arrow_back
என்ன தவம் செய்தேன்! அத்தியாயம் 10
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 10 / 85

அத்தியாயம் 10

visibility 554
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

தன்  விசாரணையை,  அரம்பித்தார்  கஜேந்திரன்.

“எங்கே  இருந்தீங்க?”  என்றார்  தன்,  வெண்கல  குரலில்.

“ஹா!…” என்று  வந்த  கொட்டாவியை,  வெகுச்   சத்தமாக விட்டு, ஒரு விரலால்,  காதைக்  குடைய  ஆரம்பித்தான்  விஜய்.

‘நீ  என்ன,  என்னைக்  கேள்வி  கேட்பது?’  என்ற  மறைமுக  நக்கலும்,
‘உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை.’ என்ற  ஏளனமும்  விஜய்யின்,  செயலில் இருந்தது.

“எங்கே  இருந்தீங்க? ”  மறுபடியும்  கஜா, கேள்வி  ஆரம்பமானது.

பதில் கிடைக்காமல் அவர் விடப் போவதில்லை என்று புரிந்து விட, சேது, விஜய்க்கு கண்களால் சைகைக் காட்டி, பேசாமல் இருக்கச் சொன்னார்.

சேதுவின்  கெஞ்சலுக்குத் தோளை மட்டும் குலுக்கி விட்டு நின்றான்  விஜய்.
அத்தனை  அலட்சியம்,  தோரணை  அவன் கைகளை முன்  புறம்  கட்டி,  கால்களை, அகல விரித்து நின்ற விதம் காண்பவர் மனதை  நிச்சயம்  கொய்தது.

“ஆபீஸ்ல  இருந்தோம்.”  என்றார்  சேது.

“அதை  எதற்காக  நீங்கக்  கேட்கறீங்க  கஜேந்திரன்?…  இது சுதந்திர  நாடு. யார் எங்கே  வேண்டுமானாலும்  போகலாம்,  வரலாம்  என்று கடைசியாகப்  பார்த்த  போது  சட்டம்  சொன்னது. ஒரு வேளை ஆபீஸ் விட்டு,  இங்கு வருவதற்குள் அது மாறிப் போச்சா!” என்றான் விஜய் வெகு நக்கலாக.

“கேட்டதற்க்கு  பதில்.”  என்று  ஏறக்குறைய  கத்தினார்  கஜா.

“வீட்டில்,  ‘வெட்டியா, வேலை செய்யாம, தின்றுத் தின்று பெருத்து  போன’  உங்களிடம், காலை முதல் நள்ளிரவு வரை ஆயிரம் வேலை  செய்து விட்டு, வந்து ‘அட்டெண்டன்ஸ் அண்ட் ரிப்போர்ட்’ கொடுக்க முடியாது.
அப்பா!… அம்மா, காத்து  இருப்பாங்க.  டைம்  ஆச்சு.  போய்ச் சாப்பிடுங்க. நான்  ரெப்பிரேஷ்  ஆகிட்டு  வரேன்.”  என்றான்  விஜய்.

“சேதுபதி!…   ஆஃபிஸில்  என்ன  வேலை?” என்று  உறுமினார்  கஜா.

“புது ஆர்டர் சீனாவிலிருந்து வந்து இருக்கு. அங்கிருந்து டெலிகேட்ஸ் அடுத்த  வாரம் வராங்க. உங்க தொழிலில் முதலீடு செய்து பிசினஸ் பார்ட்னர்  ஆகும்,  ஆசையும்  இருக்காம்.” என்றார்  சேது.

“அதற்கு  ஏன்  இவ்வளவு  நேரம்?” என்றார்  கஜா.

“வீடியோ கானபெரென்ஸ் பேசினோம். கோடிக் கணக்கில் இன்வெஸ்ட் செய்யப்  போவதால்,  துருவித் துருவி கேள்விக் கேட்டாங்க. டைம்  டிபரன்ஸ்,  ரெண்டு  நாட்டுக்கும் இருக்கே!… வெயிட் செய்ய வேண்டியது  ஆகி  விட்டது.”  என்றார் சேது.

“ஆஃபிஸில் இல்லையே!… செக்யூரிட்டி செக் செய்தாங்களே!….” என்றார் கஜா,  ஊடுருவும்  பார்வையோடு.

“செக்யூரிட்டி அடிக்கடி வந்து போனான். ஒருவேளை, ‘வெற்றி குரூப்ஸ் உளவாளி’ என்று நினைத்தோம். நுங்கம்பாக்கம் கெஸ்ட் ஹௌஸ்க்கு போயிட்டோம்.  ஆடிட்டர்  பாஷ்யம்  சார்  கூட  இருந்தார்.” என்றான் விஜய்.

‘வெற்றி குரூப்ஸ்’ இந்த இரு வார்த்தை, கஜாவிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

கால் மேல் கால் போட்டு, தெனாவட்டாகத் தாடியை,  வருடியவாறு கேள்விக்  கேட்டுக் கொண்டு  இருந்தவர், ‘மகுடிக்கு மயங்கிய  நாகம்’  போல்  சட்டென்று  அடங்கினார்.

காரில்  ரிகர்சல் பார்த்த அதே டயலாக் சேது ஒப்பிக்க, காரில்   விஜய்  குறிப்பிட்ட,  ‘வெற்றி  குரூப்ஸ்’ பற்றி மீண்டும் சேது சொல்ல, அந்த  குழுமத்தின்  பெயரைக்  கேட்டதும்  கஜா  பல மாற்றத்திற்கு ஆளானார்.

“சரி… சரி… போங்க…” என்றவர்,  ‘துண்டைக் காணோம்…
ஹே!.. ஹே! ஹே!..  துணியைக் காணோம்’ என்ற ரேஞ்சுக்கு  ஓடித் தன் அறை கதவைச் சாத்திக் கொண்டார்.

‘வல்லவனுக்கு வல்லவன் இவையகத்தில் உண்டு’ தான் போலும்.

‘கஜேந்திரன்’ என்ற, ‘மதம் பிடித்த யானையை’ அடக்க  விஜய் என்ற  அங்குசத்தோடு,  ‘வெற்றி  குரூப்ஸ்ஸின்  வெற்றிமாறனும், அவர் மகன்  ருத்ரமாறனும்’  யானைப்  பாகர்களாகச்  சேர்ந்து   இருந்தனர்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழிக்கு உதாரணமாய் அவர் செய்தப் பாவம், ‘வெற்றி குரூப்ஸ்சாக’ வளர்ந்து  இருந்தது,  இந்தர்  இண்டஸ்ட்ரீஸ்க்கு போட்டியாக.

‘நீயும் நானுமா?…
கண்ணா!
நீயும் நானுமா?’  என்று  பித்துப்  பிடித்துக்  கஜேந்திரன்,  படாதது  ஒன்றுத் தான்  குறை.
ஏனென்றால்,  வெற்றிமாறன் அவர் மகன்.
ருத்ரமாறன் அவர் பேரன்.
நடுத்தெருவில்,  ‘கர்ப்பிணியாகக் கை  விடப்பட்ட, சிவகாமியின்’ ரத்தம்.

அவர்கள் அந்த தாய்க்கு நடந்த அநீதிக்கு, நியாயம் கேட்கவில்லை. தண்டனை கொடுத்துக் கொண்டு  இருந்தனர் அந்த ஆண் வேங்கைகள்  இருவரும்.

“மன்னனின் கெளரவம்
சதுரங்கம் நடுவிலே!….
மறிக்கின்ற சேனையோ
பிள்ளையின் வடிவிலே!…” என்று கஜாவின் அனைத்து தொழிலுக்கும் போட்டியாக  நின்றது  ‘வெற்றிகுரூப்ஸ்.

வெற்றி மாறனை, ‘சேது போல அப்பிராணி’ என்று  நினைத்துப் பார்ட்டி  ஒன்றில் கஜா வாய் விட்டார்.
வெற்றி என்ன சேதுபதியா?… கனகவிற்காகவும், மரகத்திற்காகவும் பொறுத்துப் போக?…
சட்டென்று  கத்தியைக் கஜாவின் கழுத்தில், வைத்து அழுத்தி விட்டார்.

அவர் மகன், கஜாவின் பேரன், ‘ருத்ராவோ துப்பாக்கியைக் கஜாவின்  நெற்றி பொட்டில்’  வைத்துச்  சேப்டி லாக்  வேறு ரிலீஸ் செய்தான். அந்தக் கண்கொள்ளாக் காட்சி யூடூப்பில், வாட்ஸாப்பில் வைரல்லாய் பரவியது.
பத்து லட்சம் லைக்ஸ் வேறு.

விஜய்யாவது பேச்சோடு  நிறுத்திக் கொண்டான். வெற்றிக்கும், ருத்ராவுக்கும் அப்படி எல்லாம்  எந்தச் சென்டிமென்டும் இல்லை. வெற்றி கொடுத்த  அழுத்தத்தில், அவர்  கழுத்திலிருந்து  ரத்தமே கசிய தொடங்கியது .

அந்த வீடியோவை வைத்து இருவரையும், ‘அட்டெம்ப்ட் மர்டர்’  என்று உள்ளே தள்ள முயன்றால்,  எப்பொழுதோ போதையில் கஜா, ‘முதலமைச்சரை  போட்டுத் தள்ள  வேண்டும்’ என்று  உளறிச்  சபதம் எடுத்த  வீடியோ, இவர் கைக்கு அனுப்பபட்டது.

கஜா  ஒரு  அடி வைத்தால், விஜய் போலவே இவர்கள் ஆயிரம்  அடி முன் இருந்தார்கள். ரவுண்டு கட்டி,  விஜயோடு சேர்ந்து இவரை அடிக்க ஆரம்பித்து இருந்தனர்.

இவர்களின் பின் யார் இருக்கிறார்கள், யார் இவர்களின் முதுகெலும்பு என்று புரியாமல் இன்றளவும் அவர் மண்டை காய்ந்து வருகிறார்.
அது விஜய் என்பதோ, விஜயோடு சேர்ந்து இன்னும் ஒருவர் என்பதோ  அவருக்குத் தெரியவில்லை.

மதுராவை எப்படி, ‘பின் இருந்தே காப்பாற்றுகிறானோ’ அதே போல், வெற்றி குரூப்ஸ் பின்னால் இருப்பவன் விஜய். எங்குமே, அவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயலவில்லை.

“வேணா… வலிக்குது… அழுதுடுவேன்.”  என்று வடிவேலு ரேஞ்சுக்கு  ஆக்கப்பட்டு  இருந்தார்.

இவர்  தான்  பல  எதிரிகளை,  இத்தனை வருடங்களில் சம்பாதித்து இருந்தாரே!
இவரால்  பாதிக்கப் பட்டவர்கள்,  ‘வெற்றி  குரூப்ஸ்’  பின்  நின்றார்கள்.

ரியல் எஸ்டேட், நகை கடை, சிமெண்ட் தொழிற்சாலை, ஹோட்டல், ரெஸ்டாரண்ட், ரிசார்ட்கள் என்று இவரின் ஒவ்வொரு தொழிலும்  அடி   வாங்க  ஆரம்பித்து  இருந்தது.

விஜய் புண்ணியத்தில், ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ் ஆடையாக ஏற்றுமதி’  தொழில்  மட்டும்  தப்பித்து  நன்றாக  போய்க்  கொண்டு  இருந்தது.

கஜா நஷ்டத்தில் விற்கும் தொழில்களை வாங்குவது வெற்றி குரூப்ஸ்.
ஒவ்வொரு முறையும் இவர் தொழிலை அடிமாட்டு விலைக்கு விற்பார். அதை முன் பின் அவர் கேள்விப்படாத ஒரு கம்பெனி வாங்கும். ஆனால், மறுநாளே  அந்தக் கம்பெனியையும்  சேர்த்து, ‘வெற்றி’ வாங்கிவிட்டதாக  நியூஸ்  வரும்.

போலி கம்பெனி  உருவாக்கப் பட்டு, இரவோடு இரவாக அவை லீகல்  ஆக்கப்பட்டு, கஜாவின் தொழிலை வாங்கிய பின், இரு கம்பெனிகளையும்  விழுங்குவது,  வெற்றி  குரூப்ஸ்  என்ற  தொழில்.

அடிமேல்  அடி.
நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்.
கடன் மேல்  கடன்.
பின், ‘பெருமைக்கு எருமை  மேய்த்தால்’  வேறு  என்ன  தான் ஆகும்?

பத்து  இருபது வெளிநாட்டு கார்கள், இருபதிற்கும் குறையாத   வேலைக்காரர்கள்,  ஐந்து  ஆறு  செக்யூரிட்டி,  கார்  ட்ரைவர்கள்,  தினமும்   ஏதாவது  பார்ட்டி,  புது, புது  டிரஸ்  என்று  வரவுக்கு  மேல்,  செலவு  செய்து  கொண்டு  இருந்தால்  கடன்   தான்  ஏற்படும்.
குடும்பத்தில்  ஒருவர், ‘ஊதாரியாக  இருந்தாலே’ விளங்கிடும். இவர்கள் வீட்டில் ஒன்றுக்கு மூன்று பேர் அல்லவா இருந்தார்கள்!

‘குந்தி  தின்றால் குன்றும்  மாலும்’ என்று இவர்களுக்கு யார் சொல்வது?… சொன்னாலும்  கேட்டுக் கொண்டு  தான் மறுவேலை பார்ப்பார்கள்.

அவர் பெரிதும் நம்பி இருப்பது விஜய் நடத்தும், ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ் ஏற்றுமதி ஆடையகத்தை’ தான்.
வெளிநாட்டு இந்திய வம்சாவளி பெரும் பணக்காரர்களுக்கு விலை உயர்ந்த கோட் , சூட், போர்மல்ஸ் ,  டிசைனர் ஷெர்வானி,  குர்தா,  சாரீஸ்  என்று  டிசைன்  செய்து, நெய்து  விருப்பத்திற்கு  ஏற்ப  வார்டுரோப், திருமணங்களுக்கு  ஆர்டர்  செய்து  தருவார்கள்.

கோடிகளில் புரளும் தொழில். விஜய் பொறுப்பு ஏற்ற உடன் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி கொண்டு இருந்தது. விஜய்யால் அவன் திறமையால், ஏற்றுமதி விரிவாக்கம் அடைந்து, லாபம் வருவது என்னமோ  உண்மை தான் என்றாலும், கஜாவின்  மனம்  சில  வருடங்களாகச்  சரியாக  இல்லை.

வரும்  ஆர்டர்  எல்லாம்  கை  நழுவி, ‘வெற்றி  குரூப்ஸ்’ போய்க் கொண்டு இருந்தது. விஜய் இல்லை என்றால், ‘எப்பொழுதோ இதுவும்  கோவிந்தா!… கோவிந்தா!…’ தான்.

சிவகாமியின் குடும்பத்தைப் பற்றி டிடெக்ட்டிவ் மூலம் அவர் அறிந்த   தகவல்,  எதுவும்  அவர்  மனதுக்கு  சந்தோசம்  அளிக்கவில்லை.

இவர் மரகதத்தை மணந்தக் காரணம் காட்டி, சிவகாமி ஏற்கனவே டைவோர்ஸ் பெற்று, வேறு திருமணம் செய்து இருந்தார்.
பின் இவருக்காக, ‘நளாயினி மாதிரி கூடை சுமக்க வேண்டும்’ என்று எதிர்பார்த்தாரோ!
பணத்திற்காக  நடுத்தெருவில்  கை விடப்பட்டவர்  இன்று பல  கோடி வருமானம் வரும், ‘வெற்றி குரூப்ஸ்’முதலாளி.
கஜாவை விடப் பல படி உயரத்தில் மின்னிக் கொண்டு இருந்தார்.

உழைப்பு, நேர்மையில் ராணியின் தோரணையோடு கணவர் ஆதிகேசன், மகன் வெற்றி, ராம், மருமகள் சுசீலா,  பேரன் ருத்ரா, பேத்தி அம்சவேணி  என்று  அனைவரும்  பல் தொழில் வல்லுனர்களாக வெற்றிமேல்  வெற்றி  பெற்று  கொண்டு  இருந்தனர்.
முக்கியமாகக்  கஜாவை  வென்று கொண்டே இருந்தனர்.

இந்தியாவின்  சிறந்த, ‘பெண் தொழில் அதிபர்’  என்ற விருது வேறு.  இந்தியாவில்  மட்டும் அல்ல,  உலக அளவில் பெயர் பெற ஆரம்பித்து  இருந்தார் சிவகாமி.

இன்று மட்டும் அல்ல பத்து பன்னிரெண்டு வருடங்களாகச் சிவகாமியின்  குடும்பத்தை, அவர்  வெற்றிகளைக் கேள்விப்பட  ஆரம்பித்ததிலிருந்து,  அவர் சரியாய்  உறங்கியது  இல்லை.

‘தான்  கை  விட்டவள்  தன்னையே வெல்வதா?’ என்ற வெறி, கோபம், எரிச்சல், அவமானம்.

சிவகாமி ஏதோ ஒரு மூலையில் பிச்சைக்காரியாக  இருந்து  இருந்தால் கூட, மனம் ஆறி இருக்கும்.
இரண்டாம்  மணம்  புரிந்து,  கணவனோடு  சந்தோசமாக வாழ்வதை இவரால்  ஜீரணிக்க  முடியவில்லை.

அதுவும் இந்தியாவின் மிகப் பிரபலமான டாக்டர். மிகுந்த படிப்பாளி. ஆண் அழகன்.
ஜமீன் வம்ச வாரிசு வேறு. பிறப்பிலேயே கோடீஸ்வரன் ஆதிகேசவன்.

எத்தனை  டன்  ஜெலுசில்  குடித்தாலும்,  இந்த  வயிற்று எரிச்சல்,  கஜாவிற்கு  குறையாது  போல்  இருந்தது.
இவர் அவர்களுக்கு எதிராக, எது செய்தாலும், பத்து மடங்காக இவருக்கே  திருப்பி வந்தது.

ஐ.டி ரைட், கார் விபத்து, தொழில்சாலைகளில் தீ, மெஷின் விபத்து எது இவர் நடத்தினாலும்,  அடுத்த  நாள்  அது  இவருக்கு நடக்க ஆரம்பித்தது. அவரின்  எந்தக் குள்ளநரித்  தனமும், குறுக்கு வழியும்  அவர்களிடம்  எடுபடவில்லை .

பிபி,  சுகர்,  ஹைப்பர் டென்ஷன், இதயவலி எல்லாம் படுத்தி எடுத்தது, ‘சிவகாமியை வெற்றி திருமகளாய்’ கண் கொண்டு பார்த்ததில் இருந்து.
சாக்லேட் சாப்பிடுவது போல மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்து இருந்தார். சிவகாமியின் நிமிர்வு, அவரது திருமணம், மகிழ்ச்சியான  வாழ்வு ,  இவருக்கு  மன  நோயினை கொடுத்துவிட்டது.

‘மற்றவர்களுக்கு தீமை நினைத்து விட்டு நமக்கு நல்லது நடக்கவில்லையே!’…’ என்று  பொருமினால்  மட்டும்,   எல்லாம் சரியாகி விடுமா  என்ன?…

‘மனம்  போல்  வாழ்வு’  என்று  இதை  தானே  முன்னோர்கள்  சொல்லி விட்டு  சென்றார்கள்.
‘நாம்  செய்வது  நல்லது’  என்று,  நம் பைத்தியக்கார மனம் நினைக்கலாம். ஆனால், மேலே இருப்பவன் சரியான நீதிபதி ஆயிற்றே!…
அவனுக்கா  தெரியாது  நம்  மன  விகாரங்கள்!
‘ஆட விட்டு வேடிக்கை பார்ப்பவன், சாட்டையை கையில் எடுக்கும்  போது, பலமான அடி விழும் போது’ தான்  மனித மனம் தவறுகளை  உணரும்.
இது  எல்லாம் மனிதர்களுக்கு.

கஜா போன்ற அரக்கர்கள், இதை   உணர்வதும்  இல்லை,  வருந்தித்  திருந்துவதும் இல்லை.

தாங்கள் செய்யும் தவறை உணராதவர், இப்படி தான் மற்றவர்களை நினைத்துப் பொறாமை பட்டே தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.  

இவர்  இப்படி  தான் அறையில்  தவிக்க, சொர்ணா, ‘அடுத்து என்ன  செய்யலாம்’ என்று யோசிக்க, சோனா மறுநாள்  சுமனிடமிருந்து  வரும் நல்ல  செய்திக்காகக் காத்து  இருக்க, இது   எதைப்  பற்றியும்  கவலைபடாமல்,  விஜய்  அறையில்  சேது,  கனகா, மரகதம்  உணவு  அருந்திக்  கொண்டு   இருந்தனர் .

கனகாவை கண்டதும் சேதுவின் முகம்  தானாகக் காதலில்  கனிந்தது. வயது ஏறிய போதும் கூட அவர்களின் காதல் குறையவில்லை. கணவரின் கண்களில் கண்டக் காதலில், கனகா அந்த வயதிலும்  மிக  அழகாக  வெட்கபட்டார்.

கனகா  சட்டென்று  பார்க்க,  ‘நடிகை  சுஹாசினி’  சாயலிலும் சேதுபதி சட்டென்று பார்க்க, ‘நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி’ போலவும் இருந்தனர்.

“வாலிபங்கள் ஓடும் 
வயதாகக் கூடும் 
ஆனாலும், அன்பு மாறாதது.
மாலையிடும் சொந்தம்
முடி போட்ட பந்தம்,
பிரிவென்ற சொல்லை அறியாதது.
அழகான மனைவி!…
அன்பான துணைவி!
அமைந்தாலே பேரின்பமே!...”  என்ற அழகான காவியம் அங்கு உருவாகி இருந்தது.

மரகதம், தன் மாப்பிள்ளையின் கண்களில், தன் மகளுக்கானக் காதலை கண்டு  நிறைவாகப் புன்னகைத்தார். அதைக் கண்டும் காணாமல் பார்த்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த இருந்த விஜய், சட்டென்று வெளியே  வெறிக்க  ஆரம்பித்தான்.

ஏதேதோ நினைவுகள், அவனை அலைக்கழிக்க அவன் தவிக்க ஆரம்பித்தான்.
கண்கள்  தானாகக் கலங்க, வேக மூச்சுக்களை  எடுத்துத் தன்னை  சமாளிக்க முயன்றான். அவன் துடிப்பது, அங்கு  இருந்தவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால், அவர்களால் மட்டும், என்ன செய்து விட முடியும்!…
அவர்கள் இருப்பது புதைகுழி. அவர்களால் முடிந்த அளவு   அவனைச் சேதாரம்  இல்லாமல் காப்பாற்றிக் கொண்டு தான் இருந்தனர்.  ஆனால்,  வலி,  அவன்  மனதிற்குள்  இருப்பதாயிற்றே!

“என்ன!…  இன்னைக்கு  பேஷன்  ஷோ ஹாலில், உங்களுக்காக  நடந்தது  போல  இருக்கே  சேது?”  என்றார்  கனகா,  மகனை மீட்டு  எடுக்கும்  விதமாக.

“ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறிடி என் பொண்டாட்டி?…. ஜோடி சேர்க்கிறது தான் சேர்த்தே ஒரு சமந்தா, நயன்தாரான்னு சேர்க்கறதை விட்டு, அந்த ராட்சசிக் கிட்டே கோர்த்து விடறே?… என்ன பாவம்டீ செஞ்சேன்  உனக்கு?” என்று அலறாதக்   குறையாகக்  கூறினார்   சேது.

“பாரு  கண்ணா!…  உங்க  அப்பாக்கு  சமந்தா,  நயன்தாரா கேக்குதாம். நீ  டிக்கெட்  புக்  பண்ணு,  நான்  எங்கம்மா  வீட்டுக்குக்  கிளம்பறேன்.” என்றார்  கனகா.

“மாம்ஸ்!… நீங்க இருப்பதே உங்க மம்மி வீடு தான். வேணும்னா அப்பாக்கு,  சொர்ணாக்  கூட  திருமணம்   செய்து, அமெரிக்கா அனுப்பிடலாம்.
உங்களுக்கு நான், ‘ஹிருத்திக், மகேஷ் பாபு’ போல பையனைப்  பார்த்துக் கட்டி  வைக்கிறேன்.
டாடி!… எப்போ வைச்சுக்கலாம் திருமணம்?… பொண்ணு  ரெடியோ ரெடியாம்.” என்றான் விஜய் வாய் விட்டுச் சிரித்தவாறு.

அவன் சிரிப்பதை மற்ற மூவரும் பெருமூச்சோடு   பார்த்துக்   கொண்டு  இருந்தனர்.

“நீ இப்படியே சிரித்துட்டு இரு கண்ணா!… நீ கலங்கினால் மனசுக்கு  கஷ்டமா  இருக்கு  கண்ணா.”  என்றார்  மரகதம்.

“அது  ஒன்றும்  இல்லை  பாட்டி…  அதை  விடுங்க…  எத்தனை  தடவை  சொல்லி  இருக்கேன்!…  இப்படி  எனக்காக, நள்ளிரவில் கண் விழிக்க வேண்டாம் என்று.
உடல் என்னாவது?… நாங்கள் திரும்ப முன்ன, பின்ன ஆகலாம். இப்படி  எங்களுக்குகாகச் சாப்பிடாமல், உறங்காமல் இருந்தால் உடல் என்ன  ஆவது?”  தன்னைக் குறித்து அவர்கள் வருந்துவது பிடிக்காமல், பேச்சை  மாற்றி  விட்டான்.

சோனா  தரத் தவறிய அன்பை, மருமகனாய் வந்து மகனாய் மாறி இருந்தவனின் செய்கையில் கண்ட உடன், கண் கலங்கியது அன்னையர்  இருவருக்கும்.

“ஒரு  நாள்  கண்   விழித்தால் ஒன்றும் ஆகி விடாது கண்ணப்பா!… கனகா!…  பிள்ளைக்கு இன்னொரு இட்லி வை.” என்ற மரகதம், சட்டென்று பார்க்க  அந்தக் காலத்து  நடிகை,  ‘சரோஜாதேவி’ போல இருந்தார்.

கையெடுத்து கும்பிட தோன்றும் தெய்வீகம்.
இவரிடமும் ராணிக்கு உண்டான கம்பீரம், கருணை, பாசம், கனிவு இருந்தது.

மொத்தத்தில்  இரு  நல்ல  பெண்மணிகளின்,  வாழ்வைக் கணவனாகி  அழித்து  இருந்தார்  கஜா.

தவம் தொடரும்...

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 11

நால்வரும்  சாப்பிட்டு  முடித்ததும்,  கனகா பாத்திரங்களை வெளியே  வைக்கும்  சாக்கில்,  ‘வெளியே  யாராவது  இருக்கிறார்களா’ என்று  சோதித்து  விட்டுக்  கதவை உள்புறம் பூட்டினர். கொஞ்சம்  கூட வெட்கம், மானம், இல்லாமல் ஒட்டுக் கேட்க என்று நிற்பார்கள்   சோனா,  சொர்ணா,  கஜேந்திரன். ‘இது  என்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்