அத்தியாயம் 14
“இல்லை… இல்லடீ… அவர் எப்பவுமே என் கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழுவாரில்லே!… அதான்… உன் கிட்டேயே பல முறை சொல்லி இருக்கேன்னேடீ!….” என்றாள் மதுரா, இறங்கிப் போன குரலில்.
‘உன் மேல் எரிஞ்சி விழ வேண்டும் என்று எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா மது!… எனக்கு வேறு வழியே இல்லையேடீ!…. உன்னிடம், நான் சிறு புன்னகை வெளிப்படுத்தினாலும் கூட, அதை அந்தச் சனியனுக்கு சொல்ல அலுவலகத்தில் ஆள் இருக்கே!….
அன்பாய் உன்னிடம் பேச வேண்டிய நான், உன்னைக் கடித்து குதறி விட்டு, உன்னை விட அதிகமாய், உன் முகம் போகும் போக்கைப் பார்த்துத் துடித்துக் கொண்டு இருந்தது நான் தானேடீ!….’ என்று தன் அறையில் எண்ணிய விஜய், தன் கைகளில் முகம் புதைத்துக் கொண்டான்.
“எரிஞ்சு, எரிஞ்சு விழ கருணா, எரிநட்சத்திரம் பாரு. எருமை மாடே!… ‘ஆழம் தெரியாம காலை விடறே!…’ என்று எத்தனைத் தடவை தலைப்பாடாய் அடிச்சிட்டோம்.
‘வேற வேலை வாங்கித் தரேன்னு’ கெஞ்சாதக் குறையாய் கேட்டார். இத்தனை பேர் சொன்னால், ‘ஏதாவது காரணம் இருக்கும்’ என்று உன் மர மண்டைக்கு புரியலை என்றால், அவரை ஏன் குறை சொல்கிறாய்.
உன் அக்காக்காரி, ஏதாவது செய்தால், ‘அது மற்றவருக்கு ஆபத்தாய் தானே’ முடியும்!….. உங்க அப்பா, அம்மா வாழ்கையில் கும்மி அடிச்சு இருக்காளே!….
அதன் பிறகும் இங்கே தான் வேலை செய்வேன், பாச பயிரை, மxxx வளர்ப்பேன், ‘அவ உலக, மகா, மெகா உத்தமி என்று கண்ணை மூடிப் பாழும் கிணற்றில் விழுவேன்’ என்று லூசு மாதிரி சொல்லிட்டே இருந்தால், உன்னை என்ன அவர் மடியில் வைத்துக் கொஞ்சுவாரா?
இவளும் இவ அப்பாவும் சேர்ந்து தான், ‘அபியும் நானும் பார்ட் 2 உருவாக்கறாங்க. போடி… வாயில் ஏதாவது வந்துட போகுது.” என்றாள் சுபா, கோபத்தோடு.
விஜய் மடியில் தான் இருப்பது போலவும், அவன் தன்னைக் கொஞ்சுவது போலவும், கற்பனை குதிரை தறிக் கெட்டு ஓட, அதிர்ந்து போனாள் மதுரா.
‘கடவுளே!… என்ன இது… இப்படி எல்லாம் நினைப்பது நான் தானா!… ஒரு நாளைக்குள், எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவது?… எவ்வளவு பெரிய விஷயம் போய்ட்டு இருக்கு.
இப்போ போய், இப்படி எல்லாம் ஏன் நினைக்கத் தோன்றுது?…. மதுரா!.. உனக்குப் பைத்தியம் தான் புடிச்சி போச்சு.
ச்சே!… ச்சே!… இல்லை… இல்லை… எல்லாம் இந்தச் சோனா சனியனால் வந்தது. திரும்பத் திரும்ப, ‘இல்லாத பலான உறவு, விஜய் கூட இருக்கு இருக்குன்னு’ சொல்லிச் சொல்லி எனக்கு மூளை குழம்பிப் போச்சு. விஜய்யோடு சேர்த்து வைத்துப் பேசியதால், வந்த வினை.
என்னது!… விஜய்யா?…. கருணா சார், ‘எப்போதிலிருந்து விஜய் ஆனது!… எப்படி ஆனது?…’
வாழ்கை, மானம், உயிர் கேள்வி குறியாக்க முயலும் சகோதரி, அவளுக்குச், ‘சிங் சாங்’ அடிக்கும் கேடு கெட்டவன், இவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற போராடும் விஜய் என்று அனைவரும் வேலை செய்துட்டு இருந்தால், மவளே!… உனக்குக் கொஞ்சல் கேக்குதா?… அதுவும் மடியில் வைத்து?…’ என்று மனசாட்சி வறுத்து எடுக்க, மிரண்டு போனாள் மதுரா.
“மதுரா!… சோனா, போன்ற ஒரு ஜென்மத்துக்கு கணவன் என்பது சாதாரண விஷயம் இல்லைம்மா. கூடவே சொர்ணா, கஜேந்திரன் போன்ற அரக்கக் கூட்டம் இருந்தால், யாராய் இருந்தாலும் ரோபோட் தான் ஆவார்கள்.
இவர்கள் முன் மற்றவர்கள், நிம்மதியாகச் சிரித்து வாழ்ந்து விட்டால், அதை முதலில் கெடுத்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள்.” என்ற பாலாஜி சொர்ணா, கஜேந்திரன், சோனா மற்றவர்கள் வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடி இருந்தார்கள் என்று சில பல உதாரணங்களைக் கூறினான்.
பாலாஜி சொல்லி முடிக்கவும், “இப்போ சொல்லுடீ… அண்ணா, என்ன ரோபோட்டா?… அவராய் இருக்க போய் இந்தத் துஷ்ட ஜந்துக்களை சமாளிக்கறார். அவர் இடத்தில நாம் இருந்தோம், ஒன்று பைத்தியம் ஆகி இருப்போம், இல்லை என்றால் சூசைட் செய்துட்டு இருப்போம்.
அதற்கு எல்லாம் தனி கட்ஸ் வேணும்டீ. இங்க பாரு, அண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பார். நீ கவலைப்படாதே.
ஒரே வாரத்தில் இந்த அக்ரீமெண்ட், கடன் எல்லாத்துக்கும் வழி பண்ணுவார். அப்படி செய்தபிறகு தயவு செய்து ஊருக்குக் கிளம்பும் வழியைப் பாரு…. போய்க் குளிச்சுட்டு வா. உனக்குப் பிடித்த மஷ்ரூம் பிரியாணி ரெடி.” என்றாள் சுபா.
“இல்லை… நீங்க போய்ச் சாப்பிடுங்க. நான் வரேன். கொஞ்சம் யோசிக்கணும். இது எல்லாவற்றையும் பொறுமையா அலசி ஆராயணும். டைஜஸ்ட் செய்யனும். கொஞ்ச நேரம் தனியா விடுங்க.” என்றாள் மதுரா தளர்ந்து போனவளாய்.
“இப்பொழுதாவது செய். என்ன லுக்கு?… மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதைச் சொன்னேன். நாட்டுக்கு, இது இப்போ ரொம்ப தேவை மா. யோசி.” என்று மதுராவிற்கு, ஒரு கொட்டு வைத்துச் சென்றாள் சுபா.
சுபாவும், பாலாஜியும் சென்ற பிறகு, தன்னை தூய்மை செய்து கொண்டவள், ரெடி ஆகி, வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் இருந்த மல்லி, முல்லை பந்தலின் கீழ் உள்ள சேரில் அமர்ந்தாள்.
அவளுக்கு அந்த வீட்டில் பிடித்ததே அந்தத் தோட்டம் தான்.
அந்த வீடு நான்கு புறமும் இடம் விட்டு, தாழ்வாரத்துடன் கூடிய இரண்டு அடுக்கு வீடு.
பாலாஜியும், சுபாவும் மேலே தங்கி இருந்தனர். மதுரா கீழ் போர்சனில் இருந்தாள்.
வீட்டைச் சுற்றித் தோட்டம், மரம், செடி, கொடி என்று கண்ணிற்கும், மனதிற்கும் குளுமையாக இருக்கும்.
மதுரா பாதி நேரம், ‘தவம் இருப்பதே’ அந்தத் தோட்டத்தில் தான்.
சில இடங்களை, மனிதர்களைப் பார்க்கும் போது மட்டுமே, ‘பூர்வ ஜென்ம பந்தம் போல ஒரு உறவு’ இருப்பதாகத் தோன்றும்.
இந்த வீடு, மதுராவிற்கு அப்படியொரு பிடித்தம்.
காரணம் என்ன என்று கேட்டால், அது அவளுக்கே தெரியாது என்று தான் மதுரா சொல்வாள்.
முன் ஜென்மத்து விட்டக் குறை, தொட்டக் குறையோ என்னவோ!… அந்த வீடு, அவளுக்கு உயிர் என்று சொன்னால் கூட மிகையல்ல.
மதுரா, சுபா கை வண்ணத்தில் மா, தென்னை, வேப்பிலை மரங்களும், காய்கறி, கீரை வகைகளும் செழித்து வளர்ந்து இருந்தது.
வீட்டின் ஒரு பக்கம், இரண்டு கொம்புகள் நடப்பட்டு முல்லை, மல்லி பந்தல் அமைக்கப் பட்டு, அதன் கீழ் மூவர் அமரும் படி நாற்காலி, டேபிள் போடப்பட்டு இருக்கும்.
குளு குளுவென்று காற்று வீச, அந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து, இசையை ரசிப்பதும், புத்தகம் படிப்பதும் மதுராவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.
மனம் எப்பொழுதாவது கலங்கும் போது, ‘தாய் மடியாய்’ அவளுக்கு நிம்மதி தருவதும் அந்தத் தோட்டம் தான்.
இன்று, மனம் கலங்கி போய் இருக்க, ஆறுதலை தேடி, அந்தப் பந்தலின் கீழ் அமர்ந்தாள்.
கண்கள் இலக்கற்று வெறிக்க, பலதை நினைத்துக் குழம்பிக் கொண்டு இருந்தவளின் காதில், பக்கத்து வீட்டு டீவியில், ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த பாடல் விழுந்தது.
‘யாரை தான் நம்புவதோ
பேதை நெஞ்சம்!
அம்மம்மா!
பூமியிலே யாவும் வஞ்சம்
உறவென்றால் முள்ளாகும்.
உயிர் எல்லாம் கல்லாகும்.
வேட்டையாடும் மான் ஆனேன்,
வித்தைக் காட்டும் பொருளானேன்,
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண் ஆனேன்.
அன்னை பெற்றாள் பெண் என்று ….
அதனால் தானே துயர் இன்று ….
கண்ணைத் தந்த தெய்வங்களே!
கருணைத் தந்தால் ஆகாதா!
அழகைக் காட்டும் கண்ணாடி,
மனதைக் காட்டக் கூடாதா!
பழகும் போதே நம்மை, தீமை
பார்த்து சொல்லக் கூடாதா?
வாழ்த்தும் கையில் வாளுண்டு,
போற்றும் மொழியில் விஷமுண்டு,
வஞ்சம் சிந்தும்
புன்னகை இல்லா
மனிதர் இங்கே எவர் உண்டு?…’
இவளுக்காகவே எழுதப் பட்ட வரிகளோடு ஒலித்தது.
எவ்வளவூ உண்மையான வரிகள்!
‘உறவுக்காரியான சோனா, முள்ளாகித் தானே குத்திக் கிழிக்கிறாள். மனம் கல்லாகிப் போனதால் தானே, சுமன் போன்ற வடிகட்டின உலகமகா அயோக்கியன், பெண் பித்தனிடம், பெண்ணாய் இருந்தும் தன்னை மாட்டி விட முடிந்தது!
அன்னை, ‘பெண்’ என்று பெற்று இருக்கா விட்டால் சோனாவிடமும், சுமனிடமும், மாட்டி இருக்க வேண்டாமே!
முகம் பார்க்கும் கண்ணாடியும், ‘ஒருவரிடம் நாம் பழகும் போதே, அவரின் நன்மை, தீமையைக்’ காட்டி இருந்தால், சங்கரனும் ஏமாறாமல் இருந்து இருப்பாரே!
வாழ்த்தியவாறு தானே, கையில் வாள் கொண்டுக் கழுத்தை அறுத்தாள்! போற்றுவது போல நடித்து, விஷத்தைக் கக்கி விட்டாளே!
‘பறக்கும் பாவைப்’ படத்தில், சரோஜா தேவி’ மனம் நொந்து பாடும் பாடல்.
அங்கு அவரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்ற, எம்.ஜி.ஆர் வந்தார்.
இங்கு, என்னைக் காப்பாற்ற யார் வரப் போவது?…’ என்று கண்கள் கலங்க, தலையை இரு கைகளால் பிடித்து அமர்ந்து இருந்தாள் மதுரா.
‘ஏன் விஜய் இல்லையா!… ஒரு வருடமாய், காப்பாற்றுவதாகத் தானே சொன்னார்கள் . இனி மேல், வேறு ஒருவன் வந்து காப்பாற்றும் நிலையிலா, நீ இருக்கிறாய்!…
விஜய் ஒருவன் போதாதா உன்னைக் காக்க?..?’ மனம் கேள்வி எழுப்ப அதிர்ந்து போனவளாய், நிமிர்ந்து அமர்ந்தாள் மதுரா.
‘உண்மை தானே!… அந்தச் சோனாவின், ‘ஈனச் செயல் தெரிந்து தானே வேலை விட்டுப் போ…. போ’ என்றான். வாரத்திற்கு ஒரு தடவையாவது, ‘வேறு வேலை வாங்கித் தருகிறேன்.’ என்று சொல்லாமல் இருந்தது இல்லையே!
அப்பொழுதெல்லாம் அப்படி சொன்னவன் மேல், எவ்வளவு கோபம் வரும். அவன், ‘ஒரு சிறுத் தவறு கூடக் கண்டுப் பிடித்து விடக் கூடாது என்று தானே அப்படி, ஓடி ஓடி’ உழைத்தேன்.
சுபாவிடம், ஆபீஸ்யில் மற்றவரிடம், விஜயையை எவளோ திட்டி இருப்பேன்!… எத்தனை விதமாகக் கிண்டல் செய்து இருப்பேன்.
அவன் என்னைக் காப்பாற்ற அல்லவா, என்னுடனே போராடி இருக்கிறான்!
சோனா மட்டும் தன் உண்மை முகத்தைக் காட்டி இருக்கவில்லை என்றால், யார் சொல்லி இருந்தாலும், அவளைப் பற்றி உண்மை பிம்பம் தெரியாது போய் இருக்கும்.
அந்த அளவிற்கு அவளும் நடித்தே அல்லவா கழுத்தை அறுத்து இருக்கிறாள்!… அதுவும் ஒரு வருடமாய்!…
எனக்காக தன் மனைவியை, எதிர்த்துப் போராடிக் கொண்டு இருப்பவரை, எவளோ தப்பாக நினைத்து, நானும் படுத்தி இருக்கேன்.’ என்று மனம் அரற்றியது மதுராவிற்கு.
பாலாஜி, ‘சோனா, சொர்ணா, கஜேந்திரன்’ பற்றிக் கூறியவற்றை ஒரு முறை மனதிற்குள் நினைத்துப் பார்த்தவள், அந்த மூன்று அரக்க ஜென்மங்களிடம் மாட்டி முழிக்கும், ‘சேது, கனகா, மரகதம், பூரணி’ நிலையை நினைத்து ரத்தமே வடிந்தது மதுராவிற்கு.
எதைப் பற்றி நினைத்தாலும், கடைசியில் விஜய்யிடமே வந்து நின்றது அவள் எண்ணம்.
விதியும் விஜயயை பார்த்துக் கைக் கொட்டி சிரிக்க ஆரம்பித்து இருந்தது.
ஒரு வேளை, முதலில் சோனா விஷயத்தில், செய்தத் தவறை சரி செய்ய நினைக்கிறதா!…
‘வாழ்க்கை, யாரையும் வஞ்சிப்பதில்லை’ என்பது உண்மை தானோ!
‘விஜய், எவ்வளவு உயர்ந்தவன்!… உழைப்புக்கு அஞ்சாதவன். அதனால் தானே தொழிலாளர்கள் இவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் இவனும் தானே துடிப்பான்.
தொழிலாளாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்வதில், இவனை மிஞ்ச ஆளே இல்லையே!
அவர்களின் வீட்டு முக்கிய நிகழ்ச்சிகளில் முதல் ஆளாய் நிற்பவன் இவன் தானே!…
அவன் ஆடையகத்தில் வேலை செய்யும் பெண்கள், நிம்மதியாக, மன நிறைவோடு வேலை செய்ய அனைத்தும் செய்து இருக்கிறானே!
‘வந்து செல்ல இலவச பஸ், வேன், மலிவு விலை கான்டீன், குழந்தைகள் காப்பகம், பெண்கள் பிரிவில் பெண்களே காவல், cctv என்று’ இவன் செய்து இருக்கும் பட்டியல் மிக நீளம்.
இதெல்லாம் வீண் செலவூ என்று வானத்துக்கும், பூமிக்கும் குதித்த கஜேந்திரன் கூட அரசாங்கமே அழைத்துப் பாராட்டவும் வாய் மூட வில்லையா?
‘ஒரு முதலாளி எப்படி இருக்க வேண்டும்’ என்பதற்கு சிறந்த உதாரணம் விஜய் இல்லை என்றால் வேறு யார்!…
பெண்களை உயர்வாய், போற்றி, மதித்துப் பாதுகாப்பவனுக்கு போய், ‘ஒரு பேய் மனைவியா?’ என்று பெரு மூச்சு விட்டவளுக்கு, ஆறு மாதங்களுக்கு முன், அலுவலகத்தில் சோனா செய்த கூத்தும், அதனால் தன் குடும்பம் நிலைகுலைந்த விதமும் நினைவுக்கு வந்தது.
நினைவுக்கு வந்தது அது மட்டும் அல்ல, அது நாள் வரை மனதிற்குள் அடி ஆழத்தில், அவளை போட்டு உறுத்திக் கொண்டு இருந்த வேறு ஒன்றும் தான்.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!