அத்தியாயம் 9
சினிமாவில் வருவது போல அந்தக் கால, ‘ஜெயமாலினி ஆரம்பித்து இந்தக் காலத்து முமைத் கான்’ போல அரைகுறை ஆடையோடு ஆடி கூடப் பார்த்தாள்.
நாலு அறை விட்டவன், “உனக்குப் பேய் பிடிச்சி இருக்கு… உங்க சொர்ணவிடம் சொல்லி, வேப்பிலை அடிக்கச் சொல்லு. இனி என் அறைக்குள் வந்தே அடித்தே கொன்று விடுவேன்.
பெண் என்று கூடப் பார்க்க மாட்டேன். மரியாதை கெட்டு விடும். ஓவர்ரா ஆடினே, ‘ஆசிட் ஒரே முக்கு’ முக்கிடுவேன்.” என்றவன் ஒரு ஸ்கேல் வைத்து அவளை வெளியே தள்ளி விட்டான்.
நான்கு ஆண்டுகளாய், அவன் அறை இரும்புக் கோட்டையாய் என்றுமே திறந்தது இல்லை. வேலைக்குக் கிளம்பும் போது கூடப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டே செல்வான்.
சோனா, ‘காதல்’ என்று கூறி திருமணம் செய்தாலும் உண்மையான, தெய்வீக காதல் எல்லாம் அவன் மேல் இல்லை.
இவள் செய்த அலட்டல் தாளாமல், பார்ட்டி ஒன்றில் விஜய், ‘இவளை எல்லாம் எவன் மணப்பான்? மானம், ரோசம் உள்ள இந்த உண்மையான ஆணும் மணக்க முன் வரமாட்டான்.’ என்று கோபத்தில் சொல்லி விட, அன்றே, ‘மணந்தால் மகாதேவி இல்லை என்றால் மரணதேவி’ என்ற ரேஞ்சுக்கு சபதம் விட்டு, கஜேந்திரன் மூலமாகச் சில பல சூழ்ச்சிகள் செய்து, பணத்தால் அடித்து விஜயை மணந்து இருந்தாள் சோனா.
பணத்தால் அடித்து இருந்தால் கூட, அதை எதிர்த்து நின்று இருப்பான் விஜய். கஜாவும், சோனாவும் அடித்தது, ‘அவன் தங்கை வாழ்க்கையில்’ என்னும் போது, தங்கையைத் தந்தை ஸ்தானத்தில் இருந்து வளர்த்த அந்த அண்ணன், கைகள் கட்டப்பட்டு விட்டது.
சில காரணங்களால் விஜய் வாழ்க்கை வெறுத்து இருந்த சமயம். ஏற்கனவே இறந்து போய், நடைப்பிணமாய் இருந்தவனுக்கு, ‘தங்கை வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டுமே’ என்ற எண்ணத்தில், தன்னைத் தானே பலியிட்டுக் கொண்டான் விஜய் என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணம் நடந்த அரை மணி நேரத்தில், கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி, குப்பைக் குடையில் போட்டு விட்டுச் சுமனோடு, சென்ற ஜென்மம் இவள்.
பழி வாங்குகிறாளாம்.
சொல்லப்போனால் ஒரு விதத்தில் சோனாவின், அந்தச் செயல் விஜய்க்கு பலத் தளைகளிலிருந்து விடுதலை தான்.
சோனாவின் அந்தச் செயலுக்குப் பிறகு தான், அதுவரை மூச்சு முட்டி இருந்தவன் ஒழுங்காய் சுவாசிக்கவே ஆரம்பித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
சோனாவை பொறுத்த வரை, விஜய் அவளின் அடிமை, அவளிடம் உள்ள பொருட்கள் போல விஜய்யும் ஒருவன். வெளியே காட்டி கொள்ள ஒரு, ‘பொம்மை புருஷன்’.
ஆறடி இரண்டு அங்குல உயரத்தில், கிரேக்க சிறப்பமாய், ஆணழகனாய், ‘ஆல்பா மேல்’ இருந்தவனை, அடையும் வெறி மட்டுமே.‘அவனை அடக்கி ஆள வேண்டும்’ என்று தான் அவள் பிளான் போட்டது. பிளான் எல்லாம் நல்லா தான் போட்டா…. ஆனா, ரிசல்ட் தான் அவள் நினைத்திற்கு எதிராக இருந்தது.
தங்கைக்காக வளைந்தவன் வேறு எதற்காகவும், வளையத் தயாராக இல்லை.
இரும்பை நெருப்பால் வளைக்க முடியும், புழுவால் வளைக்க முடியுமா!….
ஒரு வேளை மற்ற ஜால்ராக்களை போல இவனும் குழைந்து இருந்தால், ரெண்டே நாளில் டிவோர்ஸ் செய்து இருப்பாள். அவனின் ஒதுக்கமே, இவளை வெறி ஏற்றிக் கொண்டு இருந்தது.
தோல்வி!… தோல்வி!….
தோல்வியே கண்டு இராதவள் முதன் முறைத் தோற்று இருந்தாள்.
அவன் விலக, விலக அவனை அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று இருந்தது.
‘பிச்சைக்காரன்’ என்று அவள் கேவலமாக நினைக்க, ‘உழைப்பால் அவன் இமய மலை போல’ உயர்ந்து கொண்டே போனான். கஜேந்திரனின் பெயர் மறைந்து, விஜய் பெயர் பரவ அதிர்ந்து போனாள்.
அவள் தாத்தாவே, அவனைக் கண்டு நடுங்க, குரங்கு பிடிக்கத் தான் அவள் நினைத்தது. அவள், ‘சொல் பேச்சு கேட்டு ஆடும் குரங்கு’.
ஆனால், வந்தது என்னவோ பிள்ளையாராக.
ஒரு வேளை, ‘சேதுவின் கனகாவாகச்’ சோனா இருந்திருந்தால், விஜய்யும், சோனாவிற்குக் கணவனாகி இருப்பானோ என்னவோ!… அது என்றுமே நடக்காத காரியம் என்பது வேறு விஷயம்.
கையில் கிடைத்திருப்பது, ‘விலை மதிப்பில்லா வைரம்’ என்பதை அறியாதக் குப்பைப் புத்திக் கொண்டவள், சுமன் போன்ற போலி கல்லின் பின் அலைந்து கொண்டு இருந்தாள்.
சோனா வளர்ந்த விதம், மேல் நாடு வாழ்க்கை முறை, அந்த நாட்டு கலாச்சாரம், குணம், பார்ட்டி, பப், போதை, நண்பர்கள் என்ற பெயரில் துச்சாதனனங்கள், ஜால்ராக் கூட்டம் என்று அவள் வாழ்க்கை தடம் மாறிப் போனது.
சொர்ணாவின் அகங்காரம், சோனாவின் வாழ்வை நாசத்தை நோக்கிக் கொண்டு சென்று இருந்தது.
மானமுள்ள எந்த ஆணும், பெண்ணும் ஏற்றுக் கொள்ள முடியாத வாழ்க்கை முறை அவளுடையது.
‘பிரீடம், பர்சனல் ஸ்பேஸ், என் வாழ்க்கை என் உரிமை’ என்பதெல்லாம் இந்தியாவில், குறிப்பாக தமிழக குடும்பங்களுக்கு ஒத்து வராத கான்செப்ட்.
அவளைச், ‘சுற்றி இருந்த அவள் வயது மேல் தட்டு ஆட்களின் வாழ்க்கை முறையும் அது தான்’ என்னும் போது, இது சரி, இது தவறு என்று அவளுக்குப் புரியவில்லை.
‘தும்மினால் கூட டைவோர்ஸ்’ என்று வாழும் நபர்கள் நிறைந்த, அதிகமான பர்சனல் ஸ்பேஸ், பர்சனல் லிபெர்ட்டி உள்ள நாடு.
‘என்னையா எவனும் கட்ட மாட்டான்… உன்னையே கட்டிக் காட்டுகிறேன்’ என்ற அகம்பாவத்தின் வெளிப்பாடே விஜய் உடன் திருமணம். அது நடந்த பிறகு, சபதத்தில் ஜெயித்த பிறகு விஜய் என்பவன் அவளுக்குத் தேவை இல்லை.
மூச்சு விடுவது எவ்வளவு முக்கியமோ அது போல், ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம். இது தான் எங்கள் உலகம்’ என்று வாழும் ஹை டெக் சமுதாயம்.
குழந்தையைத் தூக்கிச் சென்ற சொர்ணா, ‘தாய் இல்லையா, தாயாக வளர்க்கவில்லையா?’ என்று கேட்டால் அது பேய்.
தன்னிடம் இல்லாத ஒன்று குழந்தை .
அதைத் தனக்கு என்று தூக்கி வந்ததோடு சரி. தன்னிடம் உள்ள பொருட்களில், அந்தக் குழந்தையும் ஒன்று. அதோடு சொர்ணாவின் உறவு முடிந்து விட்டது.
‘தாய்ப்பாசம்’ என்பது எல்லாம் சொர்ணா அறியாத ஒன்று.
‘கிரிமினல்கள் இவ்வாறு தான் விதைக்கபடுகிறார்கள்’….
குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள். எதைப் பார்க்கிறார்களோ, எதைக் கேட்கிறார்களோ, அதையே பிரதிபலிப்பார்கள்.
சோனா எந்த வாழ்க்கை முறையை கண்டாளோ, அதையே பிரதிபலித்தாள்.
‘பிறக்கும் எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பிலே!….’ என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
பெற்றோர் இருந்தும் அனாதையாக, முறையற்ற நாட்டில் வளர்ந்த பெண் வேறு எப்படி இருப்பாள்? வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லாம் சோனாவை போல் மாறுவதில்லை தான் என்றாலும், இவள் மாறும் போது, அங்கே தடுக்க பெற்றோர் இல்லை.
பெற்றோர் இருந்து தடுத்தாலும், சோனா போன்ற ஜென்மங்கள் திருந்துவது இல்லை.
‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று சோனா வாழ்வு தடம் மாறி போனது.
ஒருவேளை சேது, கனகா போல, ‘இது நம்ம பண்பாடு இல்லை, வேண்டாம்மா!…’ என்று கெஞ்சி இருந்தாலோ, அதட்டி, அடித்து இருந்தாலோ கூடச் சோனாவிற்கு, மனம் ஆறி இருக்கும்.
விஜய்யோ, ‘நான் என்ன இங்கு மறுவாழ்வு மையமா வைத்து நடத்துகிறேன் உன்னைத் திருத்த?… உன் வாழ்வு… உன் விருப்பம்.
எனக்கும், உனக்கும் சம்பந்தம் இல்லை என்னும் போது, நீ எப்படி போனால் எனக்கு என்ன?” என்று இருந்தான்.
“நான் உன் மனைவி. உன் மனைவி கண்டவனோடு ஊர் சுற்றுகிறாள் என்று தான் சொல்வார்கள்.” என்றாள் சோனா விடாமல்.
கண்களை அழுந்த மூடித் திறந்தவன், “மனைவி!… என் மனைவி!…. என் மனைவி என்றால்…..” என்று எதையோ சொல்ல வந்தவன், கடைசி நொடியில் அதைச் சொல்லாமல்,
“என் மனைவி என்றால், அது என்றுமே நீயாக முடியாது சோனா!…. அதற்கானத் தகுதி என்று ஒன்று இருக்கிறது சோனா… அது எல்லாம் உனக்குப் புரியவும் புரியாது. நீ… என் மனைவி இல்லை.
திருமண நாள் அன்றே, தாலியை கழற்றி வீசி, சுமனோடு ஒரு வாரம் சென்ற போதே, உனக்கும் எனக்கும் இருந்தக் கணக்கு தீர்ந்து விட்டது.
இதுவரை யாரும் என்னிடம் வந்து உன்னை பற்றிக் கூறியது இல்லை…. அப்படியே வந்து சொன்னாலும், அதைக் கேட்க எனக்கு நேரம் இல்லை. குப்பையான விசயத்திற்கு எல்லாம், என்னால் டைம் ஒத்துக்க முடியாது.
அந்த மடத்தனத்தை செய்யும் ஆள் நான் இல்லை. சும்மா, ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்யலாம் என்று கனவு காணாதே. ‘இளிச்சவாயன்’ வேறு எவனாது கிடைப்பான்…. மூவ் அவுட் ஆப் மை வே.” என்றவன் தோளைக் குலுக்கி விட்டுச் சென்று விட்டான்.
‘அவனை எப்படியுமே நெருங்க முடியாமல், வீழ்த்த முடியாமல், தான் போட்ட அனைத்து பிளான்களும் சொதப்பி விட, நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தவளுக்கு இரு நியூஸ் கிடைத்தது.
உச்சகட்ட அதிர்ச்சி.
அந்த இரண்டில் ஒன்று மூலமாய், அந்த இரும்பு கோட்டையையே தூள் தூளாக்கி, விஜயைக் கதற வைக்க விபரீதமான திட்டங்கள் உருவானது.
அதன் ஒரு கட்டமாய் சித்தப்பாவிடம் அழுது, கதறி, நாடகமாடி, மதுராக்ஷியை குன்னூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து, விஜயின் பி.ஏ ஆக்கியது.
அந்தோ பரிதாபம்!…
சோனாவின் கணக்குப் படி எதுவுமே நடக்கவில்லை.
விஜய் வட துருவமாய் இருந்தால், மதுரா தென் துருவமாய் இருந்தாள்.
இரண்டு பேரும் முட்டிக் கொண்டார்களே ஒழிய, அவள் எதிர்பாத்த ரியாக்ஷன் கிடைக்கவே இல்லை.
“அக்கா!… உங்க முகத்துக்காகப் பார்க்கிறேன். மனுசனா உங்க வீட்டுக்காரர்?…. இப்படி, எதுக்கு எடுத்தாலும் குற்றம் சொல்றார்.” என்று பலமுறை மதுரா, ‘வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டாம்’ என்று கிளம்ப நினைக்க, மதுராவை வேலையில் நிறுத்தி வைப்பதற்குள் சோனாவிற்கு தலைச் சுற்றி விட்டது.
போட்ட திட்டம் தவிடு பொடி ஆகி விட, விஜயயை விட்டு விட்டு மதுராவை டார்கெட் செய்தாள் சோனா.
‘தனக்காகத் துடிக்கவில்லை என்றாலும் மதுராவிற்காக’ அவனிடமிருந்து ரியாக்ஷன் எதிர் பார்த்தாள்.
அதன் முதல் படி இ.சி.ஆர் பங்களாவிற்கு மதுராவை வரவழைத்துத், தோழிகளுடன் சேர்ந்து குதறி எடுத்து, அவளின் யோசிக்கும் திறனைக் குறைத்து, குழப்பி விட்டது.
குழப்பி விட்டு, நள்ளிரவில் தனியாக மதுராவை வெளியேற்றியது. பெண் பித்து பிடித்து அலையும் சுமனிடம் இவளை பற்றிக் கூறி மதுராவை, அடையும் வெறி ஏற்றி இருந்தாள்.
மதுராவின் கொள்ளை அழகு அவனைத் திக்குமுக்காட வைத்தது. போட்டோவைப் பார்த்தே, மூளை கலங்கி போனவன், மதுராவை நேரில் பார்த்துப் பித்தாகிப் போனான்.
எந்த வழியில்லாவது மதுராவை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம், ஒவொவொரு நொடியும் அதிகரித்து அந்த அரக்கனை, மேலும் கொடியவனாக்கி இருந்தது.
மதுராவை சுமனிடம் மாட்டி விட்டு, ‘தன் மேல் எந்தப் பழியும் வரக் கூடாது’ என்று செக்யூரிட்டி கேமராவில் தான் மட்டும், தன் தோழிகளுடன் கிளம்பிச் செல்வதை தேதி, நேரத்தோடு பதிய வைத்தாள்.
யாராவது விசாரித்தால் கூடத், ‘தான் அங்கு இல்லை’ என்ற ஆதாரம் உருவாக்கி இருந்தாள்.
ஆனால், வெளியே இவள் திட்டப் படி சுமன் மயக்க மருந்து உடன் காத்து இருந்தான். காத்து இருந்த நேரத்தில் தான் விஜய் தன் ஆள் மூலம் கொடுத்து அனுப்பி இருந்த தூக்க மருந்து கலந்த ஆல்கஹால், சோனா கொடுத்து அனுப்பியது என்று நினைத்துக், குடித்து விட்டு, மதுராவை பிடிக்க முடியாமல், விஜய் ஆட்களால், கயிறு மூலம் குழியில் விழ வைக்கப்பட்டான்.
விஜய் அவனைப் பந்தாடியதையோ, சுமனின் உயிரைக் காப்பாற்ற ஆல்வினும், சேதுவும் எவ்வளவு போராட வேண்டி இருந்தது என்று சோனாவிற்கு தெரியாது.
ஆல்வின், சுமனின் கைக்கால் உடைத்து, ‘கொல்கத்தா சதுப்பு நில காட்டிற்கு’ பார்சல் செய்தான்.
இது எதுவும் தெரியாத சோனா, ‘மதுரா அந்நேரம் சுமனிடம் மாட்டிச், சின்னாபின்னமாகி இருப்பாள்’ என்று வானத்தில், உயர பறந்து கொண்டு இருந்தாள்.
இவ்வளவு பாவகரமான செயலை, ஒரு பெண்ணாய் இருந்து இன்னொரு பெண்ணுக்குச் செய்து விட்டு, ‘எதுவுமே நடக்காதது போல அரை குறை ஆடையுடன், விஜய்யை கவர போஸ்’ கொடுப்பது, சோனா என்ற அரக்கியால் மட்டுமே முடிய கூடியது.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!