அத்தியாயம் 19
“பப்பு!… பப்பும்மா!…. ஏய்!…. நான்… சும்மா… சும்மா உன்னை வெறுப்பேற்ற, கிண்டல் செய்யத் தான்….. இது உண்மை இல்லடீ. இவங்க எல்லாம் உடன் வேலை செய்பவர்கள்…. அவ்வளவு தான். இவர்களுக்கும், எனக்கும் எதுவும் இல்லடீ. ப்ரோமிஸ்.” என்றவனை கை நீட்டித் தடுத்த மதுரா, தன்னைச் சமாளித்து கொண்டு, அவன் எதிர் பாராதபோது, அவன் போனை பிடுங்கி ஓடியவள் சென்று நின்றது இரு வீட்டு பெற்றோரிடம் தான்.
“அத்தே!… நீங்க என்னவோ, ‘நான் தான் உங்க வீட்டு மருமகன்னு’ சொல்லிட்டு இருக்கீங்க…. ஆனா, உங்க புள்ளைக்கு, இந்தப் போட்டோவில், வீடியோவில் உள்ள பெண்ணில் யாராவது ஒருத்தி தான் மனைவியாக வேண்டுமாம்.
நான் கிழவியாம்!…. சப்பையாம்!….. இதில் உள்ள பெண்கள் தான், ‘சும்மா கும்முனு இருக்காங்களாம்.” என்றவள், போனினை அவர்களிடம் கொடுத்து விட்டு, அவன் வைத்த சிறு ஆப்புக்கு, பெரியக் கடப்பாறையைச் சொருகி விட்டாள்.
மாலையில், நிச்சயம் வைத்திருந்த, இரு வீட்டு பெற்றோர்களுக்கும், அது மிகப் பெரிய ஷாக் என்று தான் சொல்ல வேண்டுமோ!…
இரு வீட்டின் செல்ல இளவரசி, பிழியப் பிழிய அழுது கொண்டே வந்து போட்டோ, வீடியோ எல்லாம் காட்டி நியாயம் கேட்க, இரு வீட்டு பெற்றோர்களும், எரிமலையாக மாறிப் போனார்கள்.
நடக்க இருந்த நிச்சயம் நிறுத்தப்பட்டது.
அவர்களுக்கு, ‘ஹார்ட் அட்டாக்’ வராதது ஒன்று தான் குறை. மதுரா திறந்து விட்ட, ‘டாம்’ கார்திக்கைக் குற்றவாளி கூண்டில் ஏற்றியது. முரளி, கையையே ஓங்கி விட்டார்.
மதுராவும், சினிமா நாயகிகள் போல், ஓடி சென்று, தன் அறைக் கட்டிலில் விழுந்து, ‘அந்தக் காலக் கதா நாயகிகள்’ தோற்கும் வண்ணம், கண்ணீர் மழை பொழிய, கார்த்திக் நிலைத் தான் அந்தோ பரிதாபமாய் போனது.
கார்த்திக் வீடியோ ஒன்றில் உளறி வைத்த, “அந்தக் கொத்தவரங்காயை தான் திருமணம் செய்யணுமாம்…. அவ எங்கே, என் பெர்சோனாலிட்டி எங்கே!… அவளை எல்லாம் திருமணம் செய்வதற்கு, நாலு முழம் கயிற்றில் தொங்கிடலாம்.
ஒரு வாய் வார்த்தைக் கூட, ‘என்னிடம் சம்மதமா?…’ என்று கேட்காமல், ‘எனக்குப் பிடித்து இருக்கா?…’ என்று கேட்காமல், இந்த நாலு பெருசுங்க என்னும் லூசுங்க… இதுங்களா முடிவு செய்துட்டு, என்னைக் கம்பெல் செய்யுதுங்க….
உங்களில் ஒருத்தி கிட்டே, கூட நிற்க முடியாது. கம் ஆன் பேபீஸ்!…. கிவ் மீ எ கிஸ்…..ஹக் மீ மை டார்லிங்க்ஸ்!…” என்று ஒரு கையில் பீர் பாட்டில், இன்னொரு கையில் வெளிநாட்டு அழகிகளுடன்,
“சொர்க்கம் மதுவிலே!….
சொக்கும் அழகிலே
மது தரும்
சுகம்!… சுகம்!….
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்.” என்று ஆடிக் கொண்டிருந்தான்.
அதைக் கண்டு, அதுவரை, ‘தங்கள் புத்திரன் உத்தம சிகாமணி,வாயில் விரலை வைத்தால் கொடுக்க அடிக்க தெரியாத பச்சப் பிள்ளை’ என்று நினைத்துக் கொண்டிருந்த இரண்டு பெற்றோர்களுக்கும், ஆட்டம் கண்டு விட்டது.
‘விளையாட்டுக்காகக் கொடுத்தாளோ, அவன் வேண்டாம் என்று கொடுத்தாளோ!…’ அது மதுராவுக்கு தான் வெளிச்சம்.
இரு பக்க பெற்றோரும், நொங்கி எடுத்ததில், கார்த்திக் புத்துருக்கு செல்ல வேண்டிய நிலைமை!
அதன் பிறகு, ஆறு மாதத்திற்கு, இரு பக்க பெற்றோரும், எடுத்த கதா கலாபசேனையில், கார்த்திக் நொந்து நூலாகி, பார்ட்டி, சிப், பப், உடன் பணி புரியும் பெண்கள் என்றால், ‘பாலைக் கண்ட தெனாலிராமன் பூனையாக’ அலற ஆரம்பித்தான்.
எவ்வளவு சமாதானம் செய்தும் மதுரா மலை இறங்கவில்லை. மனதில் ஏற்பட்ட சுணக்கம், நீண்ட அகழியாகி இருந்தது.
“நான் உங்ககிட்ட கோடீஸ்வரனையோ, மாட மாளிகை கூட கோபுரம் வைத்திருப்பனையோ, பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுப்பவனையோ, அம்பானி, அதானியின் கசின் பிரதரையோ மாப்பிள்ளையா கணவனாக கொண்டுவர சொல்லவில்லை.
எனக்கு வரவன் எப்படி இருக்க வேண்டும் என்ற என் ஆசை, நீங்க அறியாதது அல்ல.
எனக்கு வருபவன், ‘ஸ்ரீராமன் மாதிரி அல்ல… ஸ்ரீராமானாகவே’ இருக்க வேண்டும்.
இப்படி பார்ட்டி, பப்பு, குடி, பெண்கள் என்று அலையும் கார்த்திக் தான், எனக்கு ஏற்றவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?…
‘கல்யாணம் செய்தால், திருந்தி விடுவான் என்பதற்கு, இந்த மதுராக்ஷி ஒன்றும் மறுவாழ்வு மையம் அல்ல. இவனை திருத்துவதற்காகத் தான், நான் ஜென்மம் எடுத்தும் வரவில்லை. அது என் வேலையும் இல்லை. ” என்ற மதுராவின் பேச்சு, இரு பக்க பெற்றோரையும் வாய் மூட வைத்து விட்டது.
தன், ‘கனவு நாயகன் அவன் இல்லை என்பதை அறிந்ததால், ஏற்பட்ட அதிர்ச்சி’ அவளுக்கு நீங்கவே இல்லை…’ என்று சங்கரன் முடிவுச் செய்து கொண்டார்.
மகளை, ‘வேலைக்கு ஒரு மன மாறுதலுக்காக அனுப்பலாம்’ என்று சங்கரன், ஏக மனதாய் முடிவு எடுத்திருந்த சமயம் தான், சோனா அவர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தது.
அதனாலோ என்னவோ, கார்த்திக் உடனான திருமணத்தைத் தள்ளி போடவோ… இல்லை நிறுத்தவோ, அவன் பேச்சை மீற வேண்டும் என்றோ, யார் சொல்லியும் கேளாமல், ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று சோனாவிடம், மதுரா வேலைக்குச் சென்றது.
சங்கரனும், கார்த்திக் போட்டோ விவகாரத்தில் அதிர்ந்து தான் போய் இருந்தார்.
சிறு வயது முதல், ‘இவள் தான் மனைவி’ என்று சொல்லி வளர்த்தும், மற்ற பெண்களோடு, ‘இழைந்து நின்றது’ ஜீரணிக்க முடியாத ஒன்றாய் இருந்தது.
தான் தூக்கி வளர்த்தவன், ‘கார்ப்போர்ட்டட் கலாச்சாரத்தில்’ ஊறி இருந்ததை அவரால் ஏற்க முடியவில்லை.
விதியும், தன் வேலையைச் சோனா மூலம் செய்து, மதுராவை, விஜய் முன் நிறுத்தியது.
அந்தப் போட்டோ விஷயம் மட்டும் இல்லை என்றால், இன்னேரம் மதுராவிற்கும், கார்திக்க்கும் திருமணமே முடிந்து இருக்கும்.
அப்படி தான் மற்றவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
கார்த்திக், தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பில், சங்கரன் பொங்கி எழுந்து, ‘திருமணத்தைக் கால வரையின்றி ஒத்தி’ வைத்தார். மகளையும் சோனாவுடன் சென்னைக்கு அனுப்பி விட்டார்.
விதி, சோனா வடிவில், மதுராவின் வாழ்வில் மீண்டும் நுழைந்து இருந்தது.
விஜய்யை விட்டு மதுரா, பிரியும் ஒவ்வொருத் தடவையும், அவர்களை இணைப்பதே சோனா தான்.
‘இருவருக்கும் புள்ளையார் சுழிப் போட்டுத் தொடங்கி வைத்ததே’ சோனா தான், ‘அதுவும் பத்து வருடங்களுக்கு முன்பே’ என்ற உண்மை, மதுராவிற்கு தெரிய வரும் போது, யார் நிலை மாறப் போகிறதோ!
மதுராவின் எதிர்பார்ப்பு நியாயமானதாக இருக்கலாம். பெண்களின், ‘கனவுப் பற்றி, எப்படிபட்ட கணவன் வேண்டும்’ என்று பல மேடைகளில், பல விவாதங்கள் நடந்து விட்டன.
ஆனால், நிஜ வாழ்க்கைக்கு சிறிது கூட வேலைக்கு ஆகாத, ஆக முடியாத எதிர்பார்ப்புகள் என்று தான் சொல்ல வேண்டுமோ!
ஸ்ரீ ராமன் போல, ‘மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன்’ என்பது இந்தக் காலத்தில் நடக்க கூடிய ஒன்றா!…
குதிரைக்குக் கண்களில், ‘பளைண்டெர்ஸ்/blinders’ அணிவித்தது போல, ‘மதுரா ஒருத்தியைத் தவிர’ மற்ற பெண்களை ரசிக்காமல் இருக்க முடியுமா!
இவளை மட்டும், இதயராணியாக, தன் வாழ்க்கையாக, உயிராக, எல்லாமாகப் பூஜிக்க ஒருவனால் முடியுமா?..
முடியும்.
உண்மையாகக் காதலித்தால் முடியும், என்பது மதுராவின் வாதம்.
ஒட்டுமொத்தச் சரணாகதி, ‘காதலில் சாத்தியம்’ என்கிறாள்.
அனைத்து காதல் கதைகளிலும், கேள்விப்படும் கான்செப்ட் தான் என்றாலும், நிஜ வாழ்கையில் அப்படி ஒருவன், ‘கலியுக ஸ்ரீ ராமனாய்’ கிடைக்க முடியுமா மதுராவிற்கு!
ஒன்றும் இல்லா போட்டோ, விஷயத்தைப் பெருசாக்கிச் சங்கரன், ‘நாட்டாமையாக’ மாறித் தீர்ப்பு வழங்கி, கார்திக்கை பெற்றோர்கள் ஜூஸ் பிழிய வைத்து, கொடுமைப்படுத்திய மதுராவை கண்டால், ஒட்டுமொத்தக் குன்னூர், அலறும் பொது ரகு எம்மாத்திரம்.
இருவரும் பேயைக் கண்டது போல ஓடாதக் குறை. இன்று அவள் கையில் கிடைத்த அடிமை அவள் அண்ணன் ரகு.
தரையில் விழுந்து கிடந்தவன், “அம்மா!…” என்று பவானியை, துணைக்கு அழைத்தான்.
அவன் விவரமானவனாகத் தான் இருந்தான். மதுராவை எல்லாம் தனியாளாக யாரால் சமாளிக்க முடியும்!.
ஹாலுக்கு வந்த பவானி, மகளின் தலையில் குட்டி, “வந்தவுடனே அவனை வம்புக்கு இழுக்கணுமா!… அடங்குடீ. வாலை அவுத்து விட்டே, ஓட்ட நெறுக்கிடுவேன்.
பாவம் அவன். உன் கூடச் சாப்பிடனும்ன்னு, பசியில் வெயிட் செஞ்சுட்டு இருக்கான். அவனைப் போய் வம்பு பண்ணிட்டு… போய்க் கை, கால் கழுவிட்டு வா. அப்படியே செஞ்சு வச்சு இருக்கறதை, டைனிங் டேபிள் எடுத்து வந்து வை…. கண்ணா!… போப்பா.” என்றவர், சமையல் அறைக்குச் சென்றார்.
“டேய்!… அண்ணா பையா!… அவ்வளவு பாசமா உனக்கு எம்மேல!… நம்ப முடியவில்லை… வில்லை… வில்லை.” என்று ராகம் இழுத்தவள்,
“நீ எப்போதுமே, அந்த ஜிராஃபீக்கு தானே சொம்பு தூக்குவே!…
‘கார்த்திக் நல்லவன், வல்லவன், நாற்பதும் தெரிந்தவன்’ என்று அவன் புராணம் பாடி, அவனுக்குத் தானே, சொம்பு தூக்குவே?… என்ன, என் பக்கம் காத்து வீசுது!” என்றாள், அவன் எழும்ப கைக்கொடுத்தபடியே.
‘ஐயோ!… தாயே!… ஆதிபராசக்தி!… மஹாகாளி!… பரதேவதை!… உன் ஆட்டத்துக்கு, நான் வரலை. மீ ரொம்ப பாவம். நீயாச்சு, அவனாச்சு. நீ அவனை அடி, ஓதை, தூக்கிப் போட்டு மிதி…. என்னை ஆளை விடு.
வா!… போய்ச் சாப்பிடலாம். உன் ஹிட்லர், உனக்குப் பிடிச்ச ஐட்டம்ஸ் செஞ்சு வைச்சு இருகாங்க.” என்று முழுதும் சரண் அடைந்து, சாப்பாட்டின் மேல், அவள் கவனத்தைத் திருப்பி விட்டான்.
சாப்பாடு என்றதும் மதுராக்கு, சண்டை எல்லாம் கூடப் பிறகு தான்.
அதுவும் வெகுநாள் கழித்து பவானியின், கைப்பக்குவம் ஆயிற்றே!
“அம்மா!… பாருங்க உங்க ஆசை புள்ளையை. உங்களைப் போய், ‘ஹிட்லர்ன்னு’ பெயர் வைச்சு கூப்பிடறான். பாருங்க… நீங்கச் செல்லம் கொடுத்துக், கொடுத்து, எப்படி குட்டிச்சுவர் ஆகி போய் இருக்கான் என்று…” என்று வாயுக்கும், கைக்கும் சண்டை நடக்கும் போது கூட, அண்ணனை மாட்டி விட மறக்கவில்லை.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த ரகு, புரை ஏறி, இரும்பவே ஆரம்பித்து விட்டான்.
“என்னடா அண்ணா!… அம்மா, சாப்பாடு ரொம்ப நாள் கழிச்சு சாப்பிடறே தான். ஆன, அதுக்குன்னு காணாததைக் கண்டது போல், இப்படியா அலைஞ்சுட்டு சாப்பிடுவே!… டூப்பேட் அண்ணா பையா!…. பொறுமை. பொறுமை. இன்னும் செஞ்சுத் தரப் போறாங்க, அதுக்கு ஏன் இப்படி?” என்றவளை, கண்டுப் பற்களை நர நர என்று கடிக்க மட்டுமே முடிந்தது அவனால்.
பவானி மீண்டும் ஒரு குட்டு, மதுராவின் தலையில் வைத்தார்.
“அம்மா!… இப்படி குட்டிக் குட்டியே, அரை அடி குறைஞ்சுட்டேன். உங்க புள்ளை தானே, ‘உங்களை ஹிட்லர்’ என்று சொன்னான். என்னை ஏன் குட்டறீங்க?” என்றாள் தலையைத் தடவியப் படி.
“மகளே!… எல்லாம் தெரியுமடீ எனக்கு. இந்த, ‘நாமகரணம்’ எல்லாம் உன் கைங்கரியம் என்று. நீ ஆரம்பித்து வைத்தது தானேடீ!… ஒருத்தரையும் விடறது இல்லை.
அந்தப் புள்ள விஜய் தம்பி, அது பாவம். அதுக்கு, நீ என்னென்ன பெயர் வைத்து இருக்கேன்னு தெரியாதுன்னு நினைப்பா உனக்கு?…
ரோபோட், உரங்கொட்டான், இயந்திர மனிதன்.
ரகு அலைஞ்சுட்டு சாப்பிடுறானா, இல்லை நீயா!… இரைக்காம சாப்பிடு.” என்றவர், தன் மக்களுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்.
மதுராவிற்கு பிடித்த எல்லா வெஜிடேரியன் ஐட்டம் லைன் கட்டி நின்றன டைனிங் டேபிள் மீது.
மதுரா சைவ பட்சி.
ஸிரோ சைஸ், நாலு பருக்கை சாப்பிடுவது எல்லாம் மதுராவிடம் கிடையவே கிடையாது.
சாப்பாட்டைப் பாத்திக் கட்டி, குழம்பு குளம் அமைத்து, ரவுண்டுக் கட்டி அடிக்கும் மாடர்ன், ‘லேடி ராஜ்கிரண்’ அவள்.
இவளுக்குச் சமைச்சு போட்டே பவானியும், சுபாவும் ஆள் தேய்ந்து போனது வேறு கதை.
வெளியே சாப்பிட போனா, அழைத்துச் செல்பவரின் பர்ஸ் இளைப்பது நிச்சயம்.
மகள் ஆசையாய் சாப்பிடுவதைக் கண்குளிர பார்த்தவர், மகனிடம் கண்களாலேயே, ‘என்ன நடந்தது கேளு’ என்று கண்களால் சைகைக் காட்டவும் மறக்கவில்லை.
‘ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாய்’ தான் இருந்தார்.
பெண் என்று வரும் போது தாய்க்கு உண்டான முன்னெச்சிரிக்கை அதிகமாகத் தான் செயல்படுகிறது.
‘இருமா சாப்பிடட்டும்.’
மகனும் சைகையாலேயே பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.
இதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி, எதையும் வெளியே காட்டிக் கொள்ளாதவளாய், உணவிலேயே கவனமாய் இருந்தாள் மதுரா.
அவர்களின் சைகைப் பாஷை வெகுநேரம் நீடிக்கவே, அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
பார்க்க அப்பாவியா இருந்து கொண்டே எல்லாத்தையும் நோட் செய்துட்டு, கமுகமா இருப்பவள் மதுரா.
சட்டென்று, எதையும் செய்யும், முன் எல்லா சாதகப் பாதகங்களையும் அலசி ஆராய்வது அவள் பிறவி குணம்.
ஒரு பக்கம் அருந்த வாலு.
இன்னொரு பக்கம் ருத்ரதாண்டவம். இன்னொரு பக்கம் தனக்கு பிடிக்காததை எதிர்க்கவும் துணிபவள்.
“அம்மா!… நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க. உங்கக் கிட்டே முக்கியான விஷயம் பேச வேண்டும்.” என்றவுடன் பவானியும், அவர்களுடனே சாப்பிட அமர்ந்து விட்டார்.
சாப்பிட்டு முடித்து, அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, மூவரும் வீட்டுத் தோட்டத்திற்கு வந்தனர்.
சென்னை வீடு போலவே, இந்த வீட்டினையும், மதுரா அதே விதத்தில் அமைத்து இருந்தாள்.
வெகுநேரம் ஆகியும் அந்தத் தோட்டத்தைப் பார்த்து கொண்டு இருந்தாளே ஒழிய, எதையும் பேசவில்லை.
‘படபடவென்று பட்டாசு போல’ எப்பொழுதும் பேசும் மகள், இன்று பேசவே தயங்குவது, அந்தத் தாய்க்கு வியப்பாக இருந்தது.
“என்னடா கண்ணா!… என்ன ஆச்சு!… அம்மா கிட்டே, என்னடாத் தயக்கம் உனக்கு?… பெட்டிப் படுக்கையோடு வந்து இருக்கே!… அவ, சோனா ஏதாவது திட்டினாளா!… சொல்லுமா.” என்றார் பவானி, மகளின் தலையை வருடி.
“அப்படி எல்லாம் இல்லை மா…. அவ என்னை எதுவும் சொல்லலை. நானாகத் தான் வேலை விட்டு வந்துட்டேன். இனி மேல் அவ கிட்டே வேலை செய்ய முடியாது போல இருக்குமா.” என்றவள் தயங்கித் தயங்கி நடந்த எல்லாவற்றையும் கூறி முடித்தாள்.
நெஞ்சிலே கை வைத்து அமர்ந்து விட்டார் பவானி.
ரகு திக்பிரமை பிடித்து அமர்ந்து இருந்தான்.
‘ஏதோ மகளைத் திட்டி இருப்பாள். அதனால், மதுரா கிளம்பி வந்து இருப்பாள்…’ என்று அவர்கள் இருவரும் நினைக்க, ‘கிணறு வெட்டப் பூதம், கிளம்பியக் கதையாய்’ சோனாவின் வண்டவாளம், தண்டவாளம் ஏறி அல்லவா இருக்கிறது.
“என்னடீ சொல்றே!… நம்ம சோனாவா இப்படி!…. நம்ப முடியலையேடீ. கடவுளே!… மாப்பிளையை விட்டு.” கேட்டதை நம்ப முடியவில்லை அந்தத் தாயால்.
“உண்மை தான்மா…. வேறு யாராவது, ‘இப்படின்னு’ சோனா பத்திக் கூறி இருந்தால் நானே, அவங்களை வெட்டிப் போட்டு இருப்பேன். ஆனா, என் கண் முன்னே நடந்ததுமா… அவ சொன்னதை எல்லாம் என் காதால், நானே கேட்டேன்மா. வாந்தியே வந்துடுச்சு ….
விஜய் மாமா, எவளோ பெரிய ஆள்!
சமூகத்தில், அவருக்கு இருக்கும் பெயர் என்ன!…
தேடிப் பார்த்தாலும், யாருக்குமே கிடைக்காத, ‘உன்னத மனிதன் கணவனாய்’ கிடைத்தும் இவ புத்தி, ஏன் சாக்கடை மாதிரி இருக்குன்னு தெரியலை.
கண் கொண்டுப் பார்க்க முடியவில்லை அம்மா, விஜய் இருந்த நிலையை. அவரை விட்டுட்டு, குமட்டுது.” என்றாள் மதுரா.
“மாப்பிளை எதையும் சொல்லலையாடீ!…. அவளைத் தூக்கிப் போட்டு மிதக்கலை?…” என்றார் பவானி.
விஜய் தன்னிடம் சொன்னவற்றையும், கஜேந்திரனிடம் பேசியவற்றையும் அவர்களிடம் சொன்னாள்.
“இது போல நடப்பது அங்குச் சாதாரணம் போல இருக்கு மா. ரொம்பவே சகஜமானது போல இருக்கு. ஏம்மா!… சோனா அவரைக் காதலித்து தானேமா மணந்தா!… அப்புறம் எப்படிமா இவரை விட்டு, மத்தவங்க கூட…” மேலே சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் மதுரா.
அந்தத் தாயாலும் தான், என்ன என்று சொல்ல முடியும்!…
கேவலத்தை எப்படி தான் நியாயபடுத்த முடியும்?…
சோனாவின் திமிர், கர்வம், ஆணவம், வெறி அறிந்தவர் தான் என்றாலும், கட்டியக் கணவனை விட்டு, வேறு ஒரு ஆணோடு சுற்றுவது, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று வாழும் இவரைப் போன்ற தாய்மார்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம் அல்லவா!
தன் மொபைலை எடுத்தவர் கனகாவிற்கு அழைத்தார்.
நல விசாரிப்புகளுக்குப் பிறகு தயங்கித் தயங்கி விசயத்திற்கு வந்தார்.
“அக்கா!… நம்ம மதுரா… வேலையை விட்டு வந்துட்டா.” என்றார் பவானி.
“தெரியும் பவா… . கருணா சொல்லிட்டான். ரொம்ப நல்ல முடிவு.” என்றார் கனகா, மகிழ்ச்சியுடன்.
“அக்கா!…” என்று இழுத்தார் பவானி.
“என்ன பவா!… என் கிட்டே என்ன தயக்கம் உனக்கு!… சொல்லுமா.” என்றார் கனகா.
“மதுரா சொன்னாக்கா… ஆஃபிஸில் நம்ம சோனா….” என்றவர் முடிக்க முடியாமல் தடுமாறி நிறுத்தினார்.
ஒரு தாயாய், மகளைப் பற்றி இன்னொரு தாயிடம் எப்படி கூற முடியும்!
“ஒ!.. எது பவா!… சோனா ட்ரின்க்ஸ் எடுத்துட்டு, போதை மருந்து இஞ்செக்ட் செஞ்சுட்டு, ஆஃபிஸில் செய்த ரகளையை சொல்றியா நீ?…” என்றார் கனகா, என்னவோ, ‘காலை டிபன் இட்லி’ என்று மெனு சொல்லும் குரலில்.
பவானி தான், திகைப்பின் உச்சத்திற்கு சென்றவர் போனை கை நழுவ விட்டார்.
சமாளித்து கொண்டு, “அக்… அக்… அக்கா!” என்று தந்தி அடித்தார்.
“எதுக்கு பவானி எப்படி ஷாக் ஆகுறே?… உனக்குத் தான் இது நியூஸ். புது விஷயம்.
எங்களுக்குப் பழகிப் போன ஒன்று.
சோனா, இது எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் போதே ஆரம்பித்து விட்டா. விஜய்யை கல்யாணம் செய்யும் முன்பும் சரி, பின்னரும் சரி, அவ
என்றுமே அவனுக்கு மட்டும் மனைவியாய் இருந்தது இல்லை…. என்ன சொல்றேன் என்று புரியுது தானே? …
ட்ரிங்க்ஸ், போதை, ஆண் நண்பர்கள், பார்ட்டி, ரேவ், பப்… எல்லாமே. எப்பவும் நடக்கும் கூத்து தான்.” என்றார் கனகா, மரத்தக் குரலில்.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!