அத்தியாயம் 16
‘சார், எப்படி இவ்வளவு வேகமா வந்தார்!’ என்ற பிரமிப்பு மட்டுமே அது என்று அந்தப் பேதை மனம் சொல்லி இருந்தது.
இது நாள் வரை நம்பிய பொய், இன்று தோட்டத்தில் யோசிக்கும் போது பொய்த்து போனது.
‘அன்று சோனாவிற்காக விஜய் துடிக்கவில்லை…. உச்சி முதல் உள்ளங்கால் வரை, அன்று தன்னை ஆராய்ந்த அவன் பார்வை, அதில் தெரிந்த, பயம், கலக்கம், பின் ஒன்றும் இல்லை, நலமாய் இருக்கிறாள் என்று அறிந்ததும், முகத்தில் பிரதிபலித்த நிம்மதி, ‘தேங்க் காட்’ என்ற முணுமுணுப்பு, கண்களில் கண்ணீர் போன்ற பளபளப்பு… இவை எல்லாம் எதற்காக?
அவன் செயல்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விடையை மதுரா, அன்று தேடவில்லை.
தேட துணியவில்லை என்பதே நிதர்சனம்.
எங்கோ கண்ணாடி உடையும் சப்தம், இருவரையும் நிகழ் காலத்திற்கு திருப்பித் தன்னிலைக்கு வரவழைத்தது.
“சாரி… சாரி… மிஸ். மதுராக்ஷி!… யூ ஆர் ஆல் ரைட் நோ?” என்றவன் பெருமூச்சுகளை எடுத்து விட்டுத் தன்னைச் சமாளித்தவாறு அவளுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றான்.
“சார்!… எனக்கு என்ன சார்… வந்து விடப் போகிறது. மேடம் தான் சார்…” என்று அவன் காதல் மனைவியின், நிலையைக் கூற முடியாதவளாய் திணறினாள்.
‘தன்னை அக்கா என்றோ, விஜய்யை, ‘மாமா’ என்றோ அழைக்கக் கூடாது. சார், மேடம் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டளை இட்டு இருந்தாள் சோனா.
அதாவது, ‘மதுரா வேலைக்காரி. வேறு எந்த உரிமையும் கிடையாது, என் காலுக்குக் கீழ் தான் அவள்’ என்று விஜய்கானச் செய்தி அது.
அவன் துடிப்பு, தவிப்பு எல்லாம் பொய்யோ என்னும் விதமாக, திரும்பியவனின் முகம் உணர்ச்சிகள் துடைத்தப் பாறையாக மாறி இருந்தது.
“எங்கே அவ…?” என்றவனின் குரலில், வழிந்தது நிச்சயம் வெறுப்பே.
“உங்க பெட்ரூமில்…” என்றவளின் வார்த்தையைக் கேட்டு வெகு வேகமாக அறையை நோக்கிச் சென்றவன் சட்டென்று நின்றான்.
அவன் வேக நடைக்கு ஈடுக் கொடுத்து, அவன் பின்னாலேயே ஏறக்குறைய ஓடி வந்தவள், அவன் அப்படி சட்டென்று நிற்பான் என்று எதிர்பார்த்து இராததால், அவன் முதுகின் மீது மோதியவள், கீழே விழுந்து விடாமல் இருக்க, பின்புறம் இருந்து அவனை அணைத்து இருந்தாள்.
அவனை ஒரு பிடிமானத்திற்கு தான் மதுரா அணைத்தது.
அதில் எந்தத் தவறான எண்ணமும் இல்லை தான் என்றாலும், அவன் உடல் அவள் கைகளில் பலமுறை சிலிர்த்தது.
கை முஷ்டிகள் இறுக, கண்களை மூடி, வேக மூச்சுகளுடன், கீழ் உதட்டினை பற்களால் கடித்து, கண்ணை மூடி அவன் நின்றக் கோலத்தை, எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் மதுராவினால் பார்க்க முடிந்தது.
அவன், அன்று நின்ற கோலம், இன்று வேறு விதமானச் சந்தேகங்களை எழுப்ப முயல, தன் எண்ணம் போகும் போக்கினைக் கண்டுத் திணற ஆரம்பித்தாள் மதுரா.
வலுக்கட்டாயமாக, அவன் நின்ற நிலையை, ஆராய முற்பட்ட மனசாட்சியை ஒரு தட்டுத் தட்டி உள்ளே பூட்டினாள்.
அதன் பின் நடந்தவை மீண்டும் படமாக ஓட, ஆரம்பித்தது அவள் மனக்கண்ணில்.
முதலில் சுதாரித்தது மதுரா தான்.
“ஐயோ சாரி அத்தான்!… சாரி, சாரி கருணா ஐயோ!… சாரி… சாரி சார்… தெரியாம இடிச்சுட்டேன். சாரி.” என்று உளறிக் கொட்டினாள்.
மீண்டும் அவன் தலையை உலுக்கிக் கொள்வதையும், தலை முடியைக் கோதி விடுவதையும் கண்டவள், கண் மூடித் திறப்பதற்குள் மீண்டும் அவன் மீண்டு இருந்தான்.
“வாட் இஸ் திஸ்?” என்றான் கையைக் கீழே காட்டி.
அவன் காட்டிய திசையில், கார்ப்பெட்டில் விழுந்து கிடந்தது சோனாவின் புடவை.
அதைக் கண்ட பிறகு தான் அவன் நின்றது.
‘கடவுளே!… இது எல்லாம் எனக்குத் தேவைத் தானா?’ என்று தன்னையே நொந்து கொண்டாள் மதுரா.
சோனா நடத்தியக் கூத்தை, ஒரு ஆணிடம் எப்படி அவளால் எப்படி சொல்ல முடியும்!
“மிஸ். மதுராக்ஷி!…” என்றான் கருணா மீண்டும்.
‘என்ன வச்சு இருக்கே மதுரக்ஷிக்கு?’ மனதிற்குள் கவுண்டர் ஓடியது மதுராவிற்கு.
“வாட் இஸ் திஸ்?” என்றான் விஜய், புடவையைச் சுட்டிக் காட்டி.
‘ஹ்ம்ம்!…. பார்த்தா தெரியலை… புடவைன்னு.’
“இது, இங்கே என்ன பண்ணுது?” என்றான் விஜய் எரிச்சலுடன்.
‘ஹ்ம்ம்ம்!… சட்டிப் பானை பண்ணுது. கேக்கறான் பார் கேனை!….’ மீண்டும் மனசாட்சி.
“என்ன, மிஸ். மதுராக்ஷி!… கேள்விக் கேட்டுட்டு இருக்கேன். மனதிற்குள் எனக்கு அர்ச்சனை செய்துட்டு இருக்கீங்க போல இருக்கே!…” என்றான் நக்கலாக.
பேய் முழி முழித்துத் தன்னைத் தானே காட்டி கொடுத்தவள், “ச்சே! சே!… அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார். ஒன்றுமே இல்லை…
சார்!… அது மேடம் புடவை.” என்றாள் திணறலுடன்.
“லுக், மிஸ் மதுராக்ஷி!… நீங்கச் சுடியில் இருக்கீங்க. எனக்குப் புடவை எல்லாம் கட்டிப் பழக்கம் இல்லை. சோ, மீதம் இருப்பது உங்க மேடம் மட்டும் தான். சோ, இது அவங்க புடவையாகத் தான் இருக்கும்.
நான் கேட்டது அது இல்லை. உங்க மேடம் புடவை, அவங்கக் கிட்டே இருக்காம, என் ஆபீஸ் அறையில், என் கார்ப்பெட்டில் என்ன செய்யுது என்று தான் கேட்டேன்.” என்றான் விஜய்.
“சார்!… சார்!.” என்று இழுத்தாள் மதுரா.
“கம் டு தி பாயிண்ட் மதுரா. பின் வாயால் தந்தி அடிக்கலாம். வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்?” என்றான் அவன் மீண்டும்.
பெருமூச்சை வெளி இட்ட மதுரா, “சார்!… சோனா மேடம்… ட்ரிங்க்ஸ் எடுத்து இருக்காங்க சார். ஷி இஸ் நாட் இன் கண்ட்ரோல். உங்களை கேட்டுப் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க… உங்க… பெட்…. ரூமில் இருகாங்க. உங்க கிட்டே…. ஏதோ பேசணுமாம்.” என்றாள் முகம் சிவந்து.
சோனா குடிப்பது அவனுக்குப் புது விஷயம் இல்லை போல இருந்தது.
அவன் எந்தத் திகைப்பையும் காட்டாமல், கைக்கட்டி, தன் டேபிள் மேல் சாய்ந்து நின்றான்.
சோனாவைத் தேடி ஓடுவான், என்ன ஆச்சோ என்று பதறுவான் என்று மதுரா எதிர்பார்க்க, அவனோ, ‘சோனாவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று நின்ற விதம் மதுராவிற்குத் திகைப்பை உண்டாக்கியது.
அதற்கு மேல் புருஷன், மனைவிக்கு, ‘நடுவே பூஜை வேலை கரடி போல் தான் எதற்கு என்று’ நினைத்தவள், வெளியேற முயன்றாள்.
“மிஸ். மதுராக்ஷி!… நில்லுங்க… எங்கே போறீங்க?…” என்றான் விஜய்.
“சார்!… சார்!…” என்று தந்தி அடித்தவள், ‘யோவ்!… ஏன்யா என்னைப் புருசனும், பொண்டாட்டியும் சேர்ந்து படுத்தறீங்க?….’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
“சொல்லுங்க மதுராக்ஷி!… இப்போ எங்கே போறீங்க நீங்க…?” என்றான்.
‘இவன் என்ன தெரிஞ்சு தான் பேசுறானா?…’ என்று கடுப்பானாள் மதுரா.
“சார்!… அக்கா!…. மேடம்!…. உங்க கூடப் பர்சனல்லா பேசணும் என்று வந்திருக்காங்க. நான் வேற எதுக்கு சார், உங்களுக்கு நடுவே பூஜை வேலை கரடி மாதிரி இருக்கணும்…. அக்கா!… மேடம்!… உள்ளே இருக்காங்க… போய் பேசுங்க சார்… நான் வெளியே போறேன்…” என்று முகம் சிவந்து உளறிக் கொட்டினாள் மதுரா.
“மிஸ்.மதுராக்ஷி!… உங்க முகம், ‘காஷ்மீர் ஆப்பிள்’ மாதிரி சிவக்கும் அளவுக்கு, உங்க அக்கா, என் கூட அப்படி என்ன பூஜை செய்ய வந்திருப்பதாக நீங்க நினைக்கறீங்க?…” என்ற விஜய்யின் கேள்வியைக் கேட்டுப், பேந்தப் பேந்த முழித்தாள் மதுரா.
மதுராவின் திணறலைக் கண்டு, வழக்கம்போல் எழுந்த சிரிப்பை, இருமல் போல் மாற்றிச் சமாளித்தான் விஜய் என்பது இப்பொழுது யோசிக்கும் போது மதுராவிற்கு விளங்கியது.
‘பயப் புள்ள என்ன கேள்விக் கேட்டு நம்மைக் காபரா படுத்துடுச்சு… சரியான கேடி பயபுள்ள!…’ என்று மனதிற்குள் புலம்பினாள் மதுரா தோட்டத்தில் அமர்ந்து.
மதுரா ஏதோ சொல்ல முயன்ற சமயம், பெட் ரூம் கதவைத் திறந்து கொண்டு தள்ளாட்டத்துடன் வெளியே வந்தாள் சோனா.
அதுவரை இருந்த இலகு தன்மை மறைந்து மேலும் இறுகி நின்றான் கருணா.
அவள் வரும் சத்தம் கேட்டுக் கூட, அவன் பார்வைத் தன் முகத்தை விட்டு, ஒரு இன்ச் கூட நகரவில்லை என்பதைக் கண்ட மதுரா, இருவரையும் மாறி மாறிப் பார்த்து மிடறு விழுங்கினாள்.
சோனா நெருங்கி வர வர, அந்த டேபிளைச் சுற்றி நகர்ந்தவனின் கண்கள் மட்டும் என்னவோ, ‘தவம் போல’ மதுராக்ஷியின் முகத்தை விட்டு அகலவேயில்லை.
“டேய்!… கருணா!… கருணா!… பிச்சைக்கார பரதேசி நாயே!… நான் யார் தெரியுமாடா?…. நான் சோனா!.. பிரபஞ்ச அழகிடா. என் பின்னால் சுத்தாதவனே இல்லை.
என் கண் பார்வைக்கு விழாதவன் எவனுமே இல்லை. என்னை முழுதாய் தொட்டு, ரசிச்சவங்க என் காலில் அடிமையாகக் கிடப்பானுங்கடா.
நான் மீண்டும் மீண்டும் வேண்டும்ன்னு, சுத்திச் சுத்தி வருவானுங்க. தெரியுமா உனக்கு?
ஆனா நீயி?…
என் பக்கத்துல நிற்க கூடத் தகுதி இல்லாதவன்டா. போனா போகுதேன்னு, உன்னைப் புருஷன் ஆக்கினேன். நாலு… நாலு… வருஷமா தாலி, கட்டும் போது கூட உன் விரல் நுனி கூட, என் மேல் படல. எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா!….
அதான் சொல்வாங்களே!… ஒன்று, இரண்டு, மூன்று முடிச்சு. ஒன்னு கூட நீ போடலை.
சொர்ணா மம்மி, தான் போட்டுச்சு. தாலி கயிறு. அதை என் கழுத்தின் அருகேக் கூட, நீ கொண்டு வரவில்லை. சொர்ணா மம்மி, தான் வாங்கிக் கட்டுச்சு. தெரியாதுன்னு நினைச்சியா நீ!
அப்படி எவளுக்காகடா, உன்னைக் காப்பாத்திட்டு இருக்கே?… நாலு வருஷம், எத்தனைத் தடவை, ‘நீ வேண்டும்’ என்று கேட்டு இருக்கேன்!… நாலு வருஷமாய் பிரம்மச்சாரியாவே இருக்கியே டா!…
ஒஒ… பத்து வருட இதயத் தேவதை!
அவளுக்காகவா, அவளுக்காக?… அவளை மட்டும் தான் தொடுவியா!… கட்டிப் பிடிப்பியா?…
கிஸ் பண்ணுவியா?…
மத்த… மத்த ஆல்?
ஐ வாண்ட் யு….. ஹாவ் மீ, கருணா!… ஹா வ் மீ நவ்…. என்னை இப்பவே இங்கேயே எடுத்துக்கோடா… வாடா!.. கிட்டே வாடா!… ஹாவ் மீ நவ்…” என்று சோனா, ஹாக்கி வாய்ஸில் பேச, மதுராவுக்கு இதயம் துடிப்பதையே நிறுத்திவிட்டது.
“தெரியும்டா, அவ யாருன்னு…. நீ எனக்குத் தான். எனக்கு…. மட்டும் தான்.
இப்போ, அவ என் கையில், அவளை அழிக்காம விடமாட்டேன்.
அவ சாகணும். கொல்லுவேன், துடிக்கத் துடிக்க… ஹா!… அம்ம்ம்ம்ம்… மா.” என்று அலறியவாறு, அந்த அறையின் மூலையில் சென்று விழுந்தாள் சோனா.
விஜய்யின் கரம், சோனாவின் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது. ஆனால், அப்பொழுதும் விஜயின் கண்கள், மதுராவின் முகத்தை விட்டு நகரவேயில்லை.
புடவை இல்லாத நிலையில், முழு தேகம் அப்பட்டமாய் வெளியே தெரிய நின்றிருந்த சோனாவின் பக்கம், விஜய்யின் கண்கள் திரும்பவே இல்லை .
மதுரா தான், சோனா, கூறியதைக் கேட்டு உச்சக் கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
‘இவ்வளவு தரம் கெட்டவளா சோனா!… ’ உடல் கூசி அருவெறுத்துப் போனது மதுராவிற்கு.
குமட்டிக் கொண்டு வரப் பாத்ரூமுக்கு ஓடியவள், உண்மையிலே வாந்தி எடுத்தாள்.
மதுராத் தன்னைச் சுத்தம் செய்து கொள்ளத் தண்ணீர், டவல் எடுத்து வந்து நின்றான் விஜய்.
பலமுறை வாந்தி எடுத்து, நிற்க முடியாமல் தள்ளாடியவளை நெஞ்சில் தாங்கியவன், “ஒன்றும் இல்லை. மது!… ஒன்றும் இல்லை கண்ணா!… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்.” என்று தலையைக் கோதி, அணைத்து ஆறுதல் தர, மெல்லத் தன்னை மீட்டுக் கொண்டாள் மதுரா.
‘அந்த அணைப்பில் அன்று தான் உணர்ந்தது என்ன!
பயத்தைக் கொடுக்க வேண்டிய அணைப்பில், தான் ஏன் பாதுகாப்பை உணர்ந்தேன்!
அந்தக் காற்று கூடப் புக முடியாத அணைப்பு, முதல்முறை போல் தோன்றாதது ஏன்!’
இன்று யோசிக்க, யோசிக்க, தலைச் சுற்றியது மதுராவிற்கு.
தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்த மதுரா, கொடுக்கப் பட்ட அரையின் வேகத்தில் விழுந்து இருந்த, சோனா மயங்கிக் கிடப்பதை கண்டாள்.
உபயம், அளவுக்கு அதிகமான குடியும், போதை மருந்தும், விஜய்யின் தர்ம அடியும்.
விழுந்த வேகத்தில், தாறுமாறாக ஏறி இருந்த இன் ஸ்கர்ட், சோனாவின் இரு தொடைகளிலும் காணப்பட்ட நூற்றுக் கணக்கான சிறு ஊசித் தடயங்களை மதுராவிற்கு காட்டியது.
சோனாவின் பேச்சைக் கேட்டே, வெலவெலத்து போய் இருந்த மதுரா, தான் கண்ணால் காண்பதை நம்ப முடியாதவளாய், உறுதி செய்யச் சோனாவையும், விஜய்யையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அப்பொழுதும் விஜய் கண்கள், மதுராவின் முகத்திலேயே எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் நிலைத்து இருந்தது.
சோனாவின் பக்கம், அவன் பார்வை திரும்பவே இல்லை.
சோனாவின் அந்த நிலை, விஜய்யை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது மட்டுமில்லாமல், ‘அப்படி ஒருத்தி மயங்கி இருக்கிறாள் என்று கூட அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை’ என்பதை கண்டாள் மதுரா.
மனது கேட்காமல், விஜய் அறைக்கு முதல் முறையாகச் சென்றவள், அவன் படுக்கையிலிருந்து போர்வை ஒன்றை உருவி எடுத்து வந்து, சோனா மேல் போர்த்தி விட்டாள்.
அதுவரைத் தன்னை பார்வையால் தொடர்ந்தவன், சோனாவின் அருகே தான் சென்றவுடன், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வதையும் கண்டாள் மதுரா.
கை நடுங்க, சோனாவின் மேல் போர்வைப் போர்த்தி விட்டு, கால்கள் உதற, ‘எங்கே மயங்கி விடுவோமோ’ என்று நடுங்கிக் கொண்டு நின்றாள் மதுரா.
என்ன நினைத்தானோ, மதுராவின் கைப்பிடித்து, சோனா இருந்த அறையை விட்டு, அவளை வெளியே இழுக்காத குறையாக இழுத்து வந்தவன், முன்னறையில் இருந்த சேரில் மதுராவை அமர வைத்தான்.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!