனசுக்குப் புடிக்காம போனதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு சூர்யா, ஆனா இங்கதான் அப்பிடி எதுவுமில்லையே!”
“எதுவுமில்லைன்னு நீதான் சொல்றே, அண்ணா சொல்லலையே?”
“ரீஷ்மாவை ஒரு தடவை நீ மீட் பண்ணணும் சூர்யா, அதுக்கப்புறம் நான் சொல்றது கரெக்ட்னு நீயே ஒத்துக்குவே.”
“கண்டிப்பா அவங்களை நான் மீட் பண்ணுறேன், ஆனா அவங்களைப் பார்க்காமலேயே நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன், எங்கக்கா எப்பவும் தப்பா கணக்குப் போட மாட்டா, ஆனா அண்ணாக்குப் புடிக்கணுமே, அதை ஏன் நீ புரிஞ்சுக்கு மாட்டேங்கிறே!”
“இவருக்கு ஏன் புடிக்காதாம்?”
“புடிக்குது, புடிக்கலை… இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாதுக்கா, புடிச்சிருக்குன்னா புடிச்சிருக்கு, புடிக்கலைன்னா புடிக்கலை, அவ்வளவுதான், அதுக்கு மேல நம்மளால எதையும் நோண்ட முடியாது.”
“நீயும் ஏன்டா அவருக்கே சப்போர்ட் பண்ணுறே?” அவள் குரலில் தெரிந்த ஆதங்கத்தில் தம்பி சிரித்தான்.
“சரி, உனக்கு சப்போர்ட் பண்ணுறேன், இப்ப என்ன பண்ணுறதா உத்தேசம்? ரீஷ்மாவை அண்ணாக்குக் கல்யாணம் பண்ணி வெக்கப் போறியா?”
“அது முடியாதுதான், ஆனா… அப்பிடி நடந்திருந்தா அவரு இவ்வளவு கஷ்டப்பட வேணாமில்லை?”
“அப்பிடி உங்காளு என்ன கஷ்டப்பட்டுட்டாருன்னு நீ இவ்வளவு வருத்தப்படுறே?”
“அந்த வீட்டுல நான் ஒரு பக்கம், அவங்க அம்மா ஒரு பக்கம், ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு.”
“ஏதாவது சண்டையாக்கா? அந்தம்மா ஏதாவது தப்பா பேசினாங்களா?”
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா, ஆனாலும் ஒரே வீட்டுல ஆளுக்கொரு திசையா இருந்தா நல்லாவா இருக்கு? இதுவே அந்தப் பொண்ணுன்னா அந்தம்மாக்கு அவ்வளவு புடிக்குது, எல்லாம் ஸ்மூத்தா போயிருக்குமில்லை?”
“நல்லாத்தான் இருந்திருக்கும், ஆனா என்னப் பண்ணுறது? மிஸ்டர் தேவனுக்கு இந்த அரை லூசைத்தானே புடிச்சிருக்கு, அப்போ அவர் கொஞ்சம் மல்லுக்கட்டத்தானே வேணும்?”
“அடப்போடா!”
“அக்கா… கொஞ்சம் யோசிச்சு நட, எல்லா விஷயத்துலயும் நிதானமா இருக்கிற நீ ஏன் அண்ணா விஷயத்துல மட்டும் இப்பிடி உணர்ச்சி வசப்படுறே? திடீர் திடீர்னு முடிவெடுக்கிறே?”
“அந்த மனுஷன் சந்தோஷமா இருக்கணும் சூர்யா.”
“அவர் உங்கூட இருந்தா மட்டுந்தான் சந்தோஷமா இருப்பாரு, அதை நீ முதல்ல புரிஞ்சுக்கோ, அவர் சந்தோஷமா இருக்கணும்னு யோசிச்சு அவர்கூட இப்போ நீ சண்டைதான் போட்டுக்கிட்டு இருக்கே, அது உனக்குப் புரியுதா?”
“…” தம்பி சொல்வது உண்மைதானோ? தேவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? அவரோடு மல்லுக்கு நிற்கிறேன். இது என்ன முட்டாள்தனம்?!
“அக்கா, லைன்ல இருக்கியா?”
“ம்…”
“முதல்ல அந்த மனுஷனை நீ ஒழுங்கா பார்த்துக்கோ, நைட்டுக்கு என்ன டின்னர் பண்ணப்போறே? ஏதாவது பண்ணுற ஐடியா இருக்கா, இல்லை அந்த காய்ஞ்ச பீட்ஸாவை ஆர்டர் பண்ணப் போறியா?”
“ம்ஹூம், தேவ்க்கு புட்டு புடிக்கும், கூடவே மட்டன் குழம்பு வெச்சா ரொம்பப் புடிக்கும், அதைப் பண்ணப்போறேன்.”
“அப்பிடிப்போடு! இந்திராவா கொக்கா?! எங்கக்கா யாரு? சும்மா பத்து நிமிஷத்துல ஜமாய்ச்சுடுவால்லை?!”
“டேய்! ரொம்ப ஓட்டாதே!” அக்கா, தம்பி இருவருமே இப்போது கலகலவென சிரித்தபடி பேச்சை முடித்துக் கொண்டார்கள். அக்கா முழுமூச்சாக சமையலில் இறங்கிவிட தம்பி தங்கள் வீட்டு மாப்பிள்ளையை அழைத்தான். அப்போது நேரம் இரவு ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தது.
“நீ எதுக்குடா இப்போ கூப்பிடுறே? உங்கக்காவோட நான் மாரடிக்கிறது பத்தாதா? நீ வேறயா?”
“ஹா… ஹா…” சூர்யாவின் சிரிப்பில் அந்த இடமே அதிர்ந்தது.
“எதுக்கு பாஸ் இவ்வளவு கோபப்படுறீங்க? எங்கக்கா எவ்வளவு கூலா உங்களுக்குப் புட்டும் மட்டன் குழம்பும் பண்ணுறா, ஜாலியா போய் அதை என்ஜாய் பண்ணாம எங்க உட்கார்ந்திருக்கீங்க?”
“டேய் சூர்யா, இவளுக்கு லூசாடா?”
“நீங்க சந்தோஷமா இருக்கணுமாம், அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க கஷ்டப்படுறீங்களாம்.”
“நான் எப்படா அவகிட்ட அப்பிடிச் சொன்னேன்?”
“அதெல்லாம் நீங்க சொல்ல வேணாம், அவளாவே நினைச்சுப்பா, வருத்தப்பட்டுக்குவா, முதல்ல உங்கம்மாவை அவகூட சமாதானம் பண்ணுற வழியைப் பாருங்கண்ணா, இன்னைக்கு ரீஷ்மா, நாளைக்கு யாரு வருவாங்களோ தெரியாது, உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பொண்ணுங்க லிஸ்ட் வேற பெருசா இருக்கா, நிலைமை கொஞ்சம் மோசம்தான்.”
“நீயும் என்னைக் கேலி பண்ணுற பார்த்தியா?”
“ஐயோண்ணா! நான் நிஜமாத்தான் சொல்றேன், முன்னாடி நிதிலா, இப்போ ரீஷ்மா, இப்பிடி ஒவ்வொரு ஆளா உங்களால சமாளிக்க முடியாது, பேசாம உங்கம்மா கால்ல விழுந்தாவது அவங்களைச் சமாதானம் பண்ணுங்க, இல்லைன்னா இவ டிசைன் டிசைனா ஆரம்பிப்பா.”
“அதுவும் சரிதான்.”
“அப்புறம் இன்னொரு விஷயம், இப்போ வீட்டுக்குப் போகும்போது கொஞ்சம் கெத்தா போங்க, எம் பொண்டாட்டி எனக்கு ஆசையா டின்னர் பண்ணிட்டான்னு வழிஞ்சுடாதீங்க.”
“அடி வாங்கப் போறே, வைடா ஃபோனை!” சூர்யாவின் அட்டகாசமான சிரிப்பு இவனையுப் தொற்றிக் கொண்டது. அந்த ப்ளாக் ஆடியை ஸ்டார்ட் செய்தவன் வீட்டின் முன்பாகக் கொண்டு நிறுத்தினான். வீட்டைத் திறக்கும் போதே மட்டன் குழம்பு வாசம் மூக்கைத் துளைத்தது.
“தேவ், சாப்பாடு ரெடியா இருக்கு.” எதுவும் நடவாதது போல மனைவி அவனை அழைத்தாள். பதில் சொல்லாமல் குளியலறைக்குள் போனவன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
“சாப்பிடலாம் வாங்க.”
“எனக்குப் பசிக்கலை.” அலட்சியமான பதில். கட்டிலில் கால்நீட்டி சாய்ந்து கொண்டான். இதுவரை சமையலறையில் நின்றிருந்தவள் இப்போது படுக்கை அறைக்கு வந்தாள். வலது முன்கையால் முகத்தை மறைத்தபடி படுத்திருந்தான் தேவன்.
“பசிக்கலைன்னா? வெளியே ஏதாவது சாப்பிட்டீங்களா?”
“…” எத்தப் பதிலும் இல்லை. அமைதியாகவே படுத்திருந்தான்.
“தேவ், உங்களைத்தான் கேட்கிறேன், எனக்குப் பசிக்குது, வாங்க சாப்பிடலாம்.”
“உனக்குப் பசிச்சா நீதான் சாப்பிடணும், என்னை எதுக்குக் கூப்பிடுறே? நான் எக்கேடுகெட்டா உனக்கென்ன? நீ போய் நல்லா கொட்டிக்கோ.”
“இதென்ன? பேச்செல்லாம் புதுசா இருக்கு?”
“ஏன்? உம் பேச்சு மட்டும் வெல்லக்கட்டி மாதிரி எங்களுக்கு இனிச்சுதுன்னு நினைப்போ? சும்மா போடி!”
“இங்கப்பாருங்க, மெனக்கெட்டு உங்களுக்காக சமைச்சு வெச்சிருக்கேன், நீங்க இப்போ எந்திருச்சு வரலைன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும்.”
“ஓ! கோபம் வந்தா என்னப் பண்ணுவே? இல்லை என்னடீ பண்ணுவே?” கட்டிலைவிட்டு அவன் ஆவேசமாக எழும்பவும் ஓரடி பயந்துபோய் பின்னே நகர்ந்தவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. திரும்ப எத்தனித்தவளை அவன் கரங்கள் எட்டிப் பிடித்தன. அதற்கு மேலும் நடிக்க அவனால் முடியவில்லை.
“விடுங்க தேவ்…”
“உன்னை விட்டுட்டு எங்க போகச் சொல்றே? அந்த ரீஷ்மாக்கிட்டயா?”
“எங்க வேணும்னாலும் போங்க, என்னை இப்போ விடுங்க!” கோபத்தில் அவள் குரல் உயர அவன் பலமாகச் சிரித்தான். அவன் கைகள் என்றைக்கும் இல்லாத வண்ணம் இன்றைக்கு வரம்பு மீறின.
“உனக்குப் பசிக்குது, சாப்பிடலாம்னு கூப்பிட்டே இல்லை? இப்போ எனக்குப் பசிக்குது இந்திரா…” ஆனால் அவன் பசி வேறாக இருந்தது. பெண்ணுக்கும் மறுக்கத் தோன்றவில்லை. மயங்கத்தான் தெரிந்திருந்தது. சில பல நிமிடத்துளிகள் சில்லறைப் போல சீக்கிரமாகச் செலவழிந்தன.
கலைந்து கிடந்தவளின் ஆடைகளைச் சீர் பண்ணியவன் அவளை அலாக்காகத் தூக்கிக்கொண்டு கீழேயிருந்த சமையலறைக்கு வந்தான். இப்போது வயிறு பசித்தது. மட்டன் குழம்பின் வாசனை நாக்கில் எச்சிலை ஊற வைத்தது. ஒரு ப்ளேட்டில் இருவருக்குமாகப் பரிமாறியவன் அவளுக்கும் ஊட்டிவிட்டுத் தானும் உண்டான். சரியாக அப்போது அவன் அலைபேசி அழைத்தது. தாரிணிதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்கம்மா.”
“தேவா, எங்க இருக்கே? இவ்வளவு நேரமாச்சு, இன்னும் நீ வீட்டுக்கு வரலையே?”
“வீட்டுக்கு நான் மட்டுந்தான் வரலையாம்மா? ஏன்? இந்திராவுந்தான் வரலை, எம் பொண்டாட்டியைப் பத்தி, உங்க மருமகளைப் பத்திக் கவலைப்பட மாட்டீங்களா? என்னைப்பத்தி மட்டுந்தான் விசாரிப்பீங்களா?”
“தேவ்!” இது இந்திரா. கணவன் இப்படிச் சட்டென்று அவன் தாயிடம் பேசுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மெல்லிய குரலில் அவனை அதட்டினாள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவனில்லை.
“ஏம்மா மௌனமா இருக்கீங்க? இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறீங்க? நீங்க இப்பிடி இருக்கிறதால எங்க வாழ்க்கையில எவ்வளவு பிரச்சினைகள் வருதுன்னு உங்களால புரிஞ்சுக்க முடியுதா? உங்களுக்குப் புடிக்காத பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அதை நான் மறுக்கலை, ஆனா ஏன் உங்களுக்கு இந்திராவைப் புடிக்கலை? எனக்கு ஒரு காரணம் சொல்லுங்க, இந்திராவை நீங்க மறுக்கிறதுக்கான ஒரு காரணத்தைச் சொல்லுங்கம்மா.”
“தேவா, நீ இப்போ வீட்டுக்கு வா.” அதற்கு மேல் தாரிணி எதுவும் பேசவில்லை.
“என்னை மட்டும் வரச்சொல்றீங்களா? இல்லை…”
“நீ வேற, நீ கட்டிக்கிட்டவ வேறயா? ரெண்டு பேரும் ஒன்னுன்னுதான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.” என்றவர் பட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். தேவன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். உதட்டின் ஓரம் உணவுத் துகள் ஒட்டியிருக்க இவனையே ஆச்சரியமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தாரிணி பேசியது அவள் காதிலும் விழுந்திருந்தது.
“என்ன பார்வைடீ இது?”
“இல்லை… இப்போ பேசினது உங்கம்மாதானா? இல்லை வேற யாருமா?”
“ம்… எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி, கடுப்பைக் கிளப்பாம ரெடியாகு இந்திரா.” என்றவன் அப்பால் போனான். அம்மா பேசிய வார்த்தைகள் அவனுக்குள் சர்க்கரையாக இறங்கின. நீ வேறு, உன் மனைவி வேறல்ல என்று அம்மாவின் வாயால் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? இந்திராவை அவர்கள் தன் மருமகளாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதா?! அம்மாவின் மனதில் மாற்றம் உண்டாகியிருக்கிறதா? அதை வெளியே காட்டிக்கொள்ளத் தயங்குகிறார்களா?
“இந்திரா… ரெடியா?” அதற்கு மேலும் அங்கே தாமதிக்க தேவன் விரும்பவில்லை. அம்மாவின் மனது படிப்படியாக மாறும் நல்ல தருணத்தில் இந்தப் பிரிவு தேவையில்லை என்று உணர்ந்தவன் அவசரமாக ஆயத்தமானான். அந்த ப்ளாக் ஆடி சற்று நேரத்தில் தாரிணியின் வீடு நோக்கிப் பயணப்பட்டது.






Very nice.
சூ்ர்யா வாழ்க…இப்படி ஒரு தம்பியும் மச்சானும் இருக்கிறவரை இவங்களை பிரிக்கவே முடியாது…