அத்தியாயம் 17
முன்னறையில் மதுராவை அமர வைத்த விஜய், அருகே இருந்த பிளாஸ்கிலிருந்து, சூடான டீயைக் கப்பில் ஊற்றி, சர்க்கரையை அளவுக்கு அதிகமாகவே போட்டு, குழந்தைக்கு ஊட்டி விடுவது போல மதுராவிற்கு பருகக் கொடுத்தான்.
அதிக இனிப்பால் முகம் சுளித்தவளை கண்டு, “ஷாக் குறையும். வாந்தி வேறு எடுத்து இருக்கே!…” என்றான்.
அவள் குடித்து முடித்ததும், ‘சமாளித்து கொண்டாள்’ என்பதை உறுதிச் செய்து கொண்டவன்,
“இப்போ புரியுதா மதுரா, ‘எதற்கு இத்தனை பேர், இவளிடம் வேலைக்குச் சேர வேண்டாம்’ என்று சொன்னோம் என்று. உன்னைப் போன்றக் குடும்ப பெண் இருக்க வேண்டிய நரகம் இது இல்லை.
மனித முகமூடி அணிந்து மிருகங்கள், ‘மனிதர்கள்’ என்ற போர்வையில் வாழும் காடு இது. நீ, உன் அப்பா நினைப்பது போல குடும்ப நலன், ஒற்றுமைக்காக உன்னை அவள் இங்கே வரவழைக்கவில்லை. அதைப் புரிந்து கொள். இனிமேலும், நீ இங்கு இருந்தால், உன் பெயரையும் கெடுத்து விடுவாள்.
‘எந்த நிமிஷம், எப்படி மாறுவாள்’ என்று தெரியாது. அவள் எது செய்தாலும், அது அவளுக்கு மட்டுமே நன்மையாகும்.
மற்றவர்களின் வாழ்வுக் குட்டிச் சுவராகி விடும். இப்பொழுதாவது புரிந்து இருக்கும். அவ நல்லவ இல்லை மதுரா.” என்றவன் தன் மொபைல் எடுத்துக் கஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தான்.
“மிஸ்டர் கஜேந்திரன்!….” என்று வெகுநக்கலாக அழைத்தவன்,
”உங்க பேத்தி, இங்கே மெயின் ஆபீஸ்ஸில் வழக்கம் போல, போதை ஆகி, மட்டை ஆகிட்டாங்க. சொர்ணா மேடத்தைக் கூட்டி வந்து இவங்களை தூக்கிப் போங்க.
ஒஒ… சொர்ணா மேடம் வரமாட்டாங்களா!… அவங்க என் வேலைக்காரி இல்லையா!
அப்போ ஓகே. நீங்களே உங்க கையால், உங்கப் பேத்திக்கு டிரஸ் போட்டுக் கூட்டி போங்க.
ஹம்ம்ம்ம்ம்!… என்ன சொல்றேன்னா! ‘சுரக்காய்க்கு உப்பு இல்லைன்னு’
போதையில் டிரஸ் அவிழ்ந்து, கிடக்காங்க மேடம். அதை உங்களால் போட முடியுமா!… அதற்குத் தான் சொர்ணா மேடத்தை கூட்டி வரச் சொன்னேன்.
ஆபீஸ், லேடி ஸ்டாப் வச்சு டிரஸ் போடலாம் தான்.
பட், நியூஸ் லீக் ஆகி, நாளை மீடியாகாரங்க மைக்கை உங்க வாயிலேயே சொருகினா என்ன சொல்லப் போறீங்கன்னு இப்பவே ரிஹர்சல் பார்த்துக்கோங்க.
பாரின் டெலிகேட்ஸ் வராங்க, ஆர்டர் கொடுக்க. அவங்க முன்னாடி உங்க ஆசைப் பேத்தி ரகளை செஞ்சு ஆர்டர், ‘வெற்றி குரூப்ஸ்க்கு’ போனா என்னைச் சொல்லி நோ யூஸ். பல கோடி ரூபாய் ஆர்டர். வறீங்களா. குட்.” என்று அழைப்பைத் துண்டித்தவனை, ‘ஆஆஆஆ’ வென்று வாயைப் பிளந்து, பார்த்துக் கொண்டு இருந்தது இன்று நினைவுக்கு வந்தது.
கஜேந்திரனின் திடகாத்திர ராட்ஷச உருவத்தைப் பார்த்த உடனே, ஒரு நொடி அனைவரும் பயந்து விடுவார்கள்.
அவர், ‘ஏலே!…’ என்று தன் வெண்கல குரலில், அதட்டல் போட்டதை ஒரு முறை நேரில் கேட்ட மதுராவிற்கு, கைக்கால் நடுங்கியே விட்டது.
மீசையை முறுக்கியவாறு, அவர் ஆபீஸ் வந்தாலே, அங்கு இருப்பவர்களுக்குக், ‘ குளிர், ஜுரம்’ வந்து விடும். அப்படி பட்டவரை வெகு இலகுவாகக் கையாண்ட விஜய்யை, ‘உலகின் எட்டாவது அதிசயமாகப்’ பார்த்து கொண்டு இருந்தாள் மதுரா.
இப்படிப் பட்ட கூத்துக்கள், ரகளைகள் தனக்குத் தான் புதிது. விஜய்க்கு இது பழகிப் போன ஒன்று தெளிவாகப் புரிந்து விட, அவன் மேல் ஏற்கனவே இருந்த மரியாதை டன் கணக்கில் ஏறியது.
“அவங்க வருவதற்குள், இந்த வேலைக்கு முழுக்கு போட்டுட்டு ஊருக்குக் கிளம்பும் வழியைப் பாரு. கூடவே, சுபாவை கூட்டிப் போ. உனக்கு ட்ரெயின், இன்னும் மூன்று மணி நேரத்தில் இருக்கு. டிக்கெட் உனக்கு ஸ்டேஷனுக்கே வந்து சேரும்.
இனி, ‘இவ கூப்பிட்டா, அவ கூப்பிட்டானு’ இங்கே வரும் வேலை வேண்டாம்… அவ பாசப் புறாவைப் பறக்க விட்டா, இனி நம்பி ஏமாறாதே!… போ. உன் வாழ்க்கை, நீ உனக்காக வாழப் பாரு. கிளம்பு.” என்றவன், கைப்பை, டிபன் பாக்ஸ் உட்பட அனைத்தையும் அவள் கையில் கொடுத்து, கதவு பக்கம் கை காட்டினான்.
அவள் கிளம்பி அறை கதவை அடைந்தபோது, “மது!” என்றான் ஒரு விதக் குரலில்.
“சார்!..” என்று குழப்பத்துடன் திரும்பினாள் மதுரா.
அவன் குரல், அவளைக் குழப்பி கொண்டு இருந்தது.
நீண்ட, நெடிய பெரு மூச்சை வெளியிட்டவன், கண்களை அழுந்த மூடித் திறந்தவன்,
“நத்திங். கேரி ஆன். குட் பை. மது. குட் பை பார் எவர்.” என்றான் குரல் தழுத்தழுக்க.
மதுரா, தலையை எல்லா பக்கமும் ஆட்டி விட்டு, டன் கணக்கான அதிர்ச்சி, திகைப்பு, குழப்பத்துடன் சுபாவின் துணையோடு, அதி முக்கிய பொருட்களை மட்டும் மூட்டைக் கட்டினாள்.
சென்னைக்கு பெரிய கும்பிடுப் போடாதக் குறை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுபா, பாலாஜியுடன் அவள் அடையும் போது டிக்கெட், உணவுத் தண்ணீர் பாட்டில் எல்லாம் ரெடியாக அவளுக்குக் காத்து இருந்தது.
சுபாவும், பாலாஜியும் அவளை ரயில் ஏற்றி விட்டு, ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்று இருந்தனர்.
மதுராவிற்கு தெரியாத விஷயம், ‘மாறு வேஷத்தில் ஆல்வின்’ அவள் உடன் பாதுகாப்பிற்காக வந்தது.
குன்னூரில் அவள் தன் வீட்டிற்குள் நுழைந்த பிறகே, ஆல்வின் சென்னை திரும்பினான்.
சென்னையில் விஜய்யோ மிகவும் மகிழ்ச்சியில் இருந்தான்.
ஆழம் தெரியாமல், காலை விட்டு இருந்த மதுராவை, சோனாவிடமிருந்து காப்பாற்றி விட்ட திருப்தி.
பல வருடங்களுக்குப் பிறகு வெகு நிம்மதியாக உறங்கினான்.
பாவம்!
அவன் அறியாத ஒன்று, ‘சுவரில் அடிக்கப்பட்டப் பந்தின் வேகம்’ போலச் சென்ற வேகத்திலேயே மதுரா, திரும்பி வந்து சோனாவிடம் மாட்டப் போகிறாள், அதுவும் ஒரே நாளில்.
‘திரும்பி வந்தத் தன்னைக் கண்ட விஜய்யின் முகத்தில் முதலில் ஏற்பட்ட உணர்ச்சி எத்தகையது?’
நடந்ததை மேலும் நினைத்துப் பார்த்த மதுராவிற்கு, விடை தெரியா கேள்விகளே எழுந்தன.
குணா கமல், ‘அபிராமியை மீட்’ செய்தவுடன் ஒரு பரவச நிலையில், ‘அபிராமி!… அபிராமி!…’ என்று ஒரு முகபாவம் காட்டுவானே, அந்த ரியாக்ஷன் விஜய்யின் முகத்தில் கண்ட மதுரா, அதைப் பற்றி ஆராயவில்லை.
ஆராயும் நிலையிலும் அவளைச் சோனா வைக்கவில்லை.
அது ஜில்லா கேடி.
நல்லா இருந்த சங்கரன், பவானி வாழ்வில், ‘அந்த ராட்சசி, ரத்தக் காட்டேரி, கொள்ளிவாய் பிசாசு’ கும்மி அடித்து இருந்தது.
அதுவும் ஒரே நாள் மாலைக்குள்.
முப்பது வருட இல்லற வாழ்வில், பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டு இருக்க, சங்கரனும், பவானியும் கோர்ட் படி ஏறும் நிலைமை.
இந்த சோனாவிற்கு மட்டும் ரகம் ரகமாய், வித விதமாய் ஐடியாக்கள் எங்கிருந்து தான் கிடைக்குமோ!
குன்னூர்!
ஊட்டிக்கு பிறகு, இரண்டாவது பெரிய மலைவாச ஸ்தலம் குன்னூர்.
சுற்றுலாவும், தேயிலை பிரதான தொழில்.
‘உயிரே’ படத்தில் ஷாருக் கான் மலை ரயிலில், ‘தையா தையா’ என்று டான்ஸ் ஆடும் ரயில், இந்தக் குன்னூர் வழியாகச் செல்லும்.
வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தார் பவானி.
அப்படியே, ‘நடிகை ரேவதி’ போன்ற தோற்றம்.
விடியற்காலையில், பெட்டிப் படுக்கையுடன் வந்து இறங்கிய மகளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தார்.
‘வயது பெண்ணை வேலைக்கு’ அனுப்பி விட்டு, வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு, மனதால் தங்கள் மகளின் பாதுகாப்பிற்கு தினம் தினம் துடிக்கும், எத்தனையோ அம்மாக்களின் நிலையில் இருப்பவர்.
ஒருவேளை மற்ற அம்மாக்களை விட, நூறு சதவீதம் இன்னும் அதிகமாய் அதிக கவலையில் இருந்தவர் என்று சொன்னால் சரியாய் இருக்குமோ!…
சோனா, போன்ற பெண்ணோடு மகளை அனுப்பி விட்டு, எந்தத் தாயால் தான் நிம்மதியாக இருக்க முடியும்!
அந்த வீட்டில், சிதம்பரம் ஆட்சி.
கைகள் கட்டப்பட்டு இருக்க, மகளை வேலைக்கு அனுப்பும் சங்கரனின் முடிவை, அவரால் மாற்ற முடியவில்லை.
‘ஒரு தடவை முடிவு செஞ்சுட்டா சங்கரன், அவர் பேச்சை அவரே கேக்க மாட்டார்’ என்ற வீட்டு தலைவர்கள், ரகம் போலிருக்கிறது.
இப்பொழுது தான் சோனா, அடித்த வேப்பிலையில், மதுரா தெளிந்து வந்து இருக்கிறாள்.
மதுராவின் அப்பா சங்கரனுக்கும், வேப்பிலை மரமே வெகு விரைவில் தேவைப்படும்.
“அம்மாடீ!… எப்படிடா இருக்கே?… என்னமா இப்படி திடுதிப்புனு வந்து இருக்கே!… உடம்புக்கு எதாவது முடியலையா கண்ணு?…” என்றார் பதறிப் போனவராய்.
“ஐயோ!… அம்மா!… ஊரே வேடிக்கை பார்க்குது. உள்ளே போய்ப் பேசலாம். எனக்கு ஒன்றும் இல்லை. நல்லா தான் இருக்கேன். ட்ராவல் செஞ்சது ரொம்ப டயர்ட்டா இருக்குமா. பசிக்குது.” என்றாள் மதுராத் தாயை வீட்டினுள் தள்ளியபடியே.
மகள் பசி என்றதும், “போடாக் கண்ணா. குளிச்சுட்டு வந்துடு. டிபன் ரெடி. சூடாச் சாப்பிடு.” என்றார் பவானி.
மகள் குளித்துத் தயாராகி வந்ததும், காலை டிபன் பரிமாறினார்.
“அப்பா!… எங்கே மா?” என்றாள் மதுரா.
“அவங்க ஆபீஸ் சீதாராமன் அங்கிள், மகனுக்குத் திடீர்ன்னு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு. அதான் போய் இருக்கார். நைட் வந்துடுவார்.” என்றார் பவானி.
“நீ கூடப் போகலையா மா?…” என்றாள் மதுரா.
“இல்லைடா, ஸ்கூல் எக்ஸாம் நடக்குது. லீவு கிடைக்கல. ரகு வேற வரேன்னு சொல்லி இருந்தான். அதான் போகலை.” என்றார் பவானி.
“ஓஹ்!… உங்க சீமந்தப் புத்திரசிகாமணி வந்துடுச்சா!… அப்போ நாங்க எல்லாம், ‘செகண்ட் ஹாண்ட் சிட்டிஸின்’. என் புள்ளைக்கு இது புடிக்கும், அது பிடிக்கும்னு ராஜ உபசாரம் நடக்குமே!” என்றாள் மதுரா நக்கலாக.
“அது என்னடீ சீமந்தப் புத்திரச் சிகாமணி!… அவனை மட்டுமே பெத்துட்டு, உன்னைத் தவுட்டுக்கு வாங்கி வந்தது போலே சீன் போடறே!… என் புள்ளைக்கு நான் சமைச்சு போடறேன். உனக்கு என்ன வந்தது?… இந்த வாய் மட்டும் அடங்கவே அடங்காது.” என்று பொரிந்தார் பவானி.
“ஓகே… ஓகே… ஹோம் மினிஸ்டர் கூல். உங்க ஆசை புத்திரனை, எதுவும் சொல்லவில்லை. எங்கே தூங்கறானா?” என்றாள் மதுரா.
“ம்ம்ம்ம்!…. நீ வரதுக்கு ஒரு மணி நேரம் முன்னே தான் வந்தான். என்னவோ, அவன் வேலை செய்யும் இடத்தில் திங்கள் கிழமையும் லீவாம். அதான் புள்ள கிளம்பி வந்துட்டான். சாப்பிட்டு தூங்கறான்.” என்றார் பவானி, எல்லாவற்றையும் ஒதுக்கிய படி.
“நீ சாப்பிடலையா மா?…” என்றாள் மதுரா.
“இல்லை மா… இப்போ தான் கஞ்சி குடிச்சேன். பிறகு சாப்பிடறேன். ஆமாம், நீ என்ன சாப்பிடுறதே இல்லையா!… இப்படி இளைச்சு போய் இருக்கே!… ரொம்ப வேலையா கண்ணா?… கஷ்டமா இருக்கா?” என்றார் மகளின், தலையை வருடியபடி.
“அதெல்லாம் இல்லை மா. சுபா சமையலில் ரெண்டு சுற்று பெருத்து தான் போய் இருக்கேன். வேலை எல்லாம் கஷ்டமே இல்லை.” என்றாள் அமர்ந்தவாறே தாயின், இடையை அணைத்து வயிற்றில் முகம் புதைத்து.
‘வீட்டில் சமையல் செய்வது சுபா.
அலுவலகத்தில் என் வேலையையும் சேர்த்து செய்வது விஜய். இதில் நாங்க அப்படியே உழைச்சி ஓடாய் போயிட்டோம்.’ என்று மனசாட்சி, சம்மன் இல்லாமல் ஆஜர் ஆக, அதன் தலையில் ஒரு போடுப் போட்டு, அதை உள்ளே தள்ளினாள் மதுரா.
“அப்போ சுபா தான் செய்யறா… நீ எதுவும் கத்துக்கலை, அதானே!… நல்லா சாப்பிட்டுத் தூங்கிட்டு இருந்தே!” என்றார் பவானி, மதுராவின் தலையில் குட்டிய படி.
“இல்லையே!… நான் சமையல் செய்தேனே!…. ஒரு வாரம் நான் தானே செய்தேன்.” என்றாள் மதுரா.
“நீ சமையல் செய்தே!…. அதுவும் ஒரு வாரம்?…. இதை நான் நம்பனும்? எனக்குக் காது குத்தியாச்சு. எப்போ செஞ்சே கனவில் தானே!… தூக்கக் கலக்கத்தில் உளறாதே. போ. போய்ப் படு.
நீ சமையல் செய்து இருந்தா, சுபா இன்னேரம் எனக்குப் போன் செய்து, ‘அம்மா!… இந்த ஹாஸ்பிடலில், அட்மிட் ஆகி இருக்கேன். டாக்டர்ஸ் மிரண்டு போய் இருகாங்க. ‘நாடி, நெரம்பு, ரத்தம் சதை இது எல்லாவற்றிலும் கொழுப்பு, ஏறி இருக்கும் ஒருத்தியால் தான், இப்படி சமைச்சு மத்தவங்களை கொல்ல முடியும். மெடிக்கல் மிராக்கிள்.’ என்று புலம்பி இருப்பாளே.
இதுவரை, அப்படி கால் வரவில்லை. போய்த் தூங்கு.” என்றவர் மதுரா தலையில் நங்கு என்று குட்டி விட்டுச் சென்றார்.
மதுரா முகத்தில் அசடு வழிய, தன் அறைக்குச் சென்றாள்.
பின்னால் வந்த பவானி, மகள் படுத்ததும், போர்வை போத்தி விட்டுத் தலையை வருடி விட்டார்.
“கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக்கவா மா?” என்றவள் பவானியின் மடியில் படுத்துக் கொண்டு,
“மிஸ் யு மா.. . சுபா சமைப்பா தான். ஆனா, அது நீ இல்லையே!… உன்னையும், உன் சமையலையும், உன் சுப்ரபாதத்தையும், உன் குட்டல்களையும் ரொம்பவே மிஸ் செய்தேன் தெரியுமா?… தூங்கற வரை என் கூடவே இரும்மா.” என்றாள் மதுரா, தாயின் இடையை கைகளால் அணைத்து.
“தூங்குடா…. அம்மா உன் கூடவே இருக்கேன்.” என்றவர் தட்டிக் கொடுக்க மதுரா படுத்ததும் உறங்கி விட்டாள்.
மனதின் குழப்பம், கவலை, பயம் தாயின் மடியில் காணாமல் போக மதுரா ஆழ்ந்த உறங்கினாள்.
மகள் நன்றாக உறங்கி விட்டதை கண்டவர், அவள் தலையைத் தலையணையில் தூக்கி வைத்து, நெற்றியில் முத்தம் இட்டு, போர்வையால் மூடி விட்டார்.
பிள்ளைகள் இருவரும் தூங்க, தாய் தூங்க முடியுமா!
பிள்ளைகளுக்குப் பிடித்த உணவு வகைகள் மொத்தத்தையும் செய்யச் சென்றார்.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!