அத்தியாயம் 11
நால்வரும் சாப்பிட்டு முடித்ததும், கனகா பாத்திரங்களை வெளியே வைக்கும் சாக்கில், ‘வெளியே யாராவது இருக்கிறார்களா’ என்று சோதித்து விட்டுக் கதவை உள்புறம் பூட்டினர்.
கொஞ்சம் கூட வெட்கம், மானம், இல்லாமல் ஒட்டுக் கேட்க என்று நிற்பார்கள் சோனா, சொர்ணா, கஜேந்திரன்.
‘இது என் வீடு. எங்கே வேண்டும் என்றாலும் போவோம், வருவோம்.’ என்று லூசுத்தனமாய் சொல்வார்கள். எதற்கு வம்பு!
அதற்குள் மற்றவர்கள் பால்கனிக்கு சென்று அமர்ந்தனர்.
“சொல்லு கண்ணா!… என்ன ஆச்சு?… என்றும் இல்லாமல் இன்று ஏன் இவ்வளவவு நேரம்?” என்றார் மரகதம்.
நடந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னான் விஜய்.
“சே!… சே!… பெண்ணா அது!… பேய்! … வெளிநாட்டில் சுற்றியதுகள் அங்கேயே கிடக்க வேண்டியது தானே!… இங்கே வந்து எதற்காக, இத்தனை பேர் உயிரை எடுக்குதுங்களோ தெரியலையே!… இவள்களால் என் பூரணி செல்லத்தையும், அல்லவா பிரிந்து தவிக்கிறோம்.
இவள்களும் வாழமாட்டாங்க… மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள். சாக்கடைப் புத்தி. அந்த மதுரா பெண் கிட்டே போய் இப்படி எல்லாம் பேசி வச்சு இருக்கே!… குழந்தை எப்படி துடித்தாளோ!….” என்று பொரிந்தார் மரகதம்.
“கேட்கும் நமக்கே நெஞ்சு பதறுதே!… பாவம் கண்ணா மதுரா!.” என்றார் கனகா.
“அம்மா!… நீங்க நினைக்கிற படி, அவள் கொஞ்ச நேரம் தான் தடுமாறினா. அதற்குப் பிறகு, கண்கொள்ளாக் காட்சி தான். இதோ பாருங்க.” என்றவன் மதுரா, சோனாவை வெளுத்து வாங்கியதை வீடியோ எடுத்து வைத்து இருந்தான்.
அதைப் பார்த்த அன்னையர் இருவரின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
சோனா அண்ட் தோழிகள் கோ, மதுராவை இ.சி.ஆர் பங்களாவில், வார்த்தைகளால் குதறி எடுக்கும் போது, அது எல்லாவற்றையும் பார்த்து கொண்டு, அங்கேயே தான் நின்று இருந்தார்கள் விஜய்யும், சேதுவும்.
“இது முன்பே தெரிந்து இருந்தால், பாயசம் செய்து இருப்பேனே!… அப்பா, என்னா கோபம்!… இது போல போறவங்க, வரவங்க எல்லாம் நாலு சாத்து, சத்தினால் தான் திருந்துங்க.” என்றார் கனகா.
“கனகா!…. இன்னுமா, இவங்க திருந்துவாங்க என்று பகல் கனவு கண்டுட்டு இருக்கே நீ?…. நல்லவளா இரு, வேண்டாம் என்களை. அதற்காக இவ்வளவு நல்லவளா இருந்து, தொலைக்காதே!…. உன் பாசத்திற்கு, தகுதி சோனாவிற்கு இல்லை. அது விஷப்பாம்பு.… இன்னும் கருணா வாழ்வு பாழாய் போகணுமா?” என்றார் மரகதம்.
“கரெக்டா சொன்னீங்க பாட்டி. அவளாவது திருந்தாராவது!… உலகமே அழிஞ்சிடாது?
மதுராவை இங்கே, அங்கேன்னு காலையிலிருந்து அலைகழிச்சி, வார்த்தைகளால் குதறி எடுத்து, சைகலஜிக்கலா அவளைப் பலவீனப்படுத்தி, இரவு பதினோரு மணிக்கு மேல், அவளைத் தன்னந்தனியா பங்களா விட்டுத் தொறத்தி, மதுராவை குழப்பி, சிந்திக்கவே விடாமல் செய்து விட்டு, சுமனை வேறு ஏற்பாடு செய்து இருந்தாள். அந்த xxxx மதுராவை கடத்த வெளியே காத்து இருந்தான்.” என்றான் விஜய், பயங்கரக் கோபத்தோடு.
“என்ன…து!… சுமனா!…” அன்னையர் இருவரும் ஏக காலத்தில் அலறி விட்டனர். .
“அய்யோ!… கண்ணா!… மதுரமா!… மதுராவுக்கு ஒன்றும் இல்லையே! அவனே, தூணுக்குச் சேலை கட்டினால், அதைக் கூட விட்டு வைக்காத ஒண்ணாம் நம்பர் பொறுக்கி. அந்த ஈன பிறவி கையில், மதுரா சிக்கினால் … கடவுளே!..” நெஞ்சில் கை வைத்து அழ ஆரம்பித்தார் கனகா.
“கண்ணப்பா!.. சொல்லு பா…. மதுராவுக்கு ஏதும் ஆகும் முன்… மதுராவை காப்பாத்திட்டே தானே!.. மனசு பதறது… சொல்லுப்பா.” என்றார் மரகதம் கைகள் நடுங்க.
“ஐயோ!… அம்மா!… பாட்டி!.. ரிலாக்ஸ்…. இந்தாங்க தண்ணீர் குடிங்க. நான் இருக்கும் வரை, மதுராவுக்கு ஏதாவது ஆக விடுவேனா?…. உங்க மகன், பேரன், மீது இவ்வளவு தான் உங்க நம்பிக்கையா?… போங்க… மீ ஆங்கிரி பேசமாட்டேன்.” என்று முறுக்கிக் கொண்டான் .
“அது ஒன்றும் இல்லை கண்ணா!…. உன்னை நம்பாம என்று இல்லை. அந்தச் சண்டாளன், பேரைக் கேட்டவுடன், அடிவயிறு கலங்கிப் போச்சு. சொல்லுமா என்ன நடந்தது.” என்றார் மரகதம்.
“முதலிலேயே சொல்லிடறேன். மதுராவுக்கு ஏதும் ஆகவில்லை. பின்னாடி சுமன் வந்ததே தெரியாம அவ பாட்டுக்கு நடந்து போயிட்டே தான் இருந்தா… அந்த அளவுக்கு, அவளைக் குழப்பி விட்டு இருந்தது இந்தப் பிசாசு.
காலையிலிருந்து, சபரியும் எங்கே எல்லாம் மதுராவோடு போறார் ஆல்வினிடம் சொல்லிட்டே தான் இருந்தார். நேரிடையாக எனக்குச் சொன்னால், சோனா எங்கே கண்டுபிடித்து விடப் போகிறாள் என்று இந்த ஏற்பாடு.
என்னைக்கும் இல்லாத திருநாளாய், ‘இவளுக்கு ஏன் கம்பெனி மேல் அக்கறை வருதுன்னு’ சந்தேகம் வந்தவுடனே ஆல்வின், அவன் ஆட்களோடு, மதுராவை தொடர ஆரம்பித்து விட்டான்.
‘எங்க மேல் சந்தேகம் வரக் கூடாதுனு’ நானும் அப்பாவும் மட்டும் மாலை தான் கிளம்பினோம். சுமன் வருவதற்குள் நாங்க அங்க போய்ட்டோம். நானும், அப்பாவும் பங்களாவுக்குள் தான் இருந்தோம்.
வாயா அது!… ஒண்ணாம் நம்பர் கூவம். வந்த ஆத்திரத்துக்கு அவளை அங்கேயே கொன்று விடும் வெறி வந்தது. ஆனால், ‘சுமன் வந்து இருக்கான்னு’ ஆல்வின் வெளியே இருந்து சொன்னவுடன், சோனா வேற மாதிரி, பிளான் போடுறன்னு புரிஞ்சு போச்சு.
அவன் வரும் போதே ட்ரக்ஸ் எடுத்துட்டு தான் வந்து இருப்பான் போல இருக்கு. ஆல்வின் மூலமா மேலும் சரக்கு கொடுத்து அனுப்பினோம்… சோனா கொடுத்து அனுப்புவது போல்… அதில் தூக்க மாத்திரை, மிக்ஸ் செய்து இருந்தோம். சபரியையும் அங்கேயே தான் நிறுத்தி வைத்தோம்.
‘மதுராவுக்கு ஆபத்து’ என்ற உடன், ‘சோனாவை வெட்டியே தீருவேன்’ என்று கிளம்பி விட்டார். அவரைச் சமாளிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது. விட்டு இருந்தால் சோனாவுக்கும், சுமனுக்கும் இன்று இரவே சங்கு ஊதி இருப்பார்.” என்றான் விஜய்.
“விட்டு இருக்க வேண்டியது தானே கண்ணா. எதுக்குபா தடுத்தே!… நாட்டுக்கு நல்லது நடந்து இருக்குமே!…” என்றார் மரகதம்.
“மாசிலாமணி சார் முகத்துக்காகப் பார்க்க வேண்டியதா போச்சு. ஆனா செம சீன். சான்சே இல்லை பாட்டி. அருந்த வாலுன்னு தெரியும். ஆனா இப்படி ருத்ரத் தாண்டவம் ஆடுவானு தெரியாது.” என்றான் விஜய் பெருமையோடு.
“அது உனக்கு விழ வேண்டிய அடி, கண்ணா. ஜஸ்ட்ட்டு மிஸ்ஸு. மவனே!… என்னைக்கு உன்னைப் புரட்டி எடுக்கப் போறாளோ!” என்றார் சேது.
“அம்மா!… பாருங்க அம்மா.” என்றான் விஜய், சிணுங்கலுடன்.
“கண்ணா!… உங்க அப்பா முகத்தை எல்லாம் ரொம்ப நேரம் பார்க்க எல்லாம் முடியாது… அதை விடு… ஆனா, அவர் சொல்வதும் உண்மை தானே!
நியாயமா உனக்கு விழுந்து இருக்க வேண்டிய ஓதை தான். பெரிய தியாகச் செம்மல் சீன் எதுக்குப்பா?… உனக்கு என்ன கார்த்திக், ‘அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயா, கருணாநிதி’ சமாதி பக்கத்துல சிலை வைக்கப் போறானா என்ன!… எதுக்கு உனக்கு நீயே இந்தத் தண்டனை கொடுத்து வேதனை படறே?” என்றார் கனகா.
சற்று நேரம் எதையும் பேசவில்லை விஜய்.
“இப்ப மட்டும் உன் வாய் திறக்கவே, திறக்காதே!… என்னவோ போ கண்ணா. நீ செய்யறது மதுரா விஷயத்தில், பிடிக்கவே இல்லை. தப்பு செய்யரே, என்று தான் சொல்வேன்.” என்றார் கனகா.
“கனகா!… விடு மா. விதி படி தான் எல்லாம் நடக்கும். ‘யாருக்கு யார் என்று இறைவன் போட்ட முடிச்சு’ அது படைத்தவன் விருப்பம் இல்லாமல் மாறாது. நடப்பது நடந்தே தீரும். நீ சொல்லுப்பா. அப்புறம் என்ன நடந்தது.” என்றார் மரகதம்.
“பிறகு என்ன ஆல்வின் ஆட்களைக் கொண்டு மதுராவின் மேல் கைப்படுவதுற்குள் அவனைக் குழியில் விழ வைத்தோம். சபரி அண்ணா அங்கேயே சவாரியில் இருப்பது போல் சொல்லி மதுராவை , வீட்டுக்குப் பத்திரமா அனுப்பி விட்டு, சுமன் கை, கால் உடைத்து, ‘சுந்தர்பன் சதுப்புநில காட்டுக்குப்’ பேக் செய்துட்டோம். ” என்றவன் சுபா வீட்டில், மதுரா தன்னைப் பற்றிக் கூறியதை எல்லாம் சொன்னான்.
அவன் சிரிப்பால், ‘அவன் முகமே ஒளிர்வதையும், மதுராவை பற்றிப் பேசும் போது எல்லாம், அவன் கண்களில் வந்த மின்னல், குரல் குழைந்த விதம், முகத்தில் தெரிந்த உணர்ச்சி’ என்று அனைத்தையும் கவனித்த மூவர், தங்களுக்குள் பார்வையை பறிமாறிக் கொண்டனர். அவர்களையும் அறியாமல் பெருமூச்சு வெளிவந்தது.
“கண்ணா!… நாலு கோடி கொடுத்திடலாம். என் வைர நகைகள் சிலது இருக்கு. எனக்குப் பிறகு பூரணிக்கு, என்று ஒளித்து வைத்து இருந்தேன் அவள் திருமணத்திற்கு என்று. இப்போ மதுரா மானத்தைக் காக்கப் பயன்படட்டும்.
இந்தப் பிசாசுங்க கிட்டே இருந்து, அவளைக் காப்பாற்றுவது தான் கண்ணா முக்கியம் இப்போ. இவங்க கண் முன்னே இருந்தால், அந்தச் சுமனோடு சேர்ந்து மதுராவை அழிக்காமல் விட மாட்டா சோனா.” என்றார் மரகதம்.
“ஆமாம்… கண்ணா!… அம்மா சொல்வது தான் சரி. பணம் கொடுத்து மதுராவை மீட்டு, அவள் வீட்டுக்கே அனுப்பி விடுங்க தம்பி. இந்த நரகம் நம்மோடு போகட்டும்.
நீங்க மாசம் கொடுக்கும் பணம், இவர் கொடுக்கும் பணம், என் பேரில் உள்ள கடை வாடகை பணம் என்று கொஞ்சம் சேர்த்து வைத்து இருக்கேன். எப்படியும் முப்பது, நாற்பது லட்சம் வரும். எடுத்துக்கோங்க.” என்றார் கனகா.
சற்று நேரம் எதையும் பேசாத விஜய், காரில் வரும் போது சேதுவிடம் கூறிய காரணத்தையே மீண்டும் சொன்னவன்,
“அது மட்டும் இல்லை, ‘ரத்தன் சிங்’ பற்றிக் கேள்விப் பட்டு இருக்கீங்க தானே!… ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தை சேர்ந்தவன். ஆள் பலம், பண பலம் உடையவன். அவன் மனைவி இறப்புக்குக் காரணம் கூடச் சுமன் தான்.
அவங்களை கடத்திக் கொண்டுப் போய், ‘இவன் தான் கடத்தினான்’ என்று துளிக் கூடத் தடயம் இல்லாமல், அவங்க சாகக் காரணமாகி விட்டான். அவங்க உயிர் விட்டது கஜாவின், ஒரு பங்களாவில் தானே!
வழக்கமாய் கஜாவின் பங்களா இன்ஸ்பெக்ஷன் செய்வது தான். அப்படி போன போது தான், அங்கு அடைக்கப்பட்டு இருப்பதே தெரிய வந்தது.
நானும் ஆல்வினும் அவங்க உயிரைக் காப்பாற்ற எவ்வளவு போராடினோம் தெரியுமா!… என் கையில் தான் அவங்க உயிர் பிரிந்தது.
‘பெரும் பணக்காரன்’ அவர் மனைவிக்கே, சுமனால் இந்த நிலை என்றால், கார்த்திக்கால், சுமனை தனியாகச் சமாளிக்க முடியுமா?…
நாம் மதுராவிற்காக, எது செய்வதாக இருந்தாலும் நேரிடையாக எதையும் செய்ய முடியாது.
அப்படி செய்ய வேண்டும் என்றால், முழுதாய் சோனா, கஜாவை எதிர்க்க வேண்டி வரும். கஜாவிடம் பணத் தட்டுப்பாடு தான் இருக்கிறதே தவிர, அவர் இன்னும் அடிபட்ட பாம்பு தான்.
சுமன், குறி இப்போ மதுரா தான். அவனுக்குப் பின்னாடி சோனா இருக்கா. சோனாவிற்கு பக்க பலமாய் கஜா இருக்கார்.
இப்போ எது செய்வதாய் இருந்தாலும், நூறு முறை தீர யோசித்து தான், செய்ய முடியும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது.
நான் மதுராவை காப்பது தெரிந்தால், நாலு சுவற்றுக்குள், ‘தவறான தொடர்பு’ என்று சொன்ன சோனா, மீடியா முன் இதையே சொல்லமாட்டாள் என்று என்ன உத்திரவாதம்?” என்றான் விஜய்.
“அது, எது வேண்டும் என்றாலும் செய்து தொலைக்கும். ‘நீதி கேட்கும் கண்ணகி’ போல மீடியா முன்னாடி நாடகம் கூடப் போடும். ஒருத்தி கிட்டே இருந்து சமாளிப்பதே பெரும்பாடாய் இருக்கு. இதில் சுமன் வேறு என்றால்…” என்று தயங்கினார் கனகா.
“ஒரு வருடம் காப்பாற்றவில்லையா!… பார்க்கலாம் அம்மா.” என்றான் விஜய் பெரு மூச்சோடு.
“எவ்வளவு வருடம் தான், உன்னால் காப்பாற்ற முடியும் கருணா!…. ஆயுள் முழுதும், உன்னால் செய்ய முடியுமா என்ன!… கார்த்திக் உடன் திருமணம் நடந்த பிறகு, நீ இப்படி இன்வோல்வ் ஆகி இருப்பது தெரிந்தால், எதற்காக நீ இந்த வேலை செய்கிறாய் என்ற கேள்வி வராதா?
இருபத்தி நான்கு மணி நேரமும், நீயும் ஆல்வினும் உடன் இருக்க முடியுமா என்ன?
‘எந்த உரிமையில், நீ இதைச் செய்கிறாய்’ என்ற கேள்வி தான் எழும். இன்னும் தெளிவாகச் சோனா பாஷையில், சொல்வது என்றால், ‘உனக்கும், மதுராவிற்கும் ஏதோ இருப்பதால தான்’ அவளைக் காப்பாற்றப் போராடுகிறாய்’ என்று முதுகுக்கு பின் பேசுவார்கள் கண்ணா.
இது தான் உண்மை.
நீ யார் என்று எங்களுக்குத் தெரியும். உலகிற்கு தெரியுமா?… புரளி பேசும் ஒவ்வொருத்தரிடம் சென்று இதை எல்லாம் விளக்கித் தான் கூற முடியுமா?
சங்கரனிடம் நான் பேசுகிறேன். உன் முடிவில் மாற்றம் இல்லை என்றால் கார்த்திக் உடன், மதுராவிற்கு திருமணம் முடித்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிட சொல்லலாம்.
அங்குப் போனா மட்டும், ஆபத்து விலகி விடும் என்றும் சொல்லவில்லை. ‘மதுராவிற்கும், உனக்கும்’ என்று கிளம்பும் பேச்சு முடிவுக்கு வரலாம். சுமன் விஷயம் பிறகு பார்க்கலாம்.” என்றார் மரகதம் வேதனையோடு.
மூச்சு முட்டுவது போல தோன்ற பால்கனியில் உலாவ ஆரம்பித்தான் விஜய். தொண்டை அடைத்து, இதயத்தின் மீது ஆயிரம் டன் வெய்ட் ஏறியது போன்று வலி ஏற்பட, மூச்சு விட முடியாமல் திணறினான்.
கைகளைப் பின்னால் கட்டி, கண்கள் மூடி அவன் நின்ற கோலம் மூவரையும் கலங்க வைத்தது.
“தண்ணீர் குடிப்பா…” என்ற கனகா, அவன் குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவன் முதுகைத் தட்டி விட்டார்.
ஜக்கில் இருந்த தண்ணீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.
நெஞ்சில் பற்றி எரியும், தீயை அணைக்க முயன்றானோ!
பெருமூச்சை வெளியிட்டவன், எங்கோ வெறித்தவாறு, “சுமனின் படைபலம், பண பலம் நமக்குத் தெரியும். திருமணம் ஆனவள், ஆகாதவள் என்ற பாகுபாடு எல்லாம் அவனுக்கு இல்லை. ‘ரத்தன் சிங் மனைவி மரணமே’ உதாரணம். கார்த்திக் உடன் உடனே திருமணம் நடந்தால், இன்னும் வெறி ஏறித் தான் போகும்.
இன்று கிடைத்த தோல்விக்கே எப்படி ரியாக்ட் ஆவான் என்று தெரியாது. சங்கரன் வேறு முறுக்கிக் கொண்டு இருக்கிறார். அவரைச் சமாளிக்கணும். உடனேயும் சங்கரன் திருமணத்தை நடத்த ஒப்புக் கொள்ள போவதில்லை.
சோனா தன் லீலை அங்கேயும் நடத்தி இருக்கே!… எதுவுமே உடனே நடக்காது பொறுமையா தான் செய்யணும்.” என்றான் விஜய், யோசனை உடன்.
“சரிப்பா… நானும், ‘அவங்க’ கிட்டே பேசறேன். ஒன்றுக்கு பலர் உதவிக்கு இருந்தால் நல்லது தானே!… நாம் யோசிக்காத வழியில் கூட அவர்கள் யோசிப்பார்கள்.
நீ, எதைப் பற்றியும் நினைத்துக் கவலைபடாதே!…. நடப்பது நடந்தே தீரும். இப்படி கலங்காதே!…. நீ, இப்படி துடிப்பது மட்டும் சோனவுக்கு தெரிந்தால், ஆபத்தாகி விடும் கண்ணா. பொழுது விடியப் போகுது. போய்க் கொஞ்ச நேரமாது தூங்கு.” என்ற மரகதம் கிளம்ப, உடன் கிளம்பினார்கள் சேதுவும், கனகாவும்.
தூக்கம்.
அவன் தூக்கத்தை தொலைத்து பத்து ஆண்டுகள் ஆகிறது.
யாரிடம் சொல்லி ஆறுதல் தேட முடியும்!
“சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்கை என்றால்
தாங்காது பூமி.” என்று அவன் பாடாதக் குறை.
சோனா, சொர்ணா, கஜேந்திரன் போன்ற அரக்கர்களின் நரகத்தில், யாரவது நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா!…
தினம், தினம் முகத்தில் எதையும் காட்டாமல் நடிக்க வேறு வேண்டும்.
‘ரோபோட், முசுடு, இயந்திர மனிதன், உராங்குட்டான், சிடுமூஞ்சி சின்னப்பா, துர்வாசர்.’ என்று அவனுக்கு அலுவலகத்தில் பட்ட பெயர் இருப்பது அவனுக்குத் தெரியும்.
உபயம் மதுராக்ஷி.
அவளுக்கு என்ன தெரிய போகிறது இவன் நரகம்!…
ஒரு காலத்தில், சொர்க்கத்தில் இருந்தவன் அவன்.
‘ஐ ஆம் தி கிங் ஆப் தி வேர்ல்ட்.’ என்று மகிழ்ச்சியில் திளைத்தவன்.
ஆனால் இன்றோ!…
மதுராக்ஷி தேவதை.
அவளைச் சுற்றி நடப்பவை நல்லது மட்டுமே!….
ஆனால், இவன் மனதிற்கு மட்டும் அல்ல, முகத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் சேர்த்து முகமூடி போட்டு நடித்துக் கொண்டு இருந்தான்.
மரகதம், சேது, கனகா, பூரணி முன் மட்டுமே, அவன் மனிதனாய் இருந்தான். அவர்கள் முன் மட்டுமே அவன் உணர்ச்சிகளை, வலி, வேதனைகளைக் காட்டினான்.
மற்றவர்களின் முன் கல்லாய், இயந்திர மனிதனாய் இருக்க வேண்டியது மூச்சு விடுவது போலேயின்றி அமையாதது.
ஆனால், அவன் இரும்பு கவசத்தை, அவன் முகமூடியை, அவன் கோட்டையை, ‘அச்செல்லிஸ் ஹீல்/acheele’s heel’ என்று கிரேக்க மொழியில் பலவீனத்தைக் குறிப்பிடவார்கள்.
‘ஹோமர்’ என்பவர் எழுதிய, ‘illaid’ நாடகத்தில், ‘ட்ரோஜன் ஹார்ஸ் /மரக்குதிரை’ பற்றி வரும். அதில் சொல்லப்படும் பலவீனம்.
ஒரு சாம்ராஜ்யம் அழிவதற்கு காரணமாய் இருந்ததாம்.
அதே போல இருநூறு வருடங்கள் பாடுபட்டு, ஆறாயிரம் கிலோமீட்டர் நீளம் உடைய சீன பெருஞ்சுவர் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்கக் கட்டப்பட்டது. ஆனால், ஒருவனின் பலவீனம், அந்தச் சாம்ராஜ்யம் அழிய காரணமாய் இருந்தது என்பார்கள்.
இந்த இரண்டு பலவீனங்கள் போல, ‘விஜய்யின் பலவீனம் எது’ என்று ஒரு யூகத்தில், சோனா அடிக்க ஆரம்பித்து இருந்தாள்.
அவளின், ‘ரிவென்ஜ் எது’ என்று மதுராவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால், விஜய்யை சுற்றி இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.
சோனாவின் அடிகளைத் தாங்கி, எதுவுமே நடக்காதது போல நடித்து, பதில் அடியை வேறு கொடுக்க வேண்டி இருந்தது. அதுவும் ஒரு வருடமாக.
சோனா எதிர்பார்த்த, ‘ரியாக்ஷன் கிடைக்கவில்லை’ என்றதும் சுமனைத் தூண்டி விட்டு இருந்தாள். அதன் முதல் படி நேற்று இரவு அரங்கேறி இருந்தது. விஜய் விழிப்பாக இருந்ததால், மதுராவை காப்பாற்ற முடிந்தது.
‘கள்வன் பெரியவனா, காப்பாளன் பெரியவனா’ என்ற கண்ணாமூச்சி ஆட்டம், ஆடப்பட்டு கொண்டு இருந்தது.
ஆனால், சோனாவும், சுமனும் அறியாத ஒன்று, விஜய் மட்டும் அல்ல, மதுராவை காக்க பல பேர் உள்ளனர் என்பது.
விஜய் கூட, ‘மதுராவின் பெயர், தன்னால் தவறாக வெளியே பரவிட கூடாது’ என்று தான் அமைதியாக இருக்கிறான் என்பதையோ, தாங்கள் செய்யும் ஈன செயல்களுக்குத் தங்களை கொன்று விடக் கூட தயங்க மாட்டான் என்பதையோ அறியவில்லை.
சோனாவும், எரிமலையைச் சீண்டி விட்டு, அதில் குளிர் காய்ந்து கொண்டு இருந்தாள்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவன், பலருக்கு அழைத்துப் பேசினான்.
சுமனை எங்கு வரை கொண்டு சென்று இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டான்.
தவம் தொடரும்…





