அத்தியாயம் 2
‘எதிலும் இயங்கும்
இயக்கமும் நானே !
என் இசை நின்றால்,
அடங்கும் உலகே!
நான் அசைந்தால்,
அசையும் அகிலம் எல்லாமே!…’
‘திருவிளையாடல்’ படத்தில் வரும் பாடலில், ஒரு நொடி இறைவன் தன் அசைவை நிறுத்தியவுடன், உலகமே ஒரு நொடி உறைந்து நிற்பதாகக் காட்சி வரும்.
காற்று, அலை, பறக்கும் பறவைகள், பொங்கும் எரிமலையென அனைத்தும், பிரீஸ் ஆகி நின்று விட்டதாகக் காட்டுவார்கள்.
அதேபோல் தன்னை சுற்றி அனைத்தும் ஒரு கணம் நின்று போனதாகவே தோன்றியது மதுரக்ஷிக்கு.
பூண்டு வகை தாவரத்தில் ஒன்று உண்டாம், அதை மிதித்தவர்கள் அப்படியே சிலையாக உறைந்து நின்று விடுவார்களாம்.
நொடிகளோ, பல வினாடிகளோ மதுராக்ஷியும் அவ்வாறே சிலையாக உறைந்து நின்று கொண்டு இருந்தாள்.
கண்கள் இமைக்க மறந்து, ‘தேவர் மகனில் ரேவதி’ சொல்வது போல, அவளின் திறந்த வாயில் இருந்து, ‘வெறும் காற்று’ தாங்க வெளி வந்தது.
மதுராக்ஷி!
சங்கரன், பவானியின் தவ புதல்வி
அண்ணன் ரகுராமனின், பத்ரகாளி.
கார்த்திக்கின் கனவு நாயகி
( அப்படி தான், இந்தக் கதையின் ஹீரோ விஜய் சொல்லிக் கொண்டு இருக்கிறான்🙄🙄🙄)
மதுராவிற்கு வயது இருபத்தியாறு. முடித்தது மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டேரியல் கோர்ஸ்.
சட்டென்று பார்ப்பதற்கு, ‘நடிகை சமந்தா’ மாதிரி சாயலில் இருந்தாள். அதே அழகு, அதே உயரம், அதே துறுதுறுப்பு, அதே பப்லி, சார்மிங், லைவ்லி கேர்ள்.
ஹோம்லி லுக்.
நிச்சயம் திரும்பி பார்க்கத் தூண்டும் அழகி.
மஞ்சள் பொற்சித்திரம்.
இடை வரை தாண்டிய கருங்கூந்தல். மான், மீன் கலந்த கலவையாகக் கண்கள்.
அதில் இடப்பட்டு இருந்த கண் மை, கண்களுக்குத் தனி அழகினை கொடுத்தது.
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ரோஜா இதழ்கள் தேனில் ஊற வைத்த எபெக்ட் கொடுக்கும் சிவந்த இதழ்கள்.
புருவத்தின் மேல் உள்ள மச்சம், ‘அந்த ப்ரஹ்மனே திரிஷ்டி பொட்டு வைத்தது’ போல் இருந்தது.
ஐந்தடி எட்டு அங்குல உயரம்.
மாசு மருவற்ற சருமம்.
சில பல சினிமா பாடல்களில் பெண்களை வர்ணிப்பார்களே, அவை இவளுக்குப் பொருந்தும்.
‘எந்தப் பெண்ணிலும்
இல்லாத ஒன்று ஏதோ,
அது ஏதோ,
அடிஏதோ, உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல், விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்.
கூந்தல் முடிகள்
நெற்றிப் பரப்பில்,
கோலம் போடுதே அதுவா
கோலம் போடுதே!… அதுவா…
சிரிக்கும்போது
கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே
அதுவா!…
தெறித்து ஓடுதே அதுவா!…
மூக்கின் மேலே, மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே!
அதுவா!… அதுவா!… அதுவா!…
கழுத்தின் கீழே,
கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே!…’ என்ற வரிகள், இவளுக்காகவே எழுதப்பட்டது போன்ற ஆகர்சனம் கொண்டவள்.
பெண்களுக்கு அழகு, ‘அவர்கள் அன்பில், தெளிவான சிந்தனையில், எந்த சூழ்நிலை வந்தாலும், அதை எதிர்த்து மன தைரியத்துடன் நிற்பதில், நிமிர்ந்த நடையில், நேர்கொண்ட பார்வையில், மற்றவர்களுக்கு உதவுவதில் இருக்கிறது’ என்று வாழ்ந்து காட்டி கொண்டு இருப்பவள்.
குணத்திலும் தங்கம். மற்றவர்களுக்குப் பார்த்து, பார்த்து நல்லது செய்வதில், ‘மதுராக்கு நிகர்’ மதுரா தான்.
கொஞ்சம் வாலு!
கொஞ்சம் அப்பாவி!.
மொத்தத்தில் நம் சகோதரியாய், தோழியாய், நம் மனதின், ‘இன்னொரு பிம்பமாய்’ இருக்கும் பெண் மதுராக்ஷி.
இந்த அழகு சிலை தான், நிஜ சிலையாக மாறி, பேச வார்த்தை கிடைக்காமல், வாயைத் திறந்து, திறந்து மூடிக்கொண்டு இருந்தாள்.
அத்தனை தவிப்பு, திணறல், அதிர்ச்சி, கலக்கம் அவளிடம்.
கண்கள் கலங்கி நின்ற அவளின் கோலம், பார்க்கும் யாருக்குமே நெஞ்சை பிசைய வைக்கும்.
குழந்தைத் தனமான அந்தக் குமரியை, அவள் வீட்டினரோ, நண்பர்களோ கூட அழ வைத்தது இல்லை.
ஆனால், மதுராவை கலங்க வைத்து அவளின் தவிப்பு, திணறலால் பாதிக்கப்படாதவளாய், அதை அலட்சியம் செய்தவாறு, அந்த மாபெரும் ஹாலில் அவள் அமர்ந்து இருந்தாள்.
கையில் நுரை பொங்கிய சாம்பைன் (champagne) க்ளாசில் வாய் வைத்து உறிஞ்சியவாறு அடிக்கண்ணில், மதுராவின் நிலையைச் சுவைத்து கொண்டு இருந்தாள் சோனா.
அவள் அமர்ந்து இருந்த விதம், ‘படையப்பா நீலாம்பரியை’ ஓத்து இருந்தது.
திமிர், தெனாவட்டு, அகம்பாவம், டாம்பீகம், சுயநலத்தின் ஒட்டு மொத்த அகராதி அவள்.
ஆயிரம், ‘நீலாம்பரி, சொர்ணக்காவின்’ கலவை, குணத்தில், நடத்தையில்.
சோனா, மதுராவின் பெரியப்பா, ‘சேதுபதியின்’ மகள்.
‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ் கஜேந்திரனின்’ பேத்தி.
மாபெரும் கோடீஸ்வரி.
அளவுக்கு அதிக பணம், ‘கஜேந்திரனின் வளர்ப்பு’ என்று, ‘மற்றவர்களின் வலி, வேதனை, துயரம்’ என்று எதற்குமே, சற்று கூட இளக்கம் காட்டாத ராட்சச ஜென்மம்.
‘தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும்’, அப்படி நடக்க எந்த எல்லைக்கும் போகும் வெறித்தனம் சோனவிடம் உண்டு.
அவளைப் போலவே, ‘ஐந்து அல்லக்கைகள்’ அந்த ஹாலில் அமர்ந்து இருந்தன. சோனாவின் பணத்திற்காக உடன் சுற்றும் காக்கை கூட்டம். குணத்திலும் சோனவை போன்றவர்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம், இவர்கள் பெண்களே கிடையாது. பெண்களின் எந்தக் குணமும் இவர்களிடம் கிடையாது.
‘ஆடை’ என்ற பெயரில் மறைக்க வேண்டியவை வெளிச்சம் போட்டுக் காட்டபட்டு இருந்தது.
‘பெண்ணியம்’ பேசுபவர்களே, முகம் நிச்சயம் சுளிப்பார்கள்.
தரை முழுவதும், மது பாட்டில்கள். டேபிள் மேல் குவிந்து கிடந்த சிகரேட் துண்டுகள்.
இந்த மாதிரி பெண்களிடம், தவறு ராட்சசிகளிடம் சிக்கி, விழிப் பிதுங்கி நின்று இருந்தாள் மதுரா.
கௌரவர் சபையில், ‘தனி ஆளாக சிக்கிய திரௌபதியின் நிலை’ என்று சொன்னால் கூட மிகையல்ல.
“மதுரா!… அம்மா சொல்வதை கேளுமா. அப்பா கிட்ட நீயே சொல்லி இதைத் தடுக்க பாருமா… தேவை இல்லாம உன் தலையில், நீயே, மண்ணை அள்ளிப் போட்டு கொள்ளாதே!…” என்று தன் தாயார் பவானி, ஒரு வருடத்திற்கு முன், பல முறை தன்னிடம் கெஞ்சியது நினைவுக்கு வர, மதுராவிற்கு இதயம் வலித்தது.
‘எத்தனை தடவை கெஞ்சினாரே!… துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும்’ என்று சொல்வார்கள். சோனாவை கண்டதும், மாநிலமே மாறி இருக்க வேண்டும் என்று நிரூபித்து விட்டாளே!
தன் தாய் உண்மையில் ஒரு தீர்க்கத் தரிசி. இப்படியொரு நிலை மகளுக்கு வரும் என்று எண்ணி தானே அவர் பயந்தது. அவர் பயம் உண்மையாகி விட்டது. இல்லை உண்மையாக்கபட்டு விட்டது.’ என்ற எண்ணம் எழ, மதுராவின் மனம், ஊமையாய் அழுதது.
உடன் பிறந்த ரகு, அவளுக்கென்று மணம் முடிக்கப் பெரியவர்களால் சிறு வயதில் இருந்தே பேசப்பட்ட கார்த்திக், அவ்வளவு ஏன் சோனாவின் பெற்றோர் சேதுபதி, கனகா கூட, ‘வேண்டாம்’ என்று எவ்வளவுத் தடுத்தார்கள்!
‘யார் பேச்சையும் கேட்காமல் முடிவு எடுத்த, தந்தை சங்கரனின் வார்த்தையை மறுத்திருக்க வேண்டுமோ?…
‘கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போலச் சோனாவின் உண்மை முகம், தெரிந்த பிறகு, புலம்பி என்ன செய்ய முடியும்?’ என்று எண்ணிய மதுராவிற்கு பெருமூச்சு தான் எழுந்தது.
“ஆஸ்திரேலியாவில் இதை விடச் சம்பளம் அதிகமான வேலை வாங்கி தருகிறேன் மதுரா. ப்ளீஸ்!… இது தேவை இல்லாத வேலை. சரியா படலை. மனசு பதறுது. வேண்டாம்மா.” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினானே கார்த்திக், அவன் பேச்சை மதிக்காதற்கான தண்டனை இதோ!
‘தந்தை நல்லது செய்கிறார், பிரிந்த குடும்பம் ஒன்று சேரப் பாடுபடுகிறார் என்று நினைத்தது தப்போ!… இந்தச் சோனாவும் கூடத் தான் குடும்பம், பாசம், அன்பு, தன் தந்தை சேதுபதி செய்த தவறுக்கு தண்டனை, பிராயிசித்தம், ‘என் தங்கை, தங்கை ஒரு கோவில்’ என்று பக்கம், பக்கமாக டயலாக் விட்டாளே!
‘குடும்பம், தங்கை’ என்று ஒரு வருடம் முன்பு உருகி வழிந்தவளா?’ இன்று இப்படி பேசியது!… மற்ற ஜந்துக்களையும் பேச விட்டு ரசித்தது?’ என்ற கேள்வி மதுராவை அலை கழித்தது.
‘இன்னொரு உயிரைக்
கொன்று புசிப்பது மிருகமடா!.
இன்னொரு உயிரைக் கொன்று
ரசிப்பது அரக்கனடா!…’.
இந்தப் பாடல் வரிகள் சோனாவிற்காகவே எழுதினார்களோ!
‘காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகள். அதுவும் ஒவ்வொரு பெண்ணும் உயிருக்கு மேலாக மதிக்கும், உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற துடிக்கும் ஒழுக்கத்தை, கற்பை, மானத்தை அல்லவா, வாய் வார்த்தையால் குதறி எடுத்து விட்டனர்.’ என்று அவர்கள் சொன்ன வார்த்தைகளை, எல்லாம் ஒரு முறை நினைத்துப் பார்க்க மதுராவின் இதயத்தில் ரத்தமே வடிந்தது.
குழந்தை மனம் கொண்டவளை, சொந்த சித்தப்பா மகளை வார்த்தைகளால், குற்றுயிர் ஆக்கி விட்டு, அதை ரசித்து, மகிழ்ந்தது அந்தப் பேய்கள் கூட்டம்.
உடம்பே தீப்பற்றி எரிவது போல், துடித்து நின்றாள் மதுராக்ஷி.
‘வேடனின் விஷ அம்புப்பட்டு மரண வலியில், துடிக்கும் மானைப்’ போல், ‘சொல்லம்பு’ பட்டுத் துடித்து கதறியது அவள் மனம்.
இது போன்ற கேவலங்களை, விஷச் சொற்களை அவள் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.
சோனாவின் அளவு பணத்திலேயே புரளவில்லை என்றாலும், ‘பார்ன் வித் கோல்டன் ஸ்பூன், மல்டி மில்லியனைர்’ இல்லை என்றாலும் மதுராவும், உயர் மத்திய குடும்பத்தைச் சார்ந்தவள் தான்.
சங்கரன்!
நேர்மையான ஆடிட்டர்.
தொழிலில் வெகுசுத்தம்.
நீதி, நேர்மை, நியாயம் என்று இன்னமும் இவற்றைக் கடை பிடிக்கும், ‘நம் தந்தையை’ போன்றவர்.
வீடு, குடும்பம், உறவு என்று பாச வட்டத்தின் தலைவர்.
அவர் மனைவி பவானி டீச்சர்.
ஒரு சில ஆசிரியர்களை, நம் வாழ்வில் மறக்கவே முடியாது இல்லையா!… அது போல் பாசமாய் ‘கற்றல் என்பது இன்பமான ஒன்று’ புரிய வைத்து, மாணவ, மாணவிகளை அரவணைத்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
இவர்களின், மூத்த குமாரன் ரகுராமன்.
பெற்றோர் கிழித்த கோட்டை, தாண்டாத உத்தமன்.
இவனால் அதிகம் பாதிக்கப்படுவது மதுரா தான்.
ஆண் பிள்ளை, பெண் பிள்ளை போல் பொறுப்பாக இருக்க, பெண் பிள்ளையோ, பொறுப்பு இல்லாமல், குரங்கு தனம் செய்தால்!
கோலம் போடுவது முதல், நைட் தட்டைக் கழுவி சாய்க்கும் அனைத்து வேலைகளையும், ரகு செய்யும் போது மதுராவை கழுவி ஊத்த மாட்டார்களா!
இதற்கும் ரகு¸ சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துக், கணினி துறையில் நல்ல வேலையில் இருப்பவன். சாப்பிட கூடச் சமையல் அறை பக்கம் போகாத நல்லவங்க மதுரா மேடம்.
சங்கரன், பவானியின் உடன் பிறவா சகோதர, சகோதரியாகக் கோசலை, முரளி.
இவர்களின் மகன் தான், மதுரா பிறக்கும் போதே, நிச்சயிக்கபட்ட மாப்பிளை கார்த்திக்.
சங்கரன், பாவனியினால் தூக்கி வளர்க்கபட்டவன்.
இன்னொரு ரகு.
இந்த, ‘அன்பு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி மதுரா’ என்று சொன்னால் கூட மிகையில்லை.
அன்பு, பாசம், கருணை, கனிவு, பண்பு என்று நல்லதிற்கு மத்தியில் வளர்க்கபட்ட தேவதை அவள்.
அவளை, ‘என்ன சொல்லி விட்டனர்!’ இவர்கள் நாக்கில், நரம்பு இல்லாமல்!
கண்கள் கண்ணீரை சிந்த முயல, கைக்கால்கள் நடுங்கிக் கொண்டு இருக்க, மனமோ ரத்தம் சிந்த, சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவாறு, காக்டெய்ல் குடித்து கொண்டு இருந்த தன் பெரியப்பா மகளை நிமிர்ந்து பார்த்தாள் மதுரா.
‘வஞ்சம் கொண்ட பாம்பு’ போல் தன் மேல் விஷம் கக்கி விட்டு, அதை அவள் அணு, அணுவாக ரசிப்பதை கண்டதும் மதுரா நிதானித்தாள்.
எதற்கும் அஞ்சாதவள் தான் மதுரா.
பாரதியாரின் புதுமை பெண்.
‘நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யாருக்கும்
அஞ்சாத செருக்கும்’ என்று இருப்பவள் தான் என்றாலும், சகோதரியின் வார்த்தைகளின் முன், துடித்துத் தான் போனாள்.
அந்தத் துடிப்பு கூடப் பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது. மெல்ல, மெல்ல அவளின் வழக்கமான நிமிர்வு மீண்டது.
தவறு, எதுவும் செய்யாத போது, எதற்கு அஞ்சி நடுங்க வேண்டும்!
‘இவள் என் வலி, வேதனையை ரசிக்கிறாள். இது தெரியாமல் குடி போதையில் சொல்லபட்டது அல்ல. வேண்டும் என்றே சொல்லியது’ என்று மூளை எச்சரிக்கை விடுக்க, சோனாவின் முகத்தில் நிலவிய பூரண திருப்தி, எதையோ சாதித்து விட்ட வெறியில், கண்கள் பள பளப்பதை கண்ட மதுரா, தன்னை சமாளித்து, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்தாள்.
‘நோ ஸ்டெடியா நில்லு மதுரா!… இந்தக் காட்டேரி உன் வலி, கண்ணீரை ரொம்பவே ரசிச்சிட்டு இருக்கா. இதுங்க, எல்லாம் ஒரு மனுஷ ஜென்மங்க. இதுங்க பேசுதுங்கனா நீ உடைய பார்த்தே?’ என்று மனம் தெளிவாகி விட, எரிமலையின் சீற்றத்திற்கு ஈடாகக் கோபம் உயர ஆரம்பித்தது.
தவம் தொடரும்…





