அத்தியாயம் 20
மொபைலில் ஸ்பீக்கர் ஃபோன் ஆன் ஆகி இருக்க, கனகா சொன்னதை கேள்விப்பட்டு, மதுரா ரகு பவானி மூவருக்குமே, உச்சகட்டத் திகைப்புத் தான்.
“அக்கா!…” மீண்டும் நெஞ்சிலே கை வைத்து, அலறியே விட்டார் பவானி.
“அக்கா!… நம்ம சோனா குட்டியா இப்படி!…. எப்படிக்கா!… இவளோ சாதாரணமா சொல்றீங்க!… கேக்கும் எனக்கே, நெஞ்சு வலிக்குது. நீங்க எப்படி?” என்றார் பவானி அழும் குரலில்.
“சோனாவிற்காக நெஞ்சு வலிக்குதுன்னா, இனி உனக்கு உன் இதயமே இருக்காது பவா. தினமும் நெஞ்சு வலிச்சுட்டே இருக்க வேண்டி வரும்.
இவளைப் போன்ற ஜென்மத்திற்காக, நான் ஏன் பவா, நெஞ்சு வெடித்து சாகணும்!… என்னை நம்பி அவர் இருக்கார். பூரணி, அம்மா, கருணா வேறு இருகாங்க.
நல்லவர்களுக்கு வருந்தலாம். இவளைப் போன்றவர்களுக்காக உன் வருத்தம் தேவை அற்றது.” என்றார் கனகா.
“அக்கா!… நீங்க எதுவுமே அவளைச் சொல்லலையா?….” என்றார் பவானி விடாமல்.
“இதில் நான் சொல்ல என்ன இருக்கு?… நீ சொல்ல வருவது புரியலை.” என்றார் கனகா.
“அக்கா!…” மேலும் அதிர்ந்தார் பவானி.
“என்னக்கா!… இப்படி பேசுறீங்க!… நீங்கத் தானே அக்கா, அவ அம்மா. நாலு அடி, போட்டு….” என்றவரைத் தடை செய்தது மரகதத்தின் குரல்.
“பவானி!… சோனா, மதுரா இல்லை. தெரியாமல், சிறுத் தப்புச் செய்வதற்கு. சோனா, தெரிந்தேத் தவறு செய்பவள். தவறுக்கும், தப்புக்கும் வித்தியாசம் உண்டு.
பெத்தது மட்டும் தான் கனகா. வளர்த்தது எல்லாம் சொர்ணா என்று உனக்குத் தெரியாதா என்ன!
அதுவே ஒரு பேய்…. பேய் வளர்த்தது பின் வேறு எப்படி இருக்கும்?…
மத்தவங்க, சொல் பேச்சு கேட்டு நடக்க, சோனா, மதுரா இல்லை. பெத்தத் தாய், கட்டின கணவன் எல்லாம் மண்ணுக்கு சமம்.
மனுஷ ஜென்மங்களாய் கூட, எங்களை அவள் மதித்தது கிடையாது. எங்க பேச்சைக் கேட்டு விட்டுத் தான் மறுவேலை பார்க்கப் போகிறாளா என்ன!… சும்மா காமெடி செய்யாதே பவா.” என்றார் மரகதம்.
“அம்மா!… மாப்பிளைத் தம்பி, அவரை விரும்பி மணந்து விட்டு… இப்போ சோனா வேறு… வேறு…” என்றார் பவானி.
என்னவென்று சொல்வார் மரகதம்.
“சோனா, கருணாவை விரும்பி மணக்கவில்லை.
வெறியில் மணந்தவள்….
அவளுக்கு இருந்தது காதல் இல்லை. பழிவாங்கும் வெறி!…..
கருணாவின் கழுத்தில், கத்தியை வைக்க முடியாமல், அவர் தங்கையின் வாழ்வில் விளையாடி, இவரை மணந்தாள்.
விஜய் தங்கை, ரூபிணி மணந்து இருப்பது, சோனா தாத்தாவின் உறவு பையன் திவாகரை.
திவாகர், ரூபிணியை மணக்க வேண்டும் என்றால், ‘கருணா, சோனாவை மணந்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில்’ தள்ளி மணந்து இருக்கிறாள்.
கருணா அமைதியாய் இருப்பது, தன் தங்கையின் வாழ்வுக்காக.
இவளுடன் கருணா பேருக்காவது கணவனாக வாழவில்லை என்றால், திவாகர், ரூபிணியுடன் வாழ மாட்டான். சோனா, அவள் தாத்தா பிளான் இது.
திருமணம் ஆன ஒரு மணி நேரத்தில், திருமாங்கல்யத்தை கழற்றிக் குப்பைத் தொட்டியில், போட்டு விட்டுப் போனவள்.
நாங்க அவளிடம் படுவது புதிது அல்ல.
ஆனா, கருணா போன்ற தங்கமான புள்ளையும் சேர்ந்து கஷ்டப்படுது. அந்தப் புள்ளைக்கு ஈடா உலகத்தில் வேறு யாரும் கிடையாது என்று தான் சொல்வேன்.
இனி ஒருத்தர் இவனைப் போல பொறப்பது கடினம்.
சொந்தத் தாயாய், என் மகளைத் தாங்கறான்.
என்னையும் தான்.
எந்த ஜென்மத்தில், நாங்க புண்ணியம் செய்தோமோ, அதன் பலன் இவன் ரூபத்தில், எங்களுக்குக் கிடைத்து இருக்கு.
நாங்க, அந்த இறைவனிடம் வேண்டுவது எல்லாம் தொலைந்த அவன் வாழ்வு, அவன் சந்தோசம், அவனுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பது தான்.” என்றார் மரகதம்.
“ஆமாம் பவானி…. கருணாவின் வாழ்வு சீராக வேண்டும். ரொம்பவே கருணா பட்டுடான். அவன் வாழ்விலிருந்து, சோனா முற்றிலும் விலக வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் பிராத்தனை.
அது நடக்க சோனாவின் உயிர் போக வேண்டி வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை.
இவளைப் போன்ற கேடு கெட்ட ஜென்மங்கள், உயிரோடு இருந்து யார்க்கு தான் என்ன பயன்!… சோனாவை, பற்றி நீ இந்த அளவு கவலைப்படும் அளவு, அவளுக்கு அதற்கான தகுதி இல்லை.
அவள் பாசப் பறவையைப் பறக்க விட்டு மதுராவை, இங்கு வேலைக்கு அழைத்தது நிச்சயம், உன் மகளுக்கு நல்லதிற்காக மட்டும் இல்லை.
அவ எந்த அளவுக்கும் இறங்குவா.
மீண்டும், அவள் ஏதாவது பிளான் செய்து மதுராவை, இங்கு வரவழைப்பதற்குள், மதுரா அப்பாவிடம் பேசி மதுராவுக்கும், கார்த்திக்கும் திருமணத்தை நடத்தி முடி.
ஏதோ விஜய்யால் முடிந்தது, இத்தனை மாதம், உன் மகளைக் காப்பாற்றி உன்னிடம் திரும்பக் கொடுத்து விட்டான். இனி அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு.
உன் மகள், அவள் வாழ்வுப் பற்றி மட்டும் கவலைப்படு. வச்சிடுறேன்.” என்ற கனகா அழைப்பைத் துண்டித்தார்.
சர்வமும் ஆடிப் போய், பேய் அடித்தது போல கலங்கி அமர்ந்து இருந்தார் பவானி. ஸ்பீக்கர்ரில் போட்டு இருந்த அழைப்பு என்பதால், மதுராவும், ரகுவும் கூடப் பவானியின் நிலையில் தான் இருந்தனர்.
பவானியின் கைத் தானாக மகளை இறுக்கி அணைத்தது. எதனிடமோ இருந்து மகளைக் காக்க முற்படுவது போல.
தாயின் உள்ளுணர்வு என்பார்களே!… அது, அவரைப் பதைப் பதைக்க வைத்துக் கொண்டு இருந்தது.
இத்தனை நாளாய், ‘கவசமாய் தன் சின்னச் சிறு கூட்டினை, காப்பாற்றிய சில சம்பவங்கள்’, இனி மேலும் காக்குமா என்ற பயம் வந்து இருந்தது பவானிக்கு.
கஜேந்திரன், சொர்ணவிடமிருந்து அந்தச் சிறு குயில் கூட்டினைக் காக்கவே, சேதுபதி பல வருடங்களுக்கு முன், ‘பணத்திற்காக வந்து அட்டை போல ஒட்டிக் கொள்கிறான்’ என்று சங்கரனை பார்த்து வேண்டும் என்றே வாய் விட்டது.
இல்லை என்றால், சொர்ணாவின் இரண்டாவது கணவனாக மாறி இருப்பார் சங்கரன் அப்பொழுதே.
அது நடவாமல் தடுக்க, தம்பியின் ரோஷத்தை, சுய கவுரவத்தை தூண்டி விடும் விதமாகச் சேது பேசி, சண்டைக் கிளப்பித், தன் குடும்பத்தைக் கஜேந்திரன், சொர்ணாவிடமிருந்து காப்பாற்றியது.
சேதுவிற்கும் வேறு வழியில்லை.
அவர் தலைவிதி, கஜேந்திரனுக்கு மருமகனாய் மாட்டியது.
‘சங்கரனும், தன் குடும்பமாவது நிம்மதியாக இருக்கட்டுமே!…’ என்று விலக்கி வைத்தவர் அவர்.
இந்த உண்மை அறிந்தவர்களில் ஒருவர் பவானி.
பதினைந்து, இருபது வருடங்களாக உண்மை தெரிந்தும், பவானி வாய் திறந்தது இல்லை.
தன் கணவர் நல்லவர், ரொம்பவே நல்லவர்…. அது தான் அவரின் பிரச்சனை.
அப்பாவி. கு
டும்பம், வேலை, பிள்ளைகள் என்று மட்டுமே வாழும், சூதுவாது தெரியாத அப்பிராணி.
ஆனால், ‘பிடித்தால் உடும்பு பிடி’. ‘குடும்பத் தலைவர் என்ற அங்கிகாரம்’ தனக்கு மட்டுமே என்ற எண்ணம் அதிகப்படியாகவே உண்டு.
சேது ஏற்படுத்தி இருந்த காயம் காரணமாக இருக்கலாம்.
இவரின் இந்தக் குணத்திற்கும், பவானியின் ரொம்ப ஷார்ப் மனநிலைக்கும், விட்டுக் கொடுத்து போகும் தன்மைக்கும் குடும்பம் இந்நாள் வரை, எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓடிக் கொண்டு இருந்தது.
ஆனால் ஆறு மாதம் முன்பு, ‘ சித்தப்பா!’ என்று பேச்சில் தேன் ஒழுக வந்து நின்ற சோனாவை கண்டதும், அவர் வயற்றில் புளிக் கரைய ஆரம்பித்தது.
அங்கு வழிவது தேன் அல்ல, உயிரைக் கொல்லும் ஆலகாலம் என்பது புரிந்து விட்டது பவானிக்கு.
பல மாணவர்களைக் கட்டி மேய்ப்பவர் ஆயிற்றே!
‘எது உண்மை, எது நடிப்பு’ என்று அவரால் வெகு சுலபமாக எடை போட முடிந்தது.
சங்கரனோடு எவ்வளவோ போராடி பார்த்தார் மதுராவின் சென்னை வேலையைத் தடுத்து நிறுத்த, எல்லாம் தோல்வியில் முடிந்தது.
“ஏய்!… பதினைந்து வருடம். என் அண்ணா என் கூடப் பேசாம இருந்து. என் அண்ணா எனக்கு அப்பா மாதிரிடீ!…. என்னைத் தூக்கி வளர்த்தவர். நானே, எவ்வளவு வருடம் போய்ப் பேசவில்லை என்று மறுகிக் கிடந்தேன்.
அவர் பெரிய மனுஷன் என்பதை நிரூபித்து இறங்கி வந்து, அவரே தன் மகளை அனுப்பி வைத்து, மதுராவை வேலைக்கு அழைக்கிறார்.
என் அண்ணா கேட்டா, உயிரை கூடக் கொடுப்பேன். என் மகளை வேலைக்குத் தானா அனுப்ப மாட்டேன்!
போடீ போக்கத்தவளே!… வந்துட்டா… ‘ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும்’ என்று.
யார் கிட்டேடீ அனுப்பறேன்?… என் அண்ணா கிட்டே, என் அம்மா மாதிரியான அண்ணி கிட்டே!… என் அம்மா மாதிரியான, மாதிரி என்ன அம்மா தான், மரகதம் அம்மா கிட்டே அனுப்பறேன்.
அழைத்துப் போவது யாருடீ!… ஊர் பேர் தெரியாதவளா!…
என் மூத்த மகடீ!…
என் ரத்தம்!…
என் மூத்த மக, எவ்வளவு பொறுப்பா, பிரிந்தக் குடும்பத்தை ஒன்று சேர்க்கணும் என்று வந்து இருக்கா!… பேச வந்துட்டா. என் முடிவு இது தான்.
மதுரா, சோனாவோடு சென்னைக்கு போவா…. அங்கு அவ கிட்டே பி.ஏ வா வேலை செய்வா.” என்று பவானியை வறுத்து எடுத்தார்.
‘உம்ம பாசத்துல தீயை வைக்க.’ என்று மனதிற்குள் புலம்ப மட்டுமே முடிந்தது பவானியால்.
மதுராவும், சங்கரனும் கார்த்திக்கின் லீலையில் கோபமாய் இருந்த சமயம். திருமண பேச்சை எடுத்து, இதைத் தடுக்கவும் முடியவில்லை.
மதுராவும் கார்த்திக், ‘போக வேண்டாம்’ என்று சொல்லி விட்டான் என்பதற்காகவே, வீம்புக்காகக் கிளம்பினாள்.
அவளின் ஒத்துழைப்பு இருந்து இருந்தாலாவது பவானி மதுராவின் சென்னைப் பயணத்தைத் தடுத்து இருப்பார்.
மகளோ, கார்திக்க்கையும், அவரையும், வெறுப்பு ஏற்ற என்றே கிளம்பி விட்டாள்.
சோனாவின் பாசப் பறவையை, நீலிக் கண்ணீரை, அடக்க ஒடுக்கத்தை அப்பாவியான சங்கரன் வேண்டும் என்றால் நம்பி ஏமாந்து இருக்கலாம். சோனாவின் போலி முகத்திரையை, அதில் இருக்கும் வஞ்சக எண்ணத்தை, மதுராவைக் கண்ட மறுநொடி, அவள் முகம் மாறிய விதத்தைக் கண்டு விட்டவர், மகளுக்கு வரும் ஆபத்தைத் தடுக்க இயலாதவராக இறைவனை சரண் அடைந்தார்.
சேதுவை அந்த நிலையில் உதவிக்கு அழைக்க முடியவில்லை. அவர் கனகா, மரகதம், பூரணி, கருணா எல்லோரும் சுற்றுலா சென்று இருந்தனர்.
சோனாவின் இந்த நாடகத்தைப் பற்றி கூற கூட நேரம் இல்லை.
அவர்கள் திரும்பி வர எடுத்துக் கொண்ட மூன்று வாரங்களில், சங்கரன், ‘மூத்த மகள், மூத்த மகள், என் குல விளக்கு, குலத் தெய்வம்’ என்று சோனாவைத் தலையில் தூக்கி வைத்து ஆடாதக் குறை.
சுற்றுலா முடிந்து திரும்பியவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி. மதுராவை வைத்து விஜய்க்கு, அவள் வைத்த செக்மேட் அவர்களை ஸ்தம்பிக்க வைத்து இருந்தது.
எங்கு, எப்படி, யாரால் விஜய்யின் கடந்த காலம், சோனாவிற்கு தெரிய வந்தது என்று புரியாமல், மதுராவை எப்படி காப்பாற்றுவது என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதக் குறை.
இவர்கள் சுதரிப்பதற்குள் மதுரா, விஜய்யின் பி.ஏ ஆக்கப் பட்டு இருந்தாள்.
‘இந்தர் போர்ட்’ பங்களாவில் அனைவருடன் மதுராவைத் தங்க வைக்க , வேறு ஏற்பாடு செய்து இருந்தாள்.
அதாவது விஜய்யின் கண் முன், அவன் அருகே இருபத்தி நான்கு மணி நேரமும் மதுராவை, இருக்க வைக்கும் திட்டம்.
எவ்வளவோ விஜய் சொல்லிப் பார்த்தும் சோனா, தன் முடிவில் மாறவில்லை என்றதும், விஜய் நான்கு வாரம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்று விட்டான்.
வேலை முடிவு எடுக்க முடியாமல் மலை போல குவிய, ‘வெற்றி குரூப்ஸ்’ ஒரு பக்கம் நெருக்க, சில பல கோடிகள், சில ஆர்டர்கள் கை நழுவி போன பின்னர், கஜேந்திரனையும் , சோனாவையும், விஜய் தலையால் தண்ணீர் குடிக்க வைத்த பிறகு, மதுராவின் இருப்பிட பிளான் கை விட்டாள் சோனா.
அந்த நான்கு வாரங்களில், ‘மதுரா மீட்புக் குழு ஒன்று’ மூளையை கசக்கிப் பிழிந்து பிளான் போட்டார்கள்.
அந்தப் பிளான் படி சங்கரனிடம் மூன்று விஷயங்களைப் போனில் பேசினார்கள். அதாவது மதுராவை, குன்னூர் பேக் செய்ய முயன்றார்கள்.
‘விக்ரமாதித்தன், வேதாளத்தைத் தூக்கி வர, மனம் சற்றும் தளராமல் முயன்ற’ கதை தான். ஆனால், பலன் என்னவோ பூஜ்யம்.
‘மதுரா நம்ம வீட்டு பெண்…. அவ வெளியிடத்தில் வேலை செய்யணுமா!
‘மதுராவின் பாதுகாப்பு, அவள் எங்கே தங்குவாள்?… ஹாஸ்டல், எல்லாம் பாதுகாப்பு இல்லை.
எவ்வளவு காலம், மதுரா திருமணம் ஆகாமல் இருப்பாள்!….
வயசு பெண். வேலைக்குப் போய் தான், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லையே!…
விரைவில் கார்த்திக்குடன், திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும்.’
சுற்றிச் சுற்றி மதுராவின், ‘முதல் மீட்புக் குழு’ சொல்ல வந்த செய்தியின் சாராம்சம் இது தான்.
“மதுரா, வேலைக்கு வர வேண்டாம்.” அது சங்கரனுக்கு புரிந்தால் தானே!
“ஆமாம் அண்ணா!…. குட்டி வெளியிடத்தில் வேலைக்கென்று கிளம்பி இருந்தா, நானும் உங்களைப் போல பயந்து இருப்பேன்!… இப்போ நம்ம மாப்பிளை, கிட்டேத் தானே வேலைக்குப் போகிறா.
கருணா தம்பியைப் போல் வருமா!… தம்பி தங்கக் கம்பி ஆயிற்றே!… அவர் கூட இருப்பதால் தான், நாங்க இங்கே நிம்மதியாக இருக்கிறோம் அண்ணா.” என்றார் சங்கரன்.
இதற்கு என்ன சொல்ல முடியும்!…
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!