அத்தியாயம் 12
மதுராவை காக்க பலரிடம் பேசிய விஜய், கடைசியாகத் தன் நண்பன் ஆல்வினை அழைத்தான்.
“என்னடா இப்போ பிரச்சனை?” என்றான் அவன் தூக்க கலக்கத்தோடு.
“ஏன்டா!… பிரச்சனை என்று ஒன்று இருந்தால் தான், உன்னிடம் பேச வேண்டுமா என்ன!… என் நண்பனிடம் பேச என்று அழைத்து இருக்கக் கூடாதா?” என்றான் விஜய்.
“யப்பா!…. டேய்!… உனக்கு, நட்பு அருவியா கொட்றதுக்கு நேரம் காலம் இல்லையா!…. தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி, நட்பு பயிர் வளர்க்கிறானாம். அதுவும் விடியற்காலை நான்கு மணிக்கு. வாயில ஏதாவது வந்திர போது டா.
ஏன்டா, எருமை நைட் பன்னிரண்டு வரை, உன் கூடத் தானேடா இருந்தேன்!… அப்போ பேசித் தொலைக்க வேண்டியது தானே!… கேணையன் எவனாவது இருப்பான், அவன் கிட்டே உன் நட்புப் பயிரை வளரு.
டேய்!… நீ சோனா கிட்டே இருந்து டைவோர்ஸ் வாங்கறீயோ இல்லையோ, எனக்கு என் பொண்டாட்டி கிட்டே இருந்து நிச்சயம் வாங்கிக் கொடுத்துட்டு தாண்டா நீ அடங்கப் போறே. ஒழுங்கா கூப்பிட்டக் காரணத்தைச் சொல்லு.” என்றான் ஆல்வின், கடுப்போடு.
“பாட்டி, சில வைர நகைகள் இருக்குன்னு சொல்றாங்க. அதை விற்றாவது மதுராவை மீட்க சொல்றாங்க. சங்கரனிடம் அவரே பேசிக் கார்திக்கோடு திருமணத்தை முடிக்கிறேன் என்று சொல்றாங்க.
பணம் கொடுப்பது நாம் தான் என்று சோனா, கஜா அறியாமல் கொடுத்து மதுராவை மீட்க முடியுமா?… சங்கரன்னை வேற சமாளிக்கனும்.” என்றான் விஜய், யோசனையாக.
“ஏன்டா!…. ஒரு வருஷமா, ‘மதுராவை அவ வீட்டுக்குப் பேக் செய்யுன்னு’ தலை பாடா அடிச்சிகிட்டேனே, என் பேச்சைக் கேட்டியா நீ?…. இப்போ சோனா, எல்லா பக்கமும் ஆப்பு வைச்ச பிறகு, ‘இன்ஸ்டன்ட் சொலுஷன்’ கேட்டா நான் என்னடா செய்ய முடியும்?
இவ, இந்தப் பிளான் போடுவதற்கு முன்பே, மதுராவை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பி இருந்தாலாவது, அந்த ஆளைச் சரி கட்டிக் கார்த்திக்கோடு திருமணம் முடித்து இருக்கலாம். திருமணம் ஆன பெண் என்று சோனாவும் விலகி இருப்பா. சுமனையும் இழுத்து விட்டு இருக்க மாட்டா.
சுமன் வந்த பிறகு, ‘மதுராவிற்கு திருமணம் ஆனாலும் ஒன்று தான், திருமணம் ஆகவில்லை என்றாலும் ஒன்று’ தான். நீ எல்லாம் பட்டுக் கூடத் திருந்தலைன்னா நான் என்னடா செய்ய முடியும்?” என்றான் ஆல்வின்.
“அடேய்!… எத்தனை தடவை தான் ஒருத்தியை விரட்ட என்னால் முடியும்?…. ஒரு வருசமாய் அதைத் தானடா செய்கிறேன்!…
அவ ஒரு லூசு.
அவளைப் பெத்த அவ அப்பா ஒரு லூசு. ரெண்டு லூசுகளும் சேர்ந்து, என்னை லூசாக்கிட்டு இருக்குதுங்க.
பாசத்தை பொழியரங்களாம்.
தேய்ந்து போன ரெகார்ட் மாதிரி, சரியான சப்பாணி கமல் மாதிரி, ‘சந்தைக்குப் போனும் ஆத்தா வையும் காசு கொடு’ போல, ‘அப்பா அனுப்பினார். வேலைக்கு வரேன்’ என்பவளிடம் என்னத்தை சொல்லச் சொல்கிறாய் நீ?
இது, ‘பாழுங்கிணறு, விழாதே’ என்றால், ‘அப்பா தள்ளி விட்டால் விழுந்தே ஆவேன்’ என்பவளிடம், எதைச் சொன்னால் தான் புரிய போகிறது?
‘மதுராவை இங்கே, இந்தப் பங்களாவில் தங்க வைத்தே ஆவேன்’ என்று சோனா பேயாட்டம் ஆடினாளே, ‘திரும்பி வரவே மாட்டேன்’ என்றதும் தானேடா அடங்கினா….
மதுரா பாதுகாப்பிற்காகத் தானடா பாலாஜியையும், சுபாவையும் அங்குத் தங்க வைத்து இருக்கிறேன்.
இதற்கு மேல் என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்?…
‘போடீன்னு இத்தனை பேர் கழுத்தைப் பிடித்துத் தள்ளாதக் குறையாகக்’ கெஞ்சினோம்.
இனி இவளே போகணும் என்று நினைத்தாலும், போக முடியாத படி பெரிய ஆப்பு அடிச்சு இருக்கே அந்தப் பிசாசு.
சோனா அடிச்ச வேப்பில்லையில், ‘எதற்கு இத்தனை பேர் மாற்றி மாற்றி போகச் சொன்னோம்’ என்று இனியாவது யோசிக்கட்டும்.
‘பட்டுத் தான் திருந்துவேன்னு அடம் பிடிச்சா’ நான் மட்டும் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறே?” என்றான் விஜய், கோபமாக.
“சரி டென்ஷன் ஆகாதே!… பார்த்துக்கலாம். இப்போ நெஸ்ட் என்ன செய்யனும் சொல்லு. ஓகே… ஓகே புரியுது… கத்தாதே. சொல்லு.” என்றான் ஆல்வின்.
“எனக்கு அந்தச் சுமன் பற்றி முழு டீடைல் வேண்டும். நீ யார் கையைப் பிடிப்பியோ, காலைப் பிடிப்பியோ, யார் உயிரை எடுப்பியோ எனக்குக் கவலை இல்லை.
இவனை மாதிரி தப்பு மட்டுமே செய்பவன் நிச்சயம் எங்காவது ஒரு க்ளூ விட்டு இருப்பான்.
நாளைக்குள் எனக்கு எல்லா தகவலும் வேண்டும். அது பொய், புரளி, கட்டுக்கதையாக இருந்தாலும் விடாதே!” என்றான் விஜய்.
“மிஸ்டர் ரத்தன் சிங் நியாபகம் இருக்கா?… அவரும் இவனைப் பற்றி என்னிடம் தான் விசாரிக்கச் சொன்னார்.” என்றான் ஆல்வின்.
“ஓ!… அப்போ, அவன் தான் இவர் மனைவி மரணத்திற்கு காரணம் என்று ரத்தனுக்கு தெரியுமா?… ரொம்ப அமைதியா இருக்கானே என்று உண்மை தெரியாது என்று நினைத்தேன்.” என்றான் விஜய் யோசனையாக.
“ஊருக்கே தெரிந்த ரகசியம், ‘சுமன் தான் காரணம்’ என்று, அவனுக்குத் தெரியாதா என்ன!…
இவனிடம் சாட்சி மட்டும் தான் இல்லை. சாட்சியே இல்லாமல் காய் நகர்த்துவதில் சுமன் கில்லாடி ஆயிற்றே!…
நாம அவன் மனைவியைக் கண்டுப் பிடித்ததது கூடத் தற்செயல் தானே!” என்றான் ஆல்வின்.
“சட்டம், போலீஸ், கோர்ட் என்று அலைய போகிறானா என்ன?… காலேஜ் டைம்மில் பயங்கர டெரர்ரா இருந்தானே!… எவனா இருந்தாலும் தப்பு என்றால், தூக்கிப் போட்டு மிதிப்பானேடா!….
‘இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் கொடுப்பான்’ என்று பார்த்த இவ்வளவு பொறுமையா இருக்கான்.” என்றான் விஜய் சந்தேகமாக.
“தெரியலை கருணா. அவன் ஆர்டர் கொடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை…. அவன் கண் அசைத்தாலே போதும்… அதை செய்து முடிக்க அவனுக்கு ஆட்கள் உண்டு தான்.
இவன் பெயர் கூட வெளியே வராது. பம்பாய் நிழல் உலக தாதா தேஜ் தெரியும் தானே!… அவரும் அவரைப் போல டெல்லி, சென்னையில் ரெண்டு பேர் இருக்காங்க.
இவங்க மூன்று பேரும், ரத்தனை வந்து சந்தித்து போய் இருகாங்க. எந்த உதவி என்றாலும் செய்வதாகக் கூறி… உதவினா புரியுது தானே!… ஆனா, இவன் தான், ‘இப்போ ஏதும் வேண்டாம்’ என்று சொல்லி இருக்கான்.
மதுரா விஷயம், அவன் காதில் போட்டு வைக்கிறேன் கருணா. ஏதாவது உதவி தேவைபட்டால் கண்டிப்பா செய்வான்.” என்றான் ஆல்வின்.
“சரிடா .. அவனிடம் சொல்லி வை. இப்போ சுபா தாயாய் இருக்கா. இப்போ அவளால் பழைய படி, மதுராவை காக்க முடியும்ன்னு நெனைக்கிறியா?… அந்த வீடு, மதுராவின் பாதுகாப்பிற்கு போதுமா?” என்றான் விஜய்.
“உன் ஆபீஸ் கீதா, நந்தன் நம்ம ஆளுக தான். அவங்களை அந்த வீட்டு மாடிக்குக் குடித்தனம் வர வைச்சுடலாம். மதுரா சுபா, பாலாஜியுடன் கீழே இருக்கட்டும். மதுராவுக்கும் இவங்க நண்பர்கள் தான்.
சோ, பிரச்சனை ஏதும் வராது. வெளியே எங்காவது சென்றால் கூட இவங்க கூடப் போகச் சொல்லிடலாம். ஆபீஸ் வந்து விட்டால் நாம் இருக்கோம்.” என்றான் ஆல்வின்.
“ருத்ராவிடமும் இப்போ தான் பேசினேன். ரகு, அவன் கம்பெனில தானே பெங்களூரு வேலை பார்க்கிறான். அதைச் சென்னைக்கு மாற்றச் சொல்லிட்டேன். அவனிடம் நானும் பேசிட்டேன். இன்றுக்குள் சென்னை வந்து விடுவான்.” என்றான் விஜய்.
“கார்த்திக் கூட ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பிட்டான். அவனுக்குத் தகவல் சொல்லிட்டேன். வேறு கம்பெனியைக் கூட உருவாக்கிக் கொடுத்துடலாம் அவனுக்கு.
கார்த்திக் ரொம்ப நல்லவன் கருணா. மதுரா மேல் உயிரையே வைத்து இருக்கான். எல்லா வகையிலும் அவளுக்கு ஏற்றவன் கார்த்திக்.” என்றான் ஆல்வின் பெரு மூச்சு விட்ட படி.
“எதற்கு எல்லாரும் மாற்றி மாற்றி இந்த டயலாக் விடறீங்க என்று தெரியுது. இதற்கு எல்லாம் நான் கலங்க மாட்டேன். நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்.
என் மனம் மாறாது ஆல்வின். ஆழம் பார்க்க அவசியம் இல்லை. மதுராவிற்கு, கார்திக்கோடு திருமணம் நிச்சயம் நடக்கும். யார் தடுத்தாலும் அதை நடத்தியே காட்டுவேன்.” என்றான் விஜய் திட்டவட்டமாக.
“மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வூ நிலைக்கும் என்று
கடவுள் நினைப்பதுண்டு
பாவம் மனிதன் என்று.”
மனிதன் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால், அங்குக் கடவுளுக்கே வேலை இல்லையே!
“யார் யார்க்கு எது வென்று
விதி போடும் பாதை,
போனாலும் வந்தாலும்
அது தான்.”
அவன் வாழ்வே அதற்கு உதாரணமாக இருக்கும் போது, இவன் போடும் திட்டத்தைப் பார்த்து விதி கைக்கொட்டி சிரித்து கொண்டு இருந்தது.
“கருணா!… இது தேவை இல்லாத வேலை என்று தான் சொல்வேன். மதுரா வாழ்கை முடிவு செய்ய நீ யார்?…. இது அவளா தெளிவாக இருக்கும் போது, எடுக்க வேண்டிய முடிவு.
எவனோ ஒரு பொறுக்கிக்கு, பிசாசுக்குப் பயந்து எடுக்கற மாதிரி இருக்கு. இன்னும் கூட உன் மனச மாத்திக்க நேரம் இருக்கு.” என்றான் ஆல்வின்.
“ஆல்வின்!” என்று உச்சஸ்தாயில் கத்தினான் விஜய்.
“மதுராவிற்கு கார்திக்கோடு திருமணம் நடக்கும். சோனா, சுமன், கஜா யார் வந்தாலும், எதிர்க்க நான் தயார். அவ திருமணம் நடக்கும் போது, எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது. அதற்குள் இது எல்லாத்துக்கும் முடிவுக் கட்ட வேண்டும். யார் உயிர் இதற்காகப் போவது என்றாலும் சரி தான்.” என்றான் விஜய், எக்கு போன்ற குரலில்.
இப்படி தனக்காக விஜய்யோடு சேர்ந்து பலர் தன்னைக் காக்க முயன்று கொண்டு இருப்பதை அறியாதவளாய், தூக்க மாத்திரையின் உதவியோடு நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் மதுராக்ஷி.
அன்று ஞாயிற்று கிழமை என்பதால், தூக்கம், சோம்பல் சேர்ந்து கொள்ள மீண்டும் உறங்க முயன்றாள் மதுரா.
விட்டு இருந்தால், அன்று முழுவதும் உறங்கியே கழிக்கும் அளவு உடம்போடு, மனமும் சோர்ந்து போய் இருந்தது.
அப்படி மற்றவர்களை நிம்மதியாக உறங்கக் கூட விட்டால், அது சோனா இல்லையே!
விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டது சோனாவிற்கு.
பல நாள் திட்டம் பலித்து விட்ட மகிழ்ச்சி. பின்னே எவ்வளவு பிளான் செய்து நள்ளிரவில், சுமனிடம் மதுராவை மாட்டி விட்டு இருந்தாள்.
சுமனின் கைகளில் சிக்கிய பெண்களின் கதி அவளுக்கு நன்றாகத் தெரியுமே!
மதுராவின் நிலைக் கண்டு, விஜய் துடிப்பதைக் காணப் போகும் பேராவல்.
தரையில் கால் பதியாமல், மிதந்து கொண்டு இருந்தாள்.
இவள், ‘எதற்காக இப்படி குதிக்கிறாள்’ என்று தெரிந்த மற்றவர்கள், இவளைக் கொன்று விடும் வெறியோடு, ‘அந்த நல்ல காரியத்தை யாராவது செய்து விட மாட்டார்களா’ என்று ஏங்கவே ஆரம்பித்து விட்டனர்.
எழுந்த ஆத்திரத்தை அடக்க, விஜய்யோடு மற்றவர்களும் போராட வேண்டி இருந்தது.
“ஏய் செண்பா!… எங்கேடி இருக்கே?. கூப்பிட்டுட்டே இருக்கேன்… ஆடி அசைஞ்சு வரே… சீக்கிரம் வாடி.” என்றவள் சமையல் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.
“கூப்பிட்டா அடுத்த செகண்ட் ஓடி வரணும். இந்தத் திமிர் எல்லாம் என்னிடம் வேண்டாம். மார்னிங் டிபனுக்கு மூன்று ஸ்வீட் செய். இன்னைக்கு வடை, பாயசம் லஞ்ச் க்ராண்டா இருக்கனும். புரிஞ்சுதா?… கெட் லாஸ்ட்.” என்றாள் சோனா.
கண்டும் காணாதது போல் இருந்த விஜய்யின் ரத்தம் கொதித்தது. சோனா எதற்கு, அந்த அளவுக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறாள் என்பதன் காரணத்தை அறிந்தவன் ஆயிற்றே!…
அவன் தோளில் எச்சரிக்கையாய் பதிந்தது சேதுவின் கரம்.
கனகா, மரகதம் கண்களிலும் எச்சரிக்கையைக் காணத் தன்னை முயன்று கட்டுபடுத்திக் கொண்டவன், பின் இருந்த தோட்டத்தின் பக்கம் சென்றான்.
பிடித்து இருந்த மூச்சினை வெளியிட்டான். கோபத்தில் முகமே சிவந்து, விஜய் நிலை அச்சுறுத்துவதாகத் தான் இருந்தது.
“செண்பா!… நில்லு. இந்தப் பிசாசிற்கு செய்யும் சாப்பாட்டில், பத்து பாட்டில் விஷம் கலக்கிடு. செத்து தொலையட்டும்.” என்றார் மரகதம்.
‘பத்து பாட்டில் போதுமா!… அதுக்கே உடம்பு பூரா விஷம். நாம கலக்குற விஷம், ஆலகால விஷத்தை என்ன செய்ய முடியும்?’ மனதிற்குள் புலம்பினார் செண்பா.
சந்தோசம்!…
அந்த சந்தோசத்துடன் சுமனை அழைத்துக் கொண்டே இருந்தாள் மூன்று மணி நேரமாக. அவன் வாய் வழியே நடந்ததைக் கேட்டு விட்டால், தானே நிம்மதி.
அவன் எடுக்கவில்லை.
அழைப்பை எடுக்கும் நிலையில் தான், அவனை விஜய் விட்டு வைக்கவில்லையே!
சுமன் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், அடுத்ததாக மதுராவிற்கே அழைக்க ஆரம்பித்து விட்டாள் சோனா. மதுராவிற்கு அழைத்து கொண்டு, சோனா தோட்டத்தின் பக்கம் வந்து சேர, அங்கு நின்றிருந்த விஜய், சேதுவை கவனிக்கத் தவறினாள்.
“எங்கே போய் தொலைந்தான் இந்த சுமன்!… காலையில் ஒரு நல்ல செய்தியைக் கேட்கலாம் என்று நினைத்தால்… ச்சே!… சனியன், இந்த மதுராவது, போன் எடுக்கறாளா?…..” என்று பைத்தியம் பிடித்தது போல் சோனா கத்த, செடி மறைவில் இருந்த விஜய், சேது திகைத்தார்கள்.
பொறுக்க முடியாதவள் மதுராவிற்கே, அழைத்து விட்டாள். இந்தப் பிசாசு, மதுராவிற்கே போன் செய்யும் என்று விஜய் கூட யோசித்து இருக்கவில்லை.
‘யோசித்து இருந்தான்’ என்றால் சுபா மூலமாக மதுராவின் போனினை மறைத்து இருப்பான். விதி, தன் விளையாட்டை ஆரம்பித்து இருந்தது.
ஆறு முழு அழைப்புகளுக்குப் பிறகும் மதுரா எடுக்கவில்லை. அவள் தான் தூக்க மாத்திரை கொடுத்த மயக்கம் தெளியாமல், தூங்கிக் கொண்டு இருக்கிறாளே!
விஜய், யார் கண்ணிலும் படாமல், தன் அறைக்கு சென்று, தன் மொபைல் மூலம் பாலாஜிக்கு தகவல் கொடுப்பதற்குள், அவன் கை மீறி எல்லாம், போய் இருந்தது.
‘தீமையிலும் நன்மையாக’ மதுராவிற்கு எல்லாம் தெரிய வருவதற்கு, சோனாவே, அந்த அழைப்பு மூலம் அச்சாரம் போட ஆரம்பித்து இருந்தாள்.
‘எது எல்லாம் மதுராவிற்கு தெரியக் கூடாது’ என்று விஜய், எண்ணினானோ, ‘அது எல்லாம் தெரிய வரும் நேரம்’ நெருங்கிக் கொண்டு இருக்க, சோனாவின் அழைப்பு, மதுராவை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
தவம் தொடரும்…





